Showing posts with label க.பெ. Show all posts
Showing posts with label க.பெ. Show all posts

Thursday, 27 December 2018

கற்றதும் பெற்றதும்-64

கற்றதும் பெற்றதும்-64
*மணி

நதி அமைதியாக உறைந்திருக்கிறது.
மலைகள் நீந்திக் கொண்டிருக்கின்றன
-ஜென்

#ஜென் கதைகள்

ஆரம்ப நிலை வாசகர் முதல் முதிர்ச்சி அடைந்த வாசகர் வரை விரும்பி படிப்பது ஜென்.மனித மனங்களின் யதார்த்தத்தை, வாழ்வின் புரிதலை எளிமையான வரிகளில் சொல்லும்போது உண்மையில் அகக்கண் திறக்கும். சிந்தை தெளிவடையும்.அவ்வகையில் இப்புத்தகத்தில் நான் ரசித்த கதைகளும் வரிகளும்

#ஜென் என்றால் என்ன?

ஒரு மீன் குஞ்சு பெரிய மீனிடம் கேட்டது.கடல் என்பது என்ன? அதற்கு கடல் என்பது உனக்குள்ளும்,சுற்றிலும் இருக்கிறது.உன் உடலின் தோலைப்போல அது உன்னைப் பொதிந்து வைத்திருக்கிறது. மக்களும் அதுபோல் என்கிறார்.கன்பூஷியஸ்.

வேறுபடுத்திப்பார்ப்பது, பொய்த்தோற்றங்களை கைவிடுவது என எல்லா எண்ணங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்போது..வருவது.தொடர்ந்து படிக்கும்போது உணரலாம் என்கிறார்

#சொர்க்கத்தின் கதவுகள்

ஒருவன் இறந்த அடுத்தகணமே தோன்றக்கூடியது சொர்க்கம் நரகமல்ல.ஒரு கணம் தோன்றி மறையும் எண்ணத்தில்தான் நன்மையும் தீமையும் உறைந்திருக்கின்றன என ஜென் குருவும் படைத்தளபதி கதை கூறுகிறது.

#தெரியாத இடத்தில் தெரிந்தது போல் காட்டுவது நம்மில் பலருக்கு வாய் வந்த கலை.

அதைபடிப்படையாய் வைத்து

"ஒரு ஓவியர் சிவப்பு மூங்கில் வரைந்தாராம்.ஒருவன் வந்து இது கருப்பு வண்ணதில் இருந்தால் நன்றாய் இருக்கும் என்றானாம். அது எங்கிருக்கிறது எனக் கேட்டபோது வாயடைத்தானாம்.

"அடுத்தவர்களின் தவறுகளை நீ சுட்டிக்காட்டும்போது, உண்மையான பிழை உனது தவறான கருத்தில் மறைந்திருக்கக்கூடும்"!

#சிறிய ராணுவம் கொண்ட படை பெரிய நாட்டின் மீது போர் தொடுக்கிறது.வீரர்களுக்கு நம்பிக்கை அளிக்க மன்னன், நாணயத்தை சுண்டுகிறான்.பூ விழுந்தால் புறக்கணிப்பது, தலை விழுந்தால் முன்னேறுவது. சுண்டியவுடன் தலை விழுந்தது. முன்னேறி போர்புரிந்து நாட்டை கைப்பற்றுகிறார்கள். வீரன் சொல்கிறான் எல்லாம் கடவுள் செயல்.

கடவுளின் விதியை மாற்றமுடியாது என்கிறான். மன்னர் தன்னிடமுள்ள நாணயத்தை காண்பிக்கிறார். இரண்டு பக்கமும் தலைதான் உள்ளது

"தெய்வம் எல்லோரையும் ஒன்றுபோலவே பார்க்கிறது.அது குறிப்பாக எவருக்கும் உதவுவதில்லை.உனக்கு உதவ ஒரு ஆள் உண்டென்றால் அது நீயும் உன் தன்னம்பிக்கையும்தான்.!

#துறவிகுன்றுகளில் வேலை செய்து கொண்டிருக்கும்போது மடாலயத்துக்கு வழி கேட்கிறார். இந்த அரிவாளை பாருங்கள் என்றதும் கோபம் வந்துவிட்டது துறவிக்கு.இப்படியே உரையாடல் வளர்கிறது

"தோற்றத்தால் முக்கியத்துவம் கொடுக்கும்போது நாம் உண்மையைப் பார்க்க தவறுகிறோம்.நாம் தேடுவது பார்வையில் பட்டாலும் அதை பெயர்களுக்கும் பதவிகளுக்கும் அதிக கவனம்.கொடுத்தால், நாம் முற்றிலும் தவறவிட்டு விடுவோம்

#‘நான் நல்லா வாழ்ந்தேன்னு ஒருத்தன் சொல்றான்னா, அவனோட வயசு என்ன?’ என்று கேட்டார் புத்தர்.
அவரது சீடர்கள் யோசித்தார்கள்.

‘ஒரு நல்ல வாழ்க்கையோட ஆயுள் காலம் என்ன?’

‘நூறு வயசு?’ என்றார் ஒரு சிஷ்யர்.

‘ம்ஹூம். இல்லை!’ என்று உடனே மறுத்துவிட்டார் புத்தர்.

‘அப்படீன்னா? 90 வயசு?’

‘அதுவும் இல்லை!’

‘80? 70? 60?’ இப்படிச் சீடர்கள் வரிசையாகப் பல விடைகளைச் சொல்ல, புத்தர் எதையும் ஏற்கவில்லை. கடைசியாகப் பொறுமையிழந்த அவர்கள் ‘நீங்களே சொல்லுங்க’ என்று அவரிடம் வேண்டிக்கொண்டார்கள்.

‘ஒரு நல்ல வாழ்க்கை-ங்கறது, ஒரு விநாடிப் பொழுதுதான்!’ என்றார் புத்தர்.

‘என்ன சொல்றீங்க குருவே? ஒவ்வொரு விநாடியையும், அதுதான் உங்களுடைய வாழ்க்கையின் தொடக்கம் என்று நினைத்து அனுபவிக்கவேண்டும். பழையதை நினைத்துக் கவலைப்படக்கூடாது. கடந்தகாலத்தில் வாழக்கூடாது!’

‘அதேநேரம், அந்த ஒரே விநாடியை உங்களுடைய வாழ்க்கையின் முடிவு என்றும் நினைத்துக்கொள்ளவேண்டும். எதிர்காலக் கற்பனைகளில், எதிர்பார்ப்புகளில் அந்த விநாடியை வீணடிக்கக்கூடாது.’

‘சுருக்கமாகச் சொன்னால், நாம் ஒவ்வொரு விநாடியும் புதுசாகப் பிறக்கிறோம், அதை முழுமையாக அனுபவிக்கிறோம். அதுதான் நல்ல வாழ்க்கை. அதுதான் ஜென் வாழ்க்கை!’

#முதியவர் ஒருவர் குதிரையில் பயணிக்கையில் வழியில் ஒருவன் மயங்கிக்கிடந்தான்.உதவி செய்ய இறங்கியவுடன் அவன் சாதுர்யமாக திடுமென எழுந்து குதுரை சந்தைக்கு ஓட்டிக்கொண்டு சென்றான்.செய்வதறியாது விழித்த பெரியவர், அவனை அணுகி.. "இதை யாரிடமும் சொல்லாதே" சொன்னாயானால் இனி மயங்கிக் கிடப்பவர்க்கு யார உதவ முன் வரமாட்டார்கள் என்றார்.

#மனம் கவர்ந்தவை

*உனக்கு எது விருப்பமோ அதை எடுத்துக்கொள்.இல்லை வெறுமனே பார்த்தால் போதும் என்றால் முழுமனதுடன் பார்.

*புறப்பொருளை கைப்பற்றும்போது நாம் அகத்தை இழக்கிறோம்

*எந்த ஒரு மாணவனுக்கு எதையும் போதிக்க முடியாது. ஆனால் ஒவ்வொரு மாணவனுக்கும் தனது சுய சிந்தனையால் எல்லாவற்றையும் புரிந்து கொள்வதற்கு அவரால் உதவ முடியும்.

#கதைகளின்.வழியே பழக்கப்பட்ட மனது நம்முடையது.ஒரு கதையின் நுனியை பிடித்து ஏறிச் செல்வது போல் அதை படித்து செல்லும்போது இறுதியில் காணும் நீதி..உண்மையில் பரவசப்படுத்துவது.இது மனதை பண்படுத்தும்.அறியாமையை சற்று சீண்டும்.ஒரே பக்கத்தில் இருப்பது இன்னும் கூடுதல் வசதியாய் எளிமையாய் படித்துவிட உதவும்.
மனிதன் பக்குவபட வேண்டிய அடிப்படை நீதியை உணர்த்தும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 25 December 2018

கற்றதும் பெற்றதும்-63

கற்றதும் பெற்றதும்-63
*மணி

அனுபவம் என்றால் அது சாதாரண சிந்தனைகளை தூண்டிவிடுவதாக இருக்க வேண்டும் -க.நா.சு

#நூலிலிருந்து
-நாகா

வாசிப்பின் ஆரம்ப கட்டத்தில் எல்லாருமே உடனிருப்பார்கள். ஒருகட்டத்திற்கு பிறகு யாருமில்லத பாதையில் தனித்து விடப்படுவோம். நம் ரசனைக்கெற்ற நண்பர்கள் அமைவதும், வழிகாட்ட நல்ல நூல் ஆர்வலர்கள் அமைவது கடினம். அனுபவமும் அப்படித்தான். அனுபவத்தை டிபன் பாக்ஸில் இருப்பதை போல் பகிர்வதாக நினைக்கிறார்கள்.தானாக தன் அனுபவத்தில் அறிந்த உண்மையை எந்த வித அதிகப்படியும் இல்லாமல் தன் அனுபவத்தையும் அதனோடு குழைத்து பகிரும்போது அது இன்னும் மெருகேறுகிறது.

அயல் நாட்டு புத்தகம் ஒன்றில் படித்தேன்.ஒரு திருமண விழாவிற்கு பரிசாய் ஒரு புத்தகம் வந்தது.அதை அவர் அலமாரியில் தூக்கிப்போட்டுவிடுகிறார். பின் வாழ்வில் பல்வேறு துயரங்களை கடந்து அறுபதை நெருங்கும்போது அப்புத்தகத்தை எடுத்துப்பார்க்கிறார்.தான் பட்ட கஷ்டங்களுக்கான அத்தனை வழிமுறையும் அப்புத்தகத்தில் இருந்தனவாம்.எவ்வளவு இழந்துவிட்டோம் என வருந்தினாராம்.அதுபோல் நல்ல படிக்காத புத்தகங்களே நம் தேடலை,ஞானத்தை ஒளித்து வைத்திருப்பவை.

அவ்வகையில் கோவையைச் சேர்ந்த நண்பர் நாகா என்கிற நாகச்சந்திரன் எழுதிய இப்புத்தகம் புத்தக வாசிப்போடு மனிதனையும் வாசிக்க வைக்கிறது.4 பாகங்களாக வகைப்படுத்தி  இருக்கிறார்

#நூலும் நானும்

இத்தலைப்பின் கீழ்

புத்தகத்திற்கும் தனக்குமுள்ள உறவை பதினெட்டு கட்டுரையில் கூறியிருக்கிறார்.மனித மனத்தின் மாற்றத்தின்,எண்ணங்களை மேம்படுத்தும் நோக்கில் தான் சிலாகித்த புத்தகங்களை மேற்கோள் கூறுகிறார்.

சிறுவயதில் பேருந்து பயணத்தில் ஆட்டோ ஸ்டாண்ட் வாசகங்களை பார்ப்போம்.அதை வைத்து ஆட்டோக்காரர் கட்டுரை சுவைப்பட எழுதியிருக்கிறார்.முதன்முதலில் நல்ல வரிகளை ஸ்டேட்டஸாக வைத்தவர்கள் ஆட்டோக்காரர்களே. "நீச்சல் அடி ஆற்றுக்குள் போய் வரலாம்.எதிர்நீச்சல் அடி, வரலாற்றுக்குள் போய்விடலாம்"

*கற்றுக்கொள்வதை என்றும் நிறுத்திவிடாதே
வாழ்க்கை நமக்கு பாடம் புகட்டுவதை என்றும் நிறுத்துவதே இல்லை

*மனிதனால் மனிதனாக மட்டும் வாழமுடிவதில்லை

*கண்ணீரை துடைக்க கர்சீப், துன்பத்தை துடைக்க பிரெண்ட்ஷிப்...

*நேற்றை இன்றை எருவாக்கு
நாளை என்பதை உருவாக்கு

என ஆட்டோக்காரர்களின் அன்றைய தன்னம்பிக்கை வரிகள் மிளிர்கின்றன.இன்றும் பெரியாரிய சிந்தனையும், கார்ல் மார்க்ஸ் சிந்தனைகளையும் காணலாம்.
நல்ல படிப்பாளிகளாவும் இருப்பார்கள். இதற்கு சிறந்த உதாரணம் லாக்கப் நாவல் எழுதிய சந்திரகுமார்

படிக்கும் பழக்கம் கட்டுரையில் புத்தகம் படிக்கும் பழக்கத்தை மேம்படுத்தும் சிந்தனையையும், கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் மனம் கவர்ந்த வரிகளை பகிர்ந்துள்ளார்.

#நூலும் அனுபவங்களும்

இப்பகுதியில் எட்டு கட்டுரைகள் புத்தகம் வாசித்த அனுபவத்தை, தன் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நோக்குகிறார்.Freedom at midnight, ஷிவ் கோரா எழுதிய "உங்களால் வெல்ல முடியும்". திருக்குறள், எஸ்.ராவின் "இலக்கற்ற பயணி",

அரசியல் கட்டுரைகள், நாஞ்சில் நாடனுடன் நெருக்கமான அனுபவத்தையும், குங்குமத்தில் தொடராய் வந்த " கைம்மண் அளவு" புத்தகம் குறித்தும் எழுதியுள்ளார்.

#நூலும் பெருந்தகையும்

இப்பகுதியில் பதினொரு கட்டுரைகள் உள்ளன.எல்லார் வீட்லயும் டிக்ஸ்னரி இருப்பதுபோல எப்படியும் சத்திய சோதனை புத்தகம் வாங்கி வைத்திருப்போம். அதுதான் அந்த புக்குக்கு நாம் கொடுக்கும் சத்தியசோதனை. ஆனால் நாகா இதை படித்துவிட்டு சபர்மதி சென்ற அனுபவத்தை அருமையாய் பகிர்ந்துள்ளார்.

அப்துல்கலாமை பார்த்த இரு தருணங்களையும் சுவாரஸ்யமாய் சொன்னதுடன் அவரின் புத்தகங்களின் தனக்கு பிடித்த வரிகளை பகிர்ந்துள்ளார்.பகத்சிங் குறித்து புத்தகம் தனியே எழுதுமளவு நிறைய தகவல் தந்துள்ளார்.பாரதி குறித்த கட்டுரையில் அவரின் பாடலின் இசையையும்,ராகத்தையும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதை தொடர்ந்து நா.முத்துக்குமாரின் அணிலாடும் முன்றில், விவேகானந்தர்,ஏ.ஆர்.ரகுமான், கண்ணதாசன்,சுஜாதா குறித்த கட்டுரைகள் நன்றாக உள்ளன.

#நூலும் வளமும்

இப்பகுதியில் 11கட்டுரைகள் மற்றும் வாசித்த நூல்களின் பட்டியலையும் இணைத்துள்ளார்.

"ஏடாயிரம் படி-எல்லாவிதமான செய்திகளையும் அறுந்துகொள்ள நிறைய நூல்கள் படி என அறியாத வரிகளை ஒவ்வொரு கட்டுரையின் முகப்பில் ஆரம்பிப்பது அறிவு சுரங்கத்தில் நுழையும் உத்வேகம் தருகிறது.எஸ்.ரா வின் வீடில்லா புத்தகங்கள்,சுயமுன்னேற்ற நூல்களின் கருத்துகள்,சமஸின் சாப்பாட்டு புராணம்,திருக்குர் ஆன் என ஒரே புத்தகத்தில் பல புத்தகங்களை படித்த திருப்தி தருகிறது.

வளம்பெற வாசிப்போம் கட்டுரையில் புத்தகத்தினால் புரட்டிப் போட்டவர்களை பற்றி குறிப்பிட்டு,வாழ்வை மாற்றிய புத்தகத்தை கூறுகிறார்.தான் படித்த கருத்துக்களை மற்றவர்க்கு பகிர்ந்திருக்கிறார்.வாட்ஸ் அப்பில் தொடராய் எழுதி அதை புத்தகமாக்கியது பாராட்டுக்குரியது.டவுன்லோட் செய்வது ஒன்றுதான் வாசிப்பு, சேர்ந்தார்போல் ஒரு பத்தியை டைப் செய்ய கடினப்படும் இன்றைய தலைமுறைக்கு இதுபோல் வாசிப்பு அனுபவத்தை பகிர்வது தேவையான ஒன்று.

ஏதாவது ஃபார்வேர்டு செய்திகளையோ,கருத்துக்களையோ பகிர்ந்து கொண்டு இருக்காமல் தான் படித்த ஒற்றை வரியையோ அல்லது அது தந்த சிந்தனையையோ பகிர்ந்தால் அது நிச்சயம் அறிவார்ந்த சமுதாயமாய் மலரும்.நான் வெறுமனே வேடிக்கை மட்டும்தான் இணையத்தில் உலாவுவேன் என்பவர்களின் நேரங்களை காலம் தயவுதாட்சன்யமின்றி தின்றுவிடும்.

#மனம் விரும்பிய வரிகள்

*ஒரு நாளில் சுமார் 72000  எண்ணங்கள் மனதில் உதிக்கிறது

*ஒரு பிரச்சனை வரும்போது களத்தில் இறங்கி நேருக்கு நேர் சந்திக்கும் துணிச்சல் உள்ளவரே தலைவர்

*ஒவ்வொரு விதையும் ஒரு ஆசையே

*ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றியாகும்

*வாய்ப்பு எப்போதும் நம் காலடியின் கீழேயேதான் உள்ளது. மனப்பாங்கு சரியாக இருந்தால்தான் நாம் கண்டுணர்வோம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Monday, 3 December 2018

கற்றதும் பெற்றதும்-62


கற்றதும் பெற்றதும்-62
*மணி

"இருத்தல் என்பதே சிந்தனையை
நிறுவுவதுதான்"

வழக்கமாய் ஏதேனும் ஒரு விழா என்றால்..புத்தகம் வாங்கும் பொறுப்பை நான் எடுத்துக்குவேன். காரணம் ஒருநாள் முழுக்க அப்புத்தகத்தை படித்துவிட்டுதான் கொடுப்பேன். அப்படித்தான் நண்பர்கள் ஆரம்பநிலை வாசகர்களுக்கு 22புத்தகம் வாங்குமாறு கேட்டனர். அவ்வகையில் வாசித்த ஒரு புத்தகத்தில் கவனித்த வரிகள்

#ஆச்சர்யமூட்டும் அறிவியல்
-ஹாலாஸ்யன்

தினமணிக் கதிரில் தொடராய் வந்த அறிவியல் கட்டுரைகள்.. அன்றாடம்.பார்க்கும் காட்சிகள், பொருட்களின் பின்னாலிருக்கும் அறிவியலை சுவாரஸ்யமாய் சொல்கிறது.

#பறவையும் புல்லட் ரயிலும்

பறவையைக் கண்டான்.விமானம் படைத்தான் என்பது போல் புல்லட் ரயிலும் படைத்தது பறவையின் தயவே.1964ல் ஷின்கான்சன் புல்லட் ரயில் பயன்பாட்டு வந்தது. ஒசாகா-ஃபுகுவோகா இடையில்

515கி.மீ நீளமுள்ள ரயில்திட்டம். துவக்கத்தில் பெரும்சத்தம் உண்டாக்கியது. மின் கம்பியை தொடும் கம்பிக்கு pantograph என பெயர்.காற்றை கிழிக்கும்போது உஷ் என்ற சத்தம் எழுப்பியது. ஆற்றலும் வீணானது.

சரிக்கட்ட வேண்டிய பொறுப்பு எய்ஜி நகாட்ஷூ வுக்கு ஏற்பட்டது. அவர் ஒரு பறவை ஆர்வலர்.3 பறவை அமைப்பை பொருத்துகிறார்.முதலில் ஆந்தை.

ஆந்தையின் சிறப்பே சத்தமின்றி பறக்கும் இறக்கை அமைப்பு இருப்பது.இரவில் பறப்பதால் சத்தமின்றி இரை தேட பறக்கும்போது சத்தம் வராது.இதன் வடிவமைப்பை மின்சாரகம்பி தொடும் பகுதிக்கு அளித்தார்.

அடுத்து அடில் பென் குயின் பனிக்கட்டியில் உராய்வு இல்லாமல் சறுக்கும்.இதனை ரயில் மின் கம்பிக்கு பொறுத்தினார்.

அடுத்து மீன் கொத்தி.

இதன் சிறப்பு கூர்மையான அலகு. ரயில் முகப்பிற்கு பொருத்தினார்.
சுரங்கத்தில் நுழையும் போது ஏற்படும் சத்தத்தை போக்க மீன் கொத்தியின் அலகு போன்ற அமைப்பை உருவாக்கினார்.

#ரேகை

ரேகை குறித்து சுவாரஸ்யமான தகவல் தருகிறது.loop,arch,whorl விரல் ரேகையில் இருக்கும் மடிப்பு, சுழிவு,வளைவுகள்.இன்றைய ரேகை பரிசோதனை கருவி மேற்சொன்னவற்றை தேடுகின்றன.உ.ம் நம்.ரேகையை தேடி "சுழிக்கு கீழ் செங்குத்தா 2மிமீ தள்ளி மடிப்பு இருப்பதை குறித்து கொண்டு நம்மை அடையாளம் கொள்ளும்.

*முதலில் கேமரா மூலம் படமெடுத்து ஒப்பிட்டு பார்த்தனர்

*அடுத்து capacitive fingerprint sensor கருவி வந்தது.நம் விரல் ரேகைகளை விட,சிறிய மின்தேக்கி மூலம் மெல்லிய பரப்புக்கு மின்சாரம் பாயச்செய்து மின்னேற்றம் கொடுத்து விரலை ஒற்றும்போது மேடுபள்ளம் மின்னேற்ற மாறுதல் அடைந்து கைரேகை உள்வாங்கும்.உ.ம் தற்போதைய கைபேசி.

*பின் மீயொலி மூலம் இதே போன்று ஆனால் விரல் ஒற்றும்போது ஏற்படும் எதிரொலிப்பு மூலம்

*விரல் வெட்டியெடுத்து வைத்தால் அது உயிருள்ளதா,உயிரற்றதா என கண்டுபிடித்துவிடும்.ஆனால் தூங்கும்போது ரேகை பயன்படுத்த முடியும்.

#உடல் வெப்பநிலை அளவிட தெர்மாமீட்டர் இருக்கின்றன.

தற்போது கேப்ஸ்யூல் மாத்திரை வடிவில் தெர்மாமீட்டர் வந்துவிட்டன.தண்ணீருடன் விழுங்கினால் உள்ளே போய் வெப்பநிலை உணர்ந்து அலையை பரப்பிவிட்டு வெளியேறிவிடும். இது இன்னும் பிரபலமாகவில்லை

#பட்டனைத் தட்டினால்

ரிமோட் பட்டன் பற்றி சொல்லும் போது பல்வேறு கட்டத்துக்கு பின் அகச்சிவப்பு கதிர் பயன்படுத்தப்படுகிறது.

கார் போன் வாகனங்களில் ரேடியோ அலைவீச்சில் இயங்குபவை.இது பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.தற்போது gesture recognition என்னும் கையசைவு புரிந்து செயல்படும் கருவி வடிவமைத்துள்ளனர்.

#drink and drive

Drink and drive ல ட்ராபிக் போலிஸ்கிட்ட மாட்டாம போறது ஆயக்கலையில் 65வது.breath analyzer எனும் கருவி மூச்சுக்காற்றில் உற்சாகப் பானத்தை கண்டறிகிறது. இதில் 3 வகை உள்ளன

1)ஊதும் கருவியில் பொட்டாசியம் நைட்ரேட் உடன் கந்தக அமிலம் இருக்கும்.ஊதும் காற்றுடன் வினை புரிந்து நிறம் மாறும்.ஆனால் நேரமாகும்

2)அகச்சிவப்பு கதிர் மூலம் காற்று ஊத ஒரு இடம்,ஒருபக்கம் அகச்சிவப்பு கதிர் உமிழும் விளக்கு என ஈசியாயிடுச்சு

3)நவீனவகை.காற்றிலிருக்கும் ஆக்சிஜனோடு வினைபுரிந்து எலக்ட்ரான் பரிமாற்றத்தில் மின்சாரம் உற்பத்தி செய்கிறது. இந்தியாவில் இன்னும் வரல.

#கான்க்ரீட்

இம்முறை ரோமானியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.கான்கிரீட் என்பது aggregate என அழைக்கும் ஜல்லி, சரளைக்கல்,சிமென்ட் மண் கலவை.இதுதான் கடினமும் வலிமையும் கொடுப்பது.

இதற்கான எமன் -விரிசல். விரிசல் விட்டு காற்றும் ஈரப்பதமும் புகுந்தால் இரும்புக்கம்பி துருப்பிடிக்கும்.
குளிர்வித்தால் விரியும் ஒரே பொருள் நீர்தான். தானே விரிசலை சரிசெய்ய கண்டுபிடித்துள்ளனர். சிமெண்டோடு பாக்டீரியாவை கலந்து அதாவது bacillus psuedofirmus,sporosarcina pastuerii. இரண்டும் காரத்தன்மை.இது சுண்ணாம்பை சுரக்கும் திறனுடையவை.

கால்சியம் லாக்டேட் எனும் பொருளை பாக்டீரியாவுக்கு தின்னக்கொடுத்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.இது சுண்ணாம்பு சுரந்து விரிசலை சரிசெய்யும்.இதுபோல் அடைக்க குறிப்பிட்ட அளவுதான் விரிசல் இருக்க வேண்டும்.

இதுபோல் பயனுள்ள 32 புதுமையான தகவல்கள் அடங்கியுள்ளது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Tuesday, 27 November 2018

கற்றதும் பெற்றதும்-61

கற்றதும் பெற்றதும்-61
*மணி

#’கசடதபற’வில் சொல் முடிந்து, அடுத்த சொல்லும் ‘கசடதபற’வில் வந்தால் கண்ணைமூடிக்கொண்டு சந்திபோடுங்கள். 90% சந்திப்பிழைகள் குறையும்

- நன்னன்

#பெரியார் கணினி
-நன்னன்

நன்னனை தெரியாதார் இன்னும் தமிழை தெரியவில்லை என அர்த்தம்.சென்னைத் தொலைக்காட்சியில்  ‘எண்ணும் எழுத்தும்’ தொடர் 17 ஆண்டுகளாக நடத்தும்போது..தமிழகத்தின் வீடுதோறும் தமிழ் கொண்டு சேர்த்தவர். ‘தமிழறிவோம்’, ‘உங்களுக்காக’ போன்ற நிகழ்ச்சிகளில் தமிழகத்துக்கு மக்களுக்கெல்லாம் தமிழ் பாடம் நடத்தியவர்.

பெரியார் கணினி இந்நூல் பெரியாரின் கருத்துகள் 48 தலைப்புகளில் முதற் பகுப்புகளாகவும், பிறகு 309 துணைப்பகுப்புகளும்,11 கிளைப்பகுப்புகளும் அடங்கியுள்ளன. இம் மூவகைப் பகுப்புகளிலுமாக மொத்தம் 4884 கருத்துக் கனிகள் அடங்கியுள்ளன.

இது மிகப்பெரிய கருத்து கருவூலமாகும்.

பெரியாரின் இக்கருத்துகள் யாவும் படித்த கருத்துகளோ, மேலை நாட்டு சிந்தனையோ அல்ல.. தம் கண் முன் கண்ட காட்சிகளை கருத்தாக கூறியிருக்கிறார்.அவற்றையும் பகுத்தறிவு கொண்டு தெளியும்படி வலியுறுத்தியிருக்கிறார்.அறிவும், அனுபவமும்  மனிதர்க்கு இருப்பதால் அதை ஆராய்ந்து தெளிய அறிவுறுத்துகிறார்.

காலமெல்லாம் மடையனாக இருந்து சாவதைவிட அறிவைக் கொண்டு சிந்திக்க வேண்டும் என்றார்.from bad to the worse என்பது போல் கெட்டதிலிருந்து கழிசடைக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

" என்னை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்கின்றனர் சிலர் உண்மை அஃதன்று;நான் நம்பிக்கை வைக்க அப்படி எதுவும் இருப்பதாக புலப்பட காணோமே என ஏங்குபவன் நான்

கடவுள் மறுப்பாளன் என்று என்னை குறிப்பிடாதீர்கள். அதனையும் தேடி அலைந்து அலுத்துக் களைத்து  ஓய்ந்தவன் என்று வேண்டுமானால் என்னை குறிப்பிடுங்கள். ஏனெனில் நான் கடவுள் வேண்டாம் என்று அது இருக்கக் கூடாது என்று கூறவில்லையே

#இதில் எளிமையும் இனிமையும் நிறைந்த 5000 பொன்மொழிகளில் இருந்து நான் ரசித்த சில கருத்துகள்

*மக்களில் இரண்டு விதப் பிறவி உண்டு ஒன்று மக்களைப்போல் மக்களை அனுசரித்து மக்கள் விருப்பப்படி நடப்பது; மற்றொன்று தங்களை மக்களில் ஒருவன் என்றே கருதாமல் தங்களை தனிப்பிறவி என்று கருதிக்கொண்டு மக்கள் கருத்தை பற்றி கவலை இல்லாமல் நடப்பது.என தலைவனை பற்றி கூறுகிறார்

* எதிரிகளுடன் போராடுவது முக்கிய வேலை தான் ஆயினும் அதைவிட முக்கியம் துரோகிகளை ஒழிக்க போராடுவது ஆகும்

* எவனுக்கு பொய் சொல்ல தைரியம் இருக்கின்றதோ எவனுக்கு பொருள் செலவு செய்ய சக்தி இருக்கிறதோ எவனுக்கு பொய் பிரச்சாரம் செய்ய சௌகரியம் இருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராக இருக்கிறது

* வாழ்க்கை ஒழுக்கத்தில் கணவனுக்கு ஒரு சட்டம் மனைவிக்கு வேறு சட்டம் இருக்கிறது

* நிந்தனையான பேச்சுக்கள் எப்போதும் ஒரு விஷயத்துக்கு நியாயமான பதிலாக முடியாது

* வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் (போட்டி என்னும்) பிளவு ஏற்பட்டால் பிறகு அபாயத்தை தான் எதிர் பார்க்க நேரிடும்

* நமக்கெல்லாம் கடவுள் எது என்றால் இந்தப் புராணங்களில் வரும் பாத்திரங்கள் கடவுள்களாக இருக்கின்றனவே தவிர தத்துவப்படி ஆன கடவுள் நமக்கு இல்லை

* கையாலாகாதவனுக்கு கடவுள் துணை, அறிவு இல்லாதவனுக்கு ஆண்டவன் செயல். தவற்றை உணரமுடியாத உனக்கு தலைவிதி

* கல்லை கடவுளாக்கும் மந்திரங்கள் ஏன் ஒரு மனிதனை மற்ற மனிதனுக்கு சமத்துவமான மனிதனாக்க கூடாது

* மற்ற நாடுகளில் மக்களை ஒன்று படுத்தவே கடவுள் மதம் இருக்கின்றன. நமது நாட்டில் மக்களை வேறு வேறாக பிரிக்கவே கடவுள் மதம் இருக்கின்றன

* உலகிலுள்ள மக்களில் பலருக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது என்றாலும் அவர்களெல்லாம் நம்மைப் போல் முட்டாள் தனமாக கடவுளை நம்புவதில்லை

*மனிதன் பிறந்தநாள் முதற்கொண்டு சாகின்ற வரையில் உலகில் மாணவனாக இருக்கிறான்.அவன் கற்றுக்கொள்ள வேண்டியது அவ்வளவு இருக்கின்றது.

* பச்சை உண்மையானது மக்களுக்கு எப்போதும் கலப்பு உண்மையை விட அதிகமான அதிருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். உண்மையை மறைக்கப் பேசுவது என்பது, எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சு கேட்பவர்களுக்கும் திருப்தியை கொடுக்கக்கூடியதாக இருக்கும். திருப்தியை உண்டாக்கும்படியும் செய்து கொள்ளலாம். ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது.

*ஊரார் உழைப்பைக் கொள்ளை கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

*முட்டாள்த்தனம் சுலபத்தில் தீப்பிடிக்கக் கூடியது.அறிவு சற்று தீப்பிடிக்க தாமதமாகும்.

*ஊரில் பேசிக் கொள்கிறார்கள் என்பது கீழ்த்தரமான தன்மையாகும்

*மானமுள்ள ஆயிரம் பேருடன் போராடலாம்;மானமற்ற ஒருவருடன் போராடுவது கஷ்டமான காரியம்.

*என் அபிப்ராயத்தை மறுக்க உங்களுக்கு உரிமை உண்டு.ஆனால் என் அபிப்ராயத்தை வெளியிட எனக்கு உரிமையுண்டு.

*எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறதென்றால் துணிவு ஒன்றுதான்.வேறு எந்த யோக்கியதையும் எனக்கு கிடையாது.

தொடர்ந்து கற்றுக்கொள்,

ஆய்வு செய்

உருமாறு.!

தோழமையுடன் மணிகண்டபிரபு