Wednesday 28 February 2024

பார்னம்


பார்னம் விளைவு
*மணி

ஒவ்வொரு நிமிடமும் ஒரு ஏமாளி பிறக்கிறான்" என்ற புகழ்பெற்ற சொற்றொடர் ஒன்று உள்ளது.

சிறுவயதில் கிளி ஜோசியம் பார்த்திருப்போம்.கிளி எடுத்துக் கொடுத்த சீட்டிற்கு அப்புறம் தன் மஞ்சள் பையிலிருந்து ஒரு பாக்கெட் சைஸ் நோட்டினை எடுத்துப் படிப்பார் ஒரு தாத்தா. அதில் உள்ளவற்றை கேட்க கேட்க அப்படியே ஆச்சர்யத்தில் உறைந்து போய் உட்கார்ந்திருப்போம்." எந்த ஒரு இக்கட்டான சூழலிலும் திறமையாய் முடிவெடுப்பதில் வல்லவர் நீங்க னு வார்த்தையை கேட்கும் போது வடிவேல் ஸ்டைலில் ஆமுங்க ஆமுங்க னு சொல்லுவோம். இவருக்கு எப்படி நம்மைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறது என நினைத்து எழுந்துபோவோம். 

கொஞ்சம் வளர்ந்த பிறகு நம் ராசி என்ன என தெரிந்தபிறகு.. அம்பது மீட்டர் தூரத்தில் இருந்தாலும் நம் ராசியை மட்டும் ஃபோகஸ் செய்து படிப்போம். அதிலும் அந்த முதல் வரி தான் க்ளாசிக்..
"பொறுமையும்  புத்திசாலித்தனமும் நிறைந்த ரிஷப ராசி நேயர்களே என்றால்.. நம்ம மனசு உடனே ஆஹா அச்சரா..நான் தான்னு மனசு உடுக்கை அடிக்க ஆரம்பித்துவிடும்.சரி மற்ற ராசிகளையும் பார்க்கும்போது அதே போல் வேறு வரிகளில் ஆரம்பித்திருப்பார்கள்.இருந்தாலும் நம்மைப் பற்றி சொன்ன வரிகள் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் தான்.

இதையெல்லாம் வேறு ஒருவர் முகத்துக்கு நேராக சொன்னால் அடப் போங்கனு போயிருவோம்.ஆனால் ஒரு புத்தகத்திலோ அல்லது செய்தியாக வந்த நிகழ்வை படிக்கும்போது நம்மை ஒப்பிட்டுப் பார்த்து புளகாங்கிதம் அடைவதை கவனிச்சிருக்கீங்களா.
"உங்களிடம் உள்ள திறமைக்கு நீங்க இந்த ஆபிசில் இருக்க வேண்டியவ ஆளே இல்லை எனச்சொல்லும் போது ஷோல்டரை தூக்கி மார்பை விரிந்த நிலையில் வைத்திருப்போம் இல்லையா....

அடுத்தவர் உங்களை பார்த்து எப்படி எல்லோருக்கும் பிடித்த மாதிரி இருக்கீங்கனு எதெச்சையா கேட்கும்போது மனசுக்குள்ள அப்பிடியே ஏ.சி போட்டது போல் இருக்கும்.

#பார்னம் விளைவு.

உளவியல் ரீதியில் இதற்கு 
பார்னம் விளைவு (Barnum effect) என்று பெயர். பலருக்கும் பொதுவாக ஒத்துப்போகக்கூடிய விஷயங்களை, பொதுவான சில ஆளுமை பண்புகளைத் தனிநபர்களிடம் கொடுத்துச் சோதிக்கும்போது அவை தம்மையே மிகத்துல்லியமாகக் குறிப்பனவாக அவர்கள் கருதுவதாக இருக்குமாம்.
இது ஜோதிடம், வருடாந்திர பலன், மற்றும் கிரக பெயர்ச்சி பலன்களில் பார்த்திருக்கலாம்.

1948 ஆம் ஆண்டில், ஒரு "கிளாசிக் பரிசோதனை" என்று விவரிக்கப்பட்டுள்ள நிலையில்,  உளவியலாளர் பெர்ட்ராம் ஆர். ஃபோரர் ஒரு உளவியல் பரிசோதனையை வழங்கினார் - அதில் 
ஒரு ஓவியம் கொடுத்து பரிசோதித்ததில் அனைவரும் ஒன்றே போல் பதிலளித்தனராம்.இது ஃபோரெர் விளைவு (Forer effect) என்றும் அழைக்கப்படுகிறது

அதன் முடிவில் ஆழ் மட்டத்தில், மனம் நம்பிக்கையில் கவனம் செலுத்துகிறது. நனவான மட்டத்தில் இருக்கும்போது, ​​அது எதிர்மறையில் கவனம் செலுத்துகிறது. நம்மிடமுள்ள நேர்மறை எண்ணங்களை எப்போதும் நினைவில் வைத்திருத்தல் அல்லது நம்மிடம் ஒருவர் பாசிட்டிவ் விஷயத்தை சொல்லும் போது உடனே ஒப்புக்கொள்ளுதல் போன்றவைகளால் இது சாத்தியமாகிறது.

பொதுவான போக்கினை கூறினாலும்
மனிதன் தம் அகநிலையை சரிபார்த்து தன் குணாதிசியத்தை பொருத்திப் பார்க்க முயன்று அதில் வெற்றியடைகிறான்.
உதாரணத்திற்கு நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாய் இருப்பீர்கள்.சில நேரங்களில் சோம்பலாய் இருப்பீர்கள்.இதில் "சிலநேரங்களில்"என்பது அனைவருக்குமே பொருந்தும். இந்த மாதிரி இடத்தில் தான் அனைவரும் ஒத்துப் போகிறோம்.இது ஒரு வகையில் நன்மையே. இதன் மூலம் நேர்மறை எண்ணத்தை நினைவு படுத்தி அதனை தொடர் வைக்கிறது.

#பலரும் தம்மையே குறிப்பதாகக் கருதிக்கொள்ளக்கூடிய விஷயங்கள் என உள்ளன.

*நீங்க வாழ்க்கையில் படாத கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பீங்க

*நீங்க பார்த்தா சட்டுனு பேசமாட்டீங்க
ஆனா பேச ஆரம்பித்தால் கலகல டைப்

*நீங்க எல்லோரையும் நம்புவதால் உங்களை எளிதில் ஏமாற்றுவிடுவார்கள்

*எந்த ஒரு வேலையையும் நேர்த்தியாக செய்வதில் அலாதி ஆர்வம்

*புதுமையான விஷயத்தை கற்றுக்கொள்ள ரொம்ப மெனக்கெடுவீங்க

*நீங்க முன்னேறுவது உங்களை சுற்றியுள்ளவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாது.இருந்தாலும் உங்க திறமையால் அடுத்தடுத்த இடம் கிடைத்துக்கொண்டே இருக்கும்

*சவாலையெல்லாம் சர்பத் குடிப்பது
போல் உங்களுக்கு

*நீங்க பொதுவா யாரையும் எளிதில் நம்பமாட்டீங்க.நம்பி விட்டால் அப்புறம் கடைசி வரை கன்டினியூ பன்னுவீங்க

இப்படியெல்லாம் படிக்கும்போது இந்த அறிகுறி எல்லாம் நமக்கு இருக்குனு நினைப்போமே அதுதான் பார்னம் விளைவு.

பாபநாசம் படத்தில் பெண் போலிஸ் அதிகாரி சொல்வது போல் ஒரு வசனம் வரும்."ஒரு சினிமாவில் ஒரு நல்ல சீன் வந்தால் அது மட்டும் நினைவில் இருக்கும் மத்த எல்லா சீனையும் மற்ந்திருவோம் னு.அது போல் நம்மை பற்றி ஒருவிசயம் சொல்லப்பட்டாலும் அந்த ஒரு விஷயம் பிடித்திருப்பதால் மற்ற எல்லாவற்றையும் நம்புகிறோம். 
எதிர்மறையாய் சொன்னால் நம்பமாட்டோம்.அதனால்தான் 
ஜோசியரின் மீதுதான் நம்பிக்கை குறைகிறதே தவிர..
ஜோசியத்தின்  மீது நம்பிக்கை குறைவதே இல்லை.

#உஷார்

பொதுவாக நம்பிக்கை சார்ந்த எதையும் புரிய வைப்பது கடினம்.ஆனால் அந்த நம்பிக்கையை மூலதனமாய் வைத்து ஒருவர் ஏமாற்றும்போது நாம் உஷாராய் இருக்க வேண்டும்.பத்து விஷயம் சொன்னதில் மூன்று ஒத்துப்போய்விட்டால் பதினொன்றாவது விஷயத்தை அவர் எப்படி கூறினாலும் நம்பகூடாது. சுயபரிசோதனை செய்துபார்க்கனும்.ஓஷோ கூறுவார் 
நல்லவேளை  மனிதர்களோடு மட்டும் நீ உன்னை ஒப்பிட்டுக்கொள்கிறாய். உண்மையில்  நீ அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறாய்
இல்லையெனில் மற்றவைகளோடு ஒப்பிட்டு வேதனை அடைவாய் னு சொல்வார். உண்மையில் மற்றவர்களை விட நாம் ஒரு படி மேல் என்ற எண்ணம் உள்ளூர அனைவருக்கும் உள்ளது. இதை பயன்படுத்தி சொல்லும்போது எளிதில் வீழ்ந்துவிடுகிறோம்.ஆகவே நேர்மறை எண்ணதுக்காக இதனையெல்லாம் நம்புவோம். ஏமாற்றும்போது விழிப்புணர்வோடு இருப்போம்

-மணிகண்ட பிரபு

Monday 26 February 2024

ரயிலேறிய நிமிடத்தில் அடம் பிடிக்கும் குழந்தை போல் புறக்காட்சியுடன் ஒன்ற மறுத்து தனக்குள்ளேயே அமிழ முற்படும் மனத்துடன் போராடுகிறவனுக்கு, புதியவரின் வருகையும் அருகாமையும் இடையூறு ஏற்படாமல் ஆறுதலாக வந்து அமர்ந்தார்..-யுவன் சந்திரசேகர் சிறுகதையில்

ஒருவர் தன் தவறுகளை ஒப்புக் கொள்வதற்குத் துணிவதில் ஒரு குறிப்பிட்ட அளவு திருப்தி உள்ளது. அது அவரது குற்ற உணர்வையும் தற்காப்புத் தன்மையையும் மட்டும் போக்குவதில்லை. மாறாக, நிகழ்ந்த தவறால் ஏற்பட்டப் பிரச்சனையைத் தீர்க்கவும் உதவுகிறது-டேல் கார்னகி

Saturday 24 February 2024

Friday 23 February 2024

சென்னையில் ஒரு கட்சியின் சுவரொட்டியில், மாண்புமிகு மக்களின் முதல்வர் என்று எழுதியிருக்கிறார்கள். ஒரு தமிழ் வாத்தியார் அப்படி வராது என்று சொல்லிக் கொடுக்கிறார். 'மாண்புமிகு' பெயருக்கு முன்னால் வரவேண்டும். இல்லாவிட்டால் மக்களை 'மாண்புமிகு' என்று விளிப்பது போல் ஆகிவிடும். எனக்கு, மைக்கல் மதன காமராஜனுக்காக கிரேஸி மோகன் எழுதிய, "மாண்புமிகு குத்துவிளக்கை அமைச்சர் ஏற்றிவைப்பார்" என்கிற நகைச்சுவைதான் நினைவுக்கு வருகிறது. 😄

ஒரு மனிதனின் அதிர்ஷ்டம் எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும்?சரியான நேரத்துக்கு வரும் பேருந்து போல இருக்க வேண்டும்-கழுகார்

டைகர் பேரண்டிங்


Tiger Parenting

குழந்தைகளை அவர்கள் போக்கிலேயே வளர்ப்பது, அவர்கள் விருப்பங்களுக்கு மதிப்பு கொடுப்பது ஆகியவை மேற்கத்திய நாகரிகம்.

இதற்கு மாறாகக் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் எனப் பெற்றோரே முடிவு செய்துவிட்டுப் பின் கண்டிப்பாக அதைக் கடைப்பிடிப்பதை Tiger Parenting என்கிறார்கள். இது கிழக்கத்திய வழிமுறை. பிடித்திருக்கிறதோ இல்லையோ நாலு சாத்து சாத்தி ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வைப்பது. 

Amy Chua என்பவர் எழுதிய Battle Hymn of the Tiger Mother என்னும் நூலில் இந்த வார்த்தைப் பிரயோகத்தை முதலில் பயன்படுத்தினார். 

ராணுவ ஒழுங்குடன் கண்டிப்பாக இருந்து அவர் தனது குழந்தைகளை வளர்த்த கதைதான் அந்த நூல். அதற்காக அவர் பல எதிர்ப்புகளைச் சம்பாதித்தார்.

குழந்தை வளர்ப்பில் பல விஷயங்களைப் பொதுமைப் படுத்த முடியாது. இருப்பினும் ஓவர் கண்டிப்பு ஓவர் செல்லம் இரண்டுக்கும் நடுவேயான வழிமுறை ஓரளவு சரியானதாக இருக்கும்.

நலம் தரும் நான்கெழுத்து அந்த சமநிலையே

டாக்டர் ஜி ராமானுஜம்

மனிதன் இரு நிலைகளில் குருடனாகிவிடுகிறான்.அளவு மீறி நேசிக்கும்போது.தேவைக்கதிகமாக வெறுக்கும்போது.நேசிக்கும்போது குறைகள் விளங்குவதில்லை.வெறுக்கும்போது நல்ல விசயங்கள் தெரிவதில்லை.-ரூஹ்

Sunday 18 February 2024

ஒரு விஷயத்தை இன்னொருவனின் கண்ணோட்டத்தில் இருந்து நீ எண்ணிப் பார்க்காத வரைக்கும் , அந்த இன்னொருவனாக மாறாத வரைக்கும், அவன் நடந்த பாதையில் நீ நடக்காத வரைக்கும்,அந்த நபரை உண்மையிலுமே உன்னால் புரிந்து கொள்ள முடியாது .-சக்திவேல்

ஜென்


நீ இந்த உலகில் இருப்பது வெறும் தற்செயல் அன்று.. பிரபஞ்சத்துக்கு நீ தேவை. நீ இல்லாவிட்டால் ஏற்படும் வெற்றிடத்தை வேறு எதுவும் பூர்த்தி செய்ய முடியாது..உன் இன்மையை பிரபஞ்சம் உணரும்.  நட்சத்திரங்கள் , சூரியன் , சந்திரன் , மரங்கள் , பறவைகள் என அனைத்தும் ஏதோ ஒன்று குறைகிறதே என எண்ணும் , நீ இல்லாவிட்டால். உன் இடத்தை யாரும் நிரப்ப முடியாது.. பிரபஞ்சம் உன் மீது அக்கறை காட்டுகிறது. கொஞ்சம் விழிப்புணர்வுடன் இருந்தால் , எல்லா திசைகளில் இருந்தும் பிரபஞ்சம் உன் மீது அன்பை பொழிவதை உணர முடியும் 

- கடவுள் இறந்து விட்டார் , ஜென் மட்டுமே ஒரே உண்மை எனும் நூலில் இருந்து...

எல்லாவற்றின் மீதும் தூசியெனப்படிந்துகிடக்கிறது ஒரு சலிப்பு.நாம் நாயைப் பழக்குவது போல் நம்மை ஏதோ ஒன்று பழக்கிக் கொண்டிருக்கிறது-இசை

எந்தவொரு வாழ்க்கையும் ஒரு கணத்தால் உருவாவதே. அந்த கணத்தில்தான் ஒருவன், முதல் முறையாக தான் யார் என்பதை எப்போதைக்குமாக கண்டறிகிறான்.- ஜார்ஜ் லூயிஸ் போர்ஹெஸ்

மற்ற பொய்களுக்கு உடல்மொழி தேவையில்லை...மனைவிக்கானதை அவளின் கண்களைப் பார்க்காமல் சொல்லிவிட்டுசுமார் 30 ஆண்டுகள் வரையிலாவதுநினைவில் வைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. -ஆண்டன் பெனி

Friday 16 February 2024

ஓநாய்களை நீ தனியே தேட வேண்டியதில்லை. மேய்ச்சல் ஆடுகளைப் பின் தொடரும்போது காணலாம்-நரன்

சந்தேகம் என்பது நீ அடைந்து, அறிந்து, உணர்ந்த பின் சந்தேகத்தை அடக்கி வைக்க வேண்டியதில்லை.அது தானாகவே ஆவியாகி மறைந்து விடுகிறது. அனுபவித்துப் பார்ப்பதன் மூலமே அழிக்கப்படுகிறது.-ஓஷோ

உள்ளம் ஒளி பெற நீயே விளக்காவாய்..!Be Your Own Lamp.

ஓநாய்களை நீ தனியே தேட வேண்டியதில்லை. மேய்ச்சல் ஆடுகளைப் பின் தொடரும்போது காணலாம்-நரன்

Wednesday 14 February 2024

பேச்சு


பேச்சு என்பது எப்போதும் மேடை பேச்சு அல்ல; மேடை பேச்சு திட்டமிட்ட வெளிப்பாடு;  உள்ளுக்குள்ளே நெய்து நெய்து பழக்கப்பட்டு, நிறைய விஷயங்கள் மனதில் தேக்கிக்கொண்டு, ஒரு அடுக்காய் பயிற்சியின் பால் ஏற்பட்ட வெளிப்பாடு. மனிதர்களிடம் இனிமையாகவும், நிதானமகாவும், தெளிவாகவும் பேசுவதுதான் பேச்சு. உணர்ச்சி வேகம் கொப்புளிக்கும் போது பேசாமல் இருப்பது நல்லது.ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு பேசினால், பிரச்னையின் மையத்தை தொட்டு விடலாம்

-பாலகுமாரன்

Tuesday 13 February 2024

இதுவரை நான் 9000 தடவைகள் "கோல்" போடத் தவறியுள்ளேன்.300 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளேன்.26 முறைகள் 'வின்னிங் ஷாட்' போடத் தவறி வெற்றியைப் பறி கொடுத்திருக்கிறேன். பல முறை தோற்றிருக்கிறேன். அதனால்தான் வெற்றி பெற்றேன்-மைக்கேல் ஜெஃப்ரி ஜோர்டன்

ஏ வி எம்

கை கட்டியவாறே நிற்பது....

கை கட்டியவாறு பேசுவது பற்றி..

ஏ.வி.எம். சரவணனிடம் ஒருமுறை நீங்கள் எவ்வளவு மதிப்பானவர்? 
ஏன் எப்போதும் கை கட்டியவாறே இருக்கிறீர்கள் என கேட்கப்பட்டது.

அவர் கூறிய பதில்..
இதில் போய் என்ன மதிப்பு குறைந்தது? எனக்கு ஓரிடத்தில் நிற்கும்போதோ பேசும்போதோ கையை எங்கு வைத்து கொள்வது என்ற குழப்பம் வரும். சற்று அசௌகரியமாகவும் கூட இருக்கும்.

கையை தொங்க விட்டவாறு பேசுவதா?
பேன்ட்பாக்கெட்டில் கை விட்டபடி பேசுவதா என பலவித குழப்பங்கள். 

அப்போது ஆரம்பித்ததே கை கட்டியவாறு இருப்பது.
இப்படி கை கட்டி நின்று பேசினால் மிகவும் வசதியாகவும் உள்ளது, அத்தோடு நான் பணிவாக பேசுவதாக எதிரில் நிற்பவரும் நினைத்து என் பேச்சை கூர்ந்து கவனிப்பார்கள்.

இப்போது கைகட்டி பேசுவது ஏ.வி.எம். சரவணன் ஸ்டைல் என்று எனக்கு ஒரு அடையாளமும் வந்துவிட்டது என்றார்.

விழிப்புல அமைதியாக இருக்கறதுதான் ரொம்ப பெரிய விசேஷம். இது பழக்கப்பட்டு போச்சுன்னா எதிர்க்க எவ்வளவு பெரிய விஷயம் நடந்தாலும் எது நடந்தாலும் உள்ள பெரிய ஆரவாரம் காட்டாது, அமைதியாக யோசிக்க முடியும்-பாலகுமாரன்

பூவ? மலரா

பூவா? மலரா?

தொல்காப்பியர் எல்லா இடங்களிலும் ‘பூ’ என்ற சொல்லையே கையாண்டுள்ளார். மலர் என்னும் சொல்லை ஓரிடத்தில் மட்டும் அதுவும் ‘மலர்தலை உலகத்து’ என்று உலகுக்கு அடைமொழியாக கூற பயன்படுத்தியுள்ளார் என்று கூறுகிறார் கோவை இளஞ்சேரன்.

ஏன் தொல்காப்பியர் ‘பூ’ என்ற சொல்லை மட்டும் தேர்வு செய்துள்ளார்? 

பூ என்பதே பொருத்தமான சொல். ஏனெனில், மலர்ந்த பூக்களையே ‘மலர்கள்’ என்று அழைக்க முடியும். ஆனால், மலராத பூக்கள் (Cleistogamous Flowers) பல உலகில் உள்ளன என்கிறார் குவி.கிருஷ்ணமூர்த்தி. 

ஆகவே அனைத்தையும் பொதுவாக அழைக்க அறிவியல்ரீதியாகவும் ‘பூ’ என்ற சொல்லே பொருத்தமாகிறது. 

-நக்கீரன்

Saturday 10 February 2024

அவரவரும்அவர்களால் இயன்றதை செய்கிறார்கள்அதனால்இந்த உலகம் மலர்ச்சியுறுகிறது.சிலர் எதுவுமேசெய்யாமல் இருக்கிறார்கள்.அதனால் இந்த உலகம்பாதுகாப்பாக இருக்கிறது.-மனுஷ்ய புத்திரன்

அண்மையில் ஜப்பானில் நடந்த விமான விபத்திலிருந்து பயணிகள் கூட்டத்தை எப்படி இரண்டு மூன்று நிமிடங்களில் பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் என்று தெரியுமா? அதை ஏன் textbook evacuation என்று சொல்கிறார்கள்? விமானம் நெருப்பு பிடித்ததும் அந்த விமானத்தில் இருந்த பயணிகள் யாருமே எழவில்லை. எதையும் குழப்பவும் இல்லை. ஒருவர் கூட பொதிகளை எடுக்க ஓடவில்லை. விமான பணியாளர்களின் தகவல்களுக்காகக் காத்திருந்தார்கள். புத்தகத்தில் இருக்கிற Safety rules ஐ பின்பற்றி மக்கள் அமர்ந்திருந்தார்கள். இதனால் இலகுவாக அனைவரையும் வெளியேற்றி காப்பாற்ற முடிந்தது. குழப்பம் நிகழ்ந்து தாமதம் ஏற்பட்டிருந்தால் அனைவரையும் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். தப்பிக்க வேண்டும் என்கிற Survival instinct உந்தியபோதும் அந்த மக்கள் அப்படி இருந்திருக்கிறார்கள்! இதே நிலை நமது இலங்கை இந்திய விமானங்களில் ஏற்பட்டால் என்னாகும் என்று சிந்தித்தே பார்க்க முடியவில்லை. இதுதான் நிலை. எப்போதும் கூட்டத்தை யாரும் கட்டுப்படுத்தமாட்டார்கள். Self decipline அவ்வளவு முக்கியம். இதை எப்போது எப்படி கற்றுக்கொடுக்கப் போகிறோம்?-சுதர்சன்

கோகுல் பிரசாத்


நமது தெரிவின் (choice) மீதான அகந்தையைக் கைவிடுவதே முதன்மை விடுதலை. நாம் எடுத்த முடிவு என்பதால் அதை நம் ஆளுமையின் பகுதியாகக் கருதுகிறோம். ஆகையால் அதைத் தவறென ஒப்புக்கொள்வதையும் கடந்துசெல்வதையும் அகங்காரம் ஏற்க மறுக்கிறது, ஒத்திப்போட விரும்புகிறது, எப்படியாவது சரிசெய்ய முயல்கிறது. அதைப் பிடித்துத் தொங்குகிறது. ரத்த உறவைப்போல, பிள்ளையைப் போல, நம் தெரிவையும் சீராட்டிப் பொத்திப் பாதுகாத்து வலுக்கட்டாயமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்கிறோம். இது அவசியமற்றது, உதற வேண்டியது. ஒரு முடிவின் மீதான பிடிமானத்தைக் கைவிட்டாலே வாழ்வில் பாதிக் காயங்களைத் தவிர்த்துவிடலாம்.

-கோகுல் பிரசாத்

எந்தப்பணியானாலும் எவர் கவனிக்கிறார்கள், எவ்வளவுபேர் ஆதரிக்கிறார்கள், என்ன விளைவு என்றெல்லாம் கணக்கிடாமல் அதை சிலகாலமாவது முழுமூச்சாகச் செய்யவேண்டும். அத்தகைய பணிகள் மெல்ல மெல்ல நம் அன்றாடமாக ஆகும். நம் ஆளுமையை மெல்ல மெல்ல அவை மாற்றும். அவ்வாறுதான் நாம் செயல்வழியாக நிறைவையும் விடுதலையையும் நோக்கிச் செல்ல தொடங்குகிறோம்.-ஜெயமோகன்

Book -6


Reading_Marathon2024
#24RM050
மணிகண்ட பிரபு

Book no:6/100+

A1 எனும் ஏழாம் அறிவு
-ஹரிஹரசுதன் தங்கவேலு

பொதுவாக வெற்றியடைந்தவர்களின் கதைகளை கடைசி பக்கம் மட்டுமே நாம் படிக்கிறோம் என்ற வரி மிகவும் முக்கியமானது. உதாரணத்திற்கு ஜெர்மனி எவ்வாறு வெற்றி அடைந்தது என்றால் அவர்களிடம் படை இருந்தது, மக்கள் இருந்தனர் என்று பொத்தாம் பொதுவாக சொல்லி சென்று விடுவார்கள். ஆனால் உண்மையில் ஜெர்மனியின் வெற்றி எவ்வாறு அமைந்தது என்பதன் ஒரு பகுதியை இந்த நூலில் படித்த பிறகு தான் தெரிந்து கொண்டேன். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்று வெற்றிக்கு மிக அருகில் சென்றவர் தான் ஜெர்மானியர்கள் .தொழில்நுட்பங்கள் நமக்கு எவ்விதத்தில் எல்லாம் கை கொடுக்கின்றன தொழில்நுட்பங்கள் வந்த வரலாற்றையும் இந்த புத்தகத்தின் மூலமும், அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய மேதையை பற்றியும் 17 கட்டுரைகளில் செயற்கை நுண்ணறிவை படித்து தெரிந்து கொள்ளலாம்.

மனிதனைப் போலவே சிந்திக்க கூடிய ஓர் இயந்திரத்தை நான் உருவாக்கப் போகிறேன். அது ஒரு அளவற்ற நினைவகமும் ஒரு ஸ்கேனரும் கொண்டு இயங்கும். நமது கட்டளைக்கு ஏற்ப நினைவகத்தில் இருக்கும் ஒவ்வொரு குறியீடுகளையும் இந்த ஸ்கேனர் மூலம் முன்னும் பின்னும் ஆக நகர்ந்து தேடும் .பின்பு அதுவே சரியான முடிவுகளை வெளிப்படுத்தும் என்று செயற்கை நுண்ணறி உருவகத்தின் தந்தையாக போற்றப்படும் ஆலன் டூரிங் கண்டுபிடித்தது தான் இன்றைக்கு நாம் பயன்படுத்தும் செயற்கை தொழில்நுட்பத்தின் ஆதாரப்புள்ளி.

இரண்டாம் உலகப்போரில் மற்றவர்கள் ஆயுதங்கள் படைபலங்களை நம்பிய போது தொழில்நுட்பத்தை நம்பி ஜெர்மானியர் எனிக்மாவும் என்ஸ்கிரிப்ஷன்,அல்ட்ரா உளவு, தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி போரில் கையாண்டார் என்பதை இந்த நூலில் புதிய விஷயமாக தெரிந்து கொள்ள முடிந்தது. அது எவ்வாறு உளவு வேலை பார்த்தது எதிரிகள் கண்டுபிடித்தாலும் அதனை கையாளத் தெரியாத புதிய உத்தியையும் பயன்படுத்தியது தெரிய வருகிறது. வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதைப் போல இதனையும் அழித்தொழிக்க இன்னொருவன் வருவான் அவன் தான் ஆலன்.

நவீன தொழில்நுட்பத்தை உடனே ஏற்றுக் கொண்டார்களா உணவுக்காக ஆயுதங்களுக்காக ஒதுக்கப்பட வேண்டிய கணிசமான தொகையை வெறும் தொழில்நுட்பத்துக்கு ஒதுக்கலாமா என ஆலன் டூரிங் சந்தித்த சவால்கள் ஏராளம். முதன்முறையாக எலிக்மாவின் ரகசிய தகவல்களை ஆலன் கண்டுபிடித்தார். அது attack at dawn என தொடங்கிய செய்திகள். முழுமையாக எலிக்மாவின் திட்டத்தை தவிடு பொடி ஆக்கினார்கள் இது ஆலனுக்கு கிடைத்த முதல் வெற்றி.

ஆலன் டூரிங்கின் அடித்தளத்தை ஒட்டி இன்றைய கணினி வல்லுநர்கள் பலரும் அவரது தொழில்நுட்பத்தின் மேலே கட்டமைத்து வந்தனர். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றதில் முக்கியமானவர்கள் மார்பின் மின்ஸ்கி மற்றும் ஜான் மெக்கார்தி.. அதன் பிறகான ஐம்பது வருட தொழில்நுட்பத்தில் இவர்களின் பங்கு முக்கியமாக முக்கியமானது.

கணினி நிரல்கள் COBOL மொழி அறிமுகம் எலிசா என கணினியின் செயற்கை நுட்பங்கள் பரிணாம வளர்ச்சி அடைய தொடங்கியது 1973 ஆம் ஆண்டு ஜப்பானில் ஆண்ட்ராய்டு ரோபோட் உருவாக்கப்பட்டது. செயற்கை நுண்ணறிவு பின்தங்கிய காலம் பின் மீண்டும் எழுச்சி பெற்றது. சதுரங்க கணினி,டீப் ப்ளூ ஆகியவற்றின் மூலம் பிரபலமடைந்தது. அதன்பின் விளையாட்டுக்கள் ஒவ்வொன்றிலும் செயற்கை நுண்ணறிவு நுழைந்தது அதன் மூன்று நிலைகளையும் வகைப்படுத்தி விளக்கமும் கொடுத்திருக்கிறார்.
இயந்திர கற்றல் சோபியா ஓபன் போன்ற பல்வேறு தகவல்களை விளக்கத்துடன் இதில் கட்டுரையாக எழுதியிருப்பார்.

இத்தனை பெருமைகளும் கூறிய ஆசிரியர் இதன் எல்லா தீமைகளையும் இறுதியில் கொடுத்திருப்பார். அவை இனி அனைத்தும் தகவல்களாக மட்டுமே இருக்கும். பண இழப்பு அதிகரிக்கும். உடனடி மருத்துவர்கள் வருவார்கள். கதைகளை செயற்கை நுண்ணறிவோடு எழுதிக் கொள்வார்கள். மனிதர்களின் தேவை என்பது அருகிவிடும். வேறு துணை எதற்கு என்ற நிலையை மனிதன் ஏற்படுத்துவான். உறவுகள் சிதையும். இதில் ஏதாவது தொழில்நுட்பக் குறைபாடுகள் நிகழ்ந்தால் அதன் விளைவுகள் பயங்கரமாக இருக்கும்

#ரசித்தவை

*காடுகளில் வேட்டை ஓநாய்கள் தாக்கும் யுத்தியை நீர்மூழ்கி தாக்குதலுக்கு அமல்படுத்தினார்

*மிக நீண்ட நாட்கள் நடந்த உலகின் நவீன கடற் போர் அட்லாண்டிக் போர் தான் 2074 நாட்கள்

*எப்போதெல்லாம் விரக்தி தலை எடுக்கிறதோ அப்போது ஓட்டத்தை தான் தேர்ந்தெடுப்பார் ஆலன் என்னில் அவர் மாறத்தான் ஓட்டப்பந்தய வீரரும் கூட

*இன்று நாம் பாஸ்வோர்ட் டைப் செய்யும் போது நட்சத்திர குறியீடு வருவதற்கு அடித்தளமாக அமைந்தது எனிக்மாவும் டன்னியும் தான்

*கார் சாவி எங்கு வைத்தோம் எனத் தேடும் நேரம் தவிர மற்ற நேரங்களில் மனித மூளை தோராயமாக ஒரு exaFLOP அதிவேகத்தில் தான் இயங்குகிறது

*2021 ஆம் ஆண்டு ஆலன் பிறந்த நாளான ஜூன் 23ம் தேதி அன்று இங்கிலாந்து வங்கியின் 50 யூரோ தாளில் ஆலன் டூரிங் படம் அச்சிடப்பட்டு மக்கள் புழக்கத்திற்கு விடப்பட்டது

*கணினி அறிவியல் என்பது மிகப்பெரும் தொழில்வெளி. ப்ரோக்ராம்கள். உள்ளீடு ஒன்று கொடுத்தால் அதன் நிரலுக்கு ஏற்ப வெளியீடு ஒன்று வெளிவரும் .அதுவே செயற்கை நுண்ணறிவு என்றால் உள்ளீடு வாங்கிக் கொண்டு தன்வசம் உள்ள பெரும் தகவல் குவியலிலிருந்து ஒன்று அல்லது பல்வேறு பதில்களை வெளியிடாக தரும்

*நியூரான்கள் இல்லாமல் சிந்தனை சாத்தியம் இல்லை. செயற்கையான அறிவு உருவாக்கப்பட்ட இந்த செயற்கை நியுரான்கள் கூட்டம் தான் இயந்திர மூளை கணினி

எல்லா விவரங்களும் சாபத்தோடு தான் வருகின்றன ஒரு முறை டைட்டில் பார்க் திறப்பு விழாவில் செயற்கை நுண்ணறிவு குறித்து கேள்வி எழுப்பும் போது அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சொன்னார்.. கணினிகள் இயந்திரங்கள் என்பவை தேக்கி வைக்கப்பட்ட அணைக்கட்டில் இருந்து வெளியேறும் நீர். மனித மூளை என்பது ஊற்று என்று சொல்லி இருப்பார். இருப்பினும் வருங்காலத்தில் அந்த ஊற்றினையும் கண்டுபிடித்துவிடும் நாட்களும் வெகு தொலைவில் இல்லை எனலாம். மனித அறிவை மிஞ்சாதவரை மட்டுமே அனைத்து கண்டுபிடிப்புகளையும் மனிதன் போற்றுவான். மனிதனையும் மிஞ்சி விட்டால் அனைத்தும் இயந்திர மயமாகி மனிதனுக்கு மதிப்பில்லாமல் போகும் என்பது ஒரு கசப்பான உண்மை 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜெயகாந்தன்


'வயதானால், சாவு நிச்சயம். அது வரும்போது வரட்டும். இருக்கிற வாழ்க்கையை இன்பமாக அனுபவிப்பதுதான் முக்கியம்’

'இன்பம் என்றால் என்னவென்றே பலருக்கும் தெரியாது. அது பொன்னால் கிடைப்பது இல்லை, புகழால் கிடைப்பது இல்லை, பெண்ணோ, பொருளோ தருவது இல்லை. தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது பாருங்கள்... அந்த இன்பமே உயர்வானது. 
தன்னை அறிந்தவன் தவறுகளை மறைத்துக்கொள்ள மாட்டான். சரி, தவறு என்பதெல்லாம் அவரவர் வாழும் சூழ்நிலையும் வளர்ந்த விதமும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கமும் உருவாக்கியவை. உங்கள் சரி, எனக்குத் தவறு. மீறுதல் ஓர் உரிமை, ஓர் எழுச்சி. 
அதைச் செய்து பார்த்தவன்தான் உணர முடியும். வேடிக்கை பார்ப்பவனால் ஒருபோதும் மீறலைப் புரிந்துகொள்ள முடியாது’

-ஜெயகாந்தன்

Friday 9 February 2024

மார்னிங் குளோரி


மார்னிங் குளோரி என்ற மலரொன்று இருக்கிறது. மலர்களுக்கே உரித்தான வெளிறிய நீல நிறத்திலும் மாவ் [ mauve] என்று சொல்லப்படும் வண்ணத்தோடு கலந்த ஊதா நிறத்திலும் தனிப்பட்டதொரு வெள்ளை நிறத்திலும் அவை இருக்கும். ஊதுகுழல் வடிவத்திலுள்ள அந்த மலர்கள் காலையில் மலர்கின்றன. மலர்ந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அவை உதிர்ந்து மடிந்து விடுகின்றன. நீங்கள் அம்மலர்களைப் பார்த்திருக்கலாம். அவை கொடியினில் மலர்ந்திருக்கும் போது எத்தனை அழகுடன் இருந்தனவோ அத்தனை அழகுடனே அவை மடியும் போதும் இருக்கின்றன. அம்மலர்கள் சில மணி நேரங்களுக்கே மலர்ந்திருக்கின்றன. பின்னர் அவை இல்லாமல் போய்விடுகின்றன. அவை உதிர்ந்து மடியும் போதும் ஒரு மலரின் தன்மையை இழப்பதில்லை. 

நாம் முப்பது, நாற்பது, அறுபது அல்லது எண்பது வருடங்களுக்கு மிகப் பெரும் போராட்டத்திலும் , துன்பத்திலும், நிலையிலா இன்ப சுகங்களிலும் வாழ்ந்து விட்டு , பின்னர் அத்துன்ப நிலையிலேயே , நமது உள்ளத்தில் மகிழ்ச்சியே இல்லாமல் மரணித்து விடுகிறோம். வாழ்வில் நாம் எவ்வளவு அவலட்சணமாக இருந்தோமோ அவ்வண்ணமே தான் மரணித்திலும் இருக்கின்றோம்.

- ஜே.கிருஷ்ணமூர்த்தி

நன்றி சக்திவேல்

பாலசந்தர் படங்களில் கடிகாரத்தைப் பற்றி ஏதாவது ஒரு வசனம் வந்து விடும். ``நோ டூ வாட்சஸ் அக்ரி- எந்த ரெண்டு வாட்சும் ஒரே நேரத்தைக் காட்டினதில்லை”-(மேஜர் சுந்தரராஜன் குரலில் வாசிக்கவும்)- ``மாது , நீ கடிகாரத்தில் சின்ன முள்ளுன்னா நான் பெரிய முள்ளு உன்னை விடாம பின்னாலேயே சுத்திசுத்தி வருவேன்,” ``ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு ரெண்டு தரம் சரியான நேரம் காம்பிக்கும். ஆனா ஓடற கடிகாரம் எப்ப சரியான நேரம் காம்பிக்கும்ன்னு சொல்ல முடியாது...”

Tuesday 6 February 2024

ஜியோ டாமின்


நாம் அமைதியான ஒரு பஞ்சத்தில் (Silent famine) இருக்கிறோம் என்கிறது Centre for Science & Environment இன் இதழான “Down to Earth” இன் கட்டுரை. 'Indian Council of Agricultural Research' இன் விஞ்ஞானிகளால் செய்யப்பட்ட ஆய்வில் நம் உணவுதானியங்கள் அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழந்து வருவதோடு நச்சுத் தன்மையை அடைந்து வருவதாகத் தெரியவந்திருக்கிறது. 

ஒவ்வொரு உணவுத் தானியத்திலும் உடலுக்குத் தேவையான என்னென்ன ஊட்டச் சத்துக்கள் எவ்வளவு மில்லிகிராம் இருக்கின்றன என்ற பட்டியலை நாம் பார்த்திருப்போம். அந்த பட்டியல் இப்போது பொய்த்துக்கொண்டிருக்கிறது. அரிசி மற்றும் கோதுமையில் இரும்புச் சத்து, துத்தநாகச் சத்து, சுண்ணாம்புச் சத்து, செம்புச் சத்து ஆகியவை எவ்வளவு வீழ்ச்சியடைந்திருக்கின்றன என்பதையும் ஆர்சனிக், அலுமினியம், பேரியம் போன்ற நச்சுக்கள் எப்படி அதிகரித்திருக்கின்றன என்பதையும் பின்னூட்த்திலிருக்கும் படங்களில் காணலாம்.

இதை இன்னொரு வகையில் சொல்வதானால் உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முன்பு நீங்கள் உண்ண வேண்டியிருந்ததைவிட அதிகமாக இன்னும் அதிகம் நச்சுக்களையும் சேர்த்து நீங்கள் உண்ண வேண்டியிருக்கிறது. 

இது ஒருபுறமிருக்க இன்னொருபுறம் காலநிலை மாற்றத்தால் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளின் வகைமையும், தாக்குதலும், தீவிரமும், பரவலும் வேகமாய் அதிகரித்து வருகின்றன. வளமிழந்தப் பயிர்களை உண்ணும் பூச்சிகளும்கூட தமக்குத் தேவையானவற்றைப் பெற இன்னும் அதிகமாய் உண்ண வேண்டியிருக்கிறது. பூச்சிகளின் அதிகரிப்பால் ஏற்படும் சேதங்கள் ஒருபுறமிருக்க இன்னொருபுறம் மகரந்தச் சேர்க்கை செய்யும் பூச்சிகளின் வீழ்ச்சியும் அதிகரிக்கும் வெப்பத்துக்குத் தகவமைய இயலாதத் தன்மையும், காலநிலை மாற்றத்தின் விளைவுகளான பெருமழை, வறட்சி, புயல்கள் போன்றவையும் விளைச்சலைக் குறைக்கின்றன. இவைகுறித்த விரிவாக அறிக்கைகள் ஏற்கனவே வெளிவந்திருக்கின்றன.

அரிசி கோதுமை போன்ற அதிக சூழல் தாக்கமுள்ள தானியங்கள் எளிதில் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படுபவையாகவும் இருக்கின்றன. International Rice Research Institute இன் அறிக்கையானது உலகம் முழுதும் 14 கோடி சிறுகுறு நெல் விவசாயிகளின் வாழ்வாதாரம் அபாயத்தில் இருப்பதாக எச்சரிக்கிறது. 

You are what you eat, or, rather, what you grow to eat என்கிறது Down to earth கட்டுரை. "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே" என்கிறது புறநானூறு. நாம் இந்த நிலத்துக்கும் நீருக்கும் செய்ததை அறுவடை செய்யத் தயாராக இருப்போம்.

கிரெடிட் கார்ட் வைத்திருப்பதால் மட்டும் அரிசி வாங்கிவிட முடியாத நிலையை விரைவில் எட்டிவிடும்போது ‘ஓரளவிற்கு’ வறட்சிதாங்கும் குறைவான இடுபொருட்கள் தேவைப்படும் சிறுதானியங்களும் பஞ்சத்தில் பிழைத்திருக்கச் செய்யும் பஞ்சகாலத் தாவரங்களும் நமக்கு (அல்லது நம் பிள்ளைகளுக்குக்) கைகொடுக்கலாம்.

Monday 5 February 2024

ikea


IKEA effect

IKEA என்பது உலகப் புகழ் பெற்ற ஸ்வீடன் நாட்டு ஃபர்னிச்சர் நிறுவனம். அவர்களின் தனிச்சிறப்பு, பொருட்களை முழுமையாக தராமல், அதன் பாகங்களைத் தனித்தனியாக அடுக்கி, ஒரு பாக்கெட்டில் தருவார்கள். கூடவே அதனை எப்படி அசெம்பிள் செய்வது என்ற DIY (Do it Yourself) கையேடும், வீடியோ இணைப்பும் இருக்கும். அதைப் பார்த்து நாமே எளிதாக அந்தப் பொருளை கட்டமைத்துக் கொள்ளலாம். 

வேறு பல நிறுவனங்கள் முழுமையான பொருளாக விற்பார்கள் அல்லது ஒரு டெக்னீஷியனை வீட்டுக்கு அனுப்பி பொருத்தித் தருவார்கள். 

இந்த இரண்டு அணுகுமுறையை வைத்து, மக்கள் எப்படி ஒரு பொருளின் மதிப்பை அளவிடுகிறார்கள் என்ற உளவியல் சோதனையை நடத்தியிருக்கிறார்கள். அதனை, IEKA effect என்று அழைக்கிறார்கள்.

ஒரு பயிற்சியில் பங்கெடுத்தவர்களை இரண்டு குழுக்களாக பிரித்து, ஒரு குழுவிடம் முழுமையாக அசெம்பிள் செய்யப்பட்ட ஒரு மேஜையை காண்பித்து அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என அளவிடச் சொன்னார்கள். இன்னொரு குழுவிடம், அதே மேஜையின் பாகங்களை தந்து அதனை அசெம்பிள் செய்து, பிறகு அதன் மதிப்பை கணிக்கச் சொன்னார்கள்.

முதல் குழுவினர் மதிப்பிட்ட விலையை விட இரண்டாவது குழுவினர் அதே மேஜைக்கு 50% அதிக விலையை நிர்ணயித்திருந்தனர். இதே பரிசோதனை பல முறை நடத்தப்பட்ட போதும் தாமே அசெம்பிள் செய்தவர்கள், தமது பொருளுக்கு கூடுதல் மதிப்பை தந்திருந்தனர்.

IKEAவின் தயாரிப்பை வாங்கியவர்கள், அதனை அவர்களே பொருத்தியதால் அந்தப் பொருளை கூடுதலாக விரும்புகிறார்கள். நாமே ஒரு கட்டிலை, அலமாரியை, மேஜையை பொருத்தும் போது ஒரு வித எம்பவர்மெண்ட்டை நாம் அடி ஆழத்தில் உணர்வோம். நாம் உருவாக்கிய பொருளை பாதுகாப்பாக, கவனத்துடன் பயன்படுத்துவோம். அதனால் IKEA தயாரிப்புகளை சிறந்தது என நம்பத் தொடங்குவோம். மீண்டும் மீண்டும் அதே நிறுவனப் பொருட்களை வாங்கவும் செய்வோம்.

கின்டர்-ஜாய் எனும் ஒரு சாக்லேட்டுக்கு குழந்தைகள் அடிமை. அதன் முக்கியக் காரணம், அந்த சாக்லேட் அல்ல. அதனுடன் ஒரு சர்ப்ரைஸ் பரிசுப் பொருள் ஒன்று கொடுக்கப்பட்டிருக்கும். அதனை குழந்தைகளே பொருத்திப் பார்க்குமாறு தந்திருப்பார்கள். அந்த சர்ப்ரைஸ் எலமெண்ட்டும், நாமே அதனை பொருத்தும் போது கிடைக்கும் மனநிறைவும் அந்த சாக்லேட்டின் மார்க்கெட் வெற்றிக்கு காரணமாக அமைந்திருக்கிறது.

பொதுவாக நாம் எந்த பணியில் ஈடுபடுகிறோமோ அந்த பணியில் கூடுதல் இணைப்பு ஏற்படும். அதன் நுணுக்கங்களை நாம் அறிவதால் அந்த பணிக்கு அதிக மதிப்பை தருகிறோம். அப்பாவின் பணத்தில் வாங்கிய வண்டியை விட, தானே உழைத்து சம்பாதித்த பணத்தில் வாங்கிய வண்டியை அதிக மதிப்புடன் நாம் உணர்வோம்.

ஒரு வேலையில் ஈடுபடாமல், வெளியே இருந்து அந்த வேலையின் தன்மையை அளவிடும் போது கொஞ்சம் குறைவாகத் தான் மதிப்பிடுவோம். ஆனால் அதில் ஈடுபட்டவர்கள் அதன் மதிப்பை அதிகமாக உணர்வார்கள். இது பணி சூழலில் முக்கியமான தத்துவமாக பின்பற்றப்படுகிறது. எந்த ஒரு வேலையிலும் பணியாளர்களை நேரடியாக ஈடுபடுத்தும் போது பணியாளர்கள் உணர்வுரீதியாக அந்த வேலையில் இணைப்பை ஏற்படுத்திக்கொண்டு அதன் மதிப்பை கூடுதலாக உணர்வார்கள்.

-ஜானகிராம்

மனிதர்கள் மீது சந்தேகப்பட உனக்குத் தெரியவில்லை. உலகத்துல யார் ஜெயிப்பான் தெரியுமா. அடுத்து இருக்கற ஆளை சந்தேகத்தோடு எப்போதும் பார்ப்பவன் ஜெயிப்பான். அடுத்தவரை நம்பறவன் நிச்சயம் தோற்பான். உன்னை நம்பு. அடுத்தவனை நம்பாத. இது போட்டிகள் நிறைந்த உலகம்.-பாலகுமாரன்

இந்த உலகிலே ஏதேனும் ஒன்றை உங்களால் நிச்சயமாக 'இம்ப்ரூவ்' செய்ய முடிவுமென்றால், அது உங்களையேதான்-அல்டஸ் ஹாக்ஸ்லே

Saturday 3 February 2024

போகன்

I, victim:The dark side of narcissm.

என்று நல்லதொரு உளவியல் கட்டுரை இந்தியன் எக்ஸ்பிரஸ் வார இதழில் வந்துள்ளது. நான் இதை இப்போது மேலும் மேலும் அதிகமாக நேர் வாழ்விலும் இணையத்திலும் காண்கிறேன்.

அதாவது தன் மேல் மட்டுமே ஆர்வம்  உள்ள ஒருவர் தன்னை ஏதோ ஒரு விஷயத்தில் பாதிக்கப்பட்டவராக முன்னாடி வைப்பது. அந்த விஷயம் உண்மையாகவோ கற்பனையாகவோ மிகைப் படுத்தப் பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் அதை ஒரு கருவியாக வைத்துக் கொண்டு இப்போது அளவில்லாத கவனத்தைக்  கோருவது. இப்போது அவர்கள் செய்யும் மிகுந்த சுய நலமான மற்றவரைப் பாதிக்கும் காரியங்களை நியாயப் படுத்துவது. ஒரு இழப்பீடு போல அவற்றைக் கருதுவது. கோருவது.தன்னைப் பற்றிய அதீத மதிப்பீடுகளை உருவாக்கி வைத்துக் கொண்டு அதற்கு சுற்றி இருப்பவர்கள் ஆமாம் சாமி போடா விட்டால் அவர்களைத் தாக்குவது.ஒரு குற்ற உணர்வை அவர்களிடம் உருவாக்க முயல்வது தனி வாழ்விலும் பொது வாழ்விலும் இந்த அதிகார விளையாட்டுகளைத் தொடர்ந்து விளையாடுவதன் மூலமாக தன்னை எப்போதும் ஒரு குற்றமற்ற நிலையில் வைத்துக் கொள்ள முயல்வது. அதன் மூலமாக தங்கள் தாழ்வு மனப்பான்மையை மறைத்துக் கொள்வது. நவீன உளவியல் இப்போது இதை ஒரு நோய்க் கூறு என்று சொல்கிறது.இதை victim narcissm என்கிறார்கள்.இது இப்போது பெருகி வருகிறது.

-போகன்

தனிமையைக் கடக்க முடியாத தருணங்களில் நாம் மனிதர்கள் என்பது அத்தனை துயரமானதாக இருக்கிறது-மனுஷ்

"புத்திசாலித்தனமாக, மறக்க வேண்டியதை மறப்பதே உண்மையான கல்வி ("True learning is judicious forgetting")

Friday 2 February 2024

அண்ணா


THE LIFE AND TIMES OF C.N.ANNADURAI என்கிற அற்புதமான நூல் தமிழில் 
விகடன் வெளியீடாக ஒரு சாதாரண மனிதனின் அசாதாரண வாழ்க்கை என்று மொழி பெயர்க்கப்பட்டு வந்துள்ளது. 

அண்ணா என்கிற சாதாரண மனிதரின் அசாதாரண வாழ்க்கையை முழுமையாக ஆதாரப்பூர்வமாக ஆராதனை தொனி இல்லாமல் விமர்சகர்களின் பார்வையையும் சேர்த்து இந்நூல் பதிவு செய்திருக்கிறது .அதில் ஈர்த்த அண்ணாவை பற்றிய 
பதிவுகளும்,கூடுதலாகச் சில தகவல்களும் மட்டும் இங்கே : 

அண்ணா வாரிசு அரசியலை காட்டு ராஜாங்கம் என்கிறார் ; அதுவே அவர் கட்சியின் முகமாகி போகும் என்று அவருக்குத் தெரியாது ; முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்ச்சிக்கு உறவினர்கள் யாரும் வரக் கூடாது… என்று சொல்லிவிட்டார் அண்ணா. ஆனால், அவரின் மனைவி ராணிக்கு அந்தக் காட்சியைப் பார்க்க ஆசை. 
புறப்படும்போது அண்ணா அழைத்துப் போவார் என்று நினைத்தார். ஆனால், அண்ணா அமைதியாகக் கார் ஏறிவிட்டார்

பெரியாரை விட்டு பிரிந்த பின் எழுதப்பட்ட அறிக்கைக்குக் கண்டனக்கணைகள் என பெயரிடப்பட்டு இருப்பதைப் பார்த்த அண்ணா பெரியாரை எதிர்ப்பதா எனச் சொல்லி அதை 
கண்ணீர் துளிகள் என்று மாற்றினார் 

முதல்வராக இருந்த காலத்தில் அண்ணா பெட்ரோல் போட காசில்லாமல் திணறி இருக்கிறார் என்று அவருடன் இருந்த அதிகாரி சுவாமிநாதன் பதிவு செய்திருக்கிறார் .சென்னை நுங்கம்பாக்கம் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் மயிலாப்பூர் இந்தியன் வங்கியில் 5,000 ரூபாய் ஆகியன் மட்டுமே  இறந்த பொழுது அவருக்கு இருந்த கையிருப்பு ! 

திமுகவை ஆரம்பிக்கிற எண்ணமே அண்ணாவுக்கு இல்லை; பெரியாருடன் மனவருத்தம் ஏற்பட்டு விலகி இருந்த பொழுது எப்படி அவ்வளவு பெரிய பாரத்தைச் சுமப்பது 
வேண்டாம் என மறுத்தவரை ஈ.வெ .கி சம்பத் சம்மதிக்க வைத்திருக்கிறார் .கட்சிக்கு ஆங்கிலத்தில் அண்ணா வைத்த பெயர் DRAVIDAN PROGRESSIVE FEDERATION. பத்திரிகைகள் 
DMK எனக் குறிப்பிட அப்படியே ஆகிப்போனது 

”கட்சி என்பது ஒன்று; சர்க்கார் என்பது வேறு ஒன்று; நாடு என்பது 
இன்னொன்று. கட்சியைவிடச் சர்க்கார் நிரந்தமானது. சர்க்காரைவிட நாடு நிரந்தரமானது. கட்சிகள் தோன்றலாம், மறையலாம், மாண்டும் போகலாம். ஆனால், சர்க்கார் நிரந்தரமானது. ஆகவே, கட்சிக் காரியங்களுக்குச் சர்க்காரைப் பயன்படுத்தும் எண்ணத்தை விட்டுவிட வேண்டும். கட்சியும் சர்க்காரும் தனித்தனியாக இருக்க வேண்டும். இரண்டுக்கும் மோதுதல் இருக்கக் கூடாது, இணைந்தும் போய்விடக் கூடாது. தனித்தனித் தன்மையுடன் தனித்தனியாக இயங்க 
வேண்டும். அதிகாரிகளை நேரடியாக அணுகிக் காரியம் சாதிக்கும் முறை நமது ஆட்சியில் இருக்கக் கூடாது” என்றார். 

"கேட்போர் மனம் குளிர பேசுவதில்லை பொருத்தமற்றதை முறையற்றதை எழுதும் பழக்கமில்லை ; சுடு மொழி கூறும் பழக்கமில்லை,விரைவாக மன வேதனையை 
நீக்கிக்கொள்ளும் இயல்பு இல்லை ; உருட்டி மிரட்டிப் பேசுவதில்லை ; சொந்த விருப்பு வெறுப்பு அதிகளவில் இல்லை ; பதில் கூறி காலத்தைக் 
வீணாக்கிக்கொள்வதில்லை. சுறுசுறுப்புடன் ஓயாது உழைப்பது இல்லை ; நாள்,நேரம்,காலம் பற்றிய நினைவு இருப்பதில்லை -இவையெல்லாம் அண்ணா தன்னைப்பற்றித் தானே சொல்லியிருப்பவை !  
"காலண்டர் பார்த்து வேலை செய்ய 
வேண்டிய சிக்கலுக்குத் தள்ளியதே முதலமைச்சர் பதவி என்று நேரடியாக ஆதங்கப்பட்ட ஒரே நபர் அவராகத்தான் இருக்க முடியும் 

அண்ணா விமர்சனங்களை வரவேற்றார் ,சிறுகதையே இல்லை உங்கள் எழுத்து என்பதை ஒத்துக்கொண்டார். 
பிரசார நெடி என ஜெயகாந்தன் விமர்சித்ததை ஆமாம் என்றும் ஒப்புக்கொண்டார் . "நான்சென்ஸ்" என நேரு அழைத்த பொழுது அவர் கட்டிமுடிக்கப்பட்ட கோபுரம் ;நாங்கள் கொட்டிகிடக்கும் செங்கல் என்றாராம் 
உச்சபட்ச நாகரீகம் காட்டி இருக்கிறார் ;பெரியாரை 19 வருட பிரிவில் ஒரு முறை கூட விமர்சித்துக் கடுஞ்சொல் சொன்னதில்லை ; 

இவர்களின் விரல்களை வெட்டுவேன் எனச் சொன்ன காமராஜரை "குணாளா குலக்கொழுந்தே !"என்று அழைத்திருக்கிறார் ;பிரிந்து போன சம்பத் ,"தோழர் அண்ணாதுரை !"என பெயர் சொல்லி விளித்த பொழுது "வைர கடுக்கன் காது புண்ணாகிவிடும் என கழட்டி வைத்திருக்கிறேன்" என்கிறார் 

சிவாஜி கட்சியை விட்டு விலகிய பொழுது அவரை நாம் தான் அடையாளம் காட்டினோம் என்று யாரோ சொல்ல ,”அமெரிக்காவை கொலம்பஸ் அடையாளம் காட்டாவிட்டால் அது அமெரிக்கா இல்லையா ?”எனக் கேட்டாராம். 

அப்பாவியாகவே வாழ்நாள் முழுக்க இருந்திருக்கிறார் ;பெரியார் தவிரத் தலைவர் இல்லை எனச் சொல்லி தலைவர் பதவியே இல்லாமல் கட்சி நடத்தி இருக்கிறார் ;பொது 
செயலாளர் பதவியைத் தம்பி தலைமையேற்க வா என நெடுஞ்செழியனுக்கு விட்டு  கொடுத்திருக்கிறார் .அடுத்த முதல்வராகும் வாய்ப்பு எனத்தெரிந்தும் எம்.பி 
தேர்தலில் போட்டியிட்டவர் அவர் 

சட்டமன்றம் முதல் முறை போனதும் "நீங்கள் போகும் ரயில் வண்டி புதிதாக வந்திருக்கிறோம் கொஞ்சம் நெருக்கி எங்களுக்கும் இடம் தாருங்கள்" என கேட்டார் அண்ணா 
காமராஜரை தோற்கடிக்க நாகர்கோயில் எம் பி தொகுதியில் ஆள் நிறுத்த வேண்டும் எனக் கட்சியே சொன்ன பொழுது மறுத்து தமிழர் தோற்க கூடாது என முழு ஆதரவு தந்தார் 

பொடி போடுவதைத் தவிர எந்தக் கெட்ட பழக்கமும் இல்லாதவர் .அமெரிக்காவில் 
காக்டாயில் பார்டி நடந்த பொழுது அண்ணா கேட்டது தக்காளி ஜூஸ் 
அவரின் பேச்சாற்றல் பலரை கட்டி போட்டது . தலைப்பில்லை  எனத் தலைப்புத் தந்தாலும் பேசினார் ;இவர் பல்கலைகழகதுக்குள் பேச வரக்கூடாது என அண்ணாமலை பல்கலைகழகம் தடை விதிக்கிற அளவுக்கு ! 

எதிர்கட்சிகள் சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாததால் பதவியை விட்டு விலக வேண்டும் எனக் கேட்ட பொழுது செ.மாதவன் எனும் சட்டத்துறை அமைச்சரிடம் சட்டப்படி விலக என்ன வழி எனக் கேட்டார் அவர். 

சென்ற ஊரெல்லாம் தமிழர் பெருமையை உணர செய்த அவரைத் தமிழர்கள் கொண்டாடினார்கள் ;மலேசியா நாட்டில் உணவருந்தாமல் அவர் முகத்தையே பார்த்த வண்ணம் இருந்திருக்கின்றனர் . அமெரிக்காவில் வேட்டி கிழிந்து போகிற 
அளவுக்குக் கூட்டம் அவர் மீது அன்பு காட்டியது 
தேர்தலில் வென்று விட்டோம் எனச் சொல்கிறார்கள் ,காமாரஜரை தோற்கடித்து விட்டார்களே என வருத்தப்படுகிறார் ;சி.சுப்பிரமணியம் தோற்ற பொழுது "மத்தியில் தமிழர் ஒருவர் மந்திரி ஆவது போனதே !" என வருந்துகிறார் . 

அழுக்கு வேட்டி ,சவரம் செய்யாத முகம் என உட்கார்ந்து தான் இருந்தார் நீங்கள் முதல்வர் என்று அறிவிக்கச் சொல்ல க.ராசாராம் சொன்ன பொழுது ,”வெட்கத்தை விட்டுச்சொல்கிறேன் நான் தான் தமிழக முதல்வர் “என்று அப்பாவியாகச் சொன்னார் 

சுயமரியாதை திருமணங்களைச் சட்டப்பூர்வமாக்கினார்;சென்னை மாகாணத்தைத் தமிழ்  நாடு எனப் பெயர் மாற்றம் பண்ணினார் ;ஆங்கிலம் மற்றும் தமிழ் என்று இருமொழிக்கொள்கையைச் சட்டப்பூர்வமாக்கினார் அவர். கல்விக்குக் காங்கிரசை விட 
ஏழு கோடி அதிகம் ஒதுக்கினார் . 

சாவதற்கு முன் மேரி கரோலியின் தி மாஸ்டர் கிறிஸ்டியன் நூலை வாசித்து கொண்டிருந்தாராம் ;இதைப் படித்துவிட்டுச் செத்துப்போகலாம் என்றாராம்  உச்சபட்சமாக. 

 அண்ணா இறந்த பொழுது நாலரை கோடி தமிழரில் ஒன்றரை கோடி பேர் 
கூடி இருந்தனர் ;அது கின்னஸ் சாதனை!

சரியானவற்றைச் சரியான இடத்தில் பேசுவது மட்டும் அல்ல, தவறானவற்றைப் பேசத் தூண்டினாலும் பேசாமல் இருப்பதும் முக்கியம்-பெஞ்சமின் பிராங்ளின்

காலத்திடம் எல்லாவற்றையும் குணப்படுத்துகிற ஆற்றல் இல்லை. இது இப்படித்தான், இவ்வளவுதான் என்று எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்கிற பக்குவமே அனைத்தையும் ஆற்றுப்படுத்துகிறது.- புத்தர்