Sunday, 16 February 2025

ஆப்பிரிக்க குட்டிக்கதைஒரு விவசாயி தன் விளைநிலத்தில் பயிரிட்டிருந்த மாங்காய்களை திருடமுயன்ற ஊர் சிறுவர்களை பிடித்து அடிப்பார், கண்டபடி திட்டுவார். அவரைக் கண்டாலே ஊர் சிறுவர்களுக்கு எல்லாம் டெர்ரர்.ஒரு நாள் அவர் இறந்துவிட்டார். ஊர் சிறுவர்கள் எல்லாம் அதை திருவிழாவாக கொண்டாடினார்கள். தோப்பில் இஷ்டத்துக்கு மாங்காய் பறித்தார்கள். பராமரிக்க ஆள் இல்லாமல் தோப்பு அழிந்தது.அடுத்த வருடம் ஊரில் யாருக்கும் மாங்காய் இல்லை. அதிக விலை கொடுத்து சந்தையில் மாங்காய் வாங்க வேண்டி இருந்தது. சிறுவர்கள் அப்போதுதான் விவசாயியின் அருமையை உணர்ந்தார்கள்.சில வேலைகளை செய்பவர்கள் மக்களின் கோபத்துக்கு ஆளாகியே தீரவேண்டும். அவர்களின் முக்கியத்துவம் அந்த வேலைகளை செய்ய ஆள் இல்லாமல் போகையில் தான் தெரியும்

“சரஸ்வதி அக்காவை அக்காவென்று சொல்லாதே அண்ணியென்று சொல்லு என நச்சரித்த ஆறுமுகம் அண்ணனுக்கு வாக்கப்பட்டு வந்த செல்வி அத்தாட்சிக்கு மூன்று பிள்ளைகள் முதல் பிள்ளையின் பெயர் சரஸ்வதி மிச்சம் இரண்டும் யாரெனத் தெரியவில்லை”-இரா.பூபாலன்

புத்தகம்-15


#Reading_Marathon2025
#25RM055

Book No:15/100+
Pages:-161

காந்தி வழி
-என்.சொக்கன்

மகாத்மா காந்தி தன்னுடைய தொண்டர்களுக்கு முன்வைத்த 14 கொள்கைகளை எளிமையானமுறையில் அறிமுகப்படுத்தும் நூல் தான்.இது அப்படியே இல்லாமல் ஆசிரியர் தன் வாசகர்களுக்கு ஏற்றவாறு செப்பனிட்டு கொடுத்துள்ளார்.ஒரு வீட்டைக் கட்ட பலரும் உழைத்திருக்கிறார்கள்; அப்போது நாம் இந்த இடத்தில் இல்லை; அவர்களுடைய உழைப்பைப் பார்க்கவில்லை; அதேசமயம், அதைப்பற்றி யாராவது சொல்லும்போது நெகிழ்ந்து நிற்கிறோமே அது போலத்தான் காந்தியைப் பற்றிய பிம்பமும் என ஆரம்பத்திலேயே காந்தியை அறிமுகப்படுத்துகிறார்.

அடிதடியை வன்முறையை கையில் எடுத்தவர்களையும்,கோரிக்கை வைத்தவர்களையும் எளிதில் புற்ந்தள்ளியது. ஆனால் காந்தி மக்கள் போராட்டமாய் மாற்றினார். அதற்கான வழி சத்தியாகிரகம் என பெயரிட்டார். அதற்கானபெயர் காரணத்தை இந்நூலில் விளக்கியுள்ளார்.

இன்றுவரை நமக்குள் இருக்கும் கேள்வி
என்னைத் துன்பப்படுத்துகிறவர்களை நான் என்ன செய்யவேண்டும்? மன்னித்துவிடவேண்டுமா, அல்லது, அழித்துவிடவேண்டுமா?இது வெளிப்புறத்தில் நாம் நாகரிகமான பதிலை தேர்ந்தெடுத்தாலும் நமக்குள் இருக்கும் மனது எதைத் தேர்ந்தெடுக்கும் என்பது நமக்குத் தெரியும்.
அதற்கான விடையை தக்க சான்றின் படி இதில் விளக்கியுள்ளார்.மனக்கட்டுப்பாட்டுடன் தன் ஆசிரமத்தில் இருந்த அம்புஜம்மாள் உணர்வை ஒரு சம்பவத்தின் மூலம் கூறியுள்ளார்.

கஸ்தூரிபாய்க்கு உடலநலமின்மை ஏற்பட்ட காந்தி கூறிய எளிய மருத்துவ முறையில் அவரிடம் கண்ட மாற்றத்தை சொல்லியுள்ளார்.அது போல் மன்னர் ஒருவரும் இளவரசனும் உரையாடும்போது எந்த நாட்டு ராஜாவை கண்டு பயம் என்கிறார்? எனக்கு உட்பகைவர் கண்டுதான் பயம் என்கிறார். அது என்ன பயம் என கூறியது சிறப்பு.

ஒவ்வொரு மனிதனும் தூய்மையைப் பேணவேண்டும் என்பதில் உறுதியாய் இருந்தார். கழிப்பிடத்தை தன் மனைவியை வைத்தே சுத்தம் செய்தார் என்பதை படித்துள்ளோம். இப்புத்தகத்திலும் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இடம் வருகிறது.ஒருமுறை, வெளிநாட்டுக்காரர் ஒருவர் காந்தியிடம் கேட்டார், ‘உங்களை ஒரு நாளைக்குமட்டும் இந்திய வைஸ்ராயாக நியமித்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்?’‘வைஸ்ராய் வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் தூய்மைப்பணியாளர்களுடைய வீடுகளைத் தூய்மைப்படுத்துவேன் என்றார்.
‘நாம் அனைவரும் தூய்மைப்பணியாளர்கள்தான்’ என்கிற எண்ணத்தைச் சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவர் மனத்திலும் பதிக்கவேண்டும் என்று காந்தி விரும்பினார்.

உறுதிமொழி சொல்லும்போது 'இயன்றவரை' என்ற சொல் பொருந்தாது என்கிறார் காந்தி. அதற்குப்பதில் 'எப்போதும்' என்ற சொல்லைப் பயன்படுத்தச்சொல்கிறார். அதாவது, 'என்னால் இயன்றவரை உண்மை பேசுவேன்' என்று சொல்வதற்குப்பதில் 'எப்போதும் உண்மை பேசுவேன்' என்று உறுதியெடுத்துக்கொள்ளச்சொல்கிறார்.
கைத்தொழிலுக்கு உதவுவதையும் சுதேசி கொள்கையிலும் உறுதியாக இருந்தார்.காந்தியடிகளின் சுதேசிக் கொள்கை பொருள் வாங்குவதுடன் நின்றுவிடுவதில்லை, சேவைபுரிவதிலும் சுதேசிக் கொள்கையைப் பின்பற்றவேண்டும் என்கிறார் அவர்.
 

*போராட்டத்துக்காக அவர் தேர்ந்தெடுத்த ஆயுதம், Passive Resistance. அதாவது, எதிரியை அடித்துத் தாக்காமல், வன்முறையில்லாமல் அமைதியானமுறையில் எதிர்த்துநிற்பது. 

*உண்மை நிலையானது. அதிலிருந்து கிடைக்கும் அறிவும், அந்த அறிவிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியும் நிலையானவை. யாராலும் எதனாலும் அவற்றை அழிக்க இயலாது.

*‘பொதுவாக, உண்மையைப் பின்பற்றுவது என்றால், உண்மையைப் பேசுவது என்றுதான் எல்லாரும் நினைக்கிறார்கள். ஆனால், உண்மைக்கு இன்னும் விரிவான பொருள் உண்டு’ என்கிறார் காந்தி. ‘எண்ணத்தில் உண்மை வேண்டும், பேச்சில் உண்மை வேண்டும், செயலில் உண்மை வேண்டும்!’

*‘மனம் தானாகத் திரிந்தால் பரவாயில்லை, உங்களுடைய அனுமதியோடு திரிந்தால் அது உங்களுடைய பிழைதான்’ 

*‘நம்முடைய உண்மையான தேவைகள் என்னென்ன என்பதை நாம் எப்போதும் அறிந்திருப்பதில்லை’ என்கிறார் காந்தி. ‘இன்னொருபக்கம், நம்முடைய விருப்பங்களை நாம் பலமடங்காகப் பெருக்கிக்கொண்டே செல்கிறோம்’ என்று கண்டிக்கிறார்.

காந்திய வழி என்பது அகிம்சை என்பதோடு நற்பண்புகளை உருவாக்கி நல்ல மனிதனாக வேண்டும் என்பதே. அது சமூகத்தில் பரவும்போது நல்ல குடிமகனாக உதவும் என நம்பினார்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Friday, 14 February 2025

நள்ளிரவில் துக்கவீடான ஒரு வீட்டுக்கு அறியாமல் யாரோ ஒரு இனிய காலைவணக்கத்தை அனுப்புகிறார்கள்-மேகவண்ணன்

ஆர்த்தி


உலகின் தப்பு-சரி எல்லாமே அதன் விளைவுகளை வைத்தே தீர்மானிக்கப்படுகின்றன. நேசித்தலும் நேசிக்கப்படுதலுமே உலகின் அழகான விஷயங்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நேசத்தை எதிர்ப்பார்த்து நேசத்தை "காட்டுவது" நம்மையறியாமலே நிறைய பாசாங்குகளுக்கும் பாவனைகளுக்கும் கொண்டு சென்றுவிடும். 

"அதனால் என்ன பிழை நேர்ந்துவிடும்? கொஞ்சம் dramatic ஆக இருந்தால்தான் என்னவாம்?" Drama என்பதே பொய்யல்லவா? வேஷம், பார்ப்பவர்களுக்கு அலுப்பதில்லை. ஆனால் வேஷம் கட்டுகிறவர்களுக்கு அலுத்துவிடும். ஏனெனில் வேஷம் போடுகிறவர்களுக்கு ஆரவாரம் தேவை. அது குறைகிற போது நடிப்பு கூடி கூடி அதற்கு மேல் முடியாது என்கிற நிலை வரும். அப்போது புது audience, தேவைப்படத் தொடங்கும். Performance அலுக்கும்போது பார்ப்பவர்க்கும் வேறு மேடை வேறு நாடகம் தேடத் தோன்றும். 

அதைவிடக் கொடுமை நாம் பொய்யாக இருக்கிறபோது மற்றவரையுமே நம்பத் தோன்றாது. அடுத்துள்ள மனிதர் எவரையுமே நம்ப இயலாத தன்மை நமக்குள் வேறூன்றிவிடும். உலகின் எல்லா உணர்வுகளுமே மிகைப்படுத்தப்பட்ட நாடகமாகவே தோன்றும். 

ஜெயகாந்தனின் "ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளில்" ஒரு வரி வரும், "காதல் இருக்குன்னு சொன்னா இருக்கு.. இல்லன்னுட்டா இல்லை. அவ்வளவுதானே?!" இந்த வரி எனக்குள் பலமுறை ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. இனியும் இருக்கும். ஏனெனில் "காதலாகவே" நாம் இருக்கும் பட்சத்தில் அது இருக்கிறது-இல்லை என்று அறிவிப்பதற்கு எந்த அவசியமும் இல்லை.

புனிதமான காதல் என்றால் எப்படி இருக்க வேண்டும்?பக்தனுக்கு கடவுளின் மேல் இருப்பதுபோல்'வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்மாளாத காதல் நோயாளன் போல்'-சுஜாதா

Thursday, 13 February 2025

இந்தத் தொன்மையான மொழியின் முதல் காதல் கடிதம் இப்போது எங்கே இருக்கும்? காலத்தால் அழியாது போகவே பெண்களின் கண்களிலும் ஆண்களின் இதயத்திலும் அது மடித்துவைக்கப்பட்டிருக்கும்-யுகபாரதி

"Love the life you live. Live the life you love."நீ வாழும் வாழ்க்கையை நேசி. நீ நேசிக்கும் வாழ்க்கையை வாழ்-பாப் மார்லி

அனுஜா



அனுஜா குறும்பட விமர்சனம்

2025,ம் வருட ஆஸ்கர் பிரிவுக்கு இந்தியாவின் சார்பில் அனுப்பப்பட்ட குறும்படம்.காக்கா முட்டை போல் டெல்லியில் வாழும் வறிய நிலையில் இருக்கும் இரு சிறுமிகளைப் பற்றிய படம்.வறுமையில் இருக்கும்  சகோதரிகள் வறுமை, குழந்தைத் தொழில் மற்றும் கல்விக்கான போராட்டத்தை எதிர்கொள்கின்றார். உணர்வுப் பூர்வமான போராட்டமும் கல்வியுமே கதைக்களம்.

கதை

 9 வயது அனுஜா (சஜ்தா பாத்தான்) மற்றும் அவளது மூத்த சகோதரி பாலக் (அனன்யா ஷான்பாக்) ஆகியோரின் கதையைச் சொல்கிறது. அவர்கள் டெல்லியில் உள்ள ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலையில் குழந்தை தொழிலாளிகளாக பணிபுரிகின்றனர், 

அங்கு அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். அனுஜாவுக்கு ஒரு பள்ளி ஆசிரியர் மூலம் ஒரு போர்டிங் பள்ளியில் சேருவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது, ஆனால் அதற்கான தேர்வு கட்டணம் 400 ரூபாய் அவளுக்கு ஒரு பெரிய சவாலாக உள்ளது. இந்த வாய்ப்பு அவளுக்கும் அவளது சகோதரிக்கும் இடையே ஒரு கடினமான தேர்வை உருவாக்குகிறது: தனக்காக ஒரு வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பதா அல்லது தனது சகோதரியுடன் இருக்க வேண்டுமா என்பதே.

இசையும் ஒளிப்பதிவும் முதல் சில நிமிடங்களிலேயே நம்மை ஒன்ற வைக்கிறது.சிறுமியின் கணக்குத் திறமையைப் பார்த்து தொழிற்சாலையில் வைத்துக் கொள்ள துடிக்கும்.முதலாளியின் மனம் ஏறக்குறைய சமுதாயத்தின் மனமே.

நான் உனக்காக எதையும் செய்யத் தயார்,நான் திருடவில்லை வாழ முயற்சிக்கிறேன்,உனக்கான வாய்ப்பை பயன்படுத்து என சொல்லும் இடங்களில அக்கா அம்மாவாக மிளிர்கிறார்.

நீ படித்தால் நம் கஷ்டம் தீரும். நாம் நல்ல நிலையில் வாழலாம் எனச் சொல்லி ஊக்கப்படுத்தி இருக்கலாமோ எனத் தோன்றியது. ஏனெனில் படிப்பதற்கான நாட்டத்தை உருவாக்க எதிர்கால நல் வாழ்வை இன்னும் விளக்கியிருக்கலாமோ என எண்ண வைத்தது.எந்த முடிவையும் எடுக்காமல் End போடுவதுதான் உலகத் திரைப்பட முடிவோ என நினைக்க வைக்கிறது.

கல்வியே எளிய மக்களின் ஆயுதம் என உரக்கச்சொல்கிறது.

தோழமையுடன் மணிகண்டபிரபு

முப்பது வருடங்களாக அரசின் அலுவலகத்தில் ஓர் உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரி அவர். ஒரு நாள் கூட அலுவலகத்துக்கு விடுமுறை எடுக்கவில்லை. இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரிய வருகிறது. இன்னும் கொஞ்ச நாட்கள் தான் உயிருடன் இருக்கப்போகிறோம் என்பதை அறிந்து உடைந்துபோகிறார். அதுவரை வாழ்ந்த வாழ்க்கையை சுயபரிசோதனை செய்து பார்க்கிறார். இயந்திரம் போல வேலை செய்து 30 வருட வாழ்க்கையைத் தொலைத்துவிட்டேன் என்பதை உணர்கிறார். எப்படி வாழ்வது என்பதை அறிய ஒரு கலைஞனைத் தேடிப்போகிறார். அந்தக் கலைஞனோ இரவு விடுதி போன்ற களியாட்டங்களுக்கு அந்த அதிகாரியை அழைத்துச் செல்கிறான். களியாட்டங்களில் வாழ்க்கை இல்லை என்பதை உணரும் அதிகாரி, தனது அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பெண்ணைச் சந்திக்கிறார். அவள் விரைவில்வேலையை விடப்போகிறாள். அதற்காகவே அவரைச் சந்திக்கிறாள். அவளது முகத்தில் எப்போதுமே ஒரு குழந்தையைப் போல சிரிப்பு , மகிழ்ச்சி, உற்சாகம். இது அந்த அதிகாரியை வசீகரிக்கிறது. வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடும் அவளிடம், “நீ எப்படி எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கிறாய்? உன்னைப் போல நான் இருக்க என்ன செய்யவேண்டும் ..? “ என்று கேட்கிறார். அவள் பொம்மைகளைச் செய்யும் வேலையை செய்கிறாள். அந்த வேலையை செய்யத்தான் இப்போது பார்த்துக்கொண்டிருக்கும் அரசாங்க வேலையை விடுகிறாள். அவள் அந்த அதிகாரியிடம் இப்படிச் சொல்கிறாள் : “பொம்மையைச் செய்யும்போது ஜப்பானில் இருக்கும் ஒவ்வொரு குழந்தையுடனும் விளையாடுவதைப்போல உணருகிறேன். இந்த வேலை எனக்கு மகிழ்ச்சியை ,உற்சாகத்தை நான் வாழும் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தத்தை தருகிறது...”அவளின் பதில் அந்த அதிகாரிக்குப் புத்துயிர்ப்பை அளித்து மீண்டும் இன்னொரு பிறவியை எடுக்க வைக்கிறது.ஆம்;பல நாட்களுக்கு முன்பு குழந்தைகள் விளையாடும் இடத்தில் சாக்கடை சூழ்ந்திருப்பதால் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது என்று மக்கள் அவரிடம் ஒரு மனுவைக் கொடுத்திருப்பார்கள். அதை ஒரு பொருட்டாக கூட மதித்திருக்க மாட்டார். அந்தப் பெண்ணின் சந்திப்பு கொடுத்த மாற்றத்தில் பழைய மனுவை பரிசீலித்து குழந்தைகளுக்கான மைதானத்தை சரி செய்யும் பணியில் இறங்குகிறார் அந்த அதிகாரி. அந்தப் பணியில் ‘வாழ்’தல்னா என்னவென்று உணர்கிறார்.OTD

இந்திரன்


புத்தரின் மரணம் எப்படி நிகழ்ந்தது?
----------------------
 புத்தர் தனது 80 ஆவது வயதில் மரணம் அடைந்தார்.இயேசு பிறப்பதற்கு563 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த அவர் கிராமம் கிராமமாக சென்று போதனைகள் செய்து வந்தார். அவ்வாறு பெலுவாவில் இருந்து பாவா எனும் கிராமத்துக்கு சென்ற போது அங்கு இரும்பு வேலை செய்யும் கண்டா என்பவரின் மாந்தோப்பில் தங்கினார். அப்போது கண்டா தன்னை அறியாமல் புத்தருக்கு அழுகிப்போன பன்றி மாமிசம் கொடுத்துவிட்டார். இதனால் புத்தர் நோய்வாய்ப்பட்டார்.    மரணம் நெருங்குவதை உணர்ந்தார்.   ஊருக்கு அருகில் வசித்த எல்லா சீடர்களையும் வரவழைக்குமாறு சொன்னார். தன் பிரதான சீடர் ஆனந்தாவிடம் சொல்லி வண்டிகளால் அழுக்காகி போன  ஒரு குட்டையில் இருந்து நீர் எடுத்து வருமாறு சொல்லி பருகினார். தனக்கு அழுகிய மாமிசத்தை கொடுத்த கண்டாவிற்கு எந்தவித வருத்தமும் ஏற்பட செய்யக் கூடாது என்று சொன்னார். "நீ நல்லதே செய்தாய். நீ கொடுத்த உணவைத்தான்  புத்தர் கடைசியாக சாப்பிட்டார்." என்று கண்டாவிடம் சொல்லுங்கள் என்று தன் பிரதான சீடர் ஆனந்தா விடம் சொன்னார். தன் சீடர்களிடம்  " என்னை அப்படியே பின்பற்றாதீர்கள். உங்களுக்கு நீங்களே தீபமாக இருங்கள். உண்மையை கெட்டியாக பற்றி கொள்ளுங்கள்.  " என்று சொன்னார்.  ஒரு படுக்கை தயார் செய்ய சொன்னார். அப்போது துக்கம் தாளமல்  அழுத ஆனந்தாவிடம் ஆறுதல் சொன்னார்.  ஏதேனும் ஐயங்கள் இருந்தால் கேளுங்கள் என்று சொன்னார். இல்லை என்று அவர்கள் பதில் சொன்ன பிறகு புத்தர் படுக்கையில் படுத்து தியானத்தில் ஆழ்ந்தார். மரணம் அவரை சூழ்ந்து கொண்டது.
எம் வி காமத்  எழுதிய புத்தகத்தில் படித்தது... 

-இந்திரன்

Wednesday, 12 February 2025

காலம் எப்போதும் நம்மை புதுப்பிக்க வைக்கும் சொற்களை யாரிடமாவது கொடுத்து வைத்து இருக்கும்.அதை பெற்றுக் கொள்கிற வேளை வரும் வரை அதற்காக காத்திருப்பதை தவிர வேற வழியில்லை.-சில்வியா பிளாத்

எனக்கு நானே கேட்டுக்கொண்ட கேள்விக்குஎனக்கு நானே சொல்லிக்கொண்ட பதிலை இன்று ஒருவரிடம் கேட்டுப் பெற்றுசட்டைப்பையில் வைத்துக் கொண்டேன்.ஏதோ கனம் கூடியது போலவும் இருக்கிறது.ஏதோ லேசானது போலவும் இருக்கிறது.-போகன் சங்கர்

ஏழை-பாழை என்றுசொல்ல கேள்வி பட்டிருக்கிறோம்.இதில் பாழை என்பது பணக்காரராய் இருந்து ஏழையானவர் (வாழ்ந்து கெட்டவர்) என்று பொருள்

Sunday, 9 February 2025

ஜெயமோகன்


பட்டிமன்றத்துக்கு மட்டுமே இன்று மக்கள் வருகிறார்கள். சொற்பொழிவுகளுக்கு எவரும் வருவதில்லை. பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவானது எதற்கு என குன்றக்குடி அடிகளார் ஒரு நூலில் சொல்கிறார். சிலப்பதிகாரம் முதலிய செவ்விலக்கிய நூல்களைப் பற்றிய உரைகள் நடக்கும்போது ஓர் உரை முடிந்ததுமே மக்கள் கலையும் வழக்கம் இருந்தது. அத்தனை உரைகளையும் அவர்களை கேட்கவைக்கும் பொருட்டே பட்டிமன்றம் என்னும் அமைப்பு உருவாகியது. ஓர் உரையை கேட்டவர் இறுதித் தீர்ப்புரையை கேட்காமல் கிளம்ப முடியாது.

நம் பட்டிமன்றங்களின் தலைப்புகள் இன்று எப்படி மாறியுள்ளன என்று பார்த்தால் இது தெரியும். ‘தலைவியரில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா?’ என்று விவாதித்த காலம் மறைந்துவிட்டது. ‘கொடுமைப்படுத்துவது மாமனாரா மாமியாரார்?’ ‘தமிழ் சினிமாப்பாடல்களில் காதலா காமமா?’ இதெல்லாம்தான் இன்றைய பட்டிமன்றத் தலைப்புகள். இன்னும் ஒருபடி மேலே சென்று திண்டுக்கல் லியோனி போன்றவர்கள் தமிழ்ச் செவ்விலக்கியங்களை, தனித்தமிழை, தமிழியக்கத்தையே கேலியும் கிண்டலும் செய்வதே இன்று பட்டிமன்றங்களில் நடைபெறுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு சைவ ஆலயத்தின் திருவிழாவில் சொற்பொழிவு நிகழ்ச்சி. ஒரு பேச்சாளர் நகைச்சுவை என்ற பெயரில் அத்தனை நாயன்மார்களையும் கேலி செய்துகொண்டிருந்தார். திருமுறை பாடல்களை அபத்தமாக கேலிப்பாடலாக பாடிக்காட்டினார். பரோட்டாவுக்கு சால்னா கேட்பதை ‘பித்தா பிறைசூடி’ என்னும் பாணியில் சொல்லி காட்டினார். அரங்கு சிரித்துக்கொந்தளித்துக் கொண்டிருந்தது.

-ஜெயமோகன்

பிக்காசோ


ஒருமுறை பிக்காசோ தனது சிறுவயதில் ஒரு ஓவியத்தை வரைந்து தனது தந்தைக்குக் காட்டினார்.
அவரது தந்தை அதைப் பாராட்டி, "மகனே, இதை வெளியில் வைத்து, குறைபாடுகள் இருந்தால் மக்களுக்குக் காட்டச் சொல்லுங்கள்" என்றார்.
பிக்காசோவும் அவ்வாறே செய்தார்.

மாலையில், ஓவியத்தைப் பார்க்க வந்தவர்கள் சுமார் 100 குறைபாடுகளைக் குறிப்பிட்டிருந்தனர்.
பிக்காசோ ஓவியத்தை எடுத்துச் சென்று தனது தந்தையிடம், "நான் மீண்டும் வரைய மாட்டேன். நான் வரையும் ஓவியங்களில் நிறைய குறைபாடுகள் உள்ளன" என்று வருத்தத்துடன் கூறினார்.
அவரது தந்தை, "இல்லை மகனே, நீ விழ வேண்டாம். நாளை சென்று 'குறைபாடுகளை சரி செய்ய' என்று ஒரு லேபிளை ஒட்டு" என்றார்.

பிக்காசோவும் அவ்வாறே செய்தார்.
ஆச்சரியப்படும் விதமாக, மாலையில் ஓவியத்தில் எந்த மாற்றமும் இல்லை, முந்தைய நாள் கூறிய குறைபாடுகளில் ஒன்று கூட சரி செய்யப்படவில்லை.

அன்று மாலை தந்தை கூறினார், "மகனே, நமது குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட ஆயிரம் பேர் இருந்தாலும், அவற்றைச் சரி செய்யக்கூடியவர்கள் மிகக் குறைவு."

திருமண அழைப்பிதழில் மணமகன்/மகள் பெயருக்கு முன் திருவளர்ச்செல்வன் என இருந்தால் அக்குடும்பத்தில் மூத்த மகன்/மகள் திருமணத்தைக் குறிக்கும்.குடும்பத்தில் திருமணம் முடிவுற்றது என்பதைத் தெரிவிக்க திருநிறைச்செல்வன் எனக் குறிப்பிடுகின்றனர்.-அந்துமணி

Friday, 7 February 2025

புத்தகம்-13


Reading_Marathon2025
#25RM055

Book No:13/100+
Pages:-224

கடலம்மா பேசுறேன் கண்ணு
-வறீதையா கான்ஸ்தந்தின்

பொதுவாக கடலைப் பற்றி சமவெளியில் இருப்போரிடம் கேட்டால்.. கடல் பெரிது.உப்பு சுவை, நீரோட்டம் இருக்கும். பெளர்ணமியில் அலை அதிகம் இருக்கும்.இன்னும் சிலவற்றை விரல்விட்டு எண்ணும் வகையில் தான் தகவல்கள் தெரியும். ஆனால் கடல் பற்றியும் கடலோடிகளின் வாழ்வு பற்றியுன் இந்நூல் அலசுகிறது.இந்து தமிழ் திசை உயிர்மூச்சு இணைப்பிதழில் தொடராய் வந்தது. 
அவர்கள் கடலிற்கு முகத்தையும், சமவெளிக்கு முதுகையும் காட்டி நிற்கிறார்கள். மொழியைக் கையாண்டு சமவெளியை நோக்கி உரையாட வேண்டும் எனும் வார்த்தை ஜாலத்தில் நம்மோடு கைபிடித்து அழைத்திச் செல்கிறார்.

'கடலின் மகத்தான பங்களிப்புகளை, அதன் மீதான பழங்குடி மக்களின் நம்பிக்கையையும், தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வியலையும் அவர்களின் பாரம்பரிய அறிவையும் இந்நூல் வெளிப்படுத்துகிறது. சமவெளி மக்களுக்கு நெய்தல் நில வாழ்வியலை அறிமுகம் செய்கிறது.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது போல கடலின் முன் அனைவரும் சமமே. கடலாடி கடலுக்கு நுழையும் சாகசத்தை எழுத்தின் வடிவில் நமக்கு காட்சிப்படுத்துகிறார்.கடலோடி சமூகத்தில் பிள்ளைகள் தான் சொத்து. அதிக பிள்ளைகள் உள்ள குடும்பத்தை மரியாதையாக நடத்துகின்றனர்.

மீன் பிடிக்கச் செல்லும் போது தொலைவிலுள்ளோரை இயல்பாக கத்தி கூப்பிடுவர். நகரத்தில் கூட சந்தைகளில் இப்புழக்கம் உண்டு.பழங்குடி மக்களை அடையாளம் காணும் கூறுகளாக மைய அரசு பட்டியலிட்டிருக்கும் குணக்கூறுகளில் ஒன்று - பொது இடங்களில் அவர்கள் பெருங்குரலெடுத்துப் பேசுவார்கள் என்பது. காட்டிலும் கடலிலும் குரல்தான் மொழி எனும் தகவல் புதிதாக இருந்தது.

தரையில் கூட செல்வதற்கு கூகுள் மேப் லொகேசனை பயன்படுத்துகிறோம். ஆனால் கடலில் எவ்வாறு மீன்வர்கள் சரியாக அந்த இடத்திற்கு சென்று திரும்புகின்றனர்.ஜி .பி.எஸ் கருவிகளும், கடலோடிகளும் ஒரே அறிவியல் முறையைத் தான் பின்பற்றுகின்றனர் எவ்வாறு என்பதை அறிவியல் பூர்வமாய் விளக்கியுள்ளார்.ஜி.பி எஸ் கருவிக்கு முன்னோடி மீனவர்களே என்பது இம்முறையால் நிரூபனமாகிறது.ஓநாய் வேட்டையாடும்.முறை குறித்து படித்திருப்போம். இதில் கலவா மீனை பிடிக்கும்.லாவகத்தை அலெக்ஸ் எனும் மீனவர் விளக்கியிருப்பது சிறப்பு.விரல் நுனியில் அம்மீனை எப்போது வேட்டையாட வேண்டுமென அறிந்து வைத்திருக்கிறார்.

கட்டுமர வரலாறு, அதனை எவ்வாறு தயாரிக்கின்றனர்,மீனவனின் அடையாளமாய் நெய்தல் நிலமக்கள் கருத்வது என்ன என்பதை விளக்கியுள்ளார்.கடலின் உவர்ப்பு உயிர்க்கோளத்தின் பெருவரம் என்று சொல்ல வேண்டும். சூரிய வெப்பத்தால் பெருங்கடல் பரப்பின் குறிப்பிட்ட பகுதி விரிவடைய நேரும்போது அடர்த்தி வேறுபாடு ஏற்படுகிறது. வெதுவெதுப்பான, அடர்த்தி குறைந்த கடல் நீர்த்திரளானது வெம்மை குறைந்த, அடர்த்தி குறைவான பகுதியை நோக்கி விரைகிறது. கடலின் உவர்தன்மையில் விளையும் இம்மாற்றம்தான் பெருங்கடல் நீரோட்டங்களின் அடிநாதம்.

. மீனவர்களின் வாழ்வியல்**: இந்த புத்தகம் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் வாழும் மீனவர்களின் வாழ்க்கை முறை, அவர்களின் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் சமூக ரீதியான சவால்களை விரிவாகப் படம்பிடிக்கிறது.கடல் மற்றும் நெய்தல் நிலங்களின் சுற்றுச்சூழல் மாற்றங்கள், மீன்வளத்தின் மீதான தாக்கங்கள் மற்றும் இவற்றை எதிர்கொள்ளும் மீனவர்களின் போராட்டங்கள் பற்றியும் இந்த புத்தகம் விவரிக்கிறது.

*'பாட்டம் பொய்க்காதிருந்தால் வேட்டம் பொய்க்காது'. இது சங்கப்பாடல் உணர்த்தும் உண்மை. பருவமழை சரியாகப் பெய்தால் மீன்வேட்டம் சிறப்பாக அமையும். கடலோர வாழ்வின் எளிய உண்மை.

*நிலத்தைப் பொறுத்தவரை அதன் பரப்பில் மட்டும்தான் உயிர்கள் உலவ முடியும். கடலோ முப்பரிமாண ஊடகம். உலகில் பெருமளவு உயிர்களின் வாழிடமாகத் திகழ்கிறது கடல்.

*நீருக்கு வெப்பத்தை உள்வாங்கும் திறன் (latent heat capacity) மிக அதிகம். வெப்ப மட்டங்கள் (thermal strata) இதனால்தான் உருவாகின்றன.

*ஹைட்ரஜன் அயனிகளின் பிணைப்பினால் நீர்த் திரவத்தின் மேற்பரப்பு மெல்லிய தோல்போல் இயங்குகிறது. பூச்சிகள் போன்ற சிறு பொருட்கள் அதனுள் அமிழ்ந்துவிடாமல் மேலே மிதப்பதற்கு இந்தப் பரப்பு இழுவிசைதான் (Surface tension) காரணம்.

*கடலில் 200 மீட்டர் ஆழத்துக்குக் கீழே வெளிச்சம் பாய்வதில்லை. பேராழங்களின் முக்கியமான பண்புகள் காரிருளும் பேரழுத்தமும்.

*உயிர்வளி, நீர்வளி, குளோரின் போன்ற 12 வாயுக்கள் உள்ளிட்ட 60 தனிமங்கள் கடல்நீரில் கரைந்துள்ளன. இவை தவிர கடல் நீரின் மூன்று பண்புகள் கடலுக்குத் தனித்தன்மையைத் தருகின்றன. முதலாவது, வேறெந்தக் கரைப்பானையும்விட அதிக எண்ணிக்கையிலான வேதிமங்களைக் கரைக்கும் திறன்கொண்டது நீர். இரண்டு, நீரின் வெப்பக் கொள்திறன் இயல்பிலேயே அதிகமானது. மூன்று, உறைநிலையில் விரிவடையும் அபூர்வமான திரவம் நீர். 

*கடல்நீர் நன்னீராக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அப்போது, நீரோட்டங்கள் நிகழாது. உயிர்கள் பரவிப் பெருகாது. உயிர்ச்சத்து விநியோகம் நிகழாது. 

*மீன்களைக் குறித்து படிப்புக்கு இக்தியாலஜி (Ichthyology) என்று பெயர். மீன் தொகை ஆய்வில் முக்கியமான வேலை மீனின் வயதைக் கணக்கிடுவது.

இப்புத்தகம் கடலில் வாழும் மீன்கள், பூச்சிகள் உள்ளிட்ட கடல்வாழ் சிற்றினங்கள் பற்றி பேசுகிறது. முதன் முதலில் கடல் பயணம் செய்த வரலாறு,பவளப்பாறைகள், நீரோட்டங்கள் பற்றி விரிவாக கூறுகிறது.நெய்தலின் உரிப்பொருள் இரங்கலும் இரங்கல் நிமித்தமும். கடலுக்குள் செல்லும் கடலோடி அன்றாடம் மரணத்தின் வாயிலை எட்டிப் பார்த்துவிட்டுத் திரும்புகிறான். நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் மீனவனுக்கு மனைவியோ தாயோ வெற்றிலை, வாய்க்கரிசி கொடுத்து வழியனுப்புகிறாள். அதுவே அவனது இறுதிப் பயணமாக அமைந்துவிடலாம் எனும் வரி கலஙக வைக்கிறது.

பத்தி பத்தியாக தகவல்கள் ஒவ்வொரு பக்கமும் கடல் குறித்து அறியாத தகவல்கள் ஏராளம். கடல் பற்றி அறிய விரும்புவோர் படிக்க வேண்டிய புத்தகம்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Sunday, 2 February 2025

விரதத்தின் பயன்களை அறிவியல் ஆய்வுகளின் மூலம் கண்டுபிடித்ததற்கு ஜப்பானை சேர்ந்த செல் உயிரியலார் Yoshinori Ohsumi க்கு 2016 இல் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.விரதம் இருக்கும் நேரத்தில் நமது செல்களே நமது உடலை சுத்தம் செய்யும், பலவீனமான, நோய்வாய்ப்பட்ட செல்களை உண்டு அழிக்கும். புற்றுநோய் செல்களை நீக்கும். பல நோய்கள் உருவாக காரணமாக உள்ள செல்களை நீக்கும் ( Autophagy )...தொடர்ச்சியாக 12 மணி நேரத்திற்கு மேல் விரதம் இருந்தால் இந்த நல்ல விஷயங்கள் எல்லாம் நமது உடலில் படிப்படியாக விரத நேரம் கூட கூட நடக்கும் ...( மிக முக்கிய குறிப்பு : விரதம் என்றால் டிபன் ஐட்டம் சாப்பிடுவது இல்ல, தண்ணீர் மட்டும் தான் குடிக்கலாம் ... ). நான் இடையிடை விரதம் ( Intermittent Fasting ) 16:8 இருந்து வருகிறேன் ... எடுத்துக்காட்டாக, நாம் அடிக்கடி சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமது உடல் செரிப்பதிலேயே தான் அதிக ஆற்றலை செலவிடும், கவனம் செலுத்தும். சாப்பிடாமல் விரதம் இருக்கும் போது, நமக்கு எப்படி ஓய்வு கிடைக்கும் போது அல்லது நேரம் கிடைக்கும் போது வீட்டை, இடத்தை சுத்தம் செய்கிறோமோ, அதே போல விரதம் இருக்கும் போது நமது உடல் அதன் சக்தியை சுத்தம் செய்ய பயன்படுத்தும். செல்லின் தற்கொலை பைகள் என்று அழைக்கப்படும் லைசோசோம் தன்னை மாய்த்து இந்த வேலையை செய்யும். விலங்குகளை பாருங்கள் நோய்வாய்பட்டால் எதையுமே சாப்பிடாது. ஆனால் நாம் அப்படி இல்லை ...