Thursday 30 June 2022

மாடசாமி

காலமும் சூழலும் ஒருவித மந்தை வாழ்வுக்குள் தள்ளுகின்றன. விளைவு -'அனுசரித்துப் போகும் கோழைத்தனம்'

மீறுகிறவர்கள்-தைரியசாலிகள்
நம் வியப்புக்குரியவர்கள்

-ச.மாடசாமி

Tuesday 28 June 2022

காஃப்கா

வாழ்வை நோக்கி ஓடுவதைத் தவிர
வாழ்வை எப்படி மகிழ்வுடன்
கொண்டாட முடியும்?

-காஃப்கா

Monday 27 June 2022

சுஜாதா

ஒருவரின் கையெழுத்தை வைத்து எவ்வளவு யூகிக்கலாம் ?

கையெழுத்தைக் கொண்டு உங்கள் எதிர்காலத்தை கணித்துத் தருகிறோம் என்று பணக்காரத்தனமான நோட்டிஸ் ஒன்றை நாங்கள் வசிக்கும் அபார்ட்மெண்ட் காம்பிளக்ஸில் ஓட்டியிருந்தார்கள்.

கையெழுத்தை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் ஒருவரின் குணாதியசங்களை கண்டுபிடிக்கலாம் என்று இன்றும் ஆராய்ச்சி செய்துக்கொண்டு இருக்கிறார்கள். கணினி வந்த பிறகு கையெழுத்து என்பது கடன் அட்டை தேய்த்தவுடன் அந்த இயந்திரம் துப்பும் சின்ன சீட்டில் கையெழுத்து போடுவதில் நின்றுவிடுகிறது.
சாவியில் சுஜாதாவின்

 கேள்வி பதில் ஒன்று:

கேள்வி: உங்களுடைய கதைகளில் வருவது போல் என்னுடைய handwritingகை வைத்து என்னுடைய Characterஐ உங்களால் கூற முடியுமா ? (ஜெயா கோயம்புத்தூர்)

பதில்: இடப்பக்கம் சாய்ந்த கையெழுத்து: பெண்மை. வலப்பக்கம் மேல் நோக்கி போகும் போக்கு ஆர்வம். இரு வார்த்தைகளுக்கு இடையே உள்ள இடைவெளி செலவாளி. ஒற்றெழுத்தின் மேல் ஆணி அடித்த புள்ளிகள்: கூர்மை, கவனம்.
( சாவி 22-3-1981)

அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் கையெழுத்து ஆய்வு(Graphology) பற்றிய படிப்பை பாடமாகவே படிக்கலாம். எழுதும் போது நம்முடைய ஈகோவிற்கும், நமது உணர்ச்சிக்கும் சம்பந்தம் இருக்கிறது அதற்கு ஏற்றார் போல் நமது கையெழுத்து மாறுகிறது என்று சொல்லுகிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் 'ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங்'(Running Hand Writing) சொல்லிக்கொடுக்கும் போது ஒரே மாதிரி கற்றுக்கொடுத்தாலும், எல்லோருக்கும் கையெழுத்து தனித்துவமாக அமைந்துவிடுவது தான் ஆச்சரியம்.
ஆண் கையெழுத்து, பெண் கையெழுத்து எது என்று என்னால் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். தமிழ் வகுப்பில் என் நண்பன் "ஆங்கிலத்தில் இருப்பது போல ரன்னிங் ஹாண்ட் ரைட்டிங் ஏன் தமிழில் இல்லை?" என்று ஆசிரியரிடம் கேட்ட கேள்விக்கு தான் இன்று வரை பதில் இல்லை!.

-சுஜாதா

ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட்

இங்கிலாந்தில் என்ஃபீல்ட் என்ற ஊரில் உள்ள "தி ராயல் சுமால் ஆர்ம்சு" என்ற நிறுவனம் இங்கிலாந்து இராணுவத்துக்கு துப்பாக்கிகள் செய்து வந்தது. அது பின் 1896 ஆம் ஆண்டு "தி நியூ என்ஃபீல்ட் சைக்கிள் லிமிடட்" என்ற நிறுவனத்தை வாங்கி சைக்கிள்கள் தயாரித்து வந்தது. 

அதுவே பிறகு 1901 ஆம் ஆண்டு "என்ஃபீல்ட் சைக்கிள் கம்பனி" என்ற பெயரில் மினர்வா நிறுவனத்தின் இஞ்சினைக் கொண்டு மோட்டார் வாகனங்களை தயாரிக்க ஆரம்பித்து, இது தான் தற்போது உள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தோற்றமாகும். பின்பு தனது சொந்த தயாரிப்பான 297 சிசி இஞ்சின்களை வைத்து மோட்டார் வாகனங்களை தயாரித்து, இங்கிலாந்து மற்றும் சோவியத் ரசியா ஆகிய நாட்டு ராணுவங்களுக்கு வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றது. 

முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து ராணுவத்தால் பெறுமளவு என்ஃபீல்ட் மோட்டார் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டது, அதில் முக்கியமான ஒன்று எடை குறைந்த 125 சிசி Royal Enfield WD/RE, இதை இரண்டாம் உலகப் போரின் போது போர் விமானங்களில் இருந்து போர்க்களத்தில் பாராசூட் மூலம் தரையிறக்குவார்கள்.

1955 முதல் இதுநாள் வரை 
இந்திய ராணுவம் தனது எல்லை ரோந்துப் பணிக்காக பயன்படுத்த ஏற்ற இருசக்கர வாகனத்தை தேடி என்ஃபீல்ட் நிறுவனத்தின் புல்லட் வகை 350 சிசி வாகனத்தை தேர்ந்தெடுத்து மொத்தம் 800 வண்டிகளுக்கு ஒப்பந்தம் செய்தது. இதற்காக என்ஃபீல்ட் நிறுவனம் தமிழகத்தைச் சேர்ந்த "மெட்ராஸ் மோட்டார்ஸ்" நிறுவனத்துடன் இணைந்து இங்கிலாந்தில் இருந்து உதிரிபாகங்களை இறக்குமதி செய்து திருவொற்றியூரில் உள்ள தொழிற்சாலையில் அசெம்பிள் செய்து கொடுக்கப்பட்டது. 

பிறகு 1962 முதல் அனைத்து உதிரிபாகங்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. 1967ல் ரெட்டிட்சில் இருந்த கடைசி என்ஃபீல்டு தொழிற்சாலையும் மூடப்பட்ட பின்பு இந்தியாவில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. 1994 ஆம் ஆண்டு "ஐஷர் மோட்டார்ஸ்" என்ற இந்திய நிறுவனம் வாங்கிய பிறகு அது முழுவதுமாக இந்தியாவில் மட்டும் உற்பத்தி தொழிற்சாலை கொண்ட நிறுவனமாகிவிட்டது.

எனவே ராயல் என்ஃபீல்டு இங்கிலாந்தில் தோன்றி தற்போது இந்தியாவில் மட்டும் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம். அதனால் தான் அவர்கள் தங்களது நிறுவனத்தை "British roots, Indian soul" என்கிறார்கள்.

சிறப்பம்சங்கள்:

உலகில் அதிக ஆண்டுகள் தொடர்ச்சியாக உயிர்ப்புடன் இருக்கும் இருசக்கர வாகன நிறுவனம் இதுதான் 1901 முதல் தற்போது வரை. 

கே.ஜி.எப் ராக்கி பாய் சொல்வது போல Since 1901.
உலகில் அதிக ஆண்டுகளாக தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் இருசக்கர வாகன மாடல் "புல்லட்" 1932 முதல் தற்போது வரை.

முன்பு ஆயுதங்கள் செய்ததன் நினைவாகவும், தனது வண்டிகள் துப்பாக்கிகள் போல உறுதியாக இருக்கும் என்பதை குறிப்பது போலவும் தனது டேக் லைனை "மேஃட் லைக் எ ஃகன்" என்று வைத்திருக்கிறார்கள்.

-படித்தது

பெருந்தேவி

அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது

-பெருந்தேவி

Sunday 26 June 2022

வாசகம்

உலகத்திற்கு வேண்டுமானால் நீங்கள் தனிமனிதன்; ஆனால் உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் தான் உலகம்

-மருத்துவமனையில் கண்ட வாசகம்

ரோலக்ஸ் வாட்ச்

ரோலக்ஸ் வாட்ச்

சுவிட்சர்லாந்தில் ஒரு ரோலக்ஸ் வாட்ச் தயாரிக்க ஒரு வருட காலத்தை அதன் நிறுவனம் செலவிடுகிறது. அதில் இருக்கும் ஒவ்வொரு அமைப்புகளும் கைகளாலேயே பொருத்தப்படுகிறது. ரோலக்ஸ் வாட்சை தயாரிக்க அத்தனை முக்கியத்துவமும் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் கொடுக்கப்படுகிறது.

2. ரோலக்ஸ் வாட்ச்க்கான அனைத்து உதிரிபாகங்களையும் ரோலக்ஸ் நிறுவனமே சொந்தமாக தயாரிக்கிறது. வெளியில் இருந்து சிறு துகள்களை கூட ரோலக்ஸ் பெறாது. தர உறுதிக்கான செயல்பாடுகளை மிகவும் நுட்பமாக கையாள்கிறது.

3.ஒவ்வொரு ரோலக்ஸும் காற்றழுத்த கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் காற்றுக் கசிவோ, தண்ணீர் ஊடுறுவலோ தென்பட்டால் அந்த வாட்சை இரண்டாம் தரத்துக்கு அனுப்பி சந்தையில் வெளியிடாமல் முற்றிலும் அகற்றப்பட்டு ஸ்கார்ப் செய்யப்படும்.

4. உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த துருப்பிடிக்காத ஸ்டீலை ரோலக்ஸ் பயன்படுத்துகிறது. மற்ற உயர் ரக கைகடிகாரங்களில் 316 L கொண்ட எஃகு பயன்படுத்தப்பட்டால் ரோலக்ஸில் மட்டுமே 904 L எஃகு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் எந்த குழியில் இருந்தாலும் துரு அரிப்பு போன்றவற்றால் ரோலக்ஸ் பாதிக்காது.

5.1968ல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் தோலால் உருவாக்கப்பட்ட டேடொனா ரக ரோலக்ஸ் வாட்ச் 18 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் 139 கோடி) நியூயார்க்கில் நடந்த பிலிப்ஸின் ஏலத்தில் விலை போனது.

6.உலகிலேயே ரோலக்ஸ் மட்டுமே தனது தயாரிப்புக்கு சொந்த தங்கத்தை பயன்படுத்துகிறது. இதற்காகவே சுவிட்சர்லாந்தில் உள்ள தலைமையகத்தில் ஒரு ஃபவுண்டரியையே ரோலக்ஸ் உருவாக்கியிருக்கிறது. இந்த தலைமையகம் அமெரிக்காவின் பெண்டகனை போல அத்தனை சிறப்பு பாதுகாப்பு அம்சங்களையும் கொண்டது.

7. ரோலக்ஸ் தலைமையகத்தின் ஒரு தளத்தில் பணியாற்றும் ஊழியர் வேறு தளத்திற்கு செல்ல முடியாதபடி செக்யூரிட்டி சிஸ்டம் அத்தனை பலம். கைரேகை ஸ்கேனர்கள், சிறப்பு வங்கி பெட்டகங்கள் அனைத்தும் நிறுவப்பட்டிருக்கும்.

8.ரோலக்ஸ் என்ற பெயருக்கு உண்மையில் என்ன அர்த்தம் என எவருக்குமே தெரிந்திருக்கவில்லை. தற்போதுதான் ரோலக்ஸ்னா ஆடம்பரம் என அழைக்கப்படுகிறது. ஆனால் ரோலக்ஸ் என்ற பெயருக்கு எந்த அர்த்தமும் இல்லை என நிறுவனர் ஹேன்ஸ் வில்ஸ்ட்ராஃப் கூறியிருக்கிறார்.

எளிதாகவும், ஷார்ட்டாகவும் இருந்ததாலும், அனைத்து மொழிகளிலும் அழைப்பதற்கு சுலபமாக இருக்கும் என தெரிவித்தார் ஹேன்ஸ். ஆனால் வாட்ச் மேக்கர்கள் இந்த பெயர் horlogerie exquise என்ற பிரஞ்சு வார்த்தையில் இருந்து வந்ததாக நம்புகிறார்கள்.

9. சுவிட்சர்லாந்தில் ரோலக்ஸ் தயாரிக்கப்பட்டாலும் உண்மையில் அது லண்டனில் உருவானது. Hans Wilsdorf , Alfred Davis என்ற இருவரும் முதல் முதலில் Wilsdorf and Davis என்ற பெயரில் நகைகளை விற்று வந்தார்கள். ஆனால் 1919ல் உலகப்போர் நடந்ததால் தங்களுடைய நிறுவனத்தை சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவுக்கு மாற்றி அங்கு ரோலக்ஸை தயாரித்தார்கள்.

10. ரோலக்ஸ் வாட்சுகளின் முக்கிய சிறப்பம்சமே டையலில் உள்ள நிமிடங்கள் அனைத்தும் ரோமன் எழுத்தில் இருந்தாலும் 4 அதாவது IVக்கு பதில் IIII என்றே குறிப்பிடப்பட்டிருக்கும்.

11. ஆழ்கடலில் 12,000 மீட்டரில் ( 39,370 அடி ஆழத்தில்) இருந்தாலும் 7 மணிநேரத்திற்கு ரோலக்ஸ் வாட்ச் செயல்படுமாம்.

ரோலக்ஸ் வாட்சின் குறைந்தபட்ச விலையே 4 லட்ச ரூபாயாம்.

முபாரக்

ஊழலை பற்றி 
எழுதியிருந்தேன்
பாதி தான் பிரசுரமாகியிருந்தது

-முபாரக்

Saturday 25 June 2022

நிவேதிதா லூயிஸ்.

மனித வாழ்க்கை கடினமானது;
சிக்கல்கள் நிறைந்தது. உண்மை வாழ்வின் கொடூரங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள, எங்கோ கனவுகளில் ஒளிந்து கொள்ள முயன்று கொண்டே இருக்கிறோம்.

-நிவேதிதா லூயிஸ்.

வைரமுத்து

இன்றுகண்ட அவமானம்
வென்று தரும் வெகுமானம்
வானமே தாழலாம்,
தாழ்வதில்லை தன்மானம்..

-வைரமுத்து

ராஜுமுருகன்

பகிர முடியாத விருப்பங்களை, தாளாத உணர்வுகளை, 
அழுத்தும் சுமைகளைச் சொல்லிவிட சொற்கள் மட்டுமே போதுமா? அந்தச் சொற்களையும் ஏந்திக்கொள்ள இதயங்கள் வேண்டும் இல்லையா? 

 -ராஜுமுருகன்

Thursday 23 June 2022

இறையன்பு

நண்பர் ஒருவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்.என்ன செய்தி என்றார்.'ஒன்றுமில்லை சும்மாதான் என்றேன்.

எனக்கு அவரிடம் பேச வேண்டும் போல் இருந்தது. காரணமே இல்லாமல் பேசுவதுதான் நட்பு.செய்தி இருந்தால் மட்டும் பேசுவது காரியவாதியின் செயல்பாடு. எதுவும் இல்லாமல் பேச வேண்டும்

-இறையன்பு

தேவதேவன்

அக்காக் குருவி பாடுகிறது

 "உன் பாடலில் ஏன் இத்தனை துயர் கசிகிறது?" "எதற்கெடுத்தாலும் காரணம் தேடும் இதயத்தின் துயர் அது"

-தேவதேவன்

Wednesday 22 June 2022

லா.ச.ரா

தோல்வியும் வெற்றியும் மனநிலைகள்தான்.ஆனால் இதை உணர்வதை நிர்வகிப்பதற்கு இன்னொரு மனநிலை வேண்டும்
-லா.ச.ரா

தோட்டா துளைக்காத கண்ணாடி

தோட்டா துளைக்காத கண்ணாடி

தோட்டா துளைக்க முடியாத கண்ணாடியை தயாரிக்க சில விதிமுறைகள் உள்ளன. அவற்றில் மிக முக்கியமானது ஒரு தோட்டாவின் துளைக்கும் சக்தி. அதற்கு தகுந்தாற்போல் அந்த கண்ணாடியின் கனம் இருக்க வேண்டும்.

சாதாரணமாக உடைந்துவிடும் கண்ணாடியின் மேல் லாமினேஷன் செய்வது போல ஒரு வளையும் தன்மை உடைய பாலி கார்பனேட் ஷீட்டை ஒட்டி அதன் மேல் மற்றொரு கண்ணாடி என்று பல அடுக்குகளில் தயாரிக்கப்படும் தோட்டா துளைக்காத கண்ணாடி.

அதன் மீது தோட்டா துளைக்க மோதும் போது அந்த மாதிரியான கண்ணாடியின் மேல்பரப்பிலேயே அது தடுக்கப்பட்டு விடும்

Tuesday 21 June 2022

ரயில்வே கேட்டில் இருக்கும் கேட்மேனுக்கு ரயில் வரப்போகிறது என்று எப்படித் தெரியும்?

ஒரு கேட்மேன் தனது பணி நேரத்தில் எல்லா நேரங்களிலும் ஸ்டேஷன் மாஸ்டருடன் தொடர்பில் இருப்பார். தொடர்பு முறை பொதுவாக இந்த நாட்களில் தொலைபேசியில் உள்ளது

மேல் அலமாரியில் உள்ள அனைத்து பாதை பழுதுபார்க்கும் கருவிகளையும், இரண்டாவது அலமாரியில் ஃப்ளோரசன்ட் ஜாக்கெட்டுகளையும், மேசையில் சிவப்பு மற்றும் பச்சைக் கொடிகளின் வெளிப்படையான கண்காணிப்பையும் ஒருவர் காணலாம். கேட்மேனுக்குத் தேவையான சில கருவிகள் இவை.

ரயில் நிலையத்தில் இருந்து ஒன்று இரண்டு கீமீ தொலைவில் தான் இருப்பார். ரயில் சிக்னல் சிஸ்டம் உடன் இணைக்கப்பட்டு இருக்கும். ரயில் 5 கிலோ மீட்டர் தூரத்தில் வரும்போதே அவருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் தகவல் கொடுத்துவிடுவார்.

சில இடங்களில் ரயில்வே கேட் என்பது பத்து கிலோமீட்டர் தொலைவில் கூட இருக்கலாம். அது போன்ற இடங்களில் கேட்ஸ் மேன் பார்வையில் தெரியும் தொலைவிலேயே உள்ள சிக்னல் கம்பம் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

-படித்தது

ஆதவன்

கியூ ஒரு யானையென்றால்,
பஸ்ஸில் இருந்த இடம் ஒரு சோளப்பொரி.

-ஆதவன்

Monday 20 June 2022

ஜெமோ

கழுதையின் உடலில் இருந்து மூட்டைகளை இறக்குவதற்கு ஒரு பயிற்சி வேண்டும்.ஒரு பக்கம் மூட்டையை கழற்றினால் மறுபக்க எடையால் அதன் முதுகு முறிந்துவிடக் கூடும். இருமூட்டைகளையும் சரித்து ஒரே கணத்தில் பின்பக்க வழியாக இறக்க வேண்டும்

-ஜெமோ (எழுகதிர்)

லா.ச.ரா

குப்பைமேடுகளுக்கும் மலையுச்சிக்கும், சாக்கடைக்கும் ஓடும் நதிக்கும் வித்தியாசமில்லாதது எண்ணத்தின் இயல்பு.பிறகு, ஓரளவு கட்டுப்பட்டு, திக்கும் நோக்கும் தெரிந்து,அதன் வழி போக முயலும்போது அதற்குச் சிந்தனையின் அந்தஸ்து ஏற்படுகிறது

-லா.ச.ரா

Saturday 18 June 2022

ஓஷோ

நீங்கள் பேசும்போது, அறிவாற்றலைக் காட்டுவதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்...

ஏனெனில் அறிவாற்றலைக் காட்டுவதற்காக நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு முயற்சியும் உங்களது அறியாமையை மூடிமறைப்பதற்கே அன்றி வேறு எதுவும் அல்ல... 

-ஓஷோ

Friday 17 June 2022

படித்தது

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்களை எவரேனும் நினைக்கும் போது இந்த வாழ்வின் மீது பெரும் நம்பிக்கையும், பேரன்புதனையும் உணரச் செய்ய வேண்டும்

-படித்தது

தாகூர்

தனித்து நட,தனித்து நட,தனித்து நட

யாரும் விளக்கை ஏந்த மறுக்கும் 
இருள் கசியும் பொழுதை பெரும் புயல் தாக்கி 
பிணிநெருப்பை இடிபோல தந்திடுமாயின்
உன் உள்ளத்தை உருக்கி நீயே ஒளியாகு

தனித்து நட,தனித்து நட தனித்து நட

-தாகூர்

வண்ணதாசன்

நீங்கள் ஒரு முழு
அரண்மனையையே எனக்குக்
கொடுத்தாலும் என் மனம் ஒரு
மூலையிலுள்ள ஜன்னல்
வெளிச்சத்தைத் தான் தேர்வதை
ஒன்றும் செய்வதற்கில்லை.

-வண்ணதாசன்

Thursday 16 June 2022

மனுஷ்ய புத்திரன்

பிரியமாய்தான் பேசவேண்டும்
என்றில்லை.
சும்மாவேனும்  ஏதாவது
பேசிக்கொண்டிருந்தால்கூட போதும்.

கூட இருக்கவேண்டும் என்றில்லை..
இருப்பதுபோல
இருந்தாலே போதும்.

-மனுஷ்ய புத்திரன்

ராமசந்திர குஹா

அரசியல் தலைவர்கள் இருவகை

*தங்களை விட்டால் வழிநடத்த வேறு யாரும் தகுதியானவர்கள் கிடையாது என நினைப்பவர்கள்

*அப்படி நினைக்காத உண்மையான தலைவர்கள் இன்னொரு பிரிவு. 

-ராமசந்திர குஹா கட்டுரையில்

Wednesday 15 June 2022

பாதசாரி

பேசாமல் இருந்து தன்னை மறைத்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள்.பேசிப்பேசியே தன்னை மறைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள்

-பாதசாரி

Tuesday 14 June 2022

பராரிகள்

பயத்தில் மட்டும் தான் உன்னை நீயே எதிரில் சந்திப்பாய்

-பராரிகள்

Monday 13 June 2022

info

சமஸ்கிருதம் பூசாரிகளின் மொழியாகி விட்டிருந்ததால் புத்தர் அதனை வெறுத்தார். எளிய மக்களின் மொழியான பாலி யை பயன்படுத்தினார். தியானாவை அம்மொழியில் சானா என்பர்.

இது சீனாவில் சான்(chan) ஆக மாறியது.இதுவே ஜப்பானை அடைந்ததும் ஜென்(zen) ஆகிவிட்டது

#info

கல்யாண்ஜி

நான் கள்ளன்
உங்கள் உணர்வுகளைத் 
திருடும் போது அல்ல.
என் உணர்வுகளை
உங்களுக்குத் தெரியாமல்
ஒளித்துவைக்கையில்.

-கல்யாண்ஜி

மாடவீதி

மாடமாளிகை களால் நிறைந்த வீதிகள் 'மாடவீதி' எனப்பட்டன.

இவை பெரும்பாலும் கோயிலைச் சுற்றியே அமைக்கப் பட்டிருந்தன. இம்மாட வீதிகள் அக்காலத்தில் முதன்மைச் சிறப்பு வீதிகளாகக் (Main road) கருதப்பட்டன.
இவை கோயில் தேரோட்டம், திருவிழாக்கள் நடக்க ஏதுவாக விசாலமாக அகன்று பரந்த வீதிகளாக - பெருந்திரளான மக்கள் கூடி குதூகலிக்கும் இடங்களாகத் திகழ்ந்தன.

இவை அமைந்த திசையின் பொருட்டு கீழ மாட வீதி, மேல மாட வீதி, வடக்கு மாட வீதி, தெற்கு மாட வீதி ஆகிய பெயர்களால் அழைக்கப் பட்டது.

அரச குடும்பங்கள், அரசாங்க முதன்மைச் சுற்று அலுவல் மனிதர்கள் இத்தகைய வீதிகளில் குடியமர்த்தப் பட்டிருந்தனர். சேவைத் தொழில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்த சுற்று வீதிகளில் தங்கியிருந்தனர்.

தமிழ் மொழியில் இன்றைக்கும் காணப்படும் கட்டடக் கலைச்சொற்களில் ஒன்று 'மாடம்'.
மாடம் - என்றால் மேனிலை வீடு எனப் பொருள். இன்றைக்கு வழக்கிலிருக்கும் 'மாடி' - என்ற சொல்லும் ஒத்த பொருள் குறிப்பனவே.

-படித்தது

Sunday 12 June 2022

பார்த்தசாரதி

தனி மனிதன் தனி மனிதனிடம் புளுகினால் பொய்.தனி மனிதன் கோடிக்கணக்கான  மனிதர்களின் முன்னால் புளுகினால் வீர முழக்கம்

-நா.பார்த்தசாரதி

கரமகடே

கண்களை அகல திறந்து உனக்கு முன் இருக்கிற நிஜத்தைப் பார்த்து முடிவெடு. எதுக்கெடுத்தாலும் காகிதத்தைப் பார்த்து முடிவெடுக்காதே.  அதெல்லாம் உன் முன்னோர்கள் எழுதியது. அவர்களும் உன்னைப்போன்றவர்கள் தான்.

-கரமகடே

அழகிரிசாமி

தன்னுடைய அவமானத்தை மறைக்க ஒரு காரணத்தைச் சிருஷ்டித்துச் சொல்லும் போது, அதை உண்மை என்று உலகம் ஏற்றுக்கொண்டுவிட்டால் நிம்மதியாய் போய்விடும்; அந்தக் காரணத்தைப் பொய் என்று சொன்னாலும், அல்லது அதைக் காது கொடுத்து கேட்டாலும் அவமானம்தான் கண்ட பலனாக இருக்கும். 

-கு. அழகிரிசாமி

Saturday 11 June 2022

பாதசாரி

ஏனோ உண்மையை அளவிடும்போது, 'எத்தனை தூரம் உண்மை?' எனக் கேட்கிறோம்

-பாதசாரி

ரூமி

அழகான நாட்கள் உங்களைத் தேடி வருவதில்லை,
நீங்கள்தான் அவற்றை நோக்கி நகரவேண்டும்.

-ரூமி

பாபு

நிமிர்ந்த நெற்பயிர்கள்
தலைகுனிந்தபடி
விதைத்த சமூகம்

-வே.பாபு

Friday 10 June 2022

வாலி

கவிஞர் வாலி அவர்கள் “கையளவு மனசு” என்று கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்த ஒரு குறுந்தொடரில் நடித்துள்ளார். அதில்  அவருடைய ஒரு கவிதை

இந்த கவிதையில் அவர் அவருடைய மனைவியின் கை மனத்தை பற்றி அழகாக நகைச்சுவையோடு கூறியிருப்பார்.

மனைவி அமைவதெல்லாம் மசாலா செய்த தவம்..
உன் கை அறைபதற்கே உப்பும் மிளகாயும் தன் கை கூப்பி தவம் செய்திருக்க வேண்டும்.

நீ புடவை கட்டிய நளன், ப்ளவுஸ் மாட்டிய பீமன்..
ஆமாம்ம்??? இட்டலிக்காக நீ ஆட்டுவது மாவா, இல்லை மல்லிகை பூவா?

எங்கிருந்து வந்தது இந்தமென்மை, இந்த வெண்மை, இளகிய தன்மை?
நான் சொல்வது புகழ்ச்சி அல்ல உண்மை.

அன்று உன் கைய்யை நான் பற்ற திருமணம் காரணம்..
இன்று உன் கைய்யை நான் பற்ற நறுமணம் காரணம்..
இது கைய்யா? இல்லை கம கமவென மணக்கும் நெய்யா?

நீ தோசை சுடும் பொழுதெல்லாம் என் நெஞ்சை ஆசை சுடும்..
என் பாரதி கண்ணம்மா, ஒரு கவிஞனுக்கு கவிதை எழுத பேப்பர் தேவையில்லை
உன் பேப்பர் மசாலாவே போதும்..

பாரதியார்

அறம்
செய்தல் உன் கடனே,அதில்
எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே!

-பாரதியார்

புத்தர்

உண்மையென்று நீ உறுதி கூறும் ஒரு விஷயம், நீயே உனக்காக உணர்ந்திருக்கும், பார்த்திருக்கும், அறிந்திருக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டும்

-புத்தர்

Thursday 9 June 2022

கண்ணதாசன்

திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட

'நான் மனமாக இருந்து நினைப்பேன்...
நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும்.

கவிஞர் அதையே மிக எளிமையாக

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாடலாய் மாற்றியிருப்பார்

படித்தது

மன்னர் ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் ராஜேந்திரனைப் பட்டத்து இளவரனாக்கினார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ராஜேந்திரனும் மகன் ராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புகளை பங்கிட்டுக் கொண்டாராம்

-படித்தது

ஓஷோ

மனம் ஒரு நீதிபதி,தனக்கு சரியென்று படுவதை மட்டுமே அது அனுமதிக்கும். தன்னுடன் பொருந்துகிறவற்றை மட்டுமே அது வளர்க்கும்,வலுப்படுத்தும். தனக்கு எதிரானவற்றுக்கு அது இடமளிப்பதில்லை

-ஓஷோ

ராஜா சந்திரசேகர்

கடைசி வரை
அம்மாவின்
மோதிர விரல்
வெறும் விரலாகவே
இருந்தது...!

· ராஜா சந்திரசேகர்

பாதசாரி

நம்மை நம் சிறுமையை, எல்லைகளை அறிந்து கொண்டு வாழ்வது விடுதலை.

மனித அறிவு இன்னும் நுழைய முடியாத இடங்கள் உண்டு. அறிவால் ஆதாரம் காட்ட இயலாதபோது, நம்பிக்கையே மனிதனுக்கு எளிய வழி. நம்பிக்கைக்கும் எல்லையுண்டு.அந்த நம்பிக்கையின் எல்லை என்பது நமது சமாதானத்தின் புள்ளி.

-பாதசாரி

Wednesday 8 June 2022

சுந்தர ராமசாமி

பிரச்சினைகள் மெய்யான பாதிப்புக் கொள்ளும்போது தான் நடைமுறைப் பரிகாரங்கள் முளைவிடுகின்றன.

-சுந்தர ராமசாமி

தேவதேவன்

தாகவெறியுடன்
எரிகிறது நெருப்பு.
அதற்குத் தேவை தண்ணீர்
நாம் சொரிந்துகொண்டிருப்பதோ
வகை வகையான நெய்கள் !

- தேவதேவன்

Tuesday 7 June 2022

ஜெயமோகன்

ஒரு தேனீயின் வாழ்க்கை சராசரியாக ஒருமாத காலம். ஒருநாளில் சாதாரணமாக ஐந்து சொட்டு தேன். நூற்றைம்பது சொட்டு தேனை கூடுசேர்ப்பதே அதன் பணி. அதன் வாழ்க்கையின் ’மதிப்பு’ என்பது ஒரு தேக்கரண்டி தேன். இப்பிறவியில் அதற்கப்பால் அது செய்வதற்கொன்றும் இல்லை. அதன் விளைவென்ன என அறியும் வழியும் அதற்கு இல்லை. அதை செய்துவிட்டு அது செல்வதுபோல நாமும் என இயல்பாகவும் அறுதியாகவும் உணர்வதொன்றே நிறைவுநிலை.


-ஜெயமோகன்

Monday 6 June 2022

முகம்மது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-முகம்மது பஷீர்

பாதசாரி

நல்லவனாக காட்டிக் கொள்வதைக் காட்டிலும் மிகச் சுலபமானது,நல்லவனாக இருந்து விடுவது

-பாதசாரி

கிரேஸி மோகன்

"குளிக்கும் போது, சோப்பு கரைஞ்சு, சாக்கடைக் குழியிலே காணாமல் போகுமே, அது மாதிரி இறந்திடனும். சோகத்தை விட மர்மம் பெட்டர் இல்லையா."

-கிரேஸி மோகன்

ஜேம்ஸ் ஆண்ட்ரூஸ்

கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால்,இன்றைக்குக் குறிப்பிடத் தகுந்ததாக எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்

-ஜேம்ஸ் ஆண்ட்ரூஸ்

Sunday 5 June 2022

நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே

ஏதோ ஒரு தலைமுறையில் நாம் மிதித்த அருவருப்பான ஒன்றுதான் சாதி.இன்று வரை அதைக் கழுவாமல்,புனிதம் என்று அதைக் காய்ந்துவிடாமலும் கழுவாமலும் நடமாடிக் கொண்டிருக்கிறோம்

-நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே

சுஜாதா

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

-சுஜாதா

Saturday 4 June 2022

பிளாட்டோ

பதவிகளைத் தேடி ஓடுபவர்களை அப்பதவிகள், உதறிவிட்டு ஓடுகின்றன; ஆனால்,உதறி எறிபவர்களை அப்பதவிகள் எப்படியாவது அவர்களின் தோளின் மேல் தொத்திக் கொள்கின்றன.

"எவர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர் தெரியுமா?எவர் அதை விரும்பவில்லையோ அவரே அதற்கு மிகவும் தகுதியானவர்

-பிளாட்டோ (குடியரசு)

Wednesday 1 June 2022

நேசமித்ரன்

விடுபடும் சகல வழிகளும்
சாத்தியப்பட்டுவிட்ட போதிலும்
இறந்த பாகனுக்கு அழுது 
அடுத்த பாகனுக்கும் மண்டியிடுகிறது
அன்புக்கு பழக்கப்பட்ட மிருகம்.

-நேசமித்ரன்

மனுஷ்யபுத்திரன்

எனக்கு வீம்பு அதிகம்
என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்..

இல்லவே இல்லை 
என்ன செய்வதென்று தெரியாத 
என் இயலாமைக்கு நான் அணியும் முகமூடி அது.

-மனுஷ்யபுத்திரன்