Sunday, 23 November 2025

மகுடேசுவரன்


இரு சொற்களுக்கிடையே எல்லா இடங்களிலும் வலிமிகுதல் இல்லை. வலிமிகவேண்டிய இடங்களில் தவறுமாயின் பொருள் வேறுபாடு தோன்றிவிடும். சந்திப் பிழைக்கான தலையாய அறியாமை இந்நுணுக்கம் அறியாமல் இருப்பதுதான். 
  
ஒரே சொற்றொடர்தான். அவ்விரு சொற்களுக்கிடையே ஓரிடத்தில் வலிமிகும். ஓரிடத்தில் வலிமிகாது. என்ன காரணம் ? அவ்விரு சொற்களுக்குமிடையே தோன்றும் பொருள் வேறுபாடுதான். அவ்விரு சொற்களும் சொற்றொடராகி அடுத்தடுத்து வருகையில் தாம் உணர்த்த விரும்பும் பொருளுக்கேற்ப வலிமிகுத்தோ மிகாமலோ வரும். சொற்றொடர் அமைப்புகளின் பொருளுணர்ச்சிக்கேற்றவாறு/பொருள் நோக்கத்திற்கேற்றவாறு வலிமிகுவிக்கவேண்டும், அல்லது வலிமிகுவிக்காமல் விடவேண்டும். 

ஒரே சொற்றொடர் அமைப்புக்குள் பொருள் வேறுபாடுகள் தோன்றும் அமைப்புகளை எடுத்துக்காட்டுகளாக எழுதியுள்ளேன், காண்க :-  

இரவு முழுவதும் பெய்த மழையினால் சாலைகளில் நீர் தேக்கம். 
மேட்டூரில் இருப்பது நீர்த்தேக்கம். 
00

கற்ற கலை பொருள் செய்யப் பயன்படவில்லை. 
கலைப்பொருள் செய்து பெரிதாக ஈட்டியவர்கள் பலர். 
00

அவர்களுக்கிடையே இருந்த உறவு சிக்கலாகிவிட்டது. 
உறவுச்சிக்கல் ஏற்படாதபடி வாழப் பார். 
00

இந்தப் பேருந்து பயணத்திற்கு உதவாது. 
பேருந்துப் பயணம் அலுத்துவிட்டது. 
00

உழவர்க்கு உழவு தொழிலாகும்.  
உயிர்காப்பது உழவுத்தொழில். 
00

நீ எடுத்த காட்சி பிழையானது. 
என்னுடைய பார்வையில் காட்சிப்பிழை உண்டோ ?
00

அன்பு தளையாகக்கூடாது. 
அன்புத் தளைக்குள் அகப்பட்டதனால் விடுபட முடியவில்லை. 
00

கிளி பேசும். 
கிளிப்பேச்சு கேட்பதற்கு இனிமை. 
00

மழை காலந்தவறிப் பெய்கிறது. 
மழைக்காலம் வந்துவிட்டது. 
00

வளர்ச்சி தடைபடைக்கூடாது. 
வளர்ச்சித்தடை ஏற்படாமல் பார்த்துக்கொள். 
00

இரு சொற்களுக்கிடையே தோன்றும் இருவகையான பொருட்பயன்பாடுகள் இவை. இவற்றை நினைவிற்கொண்டால் வலிமிகல், மிகாமை குறித்துத் தெளிவடையலாம். 

- கவிஞர் மகுடேசுவரன்

112


#Reading_Marathon2025

#25RM055

Book No:112/150+
Pages:-190

#ஒருஎழுத்தாளர்_12மாதங்கள்_12புத்தகங்கள்

ஆலவாயன்
-பெருமாள்.முருகன்

மாதொரு பாகனின் தொடர்ச்சியாக இந்நாவல் அமைந்துள்ளது.கிராமத்தில்.குழந்தை பேறு இல்லாமல் இருக்கும் தம்பதியாக காளியும் பொன்னாவும் இருக்கின்றனர்.

கதையின் ஆரம்பத்தில் காளி அந்தப் பூவரச மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டான் என்ற முடிவைத் தேர்ந்து..எதனால் அவன் இறந்தான் என அதன் வழியில் பயணிக்கிறது.

காளி இறந்தபின் அவன் மனைவி பொன்னா விற்கு சுற்றி இருக்கும் நபர்களின் பேச்சு மற்றும் காளியின் நினைவுடன் நாவல் துவங்கி செல்கிறது.பொன்னாவின் தாயாரும் மாமியார் மாராயியும் பொன்னாவை கவனித்துக் கொள்கின்றனர். குழந்தை இல்லாத வருத்தத்தில் தற்கொலை செய்து கொண்டான் என ஊரில் பேசுகின்றனர்."கஷ்டம் வரும்போதுதான் யார் யார் நமக்கு இருக்கிறார்கள் என்பது தெரிய வருகிறது. கஷ்டம் ஆதரவைக் காட்டித் தருகிறது. வருடும் கைகளின் இதத்தை உணர்த்துகிறது. சொற்களின் மதிப்பைப் புரிய வைக்கிறது. இடைவெளிகளைக் குறைக்கிறது. வருசக்கணக்காய்ப் பேசாமல் இருந்தவள் பவளாயி. இப்போது அம்மாவிடம்கூடக் கிடைக்காத ஆறுதலை அவளிடம் பெற்றாள் பொன்னா.

ஒரு இறப்பு போகப் போக கதையாகிவிடுகிறது.
கரட்டூர்த் தேர்திருவிழா துவங்குகிறது. 14 நாட்கள் நடைபெறும்.குழந்தை பேறு இல்லாதவர்கள் அத்திருவிழாவில் கலந்து கொள்வர்.இரண்டு ஆண்டுக்கு பின் பொன்னாவும் செல்கிறாள். காளிக்கு இது தெரியாது. அவன் சொன்னதாக சொல்லி அனுப்பிவிடுகின்றனர். பொன்னாவுக்கும் இதில் உடன்பாடு இல்லை.மாமியாரின் வலியுறுத்தலும் வேண்டுதலும் சொல்லப்பட்டிருக்கிறது.

மிக விரும்பிய மனைவி தன்னை ஏமாற்றியதைத் தாள இயலாமல் அவளுக்கு மிகப்பெரிய தண்டனையைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணியே காளி தற்கொலை செய்ய முடிவெடுக்கிறான்.அன்று இரவு இதை அறிந்துதான் காளி தூக்கிலிட்டு தொங்கினான்.
அதிகாலையில் வீட்டுக்கு வரும் மாராயிதான் தன் பிள்ளையை முதலில் பார்த்து பதறுகிறாள்.

இதை அறிந்து அழுதுகொண்டு பொன்னா ஓடிவருகிறாள்.கதை நான் லீனியர் முறையில் இன்றும் அன்றும் என சொல்லப்படுகிறது. கணவனை இழந்து வாடும் பொன்னா சந்திக்கும் நிகழ்வுகள், கிராமத்து மக்களின் நம்பிக்கைகள், அன்றாட செயல்கள் ஆகியவை சொல்லப்படுகிறது.

கணவனின் நினைவாக காட்டில் கத்தரி செடி நடுகிறாள்.கணவன் இழந்தபின் அழுதுகொண்டு இருக்காமல் காட்டு வேலைக்கு செல்கிறாள்.மாமியார் மாராயிக்கு இது ஒரு ஊக்கம் தருகிறது.

பெருமாள் முருகன் கிராமத்தின் வேளாண் முறைகள் மற்றும் விவசாய வேலை பற்றிய நுண்ணிய குறிப்புகளை கொடுத்திருப்பார். அதன் பின் பொன்னா கருவுற்றிருப்பது தெரிகிறது. இந்த சேதி அறிந்தவுடன் மாமியார்.. காளியே தனக்கு வந்து பிறப்பதாக ஊருக்குள் சொல்கிறாள். தவறாய் பேசுவோரை திட்டுகிறாள்.

இடையிடையே குடும்ப உறவுகள் பற்றிய செய்திகளும், பொன்னாவுக்கு ஆதரவாய் இருக்கும் மாராயி,வெங்காயி,நல்லாயின் துணையும் நாவலில் விளக்கப்பட்டிருக்கிறது.பாட்டிகளின் உரையாடலில் கிராமத்து வாழ்வியல்  நமக்கும் தருகிறது.

நாவால் முழுவதும் பெண்ணின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும் பெண்களின் உளவியல் பற்றியும் கூறியுள்ளார். மாதொருபாகனின் அடுத்தடுத்த க்ளைமேக்ஸ் நிகழ்வாக இக்கதை அமைந்திருக்கிறது. நாவலுக்கு வலுசேர்க்கும் விதத்தில் வேலாயின் கிளைக்கதையும் உதவுகிறது.

கிராமத்து மொழிகள் அனைத்தும் பழமொழியும், விடுகதையும்,மூத்தோர் சொல் தத்திவமும் சொல்வது புதுமையாகவும் அழகியலுடனும் இருக்கிறது. உதாரணத்திற்கு

"எல்லாக் கஷ்டங்களையும் பேச்சில் கரைத்துக் கொள்வார்கள்"

"ஆட்டுக்கு வால அளந்து வெச்சிருக்கறான். எருமைக்கு ஏன் நீளமா வெச்சிருக்கிறான்? மல்லையும் சாணியையும் கொழப்பித் தம்மேல தானே அடிச்சிக்கத்தான்' " என சொல்வது நன்று.

ஒவ்வொரு பாகம் முடியும் போது பூவரச மரத்தை குறிப்பிடுவார். அது காளி குறித்த எண்ணத்தையும் நமக்கு சொல்கிறது.
நாவலின் தலைப்புதான் கதைக்கரு. அந்த கதையின் முடிவு கடைசி பத்துப் பக்கம் விரிகிறது.

சர்சைக்குரிய கருத்து இருந்தாலும் நாவலின் எந்த இடத்திலும் முகச்சுழிப்போ, விரசமோ இல்லாமல் இயல்பான கிராமத்து நடையில் உள்ளது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 17 November 2025

111


#Reading_Marathon2025

#25RM055

Book No:111/150+
Pages:-559

தென்புலத்து மன்பாதை
-தொ.பரமசிவன்

கற்றவர்களிடத்தில் பண்பாட்டுத்தளத்தில் இயங்குவதற்கு இயங்குகிறவர்களிடத்தில் தவ பரமசிவன் என்ற பெயர் மிகவும் பிரசித்திமானது சமயங்களின் அரசியலை பெரியாருடைய பார்வையில் பேசியவர் பெரியாரியத்தை நாட்டார் தெய்வங்களோடு இணைத்து விவாதித்தவர் அவருடைய கருத்துக்கள் என்றும் படிப்பவர்களை செழுமை படுத்தும் விதத்தில் எழுதுபவர் நிகழ்காலத்தில் ஒருத்த குரலில் தன்னுடைய கருத்துக்களை சொல்வதில் வலிமை மிக்கவர்.
இந்நூலில் 16 தலைப்புகளில் 84 கட்டுரைகள் அடங்கியுள்ளன

சங்க காலத்தைப் பற்றி சொல்லும்போது" ஒரு காலம் என்பது சமூகத்தில் அதுவரை நிலை பெற்ற கருத்துக்கள் செல்வாக்கிலிருந்து புதிய கருத்துக்கள் தோன்றி வளர்கின்ற கால அளவை குறிக்கும்" என்று கொள்ளலாம். இந்த அளவீட்டின் படி சங்க இலக்கியம் குறித்த மதிப்பீடு மற்றும் சமூக ஆய்வுகள் சங்க இலக்கியத்தில் சாதி அமைப்பின் மூலப்படிவங்கள் பற்றி இதில் கூறியுள்ளார்.

பண்பாடு குறித்த பல்வேறு கட்டுரைகள் இவர் எழுதியிருந்தாலும் இந்த புத்தகத்திலும் பண்பாடு குறித்த கட்டுரைகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது. அது குறித்து மொகஞ்சதாரோ கால ஆய்வுகளில் இருந்து தற்காலத்தில் மனிதர்கள் குளிப்பது நீராடுதல் போன்ற பல்வேறு வகையான பண்பாட்டு நிகழ்வுகளை உதாரணத்துடன் கூறியுள்ளார். மேலும் பெண்கள் அணியும் தாலி கோலம் மாலை பண்பாட்டின் வாழ்வியல் போன்ற தலைப்புகளில் பண்டைய மனிதர்கள் கால வழக்கில் இருந்த சடங்குகள் சம்பிரதாயங்கள் எவ்வாறு தோன்றி இருக்கின்றன உருமாறி இருக்கின்றன என்பது பற்றி விரிவாக அலசி இருப்பார். 

பொதுவாக கோலமிடுவது இன்றும் வழக்கத்தில் உள்ள நடைமுறையாகும். தெய்வங்கள் கால் பதிப்பதற்காக போடப்படும் ஆசனங்கள் தான் கோலம். மண்ணில் அதைத்தான் போடுகிறார்கள். வீட்டுக்கு வரும் தெய்வம் அதிலே தான் கால் பதித்து வீட்டுக்குள் வருகிறது என்பது நம்பிக்கை. அதில் கலையின் அம்சமாக புள்ளிகளும் வளைகோடுகளும் இருக்கிறது.

தமிழ் நாட்டின்  வரலாறு, மக்கள் பண்பாட்டு நினைவுகள், நம்பிக்கைகள், சடங்குகள், புராணங்கள்—இவை அனைத்தையும் ஆழமாக ஆராய்ந்து நமக்கு ஒவ்வொரு அத்தியாயத்திலும் சங்க இலக்கிய பாடல்கள் எடுத்துக்காட்டுகளுடனும் இதில் விளக்கியுள்ளார். கிராமியத்தின் வாழ்வியலில் இருந்து  கிடைக்கும் பண்பாட்டு உணர்வையும் சமூகச் சிந்தனையையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது

 தமிழிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொற்களில் ஒன்று (COOLIE) கூலி என்பதாகும். ஆக்ஸ்போர்டு அகராதி இந்தச் சொல்லிற்கு 'இந்திய, சீனத் தொழிலாளி' என்று பொருள் கொள்கின்றது. இந்தச் சொல் வழக்கு ஆங்கிலேயர்களால் இழிவாக வழங்கப்பட்டதுண்டு.

இந்தச் சொல்லின் வேர்ச்சொல் 'கூலம்' எனபதாகும். இதற்குத் 'தானியம்' என்பது பொருள். செய்கின்ற வேலைக்கு அன்றன்று தானியங்களை (கூலத்தை )ப் பெறுபவர் கூலியாவார்.கூலி என்ற சொல்லிற்கு மாற்றாக ஊதியம், சம்பளம் ஆகிய சொற்கள் பிற்காலத்தில் வழங்கப்பட்டன. சம்பளம் என்பது, சம்பா நெல்லும் அளத்து உப்பும், உழைப்புக்குப் பதிலாகப் பெற்றதைக் குறிக்கும் சொல்லாகும். பணப் பொருளாதாரம் பெரிதாக இல்லாமல் பண்டமாற்றுப் பொருளதாரம் நிலவிய வேளாண் சமூகக் காலத்தில் ஏழைத் தொழிலாளர் பெற்றதே 'கூலி'யாகும். பிற்காலத்தில் கூலி வேலை செய்யும் ஏழை மக்களைக் - குறிக்கவும் 'கூலி' என்ற சொல் பயன்பட்டது என்னும் வரலாற்று ஆய்வை நமக்கு எளிமையாக விளக்குகிறார்.

சோறு என்றவுடன் நமக்கு இன்று  அரிசி சோறு மட்டும் புழக்கத்தில் உள்ளது. ஆனால் புஞ்சை நிலத்தில் வாழும் மக்கள் கம்பு சோளம் குதிரைவாலி ஆகிய தானியங்களையும் சோறு என்று அழைத்தனர். அரிசி என்னும் சொல்லும் நெல் அரிசி மட்டுமல்லாது அவித்து உண்ணும் சிறிய தானியங்கள் அனைத்தையும் குறிக்கும். அரியென்னும் வேர் சொல்லுக்கு சிறிய என்பது பொருள். அரி மணல் அரி நெல்லிக்காய் போன்று வெள்ளைப்பூண்டின் சிறிய கீற்றுகளையும் வெள்ளை பூண்டு அரிசி அன்று பெண்கள் கூறும் வழக்கம் உண்டு என்று கூறுகிறார்.

அண்மை காலங்களில் பெரியாரையும் பெரியாரையும் பற்றி பேசும்போது நாட்டார் தெய்வங்களை கொண்டாட முடிகின்றது அந்த கேள்வியை ஒருபுறம் சிந்தனை உணர்வோடு மறுபுறம் கேலியாகவும் கேட்கப்படுகிறது நான் எண்ணிப் பார்க்கிறோம் அதற்கான விடையை பெரியாரியலும் நாட்டார் தெய்வங்களும் என்னும் கட்டுரையில் விரிவாக இது பற்றி கூறியுள்ளார்.

இந்த புத்தகத்தின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் துறை சார்ந்து பகுக்கப்பட்டுள்ளது. கேள்வி பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கருத்தாழமிக்க தரவுகளை எப்போதும் நம்முடன் தொ.ப‌ விவரிப்பார். 

சூழலியல் கட்டுரைகளின் சிலப்பதிகாரத்தில் இருந்து பல்வேறு தாவரங்களின் பெயர்களை குறிப்பிட்டு இருப்பது புத்தகங்களில் விரிவாக எடுத்துக் காட்டியுள்ளனர். ஒட்டுமொத்தமாக இந்த புத்தகம் மொழி, பண்பாடு, மானுடவியல், விளிம்பு நிலை மக்கள், வழக்காறுகள், நாட்டார் தெய்வங்கள், பெரியார் என்னும் தளத்தில் வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் பொது அறிவு தகவல்கள் பலவற்றை தாங்கியும் அமைந்துள்ளது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 5 November 2025

அமலன் ஸ்டான்லி


மனத்தை அசைவின்றி வைக்க முனைகையில் கண்களை மூட வேண்டியிருப்பதற்குக் காரணமுண்டு. புலன்வழி நீளும் இவ்வுடலின் மூலமே மனத்திற்கு அமைதியைக் கற்பிக்க இயலும். புலன்வழி மனத்தைத் திசை திருப்புவதற்கு நிறைய சாத்தியமுண்டு, குறிப்பாக பார்வையின் வழியே என்பதால் கண்கள் மூடப்படுகின்றன. பின்னர் சுவாசத்தோடு தொடர்பற்ற எவ்வோர் எண்ணமெழுந்தாலும் அதைப் பற்றிய சிந்தனையைத் தவிர்க்க வேண்டும். அவ்விதிமுறையின் படி தொடர்ந்து தியானம் பயின்று வந்தால் இறுதியில் மனம் அமைதியுறும்.

உதாரணத்திற்கு, ஒரு குளிர்சாதனப் பெட்டியின் கதவு எப்போதும் மூடியே இருக்க வேண்டும். அடிக்கடி திறந்தும் மூடியும் வந்தால் அப்பெட்டி கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பொருட்களும் தேவையானபடி குளிரூட்டப்படாது போகும். ஆற்றலும் விரயமாகும். குளிரூட்டிப் பாதுகாக்க வேண்டியவற்றையோ, சூடேற்ற வேண்டிய பொருட்களையோ எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பதே விதிமுறை. 

ஒரு மணி நேரத்திற்கான தியானப் பயிற்சியின் விதிமுறைகளை மிகத் தெளிவாக வகுக்க வேண்டும். ஏதேனும் முக்கியமாகச் சிந்திக்கும் தேவையிருந்தால் அதைக் கடைசி ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கலாம். அல்லது பயிற்சிக்கு முன்னரே சிந்தித்து முடிக்கலாம். ஆனால் பயிற்சியின்போது அச்சிந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு, துல்லியமாக சுவாசத்தை உற்றறிய வேண்டும்.  

தியானத்தை முடிக்கையில்தான் பிரச்சினையும் கூடவே எழும். அப்போது விதிமுறைகள் மாறுகின்றன. அன்றாட செயல்பாடுகள் தியானப் பயிற்சிக்கு அப்பாற்பட்டவை. எனவே அன்றாடங்களில் நம்மைப் பற்றி அவ்வளவு கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கதவு திறந்த நிலையிலேயே பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், நிறைய குளிராற்றலை உருவாக்க வேண்டும். அதாவது தியானத்திலிருந்து வெளியேறுகையில் மன அமைதிக்கான விதிமுறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் என்பதே உண்மை. 

~ தனிசாரோ பிக்கு
"மூடாக் கதவு தியானம்" உரையிலிருந்து

Monday, 3 November 2025

190


#கற்கை_நன்றே_190

நாமாக கற்ற, அனுபவித்த ஒன்று, மற்றவர்களின் அனுபவத்தைவிட மிகவும் ஆழமானதாக நாம் உணர்கிறோம்.இதனை வைத்தே சில அனுமானங்களுடன் வாழ்கிறோம். இதனை அவ்வப்போது நாமே திருத்திக் கொள்வதை Re learn என்கிறோம்.

மனிதனுக்கு, நான் தான் பெரியவன் என்னும் எண்ணம் எப்போதும் உண்டு. மனித இனம் ஒரு narcissist! இந்த human narcissism னால் விளைந்தது தான் மதம். மதம் எப்போதும் இந்த human narcissism க்கு தூபம் போட்டுக் கொண்டே இருக்கும்.

நீ தான் பெரியவன், உனக்காக தான் இந்த உலகமே படைக்கப்பட்டது, கடவுள் தன் சாயலில் உன்னை படைத்து இருக்கிறார், அவருக்கு பிடித்தமானவன் நீ தான், நீ வேண்டிகிட்டா பூகம்பம் வரும், அல்லது வந்துகிட்டு இருக்கிற புயல் நின்னுடும் என்றெல்லாம் மதம் human narcissism ஐ வளர்க்கிறது.

ஆனா அறிவியல் என்ன பண்ணுது? தன்னுடைய கண்டுபிடிப்புகளால் மனிதன் முகத்திலேயே அறைகிறது. இப்படி மனிதனின் ego மேல் ஒரே போடாக போட்ட 3 விஷயங்களை Freud, "three blows to human narcissism at the hand of science" என்கிறார்.

1. முதல் அடி, பூமியை சுற்றி தான் சூரியன் சந்திரன் எல்லாம் சுற்றுகிறது. நாம் தான் இந்த அண்டத்தின் மையம் என்ற ego வை பிய்த்து எறிந்தது Copernican Revolution. cosmological blow!

2. இரண்டாவது, கடவுளின் சாயலில் நாம் அப்படியே மனிதனாகவே உருவமெடுத்தோம் என்ற நினைப்பில் வெந்நீரை ஊற்றியது Darwin னின் பரிணாம கொள்கை. Darwinian Revolution. மனிதனும் ஒரு விலங்கே என்றது biological blow!

3. Freudian Revolution, நம்முடைய செயல்கள் எல்லாம், நம்முடைய thinking எல்லாம், நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது என்று நாம் நினைத்து கொண்டு இருக்கிறோம். அதுதான் இல்லை. conscious mind வேறு unconscious mind வேறு. "The ego is not master in its own house."

உங்கள் ஆழ் மனதில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் id தான் உங்களை ஆட்டுவிக்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் அவரின்றி ஒரு அணுவும் அசையாது என்று உங்கள் conscious mind சொன்னால் அதன் பின்னணியில் எதிர்காலத்தை பற்றிய பயமும், insecurity, unknown கிட்ட இருந்து தன்னை தானே தற்காத்து கொள்ள உங்கள் மூளை செய்யும் defense போன்ற unconscious mind இன் செயல்கள் தான் காரணம் என்கிறார்
சிக்மண்ட் ப்ராய்ட். இது psychological blow!

-நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

எல்லாவற்றையும் அறிந்துகொள்வது உண்மையான ஞானம் அல்ல. உன் வாழ்க்கைக்கு எது மிகவும் அவசியமானது, எது குறைந்தளவு அவசியமானது, எது முற்றிலும் அவசியமற்றது என்பதை அறிவதே ஞானம். - டால்ஸ்டாய்