Sunday, 5 July 2026

36


காலச்சுமை
-ராஜ் கெளதமன்

சிலுவைராஜ் சரித்திரம், லண்டனில் சிலுவைராஜ் என தனித்துவமான படைப்புகளைத் தந்த ராஜ் கெளதமனின் படைப்பு. இவரின் எழுத்துகள் எப்போதும் எளிமையானவை. சிந்தனையைத் தூண்டும் வகையில் இருக்கும்.

காலச்சுமை தலைப்பே வித்தியாசமாக இருந்தது.

"காலம் மனிதன் மீது சுமத்தும் பாரம்" என்பதைக் குறிக்கிறது. இந்த நாவல், ஒரு தனி மனிதனின் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பல தலைமுறைகளாக ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை அனுபவங்களையும் பதிவு செய்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கிராமத்தில் படித்து முடித்து விட்டு.. வேலையின்றி இருக்கிறான் சிலுவை. திடீரென தந்தியில் பாண்டிச்சேரி கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கு நேர்முக தேர்வுக்கு அழைப்பு வருகிறது. எப்போதோ விண்ணப்பித்தது.. ஆனால் தந்தி வந்ததை நினைத்து பார்க்கவில்லை. எப்படியோ எந்த ஒரு இலஞ்சமும் இன்றி பணியில் சேர்கிறான். தமிழ் விரிவிரையாளராகி காணும் காட்சிகளிலிருந்து நாவல் துவங்ககிறது.

பெற்றோர் சம்மதத்துடன் ஏர்வாடியில் பொன்னம்மாவை திருமணம் முடித்த சிலுவை..இரு பெண் குழந்தைகளை தந்தையானான்.ஆனால் காலக்கொடுமையாக இளையமகள் எதிர்பாராத விதமாக இறந்துவிட அந்த சோகம் அவனை அலைக்கழித்தது. அவனை ஆற்றுப்படுத்தியது தத்துவ நூல்களும் ,மொழிபெயர்ப்பு நூல் எழுத துவங்கியதுதான். வாசிப்பு, எழுத்து, வீடுமாற்றம், எமர்ஜென்சி  காலகட்டம் என செல்லும் நாவல் புதிதாக மாற்றலாகி சேரும் கல்லூரியில் சாதொ பிரச்சனையை எதிர்கொள்கிறான்.

அன்றாடம் கல்லூரியில் நடக்கும் சம்பவங்கள் சுவை. சிலுவைக்கு ஒரு சோதனையாக ஒருபெயர் அவிச்ச ராணி என உச்சரிக்க இருக்கும்
நிகழ்வு சுவை.எமர்ஜென்சி காலத்தில் ஒரு தாழ்த்தப்பட்டவர் கல்லூரியில் விரிவுரையாளர் ஆனால் நேரும் நடைமுறை இடர்பாடுகளை யதார்த்த நடையில் சொல்லியிருப்பார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஊர் குறித்த நினைவுகள்,மக்கள் மனநிலை, உடன் படித்த நண்பர்கள், சக ஊழியர்கள் குறித்த விவரணைகள் வருகின்றன.

கல்வி சிலுவைராஜுக்கு புதிய உலகத்தைத் திறக்கிறது. இருப்பினும், சமூகப் பாகுபாடுகள் தொடர்ந்து அவரைத் துரத்துகின்றன
நம்மில் ஒருவராக சிலுவை தெரிகிறார்.சிலுவைராஜ் சரித்திரத்தின் நீட்சியாக தெரிவாதால் சிலுவையின் குணநலன்கள் நமக்கு நன்கு அறிமுகமானவைதான்.

சிலுவை காரைக்காலிலிருந்து 
புதுச்சேரிக்கு மாறுதல் ஆகிறார்.பெரிய ஊர், புதிய இடம் அங்குள்ள ஆய்வாளர்கள் ,ஊழியர்ளகள் என அதே சாதிய பிரச்சினை.

/இயக்கங்கள் சீரழிவதற்கு காரணம் மனுசங்கதான். எல்லாம் மாறுவது மாதிரி மனுசங்களும் மாறிப்போறாங்க. இல்லநான், மாறல அப்பிடியே இருக்கேன்னு அடம்பிடிக்கிற மனுசங்க உண்டுதான்.பறவைகளை போல ஜாலியா இருக்க ஆசைதான். எல்லாரும் பறவைகளா இருந்தா இது நடக்கும்.ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு மாதிரி/ என் மனித இயல்பை பகிர்கிறார் ஒரு இடத்தில்

சிலுவையின் பரிணாமங்கள் காலத்திற்கு ஏற்றபடி தன்னை மேம்படுத்திக் கொள்கிறான். சிலுவையின் பின்பாதி சரித்திரமாக நாவல் தொடர்கிறது.

சிலுவையின் மகளை கல்யாணம் செய்தும் கொடுத்தாயிற்று. ஓய்வு காலத்தில் தான் வாழ்ந்த வாழ்வை நினைத்துப் பார்க்கிறான்.திரும்பி பார்த்தால் வாழ்வே காலத்திடம் சுமையாக உள்ளது.நாமே நம்மை பற்றி சிந்திப்பது போல உள்ளது.. காலச்சுமையை எங்ஙனம் கொண்டு இறக்கி வைப்பது. அவ்வாறு இறக்கி வைத்தால் அதுவே ஆன்ம விடுதலை போல எண்ண வைக்கிறார்.

சிலுவை என்பவர் அசகாய சூரன் அல்ல. அன்றாடம் நாம் பார்க்கும் எளிமையான் மனிதன். அவரிடம் பலவீனங்களும், குழப்பங்களும், ஏமாற்றங்களும் உள்ளன. அதுவே அவரை மிகவும் இயல்பான, நம்பகமான கதாபாத்திரமாக மாற்றுகிறது.சுற்றியுள்ள சூழல்கள் நம்மை சூழ்ந்துள்ள வாழ்க்கை முறை எவ்வாறு நம் மீது ஆதிக்கம செலுத்துகிறது. நாம் அதிலிருந்து  விடுதலை அடைவது எவ்வாறு என யோசிக்க வைக்கிறது.

காலம் என்பது நாட்களைக் கணக்கிடும் கருவி மட்டுமல்ல; தலைமுறைகளின் காயங்களையும் சுமக்கும் நினைவகமாகும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment