Tuesday, 17 December 2024

புத்தகம்-33


Reading_Marathon2024
#24RM050

Book No:33/100+
Pages:710

ஷாஜி இசைக்கட்டுரை  முழுத்தொகுப்பு
-ஷாஜி

பாடல்கள் என்பது மனித வாழ்க்கைக்கு கிடைத்த வரம். சந்தோஷத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்ளும் தோழன் என்றால் அவை பாடல்களே. பாடல்கள் கேட்காத மனிதர்களே இல்லை எனலாம். பாடலின் நுட்பத்தை அறிந்து கொண்டு கேட்கும் போது அந்தப் பாடல் இன்னும் தெய்வத்துவம் ஆகிவிடுகிறது. தமிழகத்தில் தோன்றிய இசையமைப்பாளர்கள், பாடல்கள் மட்டுமின்றி உலக அளவில் இந்திய அளவில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பாடகர்கள் குறித்த முழுமையான அறிமுகத்துடன் அவர்களின் திறமையுடனும் இந்த புதிய புதிய தகவல்களை இந்த புத்தகம் நமக்குச் சொல்கிறது. அதுபோலத்தான் இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகளும் பாடல்கள் குறித்து நம்மை முழுமையாக செய்திகளை தீர்த்து வைக்கும் விதத்தில் ஒவ்வொரு கட்டுரைகளும் இருக்கின்றன. இன்று அலெக்சாவில் பாட்டு கேட்கும் ஹைடெக் வாழ்க்கை வந்தாலும் கூட.. பாடல்கள் கேட்பதில் அரிச்சுவடி ரேடியோ தான். அந்த ரேடியோவில் இருந்து தான் இந்த கட்டுரையும் துவங்குகிறது.

நல்ல பாடல் சரணங்களில் பல்லவியை விட மேலே சென்று புதிய இடங்களை தொடுவது எம்.எஸ்.வி யின் சிறப்பம்சம். எம்எஸ்வியின் இன்னொரு முகம் உச்ச ஸ்தாயில் பாடும் பாடல்கள் அதற்கு உதாரணமாக பல பாடல்களை சொல்லலாம் ஜகமே மந்திரம் ,சொல்லத்தான் நினைக்கிறேன் போன்ற பாடல்கள். Could you be loved?, In Bob I Trust போன்ற வரிகள் பாப் மார்லியின் சட்டைகளில் விரிந்திருப்பதாகும். ரெகே ஸ்பானிஷ் மொழிச் சொல் அதற்கு அரசனின் இசை என்ற பொருள் உண்டு என்று பாப் மார்லி சொல்லி இருப்பார். தமிழில் சின்ன சின்ன ஆசை, முஸ்தபா ,அகிலா அகிலா போன்றவை அந்த வடிவங்களை பெற்றுள்ளவை ஆகும். இசை உலகுக்கு அவர் வந்த பயணத்தையும் அனுபவத்தையும் இதில் விவரித்துள்ளார். 

'பெண்ணே நீ அழக்கூடாது 
உனது துயர்களை எல்லாம் 
துடைத்தெறியும் எதிர்காலம் அதோ வருகிறது பெண்ணே நீ அழக்கூடாது
No woman No cry.. என்பது பாப் மார்லியின் புகழ்பெற்ற பாடல். 

இதேபோல பாப் மார்லியின் மகனும் ரிக்கே பாடகனும்மாகிய சிக்கிமார்லி 
கடவுளின் பெயரால் எனும் தன் பாடலில் இவ்வாறு பாடினார் என்பதை சொல்கிறார் 

கடவுளின் பெயரால் கொல்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் கைப்பற்றுகிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் வெறுக்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
கடவுளின் பெயரால் பீற்றிக்கொள்கிறீர்கள் உங்கள் கடவுளின் பெயரால் 
எல்லா மதங்களும் துடைத்தழிக்கப்பட வேண்டும் அதன் பின் நாம் வாழ்வுக்காக வாழ்வோம் 
நம்மை பிரிப்பது மதம் 
குழம்பிப்போன மனிதர்களால் உருவான மதம் 
என்று பாடல் நிதர்சன வரிகளை உள்ளடக்கியது

இதே போல் தான் மக்கள் பாடகன் டி எம் சௌந்தரராஜன் குறித்த கட்டுரையில் அவர் பாடல்களையும் மிகவும் ரசித்து இருப்பார். எம்எஸ்வி அமைக்கும் மெட்டுகளுக்கு யாராலும் பாட முடியாத காலகட்டத்தில் டி எம் சௌந்தரராஜன் அவர்கள் மிக எளிமையாக அதனை கையாண்டதால் உச்சஸ்தாயில் அமையும் பாட்டாகிலும் மெலடி பாட்டுகளினாலும் தன் குரல் வளத்தால் அந்த இசைக்கு உயிர் கொடுப்பார். இந்த நடிகர் பாடினார் என்பதை நீங்கள் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிக் கொள்ள டி எம் எஸ் அவர்கள் மெனக்கெட்டு பாடி இருப்பதும் நாம் கவனிக்கப்பட வேண்டி ஒன்று.

மாயா வனங்களில் விகரிப்பவள் அல்ல நான் கனவுலகங்களில் பயணிப்பவள் அல்ல நான் 
அந்தி மேகங்களில் வசிப்பவளும் அல்ல நான் 
இசை நிரம்பி வழியும் ஒரு ஜீவன் மட்டும் நான் 

இந்த வங்க மொழிப்பாடல் பத்தாண்டுகளில் கேட்கப்பட்ட தனித்துவமிக்க பாடலாக கட்டுரையாளர் குறிப்பிடுகிறார். இதனை பாடியவர் நவீன வானம்பாடியான ஸ்ரேயா கோஷால் என்பதை கூறி புகழாரம் சூட்டுகிறார். இசையில் பூரண சுருதி தன்மை அல்லது தூய சுருதி தன்மை என்ற ஒன்று இருக்கிறது. இந்த இரண்டிலும் ஒருங்கே அமையப்பெற்றவர் தான் இப்பாடகி என்கிறார்.

ஒரு பாடல் உச்சத்துக்கு போகும் திறனையும் ஆழத்துக்குச் செல்லும் திறனையும் ஒரே போல் வெளிப்படுத்தும் மெட்டு அமைத்து, அது எத்தனையோ நுட்பமான திருப்பங்களும் வளைவுகளும் கொண்டு இறுதியில் உச்சத்துக்கு சென்று உலவும் என்பதை கவனித்தால் அத்தகைய மெட்டே நம்மை கவரும் ஒரு பாடலாக அமைந்து விடுகிறது. அதில் பின்னணி இசைக்கும் பாடலுக்கும் துல்லியமான ஒருமையை ஏற்படுத்தி மிகவும் ரசிக்க வைப்பவர் தான் ஏ எம் ராஜா என்ற தேன் கலந்த குரலுக்குச் சொந்தக்காரரான அவருக்கு புகழாரம் சூட்டுகிறார். மலையாளத்தில் சத்யனின் குரலாக புகழ்பெற்ற ராஜா தமிழில் ஜெமினியின் முகமாகவே இருந்தார். சிற்பி செதுக்காத பொற்சிலையே, தென்றல் உறங்கிய போதும் போலான துயரத்தையும் தாபத்தையும் தாங்கிய பாடல்கள் நீங்கா புகழ் பெற்றன. கல்யாண பரிசு தேன்நிலவு வரை ஸ்ரீதர் இடம் இணக்கமாக இருந்தவர் தேன்நிலவு படத்தில் பின்னணி இசை அமைக்க மறுத்து எழுந்த பிரச்சனையால் ஏற்பட்டமான கசப்பு அடுத்து நெஞ்சில் ஒரு ஆலயம் பட வாய்ப்பு எம்.எஸ்.விக்கு சென்றது. 

சின்ன சின்ன ஆசை பாடலை பாடிய மின்மினியை அறிமுகப்படுத்தியது இளையராஜா தான் மீரா படத்தில் அவரின் முதல் பாடல் அமைந்தது. அவரின் பாடல் வரிகளை சிலாகித்து முத்தாய்ப்பாய் ஒரு வரியை எழுதி முடித்து இருப்பார். பாடுவதற்கு தான் தயாராக இருந்தும் யாரும் பாடுவதற்கு அழைக்க முன்வரவில்லை என்ற சோகத்தையும்  மின்மினி பதிவு செய்திருப்பார். அதனை வைத்து ஒரு கவிதை வரி ஒன்று சொல்லி முடித்திருப்பார்

 மின்மினி 
மிகச்சிறியது 
இருள் கவியும் அந்தியில் 
ஒரே ஒரு கணம் 
எல்லா நட்சத்திரங்களையும் 
அது வெல்கிறது 
பின்னர் என்றென்றிக்குமாக 
எரிந்து மறைகிறது 

என்று சொல்லி இருப்பார்.

மர்லின் மன்றோவின் வாழ்வைப் பற்றியும் இசையை பற்றியும் சொல்லும்போது இறுதியில் அவருடைய கூற்றாக ஒரு கவிதையை நமக்குச் சொல்லி இருப்பார்."சிறுவயதில் நீ அழகாக இருக்கிறாய் என்று யாருமே எனக்குச் சொன்னதில்லை .நீ ஒரு அழகான குழந்தை என்று அழகில்லாத சிறுமிகளிடம் கூட நாம் சொல்ல வேண்டும். அந்த சொல்லில் அவர்களுக்கு கிடைக்க கூடிய தன்னம்பிக்கை வாழ்நாள் முழுவதும் அவர்களை வழிநடத்தும்" என்றார்.

"காற்றிலாடும் மெழுகுவர்த்தியை போல் இருந்தது உன் வாழ்க்கை 
உன் துயரமான தனிமை 
வழிதான் நீ பெற்ற ஊதியம் 
எல்லா கவர்ச்சிகளையும் மீறி 
எங்கள் நினைவில் என்றும் அழகாய் இருப்பாய் போய்வா மர்லின் மன்றோ"

என்ற ஒரு துயரக் கவிதையும் இறுதியில் கொடுத்து இருப்பார்கள்.

வாசிப்பிலும் சினிமாவிலும் நம்முடைய ரசனை இயல்பாக மேம்படுவது உண்டு. ஆனால் பாடல்கள் கேட்பதில் பெரும்பாலும் நாம் இளமைக்காலத்து ஏக்கங்களில்தான் இன்றும் பல பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம் .இசை ரசனையும் இசை பற்றிய புரிதல்களையும், இது போல புத்தகங்கள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. மறந்து போன இசை கலைஞர்கள் இசை ஆளுமைகள் புகழாலும் வெற்றியாலும் துடைத்தெளிக்க முடியாத கலைஞர்களின் கண்ணீரைப் பற்றி, பெருங்கூடடங்கள் சூழ்ந்திருந்த வேளையிலும் தனிமையில் மடிந்த இசை கலைஞர்களைப் பற்றி, இசை வானத்தில் புதிதாய் பிறந்த வானம்பாடிகள், இன்னும் பறந்து கொண்டிருக்கும் பறவைகள், திரைப்பட நடிகர்களை பற்றி உலக வடிவிலான இசை வடிவங்கள் எவ்வாறெல்லாம் இருக்கின்றன என்பதை பற்றி, இசையை எவ்வாறெல்லாம் எப்போதெல்லாம் கொண்டாடலாம் என்பது பற்றியும் விரிவாக இந்த நூல் அலசுகிறது.

தமிழ் பாடல்கள் மட்டுமின்றி இந்தி பாடல்கள் கன்னடம் மற்ற மொழி பாடல்கள் இசை தொகுப்புகள் இசை குறிப்புகள் மேடை பாடல்கள் இசை கலைஞர்களின் வரலாறுகள் கர்நாடக இசை சங்கீதம் ஒலி அமைப்புகள் குறித்தும் இந்த புத்தகம் அலசுகிறது.

இசைக்கலைஞர்கள் யாரும் தெய்வத்தின் ஆசி பெற்று ஒரே நாளில் யாரும் முன்னேறவில்லை. ஒவ்வொரு நாளும் படிப்படியாக தங்கள் திறமைகளை முன்னிறுத்தி அவர்கள் அனைவரும் முன்னேறியுள்ளனர். அவர்களுக்கு பின்னால் ஒரு தன்னம்பிக்கை நிரம்பிய வாழ்வு ஒன்று உள்ளது. அதுதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். எந்தத் துறையை சேர்ந்தவராய் இருந்தாலும் அதில் முழு ஈடுபாட்டுடனும புதிய தேடலுடனும் இருப்பவர்களுக்கு இந்த உலகம் வழிகாட்டுகிறது. ரத்தின கம்பளங்களையும் விரிக்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஜி.ராமானுஜம்


உடலைக் கவனித்துக் கொள்ள வேண்டும். ஆனால் அளவுக்கு மீறிக் கவனிக்கக் கூடாது.  உடலில் உள்ள சிறு சிறு தொந்தரவுகளைக்கூட பெரிய பெரிய வியாதியாக நினைத்து அடிக்கடி மருத்துவர்களிடம் சென்றால் தேவையில்லாத பரிசோதனைகள், மருந்துகள் எனப் பிரச்சனைகள் கூடிக் கொண்டேதான் போகும். ஒன்று மருத்துவரும் பயந்து போய் பரிசோதனைகள் எல்லாம் செய்து பார்ப்பார் அல்லது பெரிய கார்ப்பரேட் மருத்துவமனையாக இருந்தால் உங்களை வைத்து ஒரு ரூம்  அல்லது குறைந்த பட்சம் ஒரு சுவராவது கட்டி விடுவார்கள். 

 முக்கியமாக இணையத்தில் நோய்  அறிகுறிகளை வைத்துத் தேடிப் படித்தால் கட்டாயம் பெரிதாக பீதி அடையத்தான் செய்வீர்கள். இது போல் விபரீதமாகக் கற்பனை செய்வதற்கு Hypochondriasis என்று பெயர். இப்போது Illness anxiety என அழைக்கப் படுகிறது. ( உடனே எனக்கு illness anxiety இருக்குமோ எனப் பயப்படாதீர்கள்)

பாதிக்கு மேற்பட்ட உடல் பிரச்சனைகளை  முறையான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி , உறக்கம், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதன் மூலமே சரி செய்ய முடியும். ( நான்கு உ க்கள்)

( இருகைகளிலும் பெரிய பைகள் நிறைய மருத்துவ பைல்களோடு இன்று வந்த ஒருவரைப் பார்த்தபின் தோன்றியது)

- டாக்டர்.ஜி.ராமானுஜம்.

Sunday, 15 December 2024

திருச்செந்தாழை



ஒரு கனவு நிறைவேறுவதற்கு தன்னால் எதுவும் செய்யவியலாது என்கிறபோது வருகின்ற கையறுநிலை மௌனத்திற்கு தனி நிறம் உண்டு.
லட்சியங்களை அடைவதற்கு உதவிய மனதின் மகிழ்வைப்போல,
அந்த வெற்றியை தூரத்தில் இருந்தபடி பாதங்களின் தனிமை இன்னும் ஆழமானது.

ஒருபோதும் தான் அடகு வைத்த பொருட்களை மீட்கமுடியாதவளாக,
சதா வறுமைபீடித்தவளாக,
படிக்க விரும்பும் மகனை பட்டறைக்கு அனுப்புபவளாக இருக்கின்ற,
காப்பிக்கொட்டையை கடத்தி விற்பவளாக இருக்கின்ற அந்த பெண்மணி அழுக்கான தனது கைகளால்  மகனை  அணைத்தபடி உறங்கும்போது,
அவன் அவளிடமிருந்து தப்பி தனது கனவினை நோக்கி ஓடுகிறான்.
ஒரு லட்சியவாத விரும்பிக்கு படம் இதோடு முடிகிறது.

ஆனால்,பின்னொரு நாள் அவளது மரணத்திற்கு பிறகு, தான் வாழ்ந்த அந்த வீட்டிற்கு வருகின்ற - இப்போது பிரபலமான வயலினிஸ்டாகிவிட்ட - அவனுக்கு வறுமையின் காலத்தில் தான் வெறும் 30 லியாருக்கு அடமானம் வைத்த அந்த வயலினை ஏதோவொரு குற்றவுணர்வின் பொருட்டு மீட்டு வைத்திருக்கிறாள்.
ஒரு துணைப்பாத்திரம் போன்ற அவள்தான் இதில் நிஜமான வாழ்வினை வெளிப்படுத்துபவள்.
அதனாலேயே அவளைப் பார்த்து கோபம் வரவில்லை.மாறாக , ஒருவித ஆதங்கம் எழுந்துவிடுகிறது.

நாம் பார்க்கின்ற பெரும்பாலான அம்மாக்கள் " நீ பட்டாதான் திருந்துவ ..பாரு " எனத் திட்டிக்கொண்டே இருப்பவர்கள்.
நாம் பெறுகின்ற வெற்றியில் ஒரு விள்ளலை மட்டும் எடுத்துக்கொள்பவர்கள்.
தோற்றுப்போன ஒரு இரவில் தூக்கமற்று நாம் குமைந்துகொண்டிருக்கும்போது,
" கொஞ்சம் தண்ணி குடிச்சுட்டு தூங்குய்யா..சரியாப்போகும் தூங்கு.."
என்றபடி இருட்டுக்குள்ளிருந்து குரல் தருபவர்கள்.
அதனாலேயே இவளும் நம் ஒவ்வொருவரின் அம்மாவைப் போல உலகின் அழகான பெண் ஆகிறாள்.

8am metro (Hindi)


8am metro (Hindi)

நல்ல படங்களுக்கு எப்போதும் ரசிகர்கள் உண்டு .அந்த வகையில் நண்பர் ஒருவர் பரிந்துரையின் பெயரில் இந்த படம் பார்க்க நேர்ந்தது. ஆக்சன் படமோ காமெடி படமும் இல்லாமல் ஒரு ஃபீல் குட் மூவி 

#கதை

நாயகி கணவனுடன் குழந்தைகளுடன் வசித்து வருகிறாள். வீடே உலகம் என்று வாழ்ந்து வருபவர்களுக்கு அவளுடைய தங்கை பிரசவத்திற்காக ஹைதராபாத்தில் மருத்துவமனையில் சேர்ந்து இருப்பார். அவருடைய கணவன் அமெரிக்காவில் இருப்பதால் அவளை பார்ப்பதற்காக செல்ல வேண்டும் என கணவனிடம்  கூறுகிறாள்.

அவனும் வேலைப்பளுவில் உள்ளதால் நீ மட்டும் தனியாக சென்று வா என்று கூறுகிறான். சிறுவயதிலேயே அவள் தந்தையுடன் ரயிலில் செல்லும் போது ஏற்பட்ட கசப்புணர்வில் அவள் மீண்டும் ரயிலில் செல்வதையே மறந்து விட்டிருந்தாள். சொல்லப்போனால் வெளியே செல்வதையே அவள் பயந்து கொண்டு செல்லவில்லை. எனவே இது ஒரு புது அனுபவமாய் ஹைதராபாத்துக்கு செல்கிறாள். இரண்டு வாரங்கள் அங்கே தங்கி இருந்து தங்கையை கவனித்துக் கொள்ள வேண்டும். 

தங்கையை பார்த்துவிட்டு திரும்ப முயலும் போது தங்கை ஒரு யோசனை சொல்கிறாள். மெட்ரோ ரயிலில் சென்றால் வீட்டிற்கு செல்ல எளிமையாக இருக்கும் என கூறுகிறாள். அவளுக்கு இன்னும் பயம் அதிகரித்திருக்கிறது. மெட்ரோ ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கும் போது தான் நாயகன் ப்ரீத்தம் அறிமுகம் ஆகிறான். இவளின் பய உணர்வை கண்டு உதவி செய்ய முயல்கிறான் .ஆனால் இவள் பயத்தில் அவனிடம் ஒரு வார்த்தையும் பேசவில்லை. 

மறுநாளில் இருந்து இருவரின் நடவடிக்கைகளும் மாறி ஒருவருக்கொருவர் நண்பர் ஆகிறார்கள். அவள் சிறுவயதில் எழுதும் கவிதைகளை எல்லாம் படித்துவிட்டு ரசித்துக் கூறுகிறான். இவனும் ஒரு புத்தகப் பிரியராக இருப்பதனால் அவளுக்கு இவனையும் பிடிக்கிறது. இருவரும் நட்பாக பழகும் போது இவள் ஊருக்கு செல்ல வேண்டிய நாள் வருகிறது. 

இருவருக்கும் இடையில் இருக்கும் நட்பை எவ்வாறு வெளிப்படுத்துகின்றனர் எவ்வாறு அதனை புனித படுத்துகின்றனர் என்பதைத்தான் இந்த படம் சொல்கிறது. எதார்த்தமான இத்திரைப்படம் திருமணத்துக்கு பிறகான ஆண் பெண் நட்பு குறித்து பேசுகிறது 

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பார்த்ததினால் ஒரு பீல் குட் மூவி பார்த்த உணர்வு வருகிறது 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

Saturday, 14 December 2024

உதயகீதம் படத்தில் சிறையில் மோகன் இருக்கும் போது அவரை பார்க்க வரும் ரேவதி, சிறையின் வெளியே நின்று கொண்டு நிலாவை பார்த்து “பாடு நிலாவே தேன் கவிதை” என மோகனை மனதில் நினைத்து பாடுவார். அதற்கு பதில் சொல்ற மாதிரி மோகனும் “பாடு நிலாவே தேன்” என பாடுவார்.ஹீரோ சிறைக்குள் இருக்கும் போது அவர் கண்களுக்கு நிலா எப்படி தெரியும். அதனால அவர் பாடும் போது ஒரு “ம்” சேர்த்து “பாடும் நிலாவே தேன் கவிதை“ அப்படி இருக்கலாமே” என்று இசைஞானி சொல்ல.... கதாநாயகன் நாயகியை நிலவாக எண்ணி “பாடும் நிலாவே” என பாட... கவிஞர் மு.மேத்தா இசைஞானியிடம் “அண்ணே நீங்க சேர்த்த அந்த “ம்” வார்த்தை இந்த பாட்டை ஜம்முனு ஆக்கீடுச்சு” என்று கூறி மகிழ்ந்தார்... இந்த பாட்டை பாடிய பிறகே SPB இசை ரசிகர்களால் பாடும் நிலா என்று கொண்டாடப்பட்டார்..-படித்தது

புத்தகம்-31


Reading_Marathon2024
#24RM050

Book No:31/100+
Pages:138

சீமுர்க்
-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

கதை சொல்லுவதில் சம்பவங்களை கோர்வையாக்கி சொல்வது ஒருவகை என்றால், வார்த்தைகளின் மாயாஜாலத்தையும் வாசிப்பனுவத்தையும் சேர்த்துக் குலைத்து கதையை சொல்லுதல் என்பது இன்னொரு முறை. இந்த இரண்டாம் வகை கதைகள் தான் இந்த புத்தகத்தில் உள்ள  ஒன்பது கதைகளும்.

ஒவ்வொரு சனிக்கிழமை மாலையும் மதுபான விடுதிக்குச் செல்லும் நாயகன் அங்கு எதிர்பார்த்து இருக்கும் பூனையை பற்றி விவரிக்கிறான். உயர் குடியில் நல்ல கம்பெனியில் பெங்களூருவில் பணிபுரியும் அவன் வாரத்துக்கு ஒருமுறை மதுபான விடுதிக்கு வந்து தன் மனதின் ஓவியங்களை சுற்றியுள்ள அனைத்து பொருட்களையும் ஒப்பிட்டு பார்த்து இருப்பான். கடந்த காலத்தில் பனி மூடிய சிகரங்களில் இருந்து புலம்பெயர்ந்து வந்த கூர்காவின் அன்பினை பெரும் அவன் அவனுடைய வாழ்க்கையையும் கேட்கிறான். அதன்பின்பு இருவருக்கும் நடக்கும் உரையாடல்களின் வழியே அவன் எவ்வாறு இவருடைய எண்ணங்களை மாற்றி அமைக்கிறான் என்பது தான் கதை.

மூதாதையரிடமிருந்து இரண்டாம் உலகப் போர் கால வாள் ஒன்று தாத்தாவிடம் இருந்தது. அந்த வாளின் பெருமையை உணர்ந்தவர் தாத்தா மட்டுமே. பிறகு அவர் மதித்ததால் நாங்கள் அனைவரும் அவற்றை மதித்து வந்தோம், பாதுகாத்து வந்தோம். திடீரென அந்த வாள் காணாமல் போகிறது. தலைமுறை இடைவெளி தாண்டி அந்த வாள்  மதிக்கப்படுகிறதா அல்லது உதாசீனப்படுத்தப்படுகிறதா என்பது தன் வரலாற்று கனவுகளின் வரலாறு
 செய்த வாளின் வரலாறும் என்ற கதை.

பெண்கள் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவரும் கிரிக்கெட்டை குறித்து ஆய்வு செய்பவருமான பரத்குமார் மாதத்தின் இரண்டாம் சனி ஞாயிறு காதலி வைஷ்ணவியோடு செலவிடுபவர். அவர்களின் நண்பர்களான இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரசாந்த் மற்றும் வசுதாவிடம் வார இறுதியில் கொண்டாட செல்லும் போது பிரசாந்த் மெய்யியல் தர்க்க உரையாடல் தான் 'விடுமுறை தினத்தில் ஓர் அனார்கிஸ்ட்' இக்கதையாக சொல்லப்படுகிறது.

அலுவலகத்தில் பணியாற்றி வரும் நாயகனுக்கு 13 ஆம் நூற்றாண்டை சேர்ந்த கஸ்வினி குறித்த நினைவு மேலிடுகிறது. அந்த நினைவின் வழியே செல்லும் கதைகளில் அவர் கண்ட வாழ்வியல் என்ன என்பதை கனவின் வழியே கண்ட சொற்களை நமக்கு சொல்லி இருப்பதாக சீமூர்க் கதை இருக்கிறது

சிறுகதைகள் புதுமை வடிவில் ஜே.எம் கூட்ஸின் நாவலான 'த போல்' என்பது அடியொற்றி நீத்தார் கதையை எழுதியுள்ளார். அதில் உள்ள சிறப்பு என்னவெனில் எண்களிட்டு பாயிண்ட் ஆக இருக்கும் கதைகளில் நீத்தார் கதை எழுதி இருப்பார்.

அடுக்ககத்தில் குடியிருக்கும் நாயகன் மேலே கீழே வரும் போதும், போகும்போதும் கருப்பு பூனை ஒன்று இருப்பதை கண்டார். வளர்ப்பு பிராணி வளர்ப்பதை விரும்பாத தன் தாயிடம் எப்படி சொல்வது எனக்கு அந்த கருப்பு பூனை பிடிக்கும் என்று. இருந்தாலும் உள்ளூர ரசித்து கொண்டு சென்றவன் நான்காம் தளத்தில் வசிக்கும் பிருந்தா தான் பூனையின் உரிமையாளர் என்று தெரிந்தது. ஒரு கட்டத்தில் அந்த பூனையை பிருந்தா கொன்று விட்டதாக செய்தி வருகிறது. ஏன் கொன்றார் எதற்காக கொன்றார் என்பதற்கான நினைவுத் திரையில் கருப்பு பூனை கதை சொல்லி இருப்பார்

ஒருவரின் அல்லது வறிய நிலையை கண்டு இறங்கினால் அது கிருபை மட்டுமே. ஆனால் அதை மாற்றுவதற்கு முயன்றால் அது தயை. கிருபை எளியவர்களுக்கானது. தயை வலியவர்கள் செய்வது. கதையின் நாயகன் பணியாற்றும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக்கொண்டு 100 பிச்சைக்காரர்களுக்கு ஆளுக்கு 100 ரூபாய் வழங்குவது அவருடைய திட்டமாக இருந்தது. அவ்வாறு பல இடங்களில் தேடி 100 பிச்சைக்காரர்களுக்கு தலா 100 ரூபாய் கொடுக்கிறார். நண்பர்கள் இதனை கேலி செய்கிறார்கள் மறுநாள் நீண்ட நாளாக தர வேண்டிய நண்பர் அந்த பத்தாயிரம் தொகையை அனுப்பி இருந்தார். இரண்டையும் ஒப்பிட்டு நோக்கி கிளரிஸ் லிஸ்பெக்டரின் வரிகளை மேற்கோளாகக் கொண்டு இந்த கதை முடிகிறது

*எதிர்காலம் என்ற ஒன்றில் நான் நுழைந்து வழி தெரியாமல் நிற்பதை போல் உணர்ந்தேன் 

*எவையெல்லாம் நம் முன் தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் நமது கவனம் குறைவதற்கு வெகுகாலம் ஆகிறது. 

*இருளை விரட்டுவதற்காக ஒரு மின்விளக்கு எரிந்து கொண்டிருந்தது.

*அறிவால் வாழ்பவர்களுக்கு மட்டுமே தொடர்ந்து கற்பது தேவையானது.

*கடவுள் மனிதனின் மெய்க்காப்பாளன், அரசு மனிதனின் வாயில் காப்பாளன். ஆனால் உண்மையில் மனிதன் அரசின், கடவுளின் அடிமை. எல்லா ஜனநாயக அரசுகளும் மனிதனை எஜமான ஸ்தானத்தில் வைத்திருப்பதாக நடிக்கின்றன.

*திருமணத்தை தவிர்ப்பதற்கு எனக்கு பெரிய காரணங்கள் ஏதுமில்லை. வாழ்வை குறித்த எனது பார்வைகளை போதுமானதாக இருந்தன.

மேல்நாட்டு பாணியிலான கதை சொல்லும் வகையை நம் ஊர் சிந்தனையோடும் கலந்து கொடுத்திருப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லி இருந்த விதமும் அணுகி இருந்த நோக்கமும் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுக்கிறது 

 தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Friday, 13 December 2024

கிழக்கு தொடர்ச்சி


கிழக்குத் தொடர்ச்சி, 

இந்தியாவில் குறைந்த அறியப்பட்ட ஆனால் குறிப்பிடத்தக்க மலைப்பகுதி, 

கிழக்குக் கடற்கரை ஓரமாக 1,750 கிலோமீட்டர் தூரம். 

உயிர்பன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியம் நிறைந்தவர்கள், காடழிப்பு மற்றும் வாழ்விட சீரழிவு போன்ற அச்சுறுத்தல்களை இந்த பிராந்தியத்தில் எதிர்கொள்கின்றனர்.

கிழக்குத் தொடர் இந்தியாவின் கிழக்குக் கடற்கரைக்கு இணையாக ஓடுகிறது, 

அதன் அடிவாரம் மற்றும் கடற்கரைக்கு இடையே பரந்த சமவெளிகளை விட்டு.

ஒடிசாவில் உள்ள மகாநதி தொடங்கி தமிழகத்தில் உதகை வாகை வரை மிகவும் உடைந்து அகப்பட்ட மலைகளின் சங்கிலி இது. கோதாவரிக்கும் கிருஷ்ணாவுக்கும் இடையில் அவை கிட்டத்தட்ட மறைந்துவிட்டன

மகாநதிக்கும் கோதாவரிக்கும் இடையில் வடக்குப் பகுதியில் மட்டுமே கிழக்குத் தொடர் மலைப்பாடங்கள் உண்மையான மலைக் குணத்தை வெளிக்காட்டுகின்றன. 

இந்த பகுதி மாலியா மற்றும் மாடுகுலா கொண்டா கோலங்களை உள்ளடக்கியது.

மாலியா வரம்பின் சிகரங்கள் மற்றும் விடுதிகள் 900-1,200 மீ. மற்றும் மகேந்திர கிரி (1,501 மீ) என்பது இங்கு உயரமான சிகரம் ஆகும்.

மாடுகுலா கொண்டா வரம்பில் 1,100 மீ மற்றும் 1,400 மீ வரை அதிக உயர்வுகள் 1,600 மீ மேல் பல சிகரங்கள் உள்ளன. அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஜிந்தகடா சிகரம் (1690 மீ) அர்மா கொண்டா (1,680 மீ), கலி கொண்டா (1,643 மீ), சின்க்ரம் குட்டா (1,620 மீ) ஆகியவை முக்கியமான சிகரங்கள்.

கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளுக்கு இடையே, கிழக்குத் தொடர் மலைகள் மலைப்பாதையை இழந்து, கோண்ட்வானா வடிவங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

இந்த ரேஞ்சின் தெற்கு பகுதி பால்கோட்னா ரேஞ்ச் என அழைக்கப்படுகிறது.

தெற்கே, மலைகள் மற்றும் பீடங்கள் மிகக் குறைந்த உயரங்களை அடைகின்றன. ஜவ்வாதுமலை மற்றும் சேர்வராயன்-கல்வராயன் மலை மட்டுமே 1,000 மீ உயரத்தில் இரண்டு தனித்துவமான அம்சங்களை உருவாக்குகின்றன.

எஸ்.ரா


நரையேறும்_காலம்

அப்பாவின் மீது கோபம் துளிர்க்காத இருபது வயது இளைஞனே உலகில் இல்லை. ஆனால், அந்தக் கோபம் அப்பாவின் மீதான கோபமில்லை. தனது அடையாளங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பதன் விளைவாக உண்டான கோபம். 

பையனுக்கும் அப்பாவுக்குமான உறவு படகுக்கும் அதைச் செய்த மரத்தச்சனுக்கும் உள்ள உறவைப் போன்றது. படகு ஆற்றில் விடப்படுவதற்காகத்தான் உருவாக்கப்படுகிறது. தச்சன் அதைச் செய்யும் போது மிகக் கவனமாகச் செய்கிறான். ஆனாலும் அதை ஆற்றில் விடாமல் வீட்டிலே வைத்துக்கொண்டு இருக்க முடியாது. அதோடு ஆற்றின் சீற்றத்தைச் சந்திக்க படகிற்கு அவன் கற்றுத்தந்து விடவும் முடியாது. கூடவே இருக்கவும் முடியாது. ஆற்றின் விசையை எதிர்கொள்வது படகின் விதி. 

தொலைவில் செல்லும் படகின் போக்கினைக் கரையிலிருந்து மௌனமாகப் பார்க்கும் தச்சனைப் போன்றதுதான் அப்பாவின் நிலை. ஒரு நாள் நாமும் அந்த தச்சனில் ஒருவனாக இருப்போம் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை .

-எஸ்.ராமகிருஷ்ணன்

Sunday, 8 December 2024

ஆஸ்துமா என்ற வார்த்தை, 1398-ல் லத்தீன் பாஷையிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்தது. கிரேக்க மொழியில் azein என்றால், மூச்சு வாங்குவது. ‘அனிமாஸ்’ - காற்று என்னும் வேர்ச் சொல்லுடன் தொடர்பிருக்கலாம் என்கிறார்கள்.-படித்தது

ஒரு மகுடத்தை அல்லது அங்கீகாரத்தைத் தேடி அலைந்து இத்தனையாண்டுகளை நான் வீணடித்துவிட்டேன் என்று எனக்கு உறுதியாகத் தெரியும். போதுமான அளவுக்கு மகத்தான செயல்களை ஆற்றுவதன் வழியாக அந்த வெகுமதிக்குத் தகுதியுடையவனாக என்னை ஆக்கிக்கொள்ள விரும்பினேன். ஆனால், இனிமேல் அவை எனக்குத் தேவையில்லை. தற்போது நான் விரும்புவதே வேறு. கொஞ்சம் கதகதப்பான, புகலிடமாக விளங்குகிற, எனது தகுதி குறித்து அக்கறைப்படாத, வருங்காலத்தில் நான் எப்படிப்பட்ட ஆளுமையாக மாறுவேன் எனக் கணக்கிடாத, என்னை எடைபோடாத, எந்தச் சூழலிலும் நான் தஞ்சமடையக்கூடிய ஒன்று! நிலை திரியாமல் எப்போதும் நீடித்திருக்கக்கூடிய ஒன்றையே நான் இப்போது வேண்டுகிறேன், நாளைய ஆகாயம் போல! - கஸூவோ இஷிகுரோ

மெகா சீரியல்களில் ஒரே ஒரு கதைக்குதான் அனுமதி (அது நல்லதங்காள் கதையின் hangover). ஒரு பெண் தியாகம் செய்ய அல்லது கஷ்டப்பட, சுற்றுப்பட்ட மற்ற ஆண்களும் பெண்களும் பெரும்பாலும் கெட்டவர்களாக இருக்க வேண்டும். நானூற்றுச் சொச்சம் எபிசோடுகள் முடிந்ததும், விடிவுக்காலம் வர வேண்டும். இந்த ஒரே ஒரு கதையைத்தான் எல்லா மெகா சீரியல்களும் தருகின்றன; தர வேண்டும். இதை மாற்றும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போயின.-சுஜாதா

தனிமை துரோகங்களை மட்டுமே நினைவூட்டுகிறது, நம்மைவிட்டுப்போனவர்களை. நம் கனவுகளைச் சிதைத்தவர்களை, நம் தழும்புகளை நமக்குக் கொடுத்தவர்களை, நம் புண்களைக் கீறிவிட்டு அதன் குருதிவழியும் கோலத்தில் தன் ஓவியங்களைக் கண்டெடுத்துச் சென்றவர்களை. களைத்த நாளில் திறந்து நுழையும் கதவு, வெறுமை சூழ் அறை அதன் வெம்மையை நம்மீது பாய்ச்சுவதன் மூலம் நம் வலிகளை மேலெடுக்கிறது. ஒரு வலியை உருவாக்குவதைவிட, அதன் நினைவூட்டுவதுதான் பெரும் துயரம் இல்லையா?-லதாமகன்

Friday, 6 December 2024

மழை மானி


மழையை எவ்வாறு அளக்கிறார்கள்?

 செய்திகளில் கடந்த 24 மணி நேரத்தில் இங்கு 500 மில்லி மீட்டர் மழை ,
அங்கு 300 மில்லி மீட்டர் மழை என்று கூறி கேட்டு இருப்போம். அவை எவ்வாறு அளவிடப்படுகிறது என்பது குறித்து காணலாம்.

வானிலை ஆராய்ச்சி மையங்களில் 
“Rain gauge” என்று கூறப்படும் மழை மானி கருவி இருக்கும். இதைப் பயன்படுத்தித்தான் மழையை அளந்து, 'இத்தனை மி.மீ. மழை பெய்தது' என்று சொல்கிறார்கள். ஒரு சதுர மீட்டருக்கு, 24 மணிநேர கால அளவில் எவ்வளவு மழை பொழிந்திருக்கிறது என்பதை அதன் மூலம் அறிவார்கள். அதை வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதியில் எவ்வளவு மழை பெய்தது என்று கணக்கிடுவார்கள்.

ஒரு மில்லி மீட்டர் மழை என்பது, ஒரு சதுர மீட்டருக்கு 1 லிட்டர் என்பதற்குச் சமம். 

எனவே, 10 மிமீ மழை என்று பதிவானால், அதை 10 லிட்டர் / சதுர மீட்டர் என்று எடுத்துகொள்ள வேண்டும். தற்போது பல வகையான தானியங்கி மழை மானிகள் சந்தையில் கிடைக்கின்றன. அது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் பதிவான மழை அளவை குறித்து தகவல் தந்துவிடும்.

Thursday, 5 December 2024

புத்தகம்-30


Reading_Marathon2024
#24RM050

Book No:30/100+
Pages:160

மரபு மருத்துவம்
-டாக்டர் வி விக்ரம் குமார்

சிறிய வயசுல புத்தக கடைக்கு போன உடன் முதலில் கண்ணில் படுவது ஸ்போக்கன் இங்கிலீஷ் புத்தகம் தான் .எப்போதும் ஒரு தாழ்வு மனப்பான்மையுடன் அந்த பக்கங்களை பள்ளி நாட்களில் புரட்டிய நினைவு. அதே போல் தற்போது புத்தகக் கடைக்கு போகும் போதெல்லாம் மருத்துவம் சம்பந்தமான உணவு சம்பந்தமான உடல் சம்பந்தமான புத்தகங்களை எல்லாம் பார்க்கும் போது சற்று ஆர்வமுடன் புரட்டிப் பார்ப்பது வழக்கம். ஏனெனில் நமக்கு தெரியாத தகவல்கள் இருக்கும் அல்லதுசெய்கின்ற நல்ல விஷயங்களை ஊக்கப்படுத்தும் தகவல்களாகவும் இருக்கும் என்ற எண்ணத்தில் தான். அதேபோலத்தான் இந்த புத்தகமும் கைக்கு கிடைத்தது.

தி இந்து நாளிதழில் நலம் வாழ இணைப்பிதழில் வெளியான 40 கட்டுரைகளின் தொகுப்பு தான் இது. வாரந்தோறும் படித்திருந்தாலும் புத்தகமாய் படிக்கும் போது ஒரு இன்பம் தான். தலைவலி இருமல் வந்தவுடன் அருகில் இருக்கும் மருந்து கடைக்கு சென்று இருபது ரூபாய் கொடுத்தால் மாத்திரை கொடுப்பார்கள் .உண்டு விட்டு படுத்தால் காலையில் தலைவலி குணமாயிருக்கும். ஆனால் உண்மையில் அந்த காலத்தில் ஆவி பிடிப்பது என்பது தான் தலைவலிக்கு சிறந்த தீர்வாக இருந்தது என்பதை அக்கால மனிதர்கள் அறிவார்கள் .அதனை வலுப்படுத்தும் நோக்கில் முதல் கட்டுரை நல்லது செய்யும் ஆவி என்ற பகுதி இருக்கின்றது.

அவசர உலகில் ஒற்றட முறைகளை சினிமாவில் மட்டுமே அதுவும் பழைய சினிமாவில் மட்டுமே பார்க்க முடியும் .ஆனால் வாத நோய்கள் தீர, கட்டிகள் வீக்கங்கள் மறைய, வெந்நீர் ஒற்றடம் ,கப நோய்கள் மறைய, முள்தைத்த காயத்துக்கு என ஒற்றடத்தின் பல்வேறு வழிமுறைகளை இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது.

முழுமையாக குளிப்பது குளியல் என்பார்கள் அதாவது கழுத்து கீழ் மட்டும் குளிப்பது குளியல் நல்லதல்ல. எண்ணெய் தேய்த்து குளிக்கும் முறையை பற்றி சொல்லும்போது செவ்வாய் வெள்ளிகளில் பெண்களும், புதன் சனிக்கிழமைகளில் ஆண்களும் எண்ணெய் தேய்த்து தலை முழுக வேண்டும். அத்துடன் எண்ணெய் பெறின் வெந்நீரில் குளிப்போம் என்னும் பிணியணுகா விதி பாடல் எண்ணெய் தேய்த்த நாள் என்று குளிக்க வெந்நீரையே பயன்படுத்த வேண்டும் என்று சொல்கிறது .உடல் சூடு தூக்கமின்மை மன அமைதியின்மை ஆகியவற்றை குறைத்து மனதை அமைதிப்படுத்த என்னை குளியல் எவ்வாறெல்லாம் உதவி புரிகிறது என்பதை சொல்லி இருக்கிறார்.
என்னுடைய நண்பர் ஒருவரும் வாரந்தோறும் என்னை குளியல் எடுப்பார். என்னிடமும் எண்ணெய் குளியல் எடுக்க பரிந்துரைப்பார் .இன்றும் இரும்பு போன்ற தேகத்துடன் பவனி வந்து கொண்டிருக்கிறார்.

பழைய உணவு பதப்படுத்தப்பட்ட உணவு ஆகியவற்றை இந்த அவசர உலகில் நாம் அதிகம் உண்கிறோம்.நோய் நம்மை நெருங்காமல் இருக்க 'முதல் நாளில் சமைத்த கறி அமுதெனினும் அருந்தோம்' என்ற கருத்தை சித்த மருத்துவர் தேரையார் கூறுகிறார் .திரிகடுகம் எனும் நூலும் பழைய உணவை சாப்பிடாமல் நாள்தோறும் சமைத்து சாப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

*உடலுக்கும் மனதுக்கும் குளிர்ச்சியை தரும் நிலவின் மடியான இரவு நேரத்தில் உறங்குவதே சிறப்பு. இரவு நேரத்தில் அதிகமாக சுரக்கும் மெலடோனின் ஹார்மோன் நம்முடைய தூக்கம் விழிப்பு நிலைகளை கட்டுப்படுத்தவும் ,ரத்த அழுத்தத்தை முறைப்படுத்தவும் ,நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

*எல்லா சூழ்நிலைகளிலும் நோய்களை எதிர்த்து உயிர் வாழ்வதற்காகவும் உடல் எடை அதிகரிக்கவும் கோழிகளுக்கு கொடுக்கப்படும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் விளைவால் ரெசிஸ்டன்ட் பாக்டீரியாக்கள் அதிகரித்து கோழிகள் இடையே அந்த நோய்களின் வீரியம் பல மடங்கு பெருகிறது இந்த நோய்களின் தாக்கம் அதை சாப்பிடும் மனிதர்களிடம் சங்கிலித் தொடர்போல் நீள்கிறது.

*உணவு சாப்பிட்ட பின் குறுநடை நடப்பது ஆரோக்கியத்தை தரும். அது உணவை செரிப்பதற்கு தேவையான சுரப்பிகளின் செயல்பாடுகள் சிறப்படையச் செய்யும். வயிற்றுப் பகுதியில் உள்ள உணவுக் கூழ்மங்களின் நகரும் தன்மை விரைவு படுத்தப்பட்டு செரிமானம் முறை படுத்தப்படும்.

கிராமங்களில் பிறந்து வளர்ந்தவருக்கு அருகில் இருப்பவர்களின் மருத்துவ குணமும் மூதாதையர்களின் அனுபவமும் கை கொடுக்கும். நகரத்தில் அது நிச்சயம் தவற விடுகிறோம். ஒவ்வொரு செடிகளின் பெயரையும் அதன் மருத்துவ குணத்தையும் கூறிய நமக்கு சிறுவயதிலேயே பெரியவர்கள் புகட்டி விடுவார்கள். அதுதான் கை வைத்தியம் பாட்டி வைத்தியம் என்னும் பெயரில் அழைக்கப்படுகிறது. ஆனால் இன்றைய அவசர உலகில் அதை எல்லாம் விட்டு நாம் மிக நீண்ட தூரம் வந்து விட்டோம் .உணவு முறைகளில் மாற்றம் வந்து விட்டது. வருடத்தின் எல்லா நாள்களிலும் இட்லி தோசை ஒன்று நமக்கு கை கொடுக்கிறது. சிறுதானியங்களை அறவே மறந்து விட்டோம் ஏதேனும் உணவுத் திருவிழாக்களில் பார்த்தால் தன் உண்டு

ஆகவே நாம் சிறு தானியங்களையும் முன்னோர்களின் வாழ்க்கை முறையும் அவ்வப்போது கொஞ்சம் பயன்படுத்திக்கொண்டால் தான்.. நம்மை சூழ்ந்துள்ள பிணிகளை வெல்வோம். மெடிக்லைம் பாலிசியை தேடி ஓட மாட்டோம். ஆகவே ஆரோக்கிய தரும் விஷயங்களை நாம் அவ்வப்போது பயன்படுத்திக் கொண்டால் நாம் 100 வயது வரை வாழ வேண்டும் என்ற பேராசை இல்லாவிட்டாலும் ஆரோக்கியமாக 60 வயது வரை வாழ்ந்தாலே போதும் என்ற எண்ணங்களை நோக்கி சிறகடித்து பரக்கவும் இது போன்ற ஆரோக்கிய தரும் புத்தகங்களையும் அவ்வப்போது வாசித்து பயன்பெறுவோம் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Wednesday, 4 December 2024

புத்தகம்-29


Reading_Marathon2024
#24RM050

Book No:29/100+
Pages:109

நான் காணாமல் போகும் கதை
-ஆனந்த்

தனிமனித வாழ்வில் எண்ணங்களுக்கு என்றும் நிலை இல்லை, மனிதர்களுக்கும் அதே நிலைமை தான். அதனை வலியுறுத்துவது போலவே இந்த நாவல் அமைந்துள்ளது. கணத்துக்கு கணம் தோன்றி இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கும் மனிதன் ஒவ்வொரு கணத்திலும் நுழைந்து பார்த்து உடனே காணாமல் போவது சலிப்பை ஏற்படுத்துவதாக இல்லாமல் அது அவனுக்கு பழக்கமாகவே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

எங்கோ ஒரு வெற்றிடத்தை பார்த்துக் கொண்டிருக்கும்போது நாம் நினைவுகளையும் அசைபோட்டுக் கொண்டிருப்போம். அதுபோலத்தான் இக்கதைகளில் வரும் அவன் நினைவுகள் காலங்களை பின்பற்றி வந்து கொண்டே இருக்கும். தற்காலத்திய இன்ட்ரோவர்ட் போல யாரிடமும் பேசாமல் பயத்தில் ஆச்சரியத்தில் கூச்ச சுபாவத்துடன் இருப்பான். இன்னொரு சமயம் தனிமையில் அவனுடைய எண்ணங்கள் தாறுமாறாக சென்று கொண்டே இருக்கும். உதாரணத்துக்கு இப்போது இறந்து போய்விட்டால் என்ன ஆகும் என்று யோசிப்பது.

கவலைக்குள் விழுந்து எழுந்து சுயசமாதானம் செய்து கொள்வது போல துன்பம் இருக்கும்போது துக்கப்படுவதை விட துன்பமில்லாமல் காரணம் இல்லாமல் ஏதேனும் வெறுமனே நினைத்து துக்கப்படுவது என ஒவ்வொரு காலகட்டத்திலும் மனித உணர்வுகளை துல்லியமாக எழுதியுள்ளார்.

சிந்தனையில் எங்கோ தனிமையில் சென்று திரும்பி வர இயலாமல் யோசிப்பது, காணாமல் போவது, கனவுகளில் அடிக்கடி பார்த்த முகங்கள் நிஜத்தில் எதிர்ப்படுவது, உறக்கத்தில் வரும் வெள்ளத்தில் மாட்டிக் கொண்டு சிக்குவது பின்பு ஓரிருவரை காப்பாற்றுவது அந்த சமயத்திலெல்லாம்.. விழித்துக் கொண்டு ஒருவித பதட்டத்துடனும் விசித்திரமான நிம்மதியுடனும் மனதை தேற்றிக் கொள்வதை குறித்து சொல்லி இருப்பார்.

இனம் புரியாத மென்மயிலும் தழுதழுப்பிலும் மனம் நெகிழ்ந்து செல்லும் நிகழ்வுகளை வரிசையாக சிறுவயது முதல் ஒவ்வொன்றாய் சுட்டிக்காட்டிக் கொண்டே வருகிறார். கனவில் தென்படும் இடங்களை பற்றி சொல்லும் புது
 உலகில் தான் பார்த்திராத வேறொரு உலகம், அடர்ந்த காடு இருளான வனம் அதில் ஏதாவது அறிந்ததை தேடுகிறதா மனம் என்று ஒவ்வொரு முறையும் எண்ணிப் பார்ப்பார்.

நினைவுகளும் கனவுகளும் தவிர விழித்திருக்கும் போதே சில சமயம் தானாக மனதில் எழும் கற்பிதங்களும் உண்டு. கற்பிதம் தரும் சுதந்திரம் கட்டுப்பாடுகள் அற்றது. வாழ்வனுபவ உலகம் இயங்கும் வரையறைகள் கற்பித உலகங்களுக்கு கிடையாது .எதுவும் எங்கும் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம் .காரண காரியங்கள் தன்னிச்சையான வேறொரு இலக்கணத்தில் இங்கு நடக்கின்றன என்று நிகழ்காலத்தில் நிகழும் எண்ணங்களையும் மனதுடன் ஒப்பிட்டு தன்னுடைய மன அழுத்தத்தை அழகாய் விவரித்து இருப்பார்.

கால தேவனிடம் கேள்வி கேட்பது போல சில பகுதி வருகிறது .பிறப்பு நிற்காமல் இறப்பது மட்டும் நின்று போனால் என்னவாகும் ? புதிய புதிய மரங்கள் செடி கொடிகள் அனைத்துவித மிருகங்கள் குழந்தைகள் பிறந்து வளர்ந்து கொண்டே இருக்கும்.எதுவும் யாரும் இறந்து போகாமல் தொடர்ந்து கொண்டே இருப்பார்கள். ஆனால் வயது மட்டும் ஆகிக்கொண்டிருக்கும். முதுமை வரும். ஆனால் மரணம் இருக்காது. பூமி பழையதாய் கொண்டே இருக்கும் .உலகம் முழுதும் நகர்வதற்கு கூட இடமில்லாமல் உயிரினங்கள் நிறைந்திருக்கும் என்று சொல்கிறார்.

வெறும் கனவு ஒன்றை நம்பிக் கொண்டு இப்படி மாதக்கணக்கில் நேரத்தை செலவழித்துக்கொண்டு அலைந்து கொண்டிருப்பதால் என்ன உபயோகம்? இது சற்று பைத்தியக்காரத்தனமாகப்படவில்லையா என்று மனம் புழுங்குகிறது. ஆனால் கேள்வி விடவில்லை .மனதின் எண்ணங்களை பற்றியும் உணர்ச்சிகளை பற்றியும் சிறிதும் கவலைப்படாமல் என்னை துரத்திக் கொண்டிருக்கிறது என்று மனதின் உள நிலையை சமாதானம் செய்ய முடியாமல் எண்ணங்கள் விரிந்து கொண்டே இருப்பதை வேதனையுடன்  பகிருகிறார்.

இவ்வாறாக கதை அடுத்தடுத்த சில பல சம்பவங்களை சொல்லிக் கண்டே செல்கிறது.
எந்த இடத்திலும் ஆயற்சி ஏற்படாமல் இந்த நாவலில் உள்ள ஒவ்வொரு வரிகளும் நம்மை கட்டி போடுகின்றன வசியமிக்க எழுத்து ஈர்ப்பு விசையால்.

*தரையில் பார்வை படியும் போது ஆச்சரியம் மனதில் விரிகிறது 

*பொதுவாக விழிப்பு வந்ததும் கூடவே மனமும் விழித்துக் கொண்டு தன் ஓட்டத்தை தொடங்கி விடும்

*மையத்தில் ஒரு புள்ளியாய் இருந்து கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த நான் இப்போது ஒரு வெளியாகி விரிந்து மற்றவர்கள் அனைவரும் என்னை பார்க்கும் கோணம் நிகழ்கிறது. 

*என்னை அறிந்தவர்கள் அறிந்ததை வைத்துக் கொண்டுதான் என்னை வாங்கிக் கொள்கிறார்கள்

*விரிந்திருக்கும் காட்சி புலத்தின் விசாலத்திலும், மழையின் நிசப்தத்திலும் அமைதி கொண்ட தன்னுணர்வு மனத்தின் ஆழங்களில் இறங்கி சஞ்சரிக்கிறது.

கதை தனி மனிதனின் கனவுகளுக்கும் நனவுகளுக்குமான கனவுகளில் தான் கண்ட ஒவ்வொரு விஷயத்தில் இருந்தும் தொலைந்து போவதும் மனதிற்கு சமாதானம் சொல்லி அடுத்த நிகழ்வில் தொலைந்து போவதுமான கதைக்கு உயிராக இருப்பது வார்த்தைகள் தான். ஒவ்வொரு வார்த்தைகளையும் அழகிய கோலமாக கோர்த்து இந்த கதையை ஒவ்வொரு கணத்திலும் நம்மை உணர வைக்கிறார் வெறும் 100 பக்கங்களே கொண்ட நாவலில் நாம் பல இடங்களில் அமர்ந்து இளைப்பாறிக் கொண்டுதான் அடுத்த கட்டத்துக்கு நாம் செல்ல முடிகிறது. நல்ல வார்த்தைகள் தோய்ந்த சித்திரத்தை நமக்கு கொடுத்திருக்கிறார் எழுத்தாளர் ஆனந்த் அவர்கள் 

தொடர்ந்து வாசிப்போம் 
தோழமையுடன் மணிகண்ட பிரபு

Tuesday, 3 December 2024

Nassim Nicholas Taleb ( புகழ்பெற்ற Black swan நூலின் ஆசிரியர்) எழுதிய Fooled by Randomness என்ற நூலைப் படித்துக் கொண்டிருக்கிறேன். Black Swan க்கு முன்பே அவர் எழுதிய நூல் இது.தற்செயலாக நடக்கும் ( Random events) நிகழ்வுகளுக்கு இதுதான் காரணம் என காரணம் கற்பிப்பது ( Determinism) மனித இனத்தின் சிந்தனைப் பிழைகளில் ( Cognitive errors) முதன்மையானது.இந்த நிற உடை அணிந்ததால்தான் நல்லது நடந்தது என்பது போன்ற மூட நம்பிக்கைகளில் தொடங்கி பல்வேறு வரலாற்று, சமூக, பொருளாதார நிகழ்வுகளுக்கும் இதுதான் காரணம் எனப் பலவற்றைத் தவறாகக் கற்பிக்கிறோம் என்பதை விளக்கும் நூல்.சட்டென்று எனக்குத் தோன்றியது- இந்த பிரபஞ்சம் உருவானது அதில் உலகம் உருவானது மனித உயிர் தோன்றியது- இவை எல்லாமே தற்செயல் நிகழ்வுகள்தான் ( Random events) . ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் இதுபோல் பல Random events நடக்கின்றன. இவற்றுக்கெல்லாம் பின்னால் எதோ காரணமோ, நோக்கமோ, சக்தியோ இருக்கிறது என்று நம்புவதுதான் மனிதனின் தலையாய மூட நம்பிக்கைகளில் ஒன்று. அறிவியல் படி இயற்கையாக ஒரு கரப்பான் பூச்சிக்கும் மனிதனுக்கும் பிறப்பின் நோக்கம் என்று எதுவும் கிடையாது. வாழ்ந்து மடிவது தற்செயல் நிகழ்வே. நோக்கங்கள் எல்லாமே நாமாகக் கற்பித்துக் கொண்டதேஇந்த எண்ணம் மிகப்பெரும் விடுதலையைத் தரவல்லது. மிகப்பெரும் வெறுமையையும்.டாக்டர் ஜி ராமானுஜம்

எவையெல்லாம் நம்முன்னே தொடர்ந்து நிகழ்கின்றனவோ அவற்றில் எல்லாம் நமது கவனம் குவிவதற்கு வெகுகாலமாகிறது.-பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

பாராட்டுதலை குறிக்க hats off என்று கூறுவோம். யாரையாவது அறிமுகப்படுத்தும் போது தன் தொப்பியை கழற்றுவது அக்கால பிரிட்டிஷ் பழக்கம். இது மரியாதையைக் குறிக்கும் பாராட்டுதல்.இன்றளவும் கூட்டத்தில் பேசும்போது சாதனையை அங்கீகரிக்க பயன்படுத்துகிறோம்.

Monday, 2 December 2024

பெரும் ஆளுமைகளிடம் நாம் வியக்கத்தக்க ஒரு பண்பு உண்டு. தனிப்பட்ட வாழ்க்கையோ அந்தரங்கக் கவலைகளோ அவர்களது செயலூக்கத்தைப் பாதித்திருக்காது. குடும்பத் தகராறு இருந்திருக்கும், மணமுறிவு ஏற்பட்டிருக்கும், புத்திர சோகம் வாட்டியிருக்கும், காது கேளாமல் போயிருக்கும். கடும் உடற்சிக்கல், தீராத மனநோய்கூட இருந்திருக்கும். எதுவும் தங்களது வேலையை, தொழிலை அல்லது படைப்பாற்றலைக் குலைக்காத வகையில் கவனத்துடன் செயல்பட்டிருப்பார்கள். துக்கத்தை அண்டவிடாமல் ஒருமுகப்பட்டு செயலில் ஆழ்ந்திருப்பார்கள். சில சமயங்களில் அத்தகைய காலமே அவர்களது சிறந்த productive years-ஆக அமைவதும் உண்டு. அவர்களைப் பொறுத்தவரை குடும்பம், குழந்தைகள், பெண்கள் எல்லாமே லட்சியப் பயணத்தில் அவ்வப்போது இளைப்பாறுகிற pit stops மட்டுமே. அவை தங்களது அறிவுநாட்டத்துக்கு, தேடலுக்கு, சமூக/கலைப் பங்களிப்புக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் விலகலுடனும் அலட்சியத்துடனும் வாழ்வார்கள். அவர்களே மகத்தான முன்மாதிரிகள் ஆகிறார்கள். அவர்களையே நாம் ஆல்பா என்கிறோம்.-கோகுல்பிரசாத்உதாரணம் இளையராஜா, கார்ல்மார்க்ஸ் போல

நியாண்டர்


ஒளி என்பது கற்றை (wave) மற்றும் துகள் (particle) இரண்டும் ஆகும். துகளாக இருக்கும் ஒளி கற்றைகளாக விண்வெளியில் ஒளியின் வேகத்தில் பறக்கும். இது ஒளியின் இரட்டை இயல்பு எனப்படும் குவாண்டம் இயற்பியலின் ஒரு முக்கியமான கொள்கை.

இப்படி நொடிக்கு 3 லட்சம் கிமி வேகத்தில் பறக்கும் ஒளிக்கு மரணம் என்பதே கிடையாதாம். ஒளி என்பது அடிப்படையில் போட்டான் (Photon) துகள்கள். அதற்கு எடை கிடையாது. அதனால் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் கழித்தாலும் ஒளிக்கு அழிவே இல்லை. பெருவெடிப்பில் 13.80 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஒளீயை கூட நாம் காணமுடிவது இதனால் தான்

போட்டான்கள் பூமியின் மேலோ, வேறு எதன்மேலோ பட்டால் மட்டுமே அதன்பயணம் முடிவுக்கு வரும். அத்துடன் ஒளி இறந்துவிடும். ஒளி உறிஞ்சப்படுதல், சிதறல் போன்ற பிற செயல்முறைகளாலும் அதன் தீவிரம் குறையலாம்.

ஆனால் எதன்மேலும் அது படவில்லை எனில் ஒளியானது நொடிக்கு 3 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் ஆயுள் முழுக்க ஓடிக்கொண்டே இருக்கவேண்டியதுதான் அதற்கான விதி. வெற்றிடத்தில் ஒளியின் வேகம் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். எங்கோ பல லட்சம் ஒளியாண்டுகள் தொலைவில் இருந்து பயணித்து வந்து சேரும் ஒளியை எல்லாம் தொலைநோக்கி மூலம் காண முடிவது இதனால் தான். 

வெப்பமும் அதுபோன்றதே. வெப்பம் பூமி, மற்றும் காற்றில் மோதி, காற்றையும், பூமியையும் சூடாக்குவதால் தான் பூமி வெப்பமாக உள்ளது. பூமிக்கு மேலே விமானத்தில் செல்ல, செல்ல சூரியனுக்கு அருகே சென்றாலும், அங்கே குளிராக இருப்பது இதனால் தான். சில பறவைகள் 8000 மீட்டர் உயரம் வரை பறக்கும் சக்தி கொண்டவை. அங்கே காற்று மிக லேசாக இருப்பதால் வெப்பம் மிக குறைவாக இருக்கும். சுமார் மைனஸ் அறுபது டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும். இறகுகள் மற்றும் அதன் பயாலஜி காரணமாக்வே பறவைகள் இதை தாக்குபிடிக்கின்றன

விண்வெளியில் சூரியவெப்பம்  ஒளியின் வேகத்தில் பயணிக்கும். இதற்கும் மரணம் என்பதே இல்லை. விண்வெளியில் கதிர்வீச்சுகள் நீண்டதூரம் பரவி அதன் வெப்பமானது ரேடியேஷன் ஆக ஆகிவிடும்: கதிர்வீச்சு என்பது வெப்பத்தின் ஒரு வடிவம் தான். வெப்பம் கதிர்வீச்சாக மாறும்போது அதன் தீவிரம் குறையும்.

 சுமார் பத்துக்கு பின் 100 பூஜ்யங்கள் போட்டால் எத்தனை ஆன்டுகளோ, அத்தனை ஆண்டுகளில் ஒட்டுமொத்த நட்சத்திரங்களும் இறந்து, போட்டான்கள் ரேடியோ கதிர்களாக மாறி, மறைந்து பிரபஞ்சமே காரிருளில் மூழ்கிவிடும் என்கிறார்கள்.

அப்போது ஒட்டுமொத்த பிரபஞ்சமும் துளிகூட வெப்பமாகவோ, வெளிச்சமாகவோ இருக்காது,. எல்லையற்ற கொடிய குளிர். அணுக்கள் உறையும் அளவு குளிர், எதுவும் தென்பாட காரிருள். " Heathdeath" என இந்த நிகழ்வு அழைக்கபடுகிறது. அதன்பின் எத்தனை லட்சம் கோடி ஆண்டுகள் இந்த காரிருள் நீடிக்கும், அதன்பின் என்ன என யாருக்கும் தெரியாதாம்

கற்பனைகள் கூட தோற்கும் இடம் பிரபஞ்சம் தான்



~ நியாண்டர் செல்வன்

இலக்கு,நோக்கம் என இரு விஷயங்கள் உள்ளன. 'மருத்துவர் ஆவேன்' என்பது இலக்கு,எளியவர்க்காக பணியாற்றுவேன் என்பது நோக்கம்.எல்லோரும் இலக்கை நோக்கி பயணிக்கிறார்கள்.ஆனால் யாரெல்லாம் நோக்கத்தை நோக்கி பயணிக்கிறாரோ, அவர்களே இலக்கை நோக்கங்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள்-இறையன்பு

Sunday, 1 December 2024

புத்தகம்-28


Reading_Marathon2024
#24RM050

Book No:28/100+
Pages:120

டாக்ஸி டிரைவர்
-ஆனந்த ராகவ்

ஆனந்த ராகவ் கதை சொல்லல் முறை மிகவும் நுட்பமானது. வார இதழில் ஆங்காங்கே கதைகளை படித்திருந்தாலும் தொகுப்பாக படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எழுத்துக்களில் அவர் காட்டும் ஈடுபாடு எதார்த்தமான சொற்களின் பின்னணியில் இருக்கும் ஆழமான உண்மைகள் கதை முழுவதும் தொய்வின்றி இறுதி வரை இழுத்துச் செல்வது என இவரின் சிறுகதைகளுக்கு ஒரு தனித்துவம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கும்.

 பர்மாவில் இருந்து எல்லை கடந்து அகதியாய் தாய்லாந்தில் பாதுகாப்பில்லாமல் வாழவரும் சீதாவுக்கு நேர்ந்த இழப்புகளும் வேதனைகளும் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை அடுத்து என்ன என்று பதற்றத்துடன் நம்மையும் படிக்க வைக்கிறது இவரின் எழுத்து கடைசியில் ஒரு சோக முடிவுடன் முடிந்தாலும் அது தரும் அனுபவம் பிரமக்க வைக்கிறது.

அன்றாட வாழ்வில் நாம் பார்க்கும் பல பிரச்சனைகளுக்கு எளிமையான ஒரு தீர்வு தான் மிகப்பெரிய பிரச்சனையையும் தீர்த்து வைக்கிறது. நீதிக்கதைகளில் வரும் பூட்டாத பூட்டிற்கு சாவி தேடுவது போல பல பிரச்சனைகளுக்கு தீர்வை நோக்கி ஓடுகிறோம். அது பிரச்சனை இல்லை என்று தெரியாமல். அதுபோலத்தான் அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளம் கட்டுவதற்கான யோசனை வரும் போது ஒவ்வொருவரும் ஒரு யோசனை அதற்கான முட்டுக்கட்டை ஏன் போடுகிறார்கள்? இறுதியில் எவ்வாறு அந்த அப்பார்ட்மெண்டில் நீச்சல் குளத்தை கட்டினார்கள் என்பதை நகைச்சுவையாகவும் அட இவ்வளவுதானா என எண்ணும் படியும் சிந்திக்க வைக்கிறது கதை.

நேர்மையாய் வாழ்வது அவ்வளவு ஒன்றும் சுலபமான காரியம் அல்ல. எல்லா நேரத்திலும் நாம் நேர்மையாக இருந்து விட முடியாது. சில நேரங்களில் மனசாட்சிக்கு பயந்து கொண்டும் நேர்மையாய் வாழ வேண்டுமா என்ற கேள்வியை அடிக்கடி நாம் கேட்டுக்கொள்வதுண்டு. அதுபோல ஒரு இக்கட்டான சூழலில்தான மகேஷ் என்னும் நடுத்தர வயது இளைஞன் கடைநிலை ஊழியம் பார்ப்பவன் தன்னுடைய மேனேஜருக்கு விசுவாசமாக இருக்கிறான். அவர் தரும் பண உதவி அவரின் குடும்பத்தையே காக்கிறது. கடைசியில் நேர்மையாய் இருந்ததால் அவனுக்கு நேர்ந்தது என்ன என்பதை "விலை" கதை நமக்கு சொல்கிறது.

இந்த தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஐன்ஸ்டீன் ஐயப்பன் தான் .தனியார் பள்ளிகளில் சொற்ப ஊதியத்தில் தகுதியின்றி சேரும் சில ஆசிரியர்களால் அந்தப் பள்ளிக்கு நேரும் ஆபத்தும் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரால் அந்தப் பள்ளிக்கு நேரும் பிரச்சனையும் பற்றி மிக அழகாக கதை பேசுகிறது. ஐ க்யூ அதிகம் உள்ள ஐயப்பன் என்ற மாணவன் அந்த பள்ளிக்கு புதிதாய் சேருகிறான். அவனின் அறிவுத்திறமை கண்டு வியக்கிறது அந்தப் பள்ளி நிர்வாகம். ஒவ்வொரு ஆசிரியரும் திணறுகிறார்கள் அவனுடைய அறிவின் மேன்மையை சொல்ல பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கிறார்கள் ஆனால் அந்தப் பள்ளியின் தரம் உயர்கிறது .அதுவே ஒரு விஷயத்தில் எதிராகவும் அமைகிறது அது என்ன என்பதுதான் மீதிக்கதை.
ஆசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசும் ஆங்கிலம் முழுக்க நம்மை நகைச்சுவையால் கட்டிப் போடுகிறது

நடுத்தர வயது பெண்களின் கழுத்தில் இருக்கும் நகைகள் அவர்களின் சந்தோஷத்தை போலவே அடிக்கடி காணாமல் போகும் .அது போன்ற நடுத்தர வயது பெண்மணியின் ஒரு தாயின் நகை காணாமல் போகிறது. குடும்பமே தேடுகிறது. கடைசில அந்த நகையை யார் எடுத்திருப்பார்கள் என்பதனை அவலச் சுவையுடன் இக்கதை சொல்கிறது.

என்ன படிக்க வேண்டும் என்று தெளிவில்லாமல் என்ன வேலைக்கு செல்கிறோம் என்ற இலக்கும் இல்லாமல் செல்லும் இளைஞர்களின் கதை வித்தியாசமானது. அவர்களின் முகங்களையும் மன நிலையும் படம் பிடித்து அப்படியே பாதை என்னும் கதையை எழுதி இருக்கிறார். குடிப்பழக்கத்துக்கு அடிமையாக உள்ள தந்தையும் அவரின் மனைவி படும் பாட்டினையும் அவரால் மகனுக்கு ஏற்படும் ஆசையே மருந்து என்னும் கதை படிக்கும் போது உணர முடிகிறது.

வயதான தந்தை திடீரென மயங்கி விழுகிறார். சர்க்கரை நோயாளியின் அவர் மருந்துகளால் தான் வாழ்ந்து கொண்டிருந்தார். இப்போது அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடனும் மருத்துவமனையில் சேர்த்து விட்டேன் .ஆனால் ஐசியூ லையே பல நாள்கள் இருக்க வேண்டிய சூழல். குடும்பத்தில் நிம்மதி இல்லை, சேமிப்பு குறைகிறது, கடன் அதிகரிக்கிறது .இந்த நிலையில் அலுவலகத்தில்  வெளிநாடு செல்லும் வேலை வருகிறது. தன்னிச்சையாக தன் தந்தையைக் காக்க போராடுவதுடன் பாசப்பிணைப்புடனும் அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று துடிப்புடனும் நாயகன் இருக்கிறான் இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இரண்டாம மரணத்தின் கதை

சிறுகதை தொகுப்புகளை வாசிப்பதற்கு அச்சம் வரும். ஏனெனில் இந்த புத்தகம் நம் நேரத்தை வீணாக்கி விடுமோ புதிய செய்தி இல்லாமல் எழுதுபவரின் மேதாவித்தனத்தை மட்டும் கொண்டாடுமோ அல்லது பழமை வாதத்தின் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பவரோ என எண்ணத் தோன்றும். எதெச்சியாக வாசித்தது இந்த புத்தகம் நல்லதொரு வாசிப்பு அனுபவத்தை கொடுத்தது. ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு வடிவினில் நேர்த்தியான சொல் கட்டமைப்பு முறையில் நம்மை மிகவும் கவர்கிறது 

தொடர்ந்து வாசிப்போம் 

 தோழமையுடன் மணிகண்ட பிரபு

ஆசையே துன்பத்திற்கு காரணம் என்றார் புத்தர். தற்போதைய வாழ்வில் அறியாமையே துன்பத்திற்கு காரணம். எல்லாவற்றையும் பற்றிய ஒரு புரிதல் இருப்பவர் துன்பப்படத் தேவையில்லை. விரைந்து முன்னேற்றம் காண்பர். Ignorance is bliss என்பதெல்லாம் ஆறுதல் படுத்த பயன்படும் சொற்கள். தற்போதைய வாழ்வில் ignorance is curse எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் அறியாமையிலிருந்து வெளியே வருகிறாரோ, எவ்வளவு விரைவாக சூழலை புரிந்து கொள்கிறாரோ அவர்தான் வெற்றியாளர். அவர்தான் மகிழ்ச்சியாகவும் இருப்பார்.-படித்தது