Wednesday, 17 June 2026
Monday, 15 June 2026
ஒளவையார்
வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கறையான்
தேன்சிலம்பி யாவருக்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல்ல வேண்டாம்காண்
எல்லோர்க்கும் ஒவ்வொன்(று) எளிது.
"தூக்கணாங் குருவியின் கூட்டைப்போல மற்றொரு பறவையால் செய்ய இயலாது. அரக்குப்பூச்சி செய்வது போல் செய்ய வேறொரு பூச்சியால் முடியாது. கறையான் புற்றெடுப்பது போல் இன்னோர் உயிரியால் புற்றெடுக்க ஒண்ணாது. தேனீக்கள் கூடமைப்பது போலவும், சிலந்திப் பூச்சிகள் வலை பின்னுவது போலவும் செய்வது என்பது எவ்வுயிருக்கும் அரிதான காரியம்.
இவையெல்லாம் அவ்வவற்றிக்குரிய தனிப்பண்புகள்; தனித் திறமைகள். இவ்வாறே மனிதர்களும் தனித்தனி இயல்புகளுடன் பிறக்கிறார்கள். எல்லோருக்கும் ஏதாவது ஒரு காரியம் எளிதாகவே இருக்கும். மற்றவர்களிடம் பொதுவாகக் காண முடியாத சிறப் பறிவை, தனித்திறமையைப் பெற்றிருக்கவே செய்வார்கள். இது பிறவி இயல்பு. இதில் ஆச்சர்யப்படுவதற்கோ ஆஹா ஓஹோ என்று கொண்டாடுவதற்கோ எதுவுமில்லை. ஆதலால், யாரும் தன்னை ஒரு குறிப்பிட்ட காரியத்தில் வல்லவன் உயர்த்திப் பேசிக் கொள்ள வேண்டியதில்லை."
-ஒளவையார்
Sunday, 14 June 2026
33
#Reading_Marathon2026
#26RM009
Book No:33/150+
Pages:-318
ஒரு துறவியைப் போல் சிந்தியுங்கள்
-ஜே ஷெட்டி
சுயமுன்னேற்ற நூல்களின் வெற்றியே அறியாத தகவல்களை ஜெயித்தவர்களின் கதையை, உளவியல் பார்வையை பயிலும் போது ஏதேனும் ஒரு தருணத்தில் ஏதேனும் ஒரு கருத்தில் ஒன்றி விடுகிறோம்.பலரின் அனுபவங்கள் மேற்கோள்கள் படிக்க சுவாரஸ்யமளிப்பவை. மூன்று பகுதிகளா இப்புத்தகம் பகுக்கப்பட்டுள்ளது. முதலாவதாக விட்டுத்தள்ளுங்கள் பகுதி.
'துறவிகளைப் போல் ஏன் சிந்திக்க வேண்டும்? எனும் கேள்வியை வலியுறுத்தி வாழ்வை பார்ப்பதற்கான அணுகுமுறையை அதற்கான பதிலைத் தருகிறது.
இப்புத்தகத்தை பார்த்தவுடன் ஆசிரியர் யாரையும் துறவி ஆகச் சொல்லவில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் துறவு மனம் ஏன் தேவைப்படுகிறது என்பதை விவரிக்கிறார்.கவனச் சிதறல் இக்காலத்தில் இருக்கும் மக்களுக்கு இருக்கும்.பெரும்குறை. இதை களைவதற்கான பயிற்சிகளை சொல்கிறார்.இதன்மூலம் ஆற்றல் அதிகரித்து நிகல்கணத்தில் கவனத்தை குவிக்க உதவுகிறது.
மனநிறைவான வாழ்க்கையே கவனச்சிதறல்களை திசை திருப்பதிலிருந்து காக்கிறது.
#வளருங்கள்
ஒரு தலை சிறந்த மனிதன் எதைச் செய்தாலும் அதைச் சாமானிய மனிதர்கள் பின்பற்றுவார்கள் எனும் கருத்தை சொல்லி கற்றுக் கொள்வதன் மூலம் வளர்வதற்கான சிந்தனைகளை சொல்கிறார். அகத்துக்குள் செய்யும் பயணம் நம்.வளர்ச்சிக்கு உதவுகிறது. வளர்ச்சிக்கான பாதை என்பது பலங்களை வளர்ப்பதில் அல்ல, பலவீனங்களை கண்டறிவதில் தான்.
ஒரு செயல் அல்லது ஒரு திறன் நம்க்கு வரவில்லையெனில் விட்டுவிடுகிறோம்.நமது அனுபவமின்மையை பலவீனத்திடன் ஒப்பிடாமல், பலப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
துறவு என்பது வாழ்நிலை மட்டுமல்ல, மனநிலையும் கூட. இருப்பது அனைத்தையும் துறக்கும் எண்ணம் வேண்டும். ஆசை இல்லாத தூய வாழ்வு.மனித மனம் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு ஓடுகிறது. நிலையாக இருப்பதில்லை.இதற்கு துறவு மனப்பான்மை உதவுகிறது. பற்றே வேதனை என்றார் புத்தர். எதிர்பார்ப்புகளே பல ஏமாற்றங்களுக்கும் காரணம். இந்த எதிர்பார்ப்பு மனம் ஏற்படுத்திய ஒன்றுதான். அதிலிருந்து முதலில் அகவிடுதலை கிடைக்கும்போது நிம்மதி கிடைக்கிறது.
தீங்கு விளைவிக்கும் செயல்களை எண்ணுவதை துறவு மனம் தடுக்கிறது.எதிர்மறை சிந்தனைகளை கைவிடுதல்.
அந்த வெற்றிடத்தில் நல்ல சிந்தனைகளை துளிர்க்கச் செய்கிறது.நிகழ்காலத்தில் வாழ அனுபவிக்க கற்றுக் கொடுகிறது. பயத்தை கையாளும் திறன் வாய்க்கும் போது தான் புரிதலுக்கான கதவுகள் திறக்கப்படுகின்றன. மகிழ்ச்சி என்பதை ஏதோ ஏழுகடலுக்கு அப்பால்.உள்ளது போல் நினைகிறோம். அதனை துரத்துகிறொம். இறுக்கமான வாழ்க்கைச் சூழலில் நமது ஓய்வு நேரத்தில் நாம் என்ன செய்கிறோம் என்பது, நாம் எதற்கு மதிப்பளிக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. நோக்கத்துடன் வாழ்தல் என்பது புற இலக்குகளை புறந்தள்ளிவிட்டு, உள்.நோக்கிப் பார்ப்பதாகும்.
துறவியின் முக்கிய செயல்களில் ஒன்று நேரம். அதிகாலை எழுவது, ஒரு முழுநாளையும் நோக்கத்துடன் செலவழிக்கத் தயார்படுத்திக் கொள்வது, திட்டமிட்டபடி செயல்களை செய்வது,நிகழ்காலத்தில் வாழ்வது என நேரத்தை அவர்களின் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் வசமாக்கிக் கொள்கின்றார்.நேரத்திற்கு நினைவாற்றல் உண்டு.தினசரி அதனை செய்யும்போது அப்பழக்கம் வழக்கமாகி விடுகிறது.
ஒரு புகழ்பெற்ற வயலின் கலைஞர் மக்கள் அதிகம் பயணிக்கும் ஒரு ரயில் நிலையம் அருகில் சிறந்த இசையை வாசிக்கிறார்.ஆனால் 30டாலர் மட்டும் பெறுகிறார். முந்தைய நாள் வேறு ஊரில் 100 டாலர் சம்பாதித்தார்.ரசிக்காமல் செல்ல பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அவர் திறமைசாலி இல்லை என ஆகிவிடாது. மக்களை பாராட்டும் போது குளிர்விப்பதற்காக பாராட்டுகிறார்கள் எம சந்தேகம் கொள்கின்றனர். ஒருவரும் பாராட்டவில்லையெனில் ஏங்குகின்றனர்.ஆகவே எண்ணங்களில் தெளிவு நமக்கு வேண்டும் என்கிறார்.
ஒவ்வொன்றுக்கும் உவமையாக குரங்கினை சொல்கிறர். அதன மூலம் மனம் பற்றிய கண்ணோட்டத்தை கூறுகிறார்.
ரோமானியர்களிடம் போரை வென்று வரும் தளபதியின் காதில் நீங்கள் ஒரு சாதாரண மனிதர் என்று ஒருவர் காதில் கூற வேண்டும். அதன் மூலம் தான் பெரிய சாதனை செய்யவில்லை என நினைக்குமாறு செய்வார்களாம்.பணிவுக்கான பாதையில் தலைக்கனம் இருக்க கூடாது என்கிறது துறவு.
#கொடுங்கள்
நன்றியுணர்வை வளர்க்க வேண்டியதின் அவசியத்தை கூறுகிறார்.நாம் நேர்மறை எண்ணங்களை மனதில் உருவாக்க நன்றியுணர்வு அவசியம்.துறவிகளின் முக்கிய விசயமாக இதனை பகிர்கிறார்.
கோப்பையில் உப்பிட்டால் உவர்க்கும். அதுவே ஏரியில் இட்டால் சுவை தெரியாது. உன்னுடைய உணர்வுகளை விசாலமாக்கிகொள் என வலியுறுத்துகிறார்.
*அன்பு கிடைக்காதது போல் உணரும்போது, எதையும் எதிர்பார்க்காமல் நமக்குக் கொடுப்பவர் யார் என்று சிந்திக்குமாறு அவர் நம்மிடம் கூறுகிறார்
*கைவிடுதல் நமக்கு விடுதலையைத் தருகிறது, மகிழ்ச்சிக்கு விடுதலை மட்டுமே ஒரே நிபந்தனை. நம் இதயத்தில் கோபம், கவலை அல்லது உடைமைகள் என எதையேனும் நாம் இன்னும் பற்றிக்கொண்டிருந்தால், நம்மால் விடுதலை அடைய முடியாது.
*உங்களுடைய நேரம்.குறுகியது. வேறொருவருடைய வாழ்க்கையை வாழ அதை வீணாக்கிவிடாதீர்கள்
*ஒவ்வொரு நாளும் கண் விழிக்கும்போது, 'இன்று நான் உயிரோடு இருப்பதற்குப் பாக்கியம் செய்திருக்கிறேன், எனக்குக் கிடைத்திருப்பது ஒரு விலைமதிப்பற்ற மனித உயிர், நான் அதை வீணாக்கப் போவதில்லை' என்று எண்ணுங்கள்-தலாய் லாமா
அமைதி மற்றும் நோக்கத்தை அடைவதற்கு எல்லோருக்கும் ஏற்றப் பாதை என்ற ஒன்று கிடையாது. நம்முடைய சொந்த வழியில், நமக்கு ஏற்ற ஒரு வேகத்தில் சென்று, வாழ்க்கையில் நமக்கு என்ன வேண்டுமோ அதில் நம் கவனத்தைக் குவிப்பதன் மூலம் மட்டுமே அதை நம்மால் அடைய முடியும்.துறவு என்பது வெறுமனே அமர்ந்துருப்பது மட்டுமனறு மனமதை செம்மையாக்கும் முயற்சி. இன்றைய அவசர உலகில மனதை செம்மையாக்கவே நாம் முயல வேண்டும்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Friday, 12 June 2026
Thursday, 11 June 2026
மாடசாமி
சிறிய பள்ளிகளே சிறப்பானவை...
சிறிய பள்ளிகள் முக்கியமானவை; நம்பிக்கைக்குரியவை. அங்குதான் உறவுகள் சாத்தியம்; குழந்தைகளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சனைகளுக்குத் தீர்வு சாத்தியம்.
பெரும் பள்ளிகளின் பெருங்கூட்டத்தினிடையே குழந்தைகளின் தனித்துவங்கள் தொலைந்து போகின்றன. கூட்டத்துக்குள் ஒரு தனிமை உண்டாகிறது. பிடிமானமின்மை நேர்கிறது. பெயரற்றுப்போகும் பரிதாபம் நிகழ்கிறது.
பெரிய பள்ளி அனுபவம் - நெரிசலான ஒரு பெரிய கடைவீதியில் நடந்துபோகும் அனுபவம்தான். பிரமிப்பு இருக்கும்; நெருக்கம் இருக்காது.
சிறிய பள்ளிகளின் சிறிய வகுப்பறைகளில்தான் ஒவ்வொரு குழந்தையிடத்தும் மின்னும் நட்சத்திரங்களைக் காண முடியும்.
வகுப்பறையில் சிரிக்கிற முகங்கள் எல்லாம் ஏறத்தாழ ஒரே மாதிரி இருக்கின்றன. வாடிய முகங்கள்தாம் பல விதமாக இருக்கின்றன. ஒவ்வொரு வருத்தமும் ஒவ்வொரு விதம் மாணவர்கள் கும்பல் அல்ல; வகுப்பறை - ஒரே முகம் அல்ல.
கலகலப்பான தருணங்களிலும் ஒட்டாமல் உட்கார்ந்திருக்கும் மாணவர் சிலரை என் வகுப்பறையில் பார்த்திருக்கிறேன். நெருங்கிப் போனால்- குடும்பம், சாதி, வறுமை என ஏதோ ஒரு சுமையின் பாரத்தோடு அவர்கள் வகுப்பில் இருப்பார்கள்.
அவர்கள்தான் பாடத்துக்கு வெளியே ஒரு சமூகம் இருக்கிறது என்று ஆசிரியர்களுக்கு உணர்த்துகிறார்கள். வாடிய முகம் ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் போல! கண்களைத் திறக்கின்றன... ஆசிரியர்களுக்கு வாயா முக்கியம்? கண்கள் அல்லவா முக்கியம்!
-பேராசிரியர் ச.மாடசாமி, கல்வியாளர்.
Tuesday, 9 June 2026
book-32
#Reading_Marathon2026
#26RM009
Book No:32/150+
Pages:-128
மூன்று காலங்களுக்குப் புறப்பட்டுச் சென்ற மூன்று ரயில்கள்
-தூயன்
சமகால எழுத்தாளர்களில் கவனிக்கத் தகுந்த எழுத்தாளர்களின் ஒருவர். அவரின் வலைதளங்களில் அவருடைய எழுத்துக்களை வாசித்த உந்துதலில் வாங்கிய புத்தகம் இது. தலைப்பு வித்தியாசமாக இருந்தது. புத்தக அளவு பயமுறுத்தாமல் குறைவான பக்கங்கள் இருந்தது. நுண்கதைகளை நான் எப்போதும்.விரும்பி வாசிப்பேன். அது CBSE பாடப்பிரிவில் அதிக மதிப்பெண் எடுக்கும் சிரத்தை உடையது.கூர்மையான சொற்களும் இறுக்கமான நடையும் அவசியம். குறைவான பக்கங்களில் எடுப்பு தொடுப்பு முடிப்பு அவசியம்.
வயதான முதியவர் ஒருவர் சாலை விபத்தில் அடிபட்டு இறந்துவிட்டார்.
பயணிகள் சிலர் ஓரமாக தூக்கிவைத்து விடுகின்றனர். இதற்கு இடையே மீதிப்பணத்தை முதியவரிடம் கொடுக்க டீக்கடை பையன் வந்து பாக்கெட்டில் பணம் வைக்கிறான்.இதுதான் சூழல். கும்பலுக்கு எப்போதுமே வேடிக்கைதான் என பிரபல வரி உண்டு. இதை தன் எழுத்து சாகசத்தில் படைத்திருக்கிறார்.
"கூட்டம் வட்டச்சுருள்போல மனித உடல்களால் சுற்றியுள்ளது. அவனுக்கு உள்ளே நுழைந்து அதன் மையத்தை அடைவதில் ஆர்வம். ஒவ்வொரு வட்டமாக வளைந்து மையத்தை நெருங்குகிறான் மையத்தில் யாரும் இல்லை. மையம் வெறும் காலியிடம்தான். மொத்தக் கூச்சலும் மையத்துக்கு வெளியேதான். மையம் அமைதியாக இருக்கிறது. அங்குதான் அவர்கள் பேசிக்கொள்ளும் விபத்து நடந்திருக்க வேண்டும்" என சிறுவன் பார்வையில் கதை வார்த்தையில் நம்மையும் உள்ளே நுழைக்கிறது.
புகை வண்டியில் ஏறும் படிமத்தை அழகிய சொற்களில் காட்சிப்படுத்துகிறார் /வண்டி புறப்பட இன்னும் இரண்டு மணிநேரம் இருக்கிறது. அதுவரை இடத்தைப் பிடிக்க நிறைய சமரசமற்ற நிர்பந்தங்களும் தர்மசங்கடங்களும் பொய்ப் பித்தலாட்டங்களும் வெளிவரப்போகிறது. புஜபலபராக்கரமங்களை வெளிப்படுத்தும் பெண்களையும் மல்யுத்தத்திற்குத் தகுதியான ஆண்களையும் இனிப் பார்க்கலாம். குழந்தையுடன் ஏறுகிறவர்களுக்கு உரக்கப் பேசி இடத்தைப் பிடிக்கும் உரிமை உண்டு. பறிபோன அதிர்ஷ்டத்தை மொழி தெரியாதவர்களிடம் இழந்ததற்கு இவ்வுலகைச் சலித்துக்கொள்ள வேண்டியிருக்கும். கதவோரங்களில் வசதியாக உட்காரவும் காற்றை வாங்கவும் பொறுமையும் சங்கோஜமும் அவசியம். தண்ணீர் குடிக்காமலிருந்தால் ஏழு கடல் ஏழு மலை தாண்டிக் கழிவறை அடைவதை நிறுத்த முடியும். இப்படி ஆளுக்கொரு மனச்சொற்களால் வண்டியை நகர்த்த முடிவெடுத்தோம்/ வண்டியில் நாமும் அமர்ந்திருப்பதை உணர வைத்திருப்பார்
கடலில் இறந்து கரை ஒதுங்கிய பெண்ணின் ஆடையில் சிக்கிய மீனும் இறந்திருந்தது. அவள் விளையாடிய நடந்த காலடித் தடங்களை அழித்தது தவிர வேறு எதுவம்தெரியாது என அலைகள் புலம்புவதாக நுண்கதை ஒன்று படிக்கும் போது நம்மையும் ஒன்ற வைக்கும்.சிறிய கதைக் கருவை நுட்பமான விவரிக்கும் முறை சலிப்பின்றி வாசிக்க வைக்கிறது. அவை சாதாரண கதையாக நிகழ்வாக, செயலாக இருந்தாலும் கூட.
செவிலித்தாய் கேள்விப்பட்டிருப்போம். நவீன காலத்தில் வாடகைத்தாய்க்கு தான் தேவை அதிகம்.அப்படியாக குழந்தையின்மை தம்பதியர் வாடகை த்தாயை தேடிச் செல்லும் குறுங்கதை. இறுதியில் ஷேர் ஆட்டோ போல கட்டுபடியாகும் என பேரம் பேசி விடுவது யதார்த்தம். வட நாட்டு பெண்கள் தான் இதற்கு அதிகம் தயாராக உள்ளனர் என்பதும் புதிய செய்தி. தெய்வமே நீங்க இங்கயும் வந்திட்டீங்களானு நினைக்கத் தோனுது.
படிப்பு முடிந்து செல்லும்.மூவரும் ஆல்ஃபா கடிகாரம் கட்டிச் செல்கின்றனர்.மூன்று ரயில்களில் வெவ்வேறு பாதைகளில் செல்கின்றனர். மூன்று ரயில்கள் வருகிறபோது கடிகார மணி ஓசை கேட்கும். அப்போது ரயிலைன்நிறுத்தி சந்திப்பதென்பது திட்டம். அவ்வாறு நடந்ததா அவ்வாறு நிகழ்ந்தபோது ஏற்பட்ட உணர்வை யதார்த்தமாய் சொல்லியிருப்பார்.சஸ்பென்சுடம் கூடிய எதிர்பார்ப்பு நம்மையும் தொற்றிக் கொள்கிறது. இக்கதைதான் புத்தக தலைப்பிற்கான கதையும் ஆகும்.
காலம் குறித்த கதைக்கரு அதிகம் தொட்டு பேசியுள்ளார்.இக்கதைகள் அனைத்தும் அன்றாட வாழ்வில் மனதில் தோன்றும் சாதாரண பக்கங்களை இக்கதை தொடுகிறது. சிலவற்றில் காட்சி படிமத்தை விளக்குகிறது."அடக்குவதுதான் அதிகாரத்தின் முதல் வெற்றி" என வர்க்க தத்துவத்தையும் பேசுகிறது.
'உலகத்தின் தேவதைகளெல்லாம் மறைந்துபோன பிறகு கடைசியாக, சந்தோஷம், துக்கம் என்ற இரு தேவதைக் குழந்தைகள் பிறந்தன எனும் துவக்க வரி கடைசி தேவதைகள்.கதைக்கான நல்ல துவக்கம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 7 June 2026
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா?’ கழுத்திலோ, காதிலோ, தலையிலோ ஆபரணங்களைப் பூண்டால், அவற்றை அணிந்துகொள்கிறவர்கள் கண்ணாடியின் உதவியோடுதான் அவற்றைப் பார்க்க முடியும். ஆனால், மோதிரம், வளையல் போன்ற ஆபரணங்களைக் கையிலே பூணும்போது, கண்ணாடியின் உதவியின்றியே அவற்றைப் பார்க்கலாம். இதைத்தான் ‘கைப்பூணுக்குக் கண்ணாடி தேவையா?’ என்று சொன்னார்கள். நாம் ‘பூண்’ என்பதைப் புண்ணாக்கிவிட்டோம்!-ரவிஷங்கர்
Thursday, 4 June 2026
ஜீயொ டாமின்
நாம் பிறக்கும் முன்பே இந்த ஓட்டப் பந்தையத்தின் விதிகள் எழுதப்பட்டு விட்டன. பால்வாடி பிள்ளைகள் தொடங்கி, ரேப்பிடோ டிரைவர், இன்ஸ்டா இன்புளூயன்சர், ஐடி ஊழியர், அம்பானி, அதானி, எலான் மஸ்ட், டிரம்ப், நான், நீங்கள் என எல்லோரும் இந்த பந்தையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறோம்.
இதில் பலருக்கு மூச்சிரைக்க ஓட வேண்டியிருக்கிறது; சிலருக்கு ஒய்யார நடைபோடும் அனுகூலம் இருக்கிறது.
இந்த பந்தையத்தில் வெற்றி பெற்றால் வாழ்வு சிறக்கும் என்று நாம் ஒவ்வொருவரும் நம்ப வைக்கப்பட்டிருக்கிறோம். என்றாலும், பந்தையத்தின் விதிகள் எப்போதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிலர் மட்டுமே வெற்றிபெறுமாறு கச்சிதமாய் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
தோற்கும் தொண்ணூற்றொன்பது விழுக்காட்டினரைவிட வெற்றி பெறும் ஒரு விழுக்காட்டினரின் கதையாடலே இங்கு பேசுபொருளாகிறது. ஆகவே, வெற்றி பெறும் அந்த மிகச்சிலரைக் குறித்த சித்திரமே பந்தையத்தில் ஈடுபட்டிருக்கும் எண்ணூற்று ஐம்பதுகோடிபேரையும் வேகமாய் ஓடச்செய்கிறது.
பெரும்பான்மையினர் எவ்வளவு வேகமாக ஓடுகிறார்களோ அவ்வளவு வேகமாக வெற்றி பெற்றோரிடம் செல்வம் திரள்கிறது.
ஓட்டத்தின் போக்கில் இந்தப் பெருந்திரள் கூட்டமானது பல்வேறு இயற்கை வளங்களை மதிப்புக்கூட்டி, வெற்றி பெற்றோர் நுக்வதற்கான பண்டமாக்குகிறது. இயற்கையைச் சுரண்டி விற்பனைப் பொருளாக்குவதே இந்த ஆட்டத்தின் மையம். எவ்வளவு விற்பனை அதிகரிக்கிறதோ அவ்வளவு அதிக வளர்ச்சி என்று சொல்லப்படுகிறது. இந்த மதிப்புக் கூட்டல் இயற்கை வளச் சுரண்டலாகவும், கார்பன் உமிழ்வாகவும், சூழல் மாசுபாடாகவும், கையாள முடியாத குப்பைகளாகவும் பெருகுகிறது.
நூறாண்டுகளுக்கும் மேலாய் வெளியேறிய கார்பன் மைதானத்திலிருந்து திரண்டு எழும்பி வானத்தின் மூடிய வாசல்களைத் திறந்துவிட்டு சூரியனின் நெருப்பை மழையாய் மக்கட் திரள்மீது பொழியச் செய்திருக்கிறது. காற்று மாசுபாடும் நீர் மாசுபாடும் கொள்ளை நோய்போல ஓடுவோரைக் கொத்துக்கொத்தாய் கொன்றொழித்துக் கொண்டிருக்கிறது.
ஓட்டப்பந்தையம் ஆறாம் முற்றொழிப்பில்தான் (6th mass extinction) முடியக்கூடும் என்பது உறுதியாகியிருக்கிறது. என்றாலும், போட்டி வளமான எதிர்காலத்தைத் தருமென்ற கதையாடலும் நம்பிக்கையும் இன்னும் உயிர்ப்போடும் அசுர பலத்தோடும் இருக்கிறது.
கொஞ்சம் நிதானமாய் யோசித்தால் நமக்கு வேண்டியது இந்த ஓட்டம் அல்ல என்பதையும் இது நமக்கு நிறவாழ்வைத் தர முடியாது என்பதையும் உணர முடியும்; இன்னும் கொஞ்சம் ஆழமாய் அவதானித்தால், நம் எதிரி கார்பன் டை ஆக்சைடு அல்ல; நம் நோய்க்கு மருந்து சோலார் பேனலும், மியாவாக்கிக் காடும் அல்ல என்பதைப் புரிந்துகொள்ள முடியும்!
ஆனால், இதை எப்படி எல்லோரும் அறியச் செய்வது? எப்படி இந்த முடிவுறா பந்தையத்தின் விதிகளை மாற்றி எழுதுவது?
இந்த கேள்விகளுக்கான பதிலிலேயே நம் வாழ்வும் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது.
ஜூன் 5 – உலக சுற்றுச்சூழல் நாள்
Saturday, 30 May 2026
book-31
#Reading_Marathon2026
#26RM009
Book No:31/150+
Pages:-711
ஒரு தூக்குக் கைதியின் வாக்குமூலம்
- தூக்கு செல்வம்
இந்த ஆண்டு புத்தக திருவிழாவில் பல பிரபலங்கள் பரிந்துரைத்த புத்த்கம் இது.இதற்கு திருடன் மணியன் பிள்ளை புத்தகத்தை மணியன் எழுதியது போல. இப்புத்த்கத்தை தூக்கு செல்வம் எழுதியுள்ளார்.தூக்கு கைதி செல்வம் 1998 ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு 2012ல் குடியரசு தலைவரால் ரத்து செய்யப்பட்டு வாழ்நாள் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளார். செல்வம் எந்த குற்றத்திற்காக தண்டனை பெற்றார் என்பதும், சிறை வாழ்க்கைக்கு எவ்வாறு ஆளானார் ,
என்பதே புத்தகம்.
சிறை துறை பற்றி சமீபத்தில் ஜூனியர் விகடனில் தொடராக வந்தது.அதற்கு முன் தியாகு எழுதிய சுவருக்குள் சித்திரங்கள் வாசித்துள்ளேன். சினிமாவிலும் கமலின் மகாநதிதான் ஜெயில் பற்றிய சித்திரத்தை யதார்த்தமாய் காண்பித்தது. அதற்கு பின் நெட்ப்ளிக்ஸில் திஹார் சிறை குறித்த தொடரும் அங்கு நடைபெறும் நிகழ்வை உள்ளது உள்ளபடியே காண்பித்திருக்கும்.
பணம் படைத்தவர்களும், உயர் சாதியினரும் தூக்கு மேடைக்கு வருவதில்லை.ஏழை எளிய குரலற்றவர்கள்தான் வருகின்றனர் எனும் நடைமுறை யதார்த்தத்தை பிரதிபலிக்கிறது.
"வெளிச்சத்தில் வாழும் மனிதர்களே உங்களை ஓர் இருள் சூழ்ந்த உலகத்துக்குள் அழைத்துச் செல்கிறேன் என ஆரம்பிக்கும் என்னுரையில் தனிமை குறித்த மனநிலையை உணர்த்துகிறது. காலம் கடுங்காவலில் வைத்த வலியை தருகிறது. திரைப்படங்களில் வரும் சிறைக்காட்சிகள் போலியானவை என கூறி சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் உள்ளதென கூறுகிறார்.சிறை குறித்த வரலாற்றையும் இறுதியில் கொடுத்துள்ளார்.
நீதிபதி தண்டனை வழங்கியதும் பாளையங்கோட்டை நடுவண் சிறைக்கு சுமந்து செல்லும் வாகனத்திலிருந்து துப்பறியும் பாணியில் புத்தகம் துவங்குகிறது. செல்வத்தின் இளமை பருவம், பள்ளிப் படிப்பு, சிறுவயதில் பார்த்த முதல் பிணம், இரண்டாம் பிணத்தின் பிண்ணனிக் கதை, பால் துரை மாமாமின் வளர்ப்பில் விரிகிறது.
முன்பகை காரணமாக வெட்டுப்பட்டு வயலில் குத்துயிராய் கிடந்த செல்வத்தின் மரணவலி நமக்கும் படிக்கும்போது வருகிறது. பழிவாங்கலில்.செல்வம் ஈடுபடுகிறபோது சொல்கிறான்
"மனித குலத்திற்கே முதன்மையானது பழி உணர்ச்சி. பழி வாங்குவதில் குரூரமும் சந்தோஷமும் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். வன்முறை பாதைக்குள் ஒரு முறை நுழைந்தால் மீண்டும் திரும்பிவர முடியாது. அந்த ஒரு வழிப்பாதையில் நாங்கள் இருவரும் மிகவும் வேகமாக ஐயப்பனை நோக்கி சென்றுகொண்டிருந்தோம் என்று.
ஐயப்பன் உயிரிழந்த பின்பு லிங்கத்தின் நட்பு செல்வத்தை காப்பாற்றியது.அதன்பின் அய்யாவு, பிரபு என நீளும் பட்டியலுடன் அடுத்தடுத்து நிகழும் சம்பவங்கள் ஒரு திரில்லர் நாவல் போல விரிகிறது.இரண்டாம் பாகத்தில் போலிஸிடன் சரணடைந்த பின் வரும் ஜெயில் அனுபவங்கள் நம்மையும் சிறை கைதி போல உணரச் செய்கிறது.
விடியற்காலை மலத்தை பேப்பரில் சுற்றி வைத்திருந்து, காலை ஆறுமணிக்கு கதவு திறக்கப்பட்டதும் கொண்டு சென்று எறிய வேண்டும்.
மேலும் ஜெயிலில் உள்ள வகைகள்,
அறைகளின் அமைவிடம், ஒரு கைதியை 3 பேர் மனுப்போட்டு பார்க்க முடியும்,சிறைக்குள் நடக்கும் மோதல்கள்,கைதிகள் விடுப்பு, திறந்த வெளி சிறையில் இருந்தால் தண்டனை நாள் பாதியாகும் என பல சிறை பற்றிய அறியாத பல செய்திகள் வருகிறது. செல்வம் சிறைக்கைதிகளுக்கான பல உரிமைகளை பெற்றுத் தருகிறார். சிறை அதிகாரிகளின் குணங்கள், சட்ட ஆணைகள் பற்றிய விபரங்களை புத்தக வாசிப்பின் மூலம் அனுபவங்களின் மூலம் அறிந்து தந்துள்ளார்.அந்நாளில் இவருடன் பிரேமானந்தா, வீரமணி உள்ளிட்ட பலரும் சிறையில் இருந்துள்ளனர்.
சென்னை, திருச்சி, பாளை
பாளை, கடலூர், நெல்லை உள்ளிட்ட சிறை அனுபவங்கள் விரிவாக எழுதியுள்ளார்.ஒவ்வொரு ஆண்டும் நடந்த சிறைச்சாலை மரணங்களையும் பதிவு
செய்துள்ளார்.காவிரி நதிநீர் பிரச்சினை உண்ணாவிரதம், புலிகள் பிரச்சினைகள்,செம்மொழி மாநாடு, சிறைக்கு வரும் அரசியல் கட்சி தலைவர்கள் என ஒவ்வொரு ஆண்டும் நடந்த நிகழ்வுகள் பதிவாகி சுவாரஸ்யபடுத்தியுள்ளார்.
வேலூர் சிறையில் முருகன் சாந்தன் பேரறிவாளன் ஆகியோரிடம் பழகிய அனுபவங்களை விவரித்திருப்பார்.
தான் செய்த குற்றங்களை சுய இரக்கமின்றி உள்ளது உள்ளபடியே
விவரித்திருப்பார்.நான்கு அறைக்ள் தான் அங்கு நடைபெறும் வழக்கமான சம்பவங்கள் தான் ஆனால் பக்கத்துக்கு பக்கம் அனுபவ சுவடாய், த் ரில்லாய் செல்கிறது.
2017ம்.ஆண்டு சேலம் சிறையில் நடந்த புத்தக கண்காட்சி தான் வாசிப்பு பக்கம் செல்வத்தை திசை திருப்பியது எனலாம்.ஒரு புத்தகம் என்ன செய்யும் என்பதை அடிக்கடி கேட்பதுண்டு. அது நிகழ்த்தும்.மாயம் அற்புதமானது.எழுதுவதற்கு முகிலன்
என்பவரின் ஊக்குவிப்பு குறித்து கூறுகிறார்.அதன்பின்பு வாசிப்பு வாசகர் வட்டம் சிறையில் நடைபெற்ற கலந்துரையாடல் பற்றியும் பிரபலங்களுடன் பேசியதையும் பகிர்ந்து கொள்கிறார் 2023ம் ஆண்டு ஒரு வழக்கில் பத்ரி சேஷாத் ரி செல்வத்துடன் இருந்த போதுதாம் இந்நூல் வடிவம் பெற விதை போட்டார்.
மூன்றாம் பாகத்தில் சிறை குறித்த அனுபவத்தை மடலாக வடித்துள்ளார்.
~படித்ததில் பிடித்தது
*புதிதாக சிறைக்கு வருபவர்களுக்கு தொற்று நோய் அறிகுறி இருப்பதை கண்டறிய 2-3 நாட்கள் தனிமை சிறையில் அடைத்த. வைப்பார்கள்
*போதைகளில் முதன்மையானது கையில் ஆயுதம் ஏந்துவதுதான்
*வெட்டரிவாளை கையில் எடுத்தவனுக்கு ஒரு நிரந்தர நண்பன் இல்லாமல் போகலாம்,ஆனால் நிரந்தர எதிரி உருவாகிக் கொண்டே இருப்பான்
*பஞ்சாப் பிரிவினைவாத காலிஸ்தான் இயக்கத்தை ஒடுக்க 1985ல் இயற்றப்பட்ட சட்டமே தடா சட்டம்
*சுற்றுச்சுவர்களையும் கம்பிக்கதவுகளையும் விட அச்ச உணர்வுதான் சிறைசாலைகளுக்கு பலமான பாதுகாப்பு
*1837ல் சென்னையும், 1880ல் பாளையும்,1865 திருச்சியும் ஆங்கிலேயர்களால் கட்டபட்ட சிறைகளாகும்
*பகையின் தொடக்கமும் முடிவும் மனிதனின் கையில் இல்லை
*சிறையாளிக்கு சிறையில்தரும் உடைதான் மன அழுத்தம் தரும் முதல் விஷயம்
*மனித மூளை அளவில் சிறிதாக இருந்தாலும், அதன் செயல்பாடுகளையும் சிந்தனை திறன்களையும் அளவிட முடியாது.
*2013ம் ஆண்டு சிறையாளிகளுக்கு தொலைபேசி வசதி கொண்டு வரப்பட்டது.வாரம் ஒரு முறை 6 நிமிடங்கள் பேசலாம்.கட்டணம் ரூ30
*சாந்தனின் கவிதை கொஞ்சம் மனம் கனக்க வைக்கிறது
வேர் இல்லை
நெடுங்காலமாக வாழ்கிறது
தூக்கு மரம்
*ஆங்கிலேயர் காலத்தில் சிறையில் பாம்பு ஒன்றை பிடித்துக் கொடுத்தால்.தண்டனை காலம் 2 மாதம் முதல் 3 மாதம் வரை குறைக்கப்படும். தற்போது கடைபிடிப்பதில்லை.
இப்புத்தகத்தின் ஒரு சிலவற்றை மட்டுமே பகிர்ந்துள்ளேன். பக்கத்துக்கு பக்கம் ஏதேனும் ஒரு நிகழ்வு அது முடிந்தவுடன் அடுத்தது என நீள்கிறது.சிறை குறித்து அங்குலம்.அங்குலமாக பேசியுள்ளார். அத்தனை அதிகாரிகளையம் நினைவில் வைத்து எழுதியுள்ளார். வித்தியாசமான வாசிப்பு அனுபவம்
தொடந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Wednesday, 27 May 2026
book-29
#Reading_Marathon2026
#26RM009
Book No:29/150+
Pages:-361
உங்களால் வெல்ல முடியும்
-ஷிவ் கோரா
வெற்றி என்றாலே அது அதிர்ஷ்டத்தில் வந்துள்ளதாக எண்ணுவர்.தங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லையெனில் அதிர்ஷ்டம் இல்லையென்று அலுத்துக்கொள்வர்.இப்புத்தகம் ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு மந்திரவார்தையாக ஒவ்வொரு அத்தியாயத்திலும் சொல்லியிருக்கார்.முதலாவதாக வெற்றிக்குத் தேவை மனப்பாங்கு என்கிறார்.இதற்கு உதாரணமாக விவசாயி-வைரம் கதையை சொல்கிறார். அக்கதை சொல்ல வந்த கருத்திற்குமிகவும் பொருத்தமாக இருக்கிறது.
நாம்.உடனிருக்கும் பணியாளர்களை கையாளவது பற்றிய கார்னெஜியின் விளக்கம்..நாம் தங்கத்தை தோண்டி எடுக்க முனையும்போது மண்ணை பார்க்க மாட்டோம். தங்கத்தை மட்டும் தேடுவதுதான் நம் நோக்கம் போல் நேர்மறை எண்ணங்களை பயன்படுத்துங்கள் என்கிறார்.
நல்லனவற்றை செய்வது, கடந்தகால தவறுகளை எண்ணிக்கொண்டு நில்லாமல் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை வைத்து செயலாற்றுவது,
அறிவு என்பது எதையும் விரைவாகக் கற்பது. திறமை என்பது கற்றதைச் செயல்படுத்துவது. செயல் திறன் என்பது கற்றதைச் செயல்படுத்தும் திறமையும் விருப்பமும் ஆகும். விருப்பம் என்பது திறமை படைத்த ஒரு மனிதரைச் செயல்திறன் உடையவராக மாற்றும் ஒரு மனப்பாங்காகும். எத்தனையோ திறமைசாலிகளெல்லாம் செயல்திறன் அற்றவர்களாக இருக்கிறார்கள். நல்ல மனப்பாங்கு இல்லாத மனிதர்களிடம் இருக்கும் திறமைகள் உபயோகமில்லாமல் போய்விடும்.ஆகவே அறிவையும் தொழில்நுட்பத்தை கற்றுக் கொள்ள வேண்டும்.
சுயமதிப்பை வளர்த்துக் கொள்வதன் மூலம் வெற்றி அடைய உள்ள விசயங்களை கதைகள் உரையாடல்கள் வழியே முன்வைக்கிறார்.வெற்றி என்பது புரியாத புதிர் அல்ல;மாறாக சில அடிப்படைக்கொள்கைகளை விடாமல் பயன்படுத்துவதால் வரும் விளைவு ஆகும்.ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கை படிப்படியாக அடைவதே வெற்றியாகும் என்கிறார் ஏர்ல் நைடிங்கேல்.உதாரணத்திற்கு கூட்டுப்புழுவில் இருந்து வண்ணத்துப்பூச்சி வெளிவரும் சமயத்தில் யாரும் உதவக்கூடாது என்றார் ஆசிரியர். ஆனால் ஒரு மாணவர் அப்பூச்சி போராடுவதை பார்த்து உதவியதால் அது இறந்தது. ஆசிரியர் உடனே அப்போராட்டம் தான் அப்புச்சி உயிர்வாழி முக்கியமானது என்று விளக்கி தடைகளை தாண்டினால் உயிர்வாழ்வது சாத்தியம் என்றார்.
சில வரலாற்று செய்திகள் நம்பிக்கை ஊட்டும் விதத்தில் உள்ளன
"ரிச்சர்ட் ப்ளெச்னிடென், 1904 இல், செயின்ட் லூயிஸ் உலகக் கண்காட்சியில் இந்திய டீயின் விற்பனையை மேம்படுத்த எண்ணினார். மிகவும் சூடாக இருந்ததால், அவரது டீயை யாருமே மாதிரிக்குக்கூட குடித்துப் பார்க்கவில்லை. மற்ற எல்லாக் குளிர்பானங்களும் நன்றாக விற்றுக் கொண்டிருப்பதைப் கவனித்தார். தன் டீயைக் குளிர வைத்து, சர்க்கரையுடன் கலந்து விற்கலாம் என்ற யோசனை திடீரென்று அவருக்குத் தோன்ற, அப்படியே அவர் செய்தார். மக்களும் அதை விரும்பினார்கள்.அதுவே உலகிற்கு குளிர்ந்த டீயை அறிமுகப்படுத்திய நிகழ்ச்சியாகும்.
ஒரே வேலைதான். ஆனால் பணியாளர்கள் வெவ்வேறு மனநிலையில் பணியை ஏற்பதால் அயர்ச்சி ,எதிர்மறைத்தன்மை ஏற்படுகிறது. இதை களைவதற்கான வழியை சொல்கிறார். பணியிடத்தில் அகத்தூண்டல், புறத்தூண்டல் செயல்ப்டும் விதம் அழகியகதை மூலம் விளக்கப்படுகிறது. "ஒரு பணியாளரிடம் வாடிக்கையாளர் 'இங்கே எப்போதிலிருந்து வேலை செய்கிறீர் எனக் கேட்டதற்கு என்னை அவர்கள் வெளியேற்றிவிடுவேன் என பயமுறுத்திய நாளிலிருந்து என்று பதிலளித்தார்.இதற்கு நேர்மாறாக ஊக்கம், பொறுப்புணர்வு மிகுந்த அகவயத்தூண்டல் எவ்வாறு ஊழியர்களை பணிசெ ய்ய வைக்கிறது என்பதன் உதாரணத்தையும் நமக்குத் தருகிறார்.
வெற்றி பெறுவதற்கு சுய கெளரவம் மிக முக்கியம். பென்சில் விற்கும் பிச்சைக்காரரிடம் நீங்களும் என்னை போல் வியாபாரி தான் என்று கூறி பிச்சையிடாமல் பென்சில் வாங்கியது அவரை ஊக்குவித்து வெற்றியடைய வைத்தது.பொருள் பற்றிய அறிவை விட மக்களைப் பற்றிய அறிவுதான் வியாபாரிக்கு மூலதனம்.ஹென்றி போர்ட் v8 என்ஜினை உருவாக்க அவரின் உதவியாளர்கள் சாத்தியமில்லை என்றனர். இறுதியில் அவரே ஊக்குவித்து உருவாக்கினார். கல்வியின் வன்முறையைத் தாண்டி கற்பனையை ஓட விட்டதால் இக்கண்டுபிடிப்பு சாத்தியமென்றார்.
அகம்பாவம் என்பது முட்டாள்தனத்தின் வலி தெரியாமல் இருக்கச் செய்யும் மயக்க மருந்தாகும் என்கிறார் நியூட் ரோக்னே. வெற்றி பெற தேவையானது அகம்பாவமில்லாமல் இருப்பது.எப்போதும் மற்றவர்களிடம் நன்றியுடன் இருப்பது முக்கியமாகும்.ஒரு பவுண்ட் கெட்டிக்காரத்தனத்தை விட ஒரு அவுன்ஸ் விஸ்வாசம் அதிக மதிப்பு உடையது.நேர்மையாய் இருப்பது உண்மையாய் இருப்பது பொறுமையுடன் செயல்படுவது என ஒவ்வொரு அத்தியாத்திற்கும் ஏற்ற பொன்மொழிகள் சிறு துணுக்குகள், கதைகள் முடிந்தபின் அதற்குரிய செயல்திட்டங்கள் விளக்கமாய் கொடுக்கப்பட்டுள்ளன.
இலக்குகளே வெற்றியை அடைய கவனச் சிதறலின்றி ஓடவைக்கிறது.
ஒரு தரமான புகைப்படம் எடுக்க கேமராவிற்கு ஃபோகஸ் முக்கியமோ அதுபோல இலக்கும் முக்கியமானது.
அர்த்தமில்லாத இலக்கையும் குறிப்பிடுகிறார்..ஒரு நாய் ஒவ்வொருகாரையும் பின் தொடர்ந்து குரைக்கும்.அந்த காரை பிடித்து விட்டால் அந்த காரை வைத்து அந்த நாய் என்ன செய்ய இயலும் என கேள்வி எழுப்பும்போது அர்த்தமற்ற இலக்குகளை பற்றிய தெளிவு நமக்கு கிடைக்கிறது.
நூற்றுக்கணக்கானவர்களோடு ஒரு மூன்று நபர்கள் மராத்தான் பந்தயத்தில் ஓடினார்கள். பதக்கத்தை வென்றதோ நான்காவது நபர். அதற்காக இந்த மூவரும் தோல்வியடைந்து விட்டார்கள் என்று பொருளாகுமா? இல்லவே இல்லை. அந்த மூவருமே வெவ்வேறு
குறிக்கோள்களுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்கள்.
முதலாமவர், தன் நீடித்த உறுதிப்பாட்டைச் சோதிக்க ஓடினார், இரண்டாமவர், முன்னர் தான் நிகழ்த்தியதை விட முன்னேற்றிக் காட்ட விரும்பினார்;மூன்றாமவர், தன் வாழ் நாளில் அதற்கு முன்னால் மராத்தானில் ஓடியதே இல்லை. அவரது குறிக்கோள் பந்தயத்தில் முழுமையாக ஓடி இலக்குக் கோட்டை அடைந்துவிட வேண்டும் என்பதேயாகும். அதனையே அவரும் செய்தார். இவை நமக்கு என்ன சொல்கின்றன? வெவ்வேறு குறிக்கோள்களை உடைய அந்த மூவரும் அவற்றை நிறைவேற்றினார்கள். ஆகவே, யார் பதக்கத்தை வென்றிருந்தாலும் அவர்கள் எல்லோருமே வெற்றியாளர்களே.
மார்க் ட்வைன் சொன்னதுபோல, ஒரு கௌரவத்தைப் பெற்றிருந்து, அதற்குத் தகுதியற்று இருப்பதை விட அதைப் பெறும் தகுதி இருந்தும், அதனைப் பெறாமல் இருப்பதே சிறந்ததாகும். ஏனென்றால், மதிப்பு என்பது தகுதி பெற்று இருப்பதே தவிர வேறு எதையும் பெற்றிருப்பது இல்லை.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 18 May 2026
Saturday, 16 May 2026
Wednesday, 13 May 2026
Monday, 11 May 2026
வெறுப்பு இறந்த காலத்திலும் எதிர் காலத்திலும் இருப்பது… நிகழ்காலத்தில் உங்களால் வெறுக்க முடியாது. முயற்சி செய்து பாருங்கள். முடியவே முடியாது… இறந்த கால, எதிர்கால தொடர்பில்லாமல் வெறுப்பு காட்டவே முடியாது.அன்பு செய்யுங்கள் இந்த உலகம் மீண்டும் சுவர்க்கமாகும்.அன்புக்கு எந்த அடிக்குறிப்பும் தேவை இல்லை. அது தான் அன்பின் அழகு. அது தான் அன்பின் சுதந்திரம். வெறுப்பு ஒரு பந்தம், ஒரு சிறை.உண்மை அன்பு உங்கள் உள்ளத்தின் மகிழ்ச்சியின் இடையறாத வெளிப்பாடு. அதை பகிர்ந்து கொள்வதற்கும் பொழிவதற்கும் காரணமே தேவையில்லை. வேறு நோக்கமே தேவையில்லை. பகிர்ந்து கொள்ளும் மகிழ்விற்காகவே பகிர்ந்து கொள்வது.' - ஓஷோ
book-28
#Reading_Marathon2026
#26RM009
Book No:28/150+
Pages:-287
மன வளர்ச்சி குறைபாடுகள்
-டாக்டர் எம்.எஸ்.தம்பிராஜா
பத்தாண்டுக்கு முன் ஆட்டிசம் என்பது புத்தகத்தில் மட்டும் படிக்கக்கூடியதாக எங்கோ ஒன்று இருப்பதாக கேள்விப்படுவோம்.
குழந்தைகளிடையே மனவளர்ச்சி குறைபாடுகள் தற்காலத்தில் அதிகரித்து வருகிறது. முன்பு அவர்களை.ஒதுக்கி வைப்போம் தற்போதைய சூழலில் ஆட்டிசம் குறித்த விழிப்பிணர்வு அதிகரித்துள்ளது.கற்றவர்கள் மத்தியில் கூட தெளிவின்மை நிலவுகிறது.மற்றொருபுறம் கல்வி என்பது அடைவுகளைப் பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது.கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். அதனை நிவர்த்தி செய்ய வழிமுறைகள் என்ன என்பது குறித்தும் இப்புத்தகம் பேசுகிறது.
உலகெங்கும் 12 முதல் 14 மாதத்தில் மற்றவர் உதவியின்றி நடக்கும் ஆற்றலை பெறுகின்றன. இது 18மாதத்துக்கு மேல் தாமதமானால் அறிவுத் திறன் குறைபாட்டின் முதல் அறிகுறி ஆகும்.
பேசுதல், தகவல் பரிமாற்ற இடர், மீண்டும் மீண்டும் அதே செயலைச் செய்யும் மனப்பாங்கு இம்மூன்றும் ஆட்டிசத்தை அடையாளப்படுத்து கின்றன.நூறில்ஒரு குழந்தைக்கு இக்குறைபாடு உள்ளது.ஆட்டிசம் ஒன்று அல்ல, கடுமையான, மிதமான, லேசான என வகைப்படுத்தலாம். ஆட்டிசம் கண்டுபிடித்த வரலாறு,அது நரம்பியல்சார்ந்த வளர்ச்சிக் குறைபாடு என்பது உள்ளிட்ட அதன் அறிகுறிகளை சொல்கிறது. முதலாவதாக மொழித்திறன் குறைபாடே குறைவாக பேசுதல், பேச்சுமொழியை புரிந்து கொள்வதில் சிக்கல்,பயன்பாட்டு மொழிச்சிக்கல் போன்றவை பேசுவதில் இடர் ஏற்படுத்துகின்றன.
ஒரே செயலை தொடர்ந்து செய்தல், சில விஷயங்களில் அபார ஈடுபாடு இருக்கும்.மரபியல் சார்ந்த காரணமோ, மூளைச்சேதமோ, நரம்புக் கோளாறு, ஆனால் அறியப்பட்ட காரணங்களில் மிக சொற்பமே ஆட்டிசம் தோன்ற காரணமாக அமைகிறது.நூறில் ஒருவருக்கு ஆட்டிசம் தற்காலத்தில் வருகிறது.அதிலும் ஆண்களுக்கு அதிகம்.3வயதுக்கு முன்பே தெரிய வருகிறது.சுமாரான ஆட்டிசம் உள்ளவர்களுக்கு பதின்ம வயதுவரை கூட அடையாளம் காணப்படுவது இல்லை.இவை எந்த வித எக்ஸ் ரேவிலும் தெரியாது. வளர்ச்சி மற்றும் செயல்களின் மூலமே கண்டறிய முடியும். இந்நூலில் தரப்பட்டுள்ள அறிகுறிகள்,கேள்விப்பட்டியல் பகுதி இதனை விளக்குகிறது.
புதிய திறன்களை கற்பிப்பது, பேச்சு மற்றும் மொழிப்பயிற்சி, தொடர் செயல்களையும் மிதமிஞ்சிய ஈடுபாட்டைக் குறைப்பது, சமூக திறன் மேம்படுத்துதல்,புலன்களை ஒருமைப்படுத்துதல் தான் சிகிச்சையாகப் பார்க்கப்படுகிறது. இதில் பெற்றோர் ஆசிரியர்களின் பங்கே பிரதானம்.வயது வந்தவர்களின் ஆட்டிசம் குறித்த தரவுகளும் விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
#அறிவுத்திறன் குறைபாடு
வயதுக்கு ஏற்ற அறிவு வளர்ச்சி இல்லாததும், அன்றாட செயல்களில் பின் தங்கி இருப்பதும் ஆகும். இது மூளை வளர்ச்சியில் ஏற்படும் தடையினால் உண்டாகும் ஒரு பற்றாக்குறை ஆகும்.அறிவுத் திறனில் எல்லாத்திறன்களும் சராசரிக்கு குறைவாக இருக்கும். டிஸ்லெக்சியாவில் வாசிப்புமட்டும் குறைவாய் இருக்கும்.அறிவு திறன் குறைபாட்டினால் தாமதமாக கற்பது, சிந்தனை திறன் குறைவு, கற்பதில் இடர்கள் ஏற்படும்.கற்றலில் பின் தங்கி இருப்பார்கள்.இதிலம் சுமார், மிதமான,கடுமையான, மிககடுமையான, என நான்கு நிலைகள் இருக்கிறது. சுமாரான அறிவுத்திறன் குறைபாடு உடையவர்கள் 5&6 ம் வயதில் தெரியவரும்.தன் ஒத்த வயதினரைவிட இரண்டு ஆண்டுகள் பின் தங்கி இருப்பர் . இதனை ஆசிரியரும் பெற்றோரும் சோம்பேறித்தனம்,அக்கறையின்மை என நினைத்துவிடுகின்றனர்.
சரி படிக்கவில்லை எனில் எல்லாரும் அறிவு சார் குறைபாடா என்றால் இல்லை.பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள்,வாய்ப்பு குறைந்த குழந்தைகள் ஆவர். கற்றலில் மட்டும் பின் தங்கி வேறு செயலாக்கத்தில் திறன் வாய்ந்தவராக இருந்தால் அவர்கள் மெதுவாய் கற்போர் இல்லை.தேவையான பயிற்சிகள் கொடுத்தால் முன்னேறுவர்
ஹைபர் ஆக்டிவ் குழந்தைகள் பற்றிய செய்திகளும் கொடுக்கப்பட்டுள்ளன.அவர்களின் குணாதிசயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.நடத்தை சார்ந்த பிரச்சினைகள் உள்ள குழந்தைகள் பற்றிய குறிப்பும் விரிவாக உள்ளது
பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் குறைபாடுகளை உணர்ந்து தங்கள் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்.மற்ற குழந்தைகளடன் ஒப்பிடுதல் கூடாது. அவர்களின் முன்னேற்றம் குறைவாகத்தான் இருக்கும் என எண்ண வேண்டும்.அவர்கள்.கற்ற விஷயங்களை மறந்துவிடுவர் எனவே பொறுமையை கையாள வேண்டும்.அக்கறையுடன் செயல்பட வேண்டும்.ஆசிரியர்கள் அவர்களுக்கு சிறப்பு பயிற்சி கொடுக்க வேண்டும்.
#கற்றல் குறைபாடு
கற்கும் வாய்ப்பு இருந்தும் பின்தங்கி இருப்பர்.வாசிப்புத்திறன் குறைபாடு, மிகை எழுத்துப் பிழைகள், முக்கிய அடையாளங்கள். மூளை வளர்ச்சியின் போதுவாசிப்புக்குத் தேவையான நரம்பு வலை பின்னல்கள் சரிவர செயல்படாததால் இக்குறைபாடு ஏற்படுகிறது.ஒரு மனிதனின் வாசிக்கும் திறனைப் பாதிக்கும் மூளை சார்ந்த கற்றல் குறைபாடு டிஸ்லெக்சியா.ஜெர்மன் கண் மருத்துவர் ருடால்டாஃப் பெர்லின் எனும் கண் மருத்துவர் 1887ல் டிஸ்லெக்சியா என்ற சொல்லை உருவாக்கினார்.பின் 1896
பிரிங்கிள் மோர்கன் எனும் பொது மருத்துவர் பிரிட்டிஷ் மருத்துவ இதழில் விவரித்து எழுதினார். இது பாதிக்கப்பட்டவர் 50-70% பேருக்கு கணக்கு கையெழுத்து திறன்களில் குறைபாடு இருக்கும். இதனால் பலர் தவறாக புரிந்துகொண்டு பள்ளியை விட்டு நிறுத்திவிடுகின்றனர். வாசிப்பு, எண் கணிதம், கையெழுத்து மூன்றும் ஒரே குழந்தையிடன் காணப்பட்டால் கற்றல் குறைபாடு எனலாம்.டிஸ்லெக்சியாவை மூளையை ஸ்கேன் செய்தால் கூட தெரியாது.சோதனைகள் மூலமே அறிய முடியும்.தனிச்சொல் வாசிப்பு சோதனை, போலிச் சொற்கள் எழுத்து கொண்ட வாசிப்பு சோதனகளை கொடுத்து பயிற்சி செய்யலாம்.
பேசுதல், நடத்தல் போல வாசிப்பு இயல்பாய் வருவதில்லை. அது பயிற்சியின் மூலமே மட்டுமே வருகிறது.ஜப்பானிய் மொழியில் ர எனும் எழுத்து இல்லை.அவர்கள் ர என்பதை ல என்று உச்சரிக்கிறார்கள். ராதா என்பதை லாதா என்றே சொல்கிறார்கள். இப்படிதான் பலரின் உச்சரிப்பும் அவர்கள் வளர்ந்த சூழல் பொறுத்து மாறுபடுகிறது.வாசிப்பும் வாசிப்பதை புரிந்து கொள்வதும் வெவ்வேறான செயல்பாடுகள். புரிந்து கொள்வதிலும் குறைபாடுகள் வருகிறது.மொழியின் உச்சரிப்பு தமிழும் ஆங்கிலமும் வேறுபடுவதை அறியலாம். அதனை உச்சரிக்கும் விதத்தில் புரிந்து கொள்ளவும் வேண்டும்.
வீட்டில் குழந்தைகளுக்கு வாசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும்.ஒலிப்பு முறைகளை கற்றுக் கொடுக்கலாம். அடிப்படை கணிதத்திறன் மேம்படுத்தலாம் அவர்களை எவ்வாறு வளர்க்க வேண்டும் என பெற்றோர்களுக்கான அறிவுரைப்பகுதியாகவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கு சிறப்பு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 10 May 2026
லதா
எப்பொழுது பார்த்தாலும் யாரையாவது நம் தராசில் வைத்து குறை கூறிக் கொண்டும் வன்மம் கக்கிக் கொண்டுமே ஏன் இருக்கிறோம்?
நம் எண்ணம் மட்டுமே சிறந்தது. நாம் வாழும் முறை, கடைபிடிக்கும் கொள்கைகள் மட்டுமே சிறந்தது என நினைப்பதும் மற்றவர் தனிப்பட்ட வாழ்வில் புகுந்து அவர் இப்படி செய்வது சரியில்லை, அவர் அப்படி வாழ்வது முறையில்லை என்று எப்பொழுதும் எதையாவது கிளறிக் கொண்டே இருப்பதும் எவ்வாறு சரியாக இருக்க முடியும்?
இங்கு அனைவரும் ஒரே பாதையில் பயணிப்பவர் இல்லை. அவரவர் பாதை அவரவரை செதுக்கியிருக்கும். ஆனால் எதோ நாமெல்லாம் ஒரே மோல்டில் உருவாக்கப்பட்ட ஒரு பொருள் போலும், இம்மி பிசகாமல் அனைவரும் ஒரே போல் தான் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும், அது மட்டுமே சரியென வாதாடுவது நம்மை முட்டாளாகத்தான் பொருள்பட வைக்கிறது.
கலாச்சார காவல்காரர்களை நிந்தித்து, முற்போக்கு மனப்பான்மை கொண்டவர்களாக தன்னை பறைசாற்றிக் கொள்பவர்கள் கூட, தனக்கென ஒரு லட்சுமண ரேகை வரைந்திருக்கிறார்கள் இதைத் தாண்டக் கூடாது, இதைத் தாண்டலாம் என. இதில் ஒரு தவறுமில்லை. அது தனக்கான எல்லைக் கோடாக வைத்திருக்கும் வரை. ஆனால் அதே எல்லைக்கோட்டை வேறொருவர் தாண்டினால், அங்கு இவர்களும் கலாச்சாரக் காவலர்களாகத்தான் ஆகிவிடுகிறார்கள்.
அதாவது மனிதர் எத்தனை இழிவானவர்கள் என்றால் தனக்கென வருகையில் தான் தாண்டியவரை எல்லாம் சரி, ஆனால் இன்னும் நாம் தாண்டாதவற்றை மற்றவர் தாண்டும்போது அங்கு நம்மால் அதை ஏற்க இயலாது போகிறது, உடனே அங்கு நாம் நீதிபதியாக மாறுகிறோம்.
இதில் பிற்போக்கு என்ன முற்போக்கு என்ன? மற்றவர் சொந்த வாழ்வில் அழையாத நீதிபதியாக உள்ளே நுழைந்து தராசை கையில் ஏந்தும் போதே நாம் நாகரிகமற்ற மனிதர்களாகிறோம். அங்கேயே எல்லா போக்கும் உடைந்துவிடுகிறது.
Saturday, 9 May 2026
Friday, 8 May 2026
book-27
#Reading_Marathon2026
#26RM009
Book No:27/150+
Pages:-362
மந்திரவாதியின் சீடன்
-இவால்ட் ஃப்ளிஸர்
இந்நாவலை எழுத்தாளர் இமையம் அவர்களின் பரிந்துரை செய்ததால் வாசித்தேன். தத்துவம் சார்ந்த புத்தகம் விருப்பம் என்பதால் உடனடியாக வாசித்தேன்.
நான் யார்?”, “வாழ்க்கையின் உண்மை என்ன?” போன்ற அடிப்படை கேள்விகளை கதையின் வழியாக எழுப்புகிறது.
காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்மிக பயணம் செய்யும் துறவியின் பார்வையில் நாவல் துவங்குகிறது.பத்ரிநாத் சென்று அங்குள்ள முதிய சாமியாரை சந்திக்க திட்டம்.அப்படி செல்லும் போது அதில் வித்தியாசமான மனிதர்கள், பனிமூடிய மலைப்பின்னணியில் நடந்து செல்வது, புனிதப் பயணமா, அல்லது யாரை தேடிச் செல்கிறார் ஆகியவை அடுத்து என்ன எனும் ஆர்வத்தை தூண்டுகின்றன
இளம் துறவியின் உள்ளார்ந்த தேடல், வாழ்க்கையின் அர்த்தம், சுயஅறிவு போன்ற கேள்விகளை மையமாகக் கொண்டு நகர்கிறது.
முதியவரை சந்தித்து உரையாடல் நடைபெறுகிறது.உனக்கு என்ன வேண்டும் என்கிறார்.. "முழுமை.என்னுடனும் உலகத்துடன் ஒன்றியிருத்தல் வேண்டும் என்கிறார். இதிலிருந்து உரையாடல் துவங்குகிறது.யோகானந்தர் இளைய துறவிக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.
"காரணகாரிய அறிவுடைய மனதுக்கு எல்லாமே பிரச்சனைதான். ஒரு பிரச்சனைக்கான எந்தத் தீர்வும் இன்னொரு பிரச்சனையை உருவாக்குகிறது. தன்னளவில் யதார்த்தம் பிரச்சனையற்றது. அதுகுறித்த என் பார்வைதான் பிரச்சனையானது. எல்லாமே என் மூளைக்குள் நுழைந்து விடுகின்றன. என் மூளை ஒரு தேச எல்லைபோல. என் அறிவு சுங்க அதிகாரிபோல உள்ளே வரும் விலைமதிப்பற்றவற்றில் பெரும்பாலானவற்றையும், புதுமையான, அந்நிய தேசத்துக்குரிய யாவற்றையும், வித்தியாசமானவை, நிலைகுலைய எனத்தோன்றும் யாவற்றையும் கைப்பற்றிவிடுகிறது. ஒழுங்கமைவைப் பாதுகாப்பதே அறிவின் கடமை. அதுதான் மரபு. வெளியே பார்க்க ஜனநாயகவாதி; உள்ளேயோ ஒருபோதும் கண்ணுறங்காத தந்திரமிகு சர்வாதிகாரி. என்கிறார் முதியவர்.
மீண்டும் பயணம்.செய்கிறார் துறவி.
தான் என்ற எண்ணம் என்பதற்கான விளக்கம், ஒவ்வொரு நிகழ்விலும் புத்தம் சார்ந்த போதனைகளை வழங்குகிறார்.கண்களை மூடி இருக்கும்போது சுற்றுப்புற இரைச்சல்கள் துறவிக்கு மனப்போராட்டம் ஏற்படுத்துகின்றன.
இதற்கு குரு " மனச்சோர்வு இயற்கை எனும்போது ஒருவர் நிரந்தர களிப்பில் நீடிக்கமுடியாது என்கிறார்.
ஏனெனில் இவற்றை நிரந்தரமாக பிடித்து வைத்துக் கொள்ளமுடியாது. இவற்றினிடத்தை எதிர்மறை எண்ணங்கள் வந்து பிடித்துக் கொள்கின்றன என்கிறார்
நிதர்சன உண்மை என உணர்ந்தேன்.
இமயமலையின் இயற்கை வருணனைகள் நாமே அங்கிருக்கும் உணர்வை தருகிறது. குருவிற்கும் சீடனுக்குமான உரையாடல், வாழ்வியல் உண்மைகள், தத்துவம் ஆகியவை இருவரின் உரையாடலிலும் இருக்கிறது.
படித்து ரசிக்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல்.. படித்து சிந்திக்க வேண்டிய இடங்கள் அதிகம் வருகிறது.
அகச் சிக்கல்களால் அல்லாடும் சீடன் குருவுடன் சேர்ந்து ஞானத்தைத் தேடி பயணிக்கிறான். அந்தப் பயணம் வெறும் வெளி நடைபயணம் அல்ல; அது மனிதன் தன்னை அறியும் உள்பயணமாகவும் விரிகிறது. பயணமெங்கும் சந்திக்கும் மனிதர்கள், தாந்திரீகம், கனவு, இயற்கை குறித்த செய்திகள் எல்லாம் வருகின்றன.
ஹென்றி அலெக்ஸாண்டர் எனும் கதாபாத்திரம் நாவல் ஓட்டத்திற்கு உதவுகிறது.வியப்பூட்டும் சடங்குகள், தாந்திரீகம் கதைக்கு தனிச்சுவை தருகின்றன.ஒரு இடத்தில் ஹென்றி இவ்வாறு கூறுகிறார் "உங்களது இலக்கின்மீது கவனம் குவிக்க அதிக ஆற்றலைச் செலுத்தும்போது, இலக்கை அடையும் வழியின்மீது கவனம் குவிக்க உங்களிடம் குறைந்த ஆற்றலே எஞ்சியிருக்கும்.
ஏன் வாழ்கிறோம்?”, “எது உண்மை?”, “மனித விடுதலை என்றால் என்ன?” போன்ற கேள்விகள் மெய்யியல் உரையாடல் போல முக்கியமாக வருகின்றன. ஒரு இடத்தில் சொல்கிறார்
"வார்த்தைகள் என்பவை உலகின் சன்னல்மீது நாம் தொடர்ந்து எறியும், அதனை ஊடுருவிப் பார்க்க முடியாத திரையாக மாற்றிவிடும் கற்கள்தான் என்று தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையும், மிக நேர்மையான வார்த்தையும்கூட, தன்னளவில் ஒரு சிறிய பொய்யாக இருக்கிறது. அது உணர்வைச் சிந்தனைக்குள் மொழிபெயர்ப்பதாக, அதனால் அதனைத் தோராயமான ஒன்றாக மாற்றுவதாக இருக்கிறது. நாம் அனைவரிலும் சிந்தனையை மேற்கொள்வது தன்முனைப்பு, தன்முனைப்பு ஒரு முகமூடி, தன்முனைப்பு ஒரு சுயபிம்பம்" என்கிறார்.
வினாடி நேர உள்ளொளி பத்து வருட அறிமைக்குச் சமம் எனும்வரி சிந்திக்க வைத்தது.தினசரி வாழ்க்கையில் ஏதேனுமொரு பிம்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதன் தன்னைப் புரிந்துகொள்வதே ஞானத்தின் முதல் படி என்ற உணர்வு நிலைக்கிறது.
ஞானம் என்பது வெளியில் இருந்து வருவதுகிடையாது. அது உள்ளிருந்து வரும் பூரணத்துவம்.அதனை கண்டடைய யாரோ ஒருவர் தூண்டுகிறார். அவ்வாறு கிடைக்கும் அக ஒளி நமக்குள் ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கிறது. அதனை அடைந்த பின்பு புதிதாய் நமக்குள் பரவசம் பரவுகிறது. வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. வாசிக்கும் நமக்கும்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Thursday, 7 May 2026
Tuesday, 5 May 2026
நியஅஸ்
நாம் அனைவருக்கும் cognitive bias இருக்கும் — இது மனித இயல்பு.
தரவுகள் (Data) நமக்கு பெரும்பாலும் தெளிவான கதையை சொல்லும். ஆனால் நாம் கேட்பதில்லை.
மாறாக நாம் என்ன செய்கிறோம் என்றால்? முன்பே நம்பியதை இறுகப் பற்றிக்கொள்கிறோம். உண்மைகளை நம் வசதிக்கேற்ப திரித்து புரிந்துகொள்கிறோம். நம் விருப்பத்திற்கு எதிராக இருக்கும் தகவல்களை புறகணிக்கிறோம்
தரவை நேர்மையாக ஏற்றுக்கொண்டால், தீர்வுகள் எளிமையானதாக இருக்கும். ஆனால் நாம் அதை ஏற்றுக் கொள்வதில்லை. முன் முடிவுகளோடு அணுகுகிறோம்.
நம் அனுமானங்களால் முடிவு எடுக்காமல், உணர்ச்சிவயப்பட்டு முடிவு எடுக்காமல், தரவுகள் பக்கம் நின்று ஒரு முடிவு எடுத்தால் தீர்வுகள் சுலபமாக கிடைக்கும்.
இதைதான் Darius Foroux எழுதிய Think Straight வலியுறுத்துகிறது.
Saturday, 2 May 2026
பாரி
'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே' பாடலில் , 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி' என்றொரு வரி உண்டு.
இந்த வரிகளை , 'நெஞ்சமெனும் வீணை பாடுமே தோழி' என்றுதான் பல வருடங்களாக நினைத்துக்கொண்டு இருந்தேன். நினைத்தது என்ன, அப்படியே பாடிக்கொண்டும் திரிந்திருக்கிறேன். ஓரிரு வருடங்களுக்கு முன்னர் , காணொலி ஒன்றில் ஒரு பெண்மணி விளக்கி இருந்தார். அதன் பிறகு அந்த வரிகளைத் தேடினால், நிறைய தளங்களில் 'செஞ்சமெனும் வீணை' என்றே இருந்தது. குறிப்பாக 2000 த்தின் தொடக்க காலத்தில் இருந்த இணைய தளங்களிலும் 'செஞ்சமெனும் வீணை' இருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் அவை கண்ணில் பட்டிருந்தால்கூட எப்படி தப்பா எழுதி வச்சிருக்காங்க என்று நக்கீரர் அவதாரம் எடுத்திருப்பேன். ஆனால் அதுதான் உண்மையான வரிகள் என்று அறிந்த பின், வாலியை பிரமித்தேன்.
அந்த வரியின் பொருள் இதுதான். செஞ்சம் என்பது வீணைகளில் ஒரு வகை. இந்த வீணை, சோக ராகங்களை இசைப்பதற்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்படுபவை. ஆனால், அந்த வீணையில் தோடி ராகத்தை இசைத்தால் மட்டும் சோகம் தாண்டிய ஒரு சுகமான இசையை அந்த வீணை பிரசவிக்குமாம். வாலிக்கு இயல்பிலேயே இந்த இசை வாத்திய பின்னணி கொண்டோரோடு புழங்கக்கூடிய வாய்ப்பு இருந்ததனால் சட்டென எழுதிவிட்டார். குறிப்பாக, படத்தில் கதாநாயகனில் கதாபாத்திற்கு அந்த வரிகள் பெரிதாக பொருந்தியிருக்கும். சோகத்தை தனக்குள் நிரந்தரமாக வைத்துக்கொண்டு, பிறர்க்காக திரைப்பாடல்களை மகிழ்வாகப் பாடும் பாடகன் அவன். அவன்தான் செஞ்சம், அவன் பாடுகிற ராகங்கள் தோடியைப் போல சுகமானவையாக அமைந்து பிறரை மகிழ்விக்கும் என்கிற பொருளை அந்த வரிகள் கொண்டிருக்கும்.
'சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாள் இல்லையே'
என்கிற வரியின் இன்னொரு வடிவம்தான் அந்த 'செஞ்சமெனும் வீணை பாடுமே தோடி'.
, 'சபையில் பேரெடுக்க குயில்கள் இசைப்பதில்லை.. எனக்கே நான் சுகம் சேர்க்க தினமும் பாடுகின்றேன்' என்கிற வாலியின் வரிகளிலேயே பதில் சொல்லி அமைகிறேன்.
-அ.பாரி
Wednesday, 29 April 2026
லஷிமி சரவணக்குமார்
'எல்லாருக்கும் ஆச கனவு லட்சியம் எல்லாம் இருக்கும்.
ஆனா அப்பிடி ஆசப்படற விஷயத்துக்காக கடைசி வர வெய்ட் பண்ணி தன்னோட இலக்க அடையறது ஆயிரத்துல ஒருத்தர் தான்.
அதுக்காக மிச்ச 999 பேர் திறமையில்லாதவங்கன்னு இல்ல.... ஜெயிச்ச ஒருத்தர் கிட்ட இருக்க ஏதோவொன்னு இவங்க கிட்ட இல்லாம இருந்திருக்கும். பணம், பழக்கவழக்கம், சின்ன சின்ன ஏமாத்து வேலைகள், தந்திரங்கள்... எல்லாம் சேந்துதான் வெற்றியும் அமையுது.
பொறுமையா காத்திருந்தா என்னிக்காச்சும் ஒருநாள் அதுக்கான பலன் கண்டிப்பா கெடைக்கும்னு பொதுவா சொல்லுவாங்க.... அப்பிடி பொறுமையா காத்திருக்க சூழல் எல்லாருக்கும் அமையறதில்ல.
இன்னிக்கி என் பசிக்கு சோறுபோட என் கலையால முடியலன்னா, அந்த பசிய ஒரு தனிநபர் தாங்கிக்கலாம், புறக்கணிப்ப சிரிச்சிக்கிட்டே கடந்துடலாம். ஆனா அவன் குடும்பம்??? பொறுமையா காத்திருக்க முடியாத குடும்பச் சூழல்ல பொறந்த ஒருத்தனோட கனவையெல்லாம் இந்த உலகம் ஒரு பொருட்டா நினைக்கிறதில்ல.
பல பேர் இந்த போராட்டத்துல சோர்ந்துபோய் வேற வேலைக்குப் போயிடறான். சில பேர் வெளியே வரவே முடியாத ஒரு சுழலுக்குள்ள சிக்கி காணாமப் போயிடறான். இங்க ஒவ்வொரு துறைலயும் ஜெயிச்சவன விட கடைசி வர போராடி எதுமே செய்யமுடியாத ஏக்கத்தோட காணாமப் போனவனுங்களுக்குப் பின்னால லட்சம் கதை இருக்கு.
அதக் கேக்கறதுக்கு எந்தக் காதுகளும் இல்ல.
எல்லாருக்குமே ஜெயிச்சவனோட கதைகள் தான் தேவையா இருக்கு...
உங்க பக்கத்துலயே ஒருத்தன் அவனோட லட்சியத்துல தோத்துட்டு சாதாரணமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கலாம்.
எப்பவாச்சும் உங்ககிட்ட ஏதாச்சும் பேசனும்னு வந்தா ரெண்டு நிமிசம் அவனுக்காக ஒதுக்குங்க.
ஜெயிக்காதவன் கிட்ட நீங்க காட்ற உதாசீனம் தான் உலகத்திலயே மிகப்பெரிய வன்முறை.'
- Lakshmi Saravanakumar
Sunday, 19 April 2026
சிறுமி
அந்தச் சிறுமி இதற்குமுன் ரயிலில் வந்ததே இல்லையென்பதால், ரயில் டிக்கெட்டை இறுக்கமாகப் பிடித்திருந்தாள். விலைமதிப்பற்ற அந்த டிக்கெட்டைத் தருவதற்குத் தயங்கினாள்.
"நானே இத வச்சுக்கலாமா?" என அச்சிறுமி டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டாள்.
"இல்ல, முடியாது" என்று சொல்லிக்கொண்டே டிக்கெட்டை அவளிடமிருந்து அவர் பறித்துக்கொண்டார்.
டிக்கெட்டுகளால் நிரம்பியிருந்த அவருடைய பெட்டியைக் காண்பித்து, "இதெல்லாம் உங்க டிக்கெட்டா?" என்றாள்.
"இல்ல... ரயில்வே ஸ்டேஷனுக்குச் சொந்தமானது" என்றார்.
அந்தப் பெட்டியை பேராசையுடன் உற்றுப்பார்த்தபடி தொடர்ந்து சொன்னாள், "நான் பெரியவள் ஆனதும், ரயில் டிக்கெட் விக்கப்போறேன்..."
டிக்கெட் பரிசோதகர் முதல்முறையாக அவள்மேல் ஒரு கணம் பார்வையை பதித்தார். " என் சின்னப்பையனும் ஸ்டேஷன்ல வேலை செய்யதான் ஆசப்படுறான். அதனால நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து வேலை செய்யலாம்" எனச்சொல்லி மெதுவாகச் சிரித்தார்.
அச்சிறுமி ஒருபக்கமாக சாய்ந்து அவரைப் பார்த்து, "ஹூம்... நான் இப்ப ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கிறதால பிசியா இருக்கேன். இருந்தாலும் நீங்க சொன்னதப்பத்தி யோசிக்கிறேன்" எனக்கூறிவிட்டு, அவளுடைய அம்மா தனக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு, "நான் ஒரு டிக்கெட் விக்குறவரா ஆகப்போறேன்" என கத்திக்கொண்டே ஓடினாள்.
- 'டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி' புத்தகத்திலிருந்து...
அலைவுகள் - இதுதான் குழந்தமையின் உயிரியக்கம். அதுவா இதுவா என்ற தேர்ந்தெடுப்பில் நிலைகொள்ளா நிலை. மனித சாராம்சத்தை சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் தான் அதுவாகவே ஆகிப்போய்விட வேண்டுமென எண்ணத்தை வளர்க்கிறது. பூமியிலுள்ள விறுவிறுப்புகள் எல்லாம் குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை. உண்மையில் சொல்லப்போனால் 'தான் எதுவாக ஆகவேண்டும் என்ற இரகசியத்தை' ஒரு குழந்தைக்கு எது திறந்தளிக்கிறதோ அதுவே காலக்கல்வி. உலகில் எல்லா நல்லவைகளையும் அனுபவப்படுத்த ஒரு குழந்தைக்கு முழு உரிமையுள்ளது.
Tuesday, 14 April 2026
25
#Reading_Marathon2026
#26RM009
Book No:25/150+
Pages:-144
கண்ணாட்டி
-ஷான் கருப்பசாமி
ஷானின் எழுத்துகள் வசீகரமானவை. தான் சொல்ல வந்த கருத்துகளை இயல்பான மொழி நடையில் சொல்லுவார். கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் எந்த வித பூடகமும் இல்லாமல் எளிமையாய் இருக்கும். சமூகத்தில் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் குறித்த எதார்த்தமான கதைகள்.இதில் சொல்லப்பட்டிருக்கிறது.
மாமா கதை உறவு சார் கதை அல்ல. மேட்ச் மேக்கர் எனும் ஏ.ஐ செயலியின் சுருக்கம் தான். எதிர்காலத்தில் ஒருவருடன் இணைந்து வாழ பொருத்தம் பார்த்து சொல்லும்.ஷானின் வார்த்தையில் சொன்னால் இன்னார் நம் வாழ்வில் வருவது விளங்குமா இல்லையா என்று சொல்லும்.கதைக்களமே வித்தியாசமா எதிர்காலத்தில் நடக்கும் படி இருக்கும். 108 வயதான தனது தாத்தாவுடன் உரையாடும் முனீத்தின் கண்ணில் அழகி படுகிறாள்.உனக்கு அவள் பொருந்தமாட்டாள் என மாமா சொல்லியும் புனீத் விஞ்ஞானத்துகூட
வீம்பா விளையாட நினைப்பது கதை
சுவாரஸ்யமாய் சொல்லப்பட்டிருக்கிறது. அழகி ஒரு இடத்தில் ரொம்ப ப்ராக்டிகலாக
/ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதே கூட நீண்டகால அடிப்படையில் சலிப்பை உருவாக்கும்/ என சொல்வதும்
மாமாவின் ஒரு அறிவுரையாக
/உணர்வு ஒரு பனிமூட்டம். அதைத் தாண்டி உங்களால் பார்க்க முடியாது/ என்று சொல்வதும் கதை ஓட்டத்துக்கு பொருந்துகிறது.
இந்த நூலின் தலைப்பு கண்ணாட்டி என்பது அன்பானவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.பள்ளியின் முதல்வராய் இருக்கும் ராதிகா செல்லும் காரில் தவறி விழப்போகும் பாட்டியை காப்பாற்றுகிறார். அதன் பின் அன்பாய் ராதிகா பேசுவது பாட்டிக்கும், பாட்டியின் வெள்ளந்தி பேச்சு ராதிகாவுக்கும் பிடித்துப் போக அதன்பின் நடைபெறும் அன்பான நட்பின் உரையாடல் தான் கதை. கதையின் பாட்டியின் மூக்குக் கண்ணாடி முக்கிய கதை மாந்தராகவே வருகிறது. ஓட்டுநர் அன்வர், டீக்கடை ஆறுமுகம் போன்றோர் கதை ஓட்டத்துக்கு உதவுகின்றனர்./ராதிகா பேசும்போது பாட்டி அவள் முகத்தையே தாகம் தீர அள்ளி விழுங்கிக் கொள்வதி போல் பார்ப்பது, பிறகு போதும் என்பது போல அந்த இமைகள் மெல்ல மூடுவது நல்ல காட்சியமைப்பு/
பரணி சில்க்ஸ் மஞ்சப்பை அன்பின் குறியீடாக வெளிப்பாடாக நம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது.
அப்பாவின் எல்லா கனவுகளையும் பிள்ளைகளால் நிறைவேற்ற முடியுமா என்ன?ஆனால் ஒரு சில கலைஞர்கள் அவ்வாறு நினைப்பார்கள்.அப்படித்தான் புல்லாங்குழல் வாசிக்கும் சடகோபனும் தன் பிள்ளை வேணுகோபாலை சிறு வயதில் இருந்தே தயார் படுத்துகிறார். ஆனால் வேணுவோ பணி நிமித்தமாக, காதல் காரணமாக மும்பை செல்கிறார்.அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாதா சூழலில் வேணு அப்பாவிடம் வருகிறார். அதன் பின் என்ன ஆனது என்பது கதை.இறுதிக்காட்சி உணர்வு பூர்வமாய் இருந்தது.
கிராமத்தில் அறிவாளியான குமுதா அக்கா படிப்பதில் சுட்டி. எந்த விசயத்தையும் பதட்டப்படாமல் எதிர்கொள்வாள்.தட்டான் பிடிக்கும் போது பாம்பை பார்த்துவிடும் முத்துவுக்கு குமுதா தான் தைரியம் சொல்வாள். ராசு மாமாவை விரும்பி காதல் கைகூடாததால் மீசை மாப்பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது.அதன் பின் குமுதா அக்காவுக்கு என்ன நடந்தது என்பது மீதிக்கதை. கிராமத்து யதார்த்த வாழ்வியலை இக்கதை சொல்கிறது.
/கெஸ்சு வாங்க ஓடி வர்ற, எனத்துக்குடா நீ அங்க போன, பொட்டாட்ட இரு,/போன்ற கொங்குத்தமிழ் வட்டார மொழி மேலும் மெருகூட்டுகிறது. "தைரியம் இல்லாதவங்களுக்கு எதுக்கு ஆசையும், கனவும்..." போன்றவரிகள் ராசு மீதான இயலாமையைக் காட்டுகிறது.பெற்றோரின் புன்னகையில் அத்தனை சந்தோசமும் அக்காவிடமிருந்தே எடுக்கப்பட்டது எனும் வரி அக்மார்க் ரைட்டர்ஸ் டச். வரதட்சணை விசயம் கதையின் கருத்தாக நெற்றி பொட்டில் அறைந்து சொல்லப்படுகிறது.
ஆபிஸில் அடுத்த வாரம் வெளிநாடு போக வேண்டும் அலுவல் விசயமாக. விமலுக்கு பாஸ்போர்ட் ரினீவல் செய்யவில்லை. காவல் நிலையம் சென்று எல்லாம் வெரிஃபை செய்யக் கொடுத்தும் இன்னும் ஆகவில்லை. இன்னும் நாலு நாள் தான் இருக்கு. போலிசிடம் கேட்டால் இந்தா அந்தானு இழுக்கிறாங்க. ஒருவழியா போன் செய்து இலஞ்சம் எதிர்பார்க்கிறாங்களானு கேட்டுட்டான் விமல்..எஸ்.ஐ க்கு.கோபம் தலைக்கு ஏற இங்க வாடானு கூப்பிட... பயந்து கொண்டே செல்கிறான் விமல். அடுத்து என்ன என்பதுதான் விறுவிறுப்பான லஞ்சம் கதை.ஒவ்வொரு கதைக்குள்ளும் நாமே ஒரு கதாபாத்திரமாக மாறிவிடும் மாயவலை எல்லா கதைகளிலும் வருகிறது.
/ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய்கள் போல இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்/ என்பதில் அழகான உவமை போல் இருந்தது.
காலனியில் இட்லி சுட்டு விற்கும் அமிர்தம் பாட்டியின் கதை தான் கரு.
தத்துப்பிள்ளை ஜேம்சு மற்றும் கூட்டாளி மோகன் இருவரும் தான் நாயகர்கள்.ஒரு கட்டத்தில் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க..
மனித நேயமிக்க அமிர்தம் என்ன செய்தார் என்பது கதை.பசிதாண்டா இந்த உலகத்தில் நெசம். எனக்கு பசிக்குதுனு வெக்கத்தவிட்டு சொல்லறப்பத்தான் ஒரு மனுசன் நூத்துக்கு நூறு நெசத்தப் பேசறான்னு அர்த்தம் என அமிர்தம் சொல்வது சத்திய வார்த்தைகள்.
கதைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு தளத்தில் பயணித்தாலும்.. பொறுமையாக கதை பேசும் நியாயம் படிக்கும்போது உணர முடிகிறது.
எந்த இடத்திலும் மிகைப்படுத்தல்களோ, தேவையற்ற வார்த்தை விரயங்களோ இல்லை. ஒவ்வொன்றும் படித்து முடித்தவுடன் அசைபோட வைக்கிறது.
கதைகளில் அதிக கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒன்றிரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆனாலும் ஒவ்வொன்றும் தனி குணத்துடன் வெளிப்படுத்தியிருப்பார்.கடந்து போகும் காலத்தை குறிப்பிடும்போது அதிலிருந்து கற்றுக் கொண்டு கடந்து போக விடுங்கள் என கதைகள் சொல்கின்றன. மெல்லிய சூழல் எவ்வாறு நம் மனதில் ஒரு கணத்தை அசைத்துப் பார்க்கின்றன என்பதை இக்கதைகள் விளக்குகின்றன.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Sunday, 12 April 2026
tea-27
#மனசுக்கு_ஒரு_தேநீர்_27
மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணர்ச்சி தான் frustration விரக்தி அல்லது எண்ணக்குலைவு ஆகும். நாம் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது, முயற்சிகள் பலனளிக்காத போது, அல்லது சூழ்நிலைகள் நம்மை கட்டுப்படுத்தும் போது உருவாகும் அந்த உள் அழுத்தமே frustration.
ஒரு மாணவன் கடினமாக படித்தும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாமல் போனால், ஒரு தொழிலாளி உழைத்தும் உயர்வு கிடைக்காமல் இருந்தால், அல்லது நம்முடைய உறவுகளில் புரிதல் இல்லாமல் போனால்—இந்த எல்லா தருணங்களிலும் frustration தோன்றுகிறது.
frustration என்பது முழுக்க முழுக்க தீமையானதல்ல. அது ஒரு signal—நாம் எதையாவது மாற்ற வேண்டும், வளர வேண்டும் என்று சொல்லும் ஒரு உள் அழைப்பு.ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் தொடர் தோல்விகளால்.. மனமொடிந்து இருளில் செல்லும்போது ஒரு இடத்தில் இடறுகிறார்..அப்போது சொல்லிக்கொள்கிறார்
I have stumbled, but I have not fallen
நான் இடறிவிட்டேன் ஆனால் கீழே விழவில்லை என எண்ணிக்கொண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.
frustration என்பதை ஒரு தோல்வி என்று பார்க்காமல், வளர்ச்சிக்கான ஒரு படிக்கட்டு என்று பார்க்கச் சொல்லுகிறது.
வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் யாரும் frustration-ஐ தவிர்க்கவில்லை. அவர்கள் அதை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, ஆயிரக்கணக்கான முயற்சிகளுக்குப் பிறகு தான் மின் விளக்கை கண்டுபிடித்த Thomas Edison. அவர் தோல்வியை frustration-ஆக பார்க்காமல், “இது வேலை செய்யாத வழி” என்று எடுத்துக்கொண்டார்.
“I have not failed. I've just found 10,000 ways that won't work.” – Thomas Edison
இந்த மனப்பாங்கு தான் frustration-ஐ சக்தியாக மாற்றுகிறது.
நமது எதிர்பார்ப்புகளை நியாயமான அளவில் வைத்துக்கொள்வது
பொறுமையை வளர்த்துக்கொள்வது
தோல்விகளை பாடமாக எடுத்துக்கொள்வது,மெல்ல மெல்ல இலக்கை அடைய கற்றுக் கொடுக்கிறது.
வீழ்வது தவறு அல்ல, எழுந்து நிற்பதுதான் முக்கியம்.
முடிவாக, frustration என்பது நம்மை தடுக்க வரவில்லை; அது நம்மை தள்ளிச் செல்ல வருவது. அதை சரியாக புரிந்து கொண்டால், அது நம்முடைய பலமாக மாறும். வாழ்க்கையில் மனக்கசப்பை வெற்றி நோக்கி மாற்றும் திறன் தான் உண்மையான அறிவு.
“Frustration is not the end of the road; it is the beginning of a better path.”
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
Saturday, 11 April 2026
book-23
#Reading_Marathon2026
#26RM009
Book No:23/150+
Pages:-164
அறியாத உறவுகள்
-நிர்மல்
நிர்மல் அவர்களின் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழ்ந்த உண்மைகளை மிக எளிதாக வெளிப்படுத்துவார்.வாசிக்கும் போதே சிந்திக்கவும் வைப்பவர். எந்த வார்த்தை விரயமும் இன்றி மொழியை சிக்கனமாக பயன்படுத்துவர். இந்த உழைப்பைப்பற்றிய சிந்தனையை நமக்கு தருபவை.நான்கு அத்தியாங்களில் உழைப்பு குறித்த விழிப்புணர்வை நாம் பார்க்கைத் தவறிய உழைப்பு குறித்த கோணங்களில் நம்மை பார்க்க வைக்கிறது.
தொழில் நுட்ப வளர்ச்சியில் எதிர்காலத்தில் உடல் உழைப்பு இருக்குமா எனும் கேள்விக்குறி நம்முள் இயல்பாகவே எழும். காலம் பதில் சொல்லும் என கடந்தி போனாலும் உழைப்பு குறித்த வரலாறை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.உழைப்பு ஒருபோதும் அதே மதிப்பில் நாம் பண்டமாற்று செய்ய முடியாது.பொருளாதாரத்தை முன்னிறுத்தி உழைப்பை செய்தாலும் அதில் மனிதனின் திறமை வெளிப்படுகிறது. கூலியுடன் நமக்கான அங்கீகாரமும் நமக்கு கிடைக்கிறது.
மனித உழைப்பு எவ்வாறெல்லாம் பரிமாற்றமடைகிறது என்கிறார்.. உதாரணத்திற்கு சந்தைகளின் உழைப்பின் பலனை பொருளாக மாற்றுதல்,வங்கிகள் உழைப்பின் பலனை சேமிக்க வைக்கிறது, நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக உழைப்பை ஒருங்கிணைக்கிறது என்பதாக அதன் பல்வேறு பரிமாற்றங்களை எடுத்துரைக்கிறார்.
உழைப்பின் தோன்றல்களை ஆதிச்சுவடுகளான கல்வெட்டில் இருந்தும் வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் உழைப்பின் ஆதி வரலாற்றை ஆய்வு நோக்கில் எடுத்துச் சொல்லியுள்ளார்.
/ 'Cemetery' என்பது 'Koimeterion' எனப்படுகிற 'உறங்கும் இடம்' என்று பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது 'Grave' என்பது 'குழி'எனப்படும் பழமையான ஜெர்மானியச் சொல்லிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. ஆனால், தமிழில் நாம் இன்றும் நீத்தார் உறைவிடத்தை 'கல்லறை' என்றே அழைக்கிறோம்/
/தமிழில் 'கல்' என்றால் 'பாறைக் கற்கள்' எனப் பொருள் படும். அதேபோல் 'கல்' என்றால் கல்வி, கற்றல் என்றும் பொருள். இப்படியான பெருங்கற்களை, மனிதர்கள் தங்களின் கூட்டுழைப்பால் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து நிலைநிறுத்தும் தொழில்நுட்பம்தான் மனிதர்கள் கற்றுக்கொண்ட முதல் பாடமாகவும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த முதல் திறனாகவும் இருந்திருக்கும்./
தேனீக்களும் கூட்டு உழைப்பு செய்கின்றன. ஆனால் மனிதர்களின் கூட்டு உழைப்பு பரிணாமம் அடைந்திருப்பதால் பலருக்கும் வேலை அதிகம் கிடைத்திருக்கிறது.
இப்படியான மனிதர்களின் உழைப்புச் சூழலில்தான் இங்கிலாந்தில் 1771ல் ரிச்சர்ட் ஆர்க்ரைட் தொழிற்சாலையை உருவாக்கினார்.இதே போல் பல தொழிற்சால உருவாக முதலாளி தொழிலாளி என வர்க்கம் உருவாகியது.வேலைப்பளு அதிகரித்தது.1908ம் ஆண்டு பிப்ரவரி 7, ம் தேதி கோரல்மில் தொழிலாளர் போராட்டம் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வ.உ சி தேச விடுதலை போராட்டதுக்கு தூண்டுகோலாக அமைந்து இந்தியாவிலேயே முதல் வேலைநிறுத்தம் நடந்து வரலாற்று பெருமையைச்சேர்த்தது. இதன் பலனாக தொழிலாளர் கோரிக்கை ஏற்கப்பட்டது.உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராட தொழிலாளர்களுக்கு உத்வேகமும் அளித்தது.மேலும் பணிப்பாதுகாப்பு, பணிநேரம் முறைமை, விடுமுறை போன்ற கண்ணியமான பணிச்சூழலை பெற்றுத் தந்தது.இதற்கு முன்னோடியாக அமைந்தது கார்ல் மார்க்ஸின் சிந்தனையும் முழக்கமும் ஆகும்
/கார்ல் மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்'(Das Kapital) என்ற நூலில், முதலாளித்துவச் சமூகத்தில் மனித உழைப்பு (Labour Power) ஒரு தனித்துவமான பண்டமாக (Commodity) மாறிவிடுவதைச் சுட்டிக்காட்டினார். “மற்ற பண்டங்களைப் போலவே, மனிதர்களின் உழைப்பு என்ற சக்தியும் சந்தையில் வாங்கப்பட்டு, பின்னர் விற்கப்படுகிறது. தொழிலாளி தனது உடல் மற்றும் மன உழைப்புத் திறனை. 'கூலி' என்ற விலைக்கு முதலாளியிடம் விற்கிறான். ஆனால், உழைப்பு என்பது வெறும் பண்டம் மட்டுமல்ல. அது ஒரு சிறப்புத் தன்மை கொண்டது. இதுவே மதிப்பை உருவாக்கும் ஒரே ஆதாரம் (Source of value)" என்றார் மார்க்ஸ்./
உழைப்பை ஓர் ஆன்மிக நோக்கில் ஒழுங்காகப் பார்த்தல், மனவலிமையை வளர்த்தல்.மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் பற்றுதல் இல்லாமல் உழைக்கிற சக்திதான் யோகத்தின் அடிப்படை" என்கிறார் விவேகானந்தர்.
"தேன் சுவைக்க வந்த தேனீ. தேனில் சிக்கிவிடுவதைப் போல. நாமும் அப்படியே - ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதில் அடிமையாகிறோம். உழைக்கும்போது நாம் அதில் மூழ்கி விடுகிறோம். அந்த வேலை வெற்றிபெறாவிட்டால் மனதிற்குள் உடைந்துபோகிறோம். வெற்றி என்பது நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே" என்பதை அவர் வலியுறுத்துகிறார்.
இந்தியர்களின் உழைப்பை வணிக உத்தி மூலமாக ஆங்கிலேயர் எவ்வாறு அடிமைப்படுத்தினர் என்றும்,அதனை தொடர்ந்து தொழிலாளர் இயக்கங்கள் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதனையும் கூறியுள்ளார்.கணினி வருகை, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறவு வருகைக்கு பின் உழைப்பில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கூறுகிறது.
இயந்திர கற்றல் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை.லேபிளிங், அல்காரிதம் பொன்ற நுட்பங்களை தேவையானதை கற்பிப்பதற்கு பல இலட்சம் மனிதர்களின் மறைமுக உழைப்பு தேவைப்பட்டுள்ளது. மாற்றங்களினால் மனித உழைப்பு எவ்வாறு மடைமாற்றப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மனித உழைப்பை அல்காரிதம்கள் நேரிடையாக நிர்வகிக்கத் தொடங்கி உள்ளன.
தாஜ்மஹாலை கட்டியவர் ஷாஜகான் என்றே சொல்கிறோம்.ஆனால் அதில் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு மறைக்கப்பட்டுள்ளது. இன்றுதொழில்நுட்பங்களும் அதனையேதான் செய்துவருகின்றன
உழைப்பு என்றவுடன் உடல்சார்,அறிவுசார் உழைப்பு எனப் பிரித்து அதில் உள்ள இடைவெளிகளை பற்றி கூறியுள்ளார்.
எனவே ஏ.ஐ செய்யும் மாயை வேலை இழப்பா?வேலை மறைப்பா என்பதை குறித்த தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.
இணைய வசதி வந்தபின் காலை முதல் மாலை வரை இருந்த பணி கலாச்சாரம் தற்போது மாறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.மனித வளம் அதிகம் இருப்பதால் குறைவான ஊதியத்தில் வேலை செய்யும் கிக் வேலை, ப்ளாட்பார்ம் வேலைகள் பெருகிவிட்டன.ஒரு ப்ளம்பர் ஒரு சிறு வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்.அதேநேரம் ஒரு மாத ஊதியத்தில் ஏழாயிரம் ஊதியத்துக்கு வேலை பார்க்கும் நிலையும் உள்ளது என ஜெயமோகன் ஒரு இடத்தில் கூறியுள்ளார். மாத ஊதியம் பெறுவோரிடம்
உழைப்பு மலிவாக பார்க்கபடுகிறது.
உழைப்பு குறித்த உன்னத உரையாடலாக இந்நூல் உள்ளது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக் கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச ஒரு தரம் அந்த திகில் மேல் மட்டத்திற்கு வந்து தலை எடுக்கும். உடம்பு பதறும் நெஞ்சு உலரும் அடிவயிறு கலங்கும் முகம் விகாரமடையும் மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும். பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?'விடியுமா?' சிறுகதையில் இருந்து..-கு.ப.ராஜ கோபாலன்
Friday, 10 April 2026
கமகக்கண்ணன்
ஏன் பற்று வேண்டாம்?
பற்று என்பது ஒருவிதமான ஆற்றல் இழப்பு. எதையோ பற்றிக்கொண்டு இருக்க ஒரு உயிருக்கு நீடித்த ஆற்றல் தேவை. பாக்டீரியாவைப் பற்றிக் கொண்டிருக்கும் எதிர்ப்புரதம் கூட வீணாக ஆற்றலைச் செலவழிக்கிறது.
ஆனால் அந்த ஆற்றல் சற்றும் பயனின்றி விரயமாகிறது. சிந்திக்க.
எழுத்தாளன் ஏன் ரசிக மனநிலையில் இருக்கக் கூடாது என்பதற்கு வலுவான காரணம் உண்டு.
அவன் பல்வேறு உணர்ச்சி நிலைகளில் கற்பனை செய்ய வேண்டியவன். கதை மாந்தர்களின் நவரசங்களையும் கற்பனையில் விளைந்த கதைக்கள நுட்பங்களையும் பின்புலத்தில் முதுகெலும்பாக நிற்கும் தகவல்களின் ஒருங்கிணைவையும் சமநிலையில் வைத்து உணர்ச்சிகளை அணுக வேண்டியவன். அவனுடைய பெரும் ஆற்றல் அப்படியே செலவிடப்பட வேண்டும். அதுவே எழுத்துக்காரனின் தொழில் அறம்.
ஆனால் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலுமாகவே இருப்பவனுக்கு ஒருபோதும் நல்ல இலக்கியம் கைகூடாது. நல்ல இலக்கியத்தையும் அதை எழுதியவரையும் மனம் திறந்து பாராட்டலாம். ஆனால் தொழவோ துதிபாடவோ தேவையில்லை என்பதைப் பட்டறிவில் இருந்தே துல்லியமாக அறிவிக்கிறேன்.
இல்லறத்தில் ஈடுபடும் ஒருவர் பணத்தின் மீது அதீதப் பற்று கொண்டால் குடும்பத்தின் அநேக இனிமைகளை இழக்க நேரிடும். அதீத தேசப்பற்று வேற்று தேசத்தானைப் பகைமை பாராட்டச் சொல்லும். அதில் ஏகப்பட்ட இழப்புகள் உள்ளன. இப்படித்தான் பற்று என்பது ஒருவனது வாய்ப்புகளையும் அவன் மேம்படுவதற்கான சாத்தியங்களையும் குறைக்கிறது.
பற்றின்மையோ விடுதலையைத் தருவதன் மூலம் ஒருவனது உள்ளுறங்கும் நிலையாற்றலை உசுப்புகிறது. அதுவே உய்வு. அதுவே ஆன்மீக உச்சம். அதுவே ஞானக் கண்டடைவு. அதற்குப் பலன் உண்டு. பற்றின்மையின் நிலையாற்றல் அவனுக்கும் உலகுக்கும் அரியவற்றை ஆற்றும். அன்பின் இயக்கத்தால் அண்டை அயலாரையும் தேற்றும்.
Wednesday, 8 April 2026
tea-26
#மனசுக்கு_ஒரு_தேநீர்_26
நீங்கள் ஒரு கப் காபியை வைத்திருக்கிறீர்கள். யாராவது வந்து உங்களுடன் மோதும்போது அல்லது உங்கள் கையை அசைத்து, உங்கள் காபியை எல்லா இடங்களிலும் கொட்டும்போது
நீங்கள் ஏன் காபியைக் கொட்டினீர்கள்?
உங்கள் பதில்: "நிச்சயமாக யாரோ என்னுடன் மோதியதால், நிச்சயமாக!"இதுவாக இருக்கும்.
ஆனால், தவறான பதில்.
உங்கள் கோப்பையில் காபி இருந்ததால் நீங்கள் காபியைக் கொட்டினீர்கள்.
கோப்பையில் தேநீர் இருந்திருந்தால், நீங்கள் தேநீர் கொட்டியிருப்பீர்கள்.
கோப்பையின் உள்ளே என்ன இருக்கிறது, அதுதான் வெளியேறும்.
ஆகையால், வாழ்க்கை வந்து உங்களை அசைக்கும்போது, உங்களுக்குள் இருப்பது வெளியே வரும்.
எனவே நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் ... "என் கோப்பையில் என்ன இருக்கிறது?" வாழ்க்கை கடினமாகும்போது, என்ன கொட்டுகிறது?
மகிழ்ச்சி, நன்றியுணர்வு, அமைதி மற்றும் பணிவு?அல்லது கோபம், கசப்பு, கடுமையான வார்த்தைகள் மற்றும் எதிர்வினைகள்?
நீங்களே தேர்ந்தெடுங்கள்!
இன்று நம்முடைய கோப்பைகளை நன்றியுணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி, உறுதிப்படுத்தும் வார்த்தைகளால் நிரப்புவோம். மற்றவர்களிடம் இரக்கம், மென்மை மற்றும் அன்பு ஆகியவற்றை காட்டுவோம்.பிறர் மீது அக்கறை கொள்ளுங்கள்.பிறரால் நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அதைப்போல அவர்களை நடத்துங்கள்
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் ஒரே ஒரு நேரம் மட்டுமே முக்கியமானது. இப்போது! இதுவே மிக முக்கியமான நேரம். ஏனெனில் இதுவே நாம் ஆற்றலோடு இருக்கும் நேரம். நீ ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே யார் முக்கியமான மனிதன் என்பதை அறியமுடியும். எந்த ஒரு மனிதனும் தனக்கு யாருடன் எப்படித் தொடர்பு ஏற்படும் என்பதை அறிய முடியாது. மிக முக்கியமான காரியம் என்னவெனில் நல்லது செய்வது. ஏனெனில் அதன் பொருட்டே மனிதனுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது." என்கிறார்
டால்ஸ்டாய்
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
book-22
#Reading_Marathon2026
#26RM009
Book No:22/150+
Pages:-320
இரண்டு கிழவர்கள்
-லியோ டால்ஸ்டாய்
லியோ டால்ஸ்டாய் என்றதும் நினைவுக்கு வருவது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில துணைப்பாடத்தில் வந்த கதை தான் எளிய மக்களுக்கு உதவி செய்வது தான் கடவுளை அடையும் உண்மையான வழி என்பதனை அழுத்தமாய் அந்த கதை சொல்லி இருக்கும் அந்த கதையின் நினைவோடு தான் இந்த புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.முதலில் இப்புத்தக மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும் கதைக்கும் மனதுக்குள் நெருக்கமாகவும் இருந்தது.
இரண்டு கிழவர்கள் கதையில் எஃபீம் (Efim) மற்றும் எலீஷா (Elisha) என்ற இரண்டு முதியவர்கள்,
எபிம் தீவிரமான உறுதியான மனம் கொண்டவர்.கொஞ்சம் பணக்காரர். எலிசா என்பவர் தேன் வளர்ப்பு செய்து பிழைத்துக் கொண்டிருப்பவர். இருவருக்குமே இயேசு பிறந்த ஊரான ஜெருசலேமுக்கு இறப்பதற்கு முன் செல்ல வேண்டும் என்பது நோக்கமாய் இருந்தது. அந்த நோக்கத்தை தூண்டி விட்டவர் எலிசா. நாம் பணம் சேர்த்துக் கொண்டு ஜெருசலத்தை நோக்கி புறப்படுவோம் என்று ஆறு மாத காலம் திட்டம் தீட்டுகின்றனர்.
பயணம் செய்யும்போது எலிசா பின் தங்கி விடுகிறார். ஒரு குடிசையில் அவர் சென்று பார்த்த இடம் அவருக்கு வியப்பாக இருந்தது. அங்கேயே தங்கிவிட்டார்.அதன் பின் என்ன நடந்தது எபிம் மட்டும் ஜெருசலம் செல்கிறார். அங்கு சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் தான் இந்த கதையின் மையம். ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் பிறரின் அன்பை சம்பாதிப்பதும் பிறரிடம் அன்பை செலுத்துவதும் தான் உண்மையானது என்னும் பேருண்மை இந்த கதையின் மூலம் அறிய முடிகிறது.
மனிதர்களுக்கு தேவை அறிவுரைகள் இல்லை. தெளிவுரைகள். எல்லோர் சூழ்நிலையும் ஒன்றல்ல, எல்லோர் பார்வைகளும் ஒன்றல்ல...ஒவ்வொருவர் திறனும் ஒன்றல்ல.... அப்படி இருக்கையில் நாம் சொல்லும் எந்த அறிவுரையும் கண்டிப்பாக மற்றவருக்கு ஒரே போன்ற விளைவை ஏற்படுத்தாது....நாம் நல்லது என நினைத்து சொல்லும் அறிவுரை அவர்கள் சூழ்நிலை பொருத்து நன்மையும் விளைவிக்கலாம், தீமையும் விளைவிக்கலாம்.
என லதா அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருப்பார். இந்த கதையில் வரும் இவானும் தனக்கு தெரியாத ஏதோ ஒன்று மற்றவருக்கு தெரிந்திருக்கிறது. அதை அறிந்திருந்ததை தானும் அறிந்திருந்தால் நிச்சயம் அவரைப் பற்றி புரிந்து கொண்டிருப்பேன். நாம் நம்முடைய மனதில் நினைப்பதைத்தான் நாம் உண்மை என்று நினைக்கிறோம். மற்றவர்களின் பார்வையில் அல்லது அவர்கள் உண்மையில் நடந்ததை நாமும் தெரிந்து கொள்ளும்போது நம்முடைய முடிவுகளை நாம் மாற்றிக் கொள்கிறோம்.
உன் அயலானையும் நேசி எனும் கருத்தை முன் வைத்து இழந்த வாய்ப்பு கதை அமைக்கப்பட்டுள்ளது. இவான் குடும்பமும்,கேவ்ரில் குடும்பமும்..பூவே உனக்காக பாணியில் இரு குடும்பத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவானின் வயதான தந்தை இதை எல்லாம் பார்த்து மகிழ்கின்றார். ஒரு முறை முட்டை அருகில் உள்ள வீட்டில் வைத்ததை பேசப்போய்தீராப் பகையில் முடிகிறது. இறுதியில் எவ்வாறு இணைந்தார்கள் என்பது தான் கதை.தொய்வின்றி சுவாரஸ்யமாய் செல்லும்.கதை மனித மனம் எவ்வாறு எல்லாம் சுயநலமாய் சிந்திக்கிறது என்பதை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். கதையில் வரும் முதியவரின் கதாபாத்திரம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கதையில் முக்கியமான கட்டத்தில் அவர் சொல்லும் அறிவுரை
/நீ உனக்குதான் எல்லாம் தெரியுமென்றும் எனக்கு எதுவும் தெரியாது எனவும் நினைக்கிறாய். இல்லை! நீ இன்னும் குழந்தைதான். ஒரு பைத்தியக்காரத்தனம் உன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியாமல் உன் கண்கள் குருடாகி விட்டன. மற்றவர்களின் பாவங்கள் உன் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் உன்னுடைய பாவங்களை நீ உன் முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டுள்ளாய். கேவ்ரியல் செய்தது தவறுதான் என்பதை நான் அறிவேன். ஆனால் அவன் ஒருவன் மட்டுமே தவறு செய்தான் எனில் இந்த உலகத்தில் எந்தத் தீமையும் இருக்காது. இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தீயவையும் ஒரு மனிதன் செய்தவை என நீ கருதுகிறாயா? இல்லை! இந்த உலகில் தீமை செய்வதற்கு இரண்டு மனிதர்கள் தேவை. கேவ்ரியலிடம் இருக்கும் கெட்டதை மட்டுமே நீ பார்க்கிறாய். ஆனால் உன்னிடம் இருக்கும் கெட்டதை உன்னுடைய கண்கள் மறைத்துவிட்டன. அவன் ஒருவன் மட்டுமே கெட்டவனாக இருந்து நீ நல்லவனாக இருந்திருந்தால் எந்தத் தவறும் நடந்திருக்காது."/ என்ற இடம் மிக அற்புதமானது
ஒரு ஒரு காபி கடையில் நடக்கும் கடவுள் பற்றிய விவாதம் தான் சூரத்தின் காபி ஹவுஸ் கதையின் மையக்கரு. ஒவ்வொருவரும் தங்கள் கடவுள் குறித்த மேன்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். அது ஒரு தத்துவ விவாதமாகவும் மாறி செல்கிறது. தத்துவார்த்தங்களின் இறுதியில் அனைவரும் மௌனமாகி யாருடைய நம்பிக்கை சிறந்தது என்பதை மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டனர் என்று கதை முடிகிறது. பணம் படைத்தவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்ற எண்ணங்களில் உள்ள பொய்மை குறித்த கருத்தினை 'இலியாஸ்' கதை விளக்குகிறது.
டால்ஸ்டாயின் கதைகள் அனைத்துமே அன்பினை மையமாகக் கொண்டவை. அந்த அன்பினை பற்றி குறிப்பிடும் போது, ஏதோ ஒரு நீதிக் கதைகள் போல் இறுதியில் இல்லாமல் வாழ்வியலில் இருந்து மனிதர்கள் துன்பப்படும் நேரத்தில் கூட அன்பினை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனை தான் ஒவ்வொரு கதைகளிலும் சொல்லி இருப்பார்.
இந்த தொகுப்பில் இன்னும் மற்றொரு முக்கிய கதையாக பார்ப்பது 'கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்' எனும் கதைதான்.விளாடிமிர் நகரத்தில் வாழும் இவான் எனும் இளமையான வியாபாரி.. தன்னுடைய வியாபாரத்துக்கு புறப்படும் போது மனைவி ஒரு கெட்ட கணவனை காண்கிறாள்.அதாவது கணவன் வயதான தோற்றத்தில் வந்து தனது அங்கியை கழட்டி சிரிப்பது போல ஒரு கெட்ட கனவு வருகிறது. இதனை தன் கணவரிடமும் பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் கணவன் அதனை பற்றி சிறிதும் கவலையில்லாமல் வியாபாரத்துக்கு கிளம்புகிறார். அப்போது ஒரு தங்கும் விடுதியில் ஒரு கொலை நடைபெறுகிறது.அந்தப் பழி இவர் மீது விழுகிறது.அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை. மனைவியின் கனவு பலித்ததா உண்மையான குற்றவாளியை இவான் தேடி கண்டுபிடித்தாரா? அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்பதுதான் இந்த கதையின் கரு.
டால்ஸ்டாயின் கதைகள் பொதுவாக மனித வாழ்க்கையின் ஒழுக்கம், ஆன்மீகம், சமூக அநீதி, மற்றும் உள்ளார்ந்த போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அவர் வெறும் நிகழ்ச்சிகளைச் சொல்வதில்லை; மனித மனத்தின் மாற்றத்தையும் வாழ்வின் நெறியையும் கதைகளில் அமைக்கிறார். மனிதன் தன் எண்ணங்களை எவ்வாறு எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மனிதநேயம் தான் மனிதனின் மகத்தான கொடை என்பதனையும் தன் எழுத்துக்களின் வழியே ஒவ்வொரு கதைகளையும் அதனை அடிப்படையாகக் கொண்டு அமைத்து இருப்பார். இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போதும் மனிதனின் அன்பும் மனிதநேயமும் பெருகும் என்பது உறுதி
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Saturday, 4 April 2026
Friday, 3 April 2026
ஜா-36
வாழ்க்கைக்கு ஹைக்கூ 36
"இந்த பனிக் காலை;
எனக்குப் பிடிக்காத அந்த கருங்காகம்.
ஆனாலும் கூட பேரழகு!"
மட்சுவோ பாஷோ (Matsuo Basho) எழுதிய இந்தக் கவிதை முரண்களில் இருக்கும் அழகை ரசிக்கச் சொல்கிறது.
சுற்றிலும் வெண்மையான பனி படர்ந்த ஒரு காலை பொழுது. இங்கு பனி என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளம். காகம் பொதுவாக அதன் நிறத்திற்காகவும், குரலுக்காகவும் பலரால் விரும்பப்படாத ஒரு பறவை.
ஆனாலும் அந்த வெண்மையான பனிப் பின்னணியில், காகத்தின் கறுப்பு நிறம் ஒரு அற்புதமான ஓவியம் போலத் தெரிகிறது. வெறுப்பைத் தாண்டி, அந்த ஒரு கணத்தில் அதன் அழகை கவிஞர் உணர்கிறார்.
வாழ்க்கை என்பது நாம் எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல; நாம் எதை, எந்த சூழலில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தும் அமையும்.
நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் கோணத்தை மாற்றினால் உலகம் மாறும். நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், நம்முடைய முன்முடிவுகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், நாம் வெறுக்கும் ஒன்றிலும் ஒரு அழகு இருக்கும். அலுவலகத்தில் ஒரு சக ஊழியரை நமக்கு எதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு இக்கட்டான சூழலில் அவர் வேலையை மிக நேர்த்தியாக முடிப்பதைக் காணும்போது, "அவர் கோபக்காரராக இருந்தாலும், அவர் திறமைசாலி" என்று நீங்கள் உணர்வது இந்த ஹைக்கூ போன்ற ஒரு தருணமே.
முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் அதனுள்ளிருந்து வெளிப்படும் பேருண்மையை அறிவதும் வாழ்வை இனிதாக்கும். உலகம் என்பது கறுப்பும் வெளுப்பும் கலந்தது. பனி (வெண்மை) மட்டுமே இருந்தால் அது சலிப்பைத் தரும். அந்த வெண்மைக்கு இடையில் காகத்தின் கறுப்புதான் ஒரு கவித்துவமான அழகைத் தருகிறது. அதேபோல், வாழ்வில் கஷ்டங்களும், நமக்கு பிடிக்காத விஷயங்களும் இருந்தால்தான் மகிழ்ச்சியின் மதிப்பு தெரியும்.
இவரது அனைத்து ஹைக்கூ கவிதைகளிலும் வெளிப்படும் "நிகழ்காலத்தில் வாழ்தல்" இதிலும் வெளிப்படுகிறது. பாஷோ, காகத்தின் மீதுள்ள தனது பழைய வெறுப்பை மறந்துவிட்டு, அந்தச் சிறு நொடியில் அதன் அழகை ரசிக்கிறார். கடந்த கால கசப்புகளைச் சுமக்காமல், நிகழ்காலத்தில் இருக்கும் அழகை ரசிப்பதே நிறைவான வாழ்வு என்கிறார்.
உண்மையில், மகிழ்வான வாழ்வு என்பது எல்லாவற்றையும் நமக்குப் பிடித்தது போல மாற்றுவதில் இல்லை; நமக்கு பிடிக்காதவற்றிலும் இருக்கும் நன்மையை அல்லது அழகைக் கண்டறிவதில்தான் இருக்கிறது.
Wednesday, 1 April 2026
ஜா-35
வாழ்க்கைக்கு ஹைக்கூ: 35
“இந்த இலையுதிர் கால
மாலைப் பொழுதின் தனிமையிலும்
இனிமை காணமுடியும்”
யோசா புசோன் (Yosa Buson) எழுதிய இந்த அழகான ஹைக்கூ கவிதை, தனிமையின் மறுபக்கத்தை மென்மையாக உணர்த்துகிறது.
கவிஞர் ஒரு இலையுதிர் கால மாலையில் மரங்கள் இலைகளை உதிர்ப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இலையுதிர் காலம் என்பது ஒரு ஆண்டின் முடிவைக் குறிப்பது, மரங்கள் இலைகளை இழந்து தனித்து நிற்கும் காலம். மற்றவர்களுக்கு அது சோகமாகத் தெரியலாம். ஆனால், கவிஞருக்கு அந்த அமைதியான தனிமையில் ஒரு 'பேரின்பம்' கிடைக்கிறது. ஆரவாரம் இல்லாத அந்த மௌனத்தில், தன்னைத் தானே உணரும் ஒரு மகிழ்ச்சியை அவர் கண்டடைகிறார்.
தனிமை என்பது தண்டனையல்ல, அது தன்னையறியும் வாய்ப்பு. நாம் எப்போதும் பிறருடைய அங்கீகாரத்தையும், துணையையும் தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நம்முடன் நாம் செலவிடும் நேரமே நம்மைச் செதுக்கும். வெளியுலகச் சத்தங்கள் அடங்கும்போதுதான் நம் மனதிற்குள் இருக்கும் குரல் நமக்குக் கேட்கும். இது ஒருவரை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, மன நிறைவைத் தரும். ஒரு நீண்ட வேலை நாளுக்குப் பிறகு, வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஒரு கப் தேநீருடன் இயற்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த 10 நிமிடத் தனிமை, பல மணிநேரப் பேச்சை விட அதிகப் புத்துணர்வைத் தரும்.
இலையுதிர் காலம் எப்படி இலைகளை இழக்கிறதோ, அதுபோல வாழ்வில் இழப்புகள் வரும்போது வருந்தாமல், அந்த நிலையிலும் இருக்கும் அழகைக் காண வேண்டும். பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது ஒரு நண்பர் பிரிந்து சென்றாலோ, அதை ஒரு பேரிழப்பாகப் பார்க்காமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளக் கிடைத்த நேரமாகப் பார்க்க வேண்டும்.
இலையுதிர் காலம் என்பது ஒரு மரத்தின் 'இழப்பு' அல்ல, அது ஒரு 'தயாரிப்பு'. மரமானது வரப்போகும் கடும் குளிர்காலத்தைத் தாங்குவதற்காகவும், வசந்த காலத்தில் புதிய தளிர் விடுவதற்காகவும் பழைய இலைகளை உதிர்க்கிறது. கவிஞர் தனிமையை ஒரு இருண்ட அறையாகப் பார்க்காமல், ஒரு 'வெற்று நிலமாக' (Empty Space) பார்க்கிறார். ஒரு பாத்திரத்தில் இருக்கும் பழைய நீர் கொட்டப்பட்டால்தான் புதிய நீரை நிரப்ப முடியும். அதுபோல, தேவையற்ற உறவுகள், சத்தங்கள் மற்றும் எண்ணங்கள் உதிரும்போதுதான் நம் ஆன்மா புதிய தெளிவைப் பெறுகிறது.
இன்னொறு பரிமாணத்தில், ஜப்பானிய தத்துவமான வாபி-சாபியை இந்தக் கவிதை நினைவூட்டுகிறது. வாபி-சாபி என்பது "முழுமையற்ற, நிலையற்ற மற்றும் குறைபாடுள்ள விஷயங்களில் இருக்கும் அழகைக் காண்பது" ஆகும். வாபி (Wabi): தனிமையில் இருக்கும் எளிமையையும், உலகியல் இன்பங்களிலிருந்து விலகி இருப்பதையும் குறிக்கும். சாபி (Sabi): காலம் கடந்து செல்வதையும், அதன் மூலம் ஏற்படும் முதிர்ச்சியையும் (உதாரணமாக: காய்ந்த இலைகள், தேய்ந்த கற்கள்) குறிக்கும். உதிர்ந்த இலைகளும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த அந்த மாலைப் பொழுதும் வாபி-சாபி தத்துவத்தின் நேரடி உருவம். தனிமை என்பது வெறுமை அல்ல; அது ஒரு முதிர்ந்த அழகு. ஒரு பழுத்த இலை காம்பிலிருந்து விடுபடும் அந்தத் தருணம் ஒரு விடுதலையின் அழகு.
நம் வாழ்வு எப்போதும் பரபரப்பாகவும், இரைச்சலுடன், கொண்டாட்டத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் குறைகளையும், நாம் கடந்து வந்த வடுக்களையும், நம்முடைய தனிமையையும் அதன் இயல்பிலேயே நேசிப்பதுதான் மனநிறைவான வாழ்வின் ரகசியம்.
"தனிமை" (Loneliness) என்பது ஆட்கள் இல்லாத வருத்தம். ஆனால் "தனித்திருத்தல்" (Solitude) என்பது நம்முடன் நாம் இருக்கும் பெருமிதம். இந்த ஹைக்கூ, புற உலகை மறந்து அக உலகிற்குள் பயணிப்பதன் மூலம் கிடைக்கும் அமைதியே உண்மையான மகிழ்ச்சி என்பதை நமக்கு உணர்த்துகிறது.
Sunday, 29 March 2026
book-21
#Reading_Marathon2026
#26RM009
Book No:21/150+
Pages:-160
மஹாபிடாரி
-யுகபாரதி
யுகபாரதியின் எழுத்துகள் அவரைப்போலவே எளிமையானவை. அவருடைய முந்தைய புத்தகங்கள் யாவும் சிறியவையாக இருக்கும். நான் எடுத்தவுடனே பிரித்துப் பார்ப்பது யாருக்கு சமர்ப்பணம் செய்துள்ளார் என்பதைத்தான்.ஏனெனில் அவர் சமர்ப்பிப்பது எல்லாமே வித்தியாசமாய் இருக்கும். உதாரணத்திற்கு
"பெட்டகமாய் மதிக்கப் பெற்று
பின்னாளில்
பொட்டலம் மடிக்கக் கிழிபட்ட
புத்தகங்களுக்கு"
பஞ்சாரம் கவிதைத்தொகுப்பை இப்படியாக அர்ப்பணித்திருப்பார்
இந்தப் புத்தகம் "நிலவூறித் ததும்பும் விழிகளுக்கு என கவித்துவமாய் சொல்லியிருப்பார்.
எழுதுவோர் அனைவரின் முதல் முயற்சி கவிதைதான். ஆனால் அந்த கவிதைவடிவத்திற்கும் ஆழமான சொற்களையும் அர்த்தங்களையும் இட்டு நிரப்பும் போது கவிஞராகிறார்கள்.கவிதை வடிவத்தில் வெறும் அலங்காரச் சொற்களை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறவர்கள் இன்னும் கவிஞராக முயற்சிக்கிறார்கள் என கருதலாம்.அந்த வகையில் யுகபார்தி அவர்கள் அக்மார்க் கவிஞர்தான். இதில் 108, காதல் கவிதைகள் குமுதத்தில் வாசித்து இருந்தாலும் ஒரு சேர படிக்கும் போது மகிழ்ச்சிதான்.
பூக்காரம்மா கொடுக்கும் பூவினைப்பற்றி ஏற்கனவே எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்தில் ஒரு கவிதை " ஒரு விரற்கடைக் கூடுதலாக/நீட்டித்து நறுக்கினாளே/ அந்தக் கனகாம்பரத்தில்/ அறிந்து
கொள்ளலாம் என் காதலின் நீளத்தை/ கவிதை அழகியல்.
ஒருமுறையேனும் உன் கண்களை சந்தித்திருந்தால் மறுபடியும் புத்தன் திரும்பிதிருப்பான் அரண்மனைக்கே என்னும் வரிகள் காதலின் வலிமை ஒரு ஞானியையே திசைமாற்றி இருக்கும் என்கிறார்.
இரண்டுத் தெரு
தள்ளி நடந்தால்
உன் வீடு வந்துவிடும்
இடைப்பட்ட தூரத்தில்
எத்தனை மரங்களோ அத்தனையிலும் என் காதல் அமர்ந்திருக்கிறது
பகலில் காக்கையாக
இரவில் ஆந்தையாக
கடைசி இருவரி எள்ளல்
பேருந்தில் கேட்கும் பாடல்களுக்கு ஆசை அதிகம். அப்படித்தான் இளையராஜா பாடலை அவள் முனுமுனுக்கும் போது அறிய முடியது உன் காதலும் உபரி வெட்கத்தையும்.
இதில் உபரி வெட்கம் கவனிக்க வேண்டிய வார்த்தை.இயல்பாய் இருக்கும் வெட்கத்தை அவர்களே வைத்துக் கொள்வார்கள். உபரியைத் தான் ஏற்றுமதி செய்கின்றனர் என அர்த்தம் தெரிகிறது.
காதலி அனுப்பும் குட்மார்னிங் செய்தியை கவித்துவத்துடன் சொல்லி அதன் இறுதியில்..
" சும்மா இருந்தாலும்/வரக்கூடிய சூரியன்கள்/எழுப்பாமல் விடுவதில்லை/காதலை என்கிறார்.
அதேபோல் அசந்து தூங்கும் காதலியை " எழுப்பிவிடக்கூடாதென்னும் எச்சரிக்கையில்/கனவிலும் தும்மாதிருக்கிறது/ என் காதல் என்கிறார்.
#ரசித்தவை
"*உன்னிடம் கேட்க யோசித்த கேள்விகளில் இதுவும் ஒன்று,
அற்புத விளக்கென்றுதானே கதையில் சொல்லப்படுகிறது பிறகேன் அதிலிருந்து
தெய்வம் வராமல்
பூதம் வருகிறது?"
*ஆடுகோழி பலியிடுமிடத்தில் அண்ணன்மார்கள் முன்னிருக்க ஒருவருக்கும் தெரியாமல்
நீ சிரித்த சிரிப்பில்
தொங்கிவிட்டது என் தலை விபரீதங்களைத் தொடங்கவே விசேஷங்கள்
*வெகுண்டெழுந்து நீ
வீதியுலா வருகையில்
உன் விபூதி தட்டில்
இடுவதற்கே வைத்திருக்கிறேன்
என் காதலை
*உனக்கொரு கோவிலோ
மாளிகையோ கட்டுமளவிற்கு
வசதியில்லை.
எங்கெங்கோ கிடக்கும்
சுள்ளிகளைப் பொறுக்கி
கூடமைக்கும் குருவியாகவும் வாய்ப்பில்லை.
அதையும் இதையும்
கட்டுவதால் ஆகப்போவது
ஒன்றும் இல்லையென
உன்னையே
இறுக்கி கட்டிக் கொள்ள
எழுந்தோடி வருகிறது
என் காதல்..
யுகபாரதி கவிதையில் மட்டுமல்ல உரைநடையிலும் வல்லவர் என்பது அவரின் அழகிய முன்னுரை உதாரணம் அதில்
காதல் கவிதைகளில் தென்படும் மற்றொரு மகிமை அது, எழுதியவனை முன்னிலைப் படுத்துவதில்லை. எங்கே அக்கவிதை தொடங்கியதோ அங்கிருந்து விலகி வேறு வேறு திக்கிற்குச் சென்றுவிடும். ஓர் ஆண் எத்தகைய அன்புடன் வெளிப்பட்டாலும், அதை ஒரு பெண் ஏற்கும் பட்சத்தில்தான் காதலாக மாறுகிறது. 'தெய்வம் கல்லிலா / ஒரு தோகையின் சொல்லிலா ' என்று 'வான் நிலா நிலா அல்ல' பாடலில் கண்ணதாசன் கேள்வி எழுப்புவார்.
புத்த்கத்தில் உள்ள எல்லா கவிதைகளும் ஒரு பக்கத்தில் முடியும் எளிய கவிதைகள்.அன்றாடம் பயன்படுத்தும் இணைய மொழியில் இணைத்து எழுதியுள்ளார். ஒவ்வொரு கவிதையின் இறுதியிலும் ஏதேனும் ஒரு காதல் முடிச்சை ஒளித்து வைத்துள்ளார்.
தொடந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
book-20
#Reading_Marathon2026
#26RM009
Book No:20/150+
Pages:-123
நூலகாலஜி
-ஆயிஷா நடராஜன்
முதன் முதலில் புத்தகம் எடுத்து வாசித்தது கல்லூரி நூலகத்தில் தான்.விதவிதமான புத்தகங்கள், ஒவ்வொன்றையும் பிரித்து பிரித்து பார்த்து வைப்பேன்.பெரிய புத்தகத்தை தூக்கி கனத்தை கைகள் எடைபோடும். தெரிந்த எழுத்தாளரின் புகைப்படத்தை பார்த்து ரசிப்பது, ஒரு புத்தகத்தை திறந்தவுடன் இதை வாசிக்காதே சுத்த த்ராபை என எழுதியிருந்த தெய்வ வாக்கை மீறி படிக்காமல் வைப்பது இவை எல்லாம் நூலகத்தில் தான்சாத்தியம்.
புதிய புத்தகங்களை நாம் காசு கொடுத்து வாங்கி வாசிக்கலாம். ஆனால் நூலகத்தின் மூலம் தான் நல்ல புத்தகத்தை தேர்ந்தெடுக்கும் பழக்கம் வரும். அட்டையை பார்த்தோ ஆயில் பிரிண்ட் பார்த்தோ யாரேனும் ஒருவர் சொல்லியதை காதால் கேட்டோ புத்தகத்தை எடுத்து பயிற்சி செய்து பார்க்கலாம்.15 நாட்களுக்கு ஒரு முறை புத்தகத்தை மாற்றி கொடுக்க வேண்டும் என்ற நடைமுறை நம்மை வாசிக்கத் தூண்டிக்கொண்டே இருக்கும். மேலும் அச்சில் இல்லாத அல்லது மீண்டும் பதிப்பிக்காத புத்தகங்களும் அந்த ஞானக்கிடங்கில் தான் ஒளிந்துள்ளது. அந்த நூலகம் குறித்தும் உலகளாவிய நூலகம் குறித்து தான் இந்த புத்தகத்தில் ஆயிஷா நடராஜன் அவர்கள் எழுதியுள்ளார்.
நூலகம் ஒருவரை எவ்வாறு மாற்றும் என்பதற்கு உதாரணமாக ஓக் மாண்டினோ எனும் எழுத்தாளரை பற்றி குறிப்பிடுகிறார். இளம் வயதில் அமெரிக்க படையில் ராணுவத்தில் சேரும் இவர் ஜெர்மனியின் மீது போர் தொடுத்த போது ஜெர்மனி வீரர்களை சுட்டுக் கொன்றதை நினைத்து குறற உணர்வில் மனம் வருந்துகிறார்
அது தற்கொலை எண்ணம் வரை செல்கிறது அந்த நேரத்தில் அருகிலுள்ள நூலகத்துக்குச் சென்று இதனை செய்து முடிக்க திட்டமிடுகிறார் அவர் அமர்ந்திருந்த மேசையில் இருந்த ஒரு புத்தகம்
‘நான் இறந்து போவதற்கு முன்… (Before I die) என்கிற அந்தப் புத்தகத் தலைப்பு அவரைக் கவர்ந்திழுத்தது. துப்பாக்கியை கீழே வைத்துவிட்டு புத்தகத்தைக் கையில் எடுத்தார். அந்தப் புத்தகத்தை எழுதியவர் கிளமெண்ட் ஸ்டோன். இந்த புத்தகம் அவரை எந்த விதத்தில் மாற்றியது என்பதை பற்றி தான் முதல் கட்டுரை துவங்குகிறது.
ஆலய நுழைவுப் போராட்டங்கள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் பெண்கள் படிப்பதற்காக நூலகத்துக்கு நுழைய போராட்டங்கள் நடத்திய வரலாறும் உள்ளது. சொல்லப்போனால் பெண்கள் நூலகத்துக்குள் நுழைய 500 ஆண்டுகள் தேவைப்பட்டதாக ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
சோவியத் நாட்டில் இருந்த நூலகங்களை பற்றி சிங்காரவேலர் பதிவு செய்ததையும் கூறியிருப்பார் அதில் வாசிப்பே கற்றல் என்று குரூப்ஸ்கயாவின் தீவிர இயக்கப்படி, 1924ல் தலைவர் லெனின் மறைவிற்குப் பிறகும் அயராது மேலும் தீவிரமடைந்த அவரது நூலகப் புரட்சி மூன்று லட்சம் நூலகர்களை கற்றல்- தேவதைகளாக சோவியத் முழுதும் பயிற்சி தந்து நியமித்து 1939 வரை தொடர்ந்தது.
காமிக் புத்தக உலகம்தான் இன்றைய சர்வதேச நூலகங்களின் ரத்த ஓட்டமாக பிரகடனப்படுத்தப்படுகிறது. காமிக்ஸ் புத்தகங்கள் நூலகங்களில் நுழைந்த வரலாறும் மக்களிடம் அது ஏற்படுத்திய அதிர்வு குறித்த கட்டுரை சுவாரசியமாக இருந்தது.
1915ல் டெஸ்லாவும் எடிசனும் இயற்பியல் நோபல் பரிசை பகிர்கிறார்கள் என்று அறிவிக்கப்பட்டபோது பரிசைப் பெற உடனடியாக மறுப்பை வெளியிட்டார் டெஸ்லா. ஆனால் பிரான்ஸ், யுகோஸ்லேவியா உட்பட 17 நாடுகளின் உயரிய விருதுகள் பெற்றவர் அவர். தனது ஆய்வகங்கள் தீயிடப்பட்ட பிறகு கடும் வறுமையில் அடுத்தடுத்து விடுதிகளில் அறை எடுத்துத் தங்கிட... 1922 முதல் அவர் வாழ்வு அவரைப் பணித்தது. பசியும் பிணியும் வாட்டி எடுத்தன. அறிவியலுக்காக திருமணம்கூடசெய்து கொள்ளாமல் வாழ்ந்த டெஸ்லா இறுதிவரை இரண்டு பழக்கங்களை கைவிடவில்லை. பூங்காக்களில் புறாக்களுக்குத் தீனி போடுதல்... தேடித் தேடி நூலகங்களில் வாசித்த வாசிப்பு என்ன?என்ற வரலாற்றுச் செய்தியும் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடமாடும் நூலகம் கேள்விப்பட்டோம் ஆனால் நடக்கும் நூலகத்தை அறிவீர்கள் என்ற கேள்வியுடன் தொடங்கும் கட்டுரையில் போலன் சர்க்கார் அங்கத்தின் விடுதலையில் முக்கிய பங்கு வைத்த நட்சத்திரம் அவர் என்ன செய்தார் தெரியுமா?
1970ல் சட்டென்று ஒருநாள் அவர் இரு தோள்களிலும் தோள்பைகளில் வங்க- விடுதலையின் எழுச்சி நூல்களை எடுத்துக்கொண்டு தனது நடைப்பயணங்களைத் தொடங்கினார். அவரிடம் அவரது நடையின்போது இருநூறு புத்தகங்கள் இருந்தன. ராஜ்ஷஷி மாகாணத்தின் முப்பத்தாறு கிராமங்களில், தானே நேரில் நடந்து சென்று மக்கள் வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு நான்கு கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை, தானே நேரில் நடந்து சென்று மக்கள வாசிக்க புத்தகங்களை அறிமுகம் செய்திட அவர் முடிவெடுத்தார். ஒரு நாளைக்கு 4கிராமங்கள். முற்றிலுமாக 36 கிராமங்களை தனது புத்தக நடைப்பயணத்தில் முடித்தபின் ஒன்பது நாட்கள் கழித்து மீண்டும் அதே கிராமத்திற்கு வருவார். ஊர் மக்கள் முதலில் அவரது நூல் – அறிமுகத்தைக் கேட்டார்கள். பிறகு தங்களது விருப்ப நூலை தேர்வு செய்வார்கள். ஒன்பது நாட்களில் மறுமுறை அவர் வரும்போது திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். அடுத்த நூலை பெற்றுக்கொள்ளலாம்.
*டார்வினின் உயிரினங்களின் தோற்றம் மற்றும் வெர்னாட்ஸ்கியின் ‘பயோஸ்பியர்’ நூலும் தடை செய்யப்பட்டிருந்தது. அந்த நாட்களில் அந்த இரண்டு புத்தகங்களுமே சிங்காரவேலரிடம் இருந்தது மட்டுமல்ல... மேலும் இரண்டு பிரதிகளை ‘எப்படியோ’ வரவழைத்து அவர் பெரியாருக்கு ஒரு செட் மற்றும் வீரத்துறவி விவேகானந்தருக்கு ஒரு செட் (இருவரின் நூலையும்) வழங்கி வாசிப்பு ஓர் அரசியல் செயல்பாடு என்பதை செயலில் காட்டியதை வரலாறு பதிவுசெய்துள்ளார்.
*படகு நூலகங்கள் பற்றி நமக்குத் தமிழில் முதலில் எழுதியவர் தோழர் சிங்காரவேலர். மகா கவிசுப்பிரமணிய பாரதி நடத்திய 'யங்- இண்டியா' இதழ் பற்றி ஒரு தனிக்கட்டுரையில் குறிப்பிடும் அவர் அது ஆந்திராவில் விஜயவாடா படகு நூலகங்கள் வரை பிரபலமாக வாசிக்கப்படுகிறது என்று ஒரு வரி எழுதுகிறார். இக்கட்டுரை 1941ல் எழுதப்பட்டது.
இந்த புத்தகத்தின் மூலம் நூலகம் குறித்த உலகெங்கிலும் உள்ள வரலாற்றினை அறிய முடிகிறது.நூலகத்தை பயன்படுத்திய அறிஞர்களையும் அறிந்து கொள்ள முடிகிறது.
இவ்வாறு உலகம் முழுவதும் நூலகம் குறித்த பல்வேறு தகவல்கள். இந்த சிறிய புத்தகத்தில் சிந்திக்கும் விதத்தில் அமைந்துள்ளது. நூலகம் நம் ஊரில் இருந்தாலும் அதனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. இன்று செல்போனுக்கு அடிமையான இளம் தலைமுறையை மடைமாற்றும் விதத்தில் நூலகத்தை பயன்படுத்துவது மிகச் சரியான தீர்வாக இருக்கும். ஏதேன்ஸ் நகரத்தில் முதலில் வந்தவை பள்ளிகள் அல்ல நூலகங்களே என்னும் செய்தியும் நமக்கு அறிய முடிகிறது. இன்று ஊடகத்தில் முன்வைக்கப்படும் புத்தகங்களை மட்டுமே வாங்கும் பழக்கத்தை நாம் கொண்டுள்ளோம். மாறாக புத்தகங்களை நாமே தேர்ந்தெடுக்கும் ரசனையை வளர்த்தெடுப்பதில் நூலகம் முக்கிய பங்கு வைக்கிறது. ஆகவே நூலகத்தில் நாம் உறுப்பினராகி வாசிப்பை மேம்படுத்துவோம்
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
Saturday, 28 March 2026
Friday, 27 March 2026
ராமானுஜம்
உளவியலில் Just Noticeable Difference என்று ஒரு விஷயம் சொல்வார்கள். அதாவது ஒரு பொருளின் அளவு அல்லது விலை மாறியிருப்பதை நம்மால் உணர முடியும் மாற்றம். உதாரணத்திற்கு பெட்ரோல் விலையைத் திடீரென ஒரே நாளில் இருபது ரூபாய் கூட்டினால் நமக்குச் சட்டென்று தெரியும். ஆனால் தினமும் பத்து பைசாவாகக் கூட்டினால் மெதுவாக 200 நாட்களில் இருபது ரூபாய் கூடியிருக்கும் . அதை நாம் உணரவே மாட்டோம்.
இதில் முக்கிய விஷயம் . ஒரிஜினல் அளவிலிருந்து எவ்வளவு சதவிகிதம் கூடியிருக்கிறது என்பதுதான் முக்கியம். அதாவது பதினைந்து ரூபாய் டீ திடீரென இருபது ரூபாய் ஆனால் நமக்கு வித்தியாசம் தெரியும். ஏனெனில் ஒரிஜினலைவிட 33% க்கும் மேல் கூடியுள்ளது . இது ஐந்து ரூபாய்தான். ஆனால் அதுவே பத்து லட்சம் மதிப்புள்ள காரின் விலை ஐயாயிரம் ரூபாய் கூடினாலும் நமக்குத் தெரியாது. ஏனெனில் அது ஒரிஜினலைவிட அரை சதவிகிதம்தான். அதுவே ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்ச ரூபாய் கூடினால்தான் நம் கவனத்தை ஈர்க்கும்.
இன்னொரு விஷயம்! தினமும் அளவு பார்த்துக் கொண்டே இருந்தால் மாறுதல் நம் கண்களுக்குத் தெரியாது. ஒரு மரம் செடியாக இருக்கும் போது பார்த்துவிட்டுப் பத்து வருடங்கள் கழித்துப் பார்த்தால் அதன் வளர்ச்சி பிரமிக்க வைக்கும். அதுவே அந்த மரத்தைத் தினமும் பார்ப்பவர்களுக்குத் தெரியாது.
உடல் எடை கூடுவதும் அப்படியே . கொஞ்சம் கொஞ்சமாகக் கூடுவதை நம்மால் உணர முடியாது. பெரும்பாலும் மாதம் அரைக்கிலோ, முக்கால் கிலோ கூடும். ஆனால் இரண்டு வருடங்களில் 12 -15 கிலோ கூடியிருக்கும்.
அதே போல் வெற்றிகளும் உடனே வெளியே தெரியாது. உடல் எடைக் குறைப்பாக இருக்கட்டும், ஓர் இசைக்கருவி வாசிப்பதாக இருக்கட்டும், முதலீடாக இருக்கட்டும் , மெதுவாகவே முன்னேற்றம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இருக்கும். முன்னேற்றம் இல்லை எனக் கைவிட்டுவிடக் கூடாது.
இந்த Just noticeable difference க்கும் கீழே இருக்கும் மாறுதல்களை உணர நீங்கள் மாற்ற விரும்புவதை அடிக்கடி தொடர்ந்து அளவிட்டு ஆவணப்படுத்திக் கொண்டே இருங்கள். சேமிப்போ, உடல் எடையோ...சில வருடங்கள் கழித்து பழைய மதிப்பீடுகளைப் பார்த்து ஒப்பிடும்போதுதான் உங்கள் முன்னேற்றம் கண்ணுக்குத் தென்படும். மேலும் முன்னேற உந்துதலாக இருக்கும்.
ஆகவே ஆவணப் படுத்துங்கள். அளவிடுங்கள். எடை பார்க்கும் கருவி வாங்கி எடை பார்க்காமல் எடையைக் குறைக்கவே முடியாது.
எனக்குப் பிடித்த வாசகம் ' You cannot change what you cannot measure'. அளக்க முடியாத விஷயத்தை உங்களால் மாற்ற இயலாது.
#அன்றாட_வாழ்வின்_உளவியல்
டாக்டர் ஜி ராமானுஜம்
-
Thursday, 26 March 2026
Tuesday, 24 March 2026
Book-19
#Reading_Marathon2026
#26RM009
Book No:19/150+
Pages:-170
பூமர்
-செளம்யா
அரட்டை கேர்ள் எனும் சௌமியா அவர்களின் நான்காவது புத்தகம் இது. தொடர்ந்து அவரின் எழுத்துக்களை வாசித்து வருகிறேன். உண்மைக்கும் எதார்த்தத்திற்கும் மிக நெருக்கமாக இருக்கும். ஒரு சம்பவத்தை சொல்லும்போது கூர்மையான சில சொற்களை வைத்து நம்மை வீழ்த்தி விடுவார், அவரின் வார்த்தைகளுக்கு பின்னால் நம் மனதையும் செல்ல விட்டு அவர் சொல்வதை எல்லாம் நாம் ஆமோதிக்கும்படி எண்ண வைப்பார். இந்த கதைகளும் அப்படித்தான்.
"நீ சம்பாதிக்க ஆரம்பிச்சா இதைவிட நல்லதா வாங்கிட மாட்டியா"என்று தான் ஆரம்பிக்கிறது.. சொந்த வீட்டை விற்கும் அப்பாவின் வார்த்தை. இந்த ஒரு புள்ளியில் இருந்து துவங்கும் கதை இறுதியில் நாம் எதிர்பாராத விதத்திலும், மனம் ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் கதை முடிகிறது. ஆனால் மணலில் கல்லை ஒளித்து வைப்பது போல சொற்களில் தேடித் தேடி அந்த முடிவை நாம் எடுக்க வேண்டும் என்பது சுவாரசியமானது. /வேறு மார்க்கமற்ற கையறு நிலையில் இன்னும் நிகழாத அல்லது நிகழவே வாய்ப்பறற வசந்தமான ஒரு எதிர்காலத்தை கனவு கண்டு சமாதானம் கொள்வது ஒரு ஆறுதல்/ என்பது உளவியல் உண்மையே.
/எதனால் அப்படி முடிவெடுத்தாளோ தெரியாது. ஆனால் செயலில் இறங்கிய பின் ஒரு முறையேனும் மீள முயற்சித்திருப்பாள். அது கண்டதிருந்து கையாளாகாமல் இந்த அறை அவஸ்தை பட்டு இருக்கும்/ என்பதை படிக்கும் போது மனம் சற்று அசைபோடுகிறது அந்த காட்சியை.
நான்கு மாடி கட்டடத்தில் நின்றிருந்தால் முதலில் தோன்றுவது கீழே விழுந்தால் என்ன ஆகும் எனும் எதிர்மறை சிந்தனை தான். அப்படி வரும்போதே நம்மையறியாமல் கையின்பிடி இறுகுவதை காணலாம். சாவு குறித்த செய்தி கேட்பதை விட கண் முன் பார்ப்பது துயரமானது. மனம் அவர்களை நினைத்து நம்மை ஒப்பீடு செய்யும் யதெச்சையாக. இறையன்புவின் நாவல் ஒன்று சாகாவரம். நண்பனுடைய இறப்பை பொறுக்கமாட்டாது மனம் ஏற்படுத்தும்.அடுக்கடுக்கான கேள்விகள்தான் அந்நாவல். இத்தொகுப்பில் உள்ள இக்கதையும் சிறுவனின் பார்வையில் சாவை நோக்கிய சிந்தனையை கிளறுவதாக அமைகிறது." கடன் வாங்கித்திரும்பத் தராம செத்துப்போறவங்க அடுத்த பிறவியில் மாடாய் பொறப்பாங்கனு வரி வரும்..நான் நினைச்சிக்கிட்டேன் அடுத்த ஜென்மத்தில மனுசங்களை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகம் இருக்கும்னு
இக்கால ஜென்சி தலைமுறையின் கதைக்களம் தான் பூமர்.'உள்ளங்கை' கதை அவரின் தளத்தில் வந்தவுடனே படித்தேன். அக்கா தம்பி உறவின் மேன்மையை துருத்தலின்றி மிக இயல்பாய் பாசப்பிணைப்பை நவீனகாலத்தில் இருக்கும் அன்புடன் சொல்லியிருப்பார்.அக்கா கொடுக்கும் கட்டப்பைக்குள் ஷங்கர் பார்வையை நுழைக்கும் போது படிக்கும் நம்மையும் பையில் என்ன வைத்திருப்பார் என்று சொற்களில் துலாவ வைத்திருப்பார்.
தீராக்காதல் கதையும் ஏற்கனவே வாசித்திருந்தது தான். நடுத்தர வர்க்கத்து பெண்மணி எல்.ஐ சி ஏஜெண்டாக இருப்பாள். அங்கு வரும் மேலதிகாரி மீது வரும் ஈர்ப்பை கதை முழுவதும் நாசூக்காய் சுவாரஸ்யம் குறையாமல் சொல்லியிருப்பார்.
பெண்களின் கைகளுக்கு ஒரு மாயவித்தை இருக்கிறது என 'அலங்கோலம்' கதையில் ஒரு வரி வரும்..அதுபோல சொல்லும் இக்கதையில் ஏதேனும் ஒரு மந்திர வரிகள் அல்லது படித்தவுடன் அடடே என எண்ண வைக்கும். காட்சிகளையும் தன் சொற்சித்திரத்தால் வண்ண மயமாக்கிவிடுவார். கணவன் மனைவி அந்நியோன்யத்தை அழகிய வரிகளால் விரசமின்றி பதிவு செய்திருப்பார். இதற்கு நேர்மாறாக சந்தேகப்படும் கணவனையும் சகித்துக் கொள்ளும் மனைவையைப் பற்றியும் ஐயுறவு கதை அழகியல்.கதையின் இறுதியில் மகள் தனக்கு நேரும் ஒரு நிகழ்வின் போதுதான் அம்மா இத்தனை நாட்கள் சொல்லும் சொற்களில் உயிர் உள்ளதை அறியும் இடம் நச்
"கோடுகளுக்குள் இருக்கும்வரை பிரச்சனை இல்லைதான். ஆனால் கோடுகள் ஒவ்வொரு முறையும் புதிய வட்டத்தைப் போட்டுக் கொண்டே வந்தன. ஒவ்வொரு புதிய வட்டமும் முந்தையதை விட ஒரு சுற்று குறுகி இருந்தது. அந்த குறுகலுக்குள் அடைபட்டு மூச்சு முட்டும் நிலைக்குத் தான் தள்ளப்படுவதை உணரச் சில மாதங்களாகின ரம்யாவுக்கு என ரம்யாவின் மனநிலையை அழகாக ஒப்பிட்டு காட்டியிருப்பார்.
இத்தொகுப்பில் எனக்கு பிடித்த கதையாக மனக்குடல் கதை என சொல்லலாம். விவாகரத்தான இருவரும் மேட்ரிமோனி வழியாக பேசி சந்தித்து மறுமணத்துக்கு தயாராகின்றனர். எல்லாம் பொருந்தி வரும்போது ஒரே ஒரு செயல் நாயகனிடன் மனதில் உள்ளதை சொல்லும். அதன்பின் என்ன ஆனது என்பது தான் கதை.
பிற்போக்குத்தனங்களை ஒரு பெண் எதிர்கொள்ளும் சூழலில் ஒரு பெண் என்ன முடிவெடுக்கிறாள் என்பது கதையின் இறுதியாக அமைகிறது.
/சந்திப்பது என்பது இருவர் பார்த்துக் கொள்வது மட்டுமல்ல, பரஸ்பர நம்பிக்கையை சம்பாதிப்பது/
" காலம் எல்லாவற்றையும் ஆற்றித் தேற்றுகிறது.எந்த உயிரும் வாழ்நாள் முழுக்கத் தனித்திருப்பதில்லை. யாரோ ஒரு ஜீவன் யாருக்காகவோ துணை நிற்பது காலத்தின் விதி எனும் வரி அருமை. கதையோட்டத்திற்கு பொருந்துகிறது.
இறுதியில் வந்து அம்மாவின் திட்டுக்குத் தயாராகியபடி அலைபேசியை அழுத்தினாள் என்பது அழகியல்.
மருத்துவமனை கேண்டினில் ரோஷன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தான். இந்த மனித மனம்தான் எத்தனை விசித்திரமானது! நெஞ்சம் முழுக்கத் துக்கம் நிரம்பிய ஒருவனால் நா ருசிக்கத் தேநீர் அருந்த முடிகிறது. போதை நாடி புகை பிடிக்க முடிகிறது. உடல் எப்போதுமே மனதுக்கு ஓர் அடி முன்னால்தான் ஓடிக்கொண்டிருக்கிறது . ருசி, பசி...
பரிதவிப்பில் என கதை துவங்குகிறது.
சாலை விபத்தில் அடிபட்டு படுத்திருக்கும்.உயிருக்கு உயிரான மனைவியை நினைத்து மருகும் கணவன் ரோஷனின் மனநிலையைத்தான் சொல்லியிருப்பார்.மகள் மீது அதீத அக்கறையுள்ள தாயின் பிரச்சினை குறித்த காரணத்தை அழகாக சொல்லியிருப்பார்.
செளம்யாவின் கதைக்களம் யாவும் அன்றாட வாழ்க்கையில் நடைபெறும் சிக்கல்களை, சமூக அவலங்களை மிக யதார்த்த நடையில் படைத்தது சிறப்பு.அதனையே கதாபாத்திரங்களுக்கும் இடையேயான உரையாடலாக அமைந்தது நன்று.யதார்த்த உலகில் அல்லது போட்டி உலகில் தனி மனித உணர்வும் பார்வையும் சமூகத்தின் குரூர கணங்களை எதிர்கொள்ள முடியாத இயலாமையும் கதைகள் வெளிப்படுத்துகின்றன.வெறுமனே பெண்ணியம் பேசாமல் அடுக்கடுக்கான காரணங்களை சொல்லாமல், பிரசங்கம் போல் முழங்காமல், ஒவ்வொரு ஆண்களையும் உணர வைக்கிறார்.இதுவே படைப்பின் பெரும்பலம்.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Monday, 23 March 2026
நீர் எதிர்ப்பதில்லை. நீர் பாய்கிறது. நீ உன் கையை அதில் மூழ்கடிக்கும்போது, நீ உணர்வதெல்லாம் ஒரு வருடலை மட்டுமே. நீர் ஒரு திடமான சுவர் அல்ல, அது உன்னைத் தடுத்து நிறுத்தாது. ஆனால் நீர் எப்போதும் தான் விரும்பும் இடத்திற்கே செல்லும், இறுதியில் எதனாலும் அதை எதிர்த்து நிற்க முடியாது. நீர் பொறுமையானது. சொட்டும் நீர் ஒரு கல்லை அரித்துவிடும். அதை நினைவில் கொள், என் குழந்தையே. நீ பாதி நீர் என்பதை நினைவில் கொள். உன்னால் ஒரு தடையைக் கடந்து செல்ல முடியாவிட்டால், அதைச் சுற்றிச் செல். நீர் அவ்வாறு செய்யும். -மார்கரெட் அட்வுட்
Sunday, 22 March 2026
book-18
#Reading_Marathon2026
#26RM009
Book No:18/150+
Pages:-376
கருந்துளை
-கரன் கார்க்கி
இந்த ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவற்கு வந்திருந்த அனைவரின் கைகளிலுமிருந்த புத்தகம் தான் கரன்கார்க்கி எழுதிய கருந்துளை நாவல். அடிப்படையில் தத்துவம் குறித்த வாசிப்பு மிகவும் பிடிக்கும். அறிவார்ந்த உரையாடல் இருக்கும் என்பதால் விரும்பி வாசித்தேன். அதே போல் தத்துவ விளக்கம் நாவல் முழுக்க எளிமையாக விளக்கப்பட்டுள்ளது.
கல்லூரியில் தத்துவவியல் பயிலும்.மாணவர்களான சமரனும், சுகுவும் நண்பர்கள்.தத்துவத்தில் நாட்டமுள்ள மாணவன் சமரன் அனைவரிடமும் பழகாதவன். ஆனால் தத்துவ படிப்பில், அறிந்துகொளவதில், வாசிப்பில் ஆர்வமுள்ளவன். உடன் பயிலும் வெண்பாவை காதலித்தாலும் நியாயமற்ற சில செயல்கள் செய்ததால் குற்ற உணர்வு ஏற்பட்டு தற்கொலை குறித்த எண்ணங்கள் அவனிடம் அடிக்கடி ஏற்படும். அப்போதெல்லாம் சுகுதான் அவனை தேற்றுவான்.தத்துவ ஆசிரியராக வரும் முரளி சார் மீது அள்வற்ற அன்பு வைத்துள்ளான்.அவரிடம் வகுப்பில் தத்துவத்தில் உரையாடல் செய்வான்.
பொதுவாக தத்துவம் என்பது கேள்விகள் கேட்பது, அறிவியல் என்பது அந்தக் கேள்விகளுக்கு விடைகளைத் தருவது. எல்லாவற்றையும் வரையறை செய்து கொண்டு கேள்வி கேட்பது, காரண காரியத்துடன் விளக்குவது தான் அறிவின் முதற்படி என்கிறார்கள் தத்துவ அறிஞர்கள்.
அமெரிக்க நண்பரான சாக்கிய மோகன் என்பவருடன் தத்துவம் குறித்து உரையாட சமரன் அழைக்கப்படுகிறான்.தத்துவம்.
குறித்த உரையாடல் இப்பகுதியிலிருந்து துவங்குகிறது.
எல்லா இந்தியத் தத்துவங்களும் சுயம்பாக ஒன்றாக உருவாகவில்லை.உதாரணத்திற்கு ஈர்ப்பு விசை கண்டறிந்த நியூட்டன் ஈர்ப்பு விசைக்கான காரணத்தை கண்டறியவில்லை. ஐன்ஸ்டீன் கண்டறிந்ததாக விளக்குகிறார். இந்தியாவில் ஆத்திகப் பள்ளிகள் இருந்தது போல வேதங்களை ஏற்காதவர்களுக்கான நாத்திகப் பள்ளிகளும் இருந்தது என்றும் சாருவாகத் தத்துவம் நாத்திக பள்ளியை சேர்ந்தது எனக்கூறுவதும்,அதை விளக்கியிருப்பதும் சுவாரஸ்யம்.
இந்தியத்தத்துவங்கள் துறவறத்தை வலியுறுத்துவது போல மறுபிறப்பை ஏற்கின்றனவா? தத்துவங்கள் மீது புனிதப்பூச்சு உள்ளனவா? மதங்கள் ஏன் தத்துவங்கள் தருவித்துக் கொண்டன?போன்றவற்றிற்கு கருத்தாழமிக்க தொடர்பை கூறுகிறது.மனித வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடும் ஒரு தத்துவப் பயணம் என்று கூறலாம்
கதைக்காக சட்டென்று சமரனை - சராசரி காதலனாக - காதல் வசனங்கள் பேசும் கதாபாத்திரமாகக் காட்டாமல் காதல் தருணங்களிலும் அவன் தீவிரத்தன்மையோடே இருக்கிறான். ஆனாலும் அவனுக்குள்ளும் எட்டிப்பார்க்கும் காதலையும் அவ்வப்போது எழுதியும் இருக்கிறார் நாவலாசிரியர். ‘ஒரே விழியில் ஆயிரம் முறை மூழ்கலாம்’ வரி அதற்கோர் உதாரணம்.
சமரன்-வெண்பா காதல் அத்தியாயமும் இறுக்கமாய் இல்லாமல் இயல்பாய் சொல்லப்பட்டிருக்கிறது.பேராசிரியர் முரளியின் பின்னணி குறித்து விளக்கப்பட்டுள்ளது.தத்துவ பிடிப்புடன் ஆசிரியர்களுக்கே உரிய நிலையில் உள்ளார். சக பேராசிரியரான ஜடாயுவுடன் வேறுபட்டவர் என்பதை வகுப்பு மாணவர்களின் பார்வையில் விளக்கியிருப்பார்."கண்ணுக்கு தெரியாமலிருக்கும் ஒரு பொருள் எந்த விதத்திலும் வெளிப்படாதிருக்கும் என்றால் அது இருக்கிறதென்பது உண்மையல்ல" எனும் புத்தரின் வாசகம் பொருத்தமான இடத்தில் வருகிறது.
/ஒட்டு மொத்த உயிரினங்களும் ஒன்றிலிருந்து இன்னொன்றெனப் பரிணமித்ததுதான். அந்த விதத்துல குரங்குல பல வெரைட்டி இருக்கு. எல்லாமே மரத்திலிருக்குற பழங்களைக் காலி பண்ணிட்டு அடுத்த மரத்துக்குத் தாவிடும். ஆனால், மரத்திலிருக்குற பழம் காலியான பிறகு நிலத்தில் உணவைத் தேடுன குரங்குக்கும் மனிதனுக்குமான பொதுவான மூதாதையிலிருந்து மனித இனம் தோன்றியது. அப்படியான ஒன்றான நியாண்டர்தால் மனிதனையும் குரங்கு வகையென்றே நாம் நினைத்திருந்தோம்/ எனும் பகுதியும் பின்னர் வரும் விளக்கமும் மூதாதையர் குறித்த புரிதலை விரிவாக்குகிறது.
நாவலின் எதிர்பாராத திருப்பமாக சுகுவிற்கு ஒன்று நிகழ்கிறது. அது சமரனை பாதிக்கிறது. தத்துவ விசாரணை செய்கிறான்.சமரனின் அம்மா கதாபாத்திரமும் அவளின் அடுத்த கட்ட நகர்வையும் சமரன் தீர்மானிக்கிறான்.நாவலின் ஒன்பதாவது அத்தியாயம் சினிமாபார்க்கும் உணர்வை காட்சிவடிவில் விறுவிறுப்புடன் சொல்லப்பட்டுள்ளது.அதனைத்
தொடர்ந்து வெண்பனியில் வரும் நினைவுகள் நாவலை தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது.
சமகால அரசியல் நிகழ்வுகள், சங்க கால.காட்சிகள், குதிரை குறித்த வரலாறு, பயணிகளின் கனிவான கவனத்துக்கு, ராபர்ட் சிஷோம்-நம் பெருமாள் உரையாடல்,டாக்டர்-மகாத்மா உரையாடல் என
நாவலின் கடைசி அத்தியாயங்கள் அதிக ஆழமுள்ள கருத்துக்களுடன் வெளிப்பட்டுள்ளன
அதிகாரத்துக்கு எதிராகப் பேசினால் அது கருணையின்றி தங்களுக்கு எதிரான தத்துவத்தை கொன்றுவிடுவார்கள் என்று நிதர்சன உண்மைகளை வரலாற்று ஆதாரத்திலிருந்து தெரிவிக்கிறார்கள்..ஒருமரண போராட்டத்தில் இறுதியில். இறப்பவரின் மனநிலையில் என்னவெல்லாம் தோன்றுமோ அத்தனையும் விவரிக்கப்பட்டுள்ளது.
தத்துவ தரிசனமாக கடைசி மூன்று அத்தியாயங்கள் உள்ளன
#ரசித்தவை
*எதேச்சையான ஒன்று மற்றொன்றால் பயனுக்குள்ளாகிறது. பயன்பாட்டிலிருக்கும் ஒன்று மற்றொன்றால் பலப்படுகிறது. இப்படியாக வலிமையானது தப்பிப் பிழைக்கிறது - ஹெராக்லிடஸ்
*உண்மையென்பது பாதையற்ற நிலம் மட்டுமே, உண்மைக்கான பாதையை நான் போட முடியாது.
ஒளியை நோக்கிப் போவதாக நினைத்து இருளுக்குள்ளே நுழைந்து ஏமாறுவீர்கள்.
*தத்துவங்கள் மதங்களுடன் தொடர்புடையதாக மட்டுமே என்று நம்பப் பழகிவிட்டோம்
*மரபு, விதிகளின்படி வாழ்வதுவீண். நமக்கான வாழ்வை நாமே தேர்ந்தெடுக்க வேண்டும்-சார்த்தர்
*டுபாக்கூர்-இரண்டு மொழி தெரிந்தவர் என்று பொருள் அன்றைய நாளில் ஆங்கிலேயருக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையில் பலவித தில்லுமுல்லுகளை செய்து பணம்.சம்பாதித்தவர்கள் என்பதால் துபாஷி என்ற சொல் வசைபாடும் சொல்லாக டுபாக்கூர் என மருவியது
நாவலுக்குரிய பொருத்தப்பாட்டுடன் உணர்வு ரீதியாக கடத்தாமல், தத்துவார்த்த ரீதியாக, பல்வேறு விஷயங்களை உள்ளடக்கி நல்லதொரு வாசிப்பு அனுபவமாக அமைந்தது
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
Subscribe to:
Posts (Atom)