Tuesday 28 February 2017

எஸ்.ரா

From Sra`s website

கவிதையைப் பூசிக்கொள்ளுங்கள்

பாரசீகக் கவிஞரான ரூமியின் கவிதைகள் தாகங்கொண்ட மீனொன்று என்ற தலைப்பில் என். சத்யமூர்த்தி மொழியாக்கத்தில் வெளியாகியுள்ளது.
இப்பதிப்பை காலச்சுவடு பதிப்பகம் விற்பனைசெய்கிறார்கள். இது சமீபத்தில் படித்த மிக முக்கியமான கவிதைத்தொகுப்பாகும்.
ரூமியின் சில கவிதைகள் தமிழில் பலராலும் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கின்றன. ஆனால் தேர்வு செய்யப்பட்ட கவிதைகளின் ஒரே தொகுப்பாக, அதுவும் மிக நேர்த்தியாக, ஒவியங்களுடன் துணைக்குறிப்புகளுடன் வெளியாகியிருப்பது இதுவே முதல்முறை. அவ்வகையில் இதைச் சாத்தியமாக்கிய என். சத்யமூர்த்தி மிகுந்த பாராட்டிற்குரியவர்..
கோல்மன் பார்க்ஸ் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்த (THE ESSENTIAL RUMI) ரூமியின் கவிதைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த மொழியாக்கத்தை மேற்கொண்டிருக்கிறார். இரண்டினையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். மிகச்சிறப்பான மொழியாக்கம். ஆழ்ந்த கவிதைவாசிப்பும். மெய்தேடலும் இருந்தால் மட்டுமே சாத்தியமாகக் கூடியது இப்பணி. சத்யமூர்த்தியிடம் இரண்டும் இணைந்திருப்பதால் மொழியாக்கம் மிகச்சிறப்பாக உள்ளது.
••••
ரூமியின் கவிதைகளை எப்படிப் புரிந்து கொள்வது.
தோற்ற அளவில் இவை காதல்கவிதைகள் போல இருப்பதால் எளிதாகப் படித்துவிடலாம் என நினைத்தால் ஏமாந்து போய்விடுவோம்.
ரூமி ஒரு சூஃபி ஞானி. கவிதையின் வழியாக ஞானத்தை வெளிப்படுத்தியவர். ரூமியின் காதலும் பரவசமும் கொண்ட கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கும் அதன் ஞானத்தை மனதில் ஏந்திக் கொள்ளவும் கூடுதல் முயற்சிகள் தேவை..
நான் இக்கவிதைகள் திரும்பத்திரும்பப் பலமுறை வாசித்தேன். பனிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ரூமிக்கும். அதே காலகட்டத்தில் வாழ்ந்த கம்பருக்கும், சேக்கிழாருக்கும், அக்கமகாதேவி, பசவண்ணருக்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர்ந்தேன். ஒருவேளை பனிரெண்டாம் நூற்றாண்டின் துவக்கத்தில் உலகெங்கும் ஆன்மீக எழுச்சி நடந்திருக்கிறது போலும்.
அதை ஒவ்வொரு தேசத்தில் சிலர் வெளிப்படுத்தியிருக்கிறார்கள் எனப் புரிந்து கொள்ளமுடியுமா எனவும் முயன்று பார்த்தேன்.
எப்போதுமே கவிதையைப் புரிந்து கொள்ள நூறு வழிகள் இருக்கின்றன. ஒவ்வொன்றின் வழியாகவும் கவிதை ஒருவிதமாக அர்த்தம் கொள்ளும். அதுவே சிறந்த கவிதையின் அடையாளம்.
சூஃபிக்கவிதைகளை வாசிப்பவர்களுக்கு அதன் எளிமையும் நேரடித்தன்மையும் இதில் என்ன இருக்கிறது என யோசிக்க வைக்ககூடும். அதிலும் குறிப்பாகத் தமிழ் நவீன கவிதைகளை வாசித்துப் பரிச்சயமானவர்களுக்கு இது போன்ற கவிதைகளை வாசிக்கும் போது அதன் களிநடனமும். சந்தோஷப்பீறிடலும் மிகையாகவோ, தட்டையாகவோ தோன்றக்கூடும். காரணம் நாம் நவீனகவிதையை மெய்தேடலில் இருந்து துண்டித்துக் கொண்டுவிட்டோம்.
கவிதையின் உன்னதநிலைகளில் ஒன்று பிரார்த்தனை. நவீன கவிதைகள் அதை உணரவில்லை. பிரார்த்தனையாகும் கவிதை புனிதமடைகிறது. அதன் சொற்கள் ஒளிரத்துவங்குகின்றன. அதிர்ந்து கசிந்துருக வைக்கின்றன.
கடவுளற்ற, அல்லது கடவுளை விலக்கிய உலகமே நவீன கவிதைகளின் மையம். ஆகவே ஆன்மவெளிப்பாட்டினை மையப்படுத்திய மெய்தேடல் கவிதைகளை வாசிக்கும் பலரும் அதைப் பழைய குரலாகக் கருதுகிறார்கள். உண்மையில் ஆன்மீக வெளிப்பாடும். மெய்தேடலும் எல்லாக்காலத்திற்கும் உரியதே. அடையும் வழிகளும் வெளிப்படுத்தும் முறைகளும் மட்டுமே மாறிக் கொண்டிருக்கின்றன.
ஞானம். ஆன்மா. மெய்யுணர்வு. தன்னை அறிவது. தானற்று போவது போன்ற சொற்கள் கவிதையைப் பின்னோக்கி இழுத்துப் போவதாக இன்றைய கவிதைவாசகர்கள் நினைக்கிறார்கள். காரணம் இச்சொற்கள் பொதுவெளியில் சலிப்படையும் வகையில் பகிர்ந்து கொள்ளபட்டதாகும். உண்மையில் இச்சொற்கள் இன்றும் புதிர்களே. இச்சொற்களுக்கான உண்மைப்பொருள் முழுமையாக விளக்கபடவில்லை.
சூஃபி கவிதையில் வரும் ரோஜா என்பது சிருஷ்டியின் அழகைச் சுட்டுகிறது. ரோஜாத் தோட்டம் என்பது சொர்க்கத்தின் குறியீடு. சூரியன் என்பது ஞானத்தின் அடையாளம். வானம்பாடி என்பது ஆன்மாவின் உருவம். வசந்தம் என்பது ஒன்றுகூடலின் குறியீடு. இப்படிச் சூஃபி கவிதைகளின் சங்கேதங்கள் அக்கவிதைகளை உயர் தளத்திற்கு எடுத்துப் போகின்றன
••••
ஒரு துளி அத்தரை உங்கள் உடலில் பூசிக் கொள்வதன் மூலம் நீங்களும் மணக்கத்துவங்குவீர்கள். உங்கள் அருகில் வருபவர்கள் ரோஜா மணத்தை உணருவார்கள். ஒருவகையில் நீங்கள் நடமாடும் ஒரு ரோஜாமலர்.
சூஃபிக்கவிதைகளும் அத்தர் போன்றதே. கவிதை தரும்  வாசனை புறத்தில் மட்டுமில்லாமல் அகத்திலும் புத்துணர்வு ஏற்படுத்தும். சூஃபிக்கவிதைகளை வாசிப்பது என்பது நறுமணத் தைலத்தை நுகர்வதைப் போன்றதே. பூசிக் கொள்வதைப் போன்றது. ஒன்று கலத்தலே அக்கவிதைகளின் நோக்கம். அத்தர் வாசனை எப்படி நம்மை மயக்குகிறதோ அது போன்றதே சூபி இசை.  இந்த இரண்டும் கலந்ததே சூஃபி கவிதைகள்.
மெய்தேடலை மையமாகக் கொண்ட இக்கவிதைகள் புறத்தோற்றத்தில் எளிய காதல்கவிதைகளைப் போலவே தோன்றும். அதே சொற்களைக் கையாளும். ஆனால் சுட்டும் பொருள் வேறு.
இக்கவிதைகள் பேசும் காதல் உடல் சார்ந்ததில்லை. கவிதையில் வரும் பெண்ணும் குறியீடே. காதலின் ஏக்கம் என்பது உடல்சார்ந்த வேட்கையில்லை. விடுதலையுணர்விற்காக தேடலே இக்காதலின் நோக்கம்.
சூஃபிக்கவிதைகள் நிசப்தத்தின் சங்கீதத்தைப் பேசுகின்றன. மௌனத்தின் வசீகரத்தை, ஆழத்தை, அவசியத்தை வலியுறுத்துகின்றன. காரணம் மௌனத்தில் மனிதன் பிரபஞ்சஜீவியாகயிருக்கிறான் என்பதே. பேசாத போதும் அவனுக்கும் மரத்திற்கும் ஒரு வேறுபாடுமில்லை. தன்னிருப்பில் இரண்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனதன் இயல்பு அதற்கு.
சூஃபிக்கவிதைகள் நான் அற்ற நிலையைச் சுட்டிக்காட்டுகின்றன. என், எனது என்ற. இருத்தலை பிரபஞ்ச ரீதியாக ஒன்றிணைக்கின்றன.
ஜென் புத்தமரபில் koan எனப்படும் புதிர்களுக்கு முக்கிய இடமிருக்கிறது. இந்தபுதிர்களை அவிழ்க்க முற்படுவது சீடர்களின் வேலை. தீர்க்கமுடியாத பெரும்புதிர் நமது பிறப்பு. அதிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஞானத்தேடலை விடை. ஒரு புதிரை யோசிக்கச் செய்து அதன் வழியே யோசனைகளே அற்றுப்போக வழி செய்ய ஜென் முயற்சிக்கிறது. ஒரு புதிருக்கு விடை கண்டுபிடிப்பதை விட அதன் வழியே ஏற்படும் தரிசனத்தை. சடாரென நிகழும் ஒரு பிரகாசத்தைச் சுட்டிக்காட்டுவதே அதன் நோக்கம்.
இதே தூண்டுதலைத் தான் சூஃபிக்கவிதைகளும் நிகழ்த்துகின்றன. ஆனால் புதிர்களைக் கொண்டல்ல. மாறாக இன்பத்தைக் கொண்டு. களிப்பையும் சந்தோஷத்தையும். நடனத்தையும் கொண்டு. இருத்தலின் மர்மத்தைப் பேசுகின்றன.
பிரபஞ்சத்தைக் கேள்வி கேட்கும் கவிதைகள் ஒருவிதம், அவை ஏன் பிரபஞ்சம் கருணையற்றதாக, மூர்க்கமாக இருக்கிறது என விவாதிக்கின்றன. ஆனால் சூஃபிக்கவிதைகளோ பிரபஞ்சத்தை எந்தக் கேள்விகளுமற்று ஆரத்தழுவி கொள்ளுகின்றன. உலகின் வேறுபாடுகளோ, பிரிவினைகளோ வெறும் புறத்தோற்றங்கள் எனக் கருதுகின்றன. கவிதையைத் தியானமந்திரம் போன்றதாக மாற்றுகின்றன.
சிறார்கள் தட்டாமாலை சுற்றும் போது திடீரென வானம் தரையிறங்குவது போன்ற உணர்வு உண்டாகும். சுற்றிசுற்றி வந்து அதன் உச்சத்தில் சட்டென உலகம் துண்டிக்கபடும். சரிந்து விழுவார்கள். அந்த அனுபவத்தையே தியானித்தபடியே சுழன்றாடும் சமா நடனமும் மேற்கொள்கிறது. தன்னை அறியாமல் சிறுவர்கள் மேற்கொள்ளும் விளையாட்டினை அறிந்து மேற்கொள்ள வைக்கிறது சூபியின் களி நடனம். ரூமி இந்த நடனத்தை ஆடக்கூடியவர். அவரது கவிதையும் சுழன்றாடும் ஒரு நடனமே.
கவிதைகளின்
உள்ளிருக்கும்
துடிப்புகளைக் கேள்
அவை விரும்பும் இடத்திற்கு
உன்னை அழைத்துச் செல்லட்டும்
உனக்கென விடுக்கும்
சமிக்ஞைகளை
தொடர்ந்து கொண்டே இரு
அதன் அருகாமையை
நழுவவிடாதே
ஒரு போதும்.
என்ற இத்தொகுப்பின் முதற்கவிதை அனைத்துக் கவிதைகளுக்குமான சாவியைப் போன்றது. இதைக் கொண்டு தான் ரூமியின் மற்றகவிதைகளை எளிதாகப் புரிந்து கொள்ளமுடியும்.
கவிதைகளின் பின்னே பயணிக்க விரும்புகிறவன் கவனமாக அதன் சமிக்ஞைகளைத் தொடர்ந்து கொண்டிருக்க வேண்டும் என்பது கவிதைகளைப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழிகாட்டல்.
கவிதை சில சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறது. அதை நழுவிவிட்டால் கவிதையின் மேற்பரப்பை தாண்டி எதுவும் நமக்குப் புரியாமல் போய்விடும். கடலை கண்ணால் பார்த்து மட்டுமே ரசிப்பவனுக்கு அதன் உப்புருசி எப்படிப் புரியும்.
ரூமி போன்ற சூஃபி கவிஞர்கள் கவிதையை ஒரு ஊடகமாகவே பயன்படுத்துகிறார்கள். உண்மையில் கவிதை என்பது ஒரு நீராலான கோப்பை. நீரே கோப்பையாக உருக்கொண்டிருக்கிறது. திரவமாகத் ததும்பவும் செய்கிறது. இது  அன்றாடம் பயன்படுத்தும் தண்ணீரில்லை. மாறாக ஒரு ரகசிய நீர். ரகசிய மது. ரகசிய ஊற்றில் சுரக்கும் நீர். ஒளியே நீராகவும் மாறுகிறது.
எலியும் தவளையும் என்ற ஈசாப் கதையை ரூமி அற்புதமான கவிதையாக உருமாற்றியிருக்கிறார். அதீதகாதலின், நெருக்கத்தின் அடையாளமாக எலியும் தவளையும் மாறிப்போகின்றன
தீராத உரையாடல் என்ற கவிதையும், பாறையும் மதுக்கிண்ணமும் கவிதையும் காதலின் தவிப்பை தீவிரமாக வெளிப்படுத்துகின்றன.
காதல்
எனது பழக்கங்களைப் பறித்துக் கொண்டு
கவிதையால்
என்னை நிரம்பி வழியச் செய்தது
என்ற ரூமியின் மிதத்தல் கவிதை அவரது பிற கவிதைகளின் உருவாக்கத்தைப் பேசும் வரிகளாகும்.
ஒரு மலை தனது அடியாழத்தினுள்
ஒரு பேரொலியைத் தக்க வைத்திருக்கிறது
உனது குரலை
நான் வசப்படுத்தி வைத்திருப்பதும்
அவ்வாறே
என விரியும் அக்கவிதை காதலின் குரல் நமக்குள்ளே எதிரொலித்துக் கொண்டேயிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது
சூரியனைப் போற்றுவதென்பது
நீ உனது கண்களைப் போற்றிக் கொள்வதேயாகும்
என்ற வரியின் வழியே காதல் என்பது தன்னிலையின் கொந்தளிப்பு. தனக்குள்ளே தானே முயங்கும் செயல். அதற்கு வெளித்தூண்டல் தேவை என்றாலும் தன்னிலே அது சுழன்று உழலுகிறது என்பதையே ரூமி அடையாளப்படுத்துகிறார். காதலின் பித்துநிலை என்பது ஒரு சுதந்திரம். காதலின் கண்கொண்டு பார்ப்பவர்களுக்கு மட்டுமே அது புரியக்கூடும்.
காற்றுக்குக் காதல்
கொடி தாங்கும் கம்பத்தின் மீதே
கொடி மீதல்ல
காதலின் சாரம்
அதுவே
என ஒரு கவிதை முடியும் போது உலகம் அறிந்துவைத்துள்ள காதலைப் போன்றதில்ல தான் சொல்வது,  காதல் என்பது கடவுளை அடையும் வழி என உணர்த்துகிறார் ரூமி.
காதால் காணவும்
கண்ணால் கேட்கவும்
கற்றுத் தந்தது
காதல்
என்கிறார் கலீல் ஜிப்ரான், இந்த அனுபவமும் ரூமியிடமிருந்து பெற்றதே.
ரூமியின் கவிதைகள் அன்றாட வாழ்வின் எளிமையை ரசித்துச் சுவைக்கவும், உலகின் பெருங்கருணையை அடையாளம் காணவும் உதவுகின்றன
இத்தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கவிதை வாசலில் ஒரு டெர்வீஷ். மனித உறவை பேரப்படுத்தாத ஒரு துறவியின் வருகையைப் பற்றியது. ஜென் கதைகளில் ஒன்றைப் போலவே இருக்கிறது.
இன்னொருகவிதை இப்படித்துவங்குகிறது
உலகின் ஒரு பகுதி
இந்த உலகைவிட்டு
எப்படிப் பிரியும்
நீரிலிருந்து ஈரம்
பிரியுமா என்ன
பிரிவற்ற காதலை முதன்மைபடுத்துகிறார் ரூமி. காதல் தனக்குள்ளே நீக்கமற்று சாரமென பரவியிருப்பதை விளக்குகிறார்.
தாகங்கொண்ட மீனொன்று இத்தொகுப்பின் மிக முக்கியகவிதைகளில் ஒன்று. இக்கவிதையில் வரும் மீன் என்பது உயிரின் மூலாதாரத்தின் குறியீடு.
சலிக்கவில்லை நீ எனக்கு
என்மீது பரிவுகாட்டிப் பரிவுகாட்டி
நீயும் அலுத்துப் போகாதே
நீர்க்குடுவை
நீர்க்கலயம்
தாகம் தீர்க்கும் இக்கலன்கள் யாவும்
சோர்ந்து போயிருக்கும் நிச்சயம்
தாகமுள்ள மீனொன்று என்னுள் இருக்கிறது.
ஒரு போதும் கூடவில்லை அதற்கு
முழுத்தாகமும் தணிக்க
என நீள்கிறது இக்கவிதை. பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது.
ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் ஒரு தியானப்பயிற்சியே. இப்பயிற்சியின் வழியே ஒருவர் ஞானத்தின் ரகசியத் தோட்டத்திற்குள் நுழைகிறார். விசித்திரங்களை அறிந்து கொள்கிறார்.
சத்யமூர்த்தியும் அதையே செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

நரன்-நன்றி பாரத்

💥அப்பா சிறுநீரக கோளாறால் இறந்தார் .
புதைபட்டப்பின் கல்லறைக்குள்ளும் அப்படித்தானா  தெரியவில்லை  .
கல்லறையின் வெளியே நீர் கசிவு இருக்கிறது .

💥அம்மா இறுதி தருவாயில் மூட்டு நோவினால் அவதிப்பட்டாள்.
கல்லறைக்குள்ளிருந்து மேல் நோக்கி வீங்கி இருப்பது
அவளின் மூட்டாய் கூட இருக்கலாம் .

💥கிருபாகரன்  டாக்டரின் கல்லறை  தென் கடைசியில் இருக்கிறது .
அவரின் கல்லறையை சுற்றிலும் தான் எல்லா கல்லறைகளும் ...

💥இன்னும் டோக்கன் நகர மாட்டேனென்கிறது .

-நரன்.

ரூமி

ஒளி அதன் மூலத்திற்குத் திரும்பும்போது
தான் ஒளிரச் செய்த எதையுமே
எடுத்துச் செல்வதில்லை
- ரூமி

மகுடேசுவரன்

தியானம் என்பதற்கான தமிழ்ச்சொல்லாக “நினைத்தல், வழிபடல்” ஆகிய சொற்களை வடசொற்சருக்கத்தில் தி. நீலாம்பிகை அம்மையார் கூறுகிறார்.

‘மனங்குவித்து, விடாது எண்ணல்’ என்பது அச்சொல்லின் பொருளாகலாம். ‘இடையறாத ஆழ்நிலைக் கூர் எண்ணம்’ என்று தியானத்தை விளங்கிக்கொள்கிறேன்.

இங்கே தியானம் என்பதற்குரிய தமிழ்ச்சொல்லை வள்ளுவரே தருகிறார்.

வள்ளுவர் பயன்படுத்திய ‘தவம்’ என்ற சொல்லைத்தான் தியானத்திற்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்லாகக் கருத வேண்டும்.

’தவம்’ தமிழ்ச்சொல்லே. ஏனென்றால் ‘தவ்’ என்பதை  முதல்நிலையைக் கொண்டு ஓரினப் பொருள்களால் ஆன எண்ணற்ற சொற்கள் தமிழில் வழங்குகின்றன. அவை எவை ?

‘தவர்தல்’ என்னும் வினைச்சொல் இருக்கிறது. தவர்தல் என்றால் ‘துளைத்தல். ‘ஒன்றைப் பற்றிய நிலையிலிருந்து மேலும் ஆழ்தலே’ தவர்தல். 

இன்னொரு வினையான ‘தவழ்தல்’ என்பது ‘ஒன்றின்மீது படிந்தபடி மெல்ல நகர்தல்.’ இங்கே பற்றிய நிலையானது  சிறு நகர்ச்சிக்கு உட்படுகிறது.

ஏறத்தாழ தவழ்நிலையிலேயே உள்ளதைப் போன்று தோற்றமளிக்கும் உயிரினம்தாம் ‘தவளை’. தவளை மட்டுமே ஓரிடத்தில் ஆண்டுக்கணக்கில் நீரும் உணவுமின்றி இறுகப்பற்றிய அசையா நிலையில்   வாழக்கூடியது. தவளையின் வாழ்நிலை ஒரு தவநிலை. 

ஒன்றை இறுகப் பற்றிய தோல்போன்ற நிலையில் இருந்ததுதான் ‘தவிடு’.

ஒன்றின்மீதிருந்த பற்றுநிலை, படிநிலை, நிரல்நிலை அழிந்த தன்மைதான் தவ் அறு = தவறு.

அந்நிலையை நீங்குதல்தான் தவ்+இர் = தவிர். தவிர்த்தல். பற்றிய நிலையினின்று விடுபடல். நீங்குதல்.

ஆழ்ந்து பற்றியிருந்த ஒன்றின்மீது ஏற்படும் துன்பநிலைதான் ‘தவிப்பு’.

ஆக, “தவ்” என்னும் முதல்நிலை, பயன்பாட்டில் அருகிய வினைச்சொல் ஒன்றின் தமிழ்வேராக இருக்கிறது. தவ் என்னும் அந்த அசை. எண்ணற்ற சொற்களுக்கு வேராக இருத்தலைக் காண்கிறோம்.

வள்ளுவர் பயன்படுத்திய தவம் என்பது “ஒன்றைப் பற்றியபடி இடையறாது ஆழ்ந்து நிலைத்திருக்கும்” செயலை விளக்குகின்ற தியானத்திற்குரிய நற்றமிழ்ச்சொல்லே.   

- கவிஞர் மகுடேசுவரன்

பாதசாரி

காலம் என்பது ஒரு தூரம்..தூரம் என்பது ஒரு இடம்...இடம் என்பது ஒரு உணர்வு...உணர்வு என்பது ஒரு அசையும் எண்ணம்...எண்ணம் என்பது உயிரின் சலனம் ...உயிர் என்பது தூங்காமல் இருப்பது...தூக்கம் என்பது உறைக்காத சாவு...!

-பாதசாரி

அழகு-நவீன்

அழகு என்றால் என்ன?அழகு என்பது பார்ப்பவரின் கண்களிலா இருக்கிறது? நீங்கள் ஒன்றை கவனித்திருக்கிறீர்களா? அதாவது, சுட்டித்தனமாக விளையாடிக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையிடம் ஒரு அழகான பொம்மையைக் கொடுத்துப் பாருங்கள்! அவன் கவனம் முழுவதும் பொம்மையில் திரும்பி விடுகிறது. விஷமம், விளையாட்டு எல்லாம் ஓய்ந்து, அவன், தன்னை மறந்து, பொம்மையின்பால் ஈர்க்கப்படுகிறான்.ஒருவர்,கவிதை ஒன்றில் தன்னை மறப்பதும், ஓவியத்தாலோ, அழகிய முகத்தோற்றத்தாலோ கவர்ந்திழுக்கப்படுவதும் உண்டு. இந்த ஈர்க்கப்படுதல், தன்னை மறத்தல்தான் அழகு என்பதா? பனிமுகடும் உறைபனியும்கூடிய அற்புதமான மலை ஒன்றை, நீல வானத்தின் பின்னணியில் பார்க்கும் பொழுது, மலையின் கம்பீரத்தை, நான் வியந்து பார்க்கும் அந்த கணப்பொழுதிற்கு, 'நான், எனது' என்ற உணர்வு, என் பிரச்சனைகள், கலக்கங்கள் ஆகியவை மறைந்து விடுகின்றன. பெரும்பாறைகளின் கம்பீரத்தையும் பள்ளத்தாக்குகளின் அழகையும், ஆறுகளையும் ரசிக்கும் அந்த நேரத்தில், 'நான், எனது' என்ற உணர்வு இருப்பதில்லை. பொம்மையால் குழந்தை அமைதியானது போல, மலை, நமது தன்னுணர்வை விரட்டி விட்டது. ஆக, மலையும், ஆறும், நீல நிறமாய் இருக்கும் பள்ளத் தாக்கும் ஒரு நொடிப்பொழுதிற்கு, உங்கள் பிரச்சனைகள், உங்கள் தற்பெருமை, கலக்கங்கள் எல்லாவற்றையும் துரத்திவிடுகிறது. அப்போது ‘எவ்வளவு அழகாய் இருக்கிறது’ என்று வியந்து சொல்கிறீர்கள். வெளியிலிருக்கும் ஒன்றால் ஈர்க்கப்படாமல், அதே சமயத்தில் அழகு  இருக்கமுடியுமா? அப்படி இருக்க முடிந்தால் அங்குதான் உண்மை அழகு இருக்கிறது. அதாவது,   வெளியிலிருக்கும் ஒன்றால் ஈர்க்கப்படாமல்  எங்கு  'நான், எனது' என்ற தன்னுணர்வு இல்லையோ,  அங்குதான் அழகு இருக்கிறது.

திருக்குறள்

திருக்குறள் எழுத்துக்கள் அமைப்பின் சில சுவையான தகவல்கள் !
                           
14000 சொற்கள் ,42194 எழுத்துக்களைக் கொண்ட திருக்குறள்
தமிழின் முதல் எழுத்தான "அ" வில் தொடங்கி தமிழ் எழுத்த்துக்களின் கடைசி எழுத்தான "ன்" முடிந்திருக்கிறது.!
"னி" என்ற எழுத்து 1705 தடவை பயன்படுத்தபடுள்ளது !
"ங் " ளி" எனற எழுத்துக்களை ஒரு முறைதான் பயன் படுத்தப்பட்டுள்ளது !
பயன்படுத்தப்படாத ஒரே உயிர் எழுத்து "ஒள"!
தமிழ் எழுதுக்கள் 247ல் 47 எழுத்துக்கள் பயன்படுத்தப்படவில்லை!

குறளில் எண்களின் தாக்கம் !

1,2,3,4,5,6,7,8,10 என்ற எண்களோடு தொடர்புடைய குறள்கள் இருந்தும் எண்-9  வரும் குறள்கள் எதுவும் இல்லை!.
எண்- 7 அதிகம் தொடர்புடையதாக உள்ளது குறள் !
.குறடப்பாக்கள்  7 சீர்களை உடையது.!
மொத்த அதிகாரங்களின்(133) கூட்டுத்தொகை 7 !
அறத்துப்பால் அதிகாரங்களின்(34) கூட்டுத்தொகை -7 !
பொருட்பாலின் அதிகாரங்களின் (70)  கூட்டுத்தொகை -7 !
இன்பத்துப்பாலின் அதிகாரங்களின்  கூட்டுத்தொகை -7 !
குறட்பாக்களில் 8 முறை வருகிற எண் -7 !
.கோடி என்ற சொல்  7  முறை வருகிறது !
எழுபதுகோடி என்பது ஒரு முறை வருகிறது !

@manipmp

காய்க்காத பழம் கல்லடி பட்டது
"கார்ஃபைடு கல்லால்"!

ஜே.கே

வாழ்க்கை எப்போதும் மந்தமாக இருப்பதில்லை.மனிதன் சில பிராயங்களில் மந்தமானவனாக இருந்து விடுகிறான்
-ஜெயகாந்தன்

சுஜாதா

*வாத்தியாரின் கடைசி வரி குறும்பு*

💥 வாலிபமே நிரந்தரமாக இருந்தால் ?
*போரடிக்கும்…*

💥வயதானதால் ஞாபக சக்தி குறையுமா சார் ?
*ஞாபகங்கள் கூடும். ஞாபக சக்தி குறையும்.*

💥பல்செட்டிலுள்ள பற்கள் கூசுமா ?
*தெரியவில்லையே. உங்களுக்குக் கூசுகிறதா என்ன ?*

💥சுஜாதாவின் (ரங்கராஜன் இல்லை சார்!) இளமையின் ரகசியம் என்ன ?
*யாண்டு பலவாகியும் நரையிலன் ஆகுதல். மீண்டும் மீண்டும் dye அடித்துக் கொள்வதால்.*

💥தள்ளாத வயது என்பது எது ?
*இளம் வயதுதான்! உப்பு, சர்க்கரை, எண்ணெய் எதையும் நீக்கித் தள்ளாமல் எல்லாவற்றையும் சாப்பிடலாம். முதுமை இவற்றையெல்லாம் விலக்கித் தள்ளும் வயது.*

💥ஒரு மனிதன் எந்த வயது வரை இளைஞனாக வாழ முடியும் ?
*இறக்கும் வரை!*

💥ஒருவன் எப்போது வயதாகி விட்டது என்பதை அப்பட்டமாக உணர்கிறான் ?
*பக்கத்து வீட்டுப் பெண் பதற்றமில்லாமல் பக்கத்தில் உட்கார்ந்து பேசும்போது!*

💥 வயதாக ஆக ஒரு விதமான அமைதி வருகிறதே, எதனால் ?
*அது அமைதி இல்லை; ஆயாசம்.*

💥நீங்கள் சிகரெட் பிடிக்க ஆரம்பித்ததற்கும், அதை விட்டதற்கும் என்ன காரணங்கள் ?
*ஆரம்பித்ததற்கு இளமை காரணம்; விட்டதற்கு இதயம் காரணம்.*

💥இவ்வளவு வயதாகியும் தாங்கள் இளமை மாறாமல் இருப்பதன் ரகசியம் என்ன ?
*தங்களைப் போன்ற இளைஞர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியிருப்பதே.*

💥இளமையில் ஜொலித்த சினிமா இயக்குனர்களில் சிலர், முதுமையில் வெற்றி பெற முடியாமல் போவது ஏன் ?
*முதுமை அவர்கள் சினிமாவிலும் தெரிவதால்.*

💥இந்த உலகத்தில் நிம்மதியான மனிதர்கள் யார், யார் ?
*ஆரோக்கியமுள்ளவர்கள் மட்டுமே.*

💥பக்கத்து வீட்டுப் பெண் பார்க்கும்போதெல்லாம், ஒரு மாதிரி ஆகி விடுகிறதே, அது ஏன் ?

*வீடு மாற்றுங்கள்.*

💥பிரிட்னி ஸ்பியர்ஸ், ஜென்னிஃபர் லோபஸ் கேட்பதுண்டா ?

💥அவர்கள் கேட்பதற்கல்ல,
*பார்ப்பதற்கு.*