Wednesday 28 June 2023

குன்னூர் எப்படி வந்தது ? OOபேச்சு வழக்கினில் சில சொற்கள் தன்னியல்பாக வழங்கப்படும். மக்களுடைய உரையாடலில் அத்தகைய பல சொற்களைக் காணமுடியும். மேலோட்டமாகப் பார்க்கையில் அந்தச் சொல் தானாகத் தோன்றிய இடுகுறிச் சொல்லோ என்று தோன்றலாம். ஆனால், ஆராய்ந்து நோக்கினால் அச்சொல்லும் உரிய பொருள்பற்றியே தோன்றியிருப்பதை அறியலாம்.நம் வீட்டுப் பயன்பாட்டில் எண்ணற்ற பண்டபாத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். பெரிய கலயங்கள் முதற்கொண்டு சிறுகுவளைகள்வரை இருக்கின்றன. அண்டா, குண்டா, சட்டி, பானை, போகணி, தேக்சா, கூஜா, குவளை, சம்படம் என்று அவற்றைப் பலவாறு அழைக்கிறோம். இந்தப் பாத்திரங்களின் விளிம்புப் பகுதிக்கு ‘வாப்பாடு’ என்று ஒரு பெயர் சொல்லுவார்கள். “அந்தப் போகணியை வாப்பாட்டைப் பிடிச்சுத் தூக்கு.”“அண்டா வாப்பாடுகிட்ட ஒடுங்கிப் போயிடுச்சு”இங்கே வாப்பாடு என்பது என்ன ? ஒரு பொருளின் வாய் போன்ற பகுதி. அந்தப் பொருளின் வாய்ப்படு பகுதி. ஈடுபடு என்பது ஈடுபாடு ஆனதுபோல, மாறுபடு என்பது மாறுபாடு ஆனதுபோல - வாய்ப்படு என்பது வாய்ப்பாடு என்று ஆகிறது. பேச்சுவழக்கில் அதுவே ‘வாப்பாடு’ என்று வழங்கப்படுகிறது.பிள்ளைப் பேறுற்ற பெண்களிடத்தில் வழங்கும் சொல் ‘மசக்கை’ என்பதாம். வயிற்றுள் பேறுற்றிருப்பதால் சோர்வாக இருக்கும். மயக்கமாக இருக்கும். மயக்கு + ஐ என்பதுதான் மயக்கை ஆகிறது. யகரம் பேச்சு வழக்கில் சகரமாகும். மயக்கை மசக்கை ஆகிவிட்டது. மயக்கை நிலையே மசக்கை.ஊர்ப்பெயர்களில் பலவும் பேச்சு வழக்கில் குன்னூர், குன்னக்குடி, குன்னாங்கல்பாளையம், குன்னத்தூர் என இருக்கும். இங்கே குன்னு என்பது என்ன என்று பலர்க்கும் கேள்வி இருக்கலாம். இதுவும் பேச்சு வழக்கில் மருவிய சொல்லே.குன்று என்பதுதான் பேச்சு வழக்கில் குன்னு என்று ஆகிவிடுகிறது. குன்றுகள் நிறைந்த மலையூர் குன்றூர் – குன்னூர். குன்றக்குடியே குன்னக்குடி ஆகிறது. குன்று + கல் சேரும்போது ஆம் சாரியை இடைப்படுகிறது. குன்றாங்கல்தான் குன்னாங்கல் எனப்படும். குன்னாங்கல்பாளையம். குன்றுகள் மிக்கிருக்கும் ஊரின் இடையே அத்துச் சாரியை பயின்றால் அது குன்று + அத்து + ஊர் ஆகும். அதுவே குன்றத்தூர் – பேச்சு வழக்கில் குன்னத்தூர். - கவிஞர் மகுடேசுவரன் (தினமலர் பட்டத்தில் வெளிவந்தது.)

No comments:

Post a Comment