Sunday, 27 August 2017

வெய்யில்

அடிக்கடி கடல் பார்த்துவந்தேன்
அதன் உப்பு காதலுக்கு நல்ல உவமையாக இருந்தது

இன்று, புதிய ‘இவன்’ சொன்ன யோசனை
ஒரு பெருமூச்சுக்கு ஒப்பான கதகதப்பையும் நிம்மதியையும் தருகிறது

‘அவனோ’ சதா வார்த்தைகளுக்கு சாணை பிடித்தபடியே இருக்கிறான்
உடலுக்குள்ளும் தலைக்குள்ளும் டார்ச் அடித்துச் சோதிக்கிறான்

‘இவனும்’ நானுமாக ஒரு கோடை காலத்தில்
பின் வாசல் கதவை உடைத்து ‘அவனுக்கு’ சவப்பெட்டி செய்தோம்
பின் செழித்துப் பெய்த வெய்யிலில்
‘அவனின்’ இறுதிப் பயணத்திற்கான உப்பை அறுவடை செய்தோம்

‘இவன்’ அடிக்கடி முத்தம் தருகிறவனாகவும்
அடிவயிற்றை வார்த்தைகளால் வருடுகிறவனாகவும் இருந்தான்
‘அவனின்’ வளர்ப்பு நாயின் பின்னங்கால்களாலேயே ‘அவனுக்கு’
குழி பறித்தோம்

ரகசிய இரவுகளில் ‘அவனுக்கான’ வெண்ணிறச் சவத்துணியை நெய்தோம்
புதைக்கும் தருவாயில்தான் கவனித்தோம்
அன்றறுத்த உப்பு ‘அவன்’ உடலுக்குப் போதுமானதாக இல்லை

இருவருமாக சற்று அழுது உப்பைப் பெருக்கினோம்
போதும் போதுமென்றான் ‘இவன்’
என் கண்களோ கட்டுப்பாட்டில் இல்லை
அது ‘இவனுக்குப் ’பிடிக்கவில்லை

‘இவன் பற்கடிப்பின் சத்தம்
கற்கால முரடனொருவன் பாறையில் தன் வேட்டையை கற்களால்
வரைவதென ஒலித்தது

ஒருவழியாக எல்லாம் முடிந்தது
குளிர்காற்றையும் பௌர்ணமியையும் வீட்டின் பின்புற முற்றத்திலிருந்து ரசித்தோம்
(ஆம். கோலமிட்டு அலங்கரிப்பதும் கூட பின்வாசலைத்தான்)

கொல்லையில் புதிய கீரைத்தோட்டத்தை உருவாக்கினோம்
கீரையை அவித்துக் கடையும்போதெல்லாம்
வீட்டுக்குள்ளிருந்து பிணவாடை வருவதாகச் சொன்னார்கள்
கற்பனைவாதிகள் !

‘இவன்’ துரிதமாக பின்வாசலுக்கு இரும்புக் கதவைப் பொருத்தினான்
வீட்டின் மூலையில் கிடந்த டார்ச் லைட்டுக்கு பேட்டரிகளை மாற்றினான்

அடிக்கடி கடல் பார்த்துவருகிறோம்
அதன் உப்பு காதலுக்கு நல்ல உவமையாகத்தான் இருக்கிறது .

-வெய்யில்

No comments:

Post a Comment