Thursday 30 January 2020

கற்றதும் பெற்றதும்-90*மணி

கற்றதும் பெற்றதும்-90
*மணி

ஒரு வளர்ப்பு நாயை மெல்ல மெல்ல பழக்குவது போல,
தண்ணீரை காசு கொடுத்து வாங்குவதற்கு நம்மை பழக்கப்படுத்திவிட்டனர்
-பாரதி தம்பி

#நீர் எழுத்து
-நக்கீரன்

சமீபத்தில் யாரேனும் நல்ல புத்தகங்கள் இருந்தால் ஒன்று பரிந்துரை செய்யுங்கள் என்று கேட்டால் நான் தயக்கமின்றி பரிந்துரை செய்யும் புத்தகம் நக்கீரன் எழுதிய இப் புத்தகமே. கடந்த ஆண்டு 2019ஆம் ஆண்டு புத்தகங்களுடன் புத்தாண்டு எனும் நிகழ்வை அவிநாசி தமுஎகச கிளை நடத்தியது. அதில் என்னை இப்புத்தகத்தின் உரையாற்ற அழைத்ததை நான் எண்ணிப்பார்க்கிறேன். நீர் குறித்த கட்டுரை முதலில் நான் பாரதி தம்பி எழுதிய தவிக்குதே தவிக்குதே என்ற புத்தகத்தை தான் முதலில் வாசித்தேன். அதற்கு பிறகு இப்புத்தகம் நீண்ட நெடிய ஆய்வு தகவலும் நிரம்பியுள்ளன.

#நீர் அதிகாரம்

உலக நீர் வரலாற்றில் பொலிவியாவில் உள்ள கொச்ச பம்பா என்னும்  நகரம் புகழ் வாய்ந்தது. 1998ல் உலக வங்கியிடம் 250 லட்சம் டாலர் கடன் வாங்கியதற்காக தண்ணீரை தனியாருக்கு விட நிபந்தனை விதித்தது.பெக்டெல் நிறுவனம் பொறுப்பேற்ற பின் மழை நீருக்கு கூட கட்டணம் கேட்டது.3ல் 1பங்கை கட்டணம் செலுத்த இயலாமல் மக்கள் தவித்தனர். அப்போது போராடி அந்நிறுவனத்தை விரட்டியடித்தனர்.

 ஆசியாவிலேயே நீர் தனியார்மயமாக்கப்பட்ட முதல் மாநகராட்சி திருப்பூர் தான். புதிய திருப்பூர் பகுதி வளர்ச்சி நிறுவனம் இதில் பெக்டெல் நிறுவனமும் அடக்கம் .அது குறித்து நீண்ட நெடிய கட்டுரை எழுதியுள்ளார். கோவையில் சூயஸ் நிறுவனம் தென்னாப்பிரிக்காவில் மிக நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அதனை விரட்டி அடித்தது. தற்போது அது கோவை நகரின் நீர் விநியோக உரிமையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நீர் விநியோக உரிமையை தனியாருக்கு கொடுத்து பின் மீண்டும் மாநகராட்சியே கையில் எடுத்துக் கொண்டது மைசூர்தான்.

உலகெங்கும் உள்ள மக்களின் ஒரு சாதாரணமான கேள்வி கடல்நீரை குடிநீராக்கலாம் என்பதுவே.
கண்டங்களிலிருந்து ஆவியாகி செல்லும் நீரின் அளவு 70 ஆயிரம் கன கி.மீட்டர் மழையாக கிடைப்பது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன மீட்டர் அதாவது கூடுதலாக 40 ஆயிரம் கன கி. மீட்டர் நமக்கு கிடைக்கிறது. இதனை சேமித்து வைத்து நீர் தேவையை பூர்த்தி செய்யலாம்.
ஒருவேளை கடல்நீரை குடிநீராக்கினால் அதற்குஅதிக மின்சாரம் தேவைப்படும்.
மின் பற்றாக்குறை உள்ள நமக்கு அது கடினம் தான்.அப்படியே செய்தாலும் சொற்ப க.கி.மீ நீர்தான் கிடைக்கும்.

 இதற்கு இடையே நீர் பூங்காக்களில் நீர் வீணடிப்பது பெண்கள் நீருக்காக படும் அவலம் குறித்து தெளிவாக விளக்கியுள்ளார்.மேலும் போர்வெல் போடும் அவலத்தையும் அதிக நீரை உறிஞ்சும் மக்களையும் புள்ளி விபரங்களோடு குறிப்பிடுகிறார் ஆசிரியர்.. இக்கட்டுரையில்

 #ஜான் பெர்கின்ஸ்ஒருமுறை சொன்னார்.. தங்கத்தையும் எண்ணெயையும் சேர்ந்தால் என்ன மதிப்போ அந்த மதிப்பு எதிர்காலத்தில் நீருக்கு இருக்கிறது. எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு நீருக்கு நாம் உரிமையாளர் ஆகி விடவேண்டும். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள்

தேசிய நீர் கொள்கை 2012 ஆம் ஆண்டு ஒருவரை வெளியிட்டது. அதில் நீர் சேவையானது தனியார் வசம் இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பருவமழை குறித்து தனது கட்டுரையில் எல் நினோ லா நினோ பற்றி தெரிவிக்கிறார். அதாவது கடலின் வெப்பநிலை வழக்கத்தைவிட சற்று அதிகரித்தால் அது தான் எல்நினோ. எனினும் அது உருவான நமக்கு தென்மேற்கு பருவமழை குறையும். மாறாக கடலில் வெப்பம் வழக்கத்தைவிட குறைந்தால் அதன் பெயர் லாநினா.  இதனை பெருநாட்டின் கடலில் கணக்கிடுகின்றனர்.

குளிர்கால மழை குறித்து சொல்லும்போது  குளிர்காலத்தில் ஒரு மரம் ஈரப்பதத்தை பனித்துளிகள் ஆக மாற்றி மழையாக தரும். உதாரணத்திற்கு கோவில்பட்டியில் மாதம் சராசரியாக 24 இரவுகளில் மட்டும் பெய்யும்.ஒவ்வொரு நீரிலும் 0.5 மில்லி மீட்டர் அளவுக்கு நீராக மாற்றும். காவிரிப்படுகையில் 52 இரவுகள் பனிபெய்யும் இது சராசரியாக 0.14 மி.மீட்டர் அளவில் பனியை நீராக மாற்றும்.

மதுரை வில்லாபுரம் இடதுசாரி கவுன்சிலர் லீலாவதி நீர் விற்பனைக்கு குரல் கொடுத்ததால்
1997ல் ஏழுபேர் கொண்ட கும்பல் 24இடங்களில் வெட்டி வீழ்த்தியது. நீருக்காக உயிர்நீத்த அந்த லீலாவதிக்குதான் இப்புத்தகத்தை சமர்ப்பித்துள்ளார்.

#ரசித்தது

*பத்து நாளுக்கு ஒரு முறை என்று மாதம் மும்முறை மழை பெய்வதால் இதனை மும்மாரி என வழங்குகிறார்கள்

*தோட்டம் துரவு என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.. தோட்டம் சரி துறவு என்றால்.. பெரிய அளவில் பாசனத்திற்கு பயன்படும் கிணறுதான் துரவு. இதன் நீள அகலம் 1:1,1:2,1:3  எந்த விதத்தில் அமைய வேண்டும்

*உலகின் இரண்டு இடங்களில் குளங்கள் நெருக்கமாக அமைந்துள்ளன. ஒன்று எகிப்து இன்னொன்று தமிழ்நாடு

*வயக்காடு என்பதை ஆங்கிலேயர்கள் உச்சரிக்கத் தெரியாமல் VAYACUT என்றழைக்க அச்சொல்லில் இருந்து V விழுந்து AYACUT ஆகி தமிழிலும் ஆயக்கட்டு ஆக மாறிவிட்டது

*ஆறுகள் தொடர்ந்து நீரை கடலுக்கு அளித்தால் இயற்கை அதை திருப்பி அளிக்கும் என்கிற படத்தை கற்றுக்கொள்ளவேண்டும்

*உலகிலேயே கட்டி முடிக்கப்படாத அணைகள் அதிகம் இருப்பது இந்திய ஒன்றியத்தில் தான்

*தமிழ்நாட்டில் நில அமைப்பில் நீர் ஊடுருவும் தன்மை கொண்ட மண் வகை வெறும் 27 சதவீதம் மட்டுமே, மீதமுள்ள 73 சதவீதம் நிலத்தின் அடியில் பல வித பாறைகள் இருப்பதால் அங்கு நீர் ஊடுருவும் தன்மை குறைவு

*500 சதுர அடி பரப்பளவுள்ள மாடிகளைக் கொண்ட 20 ஆயிரம் வீடுகள்.. மழை நீரை முழுவதும் கிணற்றிலோ நிலத்திலோ சேமித்தால் அது மேட்டூர் அணையின் கொள்ளளவு சமம்

*அதிக நீர் உட்கொள்ளும் தொழில்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் திட்டமிட்டு மூன்றாம் உலக நாடுகளில் தொடங்குகின்றன

இதுதவிர தமிழ்நாடு நீர் கொள்கைக்கான 20 பரிந்துரைகளை பின்னிணைப்பாக ஆசிரியர் கொடுத்துள்ளார்

#கற்றதும் பெற்றதும்

எதிர்காலத்தில் நீர் குறித்தும் அதில் அயல்நாடுகளின் வணிகப் பொருளாகவும் மாறவிருக்கும் நீர் குறித்த எச்சரிக்கை நூல்.இதோடு ஆறுகளை இணைத்தல், தமிழக மழைவளம்,காவிரி, கல்லணை குறித்து அறியாத செய்திகளை பகிர்ந்துள்ளார்.சங்கப்பாடல்களில் நீர் குறித்தும்,கிராமத்து சொலவடை குறித்தும் ஆய்ந்து எழுதுயுள்ளார். எழுதுவதற்காகவே பல இடங்களில் பயணித்தது காணமுடிகிறது.

ஒருகார் ஏற்றுமதியாகும் போது 6இலட்சம் லி தண்ணீர் ஏற்றுமதியாவதாய் படித்த நினைவு. வாழ்வாதார நீரை வணிக ஆதாரத்துக்கு பயன்படுத்துவதை நினைக்கும்போது வேதனை தருகிறது.படிக்கும் அனைவரையும் குற்ற உணர்வுடன் தான் படிக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.நீரை பூமியில் தேடாதே வானத்தில் தேடு எனும் நம்மாழ்வர் வரிகளே நினைவுக்கு வருகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

28-1-20

எதிர்பார்ப்புகள் தான் நம் முதலீடு.அதை கைவிடாமலிருக்க வேண்டும்

-ஷாபு கிளித்தட்டில்
தமிழில் கே.வி.ஷைலஜா

#அன்பினுக்கு அவதி இல்லை.’ என்னை ஆட்கொள்ளும் அன்பு கொஞ்ச நஞ்சமில்லை. ‘அடைவு என்கொல்?’ இதனால் என்ன நேரும்? ‘அறிதல் தேற்றேன்!’

-

மலை மீது ஏறி வரும் இருவர்; அவர்களை நோக்கி இறங்கி வரும் அனுமன். அவர்களை அணுகுவதற்குள் முகத்தோற்றம், உருவம், காட்சியினால் கிடைக்கும் விவரம் என்று ஒவ்வொன்றாக அலசிப் பார்த்துக் கொண்டே முன்னேறுகிறான். அறிவு பூர்வமான விளக்கமும் ஓரளவு கிடைத்தது. உணர்வு பூர்வமாக ‘ஏன் இப்படி ஓர் அன்பு தோன்றுகிறது, எதனால் நான் இவர்கள்பால் ஈர்க்கப்படுகிறேன், என்னை எது இப்படி ஆட்கொள்கிறது’ என்று தன்னைத்தானே கேட்டுக்கொண்டு

வருகின்ற நேரத்திலும் அறிவு முற்றிலுமாக ஒடுங்கவில்லை. ‘இதனால் என்ன நேரும்’ என்று கேட்டுக்கொள்கிறான். அது குறித்த தெளிவின்மையை ‘அறிதல் தேற்றேன்’ வெளிப்படுத்துகிறான். எல்லாம் சில கணங்களுக்குத்தான்.

-கம்பர்

#அசைவ உணவகம்
முனியண்டி விலாஸைப்
போன்றதுதான் இந்தியாவும்
எல்லா மாநிலத்திலும்
இதற்குக் கிளைகளுண்டு

பரிமாறுபவர்கள்
முதலமைச்சர்களையும்
கல்லாவில் இருப்பவர்
பிரதமரையும் நினைவூட்டுவர்

அனைத்து வகை
அசைவமும் வீற்றிருக்கும்
அகலமான தட்டுபோல
நாட்டின் வரைபடம்

தவறுதலாக மட்டுமே
தென்படும்
விலைப்பட்டியல்கள்
பட்ஜெட்கள்

முண்டா பனியன்கள்
சமையற்காரர்கள்
முக்கிய மந்திரிகளாகவும்
மேஜைத் துடைப்பவர்
எதிர்க்கட்சியாகவும்
நடத்தப்படுவர்

ரசமிழந்த கண்ணாடி
பாராளுமன்றமாகவும்
கையலம்பும் நீராக
ஐந்தாண்டுக் கொள்கையும்
நிரந்தரமானவை

-யுகபாரதி

#இன்றெமது ஊரில் எட்டுத் துளிகள் விழுந்தன.அதை மழை என்றெண்ணி மகிழ்ந்தோம்

-மகுடேசுவரன்

# கும்பலே
கோமாளி 
வேடமிட்டு
நடந்தால்
கோமாளிக்கு 
யார் 
சிரிப்பார்?
- புதுமைப்பித்தன்

#ஆச்சர்யத்துடன் அன்னாந்து பார்த்தே பலரை உயரமாக்கி விட்டோம்.
-ராஜா சந்திரசேகர்

30-1-20

# ஹாபி என்பதற்கும்,Pastime என்பதற்கும் entertainment என்பதற்கும் வேறுபாடு உள்ளன.
Hobby-என்பது பணி தவிர நாம் கவனம் செலுத்தும் இன்னொரு செயல்

pastime-பணியைக் காட்டிலும் அதிக அக்கறை செலுத்தும் செயல்.அது ஆரோக்யமானதல்ல

entertainment என்பது வெறும் பொழுதுபோக்கு

-இறையன்பு

# ஒவ்வொருவரும் ஜனாதிபதியாகி அதிகாரம் செலுத்த முடியாது.ஆனால் கணவனாகி மனைவி மீதும், மனைவி தாயாகி குழந்தை மீதும், குழந்தை விளையாட்டு பொம்மை மீதும் அதிகாரம் செலுத்தலாம்.பாவம் பொம்மைக்கு தான் கீழே ஒருவரும் இல்லை.இது ஒரு அதிகாரத்துவம் மிகுந்த சமூகம்.

-ஓஷோ


#எவரும் வருந்திடாத 
பாதைகளில் பயணிப்பதை
சாதுர்யமாய்த்
தவிர்த்துவிடுபவர்களில்
என்னிடம் ஒரு 
கேள்வி இருக்கிறது
சாகசங்களே அற்ற உங்கள்
பாதைகளில் பயணிக்க
நைந்துபோன செருப்பு போதாதா

ராம்ப்ரசாத்

மக்கள் தொலைக்காட்சியில் என் வரிகள்

க்ற்றதும் பெற்றதும்-89-*மணி

கற்றதும் பெற்றதும்-89
*மணி

உடல் சந்தை நான் கற்பனை செய்திருந்ததை விட மிகப் பெரியது
-ஸ்கார்ட் கார்னி

#சிவப்புச்சந்தை
-ஸ்கார்ட் கார்னி

ஜூனியர் விகடன் கழுகுப்பார்வை சிறப்பிதழில் புத்தியை துலக்கிய புத்தகங்கள் பட்டியலில் சிவப்பு சந்தை புத்தகம் ஒன்று. எதேச்சையாக நான் நூலகத்தில் பார்த்துக்கொண்டிருந்தபோது இப்புத்தகத்தை கண்டறிந்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. உடல் சந்தை குறித்து நாம் அறியப்படாத பல விஷயங்களை இப்புத்தகம் பேசுகிறது.

மூன்று வகையான சந்தைகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர். கருப்புச் சந்தை என்பவை சட்டத்திற்குப் புறம்பான பொருட்களான துப்பாக்கிகள் போதைப்பொருட்கள் கடத்தல் போன்ற சேவை பரிமாற்றம். திருட்டு டிவிடிவடி ஆகியவை சாம்பல் சந்தை, வருமான வரி ஏய்ப்பு போன்றவை வெள்ளைச்சந்தை.மனித உறுப்புச் சந்தையே சிவப்பு சந்தை எனப்படுகிறது.

#மனித உடல்

உன் விரல்கள் பத்தும் மூலதனம் என்பார் தாராபாரதி.உண்மையில் இதை படித்துப் பார்த்த போது உடல் முழுக்க மூலதனம்தான் வணிகத்துக்கு கார்ப்ரேட்டுக்கு.ஒரு துறவியர் மடத்தில் ஒரு இளம் பெண் துறவி இறந்துவிடுகிறார்.அவள் பெயர் எமிலி. பிரேத பரிசோதனையில் உறுப்புகளை பிரிக்கின்றனர். மரணித்த பின்பு நேரும் கொடுமைகளை விவரிக்கும்போது உடல் சில்லிடுகிறது.

மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு மருந்துகளை சோதிக்க உயிருள்ள மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

#எலும்புத்தொழிற்சாலை

நாம் நினைத்துக்கூட பார்க்க முடியாதவகையில் எலும்பு வணிகம் குறித்து சொல்லியிருக்கிறார். எலும்புக்கூடுகள் எளிதாய் கிடைப்பதில்லை.அதற்கென்றே இருக்கும் சந்தையில் அதற்கு தேவை அதிகம்.1985ல் இந்திய அரசு மனித உடல் மிச்சங்ககளின் ஏற்றுமதியை தடுக்க சட்டம் இயற்றியதிலிருந்து டிமான்ட் அதிகம்.உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை கைப்பற்ற கூட ஆட்கள் இருக்கிறார்கள்.மற்றுமொரு முறை பிணங்களை சுருட்டி ஆற்றில் நங்கூரமிட்டு மீன்,நுண்ணுயிரிகளை சாப்பிடவிட்டு உருக்குறைப்பு செய்து எலும்பை பதப்படுத்தி வெள்ளை நிறம் வர ஒருவாரம் காயவைத்து HCL ல் ஊறவைக்கின்றனர்.

அமெரிக்காவின் எல்லா மருத்துவ வகுப்பறைகளிலும் இருந்த எலும்புக்கூடுகள் இந்தியாவிலிருந்து வந்தவை என்கிறார்.

#சிறுநீரகம்

சினிமாவில் பார்த்ததுதான். வறுமையைப் பயன்படுத்தி சிறுநீரை எடுக்கின்றனர்.சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களிடம் கிட்மிவாக்கம் என சொல்லுமளவிற்கு ஒரு ஏரியாவில் கிட்னி விற்பனை அதிகம் நடந்ததாம்.
உடலுறுப்பு விற்பனையில் கோடி கொடுத்து வாங்குகிறார்கள் அதில் இடைத்தரகர்களின் சுரண்டல் அதிகம்.அந்த நிழல் உலக பேரங்களை அப்பட்டமாய் புலனாய்வு போல நம் முன் நிறுத்துகிறது.

#கருத்தரிப்பு

நவீன காலங்களில் கருத்தரிப்பு மையங்களில் எண்ணிக்கை அதிகரிக்கிறது.உடல் ரீதியான குறைபாடு மற்றும் சுற்றியுள்ளவர்களின் நச்சரிப்பினால் இலட்சக்கணக்கில் கொட்ட காத்திருப்பதை புரிந்து கொண்டு இத்தொழிலில் ஈடுபடுகிறார்கள். கருமுட்டை தானம்,சோதனைக் குழாய் குழந்தை என ஒவ்வொரு ஆண்டும்.2,50,000 குழந்தை பிறப்பதாக தகவல் தெருவிக்கிறது. பல நாடுகளில் இது சென்றடைந்திருக்கிறது.கரு முட்டை தானம் அவ்வளவு எளிதல்ல.இரு வார ஹார்மோன் தூண்டுதல் பின் அறுவை சிகிச்சை என அதிலுள்ள தகவல்களை அடுக்கடுக்காய் கூறுகிறது.

இன்னும் இரத்தப்பணம்,பரிசோதனைப் பிராணிகள்,ஸ்டெம் செல் குறித்து அலசுகிறது இப்புத்தகம்

ரசித்தவை

*மனித குலத்தின் மகிழ்ச்சியை இலக்கங்களாக மாற்ற முடியும்.

*முன்னறிந்து கூறுவதற்கான இயலாமையோடு வரும் ஆபத்தை தணிக்க முயற்சிக்கிறோம்

*மரணத்தை புரிந்துகொள்ள எளிய வழி பிணங்களின் அருகில் அமர்ந்து சிந்திப்பதே.

*குறைந்த விலையில் வாங்கு. உயர்ந்த விலையில் விற்றிடு.

*மரணத்தின் கடைசி அவமதிப்பு நம் உடலுடனான உறவை இழப்பதே

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

கற்றதும் பெற்றதும்-88*மணி

கற்றதும் பெற்றதும்-88*மணி
கற்றதும் பெற்றதும்-88
*மணி

இலக்கணங்களும் விவாதங்களும் மறைப்பதனாலேயே நவீன வாசகன் பழைய கவிதைகளை அந்நியமாக உணர்கிறான்.தனக்குக் கற்பனை செய்யவோ,கண்டடையவோ அவற்றில் ஏதுமில்லை என்று எண்ணுகிறான்

-ஜெயமோகன்

#சங்கச்சித்திரங்கள்
-ஜெயமோகன்

உடன் பணியாற்றும் புத்தக ஆர்வர் நண்பர் அவ்வப்போது தான் படித்த விஷயங்களை பகிர்ந்துகொள்வார். தமிழ் இலக்கியம் படித்தவர் என்பதால் அன்று சங்கப்பாடல் ஒன்றினை சிலாகித்து கூறினார். அப்போது நான் சங்கச்சித்திரங்கள் பற்றிக்கூறி அதனை படிக்க கொடுத்து பின்பு அதுகுறித்து விவாதித்தது மகிழ்ச்சியளித்தது.

விகடனில் தொடராக வந்தபோது வாசித்தேன்.தற்போது ஒன்பது ஆண்டுக்கு பிறகு மறுவாசிப்பு செய்த போது அதே புத்துணர்வு அளித்தது.ஒன்றரை பக்கத்தில் சங்கப்பாடலுடன் ஒரு சிறு சம்பவத்தை கூறி நம்முடன் உரையாடுவது போல் இருக்கும். நான் இக்கதைகளில் ஒரு சிலவற்றை நண்பர்களுடன் அடிக்கடி பகிர்ந்துள்ளேன்..

*வலியின் கொடுமை உணர்த்தும் சிறைபனி உடைந்த சேயரி..பாடலின் பொருளாய் "மழைத்துளி நிரம்பிய குளிர்ந்த காற்றில் ரத்தம் உறிஞ்சும் ஈக்களின் கடிதாங்காது தொழுவத்து எருமை தலை குலுக்கும்போது எழும் கழுத்து மணியோசை எனைப்போல தாளமுடியாத துயருடன் புரண்டு படுத்தபடி இரவெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கும் வேறு யார் உள்ளனர் இந்த ஊரில்? என துயருற்றவனின் இரவு கண் முன் விரிகிறது.

*ஒரு ரயில் பயணத்தில் ஒருவர் செம்புலப் பெயனீர் போல எனும் புகழ் பெற்ற கவிதைக்கு ஒருவர் விளக்கம் சொல்ல பிறிதொருவர் சற்றுநேரம் கழித்தால் செம்மண்ணும் நீரும் பிரிந்துவிடுமே என எண்ணியிருக்கலாம் என்றார்.அதற்கு இன்னொரு விளக்கத்தை ஜெமோ அனந்தராம அய்யர் எழுதியதாக சொல்கிறார்.
செம்புலம் என்றால் பாலைநிலம். பாலை நிலத்தில் பெய்த மழை எனக்கூறுவது பொருத்தம் என்றார்.
புதுமழைக்கு மண் புத்துயிர் பெறும் எனச் சொல்லி உரையாடல் நீளும்.

*புறநானூற்றில் கலஞ்செய் கோவே பாடலில்..கணவன் இழந்த அப்பாவி பெண் வருகிறார்.உலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் இருந்திருக்கிறார்.இதற்கு உதாரணமாய் இப்பாடலின் கருத்தை சொல்கிறார்.."ஐந்து நிலங்களின் உருண்டு வரும் சக்கரம் அதில் ஒட்டியிருக்கும் பல்லிக்கு அந்த நிலங்களின் வெம்மையும் குளுமையும் எல்லாம் தெரியும். ஆனால் வழிநடையின் களைப்பை அது அறியாது.அதுபோல உலகம் தெரியாத மனைவியாய் சிலர் இருப்பதாக கூறுவார்.
நெகிழ்ச்சியாய இருக்கும்.இக்கதையை பலரிடம் நான் பகிர்ந்திருக்கிறேன்.இது ஒரு படிமம்.காலம் காலாய் இருப்பார்கள் ஆனால் ஒன்றை கற்றிருக்க மாட்டார்கள். பிறரே செய்வார்கள்.. நமக்கென்ன.. என இருப்பது.

*பெருஞ்சோறு பயந்து பல்யாண்டு பாடலில்.."யானையை பார்ப்பது எப்போதும் கண்கள் நிறையும் அனுபவம்தான்.விடியாது பெருகிச் செல்லும் இரவு போல.அது சென்ற பிறகு ஒரு அசிங்கமான வெளிச்சம் இருப்பதாகவும் அதை நிரப்ப எவ்வளவு சொற்களும் கற்பனையும் தேவை என்பதை வாழ்வியல் அனுபவத்தை பொருத்திக் கூறுவது இலக்கிய இன்பம்தான்.

*அந்தக்காலத்தில் அண்டை வீடுகளில் கணவன் விட்டுச்சென்ற வீடுகளை அதிகம் பார்த்திருக்கிறேன்.அதுகுறித்து சொல்லியிருக்கிறார் இதில்." பிரிவு என்பது எந்தக் காலத்திலும் ஆணின் ஆயுதமாய் இருக்கிறது.பெண்ணின் சக்தியை உறிஞ்சி அதற்கு அஞ்சி அஞ்சி மேலும் பலவீனம் கொள்கிறாள்.தன் மனைவியின் மனத்தில் பேருருவம் கொள்ளும் பொருட்டு ஆண் போடும் வேடம் தான் அது என சங்ககாலத்திலேயே சில ஆண்களின் மனநிலையை படம் பிடித்துக் காட்டுகின்றன.

ரசித்தது

*கண்மூடிப் படுத்துவிட்டால் காடு வந்து உடம்பை மூடிவிடும்.

*ஒருவர் நிரப்பியிருந்த இடம் எவ்வளவு என்று அவரது இழப்பின் மூலம் நாம் அறியலாம்.வெற்றிடத்தின் வலிமை அதன்மீது மோதும் சூழலின் அழுத்தமே. மெள்ள அந்த வெற்றிடம் சுருங்கிச் சுருங்கி ஒரு புள்ளியாகிறது, கருந்துளையாகிறது.

*துரோகத்துக்கும் அவமானத்துக்கும் ஆளானவர்களின் முதல் எதிரி அவர்கள் மனம்தான். அது ஓய்வதேயில்லை. கறையான் புற்றுப்போல அனைத்தையும் உண்டு வளர்ந்தபடியே இருக்கிறது அது.ஒரு கணம் செயலற்றுப் படுத்தால் கூட ஆயிரமாயிரம் கறையான் கொடுக்குகள் கால் நுனியை வந்து பற்றிவிடும்.

*பிரியத்தை அறிவதற்கு ஒரு திரை எப்போதுமே தேவைப்படுகிறதா?

#கற்றதும் பெற்றதும்

இது போன்ற 40 பாடல்களை எளிமைப்படுத்தி அன்றாட வாழ்வுடன் தொடர்பு படுத்தி சொல்லியிருப்பார்.நான் இதை படித்தவுடன் விவரிக்கவோ இன்பத்தை பகிரவோ இதுபோல் ஒத்த அலைவரிசையுடைவர்கள் யாரும் இல்லை.படிப்பதை பகிர ஆள் இல்லாத சோகம் புத்திர சோகம் போன்றது.

இதுவரை இப்புத்தகத்தை எந்த எழுத்தாளரும் சொல்லததும் பரிந்துரைக்காததும் வியப்பாய் உள்ளது.ரஷ்ய,பிரெஞ்சு இலக்கியங்களை விட மேலானது தமிழ் இலக்கியம்.தாய்மொழி இலக்கியத்தை படிக்காமல் அயல் நாட்டு இலக்கியம் படிப்பது முரணாகும்.இப்புத்தகம் சங்க இலக்கியத்தை அறிவதற்கு ஒரு தொடக்கம்.

ஒரு வாசகனாக இன்னொரு வாசகனுக்கு சொல்வது இதை நம்பி வாசிக்கலாம். தமிழ் இலக்கியபாடல்கள் என்றாலே பாடலுக்கு பொழிப்புரை எழுதுவதோடு நின்றுவிடுவார்கள்.
ஆனால் இதில் வாழ்வியல் அனுபவத்தை தொடர்புபடுத்தியிருப்பார்.
(தமிழினி வெளியீடு)

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு