ஒரு மான் சிங்கத்தைப் பார்த்தால் மட்டுமே பயந்து ஓடும்..
ஆபத்து நீங்கிய பின், அமைதியாகப் புல் மேயத் தொடங்கிவிடும்.
ஆம், மனிதர்களைத் தவிர மற்ற எல்லா உயிரினங்களும்
நேற்றைய பற்றிய கவலைகளையும்
நாளையைப் பற்றிய பயங்களையும் பற்றி யோசிக்காமல் நிகழ்காலத்தில் மட்டுமே வாழ்கிறது..
ஆனால் மனிதன் மட்டுமே
"நாம் ஒருநாள் இறந்துபோவோம்" என்ற உண்மையை முன்கூட்டியே உணர்ந்த ஒரே உயிரினம்..
எதிர்காலம் பற்றிய சிந்தனை வந்தவுடனே, மரண பயமும் வந்துவிட்டது. தான் சேர்த்து வைத்தது, நேசித்தது எல்லாம் ஒருநாள் தன்னை விட்டுப் போய்விடும் அல்லது தான் அவற்றை விட்டுப் போக வேண்டும் என்ற நிதர்சனம், அவனுக்குள் ஒரு மாபெரும் இருத்தலியல் வலியை உருவாக்குகிறது..இந்த வலியிலிருந்து தப்பிக்கவே அவன் மறுபிறப்பு, சொர்க்கம்,கடவுள் போன்ற தத்துவங்களைத் தேடினான்..
பசி, தாகம், பாதுகாப்பு என்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறியவுடன் மனித மூளை அமைதியாக இருப்பதில்லை.
"நான் ஏன் இங்கே இருக்கிறேன்?
என் வாழ்வின் அர்த்தம் என்ன?"
என்பதைப் போன்ற பதில் இல்லாத கேள்விகளை கேட்கத் தொடங்கியது.
பிரபஞ்சத்திற்கு எந்த நோக்கமும் இல்லை..ஆனால் மனிதனுக்கு மகிழ்ச்சியாய் இருக்கவும் அழுது புலம்பவும் ஏதோ ஒரு காரணம் தேவைப்படுகிறது.. எல்லாவற்றிலும் ஒரு நோக்கம் அல்லது 'அர்த்தம்' தேவைப்படுகிறது. இந்த முரண்பாடுதான் மனிதனின் ஆகப்பெரிய உளவியல் துயரம்..
நாம் எப்போதும் எதன் மீதோ தீராத ஆசையை வளர்த்துக் கொண்டே இருக்கிறோம்.. தொடர்ந்து ஆசைப்படுவதும், ஒன்று கிடைத்ததும் மற்றொன்றைத் தேடுவதிலும்
"இந்த உலகம் என்பது நமது சிந்தனையின் பிரதிபலிப்பே என்ற உண்மை புரியும்போது ஏமாற்றமும் சலிப்புமே எஞ்சி நிற்கிறது!
மனிதன் தன் சிந்தனைகளைப் பகிர்ந்துகொள்ள மொழியைக் கண்டுபிடித்தான்.
ஆனால், எவ்வளவுதான் வார்த்தைகளைக் கோர்த்தாலும் தனக்குள் இருக்கும் அந்த ஆழமான வெறுமையை, துயரத்தை இன்னொருவருக்கு முழுமையாகக் கடத்த முடிவதில்லை என்பதே நிதர்சனம்.. கூட்டமாக வாழ்ந்தாலும், ஒவ்வொரு மனிதனும் ஒரு தனித்தீவுதான்!
தனிமையைப் போக்கிக் கொள்ளும் முயற்சிகளில் தான் கலையும், கவிதைகளும், காதலும் பிறந்தன..
கற்பனைத் திறன் மட்டுமே அவனுக்கு சிறகுகள் கொடுத்தது.. கலைகளை கற்றுக்கொள்ள நிர்பந்தித்தது..
நிரந்தர தப்பித்தல் மரணம் என்றாலும் தற்காலிக தப்பித்தல் மகிழ்ச்சிக்கான வழி என்று உரைத்துச் சொன்னது..
ஆனால் நம் சிந்தனைகளை நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விட நிகழாத ஒன்றை யோசித்து நிகழ வாய்ப்பே இல்லாத ஒன்றை அதிகதிகமாக சிந்தித்து நம்மை நாமே நொந்து கொள்கிறோம்..
நமக்குள் மகிழ்ச்சியை விதைப்பவைகளை சிந்திப்பதும்
இந்த நொடியில் வாழ்வது மட்டுமே மகிழ்ச்சியான வாழ்விற்கு அடிப்படை!
சிந்தனை என்பது மனிதனுக்குக் கிடைத்த வரம் மட்டுமல்ல..
அது அவன் சுமக்க வேண்டிய ஒரு சிலுவையும்கூட..!
- விக்னேஷ்வரன்
No comments:
Post a Comment