#மனசுக்கு_ஒரு_தேநீர்_16
Theory X & Theory Y
“மனிதனை சந்தேகித்தால் அடிமை;
நம்பினால் தலைவன்"
எல்லார் மனதிலும் ஒரு கற்பனை தராசு இருக்கும். அதில் அவர் குறித்த பிம்பத்தையும் நம் கற்பனையையும் எடை போட்டுப் பார்ப்போம். இதில் எது எடை அதிகமோ அதனையே நம்புவோம்.மனவியல் அறிஞர் Douglas McGregor முன்வைத்த இரண்டு முக்கிய கோட்பாடுகள் தான் Theory X மற்றும் Theory Y.
இவை வெறும் மேலாண்மை கோட்பாடுகள் மட்டுமல்ல; மனித வாழ்க்கையையே புரிந்துகொள்ள உதவும் வாழ்வியல் பார்வைகளாகவும் விளங்குகின்றன.
Theory X – சந்தேகத்தில் கட்டப்பட்ட வாழ்க்கை. பணியாளர்கள் சரியாக வேலை செய்ய மாட்டார்கள், குழந்தைகள் சரியாக படிக்க மாட்டார்கள் என நினைப்பது.தீவிர கண்காணிப்பு, சரியான கட்டளை பிறப்பித்தால் தான் செய்வார்கள் என ஆணித்தரமாக நம்புவது. இதனால் அவர்களின் சிந்தனை குறைகிறது, படைப்பாற்றல் சுருங்குகிறது, பயம் வாழ்க்கையின் அடிப்படை உணர்வாகி விடுகிறது. மேலதிகாரியின் சந்தேகத்தை உடைப்பதே பணியாளனுக்கு பெரும் வேலையாகிவிடுகிறது
“The average human being has an inherent dislike of work and will avoid it if he can.”
என்கிறார் Douglas McGregor
(மனிதனுக்கு வேலையைப் பொறுத்த அளவில், இயல்பான வெறுப்பு உண்டு; அதைத் தவிர்க்க முடிந்தால் கட்டாயம் தவிர்ப்பான்.)
என்கிறார்
Theory Y – நம்பிக்கையில் மலரும் வாழ்க்கை.முந்தைய எண்ணங்களுக்கு முற்றிலும் எதிரான பார்வையே Theory Y. மனிதன் பொறுப்புணர்வுடனும், ஆர்வத்துடனும் செயல்படக்கூடியவன் என்று நம்புவது. வேலை என்பது தண்டனை அல்ல; சரியான சூழல் கிடைத்தால் அது மகிழ்ச்சியான அனுபவமாக மாறும் என Theory Y கூறுகிறது.
“Work is as natural as play or rest, if the conditions are favorable.”
என்கிறார் Douglas McGregor
இந்த அணுகுமுறை வாழ்க்கையில் பயன்படுத்தப்படும்போது, மனிதன் சுய கட்டுப்பாட்டுடன் வளர்கிறான்.
நம்பிக்கையுடன் நடத்தப்படும் குழந்தை பொறுப்புடன் வளர்கிறது.
சுதந்திரம் கொடுக்கப்பட்ட ஊழியர் புதுமையை உருவாக்குகிறான்.
Theory Y மனிதனை ஒரு கருவியாக அல்ல; ஒரு முழுமையான மனிதனாக பார்க்கிறது.
இந்தக் கோட்பாடுகள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பயன்படுத்தலாம்: Theory X போன்று கடுமையான சுய-கட்டுப்பாட்டால் சோம்பலை வென்று இலக்குகளை அடையலாம். Theory Y மூலம் உள்ளார்ந்த உந்துதலை வளர்த்து, படைப்பாற்றலுடன் வாழ்க்கையை அமைக்கலாம், திருப்தி மற்றும் உறவுகளை மேம்படுத்தலாம்.
வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் பெரும்பாலான முரண்பாடுகள், நம்பிக்கைக்கும் சந்தேகத்துக்கும் இடையிலான போராட்டமே ஆகும்.
புத்தம் புது காலை
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment