Thursday 31 March 2022

இந்தப் பிரபஞ்சமே பேபல் நூலகம்தான்-ஆசை

#30நாள்_வாசிப்புப்போட்டி
#Rm105

Book:5
Pages:326



தி இந்து நாளிதழில் மொழிபெயர்ப்பாளராக மட்டும் அறிமுகமாகியிருந்த ஆசை அவர்களின் எழுத்து.. பின்னர்  காந்தி குறித்த தொடர் கட்டுரைகளின் வழியே மனதிற்கு மிகவும் அருகில் வந்தார்.இலக்கிய விமர்சகராக ஆய்வாளராக ஞாயிறுதோறும் கட்டுரைகள் எழுதி வந்த போது அவரின் இன்னொரு முகம் நமக்கு அறிமுகமாயிற்று. ஒவ்வொரு ஆண்டு புத்தக கண்காட்சியிலும் இவரின் ஒரு புத்தகமாவது வாங்கிவிடுவேன். அந்த வகையில் இந்தப் புத்தகத்தின் தலைப்பு வித்தியாசமாக இருந்தது. தெரிந்து கொண்டதில் ஹோர்ஹ லூயிஸ் போர்ஹேஸின் "பேபல் நூலகம்" என்ற சிறுகதையின் தொடக்க வரியிலிருந்து இந்த புத்தகத்திற்கான தலைப்பு கிடைத்ததை அறியமுடிந்தது.

புனைவுகள் ,கவிதை, மொழிபயர்ப்புகள், அபுனைவு, பதிப்புத்துறை& அஞ்சலி என பல்வேறு தளங்களில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் படிப்பவர்களை பரவசமூட்டும் விதத்தில் அமைந்துள்ளது. மௌனி குறித்த அறிமுக உரையில் அவரின் கதைகளை முதன்முறையாக படிக்கும்போது பாழடைந்த ஒரு பெரிய வீட்டுக்குள் நுழையும் உணர்வுதான் என்று குறிப்பிடுகிறார். மௌனியின் கதைகளைப் படித்தவர்களுக்கு இந்த வரி நிச்சயம் நெருக்கமாக இருக்கும். அர்த்தமற்ற சம்பவங்களின் மங்கிய பின்புலத்தில் அவற்றை ஒன்று சேர்த்து, ஒரு சரடு போல் ஓடும் மொழிதான் அவரது சாதனைக்கு பிரதான காரணம் என்ற ஒற்றை வரி அவருக்கு புகழாரம் சூட்டுகிறது.

மனிதர்களை கருப்பு வெள்ளை என்று தனித்தனியாக பிரிக்க முடியாது எல்லா குணங்களின் கலவை தான் மனித இயல்பு. அந்த மனித இயல்புகளை தன் எழுத்துக்களில் வடித்த தி.ஜாவின் ஒவ்வொரு கதையிலும் வந்த கதாபாத்திரங்களின் உணர்வுகளோடு நம்மையும் உரையாட வைத்திருப்பார்.அடுத்து பாகிரதியின் மதியம் நாவலின் அடிநாதத்தை மிகவும் பாராட்டும் ஆசை அவர்கள் போர்த்துக்கீசிய நாவலாசிரியர் ஜூஸே ஸரமாகுவைப் போல் 
பா. வெங்கடேசனும் அடுக்கி அடுக்கி நீண்ட வாக்கியங்கள் எழுதக்கூடியவர். அந்த நாவலில் முற்றுப்புள்ளியை நீங்கள் தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கும் என்பது என்னுடைய ஒரு ஒப்புதல் வாக்குமூலம். அடுக்கடுக்கான கதைகளை கொண்ட தாண்டவராயன் கதை நாவல் குறித்தும் சிலாகித்து சொல்லியிருக்கிறார்.இவர்களைத் தவிர தஞ்சை பிரகாஷ், பிரான்சிஸ் கிருபா, கி ராஜநாராயணன் போன்றவர்களின் படைப்புலகையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

வீட்டினுள் இருக்கும் கண்ணாடியை எத்தனை முறை பார்த்தாலும் நமக்கு சலிக்காது என்பது போல்தான் பாரதியின் கவிதைகளும். ஆசை அவர்களும் பாரதியின் கவிதைகளை சிலாகித்துக் கூறும்போது அவரின் கவிதையில் ஒரு கம்பீரம் இருக்கும். அதட்டல் இருக்கும். 'இவை அருள்வதில் உனக்கேதும் தடையுளதோ என்பதுபோல. ஆனால் இயல்பான மனங்களிலிருந்து குமுறலாக வெளிப்படும் பாடல்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கண்ணதாசனின் சினிமா பாடல்களை சொல்லும்போது காதலிக்க நேரமில்லை படத்தில் வரும் "தள்ளாடித் தள்ளாடி நடமிட்டு அவள் வந்தாள்" எனத் துவங்கும் வரியில் வரும் இந்த மயக்கத்தை அவர் தரும்போது அர்த்தத்தை யார்தான் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று கண்ணதாசனின் கவிதை நயத்தை நம்மோடு சேர்ந்து கைகுலுக்கி பாராட்டி இருப்பார்.

திரைகடல் ஓடியும் திரவியம் தேடுகிறோமோ இல்லையோ நவீன காலத்தில் இலக்கியம் தேடுகிறோம்.
"ஒவ்வொரு மொழியும் ஒரு உலகம். மொழிபெயர்ப்பு என்ற விஷயம் இல்லை என்றால் மௌனத்தை எல்லைகளாக கொண்ட வட்டாரங்களில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்ற ஜார்ஜ் ஸ்டெயினரின் மேற்கோளை கூறியது மிகவும் பொருத்தமாக இருந்தது. சிறந்த மொழிபெயர்ப்புகளை நமக்கு அறிமுகம் செய்வதுடன், தாவோ தே ஜிங்  மற்றும் உலக அரங்கில் கவனம் பெற்ற இலக்கியங்களை நமக்கு அறிமுகம் செய்து வைப்பதில் ஆசை அவர்களின் பங்கு அதிகம்.

அபுனைவு தலைப்புகளில் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய அறியாத பல சின்னஞ்சிறு செய்திகளையும் நேர்த்தியுடன் கட்டமைத்து இருக்கிறார். பதிப்பகத் துறை வரலாற்றினையும் ஒவ்வொரு காலகட்டத்தில் எவ்வாறு வளர்ச்சி அடைந்துள்ளது  என்பதையும் நமக்கு சொல்லி இருக்கிறார். இறுதியில் சார்வாகன் மற்றும் பிரான்சிஸ் கிருபாவிற்கான அஞ்சலிக் கட்டுரைகள் நம்மையும் நெகிழ வைக்கும் படி இருந்தன.

ஒரு சில கட்டுரைகளை அவ்வப்போதே படித்திருந்தாலும் புத்தகமாக வாசிக்கும்போது முழு நிறைவை தருகிறது. இலக்கியவாதிகளுக்கு பிடித்தமான ஒரு நூலை தந்ததில் ஆசை அவர்கள் இன்னொரு சிக்ஸர் அடித்து உள்ளார்.

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

சுந்தர ராமசாமி

ஒரு உண்மையான கேள்வி பிறந்து விட்டாலே போதும்.
ஆயிரம் விடைகளுக்குச் சமானம் அது...

-சுந்தர ராமசாமி

Wednesday 30 March 2022

இந்திய வரலாற்றில் வ.உ.சி-ப முத்துக்குமாரசுவாமி

#30நாள்_வாசிப்புப்போட்டி

#RM105

Book:4
Pages:816

இந்திய வரலாற்றில் வ.உ.சி
-ப முத்துக்குமாரசுவாமி

தமிழகத்து விடுதலைப் போராட்ட வீரர்களில் முதன்மையானவராக வைத்து போற்றத் தக்கவர் வஉசி அவர்கள்.திலகரின் போராட்ட குணத்தையும், நாட்டின் விடுதலையை இரு கண்ணாக மதித்து செயல்பட்டவர். "நாங்கள் முப்பது கோடி ஜனங்களும் நாய்களோ" என்று வெள்ளையனை பார்த்து கேள்வி கேட்ட ஒப்பற்ற வீரர்.
வெறுமனே வாழ்க்கை வரலாறு நூலாக மட்டும் அமையாமல் அவரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகள், நினைவுகளின் பதிவுகள், யாரும் அறியாதவாறு வ உசியின் படைப்புலகம் குறித்த பதிவுகள், அரசியல் அறிஞர்களின் பார்வையில் வஉசி, தமிழர்களின் பார்வையில் வஉசி மற்றும் வஉசி குமாரரிடம் எடுத்த நேர்காணல்கள் என வ உசி குறித்த பிம்பங்கள் அனைத்தையும் ஒருசேர வாசிக்க கிடைக்கிறது இந்த நூல்.

வ உ சி யின் காலகட்டத்தில் சுதேசிக் கிளர்ச்சி உச்சநிலையை அடைந்திருந்தது .பல்வேறு அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடி சிறைவாசம் பெற்று தமிழ்த் தொண்டாற்றி வழக்கறிஞர் தொழிலையும் பார்த்தவர். வ உசி மீனாட்சியம்மை தம்பதியருக்கு நான்கு ஆண் பிள்ளைகள் நான்கு பெண் பிள்ளைகள் என மொத்தம் எட்டுபேர். ஒவ்வொரு பிள்ளைகளின் பெயரும் தனக்கு உதவிய நண்பர்களின் நினைவாக வைத்து  நன்றிக்கடன் தீர்த்தவர்.

#நிகழ்வுகள்

வ உ சி யின் அரசியல் பிரவேசம் இருபத்தி ஒன்றாம் வயதில் பாலகங்காதர திலகரின் பேச்சுக்களைக் கூர்ந்து கவனித்து அரசியல் ஆர்வம் கொண்டார். பின்னாளில் பாரதியின் கருத்துக்கு ஞானபானுவில் விவாதக் கட்டுரை எழுதும் அளவுக்கு அவரின் தனித்துவம் வளர்ந்தது. வ உசி உருவாக்கிய ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனியின் துவக்கமும் அதன் பங்குதாரர்கள் பற்றிய விபரமும், கப்பல் கம்பெனியின் நோக்கமும் விரிவாக இதில் எழுதப்பட்டுள்ளது.

1885 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட காங்கிரஸ்.. அடுத்த 13 ஆண்டுகளில் இந்தியாவின் தென்கோடி ஒட்டப்பிடாரத்தில் ஒரு கிளை அமைத்தார் வஉசி. அதற்கு அவரே செயலாளர் பொருளாளர் ஆக அமைந்ததால் தென் தமிழகத்தில் மூத்த காங்கிரஸ்காரராக திகழ்ந்தார்.

அரசியல்வாதியின் மறுபுறம் தமிழ் தொண்டராக திகழ்ந்தார். தாய் தமிழ் மீது கொண்ட தனியாத காதலால
 1905 ஆம் ஆண்டு மதுரை தமிழ்ச்சங்கம் வஉசி தனது உறுப்பினராக வரவேற்றுக் கொண்டது. சுதேசமித்திரன் விவேகபானு முதலிய இதழ்களில் கருத்தாழமிக்க கட்டுரையை எழுதி வந்தார்.

ரவுலட் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தபோது ஜாலியன் வாலாபாக் படுகொலையை எதிர்த்து
 பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன . 34ஆம் ஆண்டு அமிர்தசரஸ் காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பயணச் செலவுக்கு பணவசதி இல்லாமல் இருந்தபோது வ உசி அவருடைய நண்பரின் தண்டபாணி பிள்ளை செய்த ஏற்பாட்டில் ஈவே ராமசாமி நாயக்கர் உடன் வ.உசி அமிர்தசரஸ் சென்றார். காந்தியின் கொள்கையின் பால் ஈடுபாடு கொண்டாலும் போராடி சிறைக்குச் செல்லாமல் சுயராஜ்யம் கிடைத்துவிடும் என்று நினைக்காதீர்கள் என்று மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். திலகரின் போராட்ட குணம் அவரின் வாழ்நாள் இறுதி வரை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

சுதேசி கப்பல் கம்பெனியை 1909ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆரம்பித்தார். எக்ஸாண்ட்ரியா புதிய கம்பெனியின் ஏஜெண்டுகள் லண்டனில் உள்ள இந்திய வர்த்தக கம்பெனியின் மூலம் 50 ஆயிரம் பவுனுக்கு விலைக்கு வாங்கினார். பம்பாய் துறைமுகத்தில் புதுப்பிக்கப்பட்டு 1069 டன் எடையுள்ள பிராணிகளையும் சரக்குகளை ஏற்றிச் செல்ல வசதியுடன் 200 பிரயாணிகளை ஏற்றும் வசதியும் உண்டு. யுத்தத்திற்கு முன்பு தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே 2000 டன் சரக்குகளை வாரம் இருமுறை அதாவது செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு கொழும்பில் இருந்து திங்கள் வியாழன் அன்று புறப்படும் வகையில் இருந்தது. திரைப்படங்களில் பார்த்தது போல சுதேசி இயக்கத்தை கட்டமைத்தது மக்களிடையே அமைதி இன்மையை ஏற்படுத்தியதாகவும் ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறை சென்றவர் நம்முடைய வஉசி அவர்கள்

1912 ஆம் ஆண்டு கண்ணனூர் சிறையில் இருந்து வெளியே வந்த வ உ சி அவர்கள் தனது சொந்த ஊருக்குச் செல்லாமல் சென்னையில் சென்று வறுமை நிலையிலும் வேலை பார்த்து வந்தார் அப்போது திலகர் தனது இந்தியன் ஹோம்ரூல் நிதியிலிருந்து மாதம் 100 ரூபாய் அனுப்பி வந்தார். சென்னையில் தொழிலாளர் இயக்கத்தை சீர் அமைத்ததுடன் கோவையிலும் தொழிலாளர் இயக்கத்தை சீர் அமைக்க எண்ணி குடிபெயர்ந்தார்.

வ உ சி யின் இன்னொரு முகம் எழுத்தாளனாகவும் மொழிபெயர்ப்பாளராகவும் விளங்கியது. சென்னையில் நடைபெற்ற திலகரின் மேடை பேச்சை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்தவர் நம்முடைய வ.உசி அவர்கள்தான்.

மிதவாதிகளின் போக்கை கண்டித்ததுடன் ஆங்கிலேயர் நம்மை ஆள தெரிந்து கொண்டு வந்தால் நம்மிடம் அரசாங்கத்தை ஒப்படைப்பார்களாம் என்பது அறியா பேச்சு.நீச்ச தெரிந்து கொள்ள விரும்பும் முன்  நீ முதலில் நீந்த கற்றுக் கொண்ட பிறகு நீரில் இறங்கலாம் என்று சொல்வது போல் ஆகும் என்று தனக்கே உரிய தீவிரவாத சிந்தனையுடன் மக்களிடையே எழுச்சி உரையை ஆற்றியவர் வ உசி அவர்கள்.

வ உ சி யின் திருக்குறள் உரை, தொல்காப்பிய உரை, சிவஞானபோத உரை, வஉ சி கண்ட மெய்ப்பொருள், ஜேம்ஸ் ஆலன் எழுதிய எளிமையில் இருந்து வலிமைக்கு எனும் நூல் பரவலான பாராட்டை பெற்ற நூலாகும், பல்வேறு அறிஞர்களின் கட்டுரைகள் வ உசியை பற்றிய தெரியாத அறியாத சுவையான நிகழ்ச்சிகளை நமக்கு படம் பிடித்துக் காட்டுகின்றன. வழக்கறிஞர் தொழிலில் வாய்மை காத்தல் இந்நாளில் கடினம் என நினைத்த அவர் தம் பிள்ளைகள் வழக்குரைஞராக வரவேண்டும் என்று விரும்பவில்லை. வக்கீலாய் நின்று வழிப்பறியே செய்கின்ற திக்கிலார் என்று வக்கீல் குறித்த தன் கருத்தையும் இதில் அவர் மகன் பதிவு செய்துள்ளார்.

ஐந்தாண்டு  சிறைவாசம் அவர் உடல்நலத்தை பெரிதும் கெடுத்தது. சிறையிலிருந்து விடுதலை அடைந்த பின்னர் வறுமையில் இருந்தாலும் 1932 ஆம் ஆண்டு 60 ஆவது நிறைவு விழாவை ஒட்டி தேச மக்களுக்கு உள்ள நன்றியறிதல் நிகழ்வாய் டாக்டர் வரதராஜூலு நாயுடு முதலில் நண்பர்கள் பண உதவி பொருள் உதவி செய்தார்கள். 1936ஆம் ஆண்டு தேசத்திற்காக போராடிய இந்த தியாகி சுதந்திரத்தை பார்க்காமலேயே வீடு பேறு அடைந்தார்

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த 
இல்லாண்மை ஆக்கிக் கெளல்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday 29 March 2022

யாக்கன்

பறிபோன உரிமைகளை வென்றெடுக்க நீயே ஆயுதமாகு

-யாக்கன்

Monday 28 March 2022

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு -டி.எல் சஞ்சீவிகுமார்

#30நாள்_வாசிப்புப்போட்டி

#RM105

Book:3
Pages:222

ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு 
-டி.எல் சஞ்சீவிகுமார்

ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் தொடங்கும் போதும், வடியாத வெள்ளநீர் சென்னையை சூழ்ந்திருக்கும் போதும் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கும் விஷயம் இயற்கையையும் ஆறுகளையும் முறையாக பேணி பாதுகாக்காததே என்பது. ஆனால் வெள்ளநீர் வடிந்தவுடன் மனதும் அந்த கேள்வியோடு வடிந்து விடும். ஆனால் ஒரு சிலர் தான் அதற்கான காரணத்தையும்  தீர்வையும் முன்னெடுத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களில் இந்த புத்தகத்தின் ஆசிரியரும் ஒருவர். தி இந்து நாளிதழில் தொடராக வந்த கட்டுரைகளின் தொகுப்பே இது.

நகரமயமாதலின் முதல் சாபம் நீர்நிலைகளை ஆக்கிரமிப்பது தான். ஒவ்வொரு பருவ மழையின் போதும் அதிக மழைப்பொழிவை தமிழகம் பெற்றிருந்தும் சில மாதங்களிலேயே அண்டை மாநிலங்களை கையேந்தும் நிலை தொடர்ந்து இருக்கிறது. ஒவ்வொரு இயற்கை நிகழ்வின் போதும் நடைபெற்ற சம்பவங்களை அதற்குண்டான தீர்வுகளையும் இந்த கட்டுரைகளில் ஆங்காங்கே குறிப்பிட்டுள்ளார்.

பழந்தமிழர்கள் கண்டறிந்த நீர் மேலாண்மைகளை நாம் தவற விட்டது , இன்றைய இயற்கை இடையூறுகளுக்கு முக்கிய காரணமாகும் என்பதை சான்றுகளுடன் விளக்கியுள்ளார். நதியின் படுகொலை ஆகட்டும்,  பராமரிக்கப்படாத நீர்நிலைகள் ஆகட்டும், இப்படி திட்டமிட்டு செய்கின்ற ஒவ்வொரு விஷயமும் பின்னாளில் எவ்வாறு மனிதர்களுக்கு இடையூறாக அமைகிறது என்பதை கூறியுள்ளார்.

*மடையர்களை போற்றுவோம்

பேச்சு வழக்கில் மடையர்கள் என்று அடிக்கடி திட்டுவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கான உண்மையை இந்த புத்தகத்தின் மூலம் அறிந்து கொண்டேன். ஏரியை வடிவமைத்த பிறகு அதிலிருந்து தண்ணீர் வெளியேற கண்டுபிடித்த தொழில்நுட்பம் தான் மடை. அந்த மடைகளை அமைக்க பனை மரங்கள் பயன்படுத்தப்பட்டன. மரம் வெட்டுப்படாமல் நெருப்பு தெறிக்க வேண்டும். அதுதான் மடைக்கு உகந்த மரம். அப்படியான மரங்களை தேர்வு செய்து உள் தண்டை நீக்கி குழாய் போல தயார் செய்வார்கள். ஏரிக்கரையின் அடி ஆழத்தில் பதித்து ஓட்டையில் கோரை, நாணல்கள் கலந்து அடைத்து விடுவார்கள். இது தான் ஆரம்ப காலகட்டங்களில் மடைகள் உருவாக்கப்பட்டன.

வெள்ள காலங்களில் மடைகளை திறப்பதற்கு என்று ஆட்கள் இருந்தார்கள் .அது சாதாரண விஷயமல்ல. உயிரை பணயம் வைக்கும் பணி. ஏரியில் நீர் நிரம்பி வழியும்போது கரை வெடிக்க காத்திருக்கும். நேரம் கடந்தால் ஊர் அழிந்துவிடும். மடையை திறக்க ஒருவர் உள்ளே மூழ்கும்போது உயிர் பிழைத்தால் உண்டு என்று கடவுளை வேண்டிக் கொண்டுதான் அனுப்புவார்கள். இப்படி மடைதிறக்க சென்று மாண்டு போனவர் பலர், மீண்டு வந்தவர்கள் பலர். இவர்கள்தான் மடையர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இனிமேல் யாரையாவது மடையா என்று திட்டுவார்கள்?

வரலாற்றில் முன்னோடியாக இருக்கும் கல்லணை கச்சமங்கலம் அணை குறித்த தொழில்நுட்பங்கள்,
நீர்நிலைகளை புதுப்பித்த தன்னார்வலர்கள், ஏரிகளை தூர்வாரி பொதுமக்கள், அதற்கு ஆதரவாக நின்ற அதிகாரிகள்.. கோவையில் சீரமைப்பு பணிகளுக்கு பின் நிரம்பிய உக்கடம் பெரியகுளம் என சமகாலத்தில் நீர்நிலைகளை பாதுகாத்த புள்ளி விவரங்களையும் நமக்கு தந்துள்ளார்.

எழுத்தாளர் நக்கீரன் எழுதிய நீர் எழுத்து புத்தகத்தில் ஒரு கார் ஏற்றுமதியாகும் போது 6 லட்சம் லிட்டர் தண்ணீரையும் சேர்த்து ஏற்றுமதி செய்கிறோம் என்று எழுதியிருப்பார். இவ்வாறு கண்ணுக்குத் தெரியாமல் நீரை நாம் வீணடித்து இருக்கிறோம். இதனால் கேன் தண்ணீரின் வரவும் நிலத்தடி நீர்மட்டமும் குறையும் காரணமாக நாமே காரணமாக இருக்கிறோம்.

தன்னைத்தானே தூர்வாரி கொண்ட அதிசய அணைகள் பகுதியில் கொடிவேரி அணைக்கட்டு பற்றிய தகவல்களை தந்திருக்கிறார். பவானி ஆற்றின் குறுக்கே ஏராளமான பாறைகளைக் ஒட்டி சிறுநீர் தேக்கம் போல உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர்.1490ல் ஆட்சி புரிந்த நஞ்சராயன் உடையாரிடம் கீழ்த்தட்டு மக்கள் தடுப்பணை கட்டிக்கொள்ள கேட்க.. கொடிவேலி செடிகள் சூழ்ந்த ஒரு இடத்தில் தடுப்பணை கட்ட முடிவு செய்யப்பட்டது. அங்கே பாறைகள் இல்லாததால் சத்தியமங்கலத்திலிருந்து பாறைகள் வெட்டி கொண்டு வரப்பட்டு மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அப்போது வெள்ளம் வந்து அணை முற்றிலும் அடித்துச் செல்லப்பட்டது. மீண்டும் அணைகட்ட உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. இப்போது மீண்டும் வெள்ளம் வந்தது இரண்டாவது முறையாக.

மீண்டும் மன்னர் அணைகட்ட உத்தரவிட்டு மூன்றாவது முறையாக 151 மீட்டர் நீளமும் 30 அடி அகலத்தில் அணை கட்டப்பட்டது. வலது பக்கத்தில் தடப்பள்ளி வாய்க்கால் இடது பக்கத்தில் அரசன் கோட்டை வாய்க்காலும் சுமார் 5 கிலோமீட்டர் நீளத்துக்கு ஆற்றை ஒட்டியே வெட்டப்பட்டன.பிற்காலத்தில் இந்த வாய்க்கால் விரிவடைந்தது. அணையில் பாசனத்துக்காக 800 கன அடி தண்ணீர் திறந்தால் இடைப்பட்ட பகுதிகளில் பாசனத்துக்கு போக மீதம் 400 கன அடி தண்ணீர் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காலிங்கராயன் அணைக்கு சென்று சேர்கிறது. இது மிகச் சிறந்த நீர் மேலாண்மைக்கு உதாரணமாகும்.

இவை தவிர ஒரத்துப்பாளையம் அணை பிரச்சனை, நியூயார்க்கின் நீர் மேலாண்மையை சென்னை பின்பற்றுமா, கோவை கவுசிகா நதியை அறிவீர்களா, காணாமல் போன நதிகள், மழை நீர் இன்றி அமையாது உலகு போன்ற கட்டுரைகள் சிந்திக்க வைப்பதாக உள்ளன .எதிர்காலத்தில் தண்ணீருக்குத் தான் அதிக மதிப்பு இருக்கும். உயிர்வாழத் தேவையான தண்ணீரை வணிகரீதியாக பயன்படுத்துவதால் ஏற்படும் இன்னல்களை எதிர்காலம் நிச்சயம் சந்திக்கும் என்ற நினைவோடு இப்புத்தகத்தை முடிக்கிறேன்.

 தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

சாக்ரடீஸ்

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.

''ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?'' என்று கேட்டான்.

அதற்கு சாக்ரடீஸ்,

''மாணவன் என்பவன்,

கொக்கைப்போல இருக்க வேண்டும். கோழியைப் போல இருக்க வேண்டும். உப்பைப் போல இருக்க வேண்டும். உன்னைப்போல இருக்க வேண்டும்'' என்றார்.

மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ''கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்'' என்றான்.

''கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும். மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும். அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்'' என்றார்.

''கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான் மாணவன்.

''கோழி என்ன செய்யும்? குப்பையைக் கிளறும். ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும். அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்றார் சாக்ரடீஸ்.

''அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே...''

''ஆமாம். உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும். ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது. அதன் சுவையை மட்டுமே உணர முடியும். அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்'' என்றார்.

''எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே... அதற்கு என்ன அர்த்தம்?'' என்று கேட்டான்.

''மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்'' என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்ச தமிழ்ச்செல்வன்

#30நாள்_வாசிப்புப்போட்டி
#30D105

Book no:2
Pages:112

ஒரு சாப்பாட்டு ராமனின் நினைவலைகள்
ச தமிழ்ச்செல்வன்

முதல்வன் படத்தில் அர்ஜுன் மணிவண்ணனிடம் ஒருநாள் முதல்வராய் இருந்ததை சொல்லும் போது ஏன் சார் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் ஆண் சமைக்கிறோம்.. அதுக்காக எல்லா நாளும் சமைக்கச் சொன்னா நடக்கிற காரியமா என திரும்பி கேட்பார். அப்போது சமையல் என்பது ஆண்களுக்கான தனி செயல்பாடு அல்லதுஒருநாள்  கூத்து எனும் மனநிலையில் தான் ஆண்கள் இருப்பார்கள்.

இந்த நூலில் ச. தமிழ்ச்செல்வன் அவர்கள் தன் வாழ்வில் கிடைத்த அனுபவங்களை இதில் நம்மோடு பகிர்ந்துள்ளார். ஒரு பெண் இறுதிவரை கணவனை விட சமையலறையில் தான் அதிகம் இணைந்து வாழ்க்கை நடத்துகிறார் என்பதற்கு உதாரணமாய் புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையில சாவதற்கு முன்பு கூட தன் கணவனுக்காக சமைத்து வைத்து இருந்திருப்பாள் என்ற வரியை சிலாகித்துக்  கூறுவார்.

மனிதன் தோன்றிய காலம் முதல் உணவுக்காக அவன் தேடிய கதைகளையும்.. இலக்கியங்களில் உணவு குறித்த பதிவுகளையும் அவ்வப்போது குறிப்பிட்டு இருப்பார். வண்ணதாசனின் ஒரு கதையில்  .. மனைவி வேலையெல்லாம் முடித்து குளித்து வேறு புடவை உடுத்தி பளிச்சென தன்னை மாற்றிக் கொண்டு நிற்கும் போது.. மாலை ஆகியிருக்கும் .உள்ளே நுழையும் கணவன் எங்க கிளம்பியாச்சு என்று கேட்பான். எங்க போக அடுப்புக்கு தான் போகணும் என்பாள் மனைவி. ஆணோடு வாழும் இந்த வாழ்க்கை பற்றிய பெண்ணின் ஒரு வரி விமர்சனமாக இந்த வார்த்தையை அழுத்தமாக மனதை சுடும்.

தோசையின் நினைவுகளை சொல்லும்போது "எதையும் தோசையாக விடலாம் என்பதுதான் தோசையின் மகத்துவமே . சமையல் செய்யும் ஒருவர் முதலில் துவங்குவது தோசையாக தான் இருக்கும். பெரும்பாலானோருக்கு பிள்ளையார்சுழி
தோசை தான். எழுத்தாளர் அம்பையின் வெளிப்பாடு கதையில் பத்து வயசு தொடங்கி 40 வருஷத்திலே ஒரு நாளைக்கு இருபது மேனிக்கு எவ்வளவு தோசை என்று கணக்குப் போட்டுப் பார்க்கிறாள். ஒரு வருடத்துக்கு 7300 தோசை 40 வருடங்களில் 2 லட்சத்து 92 ஆயிரம் தோசை என்று அந்த கதை போகும் ..இந்த வரிகள் காலங்காலமாக தோசை சுட்டு கொண்டு இருக்கும் அம்மா பாட்டி அவர்களின் கணக்கு இன்னும் அதிகமாக இருக்கும் என்று மலைப்பாக அந்த கதை போவதாக சொல்லி இருப்பார்.

சின்ன சமையல் பெரிய சமையல் என்ற கட்டுரையில் பெரும்பாலானோருக்கு பரிமாறுவது என்பது கூட ஒரு கலைதான். கிராமத்திலே தன்னாலை கண்டா தனிஞ்சு வரும் அகப்பை.வேத்தாளைக் கண்டா  மிதந்து வரும் அகப்பை என்று ஒரு சொலவடை. சட்டிக்குள்ளே ஆழமாக தணிந்து போகும் அகப்பை தான் நிறைய காய்களை அள்ளி வரும்.
வேற்று ஆளுக்கு மேலால் மிதந்து வரும் அகப்பை காய்கறி இல்லாமல் பரிமாறப்படும்.காய்கறிகள் பரிமாறுவதில் உள்ள பாரபட்சத்தை சொல்வதாக கூறியிருப்பார். இது கறிவிருந்தில் நன்றாகவே தெரியும்.

யூடியூப் சேனல் இல்லாத காலத்திலேயே வயதான தாயிடம் கேட்டால ஓராயிரம் சமையல் குறிப்புகள் கிடைக்கும். கர்ப்ப காலத்தில் சாப்பாடு என்பது எவ்வளவு முக்கியம் என்பதை வண்ணநிலவனின் பலாப்பழம் என்ற கதையில் உதாரணமாக சொல்லியிருப்பார். நிறைமாத கர்ப்பிணியான இளம்பெண்ணுக்கு பக்கத்து வீட்டில் பலாப்பழம் அறுக்கும் வாசனை தரும் ஏக்கம் தான் கதையின் கரு. தனக்கு பக்கத்து வீட்டார் அறுக்கும் பலா பழத்தில் இருந்து இரண்டு சுளைகளாவது கொண்டுவந்து தராமல் போவார்களா என்ற எதிர்பார்ப்பிலேயே அவளுடைய பகல் பொழுது கழியும். ஆனால் பலாச்சுளை வராது .மாலை வந்துவிடும் என அந்தப் பெண்ணின் ஏக்கத்தை அந்த கதையில் சொல்லி இருப்பார்.

இவ்வாறு உணவு ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையில் எவ்வித அசைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்பதையும், தான் கிராமத்து வாழ்க்கையில் சந்தித்த உணவு குறித்த பல்வேறு தகவல்களையும் இதில் பகிர்ந்து உள்ளார்

தன்னுடைய வாழ்க்கைப் பயணத்தில் தான் உணவருந்திய ஆளுமைகளுடன் உண்டான தொடர்பினையும் கூறியுள்ளார். ஒரு வேளை பசி தாங்காத நண்பர்களையும், வெறும் தேநீர் மட்டும் அருந்திக்கொண்டு ஒரு நாள் வாழும் நண்பர்களையும் பார்த்திருக்கிறோம். சிறுவயதில் உணவு கிடைக்காத பலரின் வாழ்க்கை பின்னாளில் இறக்கும் வரை அதை நினைவு கூறுவதையும் பார்த்திருக்கிறேன்.

உண்மையில் பசிதான் மனிதனை போராட வைத்திருக்கிறது. பசியைப் பற்றி, உணவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் ஜெயமோகனின் இந்த வரியை நினைத்துக்கொள்வேன்

"பசி என்பது உண்மையில் ஒரே வித அனுபவம் அல்ல.ருசியான உணவு கிடைக்கும் என்ற உறுதி உள்ள ஒருவனுக்கு பசி என்பது ஒரு இனிய அழைப்பாக இருக்கக்கூடும்.கடுமையாக உழைத்த பிறகு பசி உடலெங்கும் ஊறிப்பரவும் ஓர் இனிய அனுபவம்.

பசித்து வெகுதூரம் நடக்கும்போது பசி தூரத்தை அளக்கும் முழக்கோல்.தனியறையில் பசித்து படுத்திருக்கையில் அது ஒரு ஓயாத சத்தம். காத்திருக்கும் போது நச்சரிப்பு.

ஆனால் பசியின் பயங்கரம் அதற்கான உணவு கிடைக்கும் என்பது எவ்விதத்திலும் நிச்சயமற்ற ஒன்றாக இருக்கும் போதுதான் தெரியவரும்.
அந்தப்பசி அணைக்கப்படாது பெருகி நம் உயிரையே காவு கேட்கும் வாய்ப்பு உள்ளது என்று அறியும்போது ,பசி என்பது பெரும் அச்சம்"

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday 26 March 2022

30நாள்_வாசிப்புப்போட்டி

#30நாள்_வாசிப்புப்போட்டி
#30D105

Book no:1
Pages:302

#கலைடாஸ்கோப்
-சந்தோஷ் நாராயணன்

படித்த புத்தகங்களை விட படிக்காத புத்தகங்கள் மேலும் மதிப்புமிக்கவை. அது உங்களுக்கான ஞானங்களை ஒளித்துவைத்து அமைதியாக இருப்பவை.ஆகவே, படிக்காவிட்டாலும் பரவாயில்லை.. எவ்வளவு முடியுமோ அவ்வளவு புத்தகங்களை வாங்கிச் சேமிக்கலாம்

-தலேப்

விகடனில் தொடராய் வந்த போது சின்ன சின்ன விஷயங்கள், தகவல்கள்,மினிமலிச ஓவியம், வினோதமான தகவல்கள்,அறிவியல், குட்டிக் கதைகள் என தலைப்பிற்கேற்றவாறு ஒரே பக்கத்தில் வண்ண வண்ண அழகாய் இந்த கலைடாஸ்கோப் இருந்தது. ஐம்பது வருடங்கழித்து வரும் டெக்னாலஜி வளர்ச்சியாகட்டும், இரண்டாயிரம் வருடத்திற்கு முன் நிகழ்ந்த ஆய்வுகள் ஆகட்டும் சமகாலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மினிமலிச ஓவியத்தில் தீப்பிட்டி பட அட்டையில் 'சாதீ'ப் பெட்டி என மைக்ரோ செகண்ட் மூளையில் சட்டென மின்னல் வெட்டியது.
வளர்ச்சி?? ஓவியத்தில் மனிதனின் மேல் பாகம் விவசாயியாகவும், கீழ் பகுதி கைப்பையுடன் அலுவலகம் செல்லும் மனிதன் என நவீன காலத்தை இரண்டு சிறு ஓவியங்களில் விளக்கியிருப்பார்.
வண்டி பத்து நிமிசம் நிக்கும்னு சொல்லும் போது மோட்டல் குறித்த பிம்பம் நமக்கு வந்திடும். 2 ம் உலகப் போருக்கு பிறகு தான் உலகம் எங்கும் வந்ததாக சொல்லி அதனால் தான் பெரும் அக்கப்போராக இருப்பதாக நையாண்டி செய்திருப்பார்.

நாஸ்டால்ஜியா நோட்டில் காணாமல் போன ஜவ்வு மிட்டாய், பாம்பே மிட்டாய் பற்றி கூறியிருப்பார். சாக்லெட் வியாபாரத்தை விரிவு செய்த வியாபாரமயம் ஜவ்வு மிட்டாயை வழக்கொழிய வைத்துவிட்டது.ஹரிக்கேன் விளக்கின் சிறப்பை கூறும் போது அதன் திரி நாடாபோல் இருக்கும். சுடரை பற்ற வைத்து லாக் செய்தால் புயலே வந்தாலும் சுடர் அசையாது. பெயர் காரணம் புரிகிறதா? Hurricane lamp

நானோ ஹிஸ்டரியில் தீக்குச்சியின் வரலாறு சொல்லியிருப்பார். பல்வேறு சோதனைகள் பல்வேறு அறிஞர்கள் கண்டறிந்த பின் ஜான் வால்க்கர் கண்டறிந்த இன்றைய குச்சி கைகளில் நெருப்பு படாமல், உரச எளிதாகவும் இருந்தது.இதனால் தான் சேஃப்டி மேட்ச்சஸ் என சொல்வது புரிகிறது.

முகநூலில் லைக் சிம்பலின் தோற்றமும் அது எங்கிருந்து வந்தது எனும் வரலாற்றையும் பின்னணி தகவலையும் அறிந்து கொள்வது அட இதுக்கு பின்னணியில் இப்படியா என எண்ண வைக்கிறது.

தலையாணையின் ப்ளாஷ்பேக்கை திரும்பி பார்த்தால் தூங்கும் போது எறும்புகள் போன்றவை காதிலோ மூக்கிலோ நுழையாமல் இருக்க தலையை கொஞ்சம் உயர்த்தி தூங்க எகிப்தியர்கள் தீர்மானித்திருந்தனர். சீனர்கள், ரோமானியர்கள், ஐரோப்பியர்கள் கிரேக்கர்கள் என வரலாறு பயணித்தாலும் அந்த தலையணை மந்திரத்தை கண்டுபிடித்தது நாமதானாக்கும்.

விஷூவல் கார்னர் பகுதியில் உலகின் பல்வேறு பகுதிகளில் அதிசயிக்கத் தக்க வண்ணம் உள்ள புகைப்படங்களை பகிர்ந்திருப்பதுடன் அதன் பின்னணியிலுள்ள வரலாற்றையும் படிப்பது சுவாரஸ்யமாக்குகிறது.

கொலாஜ் பகுதியில் தன் பாணியில் உருவாக்கிய தன்னம்பிக்கை வாக்கியங்களை பகிர்ந்திருப்பார். அதில் ரசித்தவை சில

*ஒரு குக்கரைப் போல் இருங்கள்.. பிரஷர் அதிகமாகும் போது விசிலடித்து விடுங்கள்

*தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது..அதை அடுத்தவர் மீது கொட்டாதீர்கள்

*தாமதமான வெற்றி என்பது பல் இழந்த பின் கிடைக்கும் நல்லி எலும்பு போல

ஒவ்வொரு பக்கமும் சுவாரஸ்யமாய் இருந்தது. அறியாத ஏதேனும் ஒரு அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவியாய் இருந்தது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday 25 March 2022

சார்லஸ் ஓ ரீர்

1996ல் சார்லஸ் ஓ ரீர் எடுத்த இந்த புகைப்படம்..2000ல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினரால் வாங்கப்பட்டு பில்லியன் கணக்கான மக்கள் பார்த்துள்ளனர்.இதை வைத்திருந்தால் தான் கணினி என்று நம்பிய காலங்கள் உண்டு

ஜீன்ஸ் பேண்ட்டில் ஏன் ஒரு சிறிய பை வைத்து தைக்கிறார்கள்?



ஒரு காலத்தில் ஜீன்ஸ் பேண்ட்
 பணக்காரர்களின் ஆடையாக இருந்தது இன்று அனைத்து தரப்பு மக்களின் ஆடையாக மாறியுள்ளது.

ஆனால் ஜீன்ஸ் பேண்ட்டைவாங்கும் போது கவனித்திருக்கிறீர்களா?

அதில் ஒரு சிறிய பாக்கெட் பாக்கெட்டிற்குள் இருக்கும் மிகச்சறிய அளவில் அந்த பாக்கெட் இருக்கும் வேறு எந்த வகையான பேண்டிலும் அந்த மாதிரியான பாக்கெட் இருக்காது.

இந்த ஜீன்ஸ் பேண்ட்கள் பெரும்பாலும் சுரங்கங்களில் பணியாற்றுபவர்களுக்காக டிசைன் செய்யப்பட்டது.

மிக அழுத்தமான துணியில் ஆடை ஆணிவது தான் அவர்களுக்கு நல்லது என்பதால் இந்த ஜீன்ஸ் பேண்டை அவர்களுக்காக தயாரித்தனர்.

அந்த காலங்களில் பாக்கெட் கடிகாரம், மிகவும் பிரபலம். மக்கள் பாக்கெட் கடிகாரங்களை வாங்கி வைத்துக்கொள்வார்கள். அவர்களுக்கு எப்பொழுது எல்லாம் மணி பார்க்க வேண்டுமோ அதை எடுத்து பார்த்து கொள்வார்கள்.

கடிகாரம் சுரங்க பணியாளர்கள் கட்டாயம் வைத்திருப்பார்கள். அவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு முறை இடைவெளி எடுக்க வேண்டும். அதற்காக அவர்கள் எப்பொழுதும் கையில் வைத்திருப்பார்கள்.

அவர்கள் வைத்திருக்கும் கை கடிகாரத்தை பத்திரமாக வைத்திருக்கவே இந்த பாக்கெட் வடிவமைக்கப்பட்டது.

படிப்படியாக இது நடைமுறைக்கு வந்தது.ஜீன்ஸ் பேண்ட்டில் இந்த பாக்கெட் வைக்கும் ஐடியாவை கொடுத்தது ஜீன்ஸ் பேண்ட் தயாரிப்பாளரான லிவி ஸ்டாரஸ்

இவரது கம்பெனி பிராண்ட் தான் தற்போதும் Levi's என்ற பெயரில் ஜீன்ஸ் பேண்ட்களை தயாரித்து விற்பனை செய்கிறது

தற்போது இந்த ஜீன்ஸ் பேண்ட்டை அணிபவர்கள் இந்த பாக்கெட்டை காயின்ஸ் மற்றும் டிக்கெட்களைபத்திரமாக வைத்திருக்க பயன்படுத்துகிறார்கள்.

அதற்காகவே அதற்கு டிக்கெட் பாக்கெட் என பெயர் வந்துவிட்டது.
இந்த பேண்ட் தயாரிக்கப்படும் போது இதற்கு பெயர் வாட்ச் பாக்கெட் தான்

-படித்தது

வைரமுத்து

செருப்பு கடித்துச் செத்துப் போகும் தேகங்களை வளர்த்து விட்டோம்.தந்தி வந்தால் இறந்து போகும் இதயங்களை வளர்த்து விட்டோம்

-வைரமுத்து

சாவுற வரைக்குமா சார்?" - 'இப்போது உயிரோடிருக்கிறேன்' நாவல் வாசிப்பனுபவம்-#Myvikatan- மணிகண்டபிரபு


உரையாடல்களை கவனித்த சில நிமிடங்களிலேயே தன்னை அந்த கதாபாத்திரத்தின் தன்மையுடன் பொருந்த வைத்து விடுவார். நமக்கே அந்த பிணி ஏற்பட்டது போல் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கும்...



வலி நிறைந்த இந்தப் பயணத்தில் நீங்கள் எப்படி வாழ்வை நடத்துகிறீர்கள்.வாழ்வே வலி நிறைந்ததுதான் என்று புரிந்து கொண்டால் எந்தப் பயணமும் சிரமமில்லை"
ஐங்கரநேசன்

கல்வி என்பது மட்டும் ஏழைகளுக்கு எட்டாக்கனியல்ல.. மருத்துவமும் தான். நடுத்தர வர்க்கத்தினருக்கு வரும் நோய் அவர்களின் வாழ்க்கையையே புரட்டிப் போடுவதை பார்த்திருக்கிறோம். உடல் ஒன்றையே முதலீடாய் வைத்திருக்கும் ஏழைகளுக்கு உடல் நலமின்மை, சிகிச்சை எல்லாம் பெரும் நெருக்கடிகள்.


அவசர சிகிச்சை அறையின் வெளியில் இருப்போரை பார்த்திருக்கிறீர்களா.. துக்கம் தோய்ந்த முகத்துடன் ஒருவர் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால்.. பிறிதொருவர் அலைபேசியில் யாரிடமாவது பணம் கேட்டுக் கொண்டிருப்பார். நோயாளின் பெயரை கூறி அழைத்தவுடன்.. உச்சபட்ச பயத்துடன் அவரை நோக்கி ஓடுவதைப் பார்த்திருக்கிறோம். வலியும் துக்கமும் நிறைந்த வாழ்வு தான் மருத்துவமனையில் காத்திருப்போர் துயரமும். இவர்களுக்கு சற்றும் குறைவில்லாதது நோயாளியின் தனிமையும் பயமும். தன்னால் தன் குடும்பத்திற்கு எவ்வளவு பெரிய நெருக்கடி என நினைத்து நினைத்து வேதனைப் பட்டுக் கொண்டிருப்பார்.


பொதுவில் யாரிடமாவது பேசிக் கொண்டிருக்கும் போது அவரின் உடல் உபாதை குறித்து பேசினால்.. நாம் சற்று விலகி விடுவோம். காரணம் நமக்கே ஒரு அச்சம் ஏற்படுத்தும் வகையில் பேசுவார் அல்லது தன் மீது பரிதாபம் ஏற்பட வேண்டி மிகைப்படுத்தி சொல்லுவார். நோயின் வாதையை சரியான விதத்தில் நோய்க்கான காரணிகளை எடுத்துக் கூறுவோர் மிகக் குறைவே. அந்த சரியான விதத்தில் சொல்லும் உக்தியை பயன்படுத்தியிருப்பார் இந்நூலில்.


இமையத்தின் எழுத்து நடை என்பது மேற்கோள்களோ, கிளைக்கதைகளோ இன்றி மனித உணர்வின் துணையுடன் நேர்க் கோட்டுப் பாதையில் யதார்த்தம் மிளிர வாசிக்க வைப்பது. இத்தனைக்கும் ஐந்துக்கும் குறைவான கதைமாந்தர்களை கொண்டு முழு நாவலையும் சொல்லியிருப்பது இன்னுமொரு சிறப்பு. எந்த இடத்திலும் சலிப்போ அயர்ச்சியோ ஏற்படாது. மாறாக கவனத்துடன் கதைமாந்தரின் வாழ்வியலோடு ஒன்ற வைத்திருப்பார்.


உரையாடல்களை கவனித்த சில நிமிடங்களிலேயே தன்னை அந்த கதாபாத்திரத்தின் தன்மையுடன் பொருந்த வைத்து விடுவார். நமக்கே அந்த பிணி ஏற்பட்டது போல் அவ்வப்போது தோன்றிக் கொண்டேயிருக்கும். பிறகு தன்னிலிருந்து விலகி விலகியே இறுதி வரை பயணிக்க வைத்திருப்பார். நோய்மையின் தீவிரத்தை கவர்மெண்ட் பிணம் சிறுகதையில் சொல்லியிருப்பது போல.. இதில் நோயாளியின் பார்வையிலிருந்து நாவல் விரிகிறது. எந்த இடத்திலும் தேக்கமில்லாமல்.. வர்ணனையில்லாமல் நமக்கு அருகாமையில் இக்கதை நடந்தது போல் காட்சிப்படுத்தியிருப்பார்.


#கதை

சாதாரண கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் தமிழரசனுக்கு திடீரென உடல் நலம் குன்றுகிறது. அரிசி ஆலை நடத்தும் அப்பா, வீட்டிலிருக்கும் அம்மா, தங்கை என அனைவரும் பதறியபடி நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். எப்படியும் இரு நாட்களில் பள்ளிக்குச் செல்லலாம் என தமிழரசனும் குடும்பமும் நினைத்துக் கொண்டிருக்கும் போது சிறுநீரகம் செயலிழந்த செய்தி அவர்களை நிலைகுலைய வைக்கிறது.


கடவுளை நம்பாத மனிதர்கள் கூட உண்டு.ஆனால் மருத்துவரை நம்பாதவர்கள் இல்லை என்பது போல் மருத்துவர் கூறிய அனைத்துவித டெஸ்ட்டுகளும் எடுத்துப் பார்த்ததில் வாரம் இரு முறை டயாலிஸிஸ் செய்யப்படுகிறது. எப்படியும் நோய் சரியாகி வார்டுக்கு மாற்றுவார்கள் என்று நம்பிக்கையோடு காத்திருக்கிறது குடும்பம்.நோய் இன்னும் தீவிரமடைய மாற்று சிறுநீரகம் பொருத்த பரிந்துரைக்கப் படுகிறது. யாரும் முன்வராத போது தன் தாயே மகனுக்கு சிறுநீரகம் தர முன்வருகிறார்.


மாற்று சிறுநீரகமும் பொறுத்தியாயிற்று இனியாவது தமிழரசன் மீண்டு வந்துவிடுவார் என ஒவ்வொரு வரியை படிக்கும் போது தோன்றும். ஆனால் அடுத்து பயாப்சி சோதனை என நீள்கிறது. தமிழரசனுக்கு அடுத்து என்ன ஆயிற்று, பாசமா பணமா எனும் போராட்டத்தில் நடுத்தர வர்க்கம் என்ன செய்யும், நோய்மையின் தாக்கத்தின் போது நோயாளியின் மன உணர்வு என்னவாக இருக்கும் என்பதை எல்லாம் மிக ஆழமாக இந்நாவல் பேசுகிறது.

நாவலின் இறுதிக்கட்டம் வரை தமிழரசனோடு நாமும் மருத்துவமனையில் இருந்த உணர்வு வருகிறது. டயாலிஸிஸ் குறித்து ஒரு நீண்ட ஆய்வறிக்கையை சமர்ப்பித்திரிக்கிறார் இமையம்.


"சதயில பிசின் மாதிரி ஒண்ணு உற்பத்தி ஆவும். அது ரத்தத்தில் கலக்கும். ரத்தத்தில் இருக்கிற அந்தப் பிசின கிட்னி சுத்தப்படுத்தி யூரின் வழியா வெளியேத்தும். கிட்னி செய்யாத வேலய மெஷின் செய்யும்." என்பார். டயாலிசிஸ் வருஷத்துக்கு எத்தன முற செய்யணும் சார்? என்பார் அப்பா."வருஷத்துக்கா?" வாரத்துக்கு ரெண்டு முறை செய்யனும்.

எது வரைக்கும் சார்?

"உயிரோடு இருக்கிறவர."

"சாவுற வரைக்குமா சார்?" என்று கேட்கும் அப்பாவின் குரலில் நம் மனதின் உடைந்த சத்தமும் கேட்கும்.


ஒவ்வொருவரும் தன்னுடைய ஃபைலை பார்க்கும் போதெல்லாம் இந்த பார்வையில் தீர்வு கிடைக்காதா என தமிழரசன் எண்ணும் போது நோயாளியின் மனநிலையை நாமும் உணர முடிகிறது. மருத்துவமனையில் எல்லா டெஸ்ட்டும் செய்துவிட்டு ஒன்றுமில்லை என்றவுடன் செலவு செய்த அனைத்தும் நம் நிம்மதிக்கான விலை என்றறிக என்பது போல் இருக்கும். முகச்சுழிப்போ, நீண்ட மெளனமோ நம்மை இன்னும் கலவரப்படுத்தும்.


#படித்ததில் கனத்தது

*டயாலிசிஸ் பேஷண்ட பொறுத்தவரை பணம் எவ்வளவு இருக்கோ அவ்வளவு நாள் உயிரோடு இருக்கலாம்.

*உசுரோட இருக்கிறதுக்கு அதிர்ஷ்டம் வேணும். சீக்கிரம் செத்துப் போறதுக்கு அதைவிட அதிர்ஷ்டம் வேண்டும்


*சிறுநீரக அறுவை சிகிச்சை சீக்கிரம் பண்ணிடுங்க. இல்லன்னா ஹாஸ்பிட்டல்ல படுக்க வச்சே உங்களப் பிச்சைக்காரங்களா மாத்திடும் இந்த நோய்.


*சேற்றில் மாட்டிக்கொண்ட கால்களை எடுத்து வைத்து நடப்பது போல் நடந்து போனேன்


*உன் பெயர் என்ன என்று கேட்டார்?

பல ஆண்டுகளாக திறக்காமல் இருந்த பூட்டைச் சிரமப்பட்டு திறப்பது போல மெல்ல வாயைத் திறந்து என்னுடைய பெயரைச் சொன்னேன்.


*"சாமினு ஒரு கருமாதி இருந்தா எதுக்கு என் பையன் இந்த வயசுலயே இவ்வளவு கஷ்டத்தை அனுபவிக்கிறான்?" விரக்தியான குரலில் அப்பா சொன்னார்.


*சாவதை விட பெரிய கஷ்டம் உசுரோட இருக்கிறதுதான்


*குளத்தில் இருக்கும் மீன் திரும்பத்திரும்ப குளத்துக்குள்ள சுற்றி வருவது போல என்னுடைய மனது இந்த அறுவை சிகிச்சை அறையையே சுற்றி சுழன்று கொண்டு இருக்கிறது


*இந்த ஜென்மத்துல இப்படி எல்லாம் அனுபவித்து சாகணும்னு தலையில எழுதி இருக்கும் போல செத்து ஒரு கை பிடி சாம்பலாவறதுக்குத் தான் இத்தனை போராட்டமும்


*தொட்டிக்குள்ள இருக்கிறது கஷ்டமா இருக்குதுன்னு கொதிக்கிற சுடுதண்ணியில போய் விழுந்த மீனோட கதை தான் நம்ம கதை என்று அப்பா சொன்னார்


சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள இருக்கும் கட்டுப்பாடுகளும், மாற்று சிறுநீரகத்தை பதிவு செய்து பெற்றுக் கொள்ள இருக்கும் நேர்முகத்தேர்வுகள் குறித்தும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.


நவீன மருத்துவத்தில் பிழைப்பது மருத்துவமனை நிர்வாகம் தான் என்பது போன்று சில இடங்களில் உணர முடிகிறது. நாவலின் இறுதிப் பகுதி என்னவாக இருக்கும் என்பதை ஒவ்வொரு பக்கமும் அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்புடன் படிக்க வைக்கிறது.


புத்தகத்தை மூடி வைக்கும் போது தமிழரசன் நிலையிலிருந்து சற்று நேரம் யோசிக்க வைத்திருப்பதே இந்நாவலின் வெற்றி. நம் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தும் வகையிலும்.. விளிம்பு நிலை மக்களுக்கு நவீன மருத்துவம் இன்னும் எட்டாக்கனியாக இருப்பதை உணர முடிகிறது. ஆரோக்கியத்தை பற்றி கவலைப்படாத வாழ்வின் முற்பகுதி.. பின்பு அதற்கான விலையை வாழ்வின் பிற்பகுதியில் கேட்கிறது.


சமூகத்தின் ஏற்றத்தாழ்வும், குரூரமான சமூகத்தின் முகத்தையும் பார்க்கும் போது தான் கட்டமைத்திருந்த சமூகத்தின் பிம்பம் சுக்குநூறாக உடைவதையும் காண முடிகிறது. இயலாமையும் ஆற்றாமையும் தனித்து விடப்பட்ட உள்ளுணர்வும் தனிமனிதர்களுக்கு சொல்லொணாத் துயரையும் தருகிறது. இந்நாவலை படித்து முடிக்கும் போது "அனைத்து பிரார்த்தனைகளும் வந்த பிரச்சனைகளுக்காக அல்ல; வரக்கூடும் என அஞ்சிய பிரச்சனைகளுக்காகவே'' எனும் அனோஜனின் வரி நினைவுக்கு வருகிறது. வருங்கால சமூகம் ஆரோக்யத்துடன் வாழ மனித நேயத்துடன் பிரார்த்திக்க வைக்கிறது.

-மணிகண்ட பிரபு

Thursday 24 March 2022

சேரவஞ்சி

இரகசியங்களின் பெருஞ்சுமையை
மனிதனால் தனியாக தாங்க முடியாது. அதை இறக்கி வைக்க 
முடிகிற ஒரு நண்பனையாவது அவன் சம்பாதித்தே தீர வேண்டும்

-சேரவஞ்சி

எலியட்

நாம் எல்லோருமே விடைகள் தேடுகிறோம்;நாமே புதிர்கள் என்பதை மறந்து

-எலியட்

Wednesday 23 March 2022

சிவநேசன்

பக்கத்தில் கண்டதும்
கூடுதலாய் நீந்திக் காட்டும்
மீன்கள்
நதிக்குள் விடத்தான்
கரங்கள் நீள்வதாக
நம்புகின்றன
விலை பேசி வாங்கி
வீட்டுக்குள் நுழையும் வரை

-ந.சிவநேசன்

லா.ச.ரா

ஆயுசைத் தூக்கில் உடைப்பில் போடு. தருணங்களுக்கு வாழ்

-லா.ச.ரா

உமா மகேஸ்வரி

விதைக்குள்ளேயே
விம்மிக் கொண்டிருந்தது
காடு

-உமா மகேஸ்வரி

ராஜாஜி

பேசும் போது ஒவ்வொரு சொல்லும் பிசிறில்லாமல் தெளிவாக சென்றடைய வேண்டும்.வேகமாக பேசும்போது,சொற்கள் ஒன்றின்மேல் ஒன்று சவாரி செய்யும். ஒன்றை ஒன்று சிதைக்க முயலும்.இதில் வெற்றியும் பெறும்.

இந்த சறுக்கலிலிருந்து நம்மைக் காத்துக் கொள்வதில் கவனம் அவசியம்

-ராஜாஜி

Tuesday 22 March 2022

அரசியல் பழமொழி

அனைவருக்கும் கம்பளிப் போர்வைகள் தருவோம் என்ற வாக்குறுதியுடன் களமிறங்குகின்றன நரிகள். கம்பளிக்கு ரோமம் எங்கிருந்து வரும் என்று சிந்திக்கத் தெரியாத ஆடுகள் தலையாட்டுகின்றன

-அரசியல் பழமொழி

Friday 18 March 2022

செனேகா

இயற்கை வழி வாழ்கின்றவன்
ஒருபோதும் ஏழையாக மாட்டான்.கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு வாழ்பவன் ஒரு போதும் பணக்காரனாக மாட்டான்

-செனேகா

Thursday 17 March 2022

cock?rooster?

Cock ? Rooster?

இரண்டு சொற்களுமே ஓர் அழகான சேவலைத்தான் குறிக்கின்றன.

Cock என்பது cockerel என்ற ஆங்கிலச் சொல்லின் சுருக்கமான பதமாகும். கோழிகளோடு இணைந்து (roost) ஒரே கூட்டில் உறங்கி அவற்றை முட்டையிட வைக்கும் அருஞ்செயலை செய்யும்போது, Cock என்ற பதம் ஆங்கிலத்தில் roosterஆகி விடுகின்றது.

அமெரி்க்கா-பிரிட்டன் என்று இரண்டு நாடுகளையும் ஒப்பிடும்போது , பேச்சுவழக்கில், அமெரிக்கா rooster என்ற பதத்தை அதிகமாக உபயோகிக்கின்றது. பிரிட்டனில் cockerel (cock) பொதுவானதாக இருக்கின்றது. இது ஒரு காலத்தில் பிரிட்டனின் Old English சொல்லாக இருந்துள்ளது..

-படித்தது

Wednesday 16 March 2022

யாத்திரி

பொய்க்குதான் விளக்கங்கள் தேவை;
நீ நம்பு நம்பாமல் போ எனக்கென்ன என்னும் உண்மையின் அலட்சியப் போதை அலாதியானது

-யாத்திரி

ஓஷோ

நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வதும், மோசமாக உணர்வதும்,  கடந்த கால அல்லது எதிர்கால கற்பனைகளில் இருந்து வருகிறது, 
இப்போது நீங்கள் இருக்கும் நிலைக்கு உங்களைத் தவிர யாரும் பொறுப்பல்ல. உங்களை யாராலும் கோபப்படுத்தவோ, மகிழ்விக்க முடியாது. 

-ஓஷோ

Tuesday 15 March 2022

ஜே.கிருஷ்ணமூர்த்தி

மதிப்பீடு செய்யாமல் கவனிக்கும் திறன் புத்திசாலித்தனத்தின் மிக உயர்ந்த வடிவம்

-ஜே.கிருஷ்ணமூர்த்தி

நர்சிம்

அருந்தப்படாத தேநீரின்
சுருக்கங்கள் விழுந்த மேற்பரப்பில்
உறைந்து போயிருக்கலாம்
ஏதேனுமொரு
சோகமோ
கோபமோ

-நர்சிம்

ராஜா சந்திரசேகர்

எல்லாத்துலயும் காசு பாக்கணும்னு நெனச்சீங்கன்னா அப்புறம் காசுதான் உங்களப் பாக்கும். மனுஷன் பாக்கமாட்டான்.
   - ராஜா சந்திரசேகர்

பாஸ்கர்

மனிதர்கள் அனுபவங்களை 
கற்றுத் தருகிறார்கள். பதிலுக்கு 
அனுபவங்கள் மனிதர்களை 
கற்றுத் தருகின்றன. 

-பாஸ்கர்

Monday 14 March 2022

லீலா

எல்லா உறவுகளும்
கண்ணாடி போலத்தான்..
உடையாத வரை
ஒரு முகம்
உடைந்துவிட்டால்
பல முகம்

-லீலா

மகுடேசுவரன்

இந்த உலகின்
மிக சிறந்த புகைப்படம்
மனைவி பிள்ளைகளைப் பிரிந்து
அயல்நாட்டில்
உழைத்துத் தேய்பவனின் பர்ஸில்
இருக்கிறது!
அந்தப் புகைப்படத்தால் அவன் ஒவ்வொரு நாளும் உயிர்த்தெழுகிறான்

-மகுடேசுவரன்

Thursday 10 March 2022

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும்

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழிக்கு 'தாயின் திறமையை விட மகளின் திறமை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்' - என்ற தவறான பொருள்படவே புரிந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இப்பழமொழி விவசாயம் தொடர்பான ஆழ்ந்த சூத்திரம் குறித்த ஒன்று என்பது நம்மில் பலர் அறியாதது!

தாய் எட்டடி பாய்ந்தால் பிள்ளை பதினாறடி பாயும் - என்ற பழமொழியில்...
தாய் - என்ற சொல் வாழையையும்,
பிள்ளை - என்ற சொல் தென்னையையும் குறிக்கும்.

நன்கு வளர்ச்சியடைந்த வாழை மரத்தை 'தாய் மரம்' என்றும், அதனைச்சுற்றி சிறிதாக முளைத்து வளர்பவற்றை 'கன்று' எனவும் அழைப்பது வழமை! அதேபோல் தென்னையின் கன்றுக்கு 'தென்னம்பிள்ளை' என்று பெயர்.
வாழைத் தோப்பில் மரங்களை நடவு செய்யும் போது இரண்டு மரங்களுக்கிடையில் 8 அடி இருக்க வேண்டும் என்பதையும் , தென்னை மரங்களுக்கிடையில் 16 அடி இடைவெளி இருக்க வேண்டும் என்பதையே - இப்பழமொழி வெளிப்படுத்துகிறது.

'எட்டடி வாழை, பத்தடி பனை, பதினாறடி தென்னை' - என்ற வழக்கும்,
' எட்டடி - வாழை கமுகு
ஈரடி - கரும்பு கத்தரி
பதினாறடி - பிள்ளை' - என்ற வழக்கும் இதைப் போன்ற ஒத்த விதிமுறைகள் குறித்து விவசாயிகளிடை வழங்கப்படுவது ! (கமுகு = பாக்கு மரம்) .
மேற்குறிப்பிட்டபடி இடைவெளி இருந்தால் தான் மரங்களின் வேர்கள் வளர்ச்சி சீராக இருக்கும். மரங்கள் வளர்ந்த பின், மரங்களின் இலைகள் பக்கத்து மரங்களின் இலைகளைத் தொடாது, போதுமான சூரிய ஒளி நிலத்தில் விழுந்து சரியான விளைச்சலைத் தரும்!



இதே கருத்தை வேறு விதமாக....
"தென்னைக்கு தேரோட,
வாழைக்கு வண்டியோட,
கரும்புக்கு ஏரோட,
நெல்லுக்கு நண்டோட..." - என்றும் சொல்வதுண்டு!

-படித்தது

பிரச்சனைகளை

Stop trying to calm the storm. Calm yourself, the storm will pass.


பிரச்சனைகளை தீர்க்க முயற்சிக்காதீங்க. நீங்க அமைதியாக இருங்கள். அது தானாகவே தீர்ந்துவிடும்.

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை ஹெலிகாப்டர் மூலம் அடையலாமா?


விமான இயல்,புவியியல்
காரணிகளின் அடிப்படையில் முடியாது

ஏனெனில் DEATH ZONE எனப்படும் 8000 மீட்டர் உயரத்திற்கு மேல் ஹெலிகாப்டர்களால் பறக்க இயலாது....ஆனால் ஒரு சிலர் முயன்றுள்ளனர்

மிகக்குறைந்த காற்றழுத்தத்தில் ஹெலிகாப்டரை இயக்கும் பயிற்சிகளையும்

சுமார் 300 கிமீ வேகத்தில் வீசும் -50 டிகிரி கொண்ட பனிக்காற்றை சமாளிக்கும் பயிற்சிகளையும்

உயர் மலைகளில் வீசும் UPDRAFT ~ DOWN DRAFT எனப்படும் மேல் தள்ளுக்காற்று ~ கீழ் தள்ளுக்காற்று இரண்டையும் சமாளிக்கும் பயிற்சிகளையும்

மிகக்குறைந்த OXYGEN சூழலில் ஹெலிகாப்டரின் இயந்திரத்தை இயக்கத்திலேயே வைத்திருக்க வேண்டிய பொறியியல் சவால்களையும் சந்திக்க வேண்டியிருக்கும்

Wednesday 9 March 2022

ஹென்றி மில்லர்

உண்மையான அன்பு ஒருபோதும் குழப்பமடைவதில்லை. அது எந்தவித தகுதிகளையும் எதிர்ப்பார்ப்பதில்லை. ஒருபோதும் அது நிராகரிப்பதில்லை. அது வேண்டும். இது வேண்டுமென்று கோரிக்கைகள் வைப்பதில்லை. அன்பு குறைய குறைய தன் மேன்மையின் அளவற்ற சுழற்சியால் தன்னை மறுபடியும் நிரப்பிக்கொள்ளும் ஆற்றல் வாய்ந்தது. தன்னை இழந்து வாழ்வை ஒளிமயமாக்கும். ஏனெனில் அதற்கு மட்டும்தான் தியாகத்தின் உண்மையான அர்த்தம் தெரியும்.

- ஹென்றி மில்லர்

Sunday 6 March 2022

Paulo Coelho

“If you are never alone, you cannot know yourself.”

-Paulo Coelho

மனுஷ்யபுத்திரன்

நிராகரிப்பின் வலி என்றெல்லாம்
ஒன்றுமில்லை

அதில் ஒரு சிறிய அவமானம்
இருக்கிறது

அதற்கு மட்டும் பழகிக்கொண்டால் போதும்
நிம்மதியாக வாழலாம்

-மனுஷ்யபுத்திரன்

அருண்மொழி நங்கை

காலம் ஒரு மாபெரும் வடிகட்டி போல ,நம் நினைவு அடுக்குகளில் எது தங்க வேண்டும் என்பதை தீர்மானிப்பதாக எனக்குத் தோன்றும். 
  

-அருண்மொழி நங்கை

மார்க்வெஸ்

இந்த உலகில் உன் கண்ணீருக்குத் தகுதியானவர்கள் யாருமில்லை. ஆனால் யாரெல்லாம் தகுதியானவர்களோ அவர்கள் உன்னை அழ வைப்பதில்லை 

-மார்க்வெஸ்

பிரான்சிஸ் கிருபா

ஆயிரம் 
சுத்தியல்கள்
ஒரே ஓர் ஆணி
இயேசுவே
இந்த ஆணியையும் ரட்சியும்!

-பிரான்சிஸ் கிருபா

Thursday 3 March 2022

தி.முருகன்

ரஷ்யா சண்டையிடுவதை நிறுத்தினால் போர் இல்லாமல் போகும்; உக்ரைன் சண்டையிடுவதை நிறுத்தினால்,உக்ரைனே இல்லாமல் போகும் என்பது தான் இப்போதைய நிலை.

-தி.முருகன்

பாவெல் சக்தி

வாழ்வென்பது ஒருவன் தன்னைத் தானே கொளுத்திக் கொண்டு இன்னும் சூடாகாமல் இருப்பது

-பாவெல் சக்தி

Wednesday 2 March 2022

லதா

நாகரிக வளர்ச்சியின் பாதையில் யாதர்த்தங்களை நாம் எங்கோ தொலைத்துவிட்டோம்!!
                                                          -லதா

Decluttering

Decluttering என்பது மினிமலிசக் கொள்கையின் அக்கா தங்கை எனலாம். மினிமலிஸம் என்றால் நமக்குத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கி தேவையில்லாத விஷயங்களை தவிர்ப்பதாகும். Decluttering என்றால் ஏற்கனவே நாம் வாங்கி வைத்திருக்கும் பொருட்களில் தேவையில்லாதது எது என்பதைக் கண்டறிந்து நீக்குவதாகும்.

நம் வாழ்வில் நம் முன்னேற்றத்திற்கு தேவையான விஷயங்களைச் செய்வது மட்டும் வெற்றிக்கு வித்திடாது. நாம் செய்துவரும் தீய விஷயங்களை கைவிடுவது மூலமாகவும், வெற்றி இலக்கை அடையும் நேரத்தை அதிகப் படுத்தலாம்.

முதலில் நாம் தங்கியிருக்கும் அறை தான் நம் எண்ணங்களுகாண திறவுகோல் எனலாம். நம்மைச்சுற்றி என்ன பொருட்கள் இருக்கிறதோ அது சார்ந்த சிந்தனைகளும் செயல்களிலுமே நாம் ஈடுபடுகிறோம். உதாரணத்திற்கு எனது அறையில் டிவி,கணினி, மியூசிக் சிஸ்டம் என இவை மூன்றும் இருக்கிறது என வைத்துக் கொள்வோம்.

நான் வெறுமையை உணரும் சமயங்களில் எனக்கு எதிரில் இருக்கும் இவை மூன்றின் மீதுதான் என்னுடைய கவனம் செல்ல ஆரம்பிக்கும். எதையும் செய்யாமல் பாட்டு கேட்பதால், டிவி பார்ப்பதால் எனக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்தால் எதுவும் கிடையாது. இதுவே என்னுடைய அறையில் உள்ள டிவியை, மியூசிக் சிஸ்டத்தை வேறு அறைக்கு மாற்றிவிட்டு, ஒரு புத்தக அலமாரியை எனது அறையில் வைத்தால் நான் என்ன செய்வேன்?

நிச்சயமாக, நான் படிக்கிறேனோ இல்லையோ ஒரு புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்ப்பேன்.

இது போன்று நம்மை நம் செயல்களிலிருந்து திசைத் திருப்பும் விஷயங்களை விலக்கி வைப்பது மிகவும் முக்கியம்.

எனவே உங்களுடைய இலக்கு எதன்மீது இருக்கிறதோ அது சார்ந்த பொருட்களை உங்களுடைய அறையில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அச்செயலை செய்ய வேண்டுமென்று எண்ணத் தூண்டுதல் தான் தொடக்கப் புள்ளியாக அமைந்தது ஒரு ஈடுபாட்டை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதைத்தாண்டி நம்மை திசை திருப்பும் விஷயங்கள் நம் அறையில் இருக்கும் பொழுது, நமக்கு இன்பத்தையே ஏற்படுத்தும் அவற்றின் மீது தான் நம் கவனமானது விரைவில் ஈர்க்கப்படும்.

-படித்தது

Tuesday 1 March 2022

ராஜாஜி

ஆட்சிமாற்றம் வந்த உடனே இப்போது உள்ளதை விட நல்ல அரசோ அல்லது மக்களுக்கு அதிக மகிழ்ச்சியோ ஏற்பட்டுவிடாது.மக்கள் வருத்தத்தோடு பின் நோக்கிப் பார்ப்பார்கள்.ஒப்பு நோக்குகையில் பழைய ஆட்சியில் நீதியும் திறமையும் அமைதியும் நிலவியதை எண்ணிப்பார்ப்பார்கள்.

-ராஜாஜி

படித்தது

உதிர்வதற்கு முன்னாலேயே
பறிக்கப்பட்டு
மலர் வளையமாகியிருக்கும்
மலர்களே!
உங்கள் மரணத்திற்கும் சேர்த்துத்தானா
மெளன அஞ்சலி!

-படித்தது

மானா பாஸ்கரன்

வானம் பார்ப்பதும்
கடல் பார்ப்பதும்
யானை பார்ப்பதும்
ரயில் பார்ப்பதும்
காணாமல் போனது
பிழைப்பைப் பார்ப்பதில்!

-மானா பாஸ்கரன்