தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை-2025
-மணிகண்டபிரபு
2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமைக்கப்பட்ட தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை குழு இன்று இன்று தங்கள் அறிக்கையை வெளியிட்டுள்ளது. மாநில கல்விக் கொள்கையை வெளியிட்ட முதல் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது இதனை இந்த ஆண்டு செயல்படுத்த முடிவு செய்துள்ளது.ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு அளித்த அறிக்கையின் படி கல்விக்கொள்கை, உயர்கல்வி, பள்ளிக்கல்வி என தனித்தனியாக பிரிக்கப்பட்டது. அதில், பள்ளிக் கல்விக்கான மாநில கல்விக் கொள்கை இன்று வெளியிடப்பட்டு உள்ளது
10 தலைப்புகளில் 83 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
இன்றைய கல்விச் சூழலில் கொரோனாவுக்கு பிந்தைய கற்றல் இடைவெளிகள் மற்றும் எதிர்காலத்துக்கு தயார்படுத்தும் திறன்களின் தேவைகள் போன்ற புதிய சவால்களை கருத்தில் கொண்டு இக் கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது
ஒவ்வொரு இயலிலும் தமிழக பள்ளிக்கல்வி யின் தற்போதைய நிலை.. எதிர்காலத்துக்கு தேவைப்படும் திட்டங்கள் நோக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறி அதற்கான தீர்வுகளையும் கூறுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் தனித்திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில் சமச்சீரானா நிலைத்தன்மை உடைய எதிர்கால கல்வி முறைக்கான பள்ளிக் கல்வியை உருவாக்குவதற்கான நோக்கம் இலக்காக கொண்டுள்ளது.
மாநில கல்விக் கொள்கைக்கான தேவையையும் வலியுறுத்துகிறது.
எதிர்காலத்தில் டிஜிட்டல் என்பது அவசியமாய் இருக்கிறது. அனைவருக்குமான சமமான தொழில்நுட்ப வாய்ப்புகளை உறுதி செய்வது உடனடி தேவையாக கூறுகிறது.
தற்போது பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் காலை உணவு மற்றும் தமிழக அரசு வழங்கக்கூடிய இலவச நலத்திட்டங்கள், தற்போது அமலில் இருக்கும் கற்பித்தல் முறைகள் மதிப்பீட்டு முறைகள் மன்ற செயல்பாடுகள் மதிப்பீட்டு தேர்வு முறைகள் பற்றிய விவரங்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு இயலிலும் உள்ள பிரச்சனைகளை முன்வைத்து அதற்கான தீர்வுகளையும் கொடுத்துள்ளது.
2024 இன் படி பள்ளிக்கல்வித்துறை 58,800க்கும் மேற்பட்ட பள்ளிகளையும் 1.16 கோடி மாணவர்களையும் 3 லட்சம் ஆசிரியர்களையும் கொண்டுள்ளது.
*பெண் கல்வியில் பின்தங்கிய மற்றும் பாலின இடைவெளி அதிகம் உள்ள வட்டாரங்கள் அடையாளம் காணப்பட்டு கூடுதல் உள்கட்டமைப்பு, பெண் குழந்தைகளுக்கான சிறப்பு கல்வி உதவித்தொகை போன்ற இவ் வட்டாரங்களின் மேம்பாட்டுக்கான கவனம் செலுத்தும் விதமாக எதிர்கால கல்விக் கொள்கை முன்னெடுப்புகளுக்கு முன்னுரிமை தரப்படும்.
*சில குறிப்பிட்ட மாவட்டங்களில் உள்ள பட்டியலினத்தவர் பழங்குடியினர் சிறுபான்மையினர் ஆகியோரிடம் காணப்படும் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் இடைநிற்றல் விகிதம் ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன.
முதல் தலைமுறை கற்போர், கற்றல் இடைவெளி சார்ந்த பிரச்சனைகளை கவனம் ஈர்க்கும் அறைகூவல்களாக கூறியுள்ளது.
*தற்போது ஒன்பது முதல் 12 ஆம் வகுப்பு வரை தொழில் வழிகாட்டுதல் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இது மேலும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விரிவு படுத்தப்படும்.
*பெற்றோர் ,கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமுதாய உறுப்பினர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு(BLN) இயக்கத்தில் ஆர்வத்துடன் ஈடுபடுத்தப்படுவார்கள் வாசிப்பு இயக்கங்கள் வீட்டுக் கற்றலுக்கான உபகரணங்கள் மற்றும் தாய்மொழியில் உரையாடுவதற்குரிய தொடர்பு சாதனங்கள் தயாரிக்கப்படும்.
*அடிப்படை எழுத்தறிவும் எண்ணறிவும் இணைந்த கலைத்திட்டம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் பிற்காலத்தில் பல்வேறு பாடம் சார்ந்த கற்றலுக்கு அடித்தளம் அமைக்கலாம்
*3,5&8 ஆம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான அடைவாய்வுகளை SLAS தமிழ்நாடு அரசு நடத்த உள்ளது. இதன் மூலம் பாடப் பொருளை புரிந்து கொள்ளுதல் புதிய சூழ்நிலைகளில் பயன்படுத்துதல் ஆகிய திறன்களை மதிப்பிடும் வகையில் உயர்நிலை வினாக்கள் கேட்கப்படும்.
*இருமொழிக் கொள்கை பின்பற்றப்படும். மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்யப்படும். கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துகிறது.
*அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு திட்டத்தின் விளைவுகளை மதிப்பிடவும் மாற்றங்களை பரிந்துரைக்கவும் மூன்றாண்டுக்கு ஒரு முறை மூன்றாம் நபர் மதிப்பீடு மேற்கொள்ளப்படும்.
*அடிப்படை நிலை, நடுநிலை, இடைநிலை ,மேல்நிலை என 5+3+2+2 நிலை அடிப்படையிலான கலைத்திட்ட வடிவமைப்பு
*மேல்நிலைப் பள்ளிகளில் தொழில் கல்வியை வலுப்படுத்தல், தொழில்நுட்ப ஆய்வகங்களில் மேம்பட்ட செய்முறை பயிற்சி, இடைநிலை வகுப்புகளுக்கு உயர் கல்வி வழிகாட்டி கட்டகங்களை அறிமுகப்படுத்துதல் ,தொழில் கல்வி இணைப்புகளை ஊக்குவித்தல் போன்றவற்றை வலுப்படுத்துதல் வேண்டும் என பரிந்துரைக்கிறது.
*இருமொழிக் கொள்கை, தொடக்கநிலை முதல் மேல்நிலை வகுப்புகள் வரை குறைந்தபட்சம் ஒரு வாரத்துக்கு இரண்டு உடற்கல்வி பாட வேலைகள் இருப்பதை கட்டாயமாக்குதல்.
*விளையாட்டு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் உடற்கல்வி SCERT பாடத்திட்டத்தின் அடிப்படையில் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு கருவிகளுக்கென தனியே நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்
*பள்ளியினுள் பள்ளிகளுக்கு இடையே வட்டார மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளை நடத்துதல். பள்ளிக்கல்வியின் அனைத்து நிலைகளிலும் கலைக்கல்வியை கட்டாயமாக்குதல்.
*அங்கன்வாடி மற்றும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு உடல் இயக்க வளர்ச்சியை கற்பித்தல் முறை மற்றும் குழந்தை மைய கற்பித்தல் உத்திகள் சார்ந்து பயிற்சி அளித்தல்.
*புதிதாக பாடத்தை உருவாக்குவதற்கு பதிலாக தற்போது நடைமுறையில் உள்ள பாடகட்டமைப்புக்குள் ஸ்டெம் STEAM கருத்துக்களை ஒருங்கிணைத்தல்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு பருவத்திற்கும் பல்வேறு பாடங்கள் சார்ந்த ஸ்டெம் செயல் திட்டத்தினை கட்டாயமாக்குதல்
*எண்ம உள் கட்டமைப்பில் 100% இலக்கை அடைவதற்கு பள்ளிகளில் இணைய வசதிகளை விரிவாக்குதல். வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மாணவர்களுக்கு மானிய விலையில் மின்னணு கருவிகளை வழங்குதல்.
*பசுமை பள்ளி என்னும் தரநிலை உருவாக்கப்பட வேண்டும். அதில் மழை நீர் சேகரித்தல் ,சூரிய சக்தி பயன்பாடு, புல்வெளி பராமரித்தல் மற்றும் நீர் மறுசுழற்சி போன்ற அளவுகோல்களின் அடிப்படையில் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டுதோறும் மதிப்பீடு செய்யப்பட வேண்டும்.
கட்டாய காலநிலை பாடத்திட்டம் 1 முதல் 5 ,6 முதல் 8 ,9 முதல் 12 வகுப்புகளுக்கு உருவாக்குதல்
*TN-SPARK இணையவள கருவிசார் கல்வி திட்டத்தினை பொருத்தமான வகுப்புகளுக்கு விரிவுபடுத்துதல்.
மனப்பாட முறைகளிலிருந்து புதிய சூழல்களில் பெற்ற அறிவினை பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மதிப்பீட்டு முறைக்கு மாறுதல்
*ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை தேக்கமின்மை கொள்கையை நடைமுறை ப்படுத்தி வருவதால் தேர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கொண்ட தேர்வு முறையிலிருந்து விலகி, தொடர்ச்சியாக மாணவர்களுக்கு உதவும் வகையில் திறன் அடிப்படையில் வலியுறுத்துகிறது.
*ஆசிரியர்கள் ஆங்கிலம் பேசுதல் எழுதுதல் மற்றும் கற்பித்தல் திறன்களை வலுப்படுத்துவதற்கு ஒரு கட்டமைக்கப்பட்ட தொடர் ஆசிரியர் திறன் மேம்பாட்டு திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி விரிவு படுத்தப்படும்.
*எண்ம வள வங்கிகள் உருவாக்கப்பட்டு புதுமையான மாதிரிகளை வழங்க ஆசிரியர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
*குழந்தைகள் நல மேம்பாடு பகுதிகளில் போக்சோ நடைமுறை குறித்த விழிப்புணர்வு, மாணவர் மனநலன் மனவளர்ச்சி நல மேம்பாடு, கட்டணம் இல்லாத உதவி தொடர்பு எண்கள், இணையதளங்கள், தொடர் நல ஆய்வ ஆகியவை எளிதில் தொடர்பு கொள்ளும் வகையில் வழிமுறைகள் உருவாக்கப்படும்.
*சிறுவர் சிறுமிகளுக்கான தனித்தனியான பயன்படுத்தத்தக்க கழிவறைகள், குடிநீர், மின்விசிறி, மின் விளக்குகள் விளையாட்டு உட்கட்டமைப்பு, அறிவியல் ஆய்வகங்கள் போன்ற இன்றியமையாத பள்ளி வசதிகள் அடுத்த 3 ஆண்டுகளில் 100% அனைத்து பள்ளிகளிலும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
*நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி,
முன்னாள் மாணவர் ஈடுபாடு- விழுதுகள், பள்ளி மேலாண்மை குழுக்களை வலுப்படுத்துதல், பள்ளி மேம்பாட்டு முன்னெடுப்புகளை வளர்த்தல் சமுதாய பங்கேற்பு ஆகியவற்றை நோக்கமாக கொண்டுள்ளது.
தோழமையுடன் மணிகண்ட பிரபு