மனத்தை அசைவின்றி வைக்க முனைகையில் கண்களை மூட வேண்டியிருப்பதற்குக் காரணமுண்டு. புலன்வழி நீளும் இவ்வுடலின் மூலமே மனத்திற்கு அமைதியைக் கற்பிக்க இயலும். புலன்வழி மனத்தைத் திசை திருப்புவதற்கு நிறைய சாத்தியமுண்டு, குறிப்பாக பார்வையின் வழியே என்பதால் கண்கள் மூடப்படுகின்றன. பின்னர் சுவாசத்தோடு தொடர்பற்ற எவ்வோர் எண்ணமெழுந்தாலும் அதைப் பற்றிய சிந்தனையைத் தவிர்க்க வேண்டும். அவ்விதிமுறையின் படி தொடர்ந்து தியானம் பயின்று வந்தால் இறுதியில் மனம் அமைதியுறும்.
உதாரணத்திற்கு, ஒரு குளிர்சாதனப் பெட்டியின் கதவு எப்போதும் மூடியே இருக்க வேண்டும். அடிக்கடி திறந்தும் மூடியும் வந்தால் அப்பெட்டி கூடுதலாக உழைக்க வேண்டி வரும். பொருட்களும் தேவையானபடி குளிரூட்டப்படாது போகும். ஆற்றலும் விரயமாகும். குளிரூட்டிப் பாதுகாக்க வேண்டியவற்றையோ, சூடேற்ற வேண்டிய பொருட்களையோ எப்போதும் மூடியே வைத்திருக்க வேண்டும் என்பதே விதிமுறை.
ஒரு மணி நேரத்திற்கான தியானப் பயிற்சியின் விதிமுறைகளை மிகத் தெளிவாக வகுக்க வேண்டும். ஏதேனும் முக்கியமாகச் சிந்திக்கும் தேவையிருந்தால் அதைக் கடைசி ஐந்து, பத்து நிமிடங்களுக்கு ஒதுக்கி வைக்கலாம். அல்லது பயிற்சிக்கு முன்னரே சிந்தித்து முடிக்கலாம். ஆனால் பயிற்சியின்போது அச்சிந்தையை ஒதுக்கி வைத்துவிட்டு, துல்லியமாக சுவாசத்தை உற்றறிய வேண்டும்.
தியானத்தை முடிக்கையில்தான் பிரச்சினையும் கூடவே எழும். அப்போது விதிமுறைகள் மாறுகின்றன. அன்றாட செயல்பாடுகள் தியானப் பயிற்சிக்கு அப்பாற்பட்டவை. எனவே அன்றாடங்களில் நம்மைப் பற்றி அவ்வளவு கண்டிப்பாக இருக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறோம். ஆனால் மீண்டும் குளிர்சாதனப் பெட்டியைப் பற்றி யோசித்துப் பாருங்கள். கதவு திறந்த நிலையிலேயே பொருட்களைப் பாதுகாக்க முயற்சி செய்கிறீர்கள் என்றால், நிறைய குளிராற்றலை உருவாக்க வேண்டும். அதாவது தியானத்திலிருந்து வெளியேறுகையில் மன அமைதிக்கான விதிமுறைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும் என்பதே உண்மை.
~ தனிசாரோ பிக்கு
"மூடாக் கதவு தியானம்" உரையிலிருந்து
No comments:
Post a Comment