Monday, 31 July 2023

மனிதர்கள்


நாம் சந்தித்த அழகானவர்கள் பலரும் வீழ்ச்சியை, வாதையை, வலி மிகுந்த போராட்டத்தை, இழப்பை அறிந்தவர்கள். அவற்றிலிருந்து மீளும் வழியைக் கண்டறிந்தவர்கள். அத்தகைய மனிதர்களிடம் வியப்பும் பாராட்டுணர்வும் நுண்ணுணர்வும் இயல்பாகவே மிகுந்திருக்கும். வாழ்க்கை கொடுத்த பலத்த அடிகள் வழியாகப் பரிவையும் சக மனிதர்கள் மீது அக்கறையையும் மென்மையான அணுகுமுறையையும் வெளிப்படுத்துவார்கள். 

ஒரு நாளில் யாரும் அழகாவதில்லை. 

- வளர்ச்சியின் இறுதிப் படிநிலை, எலிசபெத் குப்ளர் ராஸ்.

'காலையில் ஒன்று ஆவர், கடும்பகலில் ஒன்று ஆவர்;மாலையில் ஒன்றுஆவர் மனிதரெல்லாம்'-ஓளவையார்

Sunday, 30 July 2023

நன்றாக உடுத்திய பெருவயிறான பணக்காரனுக்கும், மோசமாக உடுத்திய படிப்பறிவற்ற ஏழைக்கும் இடையில் நீதியை நிர்ணயிக்கும் போது இயற்கையாகவே நீதிமன்றம் முதலில் சொன்னவனுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறது-இ.எம்.எஸ்.நம்பூதரிபாட்

"நேசிக்காமல் இருப்பதென்பது ஒரு துரதிர்ஷ்டம். இன்று நாம் எல்லோரும் இந்தத் துரதிர்ஷ்டத்துக்கு இரையாகிக்கொண்டிருக்கிறோம்"- ஆல்பெர் காம்யு

"வாழ்க்கை சொர்க்கமா ஆகறதுக்குப் பணம் மட்டும் காரணமில்லே தான்... ஆனா நரகமா ஆகறதுக்குப் பணம் இல்லேங்கற ஒரே காரணம் போதும்..."- ஜெயகாந்தன்,

Friday, 28 July 2023

தற்கொலை என்பது எளிதல்ல அரளிவிதை மையாய் அரைத்து நீர்கரைத்து குடித்துவிடலாம் குடல்பிரட்டி வயிறு எரியும் சையனைடுகளுக்கு வாங்குதிலேயே பிரச்சினைகள் வரும் தூக்குப்போட்டுக்கொண்டால் வாய்கோணி முகம் கோரமாகும் தூக்கமாத்திரை இவற்றில் எளிது காப்பாற்றும் முயற்சியிலிருப்பவர்கள் கண்டதையும் கரைத்து வாயில் ஊற்றக்கூடும் தற்கொலைக்கு எளியவழி என்பது காரணங்களோடு சமரசம் கொள்வதுதான்-லதாமகன்

என்.சொக்கன்

அத்திக்காய் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய் காயாதே, என்னைப்போல் பெண்ணல்லவோ!

 கன்னிக்காய், ஆசைக்காய், காதல் கொண்ட பாவைக்காய், அங்கே காய், அவரைக் காய், மங்கை எந்தன் கோவைக்காய்! 

ஒரு படை வீரன், கடமை அழைக்க, போர்க்களத்துக்குச் சென்றுவிடுகிறான். அவனைப் பிரிந்து வாடும் காதலி, தவிக்கிறாள், துடிக்கிறாள், வானத்தில் இருக்கும் முழுச் சந்திரனும் அவளுக்குச் சூரியனைப்போல் சுடுகிறது. அதைப் பார்த்துப் பேசுகிறாள்:

 ‘அத்திக்காய்க் காய் காய், ஆலங்காய் வெண்ணிலவே, இத்திக்காய்க் காய்ந்துனக்கு என்ன பயன்?’ இங்கே அத்திக்காய், ஆலங்காய் என்பவை காய்களின் பெயர்கள் அல்ல,

 ’ஆலத்தைப்போ’ஆலத்தைப்போலக் (அதாவது, விஷத்தைப்போலக்) காய்கிற (அதாவது, சுடுகிற) வெண்ணிலவே, அத் திக்காய் (அதாவது, அந்தத் திக்காக, என் காதலன் இருக்கும் அந்தத் திசையில்) சென்று காய்வாயாக, இத் திக்காய் (அதாவது, இந்தத் திக்கில், நான் இருக்கும் இந்தத் திசையில்) மட்டும் காய்வதால் உனக்கு என்ன பயன்?’ என்கிறாள் அந்தப் பெண். 

இதன் அர்த்தம், ’நிலவே, நீ என்னையே சுட்டுகிட்டிருக்கியே, என்னைப் பிரிவுத் துன்பத்தில வாடவைக்கற அந்தக் காதலன் இருக்கற திசையிலும் போ, அவனையும் கொஞ்சம் நல்லாச் சுடு, அப்போதாவது அந்தப் பயலுக்கு என் ஞாபகம் வருதான்னு பார்ப்போம்!’

 அவள் அதோடு நிறுத்தவில்லை, ‘பற்றில் அவரைக் காய், கோவைக் காய்’ என்கிறாள். அதாவது, (என்மீது) பற்று இல்லாத என் காதலனைச் சுடு, அவனைப் போருக்கு அழைத்துச் சென்ற அவனுடைய தலைவன் (கோ) இருக்கிறானே, அவனையும் சுடு!’

 இத்தனை சூட்டையும், ஒரு சந்தோஷமான காதல் பாட்டுக்குள் கண்ணதாசன் எப்படிக் கச்சிதமாக இறக்கியிருக்கிறார் என்று மேலே படித்துப் பாருங்கள்!

-என்.சொக்கன்

"உதட்டை இறுக்கிச் சிரிப்பது, சுழித்துச் சிரிப்பது, தாடையைக் கீழே இறக்கிச் சிரிப்பது, பக்கவாட்டில் பார்த்துச் சிரிப்பது, எப்போது பார்த்தாலும் சிரிப்பது" என ஐந்து வகை சிரிப்புகள் சொல்லப்படுகின்றன.-படித்தது

எக்காரணத்தைக் கொண்டும் உன்னுடைய மேலதிகாரியைக் காட்டிலும் ஒளிர நினைக்காதே-அதிகாரத்திற்கான 48விதிகள் நூலில்

சொற்களைக் காட்டிலும்மௌனத்திற்கு அஞ்சுகிறோம்,ஒரு மௌனம் தனக்குள்எல்லா விபரீதங்களின் சாத்தியங்களையும்புதைத்து வைத்திருக்கிறது.எய்யாத அம்புஎந்தத் திசையில் வேண்டுமானாலும் பாயக்கூடும்அபாயங்களைப் போல.-யாத்திரி

Thursday, 27 July 2023

ஈசாப்


மதிய வேளையில் மலை உச்சிக்குச் சென்ற ஓநாய் தன் நிழலை பார்த்து, மிக பிரம்மாண்டமான உருவத்தை பெற்றிருக்கும் நாம் ஏன் இனி புலி,சிங்கத்துக்கு பயப்பட வேண்டும் என எண்ணியது. அப்போது அந்த வழியாக வந்த சிங்கம் அதன் மேல் பாய ஓநாய் உயிரை இழந்தது.போலிச் சொற்களால் மிகவும் உயர்வாக கருதுபவர்களின் முடிவு இதுதான்.

-ஈசாப்

பிடித்தவைகளோடு இருக்க நேரம் பறித்துக் கொண்டிருக்கிறான்தன் அவதியின் உலகிலிருந்து.பிடித்தவைகளும் அதற்கேயுரிய அவதிகளின் உலகிலிருந்து கரம் நீட்டுகின்றன..-திருச்செந்தாழை

Wednesday, 26 July 2023

சுவரில் ஒட்டியிருக்கும் பல்லி, தான் தான் சுவரையே தாங்குவதாக கற்பனை செய்து கொள்ளுமாம்.அதைபோல சிலர் வேலை செய்யும் கம்பெனியை தான் தான் தாங்குவதாக சிலர் நினைத்துக் கொள்வார்கள்..-சுகபோதானந்தா

அடுத்தவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், பிரதிபலனே பாராமல் அடுத்தவர்களுக்கு உதவுங்கள்-தலாய்லாமா

படித்தது


'ஒரு விசயத்தைப் பார்க்கும் விதத்தை நீங்கள் மாற்றும்போது, நீங்கள் பார்க்கும் விசயமும் மாறுகிறது...' என்கிறது குவாண்ட இயற்பியல். எல்லைக்குட்பட்ட நம் அறிதல்களால், நம்மை சிறிதினும் சிறிதாக சுருக்கிக்கொள்ள உதவுகிற கதைகளையோ, செயல்களையோ நாம் நம்ப விழைகிறோம்.

 'இந்த உட்சுருங்கலுக்கு காரணம் நானல்ல, இதுவே வாழ்வியல்போக்கு' என எதன்மீதோ பொறுப்புசுமத்தி நம்மை நாமே நியாயப்படுத்துகிறோம். மானுட அகம் எந்நிலையிலும் சுருங்கப்படுவதன் பொருட்டு படைப்படைந்தது அல்ல.

 அறிதலால்... அமைதியால்... அடைதலால்... கணத்திற்குக் கணம் அது விரிவுகொள்வது.  ஆகவே, நம் சின்னஞ்சிறு அகத்தை, பெரிதினும் பெரிய இப்பிரபஞ்சத்தோடு பொருந்த வைக்கக்கூடிய கதைகளும் செயல்களுமே நமக்குத் தேவை. அதைத் தேடி கண்டடைவதே ஒவ்வொரு மனிதரின் பிறப்புநோக்கம்.

-படித்தது

Monday, 24 July 2023

நிலவு சண்டையிடுவதில்லை;அது யாரையும் தாக்குவதில்லை;அதற்கு கவலை என்பதில்லை:அது எதையும் நசுக்க முயல்வதில்லை.நிலவு அதன் போக்கில் இயங்குகிறது, ஆனால் அதன் இயல்பே, மகத்தான தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நிலவைத் தவிர, வேறெந்த ஒன்றால் ஒரு முழு கடலையும் கரையிலிருந்து கரைக்கு இழுக்க முடியும்? நிலவு, அதன் இயல்புக்கு உண்மையாக இருக்கிறது. அதனால், அதன் சக்தி ஒருபோதும் குறைவதில்லை.- டெங் மிங்-டாவோ.

நீங்கள் இளமையாக இருக்கும்போது வாழ்க்கை இன்னமும் தொடங்கவில்லை என்றே நம்பிக்கொண்டிருப்பீர்கள். உங்களது வாழ்க்கை அடுத்த வாரமோ அடுத்த மாதமோ அடுத்த ஆண்டோ விடுமுறைக்குப் பிறகோ ஏதேனுமொரு கணத்தில் தன்னிச்சையாகத் தொடங்குவதற்குத் திட்டமிட்டிருப்பதாகக் கருதுவீர்கள். ஆனால், நீங்கள் எதிர்பார்த்ததைப் போல வாழ்க்கை ஆரம்பமாகியே இருக்காது. நீங்கள் விரும்பிய தருணம் மலர்ந்திருக்காது. சட்டென உங்களுக்கு வயதாகியிருக்கும். உங்களிடம் எஞ்சுவதென்னவோ ஒற்றைக் கேள்விதான். ‘இத்தனை காலமாக என்னிடம் இருந்தது என்ன? காலத்தின் இடைச்செருகலா? சிதறுண்ட பொழுதுகளா? பொருளற்ற பைத்தியக்காரத்தனமா? என்னிடம் வழங்கப்பட்டிருந்தது என்ன?’- டக்ளஸ் கூப்லேண்ட்.

திருச்செந்தாழை


அழுகை என்பது மகிழ்ச்சியை விட ஆழமானது போல.
மிகப்பிடித்தவர்கள் அழவைத்து செல்கிறார்கள்.அவர்கள்மீது நாம் கொண்ட அன்பின் வெளிப்பாட்டில் அழுகையைப்போல நம்மை திருப்தியடையச் செய்வதும் வேறில்லை.

அழும்போது நாம் சராசரி ஆகிவிடுகிறோம்.பாரம் இழந்த இலை காற்றில் மிதந்திறங்குவது போல நமது தன்னிரக்கத்தின் மீது லேசான உடலாய் வீழ்கிறோம்.
தன்னிரக்கம் என்பது நமது பால்யத்திலிருந்து நாமே சேகரித்துக்கொண்ட நமது சிறுவயது புகைப்படங்கள்போல.
அங்கே நம்மைத் தேற்றுகின்ற தூதனுக்கு நம் முகமே இருக்கிறது.

தீவிர வைராக்கியங்கள் பிறக்கின்ற அழுகைகள் இருக்கின்றன.அவை கதவுகளை அறைந்து சாத்துபவை.பிறகு,இருளில் வியர்வையில் தனிமையில் நம்மை விட்டுச்செல்பவை.

இன்னும் சில அழுகைகள் விடுதலை தருபவை.அவை உறவில் ஒருமுறை மட்டுமே நிகழ்பவை.அவற்றிற்கு அழுகை என்றுகூட பெயரிட முடியாது.
சாவிற்கு முன் தரப்படும் ஆழ்ந்த முத்தத்தைப்போல.அங்கே எந்த சூளுரைக்கும் வேலையில்லை.
ஆனால் இனியொருபோதும் இருவருக்கும் பொதுவான ஒரு மழைக்காலம் அங்கே நிகழ்வதேயில்லை.

கண்ணீரைத் துடைத்தபடி செல்கின்ற மனிதர்களைப் போல
ஆழமானஉணர்வு ததும்பிய, அழகியமுகங்கள் வேறெங்குமில்லை.
இப்போதுதான் எழுதிமுடித்த சிறுகதையின் மை உலராத கடைசிவார்த்தை அவர்கள்.

-திருச்செந்தாழை

Sunday, 23 July 2023

ஓஷோ


எல்லாம் அவசரம்

 ஒரு சிறிய நகரத்தில் கார் விபத்து ஏற்பட்டது.

அதில் பலியானவரை  சுற்றி ஒரு பெருங்கூட்டம்  கூடி இருந்தது.

அப்போது அங்கு வந்த பத்திரிகை நிருபர்,அந்த விபத்தை நெருக்கமாக பார்க்க முடியாததால் தவித்து கொண்டு இருந்தார்.

அவருக்கு சட்டென ஒரு யோசனை வந்தது.

"இந்த விபத்தில் இறந்து போனவரின் தந்தை நான்"என்று அவர் வருத்தமுடன் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.

நான் அருகில் செல்ல வேண்டும் ,தயவு செய்து வழிவிடுங்கள்.

உடனே,அந்தக் கூட்டத்தினர் விலகி நின்று,அவருக்காக வழி விட்டனர்.

நிருபர் அருகில் சென்றவுடன்,விபத்தில் பலியானவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார், அது ஒரு கழுதை????????? 🙄🤔

இப்படிதான் மனிதன் எல்லாவற்றிருக்கும் அவசரப்படுகிறான்...!

- ஓஷோ

Saturday, 22 July 2023

மனிதர்கள் தங்களைத் தொடர்ந்து 'அவதானிப்பதன்' மூலமாகவும் தொடர்ந்து 'மறுகண்டுபிடிப்பு' செய்வதன் மூலமாகவும் மட்டுமே கட்டற்ற நுகர்வுக் கலாச்சாரத்திலிருந்தும் மனக்கொந்தளிப்பான வாழ்க்கை சூழலிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள முடியும்-யுவால் நோவா ஹராரி

படித்தது


முற்றிலும் அடையாளம் சார்ந்த வாழ்க்கை முறையைக் கொண்ட ஒரு காலத்தில் அடையாளங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டே இருப்பது  சந்தையில் தியானம் செய்வது.  எவ்வளவு அமைதிக்கு முயல்கிறோமோ அவ்வளவு இரைச்சலைத் திணிப்பதும், எவ்வளவு இரைச்சலிருக்கிறதோ அவ்வளவு அமைதி தேவையாகவும் ஆவது. டார்க்காவ்ஸ்கி, கலைஞனுக்குத் தேவை சமூக உரையாடல் இல்லை, தனித்திருப்பது என்கிறார். அவர் உத்தேசிப்பது தன்னைப் புனைந்துகொள்வதை விடுத்து தனித்திருந்து ஆராய்ந்துகொள்வதை. அறிவால் அல்ல, அறிவை அதைவிட பெரிய ஒன்றின் முன் தன்னிலையை மண்டியிடச்செய்துதான் கலையை உருவாக்க முடியும். அறிவை அங்குசமாக்குபவர் அந்த யானையை மண்டியிடச்செய்யலாம். ஆனால் யானையையே மண்டியிடச்செய்வதால் அங்குசம் ஒன்றும் அரிய ஒன்றாகிவிடுவதில்லை.
 
அறிவு நம்மை நோக்கி வரும்போதே நூறு கைகளையும் விரித்துக்கொண்டே வருகிறது. நம்மின் பகுதியாகவே மாயம் காட்டுவது. ரத்னாபாயின் ஆங்கிலத்தைப்போல. அறிவின் சிறு துளி போதும்,  சந்தையை வாங்கித் தருகிறேன் என்பது.  ஆனால் அங்குசத்தை வைத்திருப்பவனுக்குத் தேவை சந்தையல்ல. பகலில், சந்தையின் இரைச்சல் எட்டாத உயரத்தில் மிதந்து செல்ல ஒரு யானை. இரவில் தனிமையின் குளிருக்குக் கிழித்துப் போர்த்திக்கொள்ள ஒரு யானைத்தோல். சந்தையையே வாங்கினாலும் குத்தி மண்டியிட வைக்க யானையற்றவன் துயரம் தீராதது.
 
அங்குசத்தை அடைவதைவிட ஆயிரம் மடங்கு கடினம் தனக்கான யானையைக் கண்டடைதலும், அதைக் கிழித்துப் போர்த்திக்கொள்வதும்.

-படித்தது

யார் யாரோ வந்துஆறுதல் போல் ஏதேதோ சொல்லஇப்போது என்னிடம் இன்னும் பெரிதுபடுத்தப்பட்ட துயரமும்அவர்களிடம்எனக்கு ஆறுதல் சொன்ன பெருமையும்எஞ்சி இருந்தது-படித்தது

பழசெல்லாம் சோப்பு போட்டுக் கழுவின மாதிரி பளிச்சுன்னு பத்திரமாக நினைவில் இருக்க, காலையில் நடந்தது மறந்துபோவதுதான் மூப்பின் பிரச்னை.-சுஜாதா

Wednesday, 19 July 2023

கற்பனை நிஜம்


உங்களின் கற்பனை' என்பது, நிழல்கள். உங்களின் அனுபவம் என்பது நிஜங்கள்.

உங்களின் கற்பனையில், இருப்பதை அனுபவிக்க, பழகுங்கள். அங்கு நிஜங்கள் தோன்றும். நிழல்கள் மறையும்.

அதாவது அனுபவித்தல், என்பது உணர்தல். ஒவ்வொன்றுடனும்' ஒவ்வொன்றையும், ஆழமாக உணருங்கள்.

அதாவது. அங்கு, நீங்கள் நீங்களாக' இருந்திடுங்கள்.

அதாவது, உண்மை, என்பதே நிஜம்.

எனவே உங்களுள் இருக்கும், நிஜமே, உங்களிற்கு நிஜத்தை காட்டும்.

எனவே உங்களின், கற்பனை என்பது ஒரு ஆக்கம்'. ஆனால் அது நிஜமா, என்பதில் உங்களிற்கு எந்த வித விடயமும் இல்லை. ஆனால் அது கற்பனையில், உள்ள விழிப்பு ' என்பதில் எந்த வித ஆட்சபனையும், இல்லை, என்பதே உண்மை.

"வெளிச்சம் வரும் போதெல்லாம், கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன" எனும் ஆதவனின் வரி நினைவுக்கு வருகிறது.

Tuesday, 18 July 2023

படித்தது


காமராஜர் மறைவையொட்டி அப்பொழுதே துக்ளக் இதழில் ஆசிரியர் சோ அவர்கள் எழுதிய இரங்கல் கட்டுரை !!

''இனிமேல் என்ன இருக்கிறது?" என்ற கேள்விதான் மற்ற எல்லாக் கேள்விகளையும்விட முதலில் எழுந்தது. மீண்டும் மீண்டும் எழுகிறது. யாராலும் இட்டு நிரப்ப முடியாத ஒரு வெற்றிடம் தோன்றிவிட்டது என்ற எண்ணம்தான் மேலிடுகிறது...
மனம் சாய்ந்த பிறகு தான் சாய்ந்தது அந்த உடல். சந்தேகமில்லை. அந்த மனத்தைச் சாய்த்தவர்கள் பலரும் ஒன்றுகூடி சாய்ந்து போன உடலுக்கு மரியாதை செலுத்தினோம். வாழும்போது அவர் மனத்துக்கு நாம் செய்த தவறுகளைப் பொறுத்துக் கொண்ட அந்த மனிதன், செத்த பிறகு அவர் உடலுக்கு நாம் செய்த மரியாதையையும் பொறுத்துக்கொண்டார் என்ற நினைப்புத்தான் நெஞ்சை அழுத்துகிறது.
'ஒரு சரித்திரம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு சகாப்தம் முடிந்தது' என்று சொல்வார்கள். 'ஒரு தியாக பரம்பரை முடிந்தது' என்று சொல்வார்கள் . எல்லாமே முடிந்துவிட்டது என்று சொல்வதுதான் உண்மையோ? என்ற சஞ்சலம் வாட்டுகிறது.
மனவேதனை பெரிதாக இருக்கிறதென்றால் , வெட்கமும் அவமானமும் அதைவிடப் பெரிதாக இருக்கிறது. துக்கம் பெரிதாக இருக்கிறதென்றால் , விரக்தி அதைவிட அதிகமாக இருக்கிறது. வருடத்திற்கு ஒருமுறை நாம் நினைத்துப் பார்க்கும் நல்லவர்கள் பட்டியலில் அவரும் சேர்ந்தாகிவிட்டது. நாம் நினைத்துப் பார்க்கும் நம் வயிறுகள் மிஞ்சியிருக்கின்றன. கோடானுகோடி வயிறுகளின் நினைப்பையே தனது மனத்தில் நிறுத்தியிருந்த அந்த மனிதர் போய்ச் சேர்ந்து விட்டார்.
மற்றவர்களையெல்லாம்  வாழவைக்க நினைத்த அந்த மனிதனை, வாழவேண்டிய விதத்தில் வாழ வைக்காதவர்கள் எல்லாம் சேர்ந்து 'வாழ்க' என்ற  கோஷம் வானதிரக்கிளப்பி, அவரை வானுலகிற்கு அனுப்பிவிட்டோம்.               
நேர்மை விடைபெற்றுக் கொண்டுவிட்டது. பொதுப்பணி சொல்லிக் கொள்ளாமலே புறப்பட்டுவிட்டது. தியாகம், நமது நன்றி தேவையில்லை என்ற எண்ணத்தில் நம்மை விட்டு எங்கோ மறைந்துவிட்டது.
திரு.காமராஜ் அவர்களின் மறைவு நம்மை ஒரு சூன்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இதை இப்போது நாம் உணரமாட்டோம். வருங்காலத்தில் "அவர்மட்டும் இப்போது இருந்திருந்தால்...!" என்ற வருத்தம் அடிக்கடி தோன்றத்தான் போகிறது. சந்தேகமில்லை.
காலம் நமக்குப் புகட்டாத பாடத்தை , காலதேவன் நமக்கு சொல்லிக் கொடுத்துவிட்டான். ''எடுத்துச் செல்கிறேன் இவரை. அனுபவியுங்கள் இனி!" என்று சாபமிட்டிருக்கிறான் காலதேவன். செய்த தவறுகளுக்கெல்லாம் அனுபவிப்போம்.... நமக்கு வேண்டியதுதான்.
யாரும், யாருக்கும் அனுதாபம் தெரிவிக்கவேண்டிய அவசியமில்லை.சொல்ல வேண்டிய அனுதாபங்களை நமக்கு நாமே சொல்லிக்கொள்வோம். அழவேண்டிய அழுகைகளை  நமக்கு நாமே அழுது கொள்வோம். அனுபவிக்க வேண்டிய தண்டனைகளை இனி நாம் தானே அனுபவிக்கப் போகிறோம்?
இனி நம்மால் அவரை வேதனைப்படுத்த முடியாது. 
இனி நம்மால் அவரை அவமானப்படுத்த  முடியாது. பட்டதுபோதும் என்று போய்விட்டார் அந்த நல்ல மனிதர்.... படவேண்டியது இனி நாம்தான்...

Monday, 17 July 2023

பிச்சைக்காரன்


நீளமான வாக்கியங்களில் தெளிந்த நீரோடை போல எழுதுவது ஆங்கில பாணி .. தமிழில் இந்த பாணி குறைவு..  ..  இயல்புத் தன்மை கெடாமல் நீளமாக எழுதுவதில், மாஸ்டர்  சாண்டில்யன்தான்... கவனியுங்கள்
--------------
இளமதியின் இளம் பாதங்களையும் தளிர் விரல்களையும் கடலரசன் தனது அலைக்கரங்களால் ஆசையுடன தழுவி தழுவி சென்று கொண்டிருந்தாலும் மாலைக்திரவன் அவள் பொன்னிற மேனிக்கு ஈடு கொடுக்க முடியாத தன் கிரகணங்களை ஈர்த்துக்கொண்டு வெட்கத்தினால் முகம் சிவந்து கடலுக்குள் மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்ததனால் தமது தோல்விககு பழி வாங்கும் பொருட்டு அவன கிரகணங்கள் கடல் நீரில் கலந்து அதன் ஓரப்பகுதிகளை சிவக்க அடித்து நீலக்கடலுக்கு சிவப்பு சேலையை போர்த்த முற்பட்டன.


*முற்றுப்புள்ளியே இல்ல.. தட் எவ்லோ பெரிய மாத்திரை மொமண்ட்