Wednesday 25 April 2018

மினிமீன்ஸ்

[22/04, 2:15 pm] மினிமீன்ச்: என் எழுத்துக்கள் புரியவில்லை என்கிறார்கள்.
இருந்துவிட்டு போகட்டுமே, எழுதுபவனுக்கே எல்லாம் புரிந்துவிடுகிறதா என்ன?

-லாசரா
[22/04, 2:15 pm] மினிமீன்ச்: அம்மா என்றால் ஒரே அம்மா தான்.
உன் அம்மா, என் அம்மா எனத் தனித் தனி அம்மாக்கள் கிடையாது.
ஒரே அம்மா.!

-லாசரா
[22/04, 2:15 pm] மினிமீன்ச்: கேட்பாய்
கேட்பாய் என
சொல்லாதிருந்தவை
சொல்வாய்
சொல்வாய் என
கேட்காதிருந்தவை
வேறொன்றுமில்லை
ரகசியமென்றும்
இடைவெளியென்றும்!

-மனுஷ்ய புத்திரன்
[22/04, 2:16 pm] மினிமீன்ச்: சருகை மிதிக்கும் போது சத்தம் போடும் நாங்கள்...
மலரை மிதிக்கும் போது மௌனம் சாதிக்கிறோம்.!

#செருப்புடன் ஒரு பேட்டி
-மு.மேத்தா

வண்ணதாசன்

வண்ணதாசன் எனும் இதயம் கொய்பவனின் எழுத்துக்கள் ....

____

என்னை உத்தேசித்து தானே
சாணை பிடித்தாய்.
அப்புறம் என்ன?
பாய்ச்சிவிட வேண்டியதுதானே
அடி வயிற்றில்.

***

அத்தனை நெருக்கமான தென்னந்தோப்பு.
உச்சியிலிருந்து கழன்று விழுகிறது
ஒரே ஒரு உலர்ந்த தோகை
தூரத்துத் தொடர்மலை ஒரு நொடி திடுக்கிட,
எதிர்த் தென்னையில் ஏறுகிறது அணில்.

***

அல்லிக் குளத்தைத் தாமரைக் குளம் என்று
யாரும் சொன்னால் தப்பே இல்லை.
அவர்களுக்குள்  இருக்கும்  தாமரைக் குளத்தை
நமக்கு அப்படித்தானே காட்ட முடியும்.

***

இங்கும் அங்கும் நகர்ந்து
படங்கள்   எடுக்கிறவர் புறங்கையில்
உதிர்ந்த புளிய இலை ஒன்று அப்புகிறது.
இதுவரை எடுத்த படங்களில் விடவும்
இனிமேல் படங்களில் அழகாய் இருப்பேன்.

***

சலவைக் கடையில் இருந்து
நடந்து வரும் வழி அது.
ரொம்பப் பக்கத்தில் தெரிந்தது.
நேற்று அல்லது நாளைக்கு
இடைப்பட்ட முழுநிலா.
வீட்டுக்குப் பதிலாக இப்போது
நிலாவிடம் போய்க்கொண்டிருக்கிறேன்.

****

அழகான சிறு கல் அது.
நழுவி விழுந்தது
பார்த்து ரசித்தபடி இருக்கையில்.
தேடிக் கையில் எடுத்ததும்
முதலில் பார்த்தது எந்தப் பக்கத்தை
என்று தெரியவில்லை.
தெரிந்தால் பார்த்துவிடுவேன்
கல்லின் எல்லாப் பக்கத்தையும்.

****

பித்த வெடிப்புப் பாதங்கள் உள்ளவரின் விரல்கள் பற்றி

எந்தக் களங்கமும் படியாத பிஞ்சுப் பாதங்கள்
நடந்துபோய்க்கொண்டு இருக்கிறது இந்தச் சனிக்கிழமை மேல்.

கண்ணுக்குத் தெரியாத அதன் தத்தக்காச் சுவடுகளில் நடக்கமுயலும் ஒருவனின்

எதிரில்தான் நீங்கள் வந்துகொண்டு இருக்கிறீர்கள்.

****

பார்க்காத போது பெய்த மழையில்
உடைந்த சிலேட் நிறத்தில் தண்டபாணி தெரு.
உலரும் ஈரத் தீற்றலுடன்  நகரும் ஏழு மணியின் பட்டைத் தூரிகை
விட்டுவைத்திருக்கும் வாதாம் இலையளவு மழைத் தேங்கல்.
இந்த நாளின் தலைகீழ் பிம்பத்தைப் பார்க்கக்குனிகிறவன்
மாநகரத்திற்கு வெளியே இருந்து வந்திருப்பவன்.
கூலிப்படை போல வெட்டிச் சாய்த்துவிட்டுப் போகும் ஆட்டோச் சக்கரங்களினடியில்
நசுங்கிக் கிடக்கிறது நேற்றெனும் மற்றொரு நாள்.

****

__ வண்ணதாசன்

மகுடேசுவரன்

ஆகிய, முதலிய, போன்ற - இந்த மூன்று சொற்களுக்கும் இடையே என்ன வேறுபாடு ?

ஆகிய, முதலிய, போன்ற – இச்சொற்கள் அடுத்து ஒரு பெயர்ச்சொல்லால் மட்டுமே பின் தொடரப்படவேண்டும் என்பதால் பெயரெச்சம் எனலாம்.

சனி ஞாயிறு திங்கள் ஆகிய நாள்களில் நாங்கள் உதகை சென்றிருந்தோம்.

சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்களும் தமிழ் மாதங்களாம்.

ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது.

ஆகிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை முழுமையாகத் தொகுக்கப்பட்டுவிடுகிறது. சனி ஞாயிறு திங்கள் – இந்த மூன்று நாள்கள் மட்டுமே தொகுப்பில் இருக்கிறது. சனிக்கு முன்புள்ள வெள்ளியோ திங்களை அடுத்துள்ள செவ்வாயோ இத்தொகுப்பில் உடன்வர இயலாது. தொகுக்கப்பட்ட முழுமையான பட்டியல் என்றால் ஆகிய போடுக !

முதலிய என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஒரு தொகுப்பின் முதல் சில பெயர்களாகும். சித்திரை வைகாசி முதலிய பன்னிரண்டு மாதங்கள். அ ஆ இ ஈ முதலிய உயிரெழுத்துகள். இந்தப் பயன்பாட்டில் தொகுக்கப்பட்டுள்ளவை ஒரு நீள் சங்கிலியின் முதல் சில கண்ணிகள். அவற்றை அடுத்து வரிசையில் மீதமுள்ளவை உள்ளன என்று பொருள் கொள்ளவேண்டும்.

போன்ற என்கின்ற பயன்பாட்டில் முன்னால் சொல்லப்பட்டவை ஏதாவது ஒரு வகையில் உவமை கொள்ளத்தக்க, இனமாகக் கொள்ளத்தக்க, நிகரான ஒன்றாக இருந்தால் போதுமானது. ஆடு மாடு போன்ற கால்நடைகளை வளர்த்தால் நல்ல இலாபமிருக்கிறது. தி.மு.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் தமிழ் நாட்டில் இருக்கின்றன.

தொல்காப்பியம் நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் உள்ள எழுத்திலக்கணம் சொல்லிலக்கணம் முதலிய பகுதிகளைக் கற்றால் ஒழிய இதைப் போன்ற ஐயங்களிலிருந்து விடுபடுவது அரிது.

-மகுடேசுவரன்

பகிர்ந்தது

மேகம் மழையாய் இறங்கியபோது, நனைந்து சிலிர்த்த பூமி சொன்னது "பெருமை மேலே ஏறுவதில் இல்லை கீழே இறங்குவதில் இருக்கிறது"
-அப்துல்ரகுமான்

மனம் ஒரு பாத்திரம்

மனம் ஒரு பாத்திரம்
ஆனால் விசித்திர பாத்திரம்

ஆசைகளை அதில் போட்டால்
அடிப்புறம் கழன்று கொள்ளும்
ஒரு நாளும் நிறையாது

துயரங்களைப் போட்டால்
பாத்திரம் தாங்காமல்
உடைந்து போகும்

காதலைப் போட்டால்
பாத்திரம் சிறகு முளைத்துப்
பறக்கத் தொடங்கும்

பொறாமையைப் போட்டால்
பாத்திரம் ஆத்திரமாகி
மேல் மூடி காணாமல் போகும்

...
அது நிறைவாய் இருக்க...
காலியாய் வைத்திடு

-சிற்பி

எளிமையை பற்றி பேசவும் எழுதவும் தாம் தயங்குவதில்லை,ஆனால் அப்படி வாழத்தான் தயங்குகிறோம்
-மு.வ

தோட்டத்தில் தன்னை அழித்தவன் வீட்டுக்கே தோரணம் ஆனது வாழை! நீயும்
நாட்டினில் உன்னை அழித்தவன் காலையே
நக்கினாய் நீ ஒரு கோழை!

-காசி ஆனந்தன்

யாத்திரி

தோழி எப்போதும் தோழிதான் அவளைக் காதலிக்க முடியவே முடியாது. முடியும் என்றால் காதலை அடைய நட்பை ஒரு வழியாகப் பயன்படுத்துகின்றிர்கள். அல்லது உங்களுக்குள் இருந்த ஈர்ப்பை நட்பென்று அடையாளப்படுத்துகின்றிர்கள்.

கண்டதும் காதல் போல் கண்டதும் நட்பு சாத்தியமே இல்லை. 
பட்டும் படாத பழக்கத்தில் துவங்கி அதிக முக்கியத்துவம் வழங்கப்படாமல் இருவரும் இருவரைப் பற்றியும் அதிகமாகக் கருத்தில் கொள்ளாமல் அதன்போக்கில் அதுவாகவே நிகழும் ஒன்று. 
நட்பு தன்னை பிரகடனப்படுத்தவே செய்யாது.
கண்டறியவும் முடியாது. தேவையும்இல்லை. 
காலம் தந்த பிணைப்பிற்குள் வேறுபட்ட கருத்துகளோடு ஒருமித்துக் கிடக்கும் போது, உங்கள் best friend யாரென்று கேட்டால். முதலில் நினைவுக்கு வந்த இந்த நாய எதுக்கு சொல்லிக்கிட்டு வேற யாரையாவது சொல்லலாம் என்று மனம் யோசிக்கும். அந்த நாய்க்கும் நமக்கும் இருக்கக்கூடியதுதான் நட்பு. முக்கியத்துவம் வழங்காத எதிர்பார்க்காத நிர்பந்திக்காத சுதந்திரம் கிடைக்கும் இடம். அந்த நாயிடம் மட்டும்தான்.

ஓரமா போ சனியனே என்று அவனும்
இடிக்காம வாடா எரும என்று அவளும் 
சாலையில் விளையாடி 
கடைசியில் கைகள் கோர்த்து தோள்சேர
நட்பினைக் கொண்டாடிச் செல்வார்கள்.
தூரமாய் இருந்து பார்க்கும் கண்களுக்குத்தான் குழப்பம் எல்லாம். அவர்கள் இருவரையும் புரிவதற்கு நட்பிற்குள் இருந்தாலொழிய பிறவழிகளில்லை.

காலஓட்டத்தில் வாழ்க்கைப் பாதை மாறி இவர்கள் இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்தாலும் பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு முன் அவர்களிடம் ஒரு கேள்வி இருக்கும்,
''நீ இன்னும் சாவலியா?''

அவ்ளோதான் சார் நட்பு

-யாத்திரி

பாரதியார்

பாரதியாரின் முதல் சிறுகதை ஆறிலொரு பங்கு சுருக்கமாக..

நாம் நமக்குள்ளேயே ஒரு பகுதியாரை நீசர்கள் என்று பாவித்தோம். இப்போது நம் எல்லோரையுமே உலகத்தார் மற்றெல்லா நாட்டினரைக் காட்டிலும் இழிந்த நீசர்களாகக் கருதுகிறார்கள். நம்முள் ஒரு வகுப்பினரை நாம் தீண்டாத வகுப்பினர் என்று விலக்கினோம். இப்போது வேத மார்க்கஸ்தர், மகம்மதியர் என்ற இரு பகுதி கொண்ட நமது இந்து ஜாதி முழுவதையுமே உலகம் தீண்டாத சாதி என்று கருதுகிறது. உலகத்தில் எல்லா சாதியரிலும் வகுப்புகள் உண்டு. ஆனால், தீராத பிரிவுகள் ஏற்பட்டு சாதியை துர்லபப்படுத்திவிடுமானால், அதிலிருந்து நம்மைக் குறைவாக நடத்துதல் அந்நியர்களுக்கு எளிதாகிறது. `ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.'

`ஆயிரம் உண்டிங்கு சாதி; எனில், அந்நியர் வந்திங்கு புகல் என்ன நீதி' என்று கவிதையில் ஆங்கிலேயரை நோக்கிக் கேள்வி கேட்ட பாரதி, இந்தக் கதையில் உள்முகமாகத் திரும்பி இந்தியர்களைப் பார்த்துப் பேசும்போது இப்படிப் பேசுகிறான். இந்திய ஜனத்தொகையில் ஆறிலொரு பங்காக வாழும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகப் பேசிய தலித் ஆதரவுக் கதை இது.

மணி

முடிவு செய்துகொண்டு செயலில் இறங்கினால் சந்தேகங்களோடு முடிப்பீர்கள் ;சந்தேகங்களோடு இறங்கி தேடலை தொடருங்கள்;முடிவான இலக்கை அடைவீர்கள்

-பேகன்

இடைவெளி

ஒரு கண்ணாடி தம்ளர்
அதற்கு
இடையே
ஒரு மணி நேர
தூரத்தில் ஒரு தாள்.
தம்ளர்
இங்கே
கவிழ்ந்துகொண்டிருக்கிறது
தாள்
மிக தூரத்தில்
நனைந்துகொண்டிருக்கிறது.

-ராணி திலக்

யாராலும் மொட்டைமாடிகளை வெறுக்க முடியும் என்று தோன்றவில்லை. மொட்டைமாடியில் வைத்து யாராலும் கோபப்பட்டிருக்க முடியும் என்றும் நினைக்க முடியவில்லை’
-வண்ணதாசன்

பாரதிதாசன்

[21/04, 6:55 am] TNPTF MANI: பெரும்பான்மையினர் பின்பற்றுகின்றனர்,இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர் என்பதால் எதையும் நீ நம்பிவிடாதே

-பாரதிதாசன் நினைவுதினம்
[21/04, 6:57 am] TNPTF MANI: இசங்கள்

இரண்டு கறவைகள் உன்னிடம் இருந்தால் அண்டை வீட்டானுக் கொன் றளித்தல் "சோசலிசம்"

கறவைகள் இரண்டில் கடிததொன்றை விற்றுக்
காளை வாங்குவது "காப்டலிசமாம்"

பகர் இரு கறவையைப் பறித்த ஆள்வோரிடம்
தொகைதந்து பால்பெறச் சொல்வது "பாசிசம்"

உரியவன் தன்னை ஒழித்தே அவனின்
கறவையிரண்டையும் கைப்பற்றல் "நாசிசம்"

இரண்டு கறவையால் திரண்டபால் அனைத்தையும்
சாக்கடைக் காக்குவதுதான் "நியூடலிசம்"

-பாரதிதாசன்

மணி

ஒரு கவிதை எத்தனைப் படித்தாலும் உங்களுக்குப் புரியவில்லையென்றால்,
விட்டுவிடுங்கள். கவலைப்படவேண்டாம்.ஏனெனில், அது, உங்களுக்காக, எழுதப்பட்ட கவிதை அல்ல
-மனுஷ்யபுத்திரன்

படித்த இரண்டு நிமிஷத்தில் மறந்து போய் விட்டால் அது சிறந்த கதையல்ல
#சுஜாதா

ஓர் அறையில் கடந்து போனது என் காமம்! #சிலேடை"

-இளந்தென்றல்

ஜோசியக்கிளிகள்
சீட்டு எடுக்க மறுக்கின்றன
பங்களா நாய்கள்
காவல்காக்க மறுக்கின்றன

பட்டினிபோட்டால்
மிருகங்கள்
வேலை செய்ய மறுக்கின்றன

காளைமாடுகள்
வண்டியிழுக்க மறுக்கின்றன

நாம்
பட்டினி கிடக்கிறோம்
பாடுபடுகிறோம்

-மு.சுயம்புலிங்கம்

# அறிந்திராத
புதிய எண்ணின் அழைப்பு
அலைபேசியின் அந்தப்புறம்
மிகப்பழகிய மௌனம்

நல்லாருக்கியா? என்கிறேன்
'ம்ம்ம்' என்று அழைப்பினைத் துண்டிக்கிறாள்.

அவளுக்கு ஏதோ சொல்ல வேண்டியிருந்தது,
எனக்கு கேட்க வேண்டியிருந்தது,
காலத்திற்கு தவிர்க்கவேண்டி.

-யாத்திரி

ஓஷோ-மணி

ஓஷோ

ஓஷோ வை எப்ப படிக்க ஆரம்பித்தேன்னு நினைவில்லை.ஆனால் நூலகத்தில் தான் அவரின் தடி தடியான புக் எடுத்திட்டு வந்து படித்திருக்கேன்.அப்ப கண்ணதாசன் புத்தகமெல்லாம் படித்த காலகட்டம்.கண்ணதாசன் பதிப்பகம் என்பதால் சட்டுனு எடுத்திட்டு வந்திட்டேன்.பிரித்து படிக்க ஆரம்பித்தால் அப்படியே மனுசன் நம்மை ஸ்கேன் செய்து எழுதுவது மாதிரி இருந்தது.அவரின் தத்துவார்ந்த வரிகள் ஈர்த்தது.ஜே.கிருஷ்ணமூர்த்தி எழுத்து எளிமை இருக்காது.ஆனால் ஓஷோ புரியும்படி சொல்லிவிட்டு ஒரு முல்லா கதை  சொல்லுவார்.அது இன்னும் புரிதலை எளிமையாக்கும்.

"இருட்டு அதிகம் இருந்தால் விடியப்போகிறது என்று அர்த்தம்"இது சாதாரணது போல இருக்கும்.ஆனால் படிமம் போல எல்லாவற்றுக்கும் பொருத்தி பார்க்கலாம்.

அவரின் நகைச்சுவை ஆசம்.ரொம்ப யோசிச்சால் குபீர்னு சிரிப்பு வரும்.இரட்டை அர்த்தத்தில் முதல் அர்த்தம் சட்டுனு பிடிபட்டிடும்.பாலியல் கதை முதல்முறை கேட்டுவிட்டு இரண்டாம் முறையே முகம் சுழிப்பார்கள் என ரியாலிட்டியா எழுதுவார்.

"உலக தத்துவங்கள் காலையில் டாய்லெட் போகும்போது உதிர்த்தவையே".என்பார்.அவர் எல்லாவற்றையும் இயள்பாய் பார்த்தார்.அப்புறம் நூலகத்தில்  அவரின் புத்தகம் வாசிக்க துவங்கினேன்.அசோகமித்திரன் எழுத்தினை போல்.உணரமுடியும். சிக்மன்ட் ப்ராய்ட் கூட இப்படி உளவியல் பூர்வமாய் விளக்குவாரா எனத் தெரியவில்லை.

"நீங்கள் உங்களை தைரியசாலி என நினைத்துகொண்டிருக்கிறீர்.

ஒரு கோழை கூட தன்னை தைரியசாலி என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.அகந்தை எப்போதும் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருக்கிறது..

இவரின் கதைகளை பலரும் மேற்கொள் சொல்வார்கள்.குறிப்பாய் தென்கச்சியார்.முல்லா வீட்டிற்கு திருடன் வந்தான். முல்லாவை வட்டம் போட்டு அதில் நிற்க வைத்து இதை விட்டு வெளியில் வந்தால் சுட்டுவிடுவேன் எனக்கூறி திருடினான்.வீட்டிலுள்ள பெண்கள் முல்லாவை பார்த்து திட்டினர். அதற்கு முல்லா நான் கோழையில்லை.அவன் பார்க்காதபோது இரு முறை வட்டத்தை விட்டு வெளியில் வைத்தேன் என்பார்."அகந்தை இப்படித்தான் தன்னை பராமரித்துக் கொள்கிறது என்பார். இதுபோல் பல மேற்கோள்கள்.

அச்சமற்ற மனிதன் கோழையும் இல்லை.தைரியசாலியும் இல்லை.(ஒரு போதும் அவன்.. தான் bold என்றோ பிறர் bold என கூறுவதை விரும்ப மாட்டார்கள்)

அவன் பயமற்றவன்.முட்டாளாகவும் இருக்க மாட்டான்.

புத்திசாலியாகவும் இருக்க மாட்டான்.வரையறுக்க முடியாது என்பார்.

தைரியம் என்பது மனதில் உள்ள பயத்தை மறைக்க நாம் போடும் வேஷம்.இது கமல் சொன்னதற்கு முன்பே ஓஷோ சொல்லியிருப்பார். பல கருத்து வேறுபாடு இருந்தாலும் ஓஷோ வாசிக்க இனிமையானவர்.

-மணிகண்டபிரபு

மினிமீன்ஸ்

பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை.அ
பண்டிதன் கணக்குப்படி;அ
பண்டிதன் எழுதுவ துதமிழ் இல்லை;இ
பண்டிதன் கணக்குப்படி. ஆ
க மொத்தம்
தமிழர் நமக்குத் தெரியவில்லை
தமிழ் எ ழு த.

-சி.மணி

#நீ கவிதை எழுதுவதும்
அவன் மலம் எடுப்பதும்

மதிப்பீட்டில் வேறானாலும்
வகையில் ஒன்றுதான்
ஒரு கோணத்தில் பார்த்தால்
அவனது
உனதைவிடச் சிறந்தது.

மேலும்

அலைவுகளை விட்டுச் செல்வதைவிட
சுவடற்று மறைவது மேல்.

-சி.மணி

# எத்தனையோ மாற்றங்கள்
குறிதவறிய ஏமாற்றங்கள்
மனம்புழுங்க பலவுண்டு
குதிரை வரைய குதிரையே
வராது; கழுதையும் வரலாம்.
இரண்டும் கலக்கலாம்.
எலிக்குப் பொறிவைத்தால்
விரலும் விழுவதுண்டு.
நீர்தேடி அலையும்போது
இளநீரும் கிடைக்கும்.

-சி.மணி

#தலையைச் சொரி
நாக்கைக் கடி!
பல்லை இளி!
முதுகை வளை
காலைச் சேர்!
என்ன இது?
வயிற்றைக் கேள்
சொல்லுமது.!

-ஷண்முக சுப்பையா.

#உனக்கு
நீ
இருப்பதால்
நான்
உண்டு;
எனக்கு நீ இல்லையென்றால்
நான் இல்லை.
-நகுலன்

#ஒருவன் இதயத்தைத் துன்புறுத்தும் செய்தியை நீ அறிந்திருந்தால் மௌனமாக இரு.
மற்றவர்கள் அந்த செய்தியைத் தெரிவிக்கட்டும்.!

வசந்தத்தின் செய்தியை குயில் தெரிவிக்கட்டும்.
மற்றதை ஆந்தையிடம் விட்டுவிடு.!

-ஷாஅதி

மணி

தனிமையில் யாரை நினைத்து கொண்டு இருக்கிறோமோ அவர்கள் தான் நம் தனிமைக்கு காரணம்"

-மணி

நாகா சார்

20.04.2018
நூல்வழிச்சாலை

மைல்கல் -22

வாடிவாசல் -4

வாடிபுரம் காளை வாடிவாசலை நெருங்கும்போது சில விநாடிகளில், முண்டியடித்து எக்கி நின்ற கூட்டம் போன இடம் தெரியவில்லை. காரி கொம்புக்கு எட்டாதபடி எப்படி தப்பிப்பது என்று அவனவன் அங்குமிங்கும் ஓடி பதுங்கப் பார்த்தார்கள்.

காரிக்காளை அவிழ்க்கப்பட்டவுடன் ஒரு பயலும் அங்கே இருக்க மாட்டான். ஜமீன்தார் ஆசனத்தில் சாய்ந்து உட்கார்ந்த தோரணையில் இருந்து சற்று முன்பக்கம் சாய்ந்து குறுக்கு கம்பியின் மீது கைகளை பிடித்து ஆர்வமாக பார்த்தார்.

*ஆட்டம் ஆரம்பம்*

கதாநாயகன் பிச்சி அவசர கும்பிடு போட்டு திரும்பி பார்க்க, "ஹூம்..பிடி" என்று சொல்வது போல் தலையாட்டி விட்டார்.
அடைப்புக்குள் காரிகாளையின் மூக்கணாங்கயிற்றை ஒரு மாட்டுக்கார சிறுவன் அவிழ்த்துக் கொண்டிருந்தான். சிறுவயது முதல் கைமேய்ச்சலாக வளர்த்தவன் அவன்தான். அவன் பேச்சுக்குத்தான் காளை கட்டுப்படும். எங்கிருந்து கூப்பிட்டாலும் பசுக்கணக்காக வந்து போகும்.
ஆம்! இதே போலத்தான் பல ஜல்லிக்கட்டு காளைகள் வீட்டுப் பெண்மணிகளின் பேச்சுக்கு அமைதியாக அடங்கி நடந்து கொள்ளும்.

திட்டிவாசல் விளிம்புக்கு வந்து சிறுவன் மாட்டை விட்டு பளிச்சென்று விலகி பாதையில் ஓடி விட்டான்.
ஜமீன்தார் அதி ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தார்.
ராஜாளி மாதிரி வந்து நின்றது காரிகாளை!

"நின்னு குத்தி காளைன்னா இதான்"

"இதையா, கிளக்கத்தான் பிடிக்கப்போறான்?"

அங்கங்கே கூக்குரல் கேட்க, ஏதோ ஒரு நிழலசைவில் "டுர்ரீ" என்ற சப்தம் கேட்டு காளை அந்தப்பக்கம் பார்த்து திரும்பி முறைத்தது.
கூட்டம் அசைவு காட்டக் கூட பயந்து சவம் போல நின்றது. சிறு அசைவு சமிக்ஞை போதும் . காளை அந்த திசையில் பாய்ந்து விடும். கணநேரத்தில் பல சவம் கீழே விழும்.

யார்ரா டுர்ரீ காட்டினவன் என்று கிழவன் பார்க்க முருகு செஞ்ச வேலை, பிச்சியின் மேல் உள்ள பொறாமையில்!

*நேருக்கு நேர்*

மாடும், மனுசனும் நேர்எதிரே ஒருவரையொருவர் முறைத்து நிற்பதையும், முகம் திரும்பாத காளைக்கு எப்படி பாராக்கு காட்டி திரும்பச் செய்வதென பிச்சி மூளையை குடைந்து கொள்வதையும் கூட்டம் அசையாமல் பார்த்துக் கொண்டு நின்றது.

சும்மா நிற்பவர்களை வெறி பிடித்து தாக்கும் காளை அல்ல அது! அதை நோக்கி வந்தவனைத் தான் அது மதிக்கும். காரியும் நகரவில்லை! பிச்சியும் நகரவில்லை.
பிச்சி, மச்சான் மருதனுக்கு ஒரு சமிக்ஞை செய்தான். அடுத்த விநாடி இருவரும் கூட்ட வரிசைவளைவின் நேர்எதிர் திசைகளில் பாய்ந்தார்கள்.! காளை எந்தப்பக்கம் திரும்புவது என்று குழம்பி, பிச்சி சுழலும் திசை பக்கமாக ஒரு எட்டு வைக்க பிச்சி அசையாமல் நின்று விட்டான். காரியும் அவனை முறைத்தபடி நின்று நிலை எடுத்துக் கொண்டது.

"மாடா அது, மனுசனா இல்ல வேலை காட்டுது!"

அந்த காரியின் குணத்தை அந்த வட்டாரமே நேரில் பார்த்தது. மனிதனுக்கு சரியாக அது அறிவோடு நடந்து கொண்டது, பிரமிக்கத்தக்கதாக இருந்தது.
பிச்சியை பார்த்துக் கொண்டே தன் குளம்புகளால் தரையை பிறாண்டி மண்ணை கிளறி விட்டது. காளைக்கு சூடு ஏறியதை கூட்டம் உணர்ந்து இதோடு முடிந்தால் தேவலை என்று நினைக்கும் போது, காரியோ தன் சவாலுக்கு முடிவு தெரியாமல் இம்மியும் நகர மாட்டேன் என்று உறுதி காட்டியபடி மூச்சு உதறுவதும், காலடிப்பதும், கொம்பலைப்பதுமாக நின்றது.

பிச்சி காளையின் கொம்புக்கு நேராகவும், மருதன் அதன் வால் பக்கமாகவும் இருந்த நேரமது. பிச்சி சைகை காண்பித்தவுடன் மருதன் "டுர்ரீ"
என சத்தமிட்டவாறு காளையின் வாலை தொட்டு விட்டு பின்னகர்ந்தான். காளை சடக்கென்று வாலை தொட்டது யார் என சிறு கோண அளவு திரும்பிய கணம் சில்வண்டு மாதிரி பாய்ந்து காரிக்காளையின் திமிலைப் பிடித்துக் கொண்டான் பிச்சி!

திமிலில் இடது கையைப் போட்டு, நெஞ்சோடு நெருக்கி அணைத்து கழுத்தோடு தன் உடலை ஒட்டிக் கொண்டு வலக்கொம்பில் கை போட்டான் பிச்சி.
எடுத்த எடுப்பில் காளைக்கு பாதகமாக போக அதன் மிருக குணம் வெளிப்பட ஆரம்பித்தது. முழு வேகத்தில் தன் கொம்பால் பிச்சியை குத்தப்பார்த்தது. கொம்பின் பிடி பிச்சியின் கையிலிருக்க காளையின் தலை எப்படி திரும்பினாலும் தன் மீது கொம்பு குத்தி விடாதபடி முழங்கால்களை மடித்து
தனது தலையை அழுத்தி சேர்த்து பிடித்துக் கொண்டான்.
காளை தன் உத்தியை மாற்றி தன் நாண்கு கால்களையும் உயரே தூக்கி தவ்வியது.

மருதன் "பிடியை விடாதே, பிச்சி" என்று கத்தினான்.
ஆள் உயரத்துக்கு தவ்விய காளை பிச்சியை கீழே தள்ள முயற்சித்தும் ஒன்று, இரண்டு, மூன்று முறை காளையோடு அந்தரத்தில் பறந்து, பறந்து தரைக்கு வந்தான் பிச்சி! பிடி மட்டும் விடவேயில்லை!

மூன்று தவ்வுக்கு அவன் நின்று விட்டதால் அவன் காளையை அடக்கி விட்டான் என்றுதான் அர்த்தம். ஆனால், காளையின் நெற்றியில் தொங்கும் தங்கமெடல் பாக்கி.
இரண்டு கைகளாலும் திமிலைப் பிடித்திருந்த பிச்சி வலதுகையை திமிலிலிருந்து எடுத்து கொம்பை பிடிக்க, காளையால் தலையை அதற்கு மேல் திரும்ப முடியாமல் அதே இடத்தில் கால்களை சுழற்றி முழு உடலையும் வளைத்து சக்கரமாக சுழன்றது. பிச்சி விடவேயில்லை.
இனி முடியாது என்று நினைத்த மாதிரி காளை உயரே பார்த்து மூச்சு உதறியது!

வலது கொம்பை விட்டுவிட்டு தன் கையால் கொம்பிலிருந்த மெடல், பட்டுத்துணியை இழுக்க அவன் கையோடு வந்தது. தன் கால்களை தரையில் அமர்த்தி திமிலை சேர்த்து காளையை ஒரு தம் கொடுத்து எதிர்ப்பக்கமாக தள்ளிவிட்டு எகிறி பின்னால் பாய்ந்தான். பின்னோக்கிய பாய்ச்சல் சற்று அதிகமாக இருக்கவே கால் தடுமாறி மல்லாக்க விழுந்தான்.

பழியுடன் சீறி திரும்பிய காளை தரையோடு கிடந்த பிச்சியை குத்தப் பாய, கொம்புகள் அவன் குடலுக்கு நேரே வந்தன. பிச்சி முதுகால் அரைவட்டம் அடித்து கால்களால் காளையை ஒரு குத்து விட்டு கவட்டையாக கால்களை பரப்பி கீழே கிடந்தான். காளை அவன் மார்பை நோக்கி வர கைகளால் இரு கொம்புகளையும் பிடித்து தள்ள முற்பட்டான்.

பார்த்து கொண்டிருந்த ஜமீன்தார் "காளையை விரட்டு" என்று சப்தமிட்டார். மருதன் உதவிக்கு வந்து வாலை பிடித்து இழுக்க காளை கொம்பை மேலே தூக்க கைப்பிடியை தளர்த்திய பிச்சியின் தொடையில் காளையின் கொம்பு கிழித்தது.
வாலை பிடித்தபடி இருந்த மருதனும், காளையும் தட்டாமாலை போல ஐந்தாறு முறை பம்பரமாக சுற்றினார்கள்!
அந்த சமயத்தில் மற்ற ஆட்களால் பிச்சி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட மருதனும் வாலை விட்டு கூட்டத்தில் ஒண்டினான்.

*வெறியுடன் ஓடிய காளை*

காளை தன் இரண்டு இரைகளையும் பறிகொடுத்த வேதனை, வாலில் வலி இவற்றோடு திரும்பிய பக்கமெல்லாம் கொம்பை அலைத்து கூட்டத்துக்குள் புகுந்து பார்வையாளர்கள் பலரை சதக், சதக் என்று குத்தியபடி ஓடிக்கொண்டிருந்தது!
மருதன் பிச்சியிடம் "அப்பன் மானத்த காப்பாத்திட்ட!" என்றான்.
ஆமா! அப்பன் மனசு குளிர்ந்திருக்கும் என்றான் முனகியபடி பிச்சி!
"உன் ஆயுசுக்கு இது ஒண்ணு போதுமடா, தம்பி!"

"தலைமுறைக்கும் நிக்கும்னு சொல்லு"

இப்படி ஊரே புகழும் வார்த்தைகள் பிச்சியின் காதில் விழ, "பயலே! நீ புலிக்கு பிறந்த பய" என்று கூறியவாறு கிழவன் உருமா, பட்டுத்துணி, தங்கக்காசு இவற்றை எடுத்துக் கொண்டு வர,
அந்த இடத்தில் மேலும் ஒரு பரபரப்பு...
ஜமீன்தார் பிச்சியை பார்க்க அருகில் வந்தார்.
பிச்சியின் கால் தொடையில் ரத்தம் ஒழுகிக் கொண்டிருந்தது!
ஜமீன்தார் பிச்சியை முழுக்க ஒருதரம் பார்த்தார்.

இதுவரை நாம் கண்டது "க்ளைமாக்ஸ்".
ஆன்டி க்ளைமாக்ஸ் என்று ஒன்று உண்டல்லவா?
மனம் பதைபதைக்க வைக்கும்
அதை அடுத்தவாரம் வாசிப்போம்!
சி.சு. செல்லப்பாவின் மதுரை தமிழ் நடை சும்மா காளையின் பாய்ச்சல் போல!
அதகளம்!!! படிக்க, படிக்க செம விறுவிறுப்பு!!

அடுத்த வாரம் திங்களன்று சந்திப்போம்!
மீசையை முறுக்கியபடி,
அன்புடன்,
நாகா
20.04.2018