ஹெரால்ட் ப்ளூமின் இலக்கிய வாசிப்பின் ஐந்து முக்கிய விதிகள் பற்றிய கட்டுரையைப் படித்துக்கொண்டிருந்தேன். அவர் எந்தவொரு இலக்கிய வாசிப்பையும் ஒரு தனிப்பட்ட, படைப்பாற்றல் மிக்க, ஆழமான அனுபவம் என்றே வரையறுக்கிறார். அதற்காக அவர் எடுத்தியம்பும் ஐந்து முக்கியமான விதிகளைத் தொகுத்துப் படிக்கும் போது நமக்கு வாசிப்பின் நுண்ணிய சூத்திரங்கள் கொஞ்சம் பிடிபடுகின்றன.
1. Clear your mind of cant: மனதை cant எனப்படும் ஒன்றுமில்லாத, புனிதமான, கோட்பாட்டுகளின் மற்றும் கல்விப்புலங்களின் சொற்களஞ்சியத்திலிருந்து அகற்றுவதை ப்ளூம் முன்வைக்கிறார்.
(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியை இருத்தலியல், பல்கலைக்கழகம் சார்ந்த அடைப்புக்குறிக்குள் அடக்கி வாசிக்க வேண்டாம். தஸ்தயேவ்ஸ்கி நம்முடைய வாழ்க்கையில் எப்படியாக ஒத்துப்போகிறார் என்றே வாசிக்க வேண்டும் என்றே நான் இதைப் புரிந்து கொள்கிறேன்.)
2. வாசிப்பில் உங்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துங்கள்:வாசிப்பு என்பது சமூக சீர்திருத்தக் கருவி அல்ல. அது முதலில் உங்களை மாற்ற வேண்டும். மற்றவர்களை மாற்ற நினைத்தால், அது பாசாங்காக மாறிவிடும். உண்மையான மாற்றம் உங்களிடமிருந்து தான் தொடங்குகிறது என்கிறார் ப்ளூம்.
(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது, இந்த நாவல் ரஷ்ய சமூகத்தையே மாற்ற வேண்டும் என்றெல்லாம் சிந்தனை செய்யாமல், நாவலில் வரும் இவானின் கடவுள் மறுப்பு நம்முடைய தனிப்பட்ட உள்ளார்ந்த சந்தேகங்களை எப்படி பிரதிபலிக்கிறது போன்ற கேள்வியை எழுப்பினால், அக்கேள்வியுடனான அந்த வாசிப்புக்கு பிறக்கும் மாற்றம் இயல்பாகவே நமது வாழ்வின் சுற்றத்தைப் பாதிக்கும் என்றே இதை நான் புரிந்து கொள்கிறேன்.)
3. உங்களுக்கு நெருக்கமானவற்றைத் தேடுங்கள்:
ஒவ்வொரு வாசகருக்கும் தனிப்பட்ட தொடர்ச்சியான இணைப்பு வாசிப்புள்ளது. அந்த இணைப்பைத் தொடர்ந்து வாசிப்பில் தேடுவதே எந்தவொரு வாசகனுக்கும் பயனளிக்கும். ஒரே இயல்பை பகிர்ந்துகொள்வதைப் போல உங்களை அணுகும் நூல்களைத் தேர்ந்தெடுங்கள் என்கிறார் ப்ளூம்.
(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியா டால்ஸ்டாய்யா என்கிற கேள்வி உங்கள் முன் வெளிப்படும் போது நீங்கள் உங்கள் வாசிப்பின் தொடர்ச்சியான இணைப்பு வழியே அச்சமின்றி ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும், தேவையற்ற புத்தகங்களையும் வாசிக்காமல் நீங்கள் அச்சமின்றி அவற்றை தயக்கமின்றி கைகழுவலாம் என்றே இதையும் நான் புரிந்து கொள்கிறேன்.)
4. படைப்பாற்றல் மிக்க வாசிப்பு:
உண்மையான வாசிப்பு என்பது சரியாகப் படிப்பது அல்ல. அது தவறாகப் படித்து, அதை உங்கள் சொந்த அனுபவத்துடன் இணைத்து, புதிய வாசிப்பனுபவத்தையும் உருவாக்குவது. இதைத்தான் ப்ளூம் படைப்பாற்றலுடன் தவறான வாசிப்பு என்றும் அழைக்கிறார்.
(படைப்பாற்றல் மிக்க தவறான வாசிப்பு என்பது வாசகரை அடிமையாக்கும் வாசிப்பு அல்ல; அவரை ஒரு படைப்பாளியாக உயர்த்தும் செயல்முறை. இது ஒரு கனவு போன்ற உரையாடல்,நீங்களும் புத்தகமும் சந்தித்து, புதிதாக ஒன்றைப் பிறப்பிக்கும் செயல் என்றே நான் இதையும் புரிந்து கொள்கிறேன்.)
5. முரண்களை மீட்டெடுங்கள்:
இது ப்ளூமின் ஐந்தாவது மற்றும் கடைசி மற்றும் முக்கியமான பரிந்துரை. கோட்பாடுகளின் ஆழமற்ற வடிவங்கள் முரண்களை அழிக்கின்றன. அதை மீட்டெடுப்பது வாசிப்புக்கு அவசியம் என்கிறார் ப்ளூம்.
(ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை வாசிக்கும் போது நாம் இவானை ஓர் அறிவுஜீவி, தர்க்கவாதி, கடவுள் மறுப்பாளன், மனித சுதந்திரம் மிகக் கொடூரமானது என்று கூறுகிறவன், குழந்தைகள் படும் வேதனைக்கு கடவுள் பதில் சொல்ல வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறான்.அதே இவான் தன் தந்தை கரமசோவின் கொலைக்கு மறைமுகமாகப் பொறுப்பேற்கிறான். தன் சகோதரன் திமித்ரியை காப்பாற்ற முயல்கிறான், ஆனால் தன் உள்ளுணர்வில் தந்தையின் மரணத்தை விரும்பியவனாக இருக்கிறான். இறுதியில் பைத்தியக்காரனாக மாறுகிறான், அவனது அறிவு அவனையே அழிக்கிறது என்கிற ரீதியில் எளிய வாசிப்பு வழியே இவானை நாத்திக அறிவுஜீவி என்று முத்திரை குத்திவிடுவோம் ஆனால் இவானின் முரண்பாடுகளை மீட்டெடுத்து வாசிக்கும் எவரும் இவானின் உள்ளார்ந்த முரண்பாடுகளை,அவனது அறிவின் பலமும், அதே அறிவின் கொடூரமும், ஒரே நேரத்தில் ஒன்றாக உணர்வார்கள். இதுவே ப்ளூம் சொல்லும் முரண்களை மீட்டெடுப்பது என்றே நான் புரிந்து கொள்கிறேன்.)
ஹெரால்ட் ப்ளூம் தஸ்தயேவ்ஸ்கியை அதிகம் உணர்ச்சிவயப்படும் மற்றும் ஆன்மீக தத்துவங்களை மிகைப்படுத்தல் செய்யும் மனிதர் என்கிற விமர்சனம் ஒன்றை முன்வைப்பார். இன்று அதே தஸ்தயேவ்ஸ்கியை வைத்தே ஹெரால்ட் ப்ளூம் அளித்திருக்கும் வாசிப்பின் ஐந்து வரையறைகளை நான் புரிந்து கொள்ள முயல்கிறேன்.
சிறந்த வாசகர் என்பவர் புத்தகத்தை சரியாக வாசிப்பவர் அல்ல. அவர் புத்தகத்தை தனக்குச் சொந்தமாக தவறாகப் புரிந்துகொள்பவர் என்பார் ப்ளூம். நானும் எனக்கு ஏற்றவகையில் ப்ளூமின் கோட்பாடுகளையும் தவறாகப் புரிந்துகொள்ள முயல்கிறேன். இதன் வழியே என் வாசிப்பும் இன்னும் ஒருவேளை மேம்படலாம்.
No comments:
Post a Comment