Wednesday 24 October 2018

கற்றதும் பெற்றதும்-55

கற்றதும் பெற்றதும்-55
*மணி

#ஏ.எம்.ராஜா
-மணிகண்டபிரபு

பெரும்பாலானோர் சினிமாவில் வரும் பாட்டுக்கள் அனைத்தும் நடிகர்களே பாடுவார்கள் என நம்பிக்கொண்டிருந்த காலம். அப்போது விஜய் சேதுபதியின் முந்தைய வெர்சன் மாதிரி ஜெமினியின் படம் வித்தியாசமான படங்களாய் இருக்கும்.தம் கட்டி வசனம் பேசுவதோ,சதா சண்டையிடுவதோ இல்லாமல் அசால்டா படங்களில் ஸ்கோர் செய்வார்.

அப்போது தான் அந்த வசீகர குரல் வரும்.இன்னும் நூறு வருசம் கேட்டாலும் மக்காத மைக்ரான் குறைந்த ப்ளாஸ்டிக் மாதிரி "மிஸ்ஸியம்மா" படத்தில் வரும் "வாராயோ வெண்ணிலா..வே கேளாயோ எங்கள் கதையே". அந்த மெட்டும் பாட்டும் அவ்வளவு ஈர்ப்பு.என்ன இப்படி ஒரு குரல்னு சிலாகித்து பார்த்ததுண்டு.

அப்புறம் தான் அது ஏ.எம் ராஜாவின் கைவண்ணம் எனப் படித்தேன்.அப்படத்திலேயே மெல்லிய நீரோடை போல் தொடங்கும் "பிருந்தாவனமும் நந்தகுமாரனும் யாவருக்கும் பொது செல்வமென்றே" என்ற பாடலில் மெட்டும் பாட்டோடு பிணைந்திருக்கும்.

#கல்யாணப்பரிசு

ஸ்ரீதரின் கல்யாணபரிசு முதன்முதலில் முக்கோண காதல்கதையை அறிமுகப்படுத்தியவர்.முதல்பாதி முழுக்க ஜாலி. பின்பாதி முழுக்க இறுக்கம்.தமிழில் ஏ.எம்.ஆர் க்கு முதல்படம்.

காட்சிகளால் மிரட்டும் ஸ்ரீதர் க்கு பக்க பலமாய் இருந்தது இவரின் பாடல்களே.படக்கதை முழுவதையும் ஒரு பாடலில் "காதலிலே தோல்வியுற்றான் காளை ஒருவன்" எனும் துக்கத்தை அனைவரின் தொண்டியிலும் சேர்க்கத்தெரிந்தவர்.. படத்தின் முற்பகுதியில் "வாடிக்கை மறந்ததும் ஏனோ" வில் துள்ளலிசை கொடுத்திருப்பார். குரலிலும் வாழ்விலும் இவருக்கு இணையான் இணையர் பாடகி ஜிக்கி.

"உன்னை கண்டு நானாட" எனும் பாடல் பேத்தா சாங் போல் பின்பு சோக கீதத்திலும் ஒலிக்கும்.

தனித்துவமான குரலில் "துள்ளத்தான மனமும் துள்ளும்" பாடலில் உருக வைத்திருப்பார். "துன்பக்கடலை தாண்டும்போது தோணியாவது கீதம்" னு பாடும்போது மெல்லிய குரலில் உச்சத்தை தொட்டிருப்பார் ஜிக்கி.

#தேன் நிலவு

கல்யாண பரிசு கூட்டணி அப்படியே தொடர்ந்தது.இம்முறை இளமை ததும்பும் கதை.ஜெமினி-வைஜெயந்தி மாலா அறிமுகப்பாடல்.இசைக்கு குதிரை செல்கிறதா அல்லது குதிரை நடைக்கு இசை அமைத்ததா எனும்படி "பாட்டு பாடவா" பாட்டு. ஒரு பெப்பியான பாடல்.

மெலடியில் மயிலிறகால் வருடியது "நிலவும் மலரும் பாடுது" எனும் பாடல்.துடுப்பால் நீரை தள்ளி படகு முன்னேறுவது போல் இசையும் நம்மை இழுத்துக்கொண்டு முன்னே தள்ளும்.

கர்நாடக இசையில் இமயச்சாரலில் "காலையும் நீயே" பாடலும்,  "சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம்" பாடல் துள்ளலிசையுடன் அமைந்த ஒன்று. இதே சாயலில் ராஜாவும் இதயம் படத்தில் ஓ பார்ட்டி நல்ல பார்ட்டிதான்,ராசாவின் மனசிலே வில் வரும் "பாரிஜாத பூவே" ஏ.எம். ராஜாவின் சாயல்படி அமைத்திருப்பார்.

#என் தனிமை கிண்ணத்தில் உள்ளது. யாரேனும் பருக வருவார்கள் என..!

என்பது தஸ்தாவெஸ்க்கி புகழ்பெற்ற வரி.இது போல் தனிமையின் சிறப்பை ஆடிப்பெருக்கு படத்தில் "தனிமையிலே இனிமை காண முடியுமா" பாடலில் குளிர்ந்த இரவில் மேலும் குளுமையான சுசீலா வின் குரலில் கேட்பது தெய்வீகம்

#பெற்ற மகனை விற்ற அன்னை படத்தில் வீணை இசையுடன் துவங்கும்  "தென்றல் உறங்கிய போதும்" பாடலின் சரணத்தில் கேட்டால் குடை ராட்டான் தூரியில் கீழுறங்கும்போது ஏற்படும் மெல்லிய உண்ர்வு போல்

"நீல இரவிலே தோன்றும் நிலவைப் போலவே.. நிலவைப்போலவே
வாலை குமரியே நீயும் வந்த போதிலே .. வந்தபோதிலே"

இதய வானிலே இன்ப கனவு கோடியே ... கனவு கோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே ... ஆடும் போதிலே"

எப்போது கேட்டாலும் மகிழ்வு ஏற்படும்

#எம்.ஜி.ஆருக்காக இவர் பாடிய என நினைக்கிறேன்.

"மாசிலா உண்மைக்காதலே" மற்றும்

குலேபகாவலியில் "மயக்கும் மாலைப் பொழுதே நீ வா வா..இனிக்கும் இன்ப இரவே நீ வா

#தேன் உண்ணும் வண்டு மாமலரை கண்டு பாடல் இனிமை நிரம்பிய பாடல்

#சக பாடகியான ஜிக்கியை காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த இசைத் தம்பதியர்தான் மும்பை சென்று இந்திப் படத்துக்காகப் பாடிய முதல் தென்னிந்தியப் பாடகர்கள். ராஜா சிங்களப் பாடல்களும் பாடியுள்ளார்.

#"காத்திருந்தேன் தனியே" பிரசாந்த் நடித்த ராசா மகன் திரைப்படத்துக்காக ஏ.எம்.ராஜா புதல்வர் சந்திரசேகரைப் பாடவைத்தார் இளையராஜா

#பஞ்சு அருணாசலம் இளைய ராஜாவின் திறமையை பார்த்து ராஜா (ராசய்யா) எனும் பெயரை ஏ.எம் ராஜாவிற்கு அடுத்து நீதான் எனும் நோக்கில் சூட்டிய பெயரே இளையராஜா. ராஜாவும் ஏ.எம் ராஜா இசைக்குழுவில் கிதார் வாசித்திருப்பது குறிப்பிடத்தக்கது

#நெல்லை அருகே ரயிலில் ஏற முயன்றபோது, எதிர்பாராவிதமாக கால் தவறி விழுந்து 59-வது வயதில் இசைஞனை இயற்கை அணைத்துக்கொண்டது.

#இதென்ன பழைய பாட்டை சிலாகிப்பதாக நினைக்காமல் இசைக்கு எல்லை ஏது.மனதை வருடும் மயிலிறகை கொண்டது ஏ.எம்.ராஜாவினுடையது.ஒரு முறை கேட்டுப்பாருங்க.

தோழமையுடன் மணிகண்டபிரபு

கற்றதும் பெற்றதும்-54

கற்றதும் பெற்றதும்-54
*மணி

பழக்கத்தில் 'நல்ல பழக்கம்',
'கெட்ட பழக்கம்' என்று இல்லை.
'விடக்கூடிய பழக்கம்',
'விடமுடியாத பழக்கம்'
இப்படி இரண்டுதான்.
-அ.முத்துலிங்கம்

#அ.முத்துலிங்கம் கட்டுரைகள்

அ.முத்துலிங்கத்தின் கட்டுரைகளாகட்டும்
கதைகளாகட்டும் எப்போதும் சுவாரஸ்யமானவை.அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறிய அத்தனை அம்சங்களும் இவரின் எழுத்துக்களில் இருக்கும்.போகிற போக்கில் ஒரு செய்தியை தட்டிவிட்டு போவார்.அவ்வாறு ஒரு இடத்தில்

" அந்தக் காலத்தில் பாடல்களை ஏடுகளில் எழுதி பாதுகாப்பார்கள். பழைய ஏடுகள் ஒடிந்தும், முறிந்தும் செல்லரித்தும் கிடக்கும். பாடல்களில் பாதி அழிந்துபோயிருக்கும். அவற்றை ஒட்டி கொடுப்பதற்கென்றே சில புலவர்கள் இருந்தார்கள். சொந்தமாகப் பாட அவர்களுக்கு வராது ஆனால் விடுபட்ட வரிகளை ஊகித்துப் பாடிவிடுவார்கள்.ஒட்டிக் கொடுப்பதால் அவர்களுக்கு "ஒட்டக்கூத்தர் என்று பெயர்

#கடன் அட்டை

ஒருகாலத்தில் கிரேடிட் கார்டு வாங்க வங்கியில் தவமிருக்கனும். உங்க ப்ராஜெக்ட் வால்யூ என்ன என்பதுபோல் உங்க வருமானம் எவ்வளவு னு கேட்டு துரத்துவார்கள். அ.மு கனடாவில் கடன் அட்டை வாங்கிய அனுபவத்தை எழுதியிருப்பார்.

இந்த நாட்டில் கடனாளிகள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள் என்று கண்டுகொண்டு கடன் அட்டை வாங்க விண்ணப்பித்தார். ஆனால் வங்கியில் மறுத்துவிடுவார்கள். பின் ஒருவழியாய் வாங்கி அதை உரசும்போதெல்லாம் ஏற்படும் உள்ளூர பயத்தை  அனுபவித்து விளக்கியிருப்பார்.

#சூப்பர் மார்க்கெட் அனுபவத்தை கூறும்போது, சில பெண்கள் லிஸ்ட் நடைவழி ஒழுங்கின்படி லாவகமாக எடுத்து அடுக்குவர்.சில பொருட்கள் முடிவுதேதி 30ஜூன் 2002 என இருக்கும்.ஒரு நாள் முன்பு கூட துல்லியமாய் இருக்கும்.ஓர் இரவு முடிந்தவுடன் பாவனை மீறிவிடும் என எள்ளலுடன் கூறுவார்.

இன்னும் ஒரு விதி இருக்கிறது உங்கள் உடம்பிலிருந்து உயிர் பிரிவதாய் இருந்தாலும் இரண்டு சாமான்கள் மட்டும் வாங்குவதற்காக சூப்பர் மார்க்கெட்டில் நுழையக்கூடாது. இரண்டு வாங்கினால் ஒரு சுத்தியல் இலவசம் என்று இருக்கும் வாங்கிவிடுவீர்கள். இலவசத்தை கண்கள் கண்கள் அகலமாக விரியும்.

#கால்சட்டை வாங்குவதை பற்றி கூறும்போது..அ.மு வின் அண்ணன்கள் போட்ட கால்சட்டை அவர்களுக்கு பற்றாமல்போகும்போது இவருக்கு வரும்.வாழ்நாளில் ஒருமுறையாவது இடுப்பு சரியாய் இருக்கும் கால்சட்டை எடுக்க ஆசை.ஆனால் அவ்வளவு வேகமாய் வளர்ந்துவிடுவோம் என டெய்லர் நினைத்து பெரிதாய் தைத்துவிடுவார்.கடைசிவரை அதன் பருமனையோ,நீளத்தையோ நிரப்ப முடியாமல் தவிப்பதை கூறுவார்.

ரெடிமேட் ஆடை பார்த்தால் உயரமும் இடுப்பும் ஒத்துப்போவது கல்யாணத்துக்கு பொருத்தம் பார்ப்பதுபோல்.சீக்கிரம் ஒத்துப்போகாது.இடுப்பு பார்த்தீங்கன்னா 32,34 என இருக்கும். 31 இருந்தா அவ்வளவுதான்.நீங்க பாவம் செய்தவர்கள்

#சுந்தரராமசாமியை அமெரிக்காவில் சந்தித்ததை சிலாகித்திருப்பார்.அவர் படிக்கச் சொன்ன புத்தகத்தை சொல்லியிருப்பார் michio kaku எழுதிய vision,Isaac asimov எழுதிய வேதியியல் புத்தகம்,frank mecourt Angela's ashes குறிப்பிட்டார்.சு.ரா எழுதியதில் பள்ளம் சிறுகதையை குறிப்பிட்டிருப்பார்.

/சினிமா பைத்தியமான தாய் ஆற்றுமணலில் அமர்ந்து சினிமா பார்க்கும்போது குழந்தை கூழாங்கல்லை வாயில் போட்டுக்கொள்ளும்.வாய்க்குள் விரலைவிட்டு எடுக்கும் போது படம் பார்க்கும் சுவாரஸ்யத்தில் குழந்தையின் கண்ணை நோண்டிவிடுவாள்.பின் அவள் இறந்துபோக அவளின் கண்ணை பிள்ளைக்கு பொருத்துவார்கள்.

அவன் பெரியவனாவதும் கஷ்டமில்லையே என்றதும் ஒண்ணுமில்ல.ஆனா பார்வை இல்லே.பள்ளம்தான் ரொம்பிச்சு என்கிறான் அவன்./

இதை படிக்கும்போது மனம் கணக்காதவர்கள் இல்லை

#தொ.பரமசிவத்தை சந்தித்ததை பிரம்மிப்பாக சொல்கிறார்.சினிமா பாட்டு புக் காலில் பட்டாலும் தொட்டுக் கும்பிடச்சொல்லும் குடும்பத்திலிருந்து வந்தவர் தொ.ப.பரிட்சையில் ஒரு கேள்விக்கு தனக்கு தெரிந்த அத்தனையும் எழுதுவிடுவாராம். இதனால் எல்லா கேள்வியும் எழுதவே இல்லையாம்.

கிறித்தவ பள்ளியில் படிப்பவருக்கு தெரியும்.மாதம் இருமுறை நற்கருணை வீரன் வரும். அப்போது அதை வாங்குபவனை பெரிய இலக்கியவாதி ரேஞ்சுக்கு பார்ப்பார்கள்.வாசிப்பு ஆரம்பித்தது அப்போதுதான்.நான் பிஷப் பள்ளியில் ஆறாம்வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வாங்கினேன். தொ.ப காலணா காசு கொடுத்து வாங்கியதாய் சொல்லியிருப்பார்.

தொ.ப சொல்லியிருப்பார் "இன்னும் ஒரு நூற்றாண்டு காலம் தமிழ்நாட்டில் சாதி அழிய வாய்ப்பில்லை.உலகமாக்கலின் தாக்கத்திலிருந்து நாடுகள் தப்ப முடியாது.போராடிக் கொண்டிருக்கும் எந்த உயிரினமும் தன்னை அழிவிலிருந்து மீட்டுக்கொள்ளும்."டாம் மாமாவின் இருட்டறை எனும் புத்தகத்தை ஒரே மூச்சில் வாசித்து இலக்கிய பயணத்தை துவங்கிய தொ.ப விடைபெறும்போது வியந்து பார்த்ததை பதிவு செய்கிறார்.

#மனதை கவர்ந்தவை

# மனிதனால் படைக்கப்பட்ட எல்லா பிரச்சனைகளும் மனிதனால் சமாளிக்க கூடியவையே

* ஆம்புலன்ஸ் போலீஸ் இன்னும் அவசர வாகனங்கள் வந்தால் ஒதுங்கி கரையில் நிற்க வேண்டும்.

*என் புத்திசாலித்தனத்தை ஒழுகாமல் பார்த்துக் கொண்டேன்

*உங்க சட்டை அழகாயிருக்கிறது. ஒரு பேராசிரியரிடம் பேசவேண்டிய முதல் வசனம் அல்ல

#கணிப்பொறிக்குள் நுழைந்துவிட்ட தமிழ்,கோயில் கருவறைக்குள் நுழைய முடியவில்லையே- குன்றக்குடி அடிகளார்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday 22 October 2018

கற்றதும் பெற்றதும்-53

கற்றதும் பெற்றதும்-53
*மணி

*மண வாழ்க்கை வெற்றியடைய இருவர் தேவை;தோல்வியடைய ஒருவர் போதும்

#இல்லறம்
-அப்துற்-றஹீம்

இல்லறம் குறித்து எத்தனையோ புத்தகங்கள் இருந்தாலும் 1960ல்  அப்துற் றஹீம் எழுதிய இப்புத்தகம் அருமையானது.இல்லறம் குறித்த அனைத்து பொன்மொழிகளையும் மேதைகளின் வாழ்வில் நடந்தவற்றையும் சுவைபட எழுதியிருப்பார்.இல்லறம் குறித்து பள்ளிப்பருவத்தில் படித்த ஓ ஹென்றி எழுதிய christmas gift கதைதான் நினைவுக்கு வருகிறது. வறுமையில் வாடும் ஒரு தம்பதிகள்.கிறிஸ்மஸ் வருகிறது. தன் மனைவிக்கு பரிசு தர எண்ணி அவளுக்கு ஒரு தலை முடியை ரசிக்கும்பொருட்டு அழகிய ப்ளாட்டின் சீப்பு வாங்க தன் கடிகாரத்தை விற்று வாங்குகிறான்.தன் கணவனுக்கு பரிசு அளிக்க விரும்பி தன் தலைமுடியை விற்று வாட்ச் ஸ்டிராப் (கடிகார சங்கிலி) வாங்குகிறாள்.

ஒருவரையொருவர் சந்தித்து பொருள் மாற்றபோது தான் தெரிகிறது ஒருவருக்கும் உபயோகமில்லையென. இருப்பினும் என்ன கொடுப்பதற்கு அன்பு இருப்பதென கருதி கொண்டாடுவதாய் கதை முடியும். அந்த அன்புதான் இல்லறத்தின் மைலெஜ் கொடுக்கும் ஆயில்.இப்புத்தகத்தில் நான் ரசித்ததில்.சில

#இல்லறம்

ஒரு தேவதை ஆணையும் பெண்ணையும் ஒன்றாய் படைத்தது. மற்ற தேவதை வந்து பிரித்துவிட்டதால் தங்களின் மற்றொரு பாதியை கண்டுபிடிக்கும் வரையில் தேடி அலைந்து கொண்டிருப்பதாய் ஒரு கதை. திருமணம் செய்து கொள்வதன் அவசியத்தை கூறும்போது வரலாற்றாளர் மன்னர்களை மேற்கோள் காட்டி இளமை மனம் ஒழுக்கத்திற்கு வழிகோலும் என்றார்.காதலே சிறந்தது என்பதற்கு பைரனின் வரியான "ஒருவன் தான் காதலிக்கும் பெண்ணோடு வாழ்வதைவிட அவளுக்காக இறந்துவிடுவது எவ்வளவோ எளிதானது! என காதலைவிட இல்லறதின் மேன்மையை கூறுகிறார்.

#இல்லறம் புகும் முன்

திருமணத்தில் அழகு மிக முக்கிய இடம்பிடிக்கிறது.அழகு குறித்து விரிவாய் கூறி ஒவ்வொர் ஆணும் பெண்ணும் தன்னுடைய அழகுக்கேற்றவரை மணக்கலாம். ஒரு அறிஞர் சொன்னது போல் இருவகை மணமுண்டு. ஒன்று நீ காதலுக்காக மணமுடித்தால் நல்ல இரவையும் கெட்ட பகலையும் பெறுவாய். பணத்துக்காக மணமுடித்தால் மகிழ்ச்சிகரமான நாட்கள் இல்லாமல் போய்விடும்.துன்பநாட்கள் இருக்காது

#மணப்பெண்

பெண் முத்தைப்போன்றவள். கடலில் இருந்து என்ன பயன். மாலையாக அணியப்பெற்றால் தான் பெருமை.புகுந்தவீட்டில் சென்றபின் சில நாள் கழித்து ஒரு சலசலப்பு வரும்.மனைவிக்காக பேசுவதா,மதருக்காக பேசுவதா என குழம்பி அமைதி காக்கும்போது ஊர் அவனை பேசும்.பட் இந்த டீலிங் எனக்கு பிடிச்சிருக்குனு சைலன்ட் மோடுல சந்திராயானுக்கே ராக்கெட் விடும்.அனுபவம் வந்துவிடுகிறது.

தோட்டா எழுதிய துணுக்கு "மனைவி பக்கமா,அம்மா பக்கமானு வரும்போது பீரோ பக்கம் நிற்பவனே உண்மையான கணவன்.

இந்த இடத்தில் கிருஷ்ணன் நம்பி எழுதிய மாமியார் வாக்கு கதை நினைவுக்கு வருகிறது. ஊர்ல எலக்சன் வரும்.மாமியார் ஒருகட்சிக்கு ஓட்டு போட்டுட்டு மருமகளையும் அதே சின்னத்துக்கு ஓட்டுப்போட சொல்கிறார்.

மருமகள்  இவ்விசயத்தில் கறாராய் நான் வேறு கட்சிக்குதான் ஓட்டுபோடுவேன் என முடிவுசெய்து ஓட்டுப்பெட்டி வரை சென்று இறுதியில் மாமியார் சொன்ன கட்சிக்கே ஓட்டுப்போடுகிறார். மாமியார் வாக்கினை நிறைவேற்றுவதாய் கதை முடியும்.

#ஐந்திணை ஐம்பதில் பலராலும் மேற்கொள் சொல்லும் பாடல்

சுணையிற் சிறுநீரை எய்தாதென் றெண்ணிப்

பிணைமான் இனிதுண்ண வேண்டிக்-கலைமாத்தன்

கள்ளத்தின் ஊச்சம் சுரம் என்ப காதலர்

உள்ளம் படர்ந்தநெறி

-தாகத்தால் அலைந்த இரு மான்கள் தத்தம் இணைகள் குடிக்க வேண்டுமென இருக்கும் சிறிது நீரில் வாயை மட்டும் வைத்து குடிக்காமல் இருக்கும் அற்புதக்காட்சி.

#ஒரு பெண்ணின் நா தான் அவளுடைய வாள்;அதனை அவள் துருப்பிடிக்க அனுமதிப்பதே இல்லை.அதனை நல்வழியில் பயன்படுத்த வேண்டுமென கூறுகிறார்.ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதை புத்தகம் முழுவதும் அதிக மேற்கோள்களுடன் சொல்லியிருப்பார்.ஆழம் விழுதுகள் போல்

உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேர் என நீ இருந்தாய்
அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்.மற்றுமொரு கவியரசரின் வரிகள்

"வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்.அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday 21 October 2018

கற்றதும் பெற்றதும்-52

கற்றதும் பெற்றதும்-52
*மணி

சிந்திப்பதற்கு நாம் வைத்திருந்த மூளையை
தங்கள் சேமிப்புக்கு உரியதாக
மாற்றிக் கொள்கின்றனர்

-யுகபாரதி

#மராமத்து
-யுகபாரதி

யுகபாரதியின் கவிதை எப்பொழுதும் மனதிற்கு நெருக்கமானது.சிறு கவிதை தொகுப்பாக நேர்நிறை பதிப்பில் வெளியிட்டிருப்பார்.அதில் ஒவ்வொரு கவிதை தொகுப்பிலும் யாரோ ஒருவருக்கு அர்ப்பணம் செய்திருப்பார்.அதில் ஒரு புத்தகத்தில் ""என் புத்தகத்தை வாசித்தீர்களா என ஏக்கம் தொனிக்க கேட்கும் எழுத்துக்காரர்களுக்கு"
டெடிகேட் செய்திருப்பார்.உண்மையில் கவிதைப்புத்தகம் வெளியிட்ட அனைவரும் இந்த வார்த்தைகளை கடந்திருப்பதை சுட்டியிருப்பார்.

ஒருகவிதைக்கு தேவையானது சுருங்கச்சொல்லுதல்,
புரியவைப்பது,ஆழமாய் சிந்திக்க வைப்பது இவையாவும் இவரின் கவிதையில் மின்னும்.
முதல்கவிதையே எடுத்துக்காட்டு

#பிழைக்க

கரைபெருக ஓடிய
காவிரியில் நீச்சலடித்தவர்கள்
தங்கள் மகன்களை
பழக்கிக் கொண்டிருக்கிறார்கள்
வாட்டர்கேன் தொழிலுக்கு

ஒரு ஊரின் மனநிலையை தம் பதிவில் கொண்டுவருகிறார்.

#இளவரசன் கொலையுண்ட போது ஆனந்தவிகடனில் வந்த இவரின் இக்கவிதை அன்றைய மனிதர்களின் கோர முகத்தை குத்திக்கிழிப்பது போல் இருந்தது. "ரயில்" 'எனும் தலைப்பிட்ட கவிதையில் சாதாரணமாய் துவங்கும்

*எங்கேயும் நிற்காது
குறித்த நேரத்தில் போய்விடும்

இந்த ரயில் இதுவரை
தடம் புரண்டதாகவோ
வழியில் நின்றதாகவோ
தகவல் இல்லை
....
என வர்ணித்து இறுதியில்.இவ்வாறு முடியும்

"சகல ஜீவபட்சிகளையும்
சமமாகவே பாவிக்கும்
ரயிலுக்குத் தெரியுமா?
தனக்குக் கீழேயும் சுழல்வது
சக்கரமில்லை சாதியென்று

பயணிகளின் கவனத்திற்கு
வருவதேயில்லை
போன ரயிலில்
போய்ச் சேர்ந்தவர்களின்
பட்டியல்"

#கவிதை என்பது இயற்கையை பாடுவதோ,பெண்ணை வர்ணிப்பதோ மட்டும் இல்லை.சமூகத்தில் அவ்வப்போது நடக்கும் குற்றம் குறைகளையும் மனிதனுக்கு தெளிவுபடுத்தும் விதத்தில்  "சார் ஒரு கொஸ்டின் கவிதையில்

சோற்றைக் குறைத்தால்
சுகர் வராது
எச்சரிக்கையோடிருந்தால்
எண்பதுவரை சுகவாழ்வு

என அடுக்கி இறுதியில்

"எல்லாமே எளிதுதான்
பிரசங்கம் செய்தவரிடம்
பிரியத்தோடு கேட்டேன்
அசைவத்தை நிறுத்தினால்
ஆக முடியுமா
அய்யராக?

#பழகுதலின் பின் குறிப்பு கவிதையில் இயல்பான நறுக்குகள்

* ஒருவருடைய தயவு
தேவைப்படும் வரை
அவரை நாமோ அல்லது
அவர் நம்மையோ
சொல்லிக் கொள்கிறோம் நேசிப்பதாக

* ஊதியத்துக்காக
எந்த வேலையும் சரியெனில் கூலிப்படையை ஏன் பார்க்கிறோம் குற்றமாக?

*கட்டுக்குள் வாழ்வதெனில் கவலைதான்

* வாசலோடு சிலரை வரவேற்பறையோடு சிலரை கூடத்தில் சிலரை
கொல்லை வரை சிலரை
ஆள் பார்த்தே அரும்புகிறது அன்பு

* நெருக்கத்தில் விலகியும் தயக்கத்தில் பழகியும் முடியவே முடியாத உறவைத்தான் காதல் என்று சொல்கிறோமோ?

#ஜல்லிக்கட்டு தடை விதித்தபோது யுகபாரதியும் தன் எழுத்துகள் மூலம் கிராமத்து மக்களின் மாட்டின் மீதான பாசத்தை தன் எழுத்தில் காட்டிய கவிதை

தொழுவ மாடுகளை குளிப்பாட்டி கொம்புகளில் ரிப்பன் கட்டி குங்குமமும் சந்தனமும் வைத்து சாம்பிராணி புகையில்
ஆராத்தி எடுப்பவர்கள் கேள்வியாவது பட்டிருப்பார்களா?
பசுவதை தடுப்பு பற்றி

#அவ்வப்போது நடைமுறை யதார்த்தத்தை யாராவது சொன்னால் தான் உரைக்கிறது ஆமால என்று

* தேவையை நேரடியாக கேட்க தெரியாதவர்கள் தங்கள் உரையாடலை ஆரம்பிக்கிறார்கள் பாராட்டில் இருந்து

* எல்லா நன்மைகளையும் ஏந்தி வருகிற மழையே யாராவது கூப்பிட்டு இருக்கிறோமா வீட்டுக்குள்

* இவ்வளவு கறாராக பேரம் பேசிய ஒருவனுக்கு கொசுரு வழங்கக்கூடிய பூக்காரம்மா அந்த நேரத்தில் நுகர வைக்கிறாள் மனித வாசனையை

*மணல் திருட்டு குறித்து வற்றிய ஆற்றின் தன் வரலாறாக

நெல்லுக்கே களஞ்சியம் என்று பெயரெடுத்த ஊருதான் சோத்துக்கு வழி இல்லாத சோகத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக அனுப்பி கொண்டிருக்கிறது
ஆறுகளை

*நாடே குப்பையாய்க் கிடக்க
எதை எரிப்பது
இந்த போகியில்?

*எப்பொழுதும் விவசாயின் வலிகளை தன் கவிதை குறிப்பில் கொண்டுவருவார்.கனத்த பெருமூச்சினையும் கண்ணீரையும் நமக்கும் கடத்துவார்.அவ்வகையில்

" இன்று விடுமுறை என தொங்கிக்கொண்டிருக்கும் பலகையை
எழுத்துக்கூட்டி வாசிக்கத் தெரியாமல்
விலையில்லா அரிசி
வரிசையில் நிற்பவனையும்
அழைக்கத்தான் வேண்டுமா? விவசாயியென்று

இது போல் எண்ணற்ற கவிதைகள் படித்தவுடன் சிந்திக்க வைக்கும் இத்தொகுப்பு முழுவதும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday 17 October 2018

கற்றதும் பெற்றதும்-51

கற்றதும் பெற்றதும்-51
*மணி

எல்லோருக்கும் எருமையில் வரும் எமன்,பாரதியின் பெருமை கருதி, அவனுக்கு யானையில் வந்தான்

#யாதுமாகி நின்றாய்
-த.ராமலிங்கம்

பாரதியின் பெருமைகளை நேர்த்தியாகவும்,அதேநேரம் நமக்கு தெரியாத பல்வேறு தகவல்களை தருகிறார் கட்டுரையாளர்." செத்துப்போன திமிங்கலம், ஆழ்க்கடல் நீர் அலைபோல் அடங்கும்.ஆனால் உயிரோடு உள்ள சின்ன செதில் மீன் நதியின் போக்கைத்தன் நாவால் கிழிக்கும். பாரதி ஒரு செதில் மீன் என வலம்புரி ஜான் தன் வாழ்த்துரையில் சொல்வது பொருத்தமானது.

#பாரதி என்றொரு மானுடன்

பிறப்புக்கு பின் தான் இறப்பு என்பது உலகநியதி.ஆனால் கவிஞனுக்கு மட்டும் இறப்புக்குப் பின்புதான் பிறப்பு எனும் கண்ணதாசன் இயற்றிய ஜனனம் கவிதையை கூறுகிறார்.

"ஆஷ்" துரை கொலை குறித்து பாரதியிடம் கூறிய போது,

"இது மகத்தானதொரு சோக சம்பவம்" என எழுதுகிறார்.இது போல் ஒரு விபத்து நடக்க கூடாது. மாற்றுக்கருத்துகளை வெறுக்கலாமே தவிர,மாற்றுக் கருத்து கொண்ட மனிதர்களை வெறுக்க கூடாது என்கிறார்.

கடவுளை கஷ்டத்திலிருந்து காப்பாற்றும் ஒரு கருவியாகவே பார்க்கும் சமூகத்தில், பாரதி தனக்கான வேண்டுதலை சொல்கிறார்

"கிழவனுடைய அறிவு முதிர்ச்சியும்
நடுவயதிற்குள்ள மனதிடமும்
இளைஞனுடைய உற்சாகமும்
குழந்தையின் இதயமும்
தேவர்களே! எனக்கு எப்போதும்
நிலைத்திருக்கும்படி அருள் செய்க!

என்கிறார்

#பத்திரிக்கையில் கேள்வி பதில் தொடரில் "செத்துப்போன பிறகு மறுஜென்மம் உண்டா எனும் கேள்விக்கு பாரதி

*மனோதைரியம் இல்லாதவர் பேடிகள் புழுக்களாக,பிறர் துன்பத்தை தமதின்பமாக விரும்பினோர் பன்றிகளாக, சொந்த பாஷை கற்றுக்கொள்ளாதவர் குரங்காக, இவ்வாறு எழுதிக்கொண்டே செல்கிறார்.

*பயப்பட்டால் பாவமா? எனும் கேள்விக்கு

பயம் எல்லா பாவத்துக்கும் வேர். அதர்மர்த்தை கண்டு நகைக்காமல் எவன் பயப்படுகிறானோ,அந்த நீசன் எல்லா பாவமும் செய்வான்

#பாரதி ஒரு பத்திரிக்கையாளன்

பாரதி ஆசிரியராக பணியாற்றிய காலம் 2மாதங்கள்,பத்து நாட்கள். 1904 ஆகஸ்ட் முதல் நவம்பர் 10ம் தேதிவரை.அவர் வாங்கிய மாதசம்பளம் ரூ17.50.

பத்திரிக்கையில் வேலை கிடைத்ததும் ஆசிரியர் வேலையை துறந்தார்.இறுதிவரை பத்திரிக்கையாளனாய் வாழ்ந்தார்.சுதேசமித்ரன்,இந்தியா, கர்மயோகி பத்திரிக்கை நடத்தினார்.சித்ராவளி இதழ் முழுவதும் கார்ட்டுன் கொண்ட இதழாய் வடிவமைத்தார்.பால.பாரத் எனும் ஆங்கில இதழும் நடத்தினார்.

இந்தியா இதழ் சந்தா விபரம்

எல்லா கவர்மென்டார்க்கு-ரூ50

ஐமீன்தார்,ராஜாக்கள்-30

200க்கு மேற்பட்ட வருமானம் உடையோருக்கு -15

மற்றவர்களுக்கு -3

என இச்சந்தாவில் கூட புதுமையை கொண்டு வந்தார் பாரதி.

ஆர்பத்நாட் எனும் நிதிநிறுவனம் மக்களிடையே பெற்ற நிதியை வசூலித்து திவாலானது.இது குறித்து The arbuthnot disaster என இரு மொழியிலும் எழுதினார். மேலும் சமூக பொறுப்புடன் இது குறித்து thunder bolt "இடி" எனும் த்லைப்பில் தொடர்கட்டுரை எழுதினார்.

#பாரதி என்றொரு புரட்சியாளன்

"வறளுதல்" என்ற சொல்லிலிருந்து வறட்சி,மிரளுதல் என்பதிலிருந்து மிரட்சி,புரளுதல் என்பதிலிருந்து புரட்சி என தோன்றியது.புரளுதல் என்றால் மேல் கீழாவது, கீழ் மேலாவது என பொருள்.

*முன்னோர்கள் செய்தது என்றால் பாரதிக்கு கோபம் வந்துவிடும். பாஞ்சாலி சபதத்தில் முன்பிருந்தோர் காரணத்தாலே எனும் கவிதை பாடுகிறார்." நீங்கள் மட்டுமல்ல;நீங்கள் பிறப்பதற்கு முன்னால் கூட நாட்டில் முட்டாள்கள் இருந்திருக்கிறார்கள் எனும் அவரின் இறுதிவரி அமைந்திருக்கும்.

*ஒளவையின் ஆத்திச்சூடியை காலத்திற்கு ஏற்றதுபோல் மாற்றியிருப்பார்.

ஆறுவது சினம்-ரெளத்திரம்.பழகு

ஞயம்பட உரை-நேர்பட பேசு

கீழ்மை அகற்று-கீழோர்க்கு அஞ்சேல்

சுளிக்கச் சொல்லேல்-வெடிப்புறப் பேசு

சக்கர நெறிநில்-வையத்தலைமை கொள்

இவ்வாறு காலத்துக்கேற்றவாறு பல வரிகளை மாற்றி எழுதி மக்களை சிந்திக்க வைத்திருப்பார்.

#ஞானி

ஒவ்வொரு மனிதனுக்கும் மனதிற்கும் அறிவுக்கும் இடையே போராட்டம் நிகழும்.ஒரு தாளில் புள்ளி ஒன்று வைத்து.முடிவு பெறுகிற வரை கோடு இழுத்து முடிந்து விட்டது என சொன்னால் முடிந்தது தாள் தானே தவிர கோடு அன்று.

என இத்தொகுப்பு முழுவதும்.பாரதியின் எழுதுக்கள் குறித்து ஆராய்ந்து எழுதியிருக்கிறார்.பாரதியை பற்றி தெரிந்துகொள்ள வாழ்க்கை வரலாற்றை படிப்பதோடு அல்லாமல் இதுபோன்ற ஆய்வு கட்டுரைகள் படிக்கும்போதுதான் பாரதியின் உயரம் இன்னும் அதிகரிக்கிறது.இப்படிதான் இவரை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்க வேண்டும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு