Friday, 28 August 2026

56


கல்விக்கதைகள்
-ச தமிழ்ச்செல்வன்

‘கல்விக்கதைகள்’ கல்வியைப் பற்றிய வழக்கமான அறிவுரைகளைச் சொல்வதற்குப் பதிலாக, குழந்தைகள், பள்ளி, ஆசிரியர், வகுப்பறை, கல்விமுறை ஆகியவற்றை கதைகளின் வழியாகச் சிந்திக்க வைக்கும் ஒரு சிறப்பான சிறுகதைத் தொகுப்பு. 2023-ஆம் ஆண்டு எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம் வெளியிட்ட இந்நூல் 311 பக்கங்களைக் கொண்டது.

ஒவ்வொரு கதையும் ஒரு திறப்புதான்.ஒவ்வொரு கதையும் அவ்வகையில் ஒரு சுரங்கம் தான். கல்வி குறித்த மாணவர் குறித்த பள்ளி வயது பாலியம் குறித்த 21 கதைகள் இத்தொகுப்பில் உள்ளன.
தமிழின் முக்கியமான படைப்பாளிகள் கல்வி மற்றும் குழந்தைகள் சார்ந்து எழுதிய கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன

‘கல்வி’ என்ற சொல்லைக் கேட்டவுடன் நமக்கு பள்ளி, ஆசிரியர், பாடப்புத்தகம், தேர்வு, மதிப்பெண் போன்றவைதான் முதலில் நினைவுக்கு வருகின்றன. ஆனால் கல்வி என்பது இவற்றைத் தாண்டி, ஒரு மனிதனைச் சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் சமூகத்தைப் புரிந்துகொள்ளவும் உருவாக்கும் ஒரு நீண்ட பயணம். இந்தப் பரந்த பார்வையை முன்வைக்கும் நூலாக ச. தமிழ்ச்செல்வன் தொகுத்த ‘கல்விக்கதைகள்’ அமைந்துள்ளது.

ஆரம்ப காலத்தில் படித்த நிகும்பலை கதை எனக்கு அப்போதே உந்துசக்தியாக இருந்தது. கல்லூரியில் பரிட்சைக்கு படிக்கும் மாணவர்களின் செயல்களும் தேர்வறைக்கு சென்று புறமுதுகிட்டு வரும் வீரர்களின் கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார். ஒரு அன்பளிப்பு குழந்தைகளின் வாழ்வில் எத்தகைய மாற்றமெல்லாம் தரும் என இக்கதை கூறுகிறது. அழகிரிசாமி எழுதிய இக்கதையை க்ளாசிக் என்றே சொல்லலாம். இன்றும் நான் குழந்தைகளுக்கு அன்பளிப்பு கொடுக்க காரணமாக இருந்தது இக்கதைதான்.

பள்ளிக்கூடமும் கல்வியும் இயற்கையாய் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிரிந்த ராமசாமிக்கு எவ்வளவு அழுத்தத்தை கொடுத்தது என கி.ரா வின் ஜெயில் கதை உணர்த்துகிறது.

புதிதாய் வந்த எலிசபெத். டீச்சருக்கும்
மண்டை ஓட்டை கழட்டி பாடங்களை உள்ளே வைத்து மூடி விடுவதில் சாமர்த்தியசாலி.சீனியரான பத்மாவதி டீச்சருக்கும்.இடையில் நடக்கும் தொழில்முனை போட்டியில் யார் வென்றார் என்பதே எங்கள் டீச்சர் கதை.மற்றொரு கதையான கால்பந்து விளையாட்டில் கோப்பை வாங்க வைத்த ஏகாம்பரம் சார் அன்று மாணவர்களுக்கு கடவுள். திறமைகளை வெளிக் கொண்டு வந்த அவருக்கு ஒரு சோதனை வருகிறது அது என்பதுதான் நாடார் சார் கதை.

மரி என்ற பெண்ணுக்கு ஏன் டி.சி கொடுக்க கூடாது என பேச்சை ஆரம்பிக்கும் தலைமையாசிரியரிடம் அவள் பற்றிய விபரங்கள் தெரிந்து கொள்ளும்.ஆசிரியர் அவள் வீட்டுக்கு செல்கிறார். அவளின் அணுகுமுறையில் ஆசிரியரின் குணத்தினால மாற்றமடைவதுதான் மரி என்ற ஆட்டுக்குட்டியின் கதை.சுதந்திர தினம் வருவதை ஒட்டி பள்ளியும் மாணவர்களும் கலெக்டர் வருகைக்கு காத்திருக்கிறார்கள். அவர் வந்து சென்ற பின் முத்தையாவும் பள்ளியும் புது பொலிவு பெறுகிறார்கள்.

கணக்கில் எத்தனை பூஜ்யம் நான் சம்பாதித்திருக்கேன். பூஜ்யம் எனது நண்பர்கள்.என போகும் கதை.. கண்க்கு வாத்தியாருக்கும் மாணவனுக்கும்.நடக்கும்.கதை. பொதுவாக கணக்கு பலருக்கு வேப்பங்காய். அதை தேன் போல் மாற்றுவது ஆசிரியர் செயல்பாடுதான். அதுபோன்ற கதைதான் கிருஷ்ணன் நம்பி எழுதியிருப்பார்.

ஆசிரியருக்கு காசு கொடுக்க நினைக்கும் புவனுவின் குடும்ப சூழல் பயம் ஆகியவை இறுதியில் பனிபோல் விலகுகிறது ராசேந்திர சோழனின் கதையில்.இரு குழந்தைகளின் உலகத்தை சிலிர்ப்பு கதையில் காட்டியிருப்பார் தி.ஜா.

இன்பச் சுற்றுலா செல்வதற்கு தயாராய் இருந்த சோலை அதற்கு செல்லமுடியாத சூழல் அமைகிறது. அது அவனை மட்டும் பாதிக்கவில்லை படிக்கும் நம்மை உலுக்கிறது. அவன் தந்தையைப் போல தேற்றுவதற்கு நமக்கு வார்த்தைகளின்றி தவிக்கிறோம்.இன்பச்சுற்றுலா என்றவுடன் வண்ணதாசன் எழுதிய குற்றால அருவி கதையும் நினைவுக்கு வருகிறது.

இமையத்தின் அரசாங்க பள்ளிக்கூடம் கதை ஒரு மேல்நிலைப்பள்ளி தலைமயாசிரின் பணிகளை சொல்கிறது. பணிகள் என்றால் கோப்புகளை கவனிப்பதோ, வகுப்பறை மேற்பார்வையோ அல்ல. மாணவர் பிரச்சினை தீர்ப்பது, புள்ளி விபரங்களை கொடுப்பது என கழிகிறது அந்த நேரத்தில் மாணவி ஷாலினியின் பிரச்சனையை  வகுப்பாசிரியர் தலைமை ஆசிரியரிடம் கொண்டு வருகிறார்.இப்பிரச்சினை என்ன என்பதை இயல்பான நடையில் யதார்த்த உண்மைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறார்.
சமகால நெருக்கடியையும் சமூகத்தின் முகத்தையும் சுட்டிக்காட்டுகிறது.

அ.வெண்ணிலா எழுதிய வெளியே கதை படிக்கும் போதே நெஞ்சம் கனக்கும். 90களில்.கழிவறை இல்லா காலங்களில். வீட்டிலும் பள்ளியிலும் கழிவறை இல்லாமல் காட்டிற்கு தான் செல்லவேண்டும். அப்படி செல்லும் சிறுமி யின் கதை தான். நாம் எப்படிப்பட்ட கஷ்டகாலத்தை கடந்து வந்திருக்கிறோம் என்பதை உணரமுடிந்தது.

இக்கதைகள் அனைத்தும் குழந்தைகளின் மன உலகையும், பள்ளிக்கூட அனுபவங்களையும் விவரிக்கிறது.இக்கதைகள் அனைத்தும் தனித்தன்மையானவை.

கல்வி என்பது தேர்வில் வெற்றி பெறுவதற்கான கருவி மட்டுமல்ல; அது மனிதனை மனிதனாக உருவாக்கும் செயல்முறை என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது. கிராமப்புற விளிம்பு நிலை மக்கள் கல்வியை அணுகும் விதம், கிராமிய சூழல், மனிதம், ஆசிரியர் மாணவர் உறவு ஆகியவை ஒவ்வொரு கதைகளின் அடி நாதமாக இருக்கிறது.இன்றைய பள்ளி மாணவ மாணவியர் இக்கதைகளை வாசித்தால் மனதில் பெரும் மாற்றம் வரும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Thursday, 27 August 2026

55


பாரதி ஒரு பார்வை
-வலம்புரி ஜான்

பாரதி- மின்னலை விழுங்கி, மின்சாரத்தைக் கொப்பளித்தவன்

ஆதிக்க வெள்ளத்தின் அடியில் கிடந்தாலும்-பாதிக்கப்படாத பாஸ்பரஸ் அவன்

வலம்புரி ஜான் பாரதி குறித்து எழுதிய வரிகள்

பாரதி குறித்து வரும் புத்தகங்கள் பாரதி குறித்த மதிப்பினை இன்னும் உயர்த்துவதாகும். அதிலும் இப்புத்தகம் இன்னும் ஒரு படி மேல். பாரதியை வெறுமனே சிலாகிக்காமல் தன் மொழித்திறத்தால் கற்பனை திறத்தால் அவன் தொட்ட உச்சத்தை படிக்கும் போது ஏன் அவரை சிலாகிக்க வேண்டும் எனும் உண்மையும் உரைத்துள்ளது.

சாதிக்கு எதிரான பார்வை பாரதியின் பாடலில் உள்ளது போல் அவரின் வாழ்விலும் அதை கடைபிடித்தாரா? எவ்வாறு என்பதை ஆய்வு செய்கிறது.
விடுதலை ஒன்றே குறிக்கோள்.எனும் நோக்கில் காந்தி திலகர் வரிசையில் பாரதியும் செயல்பட்டுள்ளார்.

பாரதியின் எழுத்துக்களில் உள்ள முரண்களை பற்றி பேசுகிறார். அச்சம்தவிர் எனில் ஏன் பாண்டிச்சேரியில் இருக்க வேண்டும், பெரிதினும் பெரிது கேள் எனில் ஏன் காணி நிலம் கேட்கிறார். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இடையில் இடைவெளி கூடாது என விவரித்து ஏன் என்பதற்கு சரியான காரணத்தையும் அடுக்குகிறார். பாரதியின் தீர்க்கதரிசன நினைவு எவ்வளவு நுட்பமானது என்பதை உணரவைக்கிறார் வலம்புரியார்.

பெண்களை எத்தனையோ கவிஞர்கள் புகழ்ந்துள்ளனர். தள்ளியும் உள்ளனர். பாரதி மட்டுமே பெண் விடுதலை குறித்தும் பெண் அடிமைப்பட்டுள்ளார் எனும் நெருப்பு விதைகளை ஊன்றியன். சிந்தித்தவன்.

'பெண்டாட்டி தனியடிமைப் படுத்த வேண்டிப்
பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?

எனும் வரியில் பெண்டாட்டி அடிமையாக நினைக்கலாம் அவன் பிள்ளை மனைவி மகள்,மருமகள் என அத்தனி பேரும் அடிமைப்படுத்த பட்டிருப்பதாக தெரிவிக்கிறார். சந்திரிக்கையின் கதையில் விதவையின் மறுமணம் பற்றி எழுதுகிறார்.

எங்கிருந்து பார்த்தாலும் வானம் ஒன்றுதான் என்பது வைரமுத்து அடிக்கடி பயன்படுத்தும் வார்த்தை. வல்ம்புரியாரும் எல்லா சமயங்களும் அன்பை போதிப்பதாக ஒரு கட்டுரைக்கு இத்தலைப்பில் தான் கருத்து சொல்லியிருப்பார். உண்மையைத் தேட முயற்சிக்கிறவன் எங்கிருந்தும் தேடட்டும்.இந்தப்வழி ஒன்றே சரியானது என்கிற முரட்டுத்தனமான மூடத்தனத்திலிருந்து மாத்திரம் தன்னை விடுவித்துக் கொண்டால் போதுமானது இல்லையெனில் மண்டைக்காடுகளே உலகமெஙகிலும் தொடர்கதைகளாகும்.

இன்றில்லாமல் போகலாம் நாளை மறுநாள்.. என்றாவது ஒரு நாள்..இந்த என்றாவது ஒரு நாள் இருக்கிறதே அதுதான் வாழ்க்கை என்கிறார். இப்படித்தான் பாரதி ஆடுவோமே பாடலை எழுதுகிறார்.'பொழுது புலர்ந்தது யாம் செய்த தவத்தால்.. என நம்பிக்கையூட்டியவர்.கடுகளவு விசுவாசம் உனக்கு இருந்தால், இந்த மலையை நோக்கி, நீ நகர்ந்து சென்று கடலிலேவிழு என்றால் விழுந்துவிடும் என்பதாக நம்பிக்கை ஊட்டும் கருத்துகளை பல்வேறு இடங்களில் மேற்கோளாக கூறுகிறார்.

கவிதை என்பது ஒரு Impulsive rebellion against the already existed scheme of ideas

என கவிதை உருவாக காரணம் என்ன என அலசுகிறார்.தன்னில் முரண்படுபவன் எழுதுகிறான்.சமாதானத்துடன் இருப்பவர் சத்தமில்லாமல் இருக்கிறார்.தண்ணீர் விடாத செடியில் முதலாக பட்டுப்போவது தளிர்தான் அந்த தளிரே கவிஞன். புதுக்கவிதை என்பது வசந்தத்தின் வரவு.வரலாற்றின் விளைச்சல். காலத்தின் கட்டாயம். என நவீன கவிதை குறித்தும் பாரதியின் கவிதை குறித்தும் பாரதிக்கு பின்னால் வந்த கவிஞர்களின் கவிதை குறித்தும் பேசியுள்ளார்.

கரும்புத் தோட்டத்திலே உழைத்து உழைத்து ஓடாகிப் போகிற பாரத மாதர்களுக்காக அவன் அழுகிறான். அதைச் சொல்லுகிறபோது, 'விம்மி விம்மி விம்மி விம்மி அழும் குரல் கேள் காற்றே' என்று நான்கு தடவை சொல்லுகிறான். குசேல பாக்யானத்தில் வரும் குசேலரை அழைப்பான் கண்ணன். 'வம்மின் வம்மின் வம்மின்' என்று அழைப்பான். நான்காவது முறை அவர் அப்படிச் சொல்லமாட்டார். காரணம் தமிழ் அப்படிச் சொல்ல விடவில்லையாம். மூன்று முறை அழைத்ததும் கேட்டதால் வந்தார். அவல் தந்தார்; ஆவலை நிறைவேற்றிக் கொண்டார். குசேலர் பிழைத்தார்.ஆனால் பாரதி நான்கு முறை சொல்லுகிற ஆறுதல் பிறக்காத என தேறுதல் குறித்து. பாரதியின் எழுத்தை நுட்பமாக ஆராய்கிறார்.

வந்தே மாதரம் என்பது இந்திச் சொல் அல்ல வங்க சொல்..அதன் அர்த்தம்.மாநிலத்தாயை வணஙகுவது. Textம்  notes ம் போடுகிற வழக்கத்தை ஆரம்ப்பித்தது பாரதியே.

வயிற்றுக்கு சோறிட வேண்டும் என்கிறான். சாப்பிட்டேன் என்று எப்போது சொல்வோம்.வயிறு ஆரச் சாப்பிட்டால் தானே.வருந்துகின்ற பசி ஆறச் சோறிட வேண்டும் என பொறுமையாக புரிந்து கொண்டால் அர்த்தம் புதிது.

ஒளவையின் பாடலையும்.மேற்கோள் சொல்கிறார் ஓதாமல் ஒருநாளும் என் வரும். படிக்காமல், வாசிக்காமல் என இருந்திருக்கலாம்.“எந்த நாளும் கல்வி கற்காமல் இருக்கக் கூடாது. கற்காமல் என்பது நாம் புதிதாக ஒன்றை கற்றுக் கொள்ள வேண்டும். வெறுமனே வாசித்தால்.மட்டும் போதாது எனும் பொருளும் உண்டு
அன்றாடம் படி புதிதாக உரக்க படி என்கிறார்.

பாரதி திலகர் பிரிவை சார்ந்தவராய் இருந்தாலும் காந்தியை பழித்தவர் அல்ல.அடிமைத்தனம் போக்கப்பட வேண்டும் என்பதில் ஆசை கொண்டவர்.அதனால் தான் அவர் பாடாதது தாலாட்டுப்பாடல் மட்டுமே.
விடுதலை தாகத்தை அனைவருக்கும் தம் எழுத்தின் மூலம் பறைசாற்றியவர்.அதோடு தமிழ் மக்கள்.அறிந்து கொள்ள வேண்டிய முற்போக்கு விசயங்களை தம் எழுத்தில் வடித்தார்.இது போன்ற ஆய்வுக்கட்டுரைகளை எழுதுவதற்கு பாரதியை முழுமையாக படித்தால் மட்டும் போதாது அதே சிந்தனையில் இருக்கும் மற்ற இலக்கியங்களையும் அறிந்து தக்க இடத்தில் மேற்கோள் காட்ட வேண்டும். சங்க இலக்கியம், உலக இலக்கியம், பைபிள்,  சிவ புராணம், ஆழ்வார் பாசுரம் என அனைத்தும் தக்க இடத்தில் தந்து அனைத்து கட்டுரைகளையும் திறன்பட திறனாய்வு செய்துள்ளார் வலம்புரி ஜான்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 23 August 2026

இளங்கோ


பரிணாம வளர்ச்சி விகிதத்தில் இதுவரை வந்த தலைமுறைகள் முந்தைய தலைமுறையை விட அடுத்த தலைமுறை சிறப்பான கற்கும் திறன் செயல்திறன் புரிதல் போன்ற அளவுகோல்களில் சிறந்து இருந்தது நரம்பியல் நிபுணர்களால் நிறுவப்பட்டுள்ளது.
 ஆனால் 1990 களுக்குப் பின்னர் பிறந்த தலைமுறை கற்கும் திறன் குறைவாக உள்ளது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன. நாம் நினைப்பது போல தொழில்நுட்ப வளர்ச்சி அவர்களின் எந்தத் திறனையும் வளர்த்தெடுக்கவில்லை. இரசனை என்று ஒன்று கூட இல்லை. குழந்தைகள் பிறக்கும் போதே குறைவான திறனுடன் பிறக்கின்றன. 
மொழியை உள்வாங்குவதில் இளம் வயது மூளை சிறப்பாக இருக்க வேண்டும். ஆனால் மொழியை ஏற்கும் திறன் குறைய குறைய மற்ற தொடர்பு வழிமுறைகளும் திறன்களையும் குழந்தைகள் இழக்கிறார்கள். இதில் திரை நேரம் என்று சொல்லப்படும் ஸ்க்ரீன் டைம் இரண்டாம் சேதாரத்தை ஏற்படுத்துகிறது. 
உற்பத்தி அறிவு ஆக்க அறிவு தர்க்க அறிவு போன்ற மூளையை குவியப்படுத்தும் திறன் இல்லாமல் ஆகிறது. 
இதெல்லாம் முன்பு அறம் சார்ந்த சிக்கல்கள் என்று தான் கல்வியாளர்கள் கருதினார்கள். இப்போது வரும் பல ஆய்வு முடிவுகள் உள்ளார்ந்த சேதாரத்தை ஸ்கேன் செய்து காட்டுகிறார்கள். மித மிஞ்சிய கோபம் குரோதம் என எல்லா வகையான எதிர்மறையான விளைவுகளை காட்டுகிறது. 
உண்மையில் ஒழுக்கம் சார்ந்த பார்வை அல்ல. மூளையின் பிரச்சினை இது.

Thursday, 20 August 2026

54


டார்வின் ஸ்கூல்
-ஆயிஷா இரா நடராசன்

தமிழ் சிறார் இலக்கியத்தில் அறிவியலையும் சுவாரஸ்யமான கதை சொல்லலையும் இணைத்துப் படைப்பதில் குறிப்பிடத்தக்கவர் எழுத்தாளர் ஆயிஷா இரா. நடராசன். குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் பல படைப்புகளை உருவாக்கியுள்ள அவர், எளிய மொழியில் ஆழமான சிந்தனைகளை முன்வைப்பவர். அந்த வகையில் ‘டார்வின் ஸ்கூல்’ குறிப்பிடத்தக்க நூலாகும்.

டார்வின் என்ற பெயர் கேட்டவுடன் நினைவுக்கு வரும்போது பரிணாம வளர்ச்சியும் உயிரினங்களின் தோற்றமும்.கதையின் நாயகனான ரோச் பீட்டர் எனும் சிறுவனின் மூளைக்குள் விலங்குகளின் மொழியைப் புரிந்து கொள்ளும் மைக்ரோ சிப் ஒன்றை அவரின் அப்பா பொருத்தியதால்..எல்லா விலங்குகளின் மொழியும் அவனுக்குப் புரிகிறது.

மாரி எனும் ஆந்தையுடன் ரோச் பீட்டர் விலங்குகள் படிக்கும்.பள்ளியை அறிகிறான். அதனை பார்க்க ஆவல் கொள்கிறான்.மாரியின் உதவியிடன் அங்கு செல்கிறான்.பாரதி எனும் முயல் உடன் வருகிறது.அது அடிக்கடி கவிதை பாடுகிறது.ஆனால் சிறிது நேரத்தில் மாரி, பாரதி,ஆர்.பி மோப்ப சக்தி நாய் ஆகியோர் தொலைந்து விடுகின்றனர்.பெரும் ஒளி அவனை நோக்கி வருகிறது.மின்மினி ஒளி என தெரிகிறது.

ஒவ்வொரு விலங்கின் உதவியுடன் நண்பர்களை தேடும்போது ஒவ்வொரு உயிரினங்களின் அமைப்பை அறிந்து கொள்கிறான்.வெளவால்களின் பதிலகள் தலைகீழாக எழுத்துக்கள் அமைந்தது நாமும் காட்டிற்குள் இருக்கும் உணர்வை தருகிறது.
உணவு சங்கிலியின் முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது.

காடுகளின் பல்லுயிர்ப் பாதுகாப்பு, காடுகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
ஃபிலோஸ் எனும் எலி, கோவிங்டன் ஆகியோர் உதவுகின்றனர்.
இப்புத்தகம் குழந்தைகளை கேள்வி கேட்கும் மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது.

இயற்கைத் தேர்வு, உயிரினங்களின் தோற்றம் போன்ற அறிவியல் கருத்துகள் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஆனால், இந்நூல் வெறும் அறிவியல் தகவல்களை எடுத்துச் சொல்லும் நூலாக மட்டும் அமையாமல், குழந்தைகளின் உலகத்தையும் அவர்களுடைய கேள்விகளையும் சிந்தனைகளையும் மையமாகக் கொண்டு அறிவியலை அணுகுகிறது.டார்வினின் ஃபிலோஸ் எனும் பெயரையே நாயகனை அழைக்கின்றனர்.
சிறுவனுக்கு உதவி செய்த கோவிங்டன் எனும் பெயர் கொண்ட எலி. இந்தப் பெயர் டார்வின் பயணம் செய்த கப்பலில் உதவியாளராக இருந்த கர்னல் கோவிங்டன். 

ஆந்தைக்கு ஏன் இரவில்.கண் தெரிகின்றன?

பறவை இனம் எப்போது தோன்றியது? என கேள்விகளும் பதில்களும்

தேன்சிட்டு, பாம்பு, யானை, கானகத்தின் பயன்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கூறியுள்ளனர்.

*மனிதன் உணர்ச்சிகளுக்கு அடிமையாகும் போது விலங்குகள எல்லாவற்றையும் விட பலமாகவும் பலவீனனாகவும் ஒரே சமயத்தில் ஆகிவிடுவான்.

* பாம்பு நாக்கை நீட்டி மடக்குவது காற்றை சுவை கொண்டு அறிவதற்கு.காற்றில் பரவியுள்ள வேதிப்பொருளை அறிந்து தற்காத்துக் கொள்ள உதவுவதாக கூறியுள்ளன்ர்.

குழந்தைகளிடம் ஆதாரத்துடன் சிந்தித்தல், சந்தேகம் எழுப்புதல், காரணத்தைத் தேடுதல், மூடநம்பிக்கைகளை ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை போன்ற அறிவியல் குணங்களை வளர்க்கும் வகையில் இந்நூல் அமைந்துள்ளது.

இறுதியில் கானகத்திற்கு வரும் ஆபத்தை எவ்வாறு சிறுவனும் அவனுடைய நண்பர்களும் எதிர்கொண்டனர் என்பதை கூறியுள்ளனர். குழந்தைளுக்கு படிக்க உகந்தது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 17 August 2026

சக்திவேல்


ஒருபோதும் அன்பு என்பது ஒரு மக்கள் இயக்கமாக இருந்ததில்லை. உண்மையில் யாருமே சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று விரும்பியதில்லை. ஒரு சில மனிதர்களின் அன்பினாலும், தீராத பேரார்வத்தினாலும் தான் இந்த உலகம் ஒன்றாகப் பிணைக்கப்பட்டிருக்கிறது. உண்மையில் அது அப்படித்தான் இணைக்கப்பட்டிருக்கிறது. இல்லையென்றால் நீங்கள் எப்போதோ விரக்தியில் மூழ்கியிருப்பீர்கள்.

ஏதாவது ஒரு மத்தியானப் பொழுதில், ஏதாவது ஒரு நகரத்தின் தெருவில் ஜாலியாக நடந்து செல்லுங்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களைக் கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் யாரைப் பார்க்கிறீர்களோ, அவர் வேறு யாருமல்ல, அவர் நீங்களே தான் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு மனிதரும் நீங்களே தான்.
நீங்கள் அந்த மோசமான
மனிதராக இருந்திருக்கலாம். நீங்கள் அந்த அரக்கனாக இருந்திருக்கலாம் அல்லது அந்த அதிகார வெறி மிக்க
காவல்துறை அதிகாரியாக
இருந்திருக்கலாம். அவர்களைப் போல
மாறாமல் இருக்க, உங்களுக்குள்ளேயே நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

- ஜேம்ஸ் பால்ட்வின்

Sunday, 16 August 2026

tom addison


ஐன்ஸ்டீனின் 7 வாழ்வியல் சார்ந்த கருத்துக்களை  Tom additison எழுதுகிறார்

1. வாழ்க்கை — நகர்ந்து கொண்டே இரு

“வாழ்க்கை என்பது மிதிவண்டி ஓட்டுவது போன்றது. சமநிலையைப் பேண வேண்டுமென்றால், தொடர்ந்து நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.”

வாழ்க்கையில் நகர்வதை நிறுத்துவதற்கு ஒருபோதும் சரியான நேரம் கிடையாது.

துயரமான காலங்களிலும் அல்ல.
நல்ல காலங்களிலும் அல்ல.
சோகமான நேரங்களிலும் அல்ல.
எந்த நேரத்திலும் அல்ல.
உங்களுக்கு என்ன நடந்தாலும், நீங்கள் முன்னோக்கி நகர்ந்துகொண்டே இருக்க வேண்டும்.

இல்லையெனில் நீங்கள் கீழே விழுந்துவிடுவீர்கள். விழுந்த பிறகு மீண்டும் எழுந்து நிற்பது கடினமாகிவிடும்.

2. வெற்றியை விட மதிப்புமிக்கவராக இருங்கள்

“வெற்றியடைந்த மனிதராக மாற முயற்சிக்காதீர்கள்; மாறாக, மதிப்புமிக்க மனிதராக மாற முயற்சி செய்யுங்கள்.”
வெற்றி பெற வேண்டும் என்பதையே ஒரே நோக்கமாகக் கொண்டிருப்பவர்கள், பெரும்பாலும் உண்மையான வெற்றியை அடைவதில்லை.

மிகவும் வெற்றிகரமானவர்கள், பிறருக்கு மிகப் பெரிய மதிப்பை வழங்குவதில் கவனம் செலுத்துகிறார்கள்.

அவர்கள் பெறுவதைவிட அதிகமாகக் கொடுக்கிறார்கள்.
சிறந்த சேவையை வழங்குகிறார்கள்.
அதற்குப் பதிலாக எதையும் எதிர்பார்ப்பதில்லை.

3. கேள்வி கேட்பதை நிறுத்தாதீர்கள்

“கேள்வி கேட்பதை நிறுத்தாமல் இருப்பதே முக்கியம். ஆர்வத்திற்கு அதற்கே உரிய ஒரு காரணம் இருக்கிறது.”

அளவற்ற ஆர்வமே ஞானத்தையும் ஆழமான அறிவையும் வளர்த்துக்கொள்வதற்கான மிகச் சிறந்த வழியாகும்.

‘முட்டாள்தனமான கேள்வி’ என்று எதையும் நினைக்காமல் கேளுங்கள்.
ஒரே ஒரு பதிலைக் கேட்டவுடன் திருப்தியடைந்து விடாதீர்கள்.

உங்களைச் சுற்றியுள்ள மற்றவர்களைவிட ஆழமாகச் சிந்தித்து, மேலும் தெரிந்துகொள்ளத் தயாராக இருங்கள்.

4. “துன்பம் ஒருவனை அவனுக்கே அறிமுகப்படுத்துகிறது.”

கடுமையான சவால்களைக் கடந்து செல்லாமல் ஒருவர் தன்னுடைய சிறந்த வடிவத்தை அடைய முடியாது.
துன்பங்களின் வழியாகத்தான் நாம் வளர்கிறோம்.

சவால்களின் வழியாகத்தான் நம்முடைய வாழ்க்கையின் முழுமையான திறனை உணர முடிகிறது.

5. எளிமையாக விளக்க முடியாவிட்டால்...

“ஒரு விஷயத்தை எளிமையாக விளக்க முடியவில்லை என்றால், அதை நீங்கள் போதுமான அளவு புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம்.”

நீங்கள் புரிந்துகொண்ட ஒரு விஷயத்தை சில எளிய வாக்கியங்களில் தெளிவாக விளக்க முடியும்.

அவ்வாறு விளக்க முடியவில்லை என்றால், அந்த விஷயத்தைப் பற்றிய உங்கள் அறிவு இன்னும் ஆழமாகவில்லை என்று பொருள்.
எனவே மீண்டும் கற்றுக்கொள்ளத் திரும்பிச் செல்ல வேண்டும்.

6. தவறுகள் செய்வது தவறல்ல
“ஒருபோதும் தவறு செய்யாத ஒருவர், புதிய முயற்சி எதையும் செய்ததில்லை.”

யாரும் தவறு செய்ய விரும்புவதில்லை. தோல்வியடைவதும், பிறர் முன்னிலையில் முட்டாளாகத் தோன்றுவதும் யாருக்கும் பிடிக்காது.

ஆனால் ஒருபோதும் தவறு செய்யாத ஒருவர், உண்மையில் தன்னுடைய எல்லைகளைத் தாண்டி முயற்சி செய்ததில்லை.

தவறுகள் மோசமானவை அல்ல.
அடுத்த முறை எதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுக்கும் அனுபவத் தரவுகளே தவறுகள்.

7. மனிதர்களின் இயல்பு

“பிரபஞ்சமும் மனித முட்டாள்தனமும் மட்டுமே முடிவில்லாதவை; ஆனால் பிரபஞ்சத்தைப் பற்றி எனக்கு அவ்வளவு உறுதியாகத் தெரியவில்லை.”

பழமொழி சொல்வது போல, மனிதர்கள் எப்போதும் மனிதர்களாகத்தான் இருப்பார்கள்.
அவர்கள் சில நேரங்களில் முட்டாள்தனமான செயல்களைச் செய்வார்கள்.

பகுத்தறிவற்ற விதத்திலும் நடந்து கொள்வார்கள்.
அவர்களின் செயல்கள் நம்மைத் தலையசைக்கவும் வைக்கும்.
ஆனால் இதைப் பற்றி நம்மால் பெரிதாக எதுவும் செய்ய முடியாது!

எனவே, பிறருடைய குறைகளைப் பொறுமையுடனும் மன்னிக்கும் மனப்பான்மையுடனும் அணுகுவதுதான் நம்மால் செய்யக்கூடிய சிறந்த செயல்.

52


இடக்கை

-எஸ்.ராமகிருஷ்ணன்

இந்த நாவல், மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் இறுதி நாட்களையும், அதே காலகட்டத்தில் வாழ்ந்த விளிம்புநிலை மனிதர்களையும் மையமாகக் கொண்டது. உலகையே தன் கைக்குள் வைத்திருந்த பேரரசர், தன் இறுதிக் காலத்தில் ஒரு எளிய படுக்கையில் தனிமையில் கிடக்கிறார். "இரவின் முன் மன்னரும் எளியவரும் ஒன்றுதானே" என்ற தத்துவம், மரணத்தின் முன்னால் அதிகாரம் எவ்வளவு பலமற்றது என்பதை உணர்த்துகிறது.

மனிதன் இறுதியில் சந்திக்கப்போவது தன் தனிமையையும் கடந்த கால நினைவுகளையும் மட்டுமே. வாழ்க்கை என்பது வெறும் நினைவுகளின் தொகுப்பு என்பதை ஔரங்கசீப்பின் கதாபாத்திரம் நமக்குப் புரியவைக்கிறது.

நாவலின் தலைப்பான 'இடக்கை' என்பது இடது கைப் பழக்கம் கொண்ட 'சாமர்' இன மக்களைக் குறிக்கிறது. தூமகேது என்ற கதாபாத்திரத்தின் வழியாக, இந்த எளிய மக்கள் அதிகார வர்க்கத்தால் எப்படி அநீதியாக நடத்தப்படுகிறார்கள் என்பதை ஆசிரியர் விவரிக்கிறார். "இடக்கை என்பது வெறும் கையல்ல; அது இந்த ராஜ்யத்திற்குப் புறக்கணிக்கப்பட்ட ஒரு பகுதி" என்ற தாயின் கூற்று சமூகத்தின் ஏற்றத்தாழ்வைச் சுட்டிக்காட்டுகிறது.தூமகேதுவின் மனைவி மலம் அள்ளும் தொழில் செய்பவர்."சொர்க்கத்திற்கு சென்றாலும் அங்கேயும் நம்மை மலம் அள்ளச் சொல்லுவார்கள்.நம்மை இவர்கள் மனிதர்களாக மதிப்பதேயில்லை எனும் வரிகள் வலிமிகுந்தது.

 செய்யாத குற்றத்திற்காக தூமகேது கைது செய்யப்பட்டு, பிஷாடன் என்ற சிற்றரசனின் கட்டுப்பாட்டில் உள்ள 'காலா' சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக்ரதார் போன்ற அறிஞர்களைச் சந்திப்பதன் மூலம் நீதியைப் பற்றிய புதிய பார்வையைப் பெறுகிறார். பின்னர் சிறையிலிருந்து தப்பிக்கும் அவர், தனது மனைவி நளா மற்றும் பிள்ளைகளைத் தேடி நாடெங்கும் அலைகிறார்

நாவலில் வரும் சூபி ஞானி இபின் முகைதீன் மற்றும் சிறைச்சாலையில் சந்திக்கும் சக்ரதார் போன்ற கதாபாத்திரங்கள் நீதியைப் பற்றிய நுட்பமான தத்துவங்களைப் பேசுகிறார்கள். "சட்டம் யாவருக்கும் சமம், ஆனால் அந்தச் சட்டத்தை யார் உருவாக்குகிறார்கள் என்பதில் தான் நீதி ஒளிந்துள்ளது" என்பது போன்ற விவாதங்கள் சிந்திக்க வைக்கின்றன.

அதிகாரம் நீதியை வளைக்கலாம், ஆனால் காலம் வழங்கும் நீதியையும் இயற்கையின் விதியையும் யாராலும் மாற்ற முடியாது.

பேரரசரின் அந்தப்புரப் பணியாளரான அஜ்யா என்ற திருநங்கையின் கதாபாத்திரம், ஒளரங்கசீப் இறந்தவுடன் கைது செய்யப்பட்டு, சிறைவாழ்வு விவரிக்கப்படுகிறது.  அதிகார மாற்றத்தின் போது நடக்கும் வன்முறைகளையும், ஒரு தனிமனிதனின் விசுவாசத்தையும் காட்டுகிறது. ஔரங்கசீப் தன் கைப்படத் தைத்த ஒரு குல்லாவையும், தங்க நாணயங்களையும் ஒரு எளிய மனிதனிடம் ஒப்படைக்கச் சொல்லி அஜ்யாவிடம் வேண்டுவது, அவரது இறுதிக்கால மனமாற்றத்தைக் காட்டுகிறது.அஜ்வாக்காக உயில் எழுதுகிறார். தான் இறந்த பின் ஒப்படைக்க வேண்டிய பொருட்களை குறித்துக் கொடுக்கிறார்.

இதற்காகப் பயணம் மேற்கொள்ளும் அஜ்யா, ஒற்றர்களால் சந்தேகிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். இறுதியில், மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்குப் பிறகு அஜ்யா தூக்கிலிடப்படுகிறார்.

'இடக்கை' நாவல் வெறும் வரலாற்றுச் செய்திகளின் தொகுப்பல்ல. அது, "அதிகாரம் என்பது ஒரு மரண சிம்மாசனம்" என்ற உண்மையை உரக்கச் சொல்கிறது. ஒரு மனிதன் தன் வாழ்வில் எதைத் தேடி ஓடினாலும், இறுதியில் அவன் எஞ்சுவது அவனது அறம் சார்ந்த செயல்களால் மட்டுமே என்பதை இந்நாவல் மிக அழகாகப் பதிவு செய்துள்ளது.

*நாவல், அரியணையில் உலகையே அசைத்துப் பார்த்த மொகலாயப் பேரரசர் ஔரங்கசீப், தனது 88-வது வயதில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் கிடப்பதில் இருந்து தொடங்குகிறது. மரணத்தின் விளிம்பில் இருக்கும் அவர், தனது கடந்த காலச் செயல்களை எண்ணி வருந்துகிறார். குறிப்பாக, தனது இளமைக்காலத்தில் 'அனா' என்ற தாதி கேட்டுக் கொண்டதற்காக, உதிர்ந்த ஒரு பூவை மீண்டும் கிளையில் ஒட்ட வைக்க முயன்று தோற்றுப்போகிறார். அந்தத் தோல்வியைத் தாங்க முடியாமல் அந்தப் பூவைத் தைக்கத் தெரிந்த அந்தத் தாதியை யானை காலில் மிதித்துக் கொல்ல ஆணையிடுகிறார். இந்தச் செயல் அவரது மனச்சாட்சியைத் தனது இறுதிக்காலத்தில் பிசைகிறது.

*சத்கர் தேசத்தை ஆளும் பிஷாடன், அதிகார போதையில் இருக்கும் ஒரு கோரமான ஆட்சியாளராகச் சித்தரிக்கப்படுகிறார். குரங்குடன் சதுரங்கம் ஆடுவது, மக்களுக்கு விசித்திரமான தண்டனைகளை வழங்குவது என இவரது காலம் அநீதியால் நிறைந்துள்ளது. இவரது முட்டாள்தனமான உத்தரவுகளால்  மக்கள் பெரும் துயருக்கு ஆளாகிறார்கள்.

நாவலின் இறுதியில், ஔரங்கசீப் இறந்துபோகிறார். அவர் அஜ்யாவிடம் கொடுத்து அனுப்பிய குல்லா, பல கைகள் மாறி இறுதியாக அலைந்து திரியும் தூமகேதுவின் கைகளுக்கு வந்து சேர்கிறது. பேரரசர் தன் கையால் தைத்த அந்தக் குல்லாவை, அதன் மதிப்பு அறியாமல் ஒரு பிச்சைக்காரன் தூமகேதுவுக்குத் தானமாகத் தருகிறான்.

*கஷ்டங்கள் தானே வருவதில்லை, நாம் என்றோ விதைத்தவையே இன்று உருமாறித் திரும்பி வருகின்றன."

*குற்றத்தின் நிழலில் வாழும்போது சிரிப்பு ஒன்றுதான் ஆறுதலானது

*தூமகேதுவின் இறுதி அலைச்சல்: பல ஆண்டுகள் தனது மனைவி நளா மற்றும் பிள்ளைகளைத் தேடி அலைந்த தூமகேது, இறுதியில் உடல் நலிந்து, பேசக்கூடத் தெம்பற்ற நிலையில் ஒரு புளியமரத்தடியில் வந்து அமர்கிறார். தான் ஒரு நடைப்பிணம் என்று உணரும் அவர், இனி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாது என்ற விரக்தியில் கண்களை மூடிக்கொள்கிறார்.
அதற்கு மொகலாய் ஆட்சி மாற்றத்தை விவரிக்கிறார்.

அப்போது அந்த வழியாக ஒரு தர்காவிற்கு யாத்திரை செல்லும் ஒரு பெரிய கூட்டம் வருகிறது. அவர்களில் ஒருவர் தூமகேதுவுக்குச் சில நாணயங்களைத் தருகிறார், மற்றொருவர் உணவும் நீரும் தந்து அவரை ஆற்றுப்படுத்துகிறார்.

அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு பிச்சைக்காரன், தனது தலையில் இருந்த வெண்ணிறக் குல்லாவைக் கழற்றி, "சகோதரா, இதை அணிந்து கொள். வெயிலில் இருந்து உன்னைப் பாதுகாக்கும்" என்று கூறி தூமகேதுவுக்குத் தானமாகத் தருகிறான். அது பேரரசர் ஔரங்கசீப் தனது இறுதிக்காலத்தில் தன் கைப்படத் தைத்து, அஜ்யாவிடம் கொடுத்து அனுப்பிய அதே குல்லா என்பது தூமகேதுவுக்குத் தெரியாது.

 யாத்ரீகர்களில் ஒருவன் தனது கையில் இருந்த ஒரு சாமந்தி மாலையை தூமகேதுவை நோக்கி வீசுகிறான். பத்து வயதில் ஒரு திருவிழாவின் போது தான் ஆசைப்பட்ட அந்தச் சாமந்தி மாலை தன் மடியில் வந்து விழுந்ததும், தூமகேதுவின் கண்கள் கலங்குகின்றன.தன்மனைவியை காட்ட தேடுகிறான்.அவள் இல்லாமல் வருந்துகிறான். ஆனாலும் அங்கு கேட்கும் மேளச்சத்தத்தை கேட்டு இடது கை தாளமிடுகிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 15 August 2026

book-51


உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
-க.சீ சிவக்குமார்

‘உப்புக்கடலைக் குடிக்கும் பூனை’ என்ற தலைப்பு வாசகனுக்குள் உடனடியாக ஒரு வினாவை எழுப்புகிறது.பூனை ஏன் உப்புக்கடலைக் குடிக்கிறது?

இது இயல்புக்கு மாறான ஒரு காட்சியை உருவாக்குகிறது. ஆனால் சிவகுமாரின் கதைகளின் இயல்பே இதுதான். வாழ்க்கையில் சாதாரணமாகத் தோன்றும் சம்பவங்களுக்குள் இருக்கும் விசித்திரத்தையும் நகைச்சுவையையும் அவர் கண்டுபிடிக்கிறார்.தலைப்பு வெறும் நகைச்சுவைத் தலைப்பு அல்ல; வாழ்க்கையின் முரண்பாடுகளைச் சுட்டும் படிமம்.

நவீன சிறுகதைகளில் அரிதாகிவரும் நகைச்சுவை சிவகுமாரின் எழுத்தில் இயல்பாக வெளிப்படுகிறது. அவரது கதாபாத்திரங்கள் பெரிய சாதனையாளர்களாகவோ, அசாதாரண மனிதர்களாகவோ இருப்பதில்லை; நம்மைச் சுற்றி வாழும் எளிமையான, பாசாங்கற்ற, வெள்ளந்தியான மனிதர்களே. அதனால் அவர்களுடன் வாசகன் மிக நெருக்கமாகப் பயணிக்க முடிகிறது

 "அறிவின் புனித ஊற்று தொடர்ந்து பீறிட்டே கொண்டே இருப்பதால் யாருடமாவது பேசியே தீர வேண்டுமென" தேனி தேனரசனின் குணாதிசியத்தை அமிழ்து அமிழ்து கதை மூலம் காணலாம்.தன்வினை, பிறவினையை தமிழில் படித்திருப்போம் அது சாராயம் விற்கும் வேலன்துறை அய்யப்பனுக்கு நடக்கும்.போது நமக்கு எளிதில் புரிகிறது. தற்கொலை செய்த நண்பனின் பிணத்தை தூக்கிக் கொண்டு வருகையில் வழி தோறும் அவன் நினைவுகளின் வலியை இயல்பிகந்த கிண்ணாரத்தில் வெளிப்படுத்தியிருப்பார். அக்கதையில் தன் பெயரையே பயன்படுத்தியிருப்பது இன்னும் ஆச்சர்யம்.உன் கல்லறை வாக்கியம் என்ன என முடிகிறது கதை

கடிகாரத்தை பழுது பார்க்க செல்கையில் நடக்கும் சுவாரஸ்யத்தை சுற்று கதையில் தவறவிடக்கூடாது. நிலவொளியில் வானவில்லை தோன்ற செய்யும் காதலர்களாக கானலங் காதலில் எள்ளலுடம் வெளிப்படுத்தியிருப்பார்.

"கைக்கு கிடைக்கும் வரை சொந்த கோழியும் சொந்த கோழி அல்ல" என கறி.கதையில் புதிய கோணத்தில் எழுதியிருப்பார்."ஈடில்லாததும், வீடில்லாததுமான அந்த நாய்’’ என ஆரம்பிக்கும் தி நேம் இஸ் மணி ஜாக்கிசான் பட டைட்டில்.கதை அக்மார்க் நையாண்டி. " அடிபடாமல் நீண்டநாள் வாழனும்னா கொஞ்சம்.கட்டுக்குள் தா இருக்கனும்னு ஜென் தத்துவத்தை போதித்திருப்பார்.

கிராமிய வாழ்வையும், எளிய மனிதர்களின் அன்றாடப் பாடுகளையும், அவர்களுடைய ஆசை–ஏமாற்றங்களையும் நகைச்சுவையும் கருணையும் கலந்த பார்வையில் அணுகுகிறது. 

சினிமா ஆசையில் சென்னையில் ரூம் மேட்டாக வரும் பூந்துறை பாரதி, ஒடலை காமராசுவின் யதார்த்த வாழ்க்கை பலரின் நிழல்களை தொட்டுப் பார்க்கிறது.குருசேவ் குழந்தையாக இருக்கும்போது கதை கிட்ணன்-ராச்சாளின் சுய விளம்பர கதைகளை சொல்கிறது.சாதி சான்றிதழ் வாங்கச் செல்லும் அனுபவம என்பது ஏழு மலைஎழு கடல் தாண்டி செல்லும் ராஜசேகர ரணதீரன் உண்மையில் மாவீரன் தான். கிளி.ஜோசியம் பார்த்து பீதியடைந்த ஓட்டுநர் தர்மராஜின் பயமயம் சிரிக்க வைக்கிறது நம்மை." பிராய்டுகள் தோன்றியிருக்கவிட்டாலும் கனவுகள் தோன்றியிருக்கக் கூடும் என்பது அக்மார்க் குசும்பு.செத்தது எதுவாக இருந்தாலும்.மத்தது அதுவாக இருக்கும் என் எந்த பூனை செத்தது என நம்மையும் கண்ணாமூச்சி ஆட வைத்திருப்பார்.

தனிமை, ஏக்கம், உறவுகளின் வெறுமை போன்ற ஆழமான உணர்வுகளை அவர் நேரடியாகப் பிரசங்கிப்பதில்லை. அவற்றைச் சாதாரண நிகழ்வுகள், விலங்குகள், மனிதர்களின் நடவடிக்கைகள் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகிறார்.வீட்டுக்கு ஓடு மாற்றும் மராமத்து அவஸ்தைகளை இயல்பாடு வீடு கதையில் சொல்லியிருப்பார்.

பைக் ஓட்டும் மகளிடம் இயல்பாக தாய்க்கு ஏற்படும் பயத்தை தனக்கே உரிய பாணியில் பயம் வந்திட கதையில் சொல்லியிருப்பார். வாழ்த்து அட்டையை, காதல் கடிதங்களை மையப்படுத்திய கரு சுவாரஸ்யமானது.மளிகை பாக்கி செலுத்த வேண்டியது தான் மட்டுமே

 என மனைவி சொல்லும் நோக்கத்தில் தன்மானம் மிளிர்கிறது. கைம்பெண்ணுக்கு கலர் புடவை கட்டியதை முற்போக்குத்தனமாக எதிர்கொள்ளாமல் இன்னும்.பழைய காலத்தில் உழலும் அக்கா கணவனுக்கு சரியான பதிலடி கொடுத்திருப்பார் மல்லிகா

அண்ணன் தங்கைக்கு எழுதும் ஒரு கடிதம் தான் கதை.அதில் சொல்ல மறைத்த ஆயிரம் விஷயங்கள் இருக்கும்.கடன் பாக்கி வைத்ததை செலுத்தவரும் நோயாளி.. கதை நெகிழ்ச்சியுடன் மனிதனின் விவரமான மறுபக்கமும் தெரிகிறது.

"கடல் வத்தி மீன் புடிக்கலாம்னா முடியாதே". புகுந்த வீட்டில் செத்துப் போகும் நினைவைக் கொண்டு வரும் ரோமி நாய் நெஞ்சை உலுக்குகிறது.

"ஜெயிச்சா ஊருக்கு நல்லது, தோத்தா நமக்கு நல்லது" என அரசியல் அரிச்சுவயை அஞ்சாப்பு வாய்ப்பாடு மாதிரி எளிதில் சொல்லியிருப்பார்.

தன்னுடைய கதைகளை பற்றி முன்னுரையில் கூட கதைகள் அனுபவத்தில் முகிழ்ந்தவை.அதை கைப்பற்றுத் திராணியற்றவர்களின் கழிவிரக்கத்தோடு பொருத்துகையில்
கறுப்பு நகைச்சுவையுடன் கூடிய ஒரு கலையாக மாறுவதாக கூறுகிறார்.

எந்த ஒரு வருணனை, மூக்குத் தொடும் வித்தையெல்லாம் இன்றி இயல்பான நகைச்சுவையுடன் எள்ளலுடன் கதை சொல்லும் பாணி கைவரப்பெற்றவர் க.சீ சிவக்குமார். இந்த ஸ்ட்ரெஸ் உள்ள காலத்தில் அவரின் நகைச்சுவை எழுத்தினை இந்த தமிழ் சமூகம் மிஸ் செய்கிறது.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 12 August 2026

படித்தது


ஷேக்ஸ்பியர் தனது 'சிம்பலைன்' (Cymbeline) நாடகத்தில் சொன்னது: "செலுத்தப்படாத சில படகுகளையும் அதிர்ஷ்டக் காற்று துறைமுகத்திற்கு அடித்துக் கொண்டு வருகிறது!"

ஆனால், நகர முடியாத அளவிற்கு பலமாக நங்கூரமிடப்பட்ட எந்தவொரு படகையும் அதிர்ஷ்டத்தால் கூடக் கரையேற்ற முடியாது!

மேதைகளின் மறைக்கப்பட்ட பழக்கவழக்கங்களில் ஒன்று என்ன தெரியுமா? 

அவர்கள் அனைவரும் தங்களின் இலக்குகளை அடைவதற்காக ஒரு பெருநகரத்திற்கோ (Metropolis) அல்லது ஒரு பல்கலைக்கழகத்திற்கோ புலம்பெயர்ந்து செல்கிறார்கள்!

ஷேக்ஸ்பியர், பெஞ்சமின் பிராங்க்ளின், மற்றும் ஃபிளெமிங்— லண்டன் நகருக்குச் சென்றார்கள்.

வாட்சன் மற்றும் கிரிக் — கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திற்கு சென்றார்கள்.

லூயிஸ் பாஸ்டர் — லில்லி நகருக்கும், பின்னர் பாரிஸிற்கும் சென்றார்.

மார்க் ஜுக்கர்பெர்க்— சிலிக்கான் வேலிக்குச் சென்றார்.

இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் இளம் பருவத்தில் ஒரு பெருநகரத்திற்கோ, ஒரு பல்கலைக்கழகத்திற்கோ, அல்லது ஒரு பெருநகரத்திற்குள் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கோ புலம்பெயர்ந்தார்கள்.

"நான் அதிர்ஷ்டத்தை நம்புவதில்லை. அதிர்ஷ்டம் என்பது உழைப்பிற்கான தயாரிப்பும், வாய்ப்பின் தருணமும் சந்திக்கும் புள்ளியாகும்" என்றார் ஓப்ரா வின்ஃப்ரே 2011-ல். 

உண்மைதான், ஆனால் அந்த சந்திப்பு நடக்கும் இடத்திற்கு நீங்கள் முதலில் சென்றாக வேண்டும் அல்லவா? 

ஓப்ரா வின்ஃப்ரே சிகாகோ நகருக்குப் புலம்பெயர்ந்தார்!

மேதைகளும், அவர்களின் மாபெரும் நகரங்களும்

ஏதென்ஸ்: சாக்கிரட்டீஸும் பிளேட்டோவும் அங்கே பிறந்தவர்கள்; ஆனால் அரிஸ்டாட்டில் தனது 17-ஆவது வயதில் அங்கே புலம்பெயர்ந்து சென்றவர்!

லண்டன்: மைக்கேல் ஃபாரடே அங்கே பிறந்தவர்; ஆனால் ஷேக்ஸ்பியர், சார்லஸ் டிக்கன்ஸ், மற்றும் வர்ஜீனியா வுல்ஃப் ஆகியோர் பிற இடங்களிலிருந்து லண்டனுக்கு வந்தவர்கள்.

வியன்னா:  சூபெர்ட் மற்றும் ஷோன்பெர்க் ஆகியோர் அந்நகரத்து உள்ளூர்வாசிகள்; ஆனால் ஹேடன், மொஸார்ட், பீத்தோவன், பிராம்ஸ், மற்றும் மாலர் ஆகியோர் பிற இடங்களிலிருந்து குடிபெயர்ந்தவர்கள்! சிக்மண்ட் பிராய்டும் அப்படித்தான்.

நியூயார்க்: அலெக்சாண்டர் ஹாமில்டன் நியூயார்க்கிற்கு புலம்பெயர்ந்தார். 

நவீன கலை உலகின் மாபெரும் ஆளுமைகளான யாயோய் குசாமா, ஜாக்சன் பொல்லாக், ராபர்ட் மதர்வெல், மார்க் ரோத்கோ, மற்றும் ஆண்டி வார்ஹோல் ஆகியோர் நியூயார்க்கிற்கு புலம்பெயர்ந்தவர்கள். 

1953-ல் ஜப்பானின் கிராமப்புற பழமைவாதச் சூழலிலிருந்து நியூயார்க்கிற்குச் சென்றதைப் பற்றி குசாமா கூறியது: "நான் அங்கிருந்து வெளியேறியாக வேண்டியிருந்தது!"

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை: ஐசக் நியூட்டனுக்குக் கேம்பிரிட்ஜ் இருந்தது. ஐன்ஸ்டீனுக்கு பெர்லினில் உள்ள மேக்ஸ் பிளாங்க் நிறுவனமும், பின்னர் பிரின்ஸ்டனில் உள்ள உயர்கல்வி நிறுவனமும் இருந்தன. தொழில்நுட்பக் குருக்களான இலான் மாஸ்க், செர்ஜி பிரின், லாரி பேஜ், மற்றும் பீட்டர் தீல் ஆகியோர் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கழித்த காலங்கள் முக்கியமானவை.

மேதைகள் ஒரே இடத்தில் தங்குவதில்லை. தங்களுக்கு சாதகமான சூழல் எங்கு இருக்கிறதோ, அங்கே நோக்கி நகர்கிறார்கள்!

மேதாவித்தனத்தின் 'இயக்க விதி' (Genius Anti-inertia Law)

இந்த இடப்பெயர்வு விதியை நாம் "மேதாவித்தனத்தின் இயக்க விதி" (Genius Anti-inertia Law) என்று அழைக்கலாம்.
நிச்சயமாக இந்த விதிக்கு சில விதிவிலக்குகளும் உள்ளன:

ஓஹியோவின் சிறிய நகரமான டேட்டனிலேயே தங்கியிருந்த ரைட் சகோதரர்கள்.

திறந்தவெளிப் புலங்கள் தேவைப்பட்ட தாவரவியலாளர்கள் கிரிகோர் மெண்டல் மற்றும் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர்.

இயற்கை ஆராய்ச்சியாளரான டார்வின் மற்றும் வெளிப்புற ஓவியர்களான (Plein air painters) க்ளாட் மோனே, ஜார்ஜியா ஓ'கீஃப் போன்றோர் தங்களின் தொழில்முறைத் தேவை காரணமாக இந்த விதியிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.

ஆனால் ஒரு பொதுவான விதியாக,மேதைகள் பண்ணைகளிலேயே தேங்கிவிடுவதில்லை!

'நட்சத்திரங்கள் மின்னும் இரவு' ஓவியத்தை வரைந்த வின்சென்ட் வான்கோ கூட தனது இளம் வயதில் கூறினார்: "மாதத்திற்கு 50 பிராங்குகள் குறைவாகக் கிடைக்கிறது என்பதற்காக என்னை மீண்டும் கிராமத்திற்கே செல்லச் சொல்வது நியாயமில்லை. என் எதிர்கால ஆண்டுகள் அனைத்தும் நான் ஆண்ட்வெர்ப் அல்லது பாரிஸ் போன்ற நகரங்களில் உருவாக்கிக் கொள்ளும் தொடர்புகளோடுதான் பிணைக்கப்பட்டுள்ளன."

1886-ல் வான்கோ பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார்!

அக்காலகட்டத்திலோ அல்லது அதற்குச் சற்றுப் பின்னரோ பாரிஸிற்குப் புலம்பெயர்ந்த மற்ற கலைஞர்கள்:

ஓவியர்கள்:
பிக்காசோ, மார்ட்டிஸ், மோடிக்லியானி, மார்க் சகால், பிராக், பிரான்குசி, ஜோன் மிரோ, மற்றும் டியாகோ ரிவேரா.

இசையமைப்பாளர்கள்: 
க்ளாட் டெபுசி, ஸ்ட்ராவின்ஸ்கி, மற்றும் ஆரோன் கோப்லாண்ட்.

எழுத்தாளர்கள் & கவிஞர்கள்: எஸ்ரா பவுண்ட், அபோலினேர், ஜேம்ஸ் ஜாய்ஸ், கெர்ட்ரூட் ஸ்டைன், எர்னஸ்ட் ஹெமிங்வே, மற்றும் ஃபிட்ஸ்ஜெரால்ட்.

"நான் பாரிஸுக்குப் போயிருக்காவிட்டால், இன்று யாராக இருக்கிறேனோ அப்படி ஆகியிருக்க முடியாது"* என்றார் மார்க் சகால்.

"நாங்கள் யாராக இருந்தாலும், இறுதியில் பாரிஸிற்கே திரும்பி வந்தோம்" என்றார் ஹெமிங்வே.

மேதைகளை ஈர்க்கும் காந்தச் சக்திகள்

பாரிஸ், இருபதாம் நூற்றாண்டின் நியூயார்க், அல்லது இன்றைய சிலிக்கான் வேலி போன்ற பெருநகரங்களை நோக்கி ஒரு மேதையை ஈர்ப்பது எது?

வரலாற்றுப் பூர்வமாக படைப்பாற்றல் மிக்க நகரங்கள் அனைத்தும், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள்—பெரும்பாலும் புதிய புலம்பெயர்ந்தோர்கள்—தங்களின் மாறுபட்ட சிந்தனைகளோடு ஒன்றிணையும் 'சந்திப்புப் புள்ளிகளாகவே' (Crossroads) இருந்துள்ளன!

புதிதாக வருபவர்கள், ஏற்கனவே உள்ள அறிவு சூழலில் புதிய சிந்தனைகளை விதைக்கிறார்கள்.
அதன் மூலம் புதிய சிந்தனை முறைகள் பிறக்கின்றன. 

உலகெங்கிலும் உள்ள மிகச் சிறந்த தொழில்நுட்ப மூளைகளைச் சிலிக்கான் வேலி 'H-1B விசா' மூலம் ஈர்க்கிறது.  இது உயர்திறன் கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் குடியேற்றத்தை அனுமதிப்பதால் "மேதாவி விசா" (Genius visa) என்றே அழைக்கப்படுகிறது.

"நாகரிகத்தின் அனைத்து மாபெரும் முன்னேற்றங்களும் சர்வதேசத்தன்மை உச்சத்தில் இருந்த காலகட்டங்களிலேயே நிகழ்ந்துள்ளன" என்றார் வரலாற்றாசிரியர் கென்னத் கிளார்க்.

இறுதியாக, இத்தகைய மாறுபட்ட சிந்தனைகள் ஒன்றோடொன்றுக் குறுக்கு விசாரணை (Cross-pollinate) செய்யப்பட வேண்டுமானால், அங்கே அரசு சார்ந்த தடைகள் இருக்கக் கூடாது. 

"சுதந்திரமான வளி மண்டலத்தில் மட்டுமே மேதாவித்தனத்தால் சுதந்திரமாக மூச்சுவிட முடியும்" என்றார் ஜான் ஸ்டூவர்ட் மில்.

அதேபோல, அது ஊக்குவிக்கப்படவும் வேண்டும்! 

சிலிக்கான் வேலி முதலீட்டாளர்கள் உலகின் எந்த இடத்தையும் விட அதிகத் துணிகர முதலீட்டு நிதியை (Venture capital) வழங்குகிறார்கள். 

நிதி ஆதரவு, புதிய யோசனைகளுக்கான அணுகல், கருத்து சுதந்திரம், ஆரோக்கியமான போட்டி, மிகச்சிறந்தவர்களுடன் தன்னைச் சோதித்துப் பார்க்கும் வாய்ப்பு—இவையே மேதைகளை ஈர்க்கும் ஈர்ப்பு விசைகளாகும் (Gravitational forces).

அடுத்த சிலிக்கான் வேலி எங்கே?

அந்த நகரம் எவ்வளவு பெரியதாக இருக்க வேண்டும்? ஒரு 'மையப் புள்ளியை' (Critical mass) அடையும் அளவுக்குப் பெரியதாக இருக்க வேண்டும்!

ஒரு இசையமைப்பாளருக்கு திரையரங்குகள், கலைஞர்கள், தயாரிப்பாளர்கள், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் தேவை.

ஒரு ஓவியருக்கு சக கலைஞர்களின் ஆதரவு மட்டுமன்றி, முகவர்கள், கலைக்கூடங்கள், விழாக்கள், காட்சி இடங்கள் மற்றும் கலைப் புரவலர்கள் தேவை.

ஒரு தொழில் நுட்ப பொறியாளருக்குப் பிற பொறியாளர்கள், உபகரணங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பணம் தேவை.
அவர்கள் அனைவருக்கும் போட்டியாளர்களும் தேவை, வேலைகளும் தேவை!
வாய்ப்புகளின் திரட்சியே (Agglomeration of opportunity) மேதைகளை நகர வைக்கிறது.

மேதைகளைப் போலவே, இந்தப் படைப்பாற்றல் மையங்களும் எப்போதும் நகர்ந்துகொண்டே இருக்கின்றன. 

வரலாற்றுப் பூர்வமாக அவை கிழக்கிலிருந்து மேற்காக நகர்ந்து வந்துள்ளன: 

சீனாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கும், ஐரோப்பாவிற்கும், ஐக்கிய ராஜ்யத்திற்கும், அமெரிக்காவின் கிழக்குக் கரைக்கும், பின்னர் மேற்குக் கரைக்கும் நகர்ந்துள்ளன.

அடுத்த சிலிக்கான் வேலி எங்கே உருவாகும்? 

மேதாவித்தனம் ஒரு முழு வட்டமடித்து மீண்டும் ஆசியாவிற்கே திரும்புமா? 

அது ஏற்கனவே சிங்கப்பூரில் உருவெடுத்துவிட்டதா? 

பாரிஸ் சுற்றுலா பயணிகளால் நிறைந்து வழியும் நிலையிலும், நியூயார்க்கின் வாடகைகள் விண்ணைத் தொடும் நிலையிலும்—அடுத்த கண்டுபிடிப்பு மையம் எங்கே அமையும்?

இந்தக் கேள்விக்கான விடையை தெரிந்து கொள்ள, அந்த ஓய்வில்லாத மேதைகளை பின் தொடருங்கள்! அல்லது, அதைவிடச் சிறந்த வழி: 

அந்த சாதகமான காற்று எந்தத் திசையில் வீசுகிறது என்பதைக் கணித்து, பெட்டியைக் கட்டிக்கொண்டு, மற்றவர்களுக்கு முன்பாகவே அங்கே போய் இறங்குங்கள்!

-படித்தது

வேலைக்கான ஒரு விண்ணப்பத்தில், "நீங்கள் எப்போதேனும் கைது செய்யப்பட்டுள்ளீர்களா?" என்று ஒரு கேள்வி இருந்தது. அக்கேள்விக்கு, "இல்லை" என்று விண்ணப்பதாரர் பதிலளித்தார். முதல் கேள்வியின் தொடர்ச்சியாக, இரண்டாவது கேள்வி, "ஏன்?" என்று இருந்தது. இதற்கு விடையளிக்க வேண்டியதில்லை என்பதை உணர்ந்திராத அந்த "நேர்மை"யான, வெகுளியான விண்ணப்பதாரர். "ஏனென்றால், நான் ஒருபோதும் பிடிபடவில்லை என்று நினைக்கிறேன்," என்று எழுதினார்.

Friday, 7 August 2026

அதிகம் கேள்


அதிகம் கேளுங்கள்; குறைவாகப் பேசுங்கள்

இன்றைய காலத்திய உரையாடல்கள், ஒருவர் பந்தைத் திருப்பி அடிக்காமலேயே அடுத்த பந்தை எப்படிப் போடுவது என்று யோசித்துக்கொண்டிருக்கும் டென்னிஸ் போட்டிகளைப் போல மாறிவிட்டன.

ஆனால், உண்மையாகவே கேட்கத் தெரிந்த ஒருவர் நம்மிடம் பேசும்போது, அந்த அனுபவமே வித்தியாசமாக இருக்கிறது. குறுக்கிடாமல் கேட்பார்கள். நாம் சொல்வதை முடிப்பதற்குள் தங்களுடைய கதையைச் சொல்ல அவசரப்படமாட்டார்கள். நம்முடைய மோசமான நாளைவிட தங்களுடைய மோசமான நாளை உயர்த்திக் காட்டவும் முயலமாட்டார்கள்.

வேலை தொடர்பான ஒரு மின்னஞ்சல் உங்களுக்கு ஏற்படுத்திய மன அழுத்தத்தைப் பற்றி நீங்கள் சொல்லும்போது, நீங்கள் பாதியிலேயே இருக்கும்போது,
“அட, எனக்கும் அதே மாதிரிதான் நடந்தது…”
என்று தங்கள் அனுபவத்தைத் திணிக்காமல், நீங்கள் சொல்லி முடிக்கும் வரை அமைதியாகக் கேட்பார்கள்.
உங்கள் தருணத்தை அவர்கள் தங்களுக்கான தருணமாக மாற்றிக்கொள்ள மாட்டார்கள். அதனால்தான், அவர்களுடன் பேசிவிட்டு வரும்போது நம்முள் ஒரு நல்ல உணர்வு தங்குகிறது.
ஏன்?

ஏனெனில் கேட்பது என்பது குறைத்து மதிப்பிடப்படும் ஒரு வகையான அன்பு.
சில நேரங்களில், பேசாமல் ஒரு கணம் அமைதியாக இருப்பதும், ஒருவருடைய உணர்வுகளுக்கு இடம் கொடுப்பதும் நம்மை இன்னும் அழகாகக் காட்டுகிறது.
மனிதனுக்கு இரண்டு காதுகளும், ஒரு நாவும் இருப்பதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.

அதனால், குளிர்ச்சியாகவும் முதிர்ச்சியாகவும் இருப்பவர்கள்,
தாங்கள் பேசுவதைவிட அதிகமாகக் கேட்கிறார்கள்.
கேளுங்கள். புரிந்துகொள்ளுங்கள். அதன் பிறகு பேசுங்கள்.

ஆங்கிலத்தில் Nadeem

நான் போன நேரம்ரூமி செருப்பில்ஆணி அடித்துக் கொண்டிருந்தார்வலிக்காதா? என்றேன்ஆணிக்கும் தான் வலிக்கும்சுத்திக்கும் தான் வலிக்கும்கைக்கும் தான் வலிக்கும்வலியில்லாமல்என்னதான் நடக்கும்என்றார் ரூமி-ஈரோடு தமிழன்பன்

தாவோ


ஒரு நாள் இளவரசன் ஒருவன் தன் படைகளோடு காட்டிற்கு சென்றான். அவனைப் பார்த்ததும் மரக்கிளைகளில் விளையாடிக் கொண்டிருந்த குரங்குகள் எல்லாம் ஓடிவிட்டன. ஆனால் ஒரே ஒரு குரங்கு மட்டும் இவனைப் பற்றி கவலைப்படாமல் மரத்துக்கு மரம் தாவிக் கொண்டிருந்தது. அது அந்த இளவரசனக்கு எரிச்சலை ஏற்படுத்த அந்த குரங்கை நோக்கி அம்பை எய்தான்.

 அந்த குரங்கு தன்னை நோக்கி பாய்ந்து வந்த அம்பை கையால் பிடித்து தூர வீசியது. கோபம் அடைந்த இளவரசன் தன் படைவீரர் அனைவரையும் அழைத்து குரங்கை கொல்ல உத்தரவிட்டான். அடுத்த கணம் நூற்றுக்கணக்கான அம்புகள் பாய குரங்கு அந்த இடத்திலேயே உயிர் விட்டது. ஒருவனுக்கு திறமைகள் இருந்தால் அதை அத்தனை பேருக்கும் விளம்பரமாய் காட்டக்கூடாது. அதுவே அழிவுக்கு காரணம் ஆகிவிடும்.

-தாவோ

Thursday, 6 August 2026

விக்னேஷ்


ஒரு மான் சிங்கத்தைப் பார்த்தால் மட்டுமே பயந்து ஓடும்..
ஆபத்து நீங்கிய பின், அமைதியாகப் புல் மேயத் தொடங்கிவிடும். 
ஆம், மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும் 
நேற்றைய பற்றிய கவலைகளையும் 
நாளையைப் பற்றிய பயங்களையும் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது..
ஆனால் மனிதன் மட்டுமே
"நாம் ஒருநாள் இறந்துபோவோம்" என்ற உண்மையை முன்கூட்டியே உணர்ந்த ஒரே உயிரினம்..
எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தவுடனே, மரண பயமும் வந்துவிட்டது. தான் சேர்த்து வைத்தது, நேசித்தது எல்லாம் ஒருநாள் தன்னை விட்டுப் போய்விடும் அல்லது தான் அவற்றை விட்டுப் போக வேண்டும் என்ற நிதர்சனம், அவனுக்குள் ஒரு மாபெரும் இருத்தலியல் வலியை உருவாக்குகிறது..இந்த வலியிலிருந்து தப்பிக்கவே அவன் மறுபிறப்பு, சொர்க்கம்,கடவுள் போன்ற தத்துவங்களைத் தேடினான்..

பசி, தாகம், பாதுகாப்பு என்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியவுடன் மனித மூளை அமைதியாக இருப்பதில்லை. 
"நான் ஏன் இங்கே இருக்கிறேன்? 
என் வாழ்வின் அர்த்தம் என்ன?" 
என்பதைப் போன்ற பதில் இல்லாத கேள்விகளை கேட்கத் தொடங்கியது.
பிரபஞ்சத்திற்கு எந்த நோக்கமும் இல்லை..ஆனால் மனிதனுக்கு மகிழ்ச்சியாய் இருக்கவும் அழுது புலம்பவும் ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது.. எல்லாவற்றிலும் ஒரு நோக்கம் அல்லது 'அர்த்தம்' தேவைப்படுகிறது. இந்த முரண்பாடுதான் மனிதனின் ஆகப்பெரிய உளவியல் துயரம்..

நாம் எப்போதும் எதன் மீதோ தீராத ஆசையை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.. தொடர்ந்து ஆசைப்படுவதும், ஒன்று கிடைத்ததும் மற்றொன்றைத் தேடுவதிலும் 
"இந்த உலகம் என்பது நமது சிந்தனையின் பிரதிபலிப்பே என்ற உண்மை புரியும்போது ஏமாற்றமும் சலிப்புமே எஞ்சி நிற்கிறது!

மனிதன் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள மொழியைக் கண்டுபிடித்தான். 
ஆனால், எவ்வளவுதான் வார்த்தைகளைக் கோர்த்தாலும் தனக்குள் இருக்கும் அந்த ஆழமான வெறுமையை, துயரத்தை இன்னொருவருக்கு முழுமையாகக் கடத்த முடிவதில்லை என்பதே நிதர்சனம்.. கூட்டமாக வாழ்ந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவுதான்!

தனிமையைப் போக்கிக் கொள்ளும் முயற்சிகளில் தான்  கலையும், கவிதைகளும், காதலும் பிறந்தன..

கற்பனைத் திறன் மட்டுமே அவனுக்கு சிறகுகள் கொடுத்தது.. கலைகளை கற்றுக்கொள்ள நிர்பந்தித்தது..
நிரந்தர தப்பித்தல் மரணம் என்றாலும் தற்காலிக தப்பித்தல் மகிழ்ச்சிக்கான வழி என்று உரைத்துச் சொன்னது..

ஆனால் நம் சிந்தனைகளை நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விட நிகழாத ஒன்றை யோசித்து நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்றை அதிகதிகமாக சிந்தித்து நம்மை நாமே நொந்து கொள்கிறோம்..

நமக்குள் மகிழ்ச்சியை விதைப்பவைகளை சிந்திப்பதும் 
இந்த நொடியில் வாழ்வது மட்டுமே மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படை! 

சிந்தனை என்பது மனிதனுக்குக் கிடைத்த வரம் மட்டுமல்ல..
அது அவன் சுமக்க வேண்டிய ஒரு  சிலுவையும்கூட..!

- விக்னேஷ்வரன்

Tuesday, 4 August 2026

book-49


Reading_Marathon2024
#24RM050

Book No:36/100+
Pages:-247

திருநெல்வேலி எழுச்சியும் வ உ சி யும் 1908
-ஆ.இரா வேங்கடாசலபதி

வரலாறு என்பது நாம் தெரிந்து கொண்ட வரலாற்றை விட நாம் அறிந்து கொள்ளும் வரலாற்றை மீண்டும் நம் மனதில் கட்டமைக்கிறோம். நேற்று திருச்செந்தூர் செல்லும் வழியில் பாரதியாரின் இல்லத்துக்குச் சென்றிருந்தபோது கிடைத்த தகவல்.. அது பாரதியாரின் தாயார் வீடு அவரின் தந்தை வீடு சீவலப்பேரில் உள்ளது. அப்போதே வீட்டோட மாப்பிள்ளையாக வந்ததால் அந்த வீட்டிலேயே இறுதிவரை பாரதியாரின் தந்தை இருந்தார் என்பதுதான். இவ்வாறு வரலாற்றை மீளாய்வு செய்து கேட்கும்போது உண்மையான வரலாறு நமக்குத் தெரிய வருகிறது.

தமிழை தமிழ் படித்தவர்கள் மட்டுமல்லாது பொறியியல் படித்தவர்களும் தமிழ் இலக்கிய உலகுக்கு சேவை செய்வது போலத்தான்..சலபதியும் வணிகவியல் படித்து வரலாற்று துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்த ஆய்வு நூல் விளங்குகிறது.

நூலின் துவக்கத்தில் 1908 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தின் உச்சகட்டமாக மார்ச் 12ஆம் தேதி வ உ சி சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப அய்யங்கார் கைது செய்ததை அடுத்து..ஊரில் நடைபெற்ற எழுச்சிகளை விவரிக்கும் விதமாக இருக்கிறது. இதனை அரசாங்க அலுவலகத்தில் ஆவணங்களிலும் திருநெல்வேலி கலகம் என்று குறிப்பிடப்படுகிறது. மக்கள் எழுச்சி என்ற போது வெள்ளையர் தமக்கும் அதிகாரத்தின் கிளர்ச்சியாகவும் கண்டமையால் கலகம் என்றே வருணித்தனர். ஆனால் எழுச்சி என்பதே மிகவும் பொருத்தமானது என்று கூறுகிறார் ஆசிரியர்.

இந்த எழுச்சியின் பின்னால் சுதேச இயக்கத்தில் இந்தியாவில் பல இடங்களில் போராட்டங்கள் வலுவாக நடைபெற்றது. தமிழகத்தில் அப்போது அமைதி பூங்காவா இருந்தது அடுத்து சுதேசி இயக்கம் வந்தபின் தான் கிளர்ச்சிகள் ஆரம்பித்தன.
வ உ சி யோடு இணைந்து சுப்பிரமணிய சிவாவும் வந்தது அந்தப் பகுதி மக்களிடையே புது உத்வேகத்தை தந்தது. பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது கருத்தாழமிக்க உரைகள் மக்களை சிந்திக்க தூண்டின. அதோடு கப்பல் கம்பெனியும் ஆரம்பித்தது அன்றைய அரசுக்கு பெரும் தலைவலியாக இருந்தது. தூத்துக்குடியில் தடை மீறி போராட்டத்தில் பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. அறிந்த வின்ச் அவர்கள் வ.உ.சிக்கு மிரட்டல் விடுத்தார். ஆயினும் மிரட்டலுக்கு பணியாத நிலையில் அவரை கைது செய்து பாளையங்கோட்டை சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆயினும் பிணை வழங்க மறுத்தாலும் பத்மநாப ஐயங்கார் மட்டும் விடுதலை ஆனார். ஜூலை 7ஆம் தேதி வ உ சிக்கு இரட்டையாளர் தண்டனையும் சிவாவுக்கு 10 ஆண்டு விதித்தது.

மறுநாள் ஊரில்  கிளர்ச்சி செய்ய ஆரம்பித்தனர் இந்து கல்லூரியில் மாணவர்களும் ஆசிரியர்களும்.
காவல் நிலையத்தில் சென்று வந்தே மாதரம் முழங்கியவாறு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு, மருத்துவ நிலையத்தை முற்றுகை இட்ட சிலரையும் கைது செய்தனர்.மின் கம்பிகள் அறக்கப்பட்டன.தெருவிளக்கு ஏறத்தாழ அனைத்தும் உடைக்க பட்டன. எல்லாம் காரணம் வ உ சி ஏற்படுத்திய எழுச்சிகரமான பேச்சை கேட்டு மாணவர்கள் பலரும் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாய் பங்கு கொண்டதே ஆகும். நெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் இருந்ததாக செய்திகள் தெரிகிறது தச்சநல்லூரிலும கிளர்ச்சிகள் தொடர்ந்தவாறு இருந்தன.

வணிகர்கள் அனைவரும் கடைகளை அடைத்து விட்டு நெல்லைக்கு வந்து தூத்துக்குடி வணிகர்கள் கடைக்காரர்களை கடைகளை மூடுமாறு தூண்டியதே துவக்க புள்ளியாக அமைந்ததாக சொல்கிறார். அன்றைய நெல்லை மாவட்டத்தில் மொத்தம் இருந்த ஐரோப்பியர்கள் 397 பேர் மட்டுமே .இங்கிருக்கும் மக்கள் எழுச்சி தொடர்ந்து நிகழ்ந்தால் என்ன செய்வது என்று அதிகாரிகள் கையை பிசைந்தனர்.
ஆனாலும் கிளர்ச்சிக்குப் பிறகு கைது செய்வோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் இருந்தது. திருநெல்வேலி 57 பேரும் தூத்துக்குடியில் 36 பேரும் கைதாக 27 பேர் தண்டனை அடைந்தனர். எழுச்சியை கட்டுப்படுத்த உதவிய போலீசாருக்கு பரிசுகளையும் அரசாங்கம் வழங்கியது.

திருநெல்வேலி கஷ்ட நிவர்த்தி நிதியை திரட்டுவதற்கு அனைவரும் மயன்றனர் அதில் வந்த தொகையையும் முக்கிய பிரமுகஸ்தர்கள் அனுப்பிய நன்கொடையும் அது தெளிவாக விரித்துள்ளார். கலகத்தை தொடர்ந்து வழக்கு விசாரணையும் தொடர்ந்து நடைபெற்றது கழகத்தில் ஈடுபட்ட மக்களுக்கும் தண்டனை கிடைத்தது. வழக்கின் முடிவில் 32 பேர் எழுச்சிக்கு காரணமாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆனவர்கள் கலவரத்துக்கு முழு முதற்காரணம் வ.உ.சி.எம் சுப்பிரமணிய சிவாவும் என்ற குற்றம் சாட்டப்பட்டனர் நீதிபதி. இதில் முதலாதவர் ஏட்டு குருநாதய்யர் அவரின் பின்புறம் என்ன என்பதையும் விரிவாக ஆய்வு செய்கிறது. அவருக்கு ஏழு ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனை விதிக்கப்பட்டது. இவரின் வரலாற்றை அறியும் போது மிகவும் வியப்பாக இருந்தது. 

அதேபோல லோகநாத ஐயர் சங்கரநாராயண அய்யர் சங்கரநாராயணன் பிள்ளை மற்றும் சிறை கைதிகள் பற்றியும் இந்த நூல் விரிவாக பேசுகிறது. .பொதுவாக கைதானவர்களை பற்றி மட்டுமே பேசாமல் கைதுக்கு பின்புலமாய் யார் இருந்தார்கள் என்பதை குறித்தும் ஆய்வு செய்கிறது. வ உ சிக்கு ஆதரவாக எதிராக ஆஜரான வக்கீல்கள் அவர்களின் சம்பளத்தொகை முதல் கொண்டு என்ன ஒவ்வொரு நாளையும் விவரிக்கிறது. 

தமிழகத்தில் இப்படி ஒரு எழுச்சியா என்பது மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கவும் அளவிற்கு திருநெல்வேலியில் இருந்தது என்று கூறுகிறார். ஆறு மாதத்திற்குப் பிறகு லாலி கவர்னர் நெல்லை வந்தார். அதற்குப்பின் தண்டகாவல்படை விளக்கிக் கொள்ளப்பட்டது. தண்டக்காவல் படை என்பது குற்றச்செயலில் ஈடுபட்டால் அல்லது கிளர்ச்சி செய்தால் மொத்த ஊரையுமே குற்றவாளியாக கருதி கூட்டு தண்டனை விதிப்பது இதுவாகும்.

இச்செய்திகள் எல்லாம் சுதேசி,இந்து நாளிதழ் விரிவாக பதிவு செய்தனர். பாரதி நடத்திய இந்தியா இதழ் சுதேசி இயக்கத்தின் அரிய கருவூலமாக சலபதி கூறுகிறார்.

வ உ சி யின் மனநிலை எவ்வாறு இருந்தது என்பது ஒரு கதாநாயகனுக்கு உரிய அம்சத்தோடு விவரிக்கப்பட்டுள்ளது. கிளர்ச்சியை கண்டு செய்திகளை கேட்டதும் குடும்பத்தினரை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வைத்ததும் அறிய முடிகிறது. தம்மோடு சேர்ந்து சிறை கைதிகள் அதிகம் வருவதுகண்டு கவிதை நடையிலேயே வீரமிக்க பாடல்களை சொல்லி இருக்கிறார். அதன் பின்பு கடித போக்குவரத்து மூலம் சுதேச இயக்க நிலைப்பாட்டினையும், குடும்பத்தாரின் எண்ணங்களையும், மற்றும் உள்ள தலைவர்களின் நிலையும் அறிந்து கொள்ள உதவியது.

இந்த எழுச்சி ஏற்படுத்திய மாற்றங்கள் என்னென்ன கிடைத்த விடுதலை உணர்வு என்ன, மக்களின் மனதில் தோன்றிய கருத்துக்கள், மக்களின் கைதுகள், ஆங்கில அரசின் திட்டங்கள் என்பனை பற்றி எல்லாம் விரிவாக இறுதி அத்தியாயத்தில் பேசுகின்றது. கரூரில் திருவனந்தபுரத்திலும் இந்த எழுச்சி ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன தெரிய வருகிறது. அதை தொடர்ந்து திலகரும் சில மாதங்களுக்குப் பிறகு கைது செய்யப்பட்டபோது, ரஷ்ய புரட்சியாளர் லெனின் உடன் கடிதப் போக்குவரத்து நடைபெற்றதும் அறிய முடிகிறது.

வ உ சி யும் சுப்பிரமணிய சிவாவும் விடுதலை ஆன பின்பு அவர்களை முடக்கி போட்டு விட்டது. காந்தி யுகத்தின் எழுச்சி சுதேசி இயக்க பல அரசியல் செயல்பாட்டாளர்களை நிலைகுலைய வைத்தது. பலர் காந்தி வழிக்கு திரும்பியதால் இவர்களால் தொடர்ந்து இயங்க இயலாமலும் போய்விட்டது.
அதன் பின்பு வந்தவர்களும் திருநெல்வேலியில் எழுச்சியை பற்றி தொடர்ந்து கொண்டு செல்ல இயலவில்லை இவை வெற்றியா தோல்வியா என்ற கருத்து மட்டும் கேள்வி மட்டும் எஞ்சி நிற்பதாக சொல்லி இருக்கிறார். ஆனாலும் இந்த திருநெல்வேலி புரட்சி தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அகில இந்திய அளவில் பேச வைத்தது. துவக்க நிலையிலேயே இந்த எழுச்சி மக்களிடையே தன்னம்பிக்கை வளர்த்தது. தமிழகத்தின் தென்பகுதியில் இதன் தாக்கம் அதிகம் இருந்ததை உணர முடிகிறது.

ஆய்வு நூலுக்குரிய அத்தனை அம்சங்களும் இருக்கிறது. ஒவ்வொரு பத்தியின் முடிவிலும் இது எங்கிருந்து எடுக்கப்பட்டது, இதன் ஆய்வு நூல்கள் என்னென்ன என்பதையும ,பிற்சேர்கை நூல்கள் எவை என்பதனையும் அறிய முடிகிறது. விரிவான ஆய்வு பார்வை இருந்தால் மட்டுமே இது போன்ற நூல்களும் வரலாற்று உண்மைகளையும் மீண்டும் படிப்பது சாத்தியமாகும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

Sunday, 2 August 2026

ஆங்கில கட்டுரை


மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கவனச் சிதறல் நெருக்கடியின் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

ஒவ்வொரு காலையும் நீங்கள் விழித்தெழும்போது, உங்கள் கவனத்தையும் விழிப்புணர்வையும் கவர்ந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு உலகையே எதிர்கொள்கிறீர்கள்.

உலகின் மிகச் சிறந்த பொறியாளர்களில் ஆயிரக்கணக்கானோரும், கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள கணினிச் செயலாக்கத் திறனும், ஒரே ஒரு நோக்கத்திற்காகவே இப்போது செயல்படுகின்றன: உண்மையில் முக்கியமல்லாத விஷயங்களில் உங்கள் பார்வையை நிலைநிறுத்தி வைப்பது.

பொய்கள், தவறான கூற்றுகள், தரமற்ற ஆலோசனைகள் இவ்வளவு அதிகமாகிவிட்டன; எதை நம்புவது என்பதையே நம்மால் உறுதியாக அறிய முடியாத நிலை உருவாகியுள்ளது.

அதுமட்டுமல்ல, நாம் நம் நேரத்தின் பெரும்பகுதியை இணையத்தில் செலவிடுவதால், நம் மனத்தின் மீது நிகழும் இந்தத் தொடர்ச்சியான தாக்குதல்கள் தெளிவாகச் சிந்திக்கும் நமது திறனையே மெதுவாகச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

நமது நலனில் உண்மையான அக்கறை இல்லாதவர்களிடமே, நமது மனத்தின் சாவியை நாமே ஒப்படைத்துவிட்டோம்.
ஸ்டோயிக் தத்துவஞானி Epictetus இதே பிரச்சினையை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சுட்டிக்காட்டினார். அவர் கூறுகிறார்:

"யாராவது உங்கள் உடலை ஒரு வழிப்போக்கனிடம் ஒப்படைத்தால், நீங்கள் கோபப்படுவீர்கள். ஆனால், சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் உங்கள் மனதை ஒப்படைத்து, அவர்கள் அதை விரும்பியபடி குழப்பவும் கலக்கவும் அனுமதிப்பதில் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?"

சிந்திக்கும் திறனை இழந்துவிட்டால், உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழும் திறனையும் இழந்துவிடுகிறீர்கள்.

அப்போது உங்கள் வாழ்க்கையின் ஓட்டுநர் நீங்கள் அல்ல; வெறும் பயணியாக மட்டுமே மாறிவிடுகிறீர்கள்.

இந்தச் சத்தமும் சிதறலும் நிரந்தரமாகிவிடும் முன்பே, நமது மனத்தின் வடிகட்டும் திறனை நாம் சரிசெய்ய வேண்டும். இல்லையெனில், மிகவும் ஆபத்தான ஒரு வலையில் நாம் சிக்கிக்கொள்வோம்.

திறமை பற்றிய மாயை

நாம் அடிக்கடி தகவல்களை நுகர்வதையே திறமை பெறுவதுடன் குழப்பிக்கொள்கிறோம்.

நீங்கள் ஐந்து செய்திமடல்களைப் படிக்கிறீர்கள். மூன்று பாட்காஸ்ட்களைக் கேட்கிறீர்கள். காலையிலான தலைப்புச் செய்திகளை விரைவாகப் பார்வையிடுகிறீர்கள்.

அதனால், "நான் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு இருக்கிறேன்; நிகழ்வுகளைப் பின்தொடர்கிறேன்" என்று உங்களுக்குத் தோன்றலாம்.

ஆனால், அந்தத் தகவல்கள் நீண்ட காலத்தில் உங்கள் நடத்தை அல்லது வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால், நீங்கள் உண்மையில் எதையும் கற்றுக்கொள்ளவில்லை.

நீங்கள் செய்தது, அதிகச் செலவுள்ள ஒரு பொழுதுபோக்கில் பங்கேற்றது மட்டுமே.

செயலாக மாறாத தகவல் என்பது வெறும் சுமை. அது மனதை நிரப்பும் தேவையற்ற குப்பை மட்டுமே.

நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் Herbert A. Simon பல தசாப்தங்களுக்கு முன்பே கூறியிருந்தார்:

"தகவல்கள் பெருகும்போது, கவனம் வறுமையடைகிறது."

-Darius Foroux