‘நீ தகுதி உள்ளவனா?’
அழகு என்பது சீர்மை என்ற பொருளையே தரும். அதனால்தான் வடிவு என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம். இன்று நிறத்துக்கும் ஒப்பனைக்கும் அழகு ஆகுபெயரானது ஒரு மருவுதான். அதைப் பற்றி எழுதியிருக்கிறேன்.
தகுதி என்ற சொல்லின் சரியான பொருள் நடுமை. அதாவது ஒவ்வொரு நொடியும் சூழலுக்கும் தன்னிலைக்கும் இடையேயான இயைபை அடையும் ஆற்றல்.
தான் என்ற செருக்கிலிருந்து அகன்றவனுக்கே நடுவு நிலைமை வாய்க்கும்.
வெவ்வேறு அறிவுச் சிந்தனைகளின் உரையாடல் நிகழும் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு வழங்கும் தகுதி யாருக்கு உண்டு? நடுவருக்கு. நடுவர் என்பவர் யார்? அறிவின் தேடல் வழியே புது கண்டடைவுக்காக நடுநிலை வகிப்பவர்.
ஒரு நடுவர் வாதாடுபவர்களைக் காட்டிலும் அறிவாளியாக இருப்பது முதன்மையானதல்ல. மன்றத்தில் வழக்காடலின்போது அவர் கவனித்தவற்றைப் பக்கச் சார்பின்றிப் பரிசீலித்து அறுதி முடிவு வழங்கும் தகுதியாளரே நடுவர்.
நடுமை என்பது பற்றின்மையின் அடிப்படை. புத்தர் மத்ய மாக்கத்தையே துறவிகளின் தகுதியாகப் போதித்தார்.
நடுமை என்பது இரண்டுக்கும் அடையே நிற்பது அல்ல. ஒவ்வொரு கணமும் மாறும் நடுப்புள்ளியைப் பின்தொடரும் இலகு.
வள்ளுவர் ‘ஒரு பகுதியோடு ஒட்டாமல் அப்பாற்பட்டு முடிவெடுக்கும் திறனே தகுதி என்னும் நன்மை’ என வரையறுக்கிறார்.
இங்கு ஒரு கேள்வி எழும். சரி எப்போதும் பக்கச் சார்பின்றி தகுதி காக்கும் அவனுக்கு உலகம் என்ன கைம்மாறு செய்துவிடும்? எல்லாருக்கும் வருவது போல அவனுக்கும் தாழ்வு வரும். ஆனால் அப்போது அவன் கெட்டு ஒழிய. வேண்டும் என்று உலகம் சபிக்காது என்கிறார் செந்நாப்போதார்!
இனி ‘தகுதியை வளர்த்துக்கொள்’ என்று யாரேனும் சொன்னால் சினமுறாதீர்கள். ஒற்றைக் கால் கட்டைவிரலில் உடலின் மொத்த எடையையும் தாங்குவதற்கு இணையாக அகத்தின் நடுவுநிலைமையை வளர்த்துக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொள்ளுங்கள்.
-கோ.கமலக்கண்ணன்
No comments:
Post a Comment