Wednesday, 29 April 2026

அலெக்ஸாண்டர் கிரகாம்பெல் போன் கண்டுபிடித்த போது ஒரு விழாவின் சொன்னது..பேசும் யந்திரத்தை நான் ஒன்றும் கண்டுபிடித்து விடவில்லை... அதைக் கடவுளே கண்டுபிடித்து விட்டார். நான் கண்டுபிடித்தது என்னவென்றால் பேசும்போது பாதியில் நிறுத்திவிடக் கூடிய ஒரு யந்திரத்தை.... அவ்வளவுதான்."

லஷிமி சரவணக்குமார்


'எல்லாருக்கும் ஆச கனவு லட்சியம் எல்லாம் இருக்கும். 

ஆனா அப்பிடி ஆசப்படற விஷயத்துக்காக கடைசி வர வெய்ட் பண்ணி தன்னோட இலக்க அடையறது ஆயிரத்துல ஒருத்தர் தான். 

அதுக்காக மிச்ச 999 பேர் திறமையில்லாதவங்கன்னு இல்ல.... ஜெயிச்ச ஒருத்தர் கிட்ட இருக்க ஏதோவொன்னு இவங்க கிட்ட இல்லாம இருந்திருக்கும். பணம், பழக்கவழக்கம், சின்ன சின்ன ஏமாத்து வேலைகள், தந்திரங்கள்... எல்லாம் சேந்துதான் வெற்றியும் அமையுது. 

பொறுமையா காத்திருந்தா என்னிக்காச்சும் ஒருநாள் அதுக்கான பலன் கண்டிப்பா கெடைக்கும்னு பொதுவா சொல்லுவாங்க.... அப்பிடி பொறுமையா காத்திருக்க சூழல் எல்லாருக்கும் அமையறதில்ல. 

இன்னிக்கி என் பசிக்கு சோறுபோட என் கலையால முடியலன்னா, அந்த பசிய ஒரு தனிநபர் தாங்கிக்கலாம், புறக்கணிப்ப சிரிச்சிக்கிட்டே கடந்துடலாம். ஆனா அவன் குடும்பம்??? பொறுமையா காத்திருக்க முடியாத குடும்பச் சூழல்ல பொறந்த ஒருத்தனோட கனவையெல்லாம் இந்த உலகம் ஒரு பொருட்டா நினைக்கிறதில்ல. 

பல பேர் இந்த போராட்டத்துல சோர்ந்துபோய் வேற வேலைக்குப் போயிடறான். சில பேர் வெளியே வரவே முடியாத ஒரு சுழலுக்குள்ள சிக்கி காணாமப் போயிடறான். இங்க ஒவ்வொரு துறைலயும் ஜெயிச்சவன விட கடைசி வர போராடி எதுமே செய்யமுடியாத ஏக்கத்தோட காணாமப் போனவனுங்களுக்குப் பின்னால லட்சம் கதை இருக்கு. 

அதக் கேக்கறதுக்கு எந்தக் காதுகளும் இல்ல. 

எல்லாருக்குமே ஜெயிச்சவனோட கதைகள் தான் தேவையா இருக்கு... 

உங்க பக்கத்துலயே  ஒருத்தன் அவனோட லட்சியத்துல தோத்துட்டு சாதாரணமான ஒரு வாழ்க்கைய வாழ்ந்துட்டு இருக்கலாம். 

எப்பவாச்சும் உங்ககிட்ட ஏதாச்சும் பேசனும்னு வந்தா ரெண்டு நிமிசம் அவனுக்காக ஒதுக்குங்க.

ஜெயிக்காதவன் கிட்ட நீங்க காட்ற உதாசீனம் தான் உலகத்திலயே மிகப்பெரிய வன்முறை.'

-   Lakshmi Saravanakumar

Sunday, 19 April 2026

சிறுமி


அந்தச் சிறுமி இதற்குமுன் ரயிலில் வந்ததே இல்லையென்பதால், ரயில் டிக்கெட்டை இறுக்கமாகப் பிடித்திருந்தாள். விலைமதிப்பற்ற அந்த டிக்கெட்டைத் தருவதற்குத் தயங்கினாள்.

"நானே இத வச்சுக்கலாமா?" என அச்சிறுமி டிக்கெட் பரிசோதகரிடம் கேட்டாள்.

"இல்ல, முடியாது" என்று சொல்லிக்கொண்டே டிக்கெட்டை அவளிடமிருந்து அவர் பறித்துக்கொண்டார்.

டிக்கெட்டுகளால் நிரம்பியிருந்த அவருடைய பெட்டியைக் காண்பித்து, "இதெல்லாம் உங்க டிக்கெட்டா?" என்றாள்.

"இல்ல... ரயில்வே ஸ்டேஷனுக்குச் சொந்தமானது" என்றார்.

அந்தப் பெட்டியை பேராசையுடன் உற்றுப்பார்த்தபடி தொடர்ந்து சொன்னாள், "நான் பெரியவள் ஆனதும், ரயில் டிக்கெட் விக்கப்போறேன்..."

டிக்கெட் பரிசோதகர் முதல்முறையாக அவள்மேல் ஒரு கணம் பார்வையை பதித்தார். " என் சின்னப்பையனும் ஸ்டேஷன்ல வேலை செய்யதான் ஆசப்படுறான். அதனால நீங்க ரெண்டு பேருமே சேர்ந்து வேலை செய்யலாம்" எனச்சொல்லி மெதுவாகச் சிரித்தார்.

அச்சிறுமி ஒருபக்கமாக சாய்ந்து அவரைப் பார்த்து, "ஹூம்... நான் இப்ப ஸ்கூலுக்குப் போய்ட்டு இருக்கிறதால பிசியா இருக்கேன். இருந்தாலும் நீங்க சொன்னதப்பத்தி யோசிக்கிறேன்" எனக்கூறிவிட்டு, அவளுடைய அம்மா தனக்காகக் காத்திருக்கும் இடத்திற்கு, "நான் ஒரு டிக்கெட் விக்குறவரா ஆகப்போறேன்" என கத்திக்கொண்டே ஓடினாள்.

- 'டோட்டோ-சான் ஜன்னலில் ஒரு சிறுமி' புத்தகத்திலிருந்து...

அலைவுகள் - இதுதான் குழந்தமையின் உயிரியக்கம். அதுவா இதுவா என்ற தேர்ந்தெடுப்பில் நிலைகொள்ளா நிலை. மனித சாராம்சத்தை சந்திக்கும் ஒவ்வொரு குழந்தையும் தான் அதுவாகவே ஆகிப்போய்விட வேண்டுமென எண்ணத்தை வளர்க்கிறது. பூமியிலுள்ள விறுவிறுப்புகள் எல்லாம் குழந்தைகளுக்காகப் படைக்கப்பட்டவை. உண்மையில் சொல்லப்போனால் 'தான் எதுவாக ஆகவேண்டும் என்ற இரகசியத்தை' ஒரு குழந்தைக்கு எது திறந்தளிக்கிறதோ அதுவே காலக்கல்வி. உலகில் எல்லா நல்லவைகளையும் அனுபவப்படுத்த ஒரு குழந்தைக்கு முழு உரிமையுள்ளது.

Tuesday, 14 April 2026

25


#Reading_Marathon2026

#26RM009

Book No:25/150+
Pages:-144

கண்ணாட்டி
-ஷான் கருப்பசாமி

ஷானின் எழுத்துகள் வசீகரமானவை. தான் சொல்ல வந்த கருத்துகளை இயல்பான மொழி நடையில் சொல்லுவார். கவிதையாகட்டும் கட்டுரையாகட்டும் எந்த வித பூடகமும் இல்லாமல் எளிமையாய் இருக்கும். சமூகத்தில் பல்வேறு தளங்களில் இயங்குபவர்கள் குறித்த எதார்த்தமான கதைகள்.இதில் சொல்லப்பட்டிருக்கிறது.

மாமா கதை உறவு சார் கதை அல்ல. மேட்ச் மேக்கர் எனும் ஏ.ஐ செயலியின் சுருக்கம் தான். எதிர்காலத்தில் ஒருவருடன் இணைந்து வாழ பொருத்தம் பார்த்து சொல்லும்.ஷானின் வார்த்தையில் சொன்னால் இன்னார் நம் வாழ்வில் வருவது விளங்குமா இல்லையா என்று சொல்லும்.கதைக்களமே வித்தியாசமா எதிர்காலத்தில் நடக்கும் படி இருக்கும். 108 வயதான தனது தாத்தாவுடன் உரையாடும் முனீத்தின் கண்ணில் அழகி படுகிறாள்.உனக்கு அவள் பொருந்தமாட்டாள் என மாமா சொல்லியும் புனீத் விஞ்ஞானத்துகூட
வீம்பா விளையாட நினைப்பது கதை

சுவாரஸ்யமாய் சொல்லப்பட்டிருக்கிறது. அழகி ஒரு இடத்தில் ரொம்ப ப்ராக்டிகலாக

/ஒரே மாதிரியான விருப்பங்கள் இருப்பதே கூட நீண்டகால அடிப்படையில் சலிப்பை உருவாக்கும்/ என சொல்வதும்
மாமாவின் ஒரு அறிவுரையாக

/உணர்வு ஒரு பனிமூட்டம். அதைத் தாண்டி உங்களால் பார்க்க முடியாது/ என்று சொல்வதும் கதை ஓட்டத்துக்கு பொருந்துகிறது.

இந்த நூலின் தலைப்பு கண்ணாட்டி என்பது அன்பானவர்களைக் குறிக்கும் சொல்லாகும்.பள்ளியின் முதல்வராய் இருக்கும் ராதிகா செல்லும் காரில் தவறி விழப்போகும் பாட்டியை காப்பாற்றுகிறார். அதன் பின் அன்பாய் ராதிகா பேசுவது பாட்டிக்கும், பாட்டியின் வெள்ளந்தி பேச்சு ராதிகாவுக்கும் பிடித்துப் போக அதன்பின் நடைபெறும் அன்பான நட்பின் உரையாடல் தான் கதை. கதையின் பாட்டியின் மூக்குக் கண்ணாடி முக்கிய கதை மாந்தராகவே வருகிறது. ஓட்டுநர் அன்வர், டீக்கடை ஆறுமுகம் போன்றோர் கதை ஓட்டத்துக்கு உதவுகின்றனர்./ராதிகா பேசும்போது பாட்டி அவள் முகத்தையே தாகம் தீர அள்ளி விழுங்கிக் கொள்வதி போல் பார்ப்பது, பிறகு போதும் என்பது போல அந்த இமைகள் மெல்ல மூடுவது நல்ல காட்சியமைப்பு/
பரணி சில்க்ஸ் மஞ்சப்பை அன்பின் குறியீடாக வெளிப்பாடாக நம்மையும் எதிர்பார்க்க வைக்கிறது.

அப்பாவின் எல்லா கனவுகளையும் பிள்ளைகளால் நிறைவேற்ற முடியுமா என்ன?ஆனால் ஒரு சில கலைஞர்கள் அவ்வாறு நினைப்பார்கள்.அப்படித்தான் புல்லாங்குழல் வாசிக்கும் சடகோபனும் தன் பிள்ளை வேணுகோபாலை சிறு வயதில் இருந்தே தயார் படுத்துகிறார். ஆனால் வேணுவோ பணி நிமித்தமாக, காதல் காரணமாக மும்பை செல்கிறார்.அப்பாவுக்கு உடல் நிலை சரியில்லாதா சூழலில் வேணு அப்பாவிடம் வருகிறார். அதன் பின் என்ன ஆனது என்பது கதை.இறுதிக்காட்சி உணர்வு பூர்வமாய் இருந்தது.

கிராமத்தில் அறிவாளியான குமுதா அக்கா படிப்பதில் சுட்டி. எந்த விசயத்தையும் பதட்டப்படாமல் எதிர்கொள்வாள்.தட்டான் பிடிக்கும் போது பாம்பை பார்த்துவிடும் முத்துவுக்கு குமுதா தான் தைரியம் சொல்வாள். ராசு மாமாவை விரும்பி காதல் கைகூடாததால் மீசை மாப்பிள்ளைக்கு திருமணம் நடக்கிறது.அதன் பின் குமுதா அக்காவுக்கு என்ன நடந்தது என்பது மீதிக்கதை. கிராமத்து யதார்த்த வாழ்வியலை இக்கதை சொல்கிறது.

/கெஸ்சு வாங்க ஓடி வர்ற, எனத்துக்குடா நீ அங்க போன, பொட்டாட்ட இரு,/போன்ற கொங்குத்தமிழ் வட்டார மொழி மேலும் மெருகூட்டுகிறது. "தைரியம் இல்லாதவங்களுக்கு எதுக்கு ஆசையும், கனவும்..." போன்றவரிகள் ராசு மீதான இயலாமையைக் காட்டுகிறது.பெற்றோரின் புன்னகையில் அத்தனை சந்தோசமும் அக்காவிடமிருந்தே எடுக்கப்பட்டது எனும் வரி அக்மார்க் ரைட்டர்ஸ் டச். வரதட்சணை விசயம் கதையின் கருத்தாக நெற்றி பொட்டில் அறைந்து சொல்லப்படுகிறது.

ஆபிஸில் அடுத்த வாரம் வெளிநாடு போக வேண்டும் அலுவல் விசயமாக. விமலுக்கு பாஸ்போர்ட் ரினீவல் செய்யவில்லை. காவல் நிலையம் சென்று எல்லாம் வெரிஃபை செய்யக் கொடுத்தும் இன்னும் ஆகவில்லை. இன்னும் நாலு நாள் தான் இருக்கு. போலிசிடம் கேட்டால் இந்தா அந்தானு இழுக்கிறாங்க. ஒருவழியா போன் செய்து இலஞ்சம் எதிர்பார்க்கிறாங்களானு கேட்டுட்டான் விமல்..எஸ்.ஐ க்கு.கோபம் தலைக்கு ஏற இங்க வாடானு கூப்பிட... பயந்து கொண்டே செல்கிறான் விமல். அடுத்து என்ன என்பதுதான் விறுவிறுப்பான லஞ்சம் கதை.ஒவ்வொரு கதைக்குள்ளும் நாமே ஒரு கதாபாத்திரமாக மாறிவிடும் மாயவலை எல்லா கதைகளிலும் வருகிறது.

/ஒரு சதுரங்க ஆட்டத்தின் காய்கள் போல இருவரும் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள்/ என்பதில் அழகான உவமை போல் இருந்தது.

காலனியில் இட்லி சுட்டு விற்கும் அமிர்தம் பாட்டியின் கதை தான் கரு.
தத்துப்பிள்ளை ஜேம்சு மற்றும் கூட்டாளி மோகன் இருவரும் தான் நாயகர்கள்.ஒரு கட்டத்தில் மனிதர்கள் மீது நம்பிக்கை இழக்க..

மனித நேயமிக்க அமிர்தம் என்ன செய்தார் என்பது கதை.பசிதாண்டா இந்த உலகத்தில் நெசம். எனக்கு பசிக்குதுனு வெக்கத்தவிட்டு சொல்லறப்பத்தான் ஒரு மனுசன் நூத்துக்கு நூறு நெசத்தப் பேசறான்னு அர்த்தம் என அமிர்தம் சொல்வது சத்திய வார்த்தைகள்.

கதைகள் ஒவ்வொன்று ஒவ்வொரு தளத்தில் பயணித்தாலும்.. பொறுமையாக கதை பேசும் நியாயம் படிக்கும்போது உணர முடிகிறது.
எந்த இடத்திலும் மிகைப்படுத்தல்களோ, தேவையற்ற வார்த்தை விரயங்களோ இல்லை. ஒவ்வொன்றும் படித்து முடித்தவுடன் அசைபோட வைக்கிறது.

கதைகளில் அதிக கதாபாத்திரங்கள் இல்லாமல் ஒன்றிரண்டு கதாபாத்திரங்கள் தான் ஆனாலும் ஒவ்வொன்றும் தனி குணத்துடன் வெளிப்படுத்தியிருப்பார்.கடந்து போகும் காலத்தை குறிப்பிடும்போது அதிலிருந்து கற்றுக் கொண்டு கடந்து போக விடுங்கள் என கதைகள் சொல்கின்றன. மெல்லிய சூழல் எவ்வாறு நம் மனதில் ஒரு கணத்தை அசைத்துப் பார்க்கின்றன என்பதை இக்கதைகள் விளக்குகின்றன.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 12 April 2026

tea-27


#மனசுக்கு_ஒரு_தேநீர்_27

மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு உணர்ச்சி தான் frustration விரக்தி அல்லது எண்ணக்குலைவு ஆகும். நாம் எதிர்பார்த்தது நடக்காமல் போகும் போது, முயற்சிகள் பலனளிக்காத போது, அல்லது சூழ்நிலைகள் நம்மை கட்டுப்படுத்தும் போது உருவாகும் அந்த உள் அழுத்தமே frustration.

ஒரு மாணவன் கடினமாக படித்தும் தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் பெறாமல் போனால், ஒரு தொழிலாளி உழைத்தும் உயர்வு கிடைக்காமல் இருந்தால், அல்லது நம்முடைய உறவுகளில் புரிதல் இல்லாமல் போனால்—இந்த எல்லா தருணங்களிலும் frustration தோன்றுகிறது.

 frustration என்பது முழுக்க முழுக்க தீமையானதல்ல. அது ஒரு signal—நாம் எதையாவது மாற்ற வேண்டும், வளர வேண்டும் என்று சொல்லும் ஒரு உள் அழைப்பு.ஆபிரகாம் லிங்கன் தேர்தலில் தொடர் தோல்விகளால்.. மனமொடிந்து இருளில் செல்லும்போது ஒரு இடத்தில் இடறுகிறார்..அப்போது சொல்லிக்கொள்கிறார்
I have stumbled, but I have not fallen
நான் இடறிவிட்டேன் ஆனால் கீழே விழவில்லை என எண்ணிக்கொண்டு மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெறுகிறார்.

 frustration என்பதை ஒரு தோல்வி என்று பார்க்காமல், வளர்ச்சிக்கான ஒரு படிக்கட்டு என்று பார்க்கச் சொல்லுகிறது.

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் யாரும் frustration-ஐ தவிர்க்கவில்லை. அவர்கள் அதை சமாளிக்க கற்றுக்கொண்டார்கள். உதாரணமாக, ஆயிரக்கணக்கான முயற்சிகளுக்குப் பிறகு தான் மின் விளக்கை கண்டுபிடித்த Thomas Edison. அவர் தோல்வியை frustration-ஆக பார்க்காமல், “இது வேலை செய்யாத வழி” என்று எடுத்துக்கொண்டார்.
“I have not failed. I've just found 10,000 ways that won't work.” – Thomas Edison
இந்த மனப்பாங்கு தான் frustration-ஐ சக்தியாக மாற்றுகிறது.

நமது எதிர்பார்ப்புகளை நியாயமான அளவில் வைத்துக்கொள்வது
பொறுமையை வளர்த்துக்கொள்வது
தோல்விகளை பாடமாக எடுத்துக்கொள்வது,மெல்ல மெல்ல இலக்கை அடைய கற்றுக் கொடுக்கிறது.

வீழ்வது தவறு அல்ல, எழுந்து நிற்பதுதான் முக்கியம்.
முடிவாக, frustration என்பது நம்மை தடுக்க வரவில்லை; அது நம்மை தள்ளிச் செல்ல வருவது. அதை சரியாக புரிந்து கொண்டால், அது நம்முடைய பலமாக மாறும். வாழ்க்கையில் மனக்கசப்பை வெற்றி நோக்கி மாற்றும் திறன் தான் உண்மையான அறிவு.

“Frustration is not the end of the road; it is the beginning of a better path.” 

புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 11 April 2026

book-23


#Reading_Marathon2026
#26RM009

Book No:23/150+
Pages:-164

அறியாத உறவுகள்
-நிர்மல்

நிர்மல் அவர்களின் கட்டுரைகள் தனித்துவமானவை. ஆழ்ந்த உண்மைகளை மிக எளிதாக வெளிப்படுத்துவார்.வாசிக்கும் போதே சிந்திக்கவும் வைப்பவர். எந்த வார்த்தை விரயமும் இன்றி மொழியை சிக்கனமாக பயன்படுத்துவர். இந்த உழைப்பைப்பற்றிய சிந்தனையை நமக்கு தருபவை.நான்கு அத்தியாங்களில் உழைப்பு குறித்த விழிப்புணர்வை நாம் பார்க்கைத் தவறிய உழைப்பு குறித்த கோணங்களில் நம்மை பார்க்க வைக்கிறது.

தொழில் நுட்ப வளர்ச்சியில் எதிர்காலத்தில் உடல் உழைப்பு இருக்குமா எனும் கேள்விக்குறி நம்முள் இயல்பாகவே எழும். காலம் பதில் சொல்லும் என கடந்தி போனாலும் உழைப்பு குறித்த வரலாறை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.உழைப்பு ஒருபோதும் அதே மதிப்பில் நாம் பண்டமாற்று செய்ய முடியாது.பொருளாதாரத்தை முன்னிறுத்தி உழைப்பை செய்தாலும் அதில் மனிதனின் திறமை வெளிப்படுகிறது. கூலியுடன் நமக்கான அங்கீகாரமும் நமக்கு கிடைக்கிறது.

மனித உழைப்பு எவ்வாறெல்லாம் பரிமாற்றமடைகிறது என்கிறார்.. உதாரணத்திற்கு சந்தைகளின் உழைப்பின் பலனை பொருளாக மாற்றுதல்,வங்கிகள் உழைப்பின் பலனை சேமிக்க வைக்கிறது, நிறுவனங்கள் கூட்டு முயற்சியாக உழைப்பை ஒருங்கிணைக்கிறது என்பதாக அதன் பல்வேறு பரிமாற்றங்களை எடுத்துரைக்கிறார்.

உழைப்பின் தோன்றல்களை ஆதிச்சுவடுகளான கல்வெட்டில் இருந்தும் வரலாற்று ஆதாரங்களிலிருந்தும் உழைப்பின் ஆதி வரலாற்றை ஆய்வு நோக்கில் எடுத்துச் சொல்லியுள்ளார்.

/ 'Cemetery' என்பது 'Koimeterion' எனப்படுகிற 'உறங்கும் இடம்' என்று பொருள் தரும் கிரேக்கச் சொல்லிலிருந்து உருவானது 'Grave' என்பது 'குழி'எனப்படும் பழமையான ஜெர்மானியச் சொல்லிலிருந்து வந்ததாக அறியப்படுகிறது. ஆனால், தமிழில் நாம் இன்றும் நீத்தார் உறைவிடத்தை 'கல்லறை' என்றே அழைக்கிறோம்/

/தமிழில் 'கல்' என்றால் 'பாறைக் கற்கள்' எனப் பொருள் படும். அதேபோல் 'கல்' என்றால் கல்வி, கற்றல் என்றும் பொருள். இப்படியான பெருங்கற்களை, மனிதர்கள் தங்களின் கூட்டுழைப்பால் பெயர்த்து எடுத்துக்கொண்டு வந்து நிலைநிறுத்தும் தொழில்நுட்பம்தான் மனிதர்கள் கற்றுக்கொண்ட முதல் பாடமாகவும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுத்த முதல் திறனாகவும் இருந்திருக்கும்./

தேனீக்களும் கூட்டு உழைப்பு செய்கின்றன. ஆனால் மனிதர்களின் கூட்டு உழைப்பு பரிணாமம் அடைந்திருப்பதால் பலருக்கும் வேலை அதிகம் கிடைத்திருக்கிறது.

இப்படியான மனிதர்களின் உழைப்புச் சூழலில்தான் இங்கிலாந்தில் 1771ல்  ரிச்சர்ட் ஆர்க்ரைட் தொழிற்சாலையை உருவாக்கினார்.இதே போல் பல தொழிற்சால உருவாக முதலாளி தொழிலாளி என வர்க்கம் உருவாகியது.வேலைப்பளு அதிகரித்தது.1908ம் ஆண்டு பிப்ரவரி 7, ம் தேதி கோரல்மில் தொழிலாளர் போராட்டம் வரலாற்றில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. வ.உ சி தேச விடுதலை போராட்டதுக்கு தூண்டுகோலாக அமைந்து இந்தியாவிலேயே முதல் வேலைநிறுத்தம் நடந்து வரலாற்று பெருமையைச்சேர்த்தது. இதன் பலனாக தொழிலாளர் கோரிக்கை ஏற்கப்பட்டது.உழைப்பு சுரண்டலை எதிர்த்து போராட தொழிலாளர்களுக்கு உத்வேகமும் அளித்தது.மேலும் பணிப்பாதுகாப்பு, பணிநேரம் முறைமை, விடுமுறை போன்ற கண்ணியமான பணிச்சூழலை பெற்றுத் தந்தது.இதற்கு முன்னோடியாக அமைந்தது கார்ல் மார்க்ஸின் சிந்தனையும் முழக்கமும் ஆகும்

/கார்ல் மார்க்ஸ் எழுதிய 'மூலதனம்'(Das Kapital) என்ற நூலில், முதலாளித்துவச் சமூகத்தில் மனித உழைப்பு (Labour Power) ஒரு தனித்துவமான பண்டமாக (Commodity) மாறிவிடுவதைச் சுட்டிக்காட்டினார். “மற்ற பண்டங்களைப் போலவே, மனிதர்களின் உழைப்பு என்ற சக்தியும் சந்தையில் வாங்கப்பட்டு, பின்னர் விற்கப்படுகிறது. தொழிலாளி தனது உடல் மற்றும் மன உழைப்புத் திறனை. 'கூலி' என்ற விலைக்கு முதலாளியிடம் விற்கிறான். ஆனால், உழைப்பு என்பது வெறும் பண்டம் மட்டுமல்ல. அது ஒரு சிறப்புத் தன்மை கொண்டது. இதுவே மதிப்பை உருவாக்கும் ஒரே ஆதாரம் (Source of value)" என்றார் மார்க்ஸ்./

உழைப்பை ஓர் ஆன்மிக நோக்கில் ஒழுங்காகப் பார்த்தல், மனவலிமையை வளர்த்தல்.மேலும் இதற்கு வலு சேர்க்கும் வகையில் பற்றுதல் இல்லாமல் உழைக்கிற சக்திதான் யோகத்தின் அடிப்படை" என்கிறார் விவேகானந்தர்.

"தேன் சுவைக்க வந்த தேனீ. தேனில் சிக்கிவிடுவதைப் போல. நாமும் அப்படியே - ஓர் இலக்கைத் தேர்ந்தெடுத்து, அதில் அடிமையாகிறோம். உழைக்கும்போது நாம் அதில் மூழ்கி விடுகிறோம். அந்த வேலை வெற்றிபெறாவிட்டால் மனதிற்குள் உடைந்துபோகிறோம். வெற்றி என்பது நல்ல முறையில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் விளைவே" என்பதை அவர் வலியுறுத்துகிறார்.

இந்தியர்களின் உழைப்பை வணிக உத்தி மூலமாக ஆங்கிலேயர் எவ்வாறு அடிமைப்படுத்தினர் என்றும்,அதனை தொடர்ந்து தொழிலாளர் இயக்கங்கள் எவ்வாறு எழுச்சி பெற்றது என்பதனையும் கூறியுள்ளார்.கணினி வருகை, ஏ.ஐ எனும் செயற்கை நுண்ணறவு வருகைக்கு பின் உழைப்பில் ஏற்பட்ட மாற்றம் பற்றி கூறுகிறது. 

இயந்திர கற்றல் செயற்கை நுண்ணறிவின் அடிப்படை.லேபிளிங், அல்காரிதம் பொன்ற நுட்பங்களை தேவையானதை கற்பிப்பதற்கு பல இலட்சம் மனிதர்களின் மறைமுக உழைப்பு தேவைப்பட்டுள்ளது. மாற்றங்களினால் மனித உழைப்பு எவ்வாறு மடைமாற்றப்பட்டுள்ளது. சொல்லப்போனால் மனித உழைப்பை அல்காரிதம்கள் நேரிடையாக நிர்வகிக்கத் தொடங்கி உள்ளன.

தாஜ்மஹாலை கட்டியவர் ஷாஜகான் என்றே சொல்கிறோம்.ஆனால் அதில் பல ஆயிரம் தொழிலாளர்களின் உழைப்பு மறைக்கப்பட்டுள்ளது. இன்றுதொழில்நுட்பங்களும் அதனையேதான் செய்துவருகின்றன
உழைப்பு என்றவுடன் உடல்சார்,அறிவுசார் உழைப்பு எனப் பிரித்து அதில் உள்ள இடைவெளிகளை பற்றி கூறியுள்ளார்.

எனவே ஏ.ஐ செய்யும் மாயை வேலை இழப்பா?வேலை மறைப்பா என்பதை குறித்த தெளிவான விளக்கங்களை அளித்துள்ளார்.

இணைய வசதி வந்தபின் காலை முதல் மாலை வரை இருந்த பணி கலாச்சாரம் தற்போது மாறியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் வேலை வாங்கிக் கொள்ளலாம்.மனித வளம் அதிகம் இருப்பதால் குறைவான ஊதியத்தில் வேலை செய்யும் கிக் வேலை, ப்ளாட்பார்ம் வேலைகள் பெருகிவிட்டன.ஒரு ப்ளம்பர் ஒரு சிறு வேலைக்கு ஆயிரம் ரூபாய் கேட்டார்.அதேநேரம் ஒரு மாத ஊதியத்தில் ஏழாயிரம் ஊதியத்துக்கு வேலை பார்க்கும் நிலையும் உள்ளது என ஜெயமோகன் ஒரு இடத்தில் கூறியுள்ளார். மாத ஊதியம் பெறுவோரிடம்
உழைப்பு மலிவாக பார்க்கபடுகிறது. 
உழைப்பு குறித்த உன்னத உரையாடலாக இந்நூல் உள்ளது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

மனத்தில், ஆழத்தில் பீதி அதுபாட்டிற்குப் புழுப்போலத் துளைத்துக் கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச ஒரு தரம் அந்த திகில் மேல் மட்டத்திற்கு வந்து தலை எடுக்கும். உடம்பு பதறும் நெஞ்சு உலரும் அடிவயிறு கலங்கும் முகம் விகாரமடையும் மறுபடியும் மெதுவாகச் சமாதானத்தின் பலம் அதிகமாகும். பயத்தைக் கீழே அமுக்கிவிடும்.சுகமோ துக்கமோ எந்த நிலைமையிலும் நீடிக்க முடியாது என்பதற்கு மனித சுபாவத்தில் இதுவும் ஓர் அத்தாட்சியோ?'விடியுமா?' சிறுகதையில் இருந்து..-கு.ப.ராஜ கோபாலன்

Friday, 10 April 2026

கமகக்கண்ணன்


ஏன் பற்று வேண்டாம்?

பற்று என்பது ஒருவிதமான ஆற்றல் இழப்பு. எதையோ பற்றிக்கொண்டு இருக்க ஒரு உயிருக்கு நீடித்த ஆற்றல் தேவை. பாக்டீரியாவைப் பற்றிக் கொண்டிருக்கும் எதிர்ப்புரதம் கூட வீணாக ஆற்றலைச் செலவழிக்கிறது. 

ஆனால் அந்த ஆற்றல் சற்றும் பயனின்றி விரயமாகிறது. சிந்திக்க. 

எழுத்தாளன் ஏன் ரசிக மனநிலையில் இருக்கக் கூடாது என்பதற்கு வலுவான காரணம் உண்டு. 

அவன் பல்வேறு உணர்ச்சி நிலைகளில் கற்பனை செய்ய வேண்டியவன். கதை மாந்தர்களின் நவரசங்களையும் கற்பனையில் விளைந்த  கதைக்கள நுட்பங்களையும் பின்புலத்தில் முதுகெலும்பாக நிற்கும் தகவல்களின் ஒருங்கிணைவையும் சமநிலையில் வைத்து உணர்ச்சிகளை அணுக வேண்டியவன். அவனுடைய பெரும் ஆற்றல் அப்படியே செலவிடப்பட வேண்டும். அதுவே எழுத்துக்காரனின் தொழில் அறம்.

ஆனால் பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலுமாகவே இருப்பவனுக்கு ஒருபோதும் நல்ல இலக்கியம் கைகூடாது. நல்ல இலக்கியத்தையும் அதை எழுதியவரையும் மனம் திறந்து பாராட்டலாம். ஆனால் தொழவோ துதிபாடவோ தேவையில்லை என்பதைப் பட்டறிவில் இருந்தே துல்லியமாக அறிவிக்கிறேன்.  

இல்லறத்தில் ஈடுபடும் ஒருவர் பணத்தின் மீது அதீதப் பற்று கொண்டால் குடும்பத்தின் அநேக இனிமைகளை இழக்க நேரிடும். அதீத தேசப்பற்று வேற்று தேசத்தானைப் பகைமை பாராட்டச் சொல்லும். அதில் ஏகப்பட்ட இழப்புகள் உள்ளன. இப்படித்தான் பற்று என்பது ஒருவனது வாய்ப்புகளையும் அவன் மேம்படுவதற்கான சாத்தியங்களையும் குறைக்கிறது. 

பற்றின்மையோ விடுதலையைத் தருவதன் மூலம் ஒருவனது உள்ளுறங்கும் நிலையாற்றலை உசுப்புகிறது. அதுவே உய்வு. அதுவே ஆன்மீக உச்சம். அதுவே ஞானக் கண்டடைவு. அதற்குப் பலன் உண்டு. பற்றின்மையின் நிலையாற்றல் அவனுக்கும் உலகுக்கும் அரியவற்றை ஆற்றும். அன்பின் இயக்கத்தால் அண்டை அயலாரையும் தேற்றும்.

Wednesday, 8 April 2026

tea-26


#மனசுக்கு_ஒரு_தேநீர்_26

நீங்கள் ஒரு கப் காபியை வைத்திருக்கிறீர்கள். யாராவது வந்து உங்களுடன் மோதும்போது அல்லது உங்கள் கையை அசைத்து, உங்கள் காபியை எல்லா இடங்களிலும் கொட்டும்போது

நீங்கள் ஏன் காபியைக் கொட்டினீர்கள்?

உங்கள் பதில்: "நிச்சயமாக யாரோ என்னுடன் மோதியதால், நிச்சயமாக!"இதுவாக இருக்கும்.

ஆனால், தவறான பதில்.
உங்கள் கோப்பையில் காபி இருந்ததால் நீங்கள் காபியைக் கொட்டினீர்கள்.

கோப்பையில் தேநீர் இருந்திருந்தால், நீங்கள் தேநீர் கொட்டியிருப்பீர்கள்.
கோப்பையின் உள்ளே என்ன இருக்கிறது, அதுதான் வெளியேறும்.

ஆகையால், வாழ்க்கை வந்து உங்களை அசைக்கும்போது, உங்களுக்குள் இருப்பது வெளியே வரும்.

எனவே நாம் நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் ... "என் கோப்பையில் என்ன இருக்கிறது?" வாழ்க்கை கடினமாகும்போது, ​​என்ன கொட்டுகிறது?

மகிழ்ச்சி, நன்றியுணர்வு, அமைதி மற்றும் பணிவு?அல்லது கோபம், கசப்பு, கடுமையான வார்த்தைகள் மற்றும் எதிர்வினைகள்?
நீங்களே தேர்ந்தெடுங்கள்!

இன்று நம்முடைய கோப்பைகளை நன்றியுணர்வு, மன்னிப்பு, மகிழ்ச்சி, உறுதிப்படுத்தும் வார்த்தைகளால் நிரப்புவோம். மற்றவர்களிடம் இரக்கம், மென்மை மற்றும் அன்பு ஆகியவற்றை காட்டுவோம்.பிறர் மீது அக்கறை கொள்ளுங்கள்.பிறரால் நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என விரும்புகிறீர்களோ அதைப்போல அவர்களை நடத்துங்கள்

நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எப்போதும் ஒரே ஒரு நேரம் மட்டுமே முக்கியமானது. இப்போது! இதுவே மிக முக்கியமான நேரம். ஏனெனில் இதுவே நாம் ஆற்றலோடு இருக்கும் நேரம். நீ ஒரு மனிதனுக்கு என்னவாக இருக்கிறாய் என்பதைப் பொருத்தே யார் முக்கியமான மனிதன் என்பதை அறியமுடியும். எந்த ஒரு மனிதனும் தனக்கு யாருடன் எப்படித் தொடர்பு ஏற்படும் என்பதை அறிய முடியாது. மிக முக்கியமான காரியம் என்னவெனில் நல்லது செய்வது. ஏனெனில் அதன் பொருட்டே மனிதனுக்கு இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது." என்கிறார்
டால்ஸ்டாய்

புத்தம் புது காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

book-22


#Reading_Marathon2026
#26RM009

Book No:22/150+
Pages:-320

இரண்டு கிழவர்கள்
-லியோ டால்ஸ்டாய்

 லியோ டால்ஸ்டாய் என்றதும் நினைவுக்கு வருவது நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆங்கில துணைப்பாடத்தில் வந்த கதை தான் எளிய மக்களுக்கு உதவி செய்வது தான் கடவுளை அடையும் உண்மையான வழி என்பதனை அழுத்தமாய் அந்த கதை சொல்லி இருக்கும் அந்த கதையின் நினைவோடு தான் இந்த புத்தகத்தை வாசிக்க துவங்கினேன்.முதலில் இப்புத்தக மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும் கதைக்கும் மனதுக்குள் நெருக்கமாகவும் இருந்தது.

இரண்டு கிழவர்கள் கதையில் எஃபீம் (Efim) மற்றும் எலீஷா (Elisha) என்ற இரண்டு முதியவர்கள், 
 எபிம் தீவிரமான உறுதியான மனம் கொண்டவர்.கொஞ்சம் பணக்காரர். எலிசா என்பவர் தேன் வளர்ப்பு செய்து பிழைத்துக் கொண்டிருப்பவர். இருவருக்குமே இயேசு பிறந்த ஊரான ஜெருசலேமுக்கு இறப்பதற்கு முன் செல்ல வேண்டும் என்பது நோக்கமாய் இருந்தது. அந்த நோக்கத்தை தூண்டி விட்டவர் எலிசா.  நாம் பணம் சேர்த்துக் கொண்டு ஜெருசலத்தை நோக்கி புறப்படுவோம் என்று ஆறு மாத காலம் திட்டம் தீட்டுகின்றனர்.

 பயணம் செய்யும்போது எலிசா பின் தங்கி விடுகிறார். ஒரு குடிசையில் அவர் சென்று பார்த்த இடம் அவருக்கு வியப்பாக இருந்தது. அங்கேயே தங்கிவிட்டார்.அதன் பின் என்ன நடந்தது எபிம் மட்டும் ஜெருசலம் செல்கிறார். அங்கு சந்தித்த நிகழ்வுகள் அனைத்தும் தான் இந்த கதையின் மையம். ஒவ்வொரு மனிதனும் தான் வாழும் காலத்தில் பிறரின் அன்பை சம்பாதிப்பதும் பிறரிடம் அன்பை செலுத்துவதும் தான் உண்மையானது என்னும் பேருண்மை இந்த கதையின் மூலம் அறிய முடிகிறது.

மனிதர்களுக்கு தேவை அறிவுரைகள் இல்லை. தெளிவுரைகள். எல்லோர் சூழ்நிலையும் ஒன்றல்ல, எல்லோர் பார்வைகளும் ஒன்றல்ல...ஒவ்வொருவர் திறனும் ஒன்றல்ல.... அப்படி இருக்கையில் நாம் சொல்லும் எந்த அறிவுரையும் கண்டிப்பாக மற்றவருக்கு ஒரே போன்ற விளைவை ஏற்படுத்தாது....நாம் நல்லது என நினைத்து சொல்லும் அறிவுரை அவர்கள் சூழ்நிலை பொருத்து நன்மையும் விளைவிக்கலாம், தீமையும் விளைவிக்கலாம்.
என லதா அவர்கள் ஒரு பதிவில் சொல்லி இருப்பார். இந்த கதையில் வரும் இவானும் தனக்கு தெரியாத ஏதோ ஒன்று மற்றவருக்கு தெரிந்திருக்கிறது. அதை அறிந்திருந்ததை தானும் அறிந்திருந்தால் நிச்சயம் அவரைப் பற்றி புரிந்து கொண்டிருப்பேன். நாம் நம்முடைய மனதில் நினைப்பதைத்தான் நாம் உண்மை என்று நினைக்கிறோம். மற்றவர்களின் பார்வையில் அல்லது அவர்கள் உண்மையில் நடந்ததை நாமும் தெரிந்து கொள்ளும்போது நம்முடைய முடிவுகளை நாம் மாற்றிக் கொள்கிறோம்.

உன் அயலானையும் நேசி எனும் கருத்தை முன் வைத்து இழந்த வாய்ப்பு கதை அமைக்கப்பட்டுள்ளது. இவான் குடும்பமும்,கேவ்ரில் குடும்பமும்..பூவே உனக்காக பாணியில் இரு குடும்பத்தினரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இவானின் வயதான தந்தை இதை எல்லாம் பார்த்து மகிழ்கின்றார். ஒரு முறை முட்டை அருகில் உள்ள வீட்டில் வைத்ததை பேசப்போய்தீராப் பகையில் முடிகிறது. இறுதியில் எவ்வாறு இணைந்தார்கள் என்பது தான் கதை.தொய்வின்றி சுவாரஸ்யமாய் செல்லும்.கதை மனித மனம் எவ்வாறு எல்லாம் சுயநலமாய் சிந்திக்கிறது என்பதை அழகாய் வெளிப்படுத்தியிருப்பார். கதையில் வரும் முதியவரின் கதாபாத்திரம் அழகாய் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
கதையில் முக்கியமான கட்டத்தில் அவர் சொல்லும் அறிவுரை

/நீ உனக்குதான் எல்லாம் தெரியுமென்றும் எனக்கு எதுவும் தெரியாது எனவும் நினைக்கிறாய். இல்லை! நீ இன்னும் குழந்தைதான். ஒரு பைத்தியக்காரத்தனம் உன்னுடைய செயல்களைக் கட்டுப்படுத்துகிறது என்பதை அறியாமல் உன் கண்கள் குருடாகி விட்டன. மற்றவர்களின் பாவங்கள் உன் கண்களுக்குத் தெரிகிறது. ஆனால் உன்னுடைய பாவங்களை நீ உன் முதுகுக்குப் பின்னால் மறைத்துக் கொண்டுள்ளாய். கேவ்ரியல் செய்தது தவறுதான் என்பதை நான் அறிவேன். ஆனால் அவன் ஒருவன் மட்டுமே தவறு செய்தான் எனில் இந்த உலகத்தில் எந்தத் தீமையும் இருக்காது. இந்த உலகத்தில் உள்ள அனைத்துத் தீயவையும் ஒரு மனிதன் செய்தவை என நீ கருதுகிறாயா? இல்லை! இந்த உலகில் தீமை செய்வதற்கு இரண்டு மனிதர்கள் தேவை. கேவ்ரியலிடம் இருக்கும் கெட்டதை மட்டுமே நீ பார்க்கிறாய். ஆனால் உன்னிடம் இருக்கும் கெட்டதை உன்னுடைய கண்கள் மறைத்துவிட்டன. அவன் ஒருவன் மட்டுமே கெட்டவனாக இருந்து நீ நல்லவனாக இருந்திருந்தால் எந்தத் தவறும் நடந்திருக்காது."/ என்ற இடம் மிக அற்புதமானது

ஒரு ஒரு காபி கடையில் நடக்கும் கடவுள் பற்றிய விவாதம் தான் சூரத்தின் காபி ஹவுஸ் கதையின் மையக்கரு. ஒவ்வொருவரும் தங்கள் கடவுள் குறித்த மேன்மையான எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். அது ஒரு தத்துவ விவாதமாகவும் மாறி செல்கிறது. தத்துவார்த்தங்களின் இறுதியில் அனைவரும் மௌனமாகி யாருடைய நம்பிக்கை சிறந்தது என்பதை மேற்கொண்டு விவாதிக்காமல் விட்டனர் என்று கதை முடிகிறது. பணம் படைத்தவர்கள் நிம்மதியாக இருக்கின்றனர் என்ற எண்ணங்களில் உள்ள பொய்மை குறித்த கருத்தினை 'இலியாஸ்' கதை விளக்குகிறது.

டால்ஸ்டாயின் கதைகள் அனைத்துமே அன்பினை மையமாகக் கொண்டவை. அந்த அன்பினை பற்றி குறிப்பிடும் போது, ஏதோ ஒரு நீதிக் கதைகள் போல் இறுதியில் இல்லாமல் வாழ்வியலில் இருந்து மனிதர்கள் துன்பப்படும் நேரத்தில் கூட அன்பினை எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பதனை தான் ஒவ்வொரு கதைகளிலும் சொல்லி இருப்பார்.

இந்த தொகுப்பில் இன்னும் மற்றொரு முக்கிய கதையாக பார்ப்பது 'கடவுளுக்கு உண்மை தெரியும் ஆனால் காத்திருக்கிறார்' எனும் கதைதான்.விளாடிமிர் நகரத்தில் வாழும் இவான் எனும் இளமையான வியாபாரி.. தன்னுடைய வியாபாரத்துக்கு புறப்படும் போது மனைவி ஒரு கெட்ட கணவனை காண்கிறாள்.அதாவது கணவன் வயதான தோற்றத்தில் வந்து தனது அங்கியை கழட்டி சிரிப்பது போல ஒரு கெட்ட கனவு வருகிறது. இதனை தன் கணவரிடமும் பகிர்ந்து கொள்கிறாள். ஆனால் கணவன் அதனை பற்றி சிறிதும் கவலையில்லாமல் வியாபாரத்துக்கு கிளம்புகிறார். அப்போது ஒரு தங்கும் விடுதியில் ஒரு கொலை நடைபெறுகிறது.அந்தப் பழி இவர் மீது விழுகிறது.அதன் பின்பு என்ன நடந்தது என்பதுதான் கதை. மனைவியின் கனவு பலித்ததா உண்மையான குற்றவாளியை இவான் தேடி கண்டுபிடித்தாரா? அவனுக்கு என்ன தண்டனை கொடுத்தார் என்பதுதான் இந்த கதையின் கரு.

டால்ஸ்டாயின் கதைகள் பொதுவாக மனித வாழ்க்கையின் ஒழுக்கம், ஆன்மீகம், சமூக அநீதி, மற்றும் உள்ளார்ந்த போராட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்டது. அவர் வெறும் நிகழ்ச்சிகளைச் சொல்வதில்லை; மனித மனத்தின் மாற்றத்தையும் வாழ்வின் நெறியையும் கதைகளில் அமைக்கிறார். மனிதன் தன் எண்ணங்களை எவ்வாறு எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும், மனிதநேயம் தான் மனிதனின் மகத்தான கொடை என்பதனையும் தன் எழுத்துக்களின் வழியே ஒவ்வொரு கதைகளையும் அதனை அடிப்படையாகக் கொண்டு அமைத்து இருப்பார். இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போதும் மனிதனின் அன்பும் மனிதநேயமும் பெருகும் என்பது உறுதி 

தொடர்ந்து வாசிப்போம் 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 3 April 2026

ஜா-36


வாழ்க்கைக்கு ஹைக்கூ 36

"இந்த பனிக் காலை;
 எனக்குப் பிடிக்காத அந்த கருங்காகம். 
ஆனாலும் கூட பேரழகு!" 

மட்சுவோ பாஷோ (Matsuo Basho) எழுதிய இந்தக் கவிதை முரண்களில் இருக்கும் அழகை ரசிக்கச் சொல்கிறது.

சுற்றிலும் வெண்மையான பனி படர்ந்த ஒரு காலை பொழுது. இங்கு பனி என்பது தூய்மை மற்றும் அமைதியின் அடையாளம். காகம் பொதுவாக அதன் நிறத்திற்காகவும், குரலுக்காகவும் பலரால் விரும்பப்படாத ஒரு பறவை.

ஆனாலும் அந்த வெண்மையான பனிப் பின்னணியில், காகத்தின் கறுப்பு நிறம் ஒரு அற்புதமான ஓவியம் போலத் தெரிகிறது. வெறுப்பைத் தாண்டி, அந்த ஒரு கணத்தில் அதன் அழகை கவிஞர் உணர்கிறார்.

வாழ்க்கை என்பது நாம் எதை விரும்புகிறோம், எதை வெறுக்கிறோம் என்பதைப் பொறுத்தது மட்டுமல்ல;  நாம் எதை, எந்த சூழலில் பார்க்கிறோம் என்பதைப் பொறுத்தும் அமையும்.

நாம் ஒரு விஷயத்தை பார்க்கும் கோணத்தை மாற்றினால் உலகம் மாறும். நமக்கு ஒருவரைப் பிடிக்கவில்லை என்றால், அவரிடம் இருக்கும் நல்ல விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனால், நம்முடைய முன்முடிவுகளைத் தூக்கி எறிந்துவிட்டுப் பார்த்தால், நாம் வெறுக்கும் ஒன்றிலும் ஒரு அழகு இருக்கும். அலுவலகத்தில் ஒரு சக ஊழியரை நமக்கு எதோ ஒரு காரணத்தால் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், ஒரு இக்கட்டான சூழலில் அவர் வேலையை மிக நேர்த்தியாக முடிப்பதைக் காணும்போது, "அவர் கோபக்காரராக இருந்தாலும், அவர் திறமைசாலி" என்று நீங்கள் உணர்வது இந்த ஹைக்கூ போன்ற ஒரு தருணமே.

முரண்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் அதனுள்ளிருந்து வெளிப்படும் பேருண்மையை அறிவதும் வாழ்வை இனிதாக்கும். உலகம் என்பது கறுப்பும் வெளுப்பும் கலந்தது. பனி (வெண்மை) மட்டுமே இருந்தால் அது சலிப்பைத் தரும். அந்த வெண்மைக்கு இடையில் காகத்தின் கறுப்புதான் ஒரு கவித்துவமான அழகைத் தருகிறது. அதேபோல், வாழ்வில் கஷ்டங்களும், நமக்கு பிடிக்காத விஷயங்களும் இருந்தால்தான் மகிழ்ச்சியின் மதிப்பு தெரியும்.

இவரது அனைத்து ஹைக்கூ கவிதைகளிலும் வெளிப்படும் "நிகழ்காலத்தில் வாழ்தல்" இதிலும் வெளிப்படுகிறது. பாஷோ, காகத்தின் மீதுள்ள தனது பழைய வெறுப்பை மறந்துவிட்டு, அந்தச் சிறு நொடியில் அதன் அழகை ரசிக்கிறார். கடந்த கால கசப்புகளைச் சுமக்காமல், நிகழ்காலத்தில் இருக்கும் அழகை ரசிப்பதே நிறைவான வாழ்வு என்கிறார்.

உண்மையில், மகிழ்வான வாழ்வு என்பது எல்லாவற்றையும் நமக்குப் பிடித்தது போல மாற்றுவதில் இல்லை; நமக்கு பிடிக்காதவற்றிலும் இருக்கும் நன்மையை அல்லது அழகைக் கண்டறிவதில்தான் இருக்கிறது.

Wednesday, 1 April 2026

ஜா-35


வாழ்க்கைக்கு ஹைக்கூ: 35

“இந்த இலையுதிர் கால 
மாலைப் பொழுதின் தனிமையிலும்
இனிமை காணமுடியும்”

யோசா புசோன் (Yosa Buson) எழுதிய இந்த அழகான ஹைக்கூ கவிதை, தனிமையின் மறுபக்கத்தை மென்மையாக உணர்த்துகிறது.

கவிஞர் ஒரு இலையுதிர் கால மாலையில் மரங்கள் இலைகளை உதிர்ப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். இலையுதிர் காலம் என்பது ஒரு ஆண்டின் முடிவைக் குறிப்பது, மரங்கள் இலைகளை இழந்து தனித்து நிற்கும் காலம். மற்றவர்களுக்கு அது சோகமாகத் தெரியலாம். ஆனால், கவிஞருக்கு அந்த அமைதியான தனிமையில் ஒரு 'பேரின்பம்' கிடைக்கிறது. ஆரவாரம் இல்லாத அந்த மௌனத்தில், தன்னைத் தானே உணரும் ஒரு மகிழ்ச்சியை அவர் கண்டடைகிறார்.

தனிமை என்பது தண்டனையல்ல, அது தன்னையறியும் வாய்ப்பு. நாம் எப்போதும் பிறருடைய அங்கீகாரத்தையும், துணையையும் தேடிக்கொண்டே இருக்கிறோம். ஆனால், நம்முடன் நாம் செலவிடும் நேரமே நம்மைச் செதுக்கும்.  வெளியுலகச் சத்தங்கள் அடங்கும்போதுதான் நம் மனதிற்குள் இருக்கும் குரல் நமக்குக் கேட்கும். இது ஒருவரை மன அழுத்தத்திலிருந்து விடுவித்து, மன நிறைவைத் தரும். ஒரு நீண்ட வேலை நாளுக்குப் பிறகு, வீட்டு முற்றத்தில் அமர்ந்து ஒரு கப் தேநீருடன் இயற்கையைப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த 10 நிமிடத் தனிமை, பல மணிநேரப் பேச்சை விட அதிகப் புத்துணர்வைத் தரும்.

இலையுதிர் காலம் எப்படி இலைகளை இழக்கிறதோ, அதுபோல வாழ்வில் இழப்புகள் வரும்போது வருந்தாமல், அந்த நிலையிலும் இருக்கும் அழகைக் காண வேண்டும். பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றாலோ அல்லது ஒரு நண்பர் பிரிந்து சென்றாலோ, அதை ஒரு பேரிழப்பாகப் பார்க்காமல், புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளக் கிடைத்த நேரமாகப் பார்க்க வேண்டும்.

இலையுதிர் காலம் என்பது ஒரு மரத்தின் 'இழப்பு' அல்ல, அது ஒரு 'தயாரிப்பு'. மரமானது வரப்போகும் கடும் குளிர்காலத்தைத் தாங்குவதற்காகவும், வசந்த காலத்தில் புதிய தளிர் விடுவதற்காகவும் பழைய இலைகளை உதிர்க்கிறது. கவிஞர் தனிமையை ஒரு இருண்ட அறையாகப் பார்க்காமல், ஒரு 'வெற்று நிலமாக' (Empty Space) பார்க்கிறார். ஒரு பாத்திரத்தில் இருக்கும் பழைய நீர் கொட்டப்பட்டால்தான் புதிய நீரை நிரப்ப முடியும். அதுபோல, தேவையற்ற உறவுகள், சத்தங்கள் மற்றும் எண்ணங்கள் உதிரும்போதுதான் நம் ஆன்மா புதிய தெளிவைப் பெறுகிறது.

இன்னொறு பரிமாணத்தில், ஜப்பானிய தத்துவமான வாபி-சாபியை இந்தக் கவிதை நினைவூட்டுகிறது. வாபி-சாபி என்பது "முழுமையற்ற, நிலையற்ற மற்றும் குறைபாடுள்ள விஷயங்களில் இருக்கும் அழகைக் காண்பது" ஆகும்.  வாபி (Wabi): தனிமையில் இருக்கும் எளிமையையும், உலகியல் இன்பங்களிலிருந்து விலகி இருப்பதையும் குறிக்கும். சாபி (Sabi): காலம் கடந்து செல்வதையும், அதன் மூலம் ஏற்படும் முதிர்ச்சியையும் (உதாரணமாக: காய்ந்த இலைகள், தேய்ந்த கற்கள்) குறிக்கும். உதிர்ந்த இலைகளும், ஆட்கள் நடமாட்டம் குறைந்த அந்த மாலைப் பொழுதும் வாபி-சாபி தத்துவத்தின் நேரடி உருவம். தனிமை என்பது வெறுமை அல்ல; அது ஒரு முதிர்ந்த அழகு. ஒரு பழுத்த இலை காம்பிலிருந்து விடுபடும் அந்தத் தருணம் ஒரு விடுதலையின் அழகு.

நம் வாழ்வு எப்போதும் பரபரப்பாகவும், இரைச்சலுடன், கொண்டாட்டத்துடன் இருக்க வேண்டிய அவசியமில்லை. நம்மிடம் இருக்கும் குறைகளையும், நாம் கடந்து வந்த வடுக்களையும், நம்முடைய தனிமையையும் அதன் இயல்பிலேயே நேசிப்பதுதான் மனநிறைவான வாழ்வின் ரகசியம்.

"தனிமை" (Loneliness) என்பது ஆட்கள் இல்லாத வருத்தம். ஆனால் "தனித்திருத்தல்" (Solitude) என்பது நம்முடன் நாம் இருக்கும் பெருமிதம். இந்த ஹைக்கூ, புற உலகை மறந்து அக உலகிற்குள் பயணிப்பதன் மூலம் கிடைக்கும் அமைதியே உண்மையான மகிழ்ச்சி என்பதை நமக்கு உணர்த்துகிறது.