Monday 31 August 2020

பராரிகள்

கண்கள் பாதையைத் தொலைத்துவிட்டு நிற்கும் போதெல்லாம்.. கால்கள் ஒரு புதிய பாதையைக் கண்டுபிடித்துத் தரும்

-பராரிகள்

-சுப.உதயகுமாரன்

வறுமையால் வாடிய ஒரு புலவர் அதிலிருந்து மீள வேறேதும் வழியறியாது, அந்நாட்டு மன்னனிடம் சென்றார். திறமையைப் போற்றும் தாராளகுணம் படைத்த அந்த மன்னன், புலவரின் அருமையான கவிதையை செவிமடுத்துவிட்டு, ""என்ன பரிசு வேண்டும்?'' எனக் கேட்டான்.

மன்னனின் முன்பிருந்த சதுரங்கப் பலகையைப் பார்த்த புலவர், ""மன்னர் பெருமானே, இந்த சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஒரே ஓர் அரிசியை வைத்து, ஒவ்வொரு கட்டம் நகரும்போதும் அதனை இரண்டு மடங்காக்கி எனக்குப் பரிசளித்தால், அதுவே எனக்குப் போதும்'' என்றார்.
எண் திறனில்லா அந்த மன்னன் அதனைச் சாதாரணமாக நினைத்துக்கொண்டு, ""கையளவு அரிசி போதுமா?'' என்று ஏளனத்துடன் கேட்டான். ""போதும்'' என்றார் புலவர். அப்படியே செய்ய ஆணையிட்டார் அரசர்.

அரண்மனை ஊழியர்கள் சதுரங்கப்பலகையின் முதற்கட்டத்தில் ஓர் அரிசியை வைத்தார்கள்.

இரண்டாவது கட்டத்தில் 2 அரிசிகள், மூன்றாவது கட்டத்தில் 4 அரிசிகள், நான்காவது கட்டத்தில் 8 அரிசிகள் என்று வைத்துக்கொண்டிருந்தார்கள். பத்தாவது கட்டத்துக்கு வந்தபோது, 512 அரிசிகள் தேவைப்பட்டன. இருபதாவது கட்டத்தை அடைந்தபோது, 5,24,288 அரிசிகள் வைத்தார்கள். மொத்தம் 64 கட்டங்கள் கொண்ட சதுரங்கப்பலகையின் பாதியான 32}வது கட்டத்தை எட்டியபோது, 214,74,83,648, அதாவது 214 கோடிக்கும் அதிகமான அரிசிகள் தேவைப்பட்டன.

தேவைப்படும் அரிசிகளின் எண்ணிக்கை லட்சம் கோடிகளைத் தாண்டிச் சென்றது. என்ன பரிசு வழங்குகிறோம் என்று எண்ணிப் பார்க்காத மன்னன், எண்ணற்ற அரிசியை வழங்க வேண்டிய நிலைக்கு ஆளாகி, தனது நாட்டையே அந்தப் புலவனிடம் இழந்தான். அத்தனையும் ஒரே ஓர் அரிசியில் தொடங்கியது

-சுப.உதயகுமாரன்

முகுந்த் நாகராஜன்

வழியில் அழுது அடம் பிடிக்கும்
குழந்தையை மிரட்ட
இருப்பதிலேயே சின்ன கிளையை
சாலையோர மரத்தில்
தேடுகிறாள் அம்மா
அழுகையை நிறுத்திய குழந்தை
அதே மரத்தில்
பூ வேண்டும் என்கிறது

-முகுந்த் நாகராஜன்

Sunday 30 August 2020

ஆதவன்

அவனுடைய உப்புமா வாழ்க்கையில் அவள் ஒரு ஊறுகாய்

-

எல்லோருக்கும் ஆசையாத்தான் இருக்கிறது. படிப்பைத் தவிர்ப்பதற்கு, படிக்காமலேயே புத்திசாலிகளாக இருக்கவே எல்லோரும் விரும்புகிறார்கள்

-ஆதவன்

புதிர்போல் ஏதாவது நடந்தால், அது விடுபடும் வரை கவனம் வேறுபக்கம் எப்படி போகும்?
   - எம்.வி.வெங்கட்ராம்

மழையில் நனைந்து
தூறலில் தலைதுவட்டிக் கொள்வான்

-ராஜா சந்திரசேகர்

Thursday 27 August 2020

அழகியல்*மணி

அழகியல்
*மணி

"மழலை மொழியில் வார்த்தைகளே கிடையாது, வெறும் அர்த்தங்கள் மட்டுமே.""

என்று படித்திருக்கிறேன்.

அதுபோல் இன்று ஒரு மழலையர் போட்டியில் ஆத்துச்சூடி ஒப்புவித்தலுக்கு நடுவராக சென்றிருந்தேன்.
இனிமையான பொழுதாய் இன்றைய நாள் அமைந்தது.ஒவ்வொரு குழந்தையும் வந்து ஆத்திச்சூடியை தனக்கே உரிய பாணியில் சொன்னது.அதில் நடந்த சுவாரஸ்யங்கள்..

#ஒவ்வொரு குழந்தையும் பாத்ரூமுக்குள்ள பல்லி இருக்குதானு பார்க்கிற மாதிரி நைசா நடுவரை எட்டிப்பார்ப்பாங்க.

#எவ்வளவு படிச்சீங்க னு கேட்டால் இரண்டாவது னு சொல்லும். சரிமா எவ்வளவு ஆத்திச்சூடி படிச்சிருக்கீங்க கேட்டால் இரண்டாவது னு சொல்லும்

#பொதுவா டக் இன் செய்வது 2வகை.சட்டை மேல் பேன்ட் போடுவது.இன்னொன்னு அவசரத்தில் டவுசருக்குள் சட்டையை சாக்குமூட்டைக்குள் சொருகுவது போல் செருகுவது. இது மாதிரி இரண்டு பசங்க வந்திருந்தாங்க

#ஒரு பொன்னுக்கு பர்த் டே. தலை முழுக்க மல்லிகை பூ.உச்சந்தலையே தெரியல.கையிலிருந்த டைரி மில்க்கை கடைசி வரை விடவேயில்லை. கொடிகாத்த குமரன் போல்

#சில குழந்தை தேம்பி தேம்பி புருசன் அடிச்சதை மகளிர் காவல் நிலையத்தில் கம்ளைன்ட் செய்வது மாதிரி..தேம்பி தேம்பி சொன்னாங்க

#சில குழந்தைகள் 109 ஆத்திச்சூடியும் ஒப்புவித்து, பாரதியின் ஆத்திச்சூடியும் ஒப்பிச்சாங்க.

#ஒரு குழந்தை ஒளவை மாதிரி வேஷம் போட்டு, லேஸ் சாப்பிட்டு துடைக்காமல் வந்து சொல்லுச்சு

#ஒரு குழந்தை வந்ததில் இருந்து அக்கா அக்கானு அழுதுச்சு..

சமாதானம் செய்தவுடன் எப்போதும் வேணாலும் வெடித்து அழும் துக்கம் தோய்ந்த குரலுடன் சொல்லி முடித்து..சென்றது

#ஒன்றாவது படிக்கும் பையன்.. பாடகர் உதித் நாராயணனின் சிறுவயது குரல் போல

"அகைவகுக்கும் வகக்கம்.ஆத்திச்சூகி

அகம் செய்ய விகும்பு
ஆகுவது செனம்
இகவது ககவேல்
ஈவகு விகக்கே

என பன்னிரண்டும் சொல்லி முடித்து, இகை எகுதியவர் அவ்வையா ணு சொல்லி நன்கி னு சொன்னான்.

#சில குழந்தைக அமைதிப்படை அமாவாசை மாதிரி கைகட்டி வந்து பவ்யம் காட்டியது

#சில குழந்தைகள் வகுப்புக்குள் நுழையும்போது ஆத்திச்சூடி சொல்லிக்கொண்டே வந்தது

#சில குழந்தைகள் சொல்லும்போது இன்டிகேட்டர் வேலை செய்யாத பைக்கில தலையை வெட்டி வெட்டி கிராஸ் செய்வது மாதிரி தலையை வெட்டி வெட்டி சொன்னது

#ஒரு சில குழந்தைகள் தலையை ஆட்டி ஆட்டி சொன்னது. நானும் அதனுடன் சேர்ந்து ஆட்டியதில் அதற்கு கொஞ்சம் கம்பெனி கொடுத்தது மாதிரி ஆகி இன்னும் ஜிமிக்கியை ஆட்டி ஆட்டி சொன்னது

#சில குழந்தைகள் கண்ணை பார்க்காமல், தவிர்க்கும்பொருட்டு கீழே விழுந்த சில்லரை காசை தேடுவது போல் தேடிக்கொண்டே சொல்லியது

#ஒரு குழந்தை சீலிங் பேனிடமும், கடிகாரத்திடமும் சொல்லிச் சென்றது

#மறந்த வரிகளின் போது எச்சில் விழுங்கியது.பின் மீண்டும் ஏர் வாங்குன கம்ப்ரசர் மாதிரி நின்னு நின்னு ஓடியது போல் சொல்லியது

#பொதுவாய் போட்டி என்பது பெயருக்குத்தான். குழந்தைகள் அதை மிக இயல்பாய் எடுத்துக்கொண்டனர். ஒரு விளையாட்டும் போட்டியும் நல்லதுக்குத்தான். தோல்வி கிடைத்தால் நாளை வெல்வேன் என்ற நம்பிக்கை கிடைக்கும். தோல்வியை தாங்கும் மனவலிமை கிடைக்கும். எந்த போட்டியிலும் கலந்துகொள்ளாமல் முதல்முறை தோல்வி கிடைக்கும்போது அதை தாங்கும் மனப்பக்குவம் இல்லாமல் உடைந்துவிடுகின்றனர். 

சிறுவயதிலிருந்து விளையாட்டும் போட்டியிலும் ஈடுபடுவோனுக்கு தன்னம்பிக்கையும், தோல்வி கண்டு துவளா மனமும் இருக்கும். வெற்றியைத்தான் இழந்தோம் களத்தை இழக்கவில்லை எனும் மன தைரியம் வரும்.இதில் அக்குழந்தைகளின் உள்வாங்கிச் சொல்லும்திறன் வெளிப்பட்டது, சைகை,உச்சரிப்பு உடல் மொழியில் வெளிப்படுத்திய பாங்கு அமைந்திருந்தது.பள்ளியில் படித்த போட்டியை பற்றிய தங்கவிதியொன்று நினைவுக்கு வருகிறது. "Taking part is more important than winning"!

-மணிகண்டபிரபு
மீள் பதிவு

Wednesday 26 August 2020

ஆதவன்

எதை நீங்கள் புரிந்து கொள்ள விரும்புகிறீர்களோ அதை மட்டுமே நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
எல்லாவற்றையும் அல்ல, பூரணமாக அல்ல

*ஆண்களின் பொறுமையை சோதிப்பவர்கள் இல்லை பெண்கள்.ஆனாலும் சகித்துக் கொள்ளப்பட வேண்டியவர்கள்

-ஆதவன்


காலேஜ் முடித்துவிட்டு இவ்வளவு நாட்கள் என்ன செய்து கொண்டிருந்தாய்?

உங்களுடைய விளம்பரத்துக்கு காத்துக் கொண்டிருந்தேன்

-ஆதவன்
(இண்டர்வியூ)

பெ.பாண்டியன்

குழந்தைகளின்
கூட்ஸ் ரயில்..
தடம் கவிழ்ந்து எழுந்த
ஒரு பெட்டிக்கு
முழங்காலெல்லாம் சிராய்ப்பு
ஆறுதல் சொல்கின்றன
மற்ற பெட்டிகள்

-பெ.பாண்டியன்

Friday 21 August 2020

கல்யாண்ஜி

எதையும் சொல்லவில்லை
எதையும் கேட்கவில்லை
சும்மாதான் வந்தேன்
என்றுவிட்டுப் போனான்
காற்றுப் போல
வெயிலைப் போல
சும்மாதான் வருகிறவர்கள்
முக்கியம் எனக்கு

-கல்யாண்ஜி

கல்யாண்ஜி

கைப்பிள்ளையுடன் பேசிக் கொண்டே
கோலம் போடுகிறாள் அந்தப் பெண்
நிபந்தனையற்ற அன்பில்
நேர்த்தியாகிக் கொண்டிருக்கிறது வாசல்

-கல்யாண்ஜி

Tuesday 18 August 2020

மு.முருகேஷ்

 டிக்கெட்டுக்காய்
கொடுத்த சில்லறையில்
இருப்பதைஞ்சு காசு
குறைகிறதென
அந்த கிழவியைத் திட்டிக்கொண்டே
நகர்கின்ற கண்டக்டர்

இன்னமும் தரவேயில்லை
எனக்கான எழுபத்தைந்து காசு
சில்லரைப் பாக்கியை

-மு.முருகேஷ்


#எல்லா மூங்கில்களும்
புல்லாங்குழல் விற்பவன்
கைகளில் சங்கீதமாகிறது

பல புல்லாங்குழல்
வாங்கிப் போகிறவர்களின்
கைகளில் மூங்கிலாகின்றன

-மு.முருகேஷ்

தபூசங்கர்

நீ நரகத்துக்குச் செல்ல வேண்டும்
உன்னை விட்டால் வேறு யாரால் முடியும்
அதை சொர்க்கமாக்க

-தபூசங்கர்

Thursday 13 August 2020

மகுடேசுவரன்

முட்டாள்

முட்டாள்- முட்டுகின்ற ஆள். முட்டு என்றால் மோதுவது. முட்டிக்கொள்வது.தெளிவான பார்வையில்லாமல் தனக்குத் தெரிந்ததை நம்பி மேற்சென்று
முட்டி நிற்கும் ஆள்களை முட்டாள்கள் என்கிறோம். மடத்தனமாக முட்டி நிற்பது. முட்டுகிற ஆள் முட்டாள்.

-மகுடேசுவரன்

Monday 10 August 2020

தேர்ந்த நிர்வாகமும் பொறுப்புள்ள மக்களும்! - மீன்பிடித்தீவு, சிங்கார சிங்கப்பூர் ஆன கதை MyVikatan-மணிகண்டபிரபு


சிங்கப்பூர் என்றவுடன் நினைவுக்கு வருவது சிங்கத்தின் வாயிலிருந்து வரும் நீர், வானுயர கட்டடங்கள், சினிமாக்களில் வரும் பாடல்கள் மற்றும் 90களில் யாரேனும் சிங்கப்பூரில் வேலையில் இருந்தால் சிங்கப்பூர்காரர் வீடு என வழிவழியாய் அவர்களை அழைப்பது என்பது தான் சிங்கப்பூர் குறித்த பால்ய வயது அறிமுகம். இணையம் அறிமுகமானவுடன் சிங்கப்பூர் குறித்து அறிந்து கொண்ட போது இன்னும் வியப்பை தந்தது. தென் கிழக்கு ஆசியாவில் 704கி.மீ உள்ள ஒரு தீவு தான் சிங்கப்பூர். மலேசியாவின் ஜோஹர் நீர்ச்சந்தியும், இந்தோனேசியாவின் சிங்கப்பூர் நீர்ச்சந்தியும் சிங்கப்பூரை பிரிக்கின்றன.

கிழக்கு ஜாவாவை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்த ஸ்ரீவிஜய சாம்ராஜ்ஜியத்தின் மீது அருகில் உள்ள அரசர்கள் போர் தொடுத்ததால் அந்நாட்டின் இளவரசன் சாங் நிலா உத்தமா நாட்டை விட்டு தப்பி ஓடினான். அந்நாட்டின் கடைசியாய் இருந்த ஒரு தீவில் தஞ்சமடைந்தான். காடுகள் நிறைந்திருந்த அத்தீவின் புலிகள் அதிகம் காணப்பட்டதை சிங்கங்கள் என நினைத்து இச்சிங்கத்தை கண்டதால்தான் இத்தீவு தனக்கு கிடைத்ததை அதிர்ஷ்டமாய் நினைத்தார். மலாய் மொழியில் சிங்கா என்றால் சிங்கம், பூரா என்றால் ஊர்.. என சிங்கங்கங்களுக்கு நன்றி அறிவிப்பாக தன் தீவுக்கு சிங்கப்பூர் என பெயரிட்டார்.
மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மீன்பிடித்தீவாய்.. கேளிகைக்கென உருவான நகரமாய் இருந்தது. போர்த்துக்கீசியர், டச்சுக்காரர்களால் ஆளப்பட்டாலும் முன்னேற்றமின்றி இருந்த நகரத்தை 1819 ஜனவரி 29ல் இங்கிலாந்தின் ராஃபிள்ஸ் பார்வையிட்டு இந்திய - சீன வர்த்தகத்துக்கு சிங்கப்பூரா துறைமுகத்தைத் தேர்ந்தெடுத்தார்.

பிப்ரவரியில் ஆங்கிலேயர் வசமாகி உச்சரிப்பில் சிங்கப்பூரா என வராததால் சிங்கப்பூர் ஆனது. மலாய், சீனர்கள், இந்தியர்கள் என கலந்து வாழும் கலாச்சாரம் துவங்கியது. இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானியர்கள் வசம் மூன்றரை ஆண்டுகளுக்குப்பின் 1942 செப்டம்பர் 12ல் மீண்டும் ஆங்கிலேயர் வசமானது சிங்கப்பூர்.


மொழிப்பிரச்சனை, தொழிலாளர் பிரச்சனை, தனி நாடு கோரிக்கை என முதல்வர் மார்ஷல் மற்றும் மலேய விடுதலைக்கு துங்குவும் போராடியதால் ஆகஸ்ட் 31,1957 மலேயா சுதந்திரம் பெற்றது. துங்கு ஒருங்கிணைந்த மலேஷியாவின் முதல்வரானார். சிங்கப்பூர் மக்களுக்கும் லீ க்கும் ஏமாற்றம் மிஞ்சியது.

#சிங்கப்பூர் உதயமானது

மலேசிய கூட்டமைப்பில் சிங்கப்பூர் தொடர்ந்து இருந்து வந்தது. இருப்பினும் சிங்கப்பூர் வளர்ச்சியையும் லீ யின் செல்வாக்கும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் உயர்ந்து கொண்டு இருந்தது. கோலாலம்பூரை விட சிங்கப்பூர் முக்கியத்துவம் பெறும் அச்சம், கூட்டரசுக்கும் மாநிலத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.
சீனர்கள் மலாய் மக்களிடயேயும் கலவரங்கள் தொடர்ந்தது. இதன் விளைவாய் 1965 ஆகஸ்ட் 9ம் நாள் மலேசிய நாடாளுமன்றத்தில் சிங்கப்பூர் உறுப்பினர்கள் இல்லாத நிலையில் 126 உறுப்பினர்கள் வாக்களித்து சிங்கப்பூரை வெளியேற்றிவிட்டனர்.
போராட்டமின்றி சிங்கப்பூர் அரசு சுதந்திரம் பெற்றது.

#லீ குவான் யூ

சிங்கப்பூரின் காட் ஃபாதராக விளங்கியவர் லீ குவான் யூ. பள்ளிப் படிப்பை முடித்த பின் கேம்பிரிட்ஜில் சட்டம்படித்து சிங்கப்பூர் வந்து புகழ் பெற்ற வழக்கறிஞரானார். ஆரம்பத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆலோசகராக இருந்தாலும் பின்னாளில் தனிக்கட்சி ஆரம்பித்தார். 1959ம் ஆண்டு சிங்கப்பூரின் பிரதமரானார். ஆட்சிக்கு வந்தவுடன் 14,000 அரசு ஊழியர்களில் 6,000 உயர்மட்ட அதிகாரிகளின் ஊதியத்தை குறைத்தார். ஏழைகளுக்கு அரசின் சார்பில் அடுக்குமாடி வீடு என அதிரடி காட்டினார். பொருளாதார ரீதியாக நாட்டை உயர்த்தினார். அரசு துறைகளை ஊக்குவித்தார்.


"நான் வகுப்புகளுக்குத் தாமதமாகச் சென்றபோதெல்லாம், என் ஆசிரியர்களிடம் பிரம்படி வாங்கியிருக்கிறேன். அதை நினைத்து நான் எப்போதுமே வருந்தியது இல்லை. இதுபோன்ற தண்டனைகள் சமூகத்துக்கு நன்மை செய்யும்’ எனச் சொல்லி ஒழுக்கமான தேசத்தை அவர் நிர்மாணித்தார்.
நான்யாங் பல்கலைக்கழகம், நேஷனல் யுனிவர்சிட்டி ஆஃப் சிங்கப்பூர் என சர்வதேசப் பல்கலைக்கழகங்களுக்கு இணையாக கல்விநிறுவனங்களை அமைத்தார். பிரதமர் பதவியைவிட்டு விலகும்போதுகூட, 'சவக்குழியில் என்னை இறக்கும் தருணமாக இருந்தாலும் சரி.. எங்கேயாவது தவறு நடப்பது தெரிந்தால், நான் எழுந்து வருவேன். ஜாக்கிரதை’ என ஆட்சியாளர்களை எச்சரித்திருந்தார்.

இன்றளவும் தேர்ந்த நிர்வாகியாக உலக மக்களால் நினைவுக் கூறப்படுகிறார்.

#Trace Together

உலகளவில் கொரோனா பாதிப்பு உச்ச்த்தை தொட்டாலும் சிங்கப்பூர் கணிசமாக கட்டுப்படுத்தியுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் முயற்சியில் சிங்கப்பூர் அரசு Trace Together என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியது. ஒவ்வொரு பயனரின் விபரங்களும் சேமிக்கப்படும். செயலியை இன்ஸ்டால் செய்து ப்ளூ டூத் ஆன் செய்தால் 10 மீட்டர் இடைவெளியில் கொரோனா எச்சரிக்கையை அருகில் உள்ளோர்க்கு MOH மூலம் தெரிவிக்கப்படும். COVID-19 க்கு பாசிட்டிவ் சோதனைக்கு முன்னும் பின்னும் தொடர்பு கொண்ட அனைத்து மக்களையும் விவரிக்க உதவும். வைரஸ் பரவுதலின் அபாயத்தை குறைக்க முடியும். தன்னார்வமாக பயனர் தன் சோதனை முடிவை பகிரலாம்.

ஒவ்வொருவரும் கடைசியாக சென்ற இடங்களை குறுஞ்செய்தி மூலம் தகவல் தெரிவித்துக் கொண்டே இருக்கும். உதாரணமாக கடைசியாக இரு நாட்களுக்கு முன் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றால் அங்கு யாருக்கேனும் இன்று பாசிட்டிவ் வந்திருந்தால் நாம் சென்றிருந்த தகவலை வைத்து நம்மையும் சோதனைக்கு அழைத்து பரிசோதித்து முழுமையாய் கட்டுப்படுத்த முடியும்.
*jobs support system எனும் வேலை ஆதரவு திட்டத்தை அரசு அறிவித்துள்ளது. இதன்படி சிங்கப்பூர் வாழ் குடியுரிமை பெற்றவர்கள், நிரந்தர வாசிகள்(permanent residents) ஆகியோர்களுக்கு கம்பெனிகள் ஊதியம் கொடுக்க சிரமப்படும் பட்சத்தில் 75% ஊதியம் வழங்க உதவுகிறது. இது ஆகஸ்ட் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

*தொடர்ந்து முழுமையாக பணியாற்றும் உள்ளூர் ஊழியர்களுக்கு சிபிஎஃப்-க்கு முதலாளிகளின் பங்களிப்புகள் உட்பட தற்போதுள்ள சம்பளத்தை வழங்க வேண்டும்.

#18 வது பொதுத்தேர்தல்

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் 18வது சிங்கப்பூர் நாடாளுமன்றத் தேர்தல் 93 இடங்களுக்கு நடைபெற்றது.

83 இடங்களில் ஆளும் மக்கள் செயல் கட்சி வென்று லீ சியன் லூங் பிரதமராகியுள்ளார்.10 இடங்களில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

27 பெண்கள் வென்றிருப்பதும் ஒரு சாதனையே. இதுவும் ஒருவகையில் டிஜிட்டல் தேர்தலாக சமூக ஊடகங்களில் பரப்புரை மேற்கொண்டன. 21 வயது நிறைந்த அனைவரும் இரவு 10மணி வரை ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். சிங்கப்பூரை சேர்ந்த முரளி கிருஷ்ணன் கூறுகையில், ``ஆளும் கட்சி தோல்வி அடைந்த இடங்களில் இனி அதிகம் களப்பணி ஆற்றும். மீண்டும் அந்த இடங்களில் அடுத்த முறை வெற்றி பெற கடுமையாய் உழைப்பார்கள். இதுதான் ஆளும் கட்சியின் மகத்தான பண்பு" என்றார். சிலாகித்துப்போனது.

#சுதந்திர தினம்

55 ஆண்டுகள் நிறைவு பெற்று 56வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது சிங்கப்பூர். எத்தனை சவால்கள் வந்தாலும் சாதிக்க தயாராய் உள்ளனர்.
நாட்டின் வளர்ச்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு முக்கிய காரணமாய் விளங்குகிறது. உலக ஏற்றுமதியில் 14வது இடம் வகிக்கிறது. உலக அளவில் அதிகளவு கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகமாகவும், அதிக சரக்குகளைக் கையாளும் துறைமுகமாகவும் சிங்கப்பூர் உள்ளது. சிங்கப்பூரில் பணியாற்ற ஆங்கில அறிவு அவசியம். நிரந்தரவாசி (Permanent residents)பெற அதிகம் பேர் விரும்புகின்றனர்.


இதன் மூலம் சலுகைகள், குடியுரிமை பெற ஏதுவாய் இருக்கும். 2008 வரை எளிமையாய் இருந்த நடைமுறை பின்பு பாதுகாப்பு காரணங்களுக்காக விதிமுறைகள் அதிகம் வகுக்கப்பட்டுள்ளன. இன்றும் தம் நாட்டினை குறித்து பேசும்போது பெருமை பொங்க பேசுகின்றனர்.

Winners donot do different things, they do things differently.

வெற்றியாளர்கள் எதையும் புதிதாய் செய்வதில்லை. செய்வதையே வித்தியாசமாய் செய்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள். சிங்கப்பூர்காரர்களும் அவ்வாறே!

-மணிகண்டபிரபு

வ.சு.ப.மாணிக்கனார்

சீதையைப் பார்க்கச் செல்லும் ராவணன் மனைவி மண்டோதரியிடம் மாட்டிக்கொள்கிறான்

கள்ளமாய் எழுதித்தேர்வில்
கைப்படு பேதைபோல
எள்ளலாய்ப் பெண்ணைப்பேசி
இடிபடுங் கயவன் போலத்
துள்ளலாய் வேலிதாண்டித்
தொடுத்துணும் மாடுபோல
உள்ளமாய் நடுக்கங் கொண்டான்
உம்பரை நடுங்க வைத்தான்

-வ.சு.ப.மாணிக்கனார்

சுப.உதயகுமாரன்

அதிகமாகப் பாருங்கள், அளவோடு பேசுங்கள், ஆர்வத்தோடு  கேட்பீர்கள்' என்பதுதான் அந்தக் கவிதை சொல்லும் செய்தி.

சரி, எப்படித்தான் செவிமடுக்கும் திறனை உயர்த்திக் கொள்வது?

உங்களைச் சமநிலையில் வைத்திருப்பது முதற்படி. அதாவது, உங்கள் மனக்கோப்பை காலியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். திறந்த மனதோடு இருங்கள். உங்களிடம் பேசுகிறவரை நீதித்தராசில் வைத்து நிறுக்கவோ அல்லது உங்கள் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அவரை எடை போடவோ செய்யாதீர்கள்.

கவனச் சிதறலின்றி  கேளுங்கள். பேசுபவரின் நடை, உடை, பாவனைகளில் கவனம் செலுத்தாது, அவர் பேசும் வார்த்தைகளின் உள்ளடக்கத்தில் மனதைச் செலுத்துங்கள். பேசப்படும் பொருள், பேசுபவரின் எண்ணவோட்டம் மற்றும் உணர்வுகளில் மனதைக் குவித்துக் கேளுங்கள்.

நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள் என்பதைப் பேசுகிறவர் புரிந்துகொள்ளும் வகையில், அவரது கண்களைப் பாருங்கள்; தலையை அசையுங்கள், முக பாவனையை, குரலைப் பயன்படுத்துங்கள்.

உங்களை அவருடைய இடத்தில் நிறுத்தி, அவருடைய வாழ்வுலகுக்குள் நுழைந்து, அவருடைய விழுமியங்கள், பார்வைகள், அனுமானங்களைப் புரிந்து, கவனமாகக் கேளுங்கள்.

பேசுகிறவர் விவரிப்பது போன்ற உங்களின் சொந்த அனுபவங்களைப் பகிர வேண்டாம். அவர் கொட்டிக் கொண்டிருக்கும் உணர்வுகளுக்கு, பிரச்னைக்கு விடையோ, தீர்வோ சொல்ல வேண்டாம். வெறுமனே  கேளுங்கள். மனம்திறந்து கேளுங்கள்.

பேசுகிறவர் நிறுத்தினால், தயங்கினால், அமைதி காத்தால், குழம்பினால், அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தையை, சொற்றொடரை அல்லது பகிர்ந்துகொண்டிருந்த உணர்வை அவருக்கு நினைவூட்டி அவர் தொடர்ந்து பேசுவதற்கு உதவுங்கள். பேசுபவரை ஊக்குவித்து இன்னும் தெளிவாக, விளக்கமாகப் பேசவைக்க சில குறிப்பிட்ட உத்திகளைக் கையாளலாம்.

ஊக்குவித்தல்: பேசுபவரோடு உடன்படவோ அல்லது மாறுபடவோ  செய்யாமல், நடுநிலைமையான வார்த்தைகளுடன், உங்கள் ஈடுபாட்டைத் தெரிவிக்கலாம். "இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்லுங்களேன்?' எனக் கேட்டு, தொடர்ந்து பேச உதவலாம். 

தெளிவுபடுத்துதல்: கேள்விகள் கேட்டு, பேசுபவர் கூடுதல் விவரங்கள், விளக்கங்கள் அளிக்க உதவி செய்யலாம். "இது எப்போது நடந்தது?' "அப்படி யார் சொன்னது?' போன்ற கேள்விகளைக் கேட்டு இன்னும் தெளிவாகப் பேச வழிகோலலாம். 

திரும்பச் சொல்லுதல்: பேசுபவர் சொல்கிற அடிப்படைத் தகவல்களை, கருத்துகளை மீண்டும் ஒருமுறை உங்கள் வார்த்தைகளில் திரும்பச் சொல்லி, பேசுகிறவர் சொல்வதை நீங்கள் கவனமாகக் கேட்கிறீர்கள், புரிந்திருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிக்கலாம். உங்களுடைய  புரிதல் சரிதானா என்பதையும் பரிசோதித்துக் கொள்ளலாம். "உங்கள் பெற்றோர் உங்களை முழுமையாக நம்பவேண்டும் என்று விரும்புகிறீர்கள், அப்படித்தானே?' என்பன போன்ற கேள்விகள் மிகவும் உதவும். 

பிரதிபலித்தல்: பேசுபவரின் அடிப்படை உணர்வுகளைச் சுட்டிக்காட்டி, அவர் எப்படி உணர்கிறார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருப்பதை எடுத்துரைக்கவும். அவர் தனது உணர்வுகளை மதிப்பீடு செய்வதற்கும் உதவலாம். "அந்த வார்த்தைகள் உங்களை மிகவும் கோபப்படுத்தியிருக்கின்றனவா, இல்லையா?' போன்ற கேள்விகள் பயனளிக்கும். 

சுருக்கிக் கூறுதல்: பேச்சில் முன்னேற்றத்தைப் பரிசீலிக்கவும், முக்கியமான கருத்துகள், தகவல்கள், உணர்வுகளை ஒருங்கிணைக்கவும், தொடர் கருத்துப்பரிமாற்றத்துக்கு வழிகோலவும், அவர் பேசுவதைச் சுருக்கிக் கூறுவது மிகவும் உதவும். 

உறுதி செய்தல்: பேசுபவரின் பிரச்னைகள், உணர்வுகளை ஆமோதிக்கவும், அவரது முயற்சியைப் பாராட்டி அங்கீகரிக்கவும், அவரது நன்மதிப்பை எடுத்துரைக்கவும் இது உதவும். 

கூர்மையாகக் கேட்க வேண்டுமென்றால், நீங்கள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.  ஏனென்றால் பேசும்போது கேட்க முடியாது. அதே போல, ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது, உங்கள் மனதில் அவருக்கு எதிராக வாதிடுவதை நிறுத்திவிட்டு, பொறுமையாக, நிதானமாக இருங்கள். அவர் பேசும் வார்த்தைகள், கருத்துகள், உணர்வுகளின்மீது கவனம் செலுத்துங்கள்.

பேசுபவரோடு வாதிடாதீர்கள்; விமர்சனம் செய்யாதீர்கள்; அவரைப் பகைமையோடு நடத்தாதீர்கள். பேசுகிறவரின் கலாசாரப் பின்புலத்தை அறிந்துகொண்டு, அதற்கேற்ற வகையில் அவரைப் புரிந்துகொள்ளுங்கள். பேசுகிறவரை வகைப்படுத்திப் புறக்கணிக்காதீர்கள். பேசுகிறவர், பேசப்படும் பொருள், இடம், பொருள், ஏவல் போன்றவை பற்றிய உங்களின் பாரபட்ச உணர்வுகளை இனம்கண்டு, அவற்றைத் தவிர்த்துவிடுங்கள்.

காது பற்றியும், கேட்பது குறித்தும், கேட்கும் தகவல்களை ரகசியமாகப் பாதுகாப்பது தொடர்பாகவும், நமது தமிழ்ச் சமூகத்தில் புழங்கும் கதை ஒன்று மிக முக்கியமானது.

ஒரு ராஜாவுக்கு ஒட்டுக் கேட்பதில் அலாதிப் பிரியம் ஏற்படவே, தன் காதுகளைப் பெரிதாக வளர்த்துக் கொள்ளும் பொருட்டு ஒரு மருந்தைக் குடிப்பார். அவரது காது கழுதைக் காது போல வளர்ந்துவிடும். இந்த ரகசியம் ஊருக்குத் தெரியாமலிருக்க ராஜா தலைப்பாகை அணிந்துகொண்டார். ஒரு முறை ராஜாவுக்கு முடிவெட்ட வந்தவர் இந்த ரகசியத்தை அறிந்துவிட்டார். இதை வெளியே  சொன்னால் கொன்றுவிடுவேன் என்று அவரை மிரட்டி அனுப்பி வைத்தார் ராஜா. 

மேற்படியாருக்கு இந்த ரகசியத்தை யாரிடமாவது சொல்லாவிட்டால், தலை வெடித்துவிடும் போல இருந்தது. எனவே ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்திற்குச் சென்று ஒரு குழி தோண்டி, அதற்குள் "ராஜா காது கழுதைக் காது' என்று மூன்று முறை உரக்கச் சொல்லிவிட்டு வீடு திரும்பினார். அந்த ராஜ ரகசியம் எப்படி ஊர்முழுக்கப் பரவியது, பின்னர் என்னென்ன விடயங்கள் நடந்தேறின என்று பல்வேறு வடிவங்களில் அந்தக் கதை சொல்லப்படுகிறது.

கதையின் மையக் கருத்துகள் இவைதான்: கூர்மையாகக் கேட்பதற்கு காதுகள் பெரிதாக இருக்க வேண்டிய  தேவையில்லை. பிறர் உங்களிடம் சொல்ல விரும்பாத விடயங்களைத் தெரிந்துகொள்ள, ஒட்டுக் கேட்காதீர்கள். அதேபோல, நீங்கள் கேட்டவற்றைப் பிறரிடம் பகிர்ந்தே ஆகவேண்டும் என்கிற அழுத்தத்துக்கு ஆளாகாதீர்கள். இவற்றை நீங்கள் செய்தால், கேவலப்படுவீர்கள் என்பதுதான் கதையின் பாடம். 

கேட்பதிலுள்ள சில சூட்சுமங்களைப் புரிந்துகொள்ள ஓரிரு செய்முறைப் பயிற்சிகள் உங்களுக்கு உதவலாம்:

(1)  நான்கைந்து நண்பர்களை அமர்த்திக்கொண்டு, பத்து வார்த்தைகளை வேகமாகச் சொல்லிவிட்டு, எத்தனை வார்த்தைகளை அவர்கள் உள்வாங்கி, நினைவில் நிறுத்தி, திருப்பிச் சொல்ல முடிகிறது என்று பாருங்கள். பெரும்பாலானவர்களால் மூன்று முதல் ஐந்து வார்த்தைகளுக்கு மேல் சொல்ல முடியாது.

(2) நண்பர்கள் பத்து பேர் ஒரு வட்டமாக அமர்ந்துகொள்ளுங்கள். நீங்கள் ஒரு வாக்கியத்தை உங்களுக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை மட்டும் சொல்லுங்கள். அவரும் இதேபோல தனக்கு வலதுபக்கம் இருப்பவரின் காதில் ஒரே ஒரு முறை அதைச் சொல்லட்டும். இப்படியே அந்த வாக்கியம் அந்த வட்டத்தைச் சுற்றி உங்களிடம் வந்து சேரும்போது, எப்படி உருமாற்றம் பெற்றிருக்கிறது என்று பாருங்கள். நமது கேட்கும் திறன் எவ்வளவு மோசமான நிலையில் இருக்கிறது என்பது புரியும்.

-சுப.உதயகுமாரன்

Sunday 9 August 2020

கலீல்ஜிப்ரான்

என் கதவில் எழுதி வைத்தேன்

"நயவஞ்சக குணத்தை வெளியே விட்டுவிட்டு உள்ளே வாருங்கள்"

யாரும் என்னை சந்திக்கவேயில்லை

-கலீல்ஜிப்ரான்

Saturday 8 August 2020

அரவிந்தர்

விலங்குகளிலும் பகுத்தறிவு உண்டு.ஆனால்,மிருக உடலில் அது சரியாக வளர்ச்சி பெறுவது இல்லை.மனிதனுக்கும் விலங்குக்கும் வேறுபாடு அது அல்ல..
மிருகநிலை என்பது உடலுக்கு முழுவதும் அடிமைப்பட்டுக் கிடப்பதே.
உடலின் மீது வெற்றி,அக விடுதலைக்கான முயற்சி என அதுதான் மனிதனின் தனித்துவம்

-அரவிந்தர்

Thursday 6 August 2020

ராஜா சந்திரசேகர்

தொடர்பு எல்லைக்கு வெளியில் இருப்பவர்கள் கிடைப்பதே இல்லை. தொடர்பு எல்லைக்கு  உள்ளே இருப்பவர்கள் பேசுவதே இல்லை.

   - ராஜா சந்திரசேகர்

ஜென் கதை

அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரை ஒன்றின் மேல் சவாரி செய்பவனை பார்த்து சாலை ஓரமாக நிற்பவன் கேட்கிறான்..
எங்கே போய்க் கொண்டிருக்கிறாய்? குதிரை ஓட்டியோ எனக்குத் தெரியாது. 'குதிரையைக் கேள்' என்கிறான்.நம் நிலையும் அதுதான்.

-ஜென் கதை

Tuesday 4 August 2020

புலமைப்பித்தன்

தேவைகளை விரிவுபடுத்திக்கொள்ளாமல் இருந்திருந்தால், அந்தத் தேவைகளுக்காகத் தேவையில்லாமல் பாடுபடுகிற வாழ்க்கை முறை வந்திருக்காது. கோட்டையைப் பிடிக்கப் போவதாக நினைத்துக்கொண்டு வந்து, வாழ்க்கையையே கோட்டை விட்டிருக்கிறேன்” 

-புலமைப்பித்தன்

Monday 3 August 2020

ஜெமோ

‘அவையத்து நாணுதல்’ என்பது ஒரு பண்புநலனாகவே தொன்றுதொட்டு தமிழ்ச்சூழலில் சொல்லப்பட்டுவருகிறது. அது என்ன? சான்றோர் முன் பிழையாக வெளிப்பட்டுவிடாமலிருக்கும் எச்சரிக்கைநிலை. அவையிலுள்ளோர் முன் குறைவாக தோன்றக்கூடாது என்னும் கவனம். இது கற்றல்நிலையில் மிக அவசியமான ஒன்று. எந்த அவைக்கும் இது பொருந்தும்.

அவைநாணுதல் ஏன் தேவை? அது நாம் மேலும் கற்பதன்பொருட்டே தேவையாகிறது. கல்வியில் நமக்குத் தேவையான முதல்தேவை என்பது நமக்கு என்னென்ன தெரியாது, நம் நிலை என்ன என்னும் தன்னுணர்வுதான். அறியாமையை அறியாதோர் அறிவையும் அறியமுடியாது. அறிவதற்கான கூர்மையும் முயற்சியும் உருவாகவேண்டும் என்றால் நாம் அறியாதவை எவை என்று நமக்குத்தெரியவேண்டும்.

அது ஒருவகை பணிவுதான். நாவை அடக்கிச் செவியை திறந்து வைத்திருத்தல். எங்கும் நம்மை முன்வைப்பதற்குப் பதிலாக நமக்கு கற்பிக்கக்கூடியவர்கள் தங்களை வெளிப்படுத்துவதற்கான இடத்தை அளித்து நாம் கற்பவராக அமர்ந்திருத்தல். பெரிய அவையையும் பெரியவர்களையும் நம் ஆசிரியர்களாக எண்ணுதல். மேலதிகாரிகள் முன் பணிகிறோமே, கொஞ்சம் ஆசிரியர்கள் முன்னும் பணிந்தால்தான் என்ன?

நம் சூழலில் அவைப்பணிவு என்னும் வழக்கம் மிகக்குறைவு. உண்மையில் இதை இன்றைய தலைமுறையில் எவருமே நமக்குச் சொல்லித்தருவதில்லை. நான் முன்பு எழுதிய ஒரு அனுபவக்குறிப்பில் ஒரு நிகழ்வைச் சொல்லியிருந்தேன். அ.கா.பெருமாளுடன் நான் ரயிலில் பயணம்செய்துகொண்டிருந்தேன். எங்கள் பேச்சைக் கேட்ட ஒரு பயணி அ.கா.பெருமாள் யார் என்று கேட்டார். தமிழகத்தின் முதன்மையான ஆய்வாளர்களில் ஒருவர், அரசு விருதுபெற சென்னை செல்கிறார் என்று நான் சொன்னேன். அவர் சுசீந்திரம் ஆலயம் பற்றி எழுதியிருக்கிறார் என்றேன்

அந்தப்பயணி ஒரு கேள்விகூட அ.கா.பெருமாளின் ஆய்வுகள் பற்றி கேட்கவில்லை. சுசீந்திரம் பற்றி அவருக்குத்தெரிந்த ஆரம்பச்செய்திகளை நீட்டி நீட்டிச் சொல்ல தொடங்கினார். அ.கா.பெருமாளை பேசவே விடவில்லை. ஒரு கட்டத்தில் கடும் சினம் அடைந்த நான் ‘உன் வாழ்நாளில் ஒரு ஆய்வாளரை பார்த்திருக்கிறாயா? அவரிடமிருந்து ஒரு வார்த்தைகூட உனக்கு தெரிந்துகொள்வதற்கு இல்லையா?’ என்றேன்

அந்நிகழ்வைப்பற்றி பேசும் ஒருவர் முரட்டடியாக ‘ஏன் ஒரு சாமானியன் பேசக்கூடாதா?’ என்றெல்லாம் கேட்கலாம்தான். ஆனால் நமக்கு ஏன் ஓர் அவையிலிருந்து, ஓர் அறிஞனிடமிருந்து சிலவற்றை கற்றுக்கொள்ளவேண்டும் என்று தோன்றுவதே இல்லை? ஏன் நாமே பேசிவிடவேண்டும் என்று தோன்றுகிறது? அந்த மனநிலையை நாம் கண்காணிக்கவேண்டும், புரிந்துகொள்ளவேண்டும். நம்மை பாமரர்களாக நிலைநிறுத்துவது அதுதான்

-ஜெமோ

Sunday 2 August 2020

பொ.அகத்தியலிங்கம்

நீர்நிலை குறித்து சு.பொ.அகத்தியலிங்கம் அவர்களின் கட்டுரையிலிருந்து

*ஊருணி -ஊர் நடுவே உள்ள குடிநீர் குளம்

*இலஞ்சி-ஒரு சிறிய குடிநீர் தேக்கம்

*கட்டுங்கிணறு-சரளை நிலத்தில் வெட்டி இருப்பார்கள்.செங்கல்லால் ஆன உட்புறச்சுவர்

*கலிங்கு-ஏரி முதலிய நீர்தேக்கம் உடைப்பு எடுக்காமலிருக்க  ஷட்டர் மாதிரியான கட்டமைப்பு

*கால்-நீர் ஓடும் வழியைக் கால் என்கிறோம்

*கால்வாய்-ஏரி,குளத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் பாயும் கால் வழி

*குட்டை-கால்நடைகளை குளிப்பாட்ட பயன்படும் நீர்நிலை

*குட்டம்-பெரிதாக இருக்கும் குட்டை

*குண்டு-சிறிய அளவில் குளிக்கும் நீர்நிலை/செயற்கை நீச்சல் குளம் போல

*குண்டம்-குளிப்பதற்கு  உள்ள சிறிய களம் குண்டம்

Saturday 1 August 2020

நா.முத்துக்குமார்

ஏன் எல்லா பெண்களும்
தலையணை உறைகளில் 
வாத்துகளையே
வரைகிறார்கள் 

வாத்துகள் இறக்கை 
இருந்தும் 
அதிக உயரம் பறப்பதில்லை
பிறந்த வீடு, புகுந்த வீடு
எனப் பெண்களை 
போலவே 

தண்ணீருக்கும்,தரைக்கும் அலைபாய்வதே
வாத்துகளின் வாழ்க்கை 

-நா.முத்துக்குமார்

-நா.முத்துக்குமார்

நானறிந்த எம்ஜிஆர்கள்
 சீக்கிரம் 
செல்வந்தர்களாகிவிடும் 
சினிமா கதைகள் 
போலல்லாமல்
 சென்ற முறை பார்த்த போதும்
 அவர் ரிக்சாதான் 
ஓட்டிக் கொண்டிருந்தார் 

-நா.முத்துக்குமார்