Wednesday, 23 November 2022

வேலை


சம்பளம் செய்யாததை "சுதந்திரம்" செய்யும்.
இப்ப நிறைய நிறுவனங்களில் லீடர்ஷிப்புக்கு இருக்கும் பெரிய பிரச்சனை, புது பசங்க வந்து ஒரு வருஷம், ரெண்டு வருஷத்துக்குள்ள வேலையை ரிசைன் பண்ணிடறாங்க. விசுவாசம் இல்லை என கவலைப் படுகிறார்கள். அவர்கள் இந்த தலைமுறையின் மனநிலையை கவனிக்க தவறிவிட்டார்கள். 

ஒவ்வொறு 20 ஆண்டுகளுக்கும் பெரும்பான்மை பணியாளர்களின் மனநிலை மாற்றமடைந்து வருகிறது. 60களில் Loyalty முக்கியமாக இருந்தது. சேர்ந்த கம்பெனியிலேயே ரிடயர்ட் ஆகும்வரை வேலை செய்தார்கள். 80களில் standard of living முக்கியத்துவம் பெற்றது. பணியாளர்கள் தமக்கு வீடு, நகர வாழ்க்கை, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, சுகாதாரம் போன்றவற்றை விரும்பினர். இதனால் பத்து - பதினைந்து வருடங்களுக்கு ஒருமுறை  வேலையை மாற்றிக்கொண்டனர்.

 2000த்துக்குப் பிறகு freedom of choice தான் மற்ற எதையும் விட முக்கியம். 
பத்து வருடங்களுக்கு முன்பு, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் என்கார்ட்டா எனும் உலகளாவிய என்சைக்ளோபீடியாவை உருவாக்க திட்டமிட்டது. அதற்காக உலகின் பல பகுதிகளில் இருந்து, பல துறைகளைச் சார்ந்த மிகச்சிறந்த வல்லுனர்களை கட்டுரைகள் எழுத நியமித்தது. தனியாக பெரிய அணியையும் கட்டமைத்து, மிக அதிகமான செலவில் என்கார்ட்டா எனும் மின்மய என்சைக்ளோபீடியாவை ஏற்படுத்த தீவிரமாக உழைத்தது.

இன்னொறு பக்கம், ஏறக்குறைய அதே காலகட்டத்தில் கட்டுரைகளுக்கு பத்து பைசா கூட சன்மானமாக தராமல், ஆர்வமும் அறிவும் இருப்பவர்கள் உலகில் எங்கிருந்தாலும் அவர்கள் தமது ஓய்வு நேரத்தில் தமக்கு விருப்பப்பட்டதை எழுதி பங்களிக்கலாம் என்ற யோசனையுடன் வேறொரு மாடல் உருவானது. பிற்காலத்தில் அது மிகப்பெரிய தகவல் கருவூலமாக, விக்கிப்பீடியாவாக மாறியது.

 என்கார்ட்டாவை விட பல மடங்கு உயரத்துக்குச் சென்றது.
இது மிக முக்கியமான செய்தி. ஒரு செயலில் வெற்றியும், சாதனையும் நிகழ வெறும் சம்பளம், பணம் சார்ந்த இன்சென்டிவ்கள் உதவுவதில்லை. பங்கேற்பாளர்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரமும், பொது தேவை குறித்த புரிதலுமே சாதனைகளை நிகழ்த்துகின்றன. 
கூகிள் தனது பணியாளர்களுக்கு மொத்த வேலை நேரத்தில் 20% நேரத்தை அவர்கள் விரும்பும் பணியை செய்துகொள்ளலாம் என்ற சுதந்திரத்தை அளித்தது. கூகிளின் மிகப்பெரிய வெற்றி பெற்ற கண்டுபிடிப்புகளில் பெரும்பாலானவை அந்த 20% நேரத்தில் பணியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆக, 2k கிட்ஸ்சை, சம்பளத்தை வைத்து மட்டுமே இன்ஸ்பையர் செய்ய முடியாது. அவர்கள், ஒரு நிறுவனத்தில் தொடர்ச்சியாக பணி செய்ய, பங்களிப்பு செய்ய சுதந்திரத்தை எதிர்பார்க்கிறார்கள். இதனை புரிந்துகொண்ட புதிய தலைமுறை நிறுவனங்களே சாதித்து வருகின்றன.

Janakiraman Nabalur

Ginger


Ginger-ஜிஞ்சர் என்பது இஞ்சி வேர் என்னும் தமிழ்ச்சொல்லின் சிதைவேயாம்.முற்காலத்தில் நமது நாட்டிலுள்ள மலையாள தேசத்திலிருந்து இஞ்சி வேர் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏராளமாக ஏற்றுமதி செய்யப்பட்டது.

-மயிலை சீனி.வேங்கடசாமி

மு.கதிரேசன்


பத்துரூபாய்க் கீரைவிற்கக் 
கத்தும்குரல் காததூரம் கேட்கிறது. 
வாடாதிருக்க வேண்டும் 
விற்றுத் தீரும்வரை. 

- மு.கதிரேசன்

Tuesday, 22 November 2022

Knowledge isn't free. You have to pay attention.

பெரும்பாலும் கிணறுகள் வட்ட வடிவில் அமைந்திருப்பது ஏன்?



கிணறு என்பது மழைநீரை சேகரிப்பதற்கும், நிலத்தடி நீரை நாம் எடுத்து பயன்படுத்துவதற்கும் வசதியாக நிலத்தில் தோண்டப்படும் ஒருவகை குழி ஆகும்.

கிணறுகள் எங்கு இருந்தாலும் அதிகபட்சமாக வட்ட வடிவிலே அமைக்கப்பட்டிருக்கும், அதற்கு காரணங்கள் இருக்கின்றன.

வட்டமாக கிணறு அமைப்பதற்கான காரணம்

வட்டம் என்பது இரண்டு அரை வட்ட ஆர்ச்சுக்கள் ஒன்று சேர்வதால் உருவாகின்றது.

பொதுவாக ஆர்ச் வடிவ வளைவுக்கு அதிகளவில் எடை தாங்கும் திறன் உண்டு.

அதனால் தான் அந்த காலத்தில் கட்டிடங்கள், மண்டபங்கள், பாலங்கள் போன்றவைகள் அனைத்து இடங்களிலும் ஆர்ச் வடிவ வளைவுகளுடன் அமைக்கப்பட்டிருக்கும்.

கிணறுகள் தோண்டியவுடன், அவற்றின் நான்கு பக்கத்திலும் கிணற்றின் வடிவம் கலையாமல் இருக்க செய்வது கிணற்றை சுற்றிலும் வட்டவடிவில் உள்ள மண் மற்றும் கல்லின் எடைகள்.

கிணற்றை வட்டவடிவில் அமைக்கும்போது மட்டுமே அதன் எடை தாங்கும் திறன் அதிகரிக்கிறது, எனவே தான் கிணறு வட்டமாக அமைக்கப்படுகிறது…

போகன்


யானையிடம் அடிக்கடி
அது ஒரு யானை என்று
நினைவுபடுத்த வேண்டியிருக்கும்
பூனையிடம் அந்தப் 
பிரச்சனை இல்லை. 
அது தன்னைத் தானே
யானை என்று 
நினைத்துக்கொள்ளும்.

-போகன்

கால்குலேட்டரில் MC, MR, மற்றும் M+ என்பதன் அர்த்தம் என்ன?




MC….. MEMORY CLEAR

கால்குலேட்டரின் நினைவகத்தில் இருப்பனவற்றை மீண்டும் உபயோகிக்க திரைக்கு கொண்டுவருதல்

MR …..MEMORY RECALL

கால்குலேட்டரின் நினைவகத்தில் இருப்பனவற்றுடன் மேலும் புதிதாக சில எண்களை அல்லது விடைகளை கூட்டுவதை செய்தல்

M + ……MEMORY PLUS
உதாரணத்துக்கு

2*2=4

M +

3*3=9

M +

4*4=16

+
M R

=
என்றால் முதலில் வந்த விடை நான்குடன் ,அடுத்து வந்த விடை 9 கூட்டப்பட்டு,இறுதியாக வந்த விடையுடன் மேலும் மெமரியில் இருந்து கொண்டு வந்து சேர்க்கப்பட்டு 29 என்று திரையில் காண்பிக்கும் .

#info

தாவோ தே சிங்


‘இது போதும்’ என்ற மனநிலையில் இருப்பதுதான் மனநிறைவோடு இருப்பதற்கான வழி என்பதை ஒருமுறை அறிந்துவிட்டவன் எப்போதும் அப்படியே இருப்பான்.” 

- தாவோ தே சிங்

Monday, 21 November 2022

மாயா ஏஞ்சலோ


நீங்கள் சொன்ன சொற்களை குழந்தைகள் மறந்துவிடுவார்கள்; நீங்கள் செய்த செயல்களையும் மறந்துவிடுவார்கள்; ஆனால், நீங்கள் அவர்களை எவ்வாறு உணரச்செய்தீர்கள் என்பதை அவர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள். 
   - மாயா ஏஞ்சலோ

உண்மைக்கும் பொய்க்கும் உள்ள வேறுபாடு என்ன?



 எத்தனை தடவை சொன்னாலும் ஒரே மாதிரி இருந்தால் அது உண்மை. ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு மாதிரி இருந்தால் அது பொய்.

Sunday, 20 November 2022

ஜானகிராமன்


உப்பாக இருப்போம்.

உணவுப் பொருட்களில் உப்பு தனித்துவமானது. ஒரு உணவில் உப்பு சேர்க்கப்பட்டிருந்தால் அந்த உணவு சுவைக்கும், ஆனால் யாரும் அந்த உணவின் சுவைக்காக உப்பை பாராட்டுவதில்லை. உணவில் உப்பு சேர்க்கப்பட வில்லை என்றால் உணவு தின்பதற்கே தகுதியற்றதாகி விடுகிறது. உப்பில்லாப் பண்டம் குப்பையிலே. உப்பின் அளவு குறைவாகவோ, அல்லது உப்பில்லாமலோ சமைக்கப்படும் போது தான் உப்பின் தேவை உடனடியாக உணரப்படுகிறது. 

அதே போல பணிச்சூழலிலும் நட்பு வட்டத்திலும் நமது இருப்பும் பங்களிப்பும் உப்பைப் போல பிறர் அறியாமலும் நாம் இல்லாதிருந்தால் நமது தேவை மிக முக்கியமாக வெளிப்படுவது போலவும் கரைந்திருக்க வேண்டும்.

உப்பு மிகுதியாக சேர்க்கப்பட்டாலும் உணவில் சுவை கெட்டுப்போவது போல, நமது பங்களிப்பு தேவைக்கும் அதிகமாக இருக்கும் போது அந்தச் செயலில் போலித்தனமும் நமது ஈகோவும் வெளிப்படுகிறது. அதையும் தவிர்ப்போம்.

இந்த பூமியின் உப்பாக இருப்பவர்களே, இந்த உலகத்தின் ஒளியாக இருக்கிறார்கள். 

இனிய நற்காலை 🌸

பட்டாபிராமன்


Sardar Patel and his idea of India
The Man who saved India  என்ற புத்தகம் ஹிந்தோல் சென்குப்தா எழுதியது. அதில் இடம் பெறும் சில சுவாரஸ்யமான அளவைத் தகவல்கள்

கல்கத்தா பள்ளி ஒன்றில் கணக்கு வாத்தியார் மாணவர்களிடம் தலைவர்களின் உயரத்தைச் சொல்கிறார். காந்தி 5 அடி 3 அங்குலம், சுபாஷ் 5’5, படேல் 5’5, நேரு 5’8.  எனவே வரலாறு உயரமானவர்களுக்கானது என்கிறார். அவர் ஜின்னாவைச் சொல்லி அவரும் 5’8 அவருக்கும் நாடு கிடைத்தது என்கிறார். அந்த ஆசிரியர் 10ஆம் வகுப்புமாணவர் சராசரி உயரத்தில் இருந்த உயரமற்ற மனிதராம்.

சுனில் கில்நானியின்  Theidea of India வில் படேல் பெயர் 8 இடங்களிலும், காந்தி பெயர் 29 இடங்களிலும், நேருவின் பெயர் 65இடங்களிலும் வருகிறதாம்.
ராமச்சந்திர குஹா எழுதிய India After  Gandhiல்படேல் 48 இடங்களிலும், காந்தி 120இடங்களிலும்  நேரு 185 இடங்களிலும் வருகிறதாம்.

படேலின் மகள் மனிபென் படேல் அவரிடம் சொன்னதாக குறிப்பிடுகிறார். என்னால் வரலாற்றை எழுதும் வேலையை செய்து நேரவிரயம் செய்யமுடியாது.முடிந்த அளவு வரலாற்றை உருவாக்கிவிட்டு போக விழைகிறேன்.
காந்தி நேரு படேல் ஆகியமூவரையும் மும்மூர்த்திகள் என சென்குப்தா சொல்கிறார். வேறுபாடுகளைத்தாண்டி அவர்களிடம் affection brotherhood  அதிகமாகவே இருந்தது என எழுதுகிறார்.

படேல் காந்தி- நேருவைவிட  ambition குறைந்தவராக இருந்தார் எனவும் சென்குப்தா சொல்கிறார். ஆசாத் புத்தகத்தில் மாறுபட்ட தகவல் நமக்கு கிடைக்கும். காங்கிரஸ் ஸ்தாபனத்தை- அதற்கு பொறுப்பிற்கு வருபவர் குறித்த கட்டுப்பாட்டை தன் கையில் வைத்திருந்தார் என்பதை எப்படி பார்ப்பது எனத் தெரியவில்லை. கிருபளானி புத்தகம் ஆசாத் தகவலுக்கு மறுப்பாக படேலின் பக்கம் நிற்கும்.

சென்குப்தா சொல்வது வேறு ஒன்றில் சரி. அதாவது காந்தி- நேரு போல ஏராள எழுத்து வால்யூம்களை- அவர் தரப்பு குறித்து நின்று பேசுவதற்கான வகையில்- படேல் விட்டுச்செல்லவில்லை. சென்குப்தா இதை If history is writings by the victors, Patel clearly was on the vanquised side  எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே தான் படேல் குறித்த எழுத்துக்கள் மிகவும் குறைவாக இருக்கின்றன.

 மனிபென் தன் தந்தையை குறித்து இப்படி ஒரு சித்திரம் தருகிறார்
Sardar was a man of few words. He wrote very little; he hardly kept any record of his public or party work. He destroyed letters addressed to him after reading them and replied by hand, not keeping copies.
இது முழுமையான சித்திரமா தெரியவில்லை. நம்மிடம் நேரு- படேல் கடித தொகுப்புகள் கிடைக்கின்றன. சில படேல் - காந்தி கடிதங்களும் கிடைக்கின்றன. மனிபென் பொதுவான அவர் சுபாவத்தை பதிவு செய்திருக்கலாம்.

-பட்டாபிராமன்

கார்ல்மார்க்ஸ்


"விஞ்ஞானத்தில் ராஜபாட்டை என்பது கிடையாது.அதன் செங்குத்தான பாதையில் களைப்போடு ஏறிச் செல்வதற்குத் தயங்காதவர்களுக்கு மட்டுமே அதன் பிரகாசமான சிகரங்களை எட்டுகின்ற சந்தர்ப்பம் கிடைக்கும்"

-கார்ல்மார்க்ஸ்

Saturday, 19 November 2022

வைகறை


சாவிலிருந்து

ஒரு தூக்குக் கயிறென
தேங்காய்ச் சில்லு தொங்கிக் கொண்டிருக்கும்
மரணத்தின் கூண்டிற்குள்
இரவெல்லாம் அல்லாடிக் கொண்டிருந்த
எலியொன்று
இப்போது திறந்து விடப்படுகிறது
ஒரு கயிற்று சாக்கிற்குள்.
உயிரைக் கையில் பிடித்தபடி
ஓடுகிறது எலி
சாவிலிருந்து
சாவுக்குள் !

– வைகறை

துணுக்கு


ஒரு பைத்தியகார மருத்துவமனையில் புதிதாய் ஒரு மருத்துவர் பதிவியேற்றார்.
விடுதி முழுக்க பைத்தியங்கள் மிகவும் கொண்டாடினர். இத்தனை மகிழ்ச்சியாய் இருந்ததே இல்லை.ஏன் என டாக்டர் வினவினார்..

"நீங்கள் எங்களைப் போலவே இருக்கிறீர்கள்.முன்பிருந்தவர் அப்படியில்லை'என்றனர்.

பலரும் உன்னை பாராட்டும் போது இதை நினைவில் வைத்துக்கொள்.உன்னிடம் ஏதோ ஒரு வகையில் தாழ்வானது இருக்க வேண்டும்.

Friday, 18 November 2022

ரூமி


இருப்பவர்களை அரவணைத்துக்கொள். 
கிடைப்பதை பகிர்ந்துகொள். 
நல்லதை எடுத்துக்கொள். 

நல்லவர்களை மட்டுமே தேடாதே...
இறந்த பிறகுதான் வருவார்கள் 
நாலு பேர் 
அதுவும் உன்னை புதைப்பதற்கு...!!!

 பாத்திமா மவுனா ரூமி ~

சுவாங் ட்ஸூ


“உண்மையான மனிதன் தன் கண்கள் பார்க்கின்றவற்றைப் பார்க்கிறான். இல்லாத ஒன்றை அவன் பார்ப்பதில்லை. தன்னுடைய காதுகள் செவிமடுக்கும் விஷயங்களை அவன் கேட்கிறான். கற்பனையான குரல்கள் எதையும் அவன் கேட்பதில்லை. மறைவான அர்த்தங்களை அவன் தேடுவதில்லை.” 

-சுவாங் ட்ஸூ

Thursday, 17 November 2022

பெட்ரண்ட் ரசல்


Education is not the imparting of a settled body of knowledge; but the inculcation of a spirit of enquiry"

மனிதனைத் தேடவைப்பது தான் கல்வி. தேடிக்கொண்டே இருப்பது கல்வி. தேடல்தான் கல்வி

-பெட்ரண்ட் ரசல்

ஓஷோ


நண்பன் என்பவன்
குறைந்த அளவு பகைமை கொண்டவன்.
பகைவன் என்பவன் 
குறைந்த அளவு நட்பு கொண்டவன்.

~ ஓஷோ ~

Wednesday, 16 November 2022

பெருந்தேவி


அறியாமையின் பெருவெளி
சிறகடிக்கத் தூண்டியது.
அவநம்பிக்கையின் ஒரு கல்
பறத்தலை ஊர்தலாக்கியது

-பெருந்தேவி

கோடார்டின்


கோடார்டின் 'பியராட் லே ஃபெள' படத்தில் வரும் வசனம்: "இதுதான் என்னை மிகவும் சோகமாக்குகிறது... வாழ்க்கை என்பது, புத்தகங்களில் வருவதைப்போல் இல்லை."

புத்தகம் வாழ்க்கையாகும் சாத்தியங்கள் உண்டோ இல்லையோ, வாழ்க்கை புத்தகம் ஆகும் சாத்தியங்கள் உண்டு.

இங்கிலாந்தைச் சேர்ந்த பெஞ்சமின் மீ-யின் வாழ்க்கை புத்தகமாகியிருக்கிறது. காரணம் அவர் தன் வாழ்க்கையில் எடுத்த ஒரு முடிவு. அந்த முடிவை எடுக்க அவர் எடுத்துக் கொண்ட நேரம் வெறும் 20 நொடிகள்.

காதல் மனைவி இறந்து விட்டாள். மகன் டைலனும் மகள் ரோசியும் இந்த துக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். அதனால், தான் இப்போது குடியிருக்கிற வீட்டை அவசரமாக மாற்றியாக வேண்டிய நிலைமை மீக்கு. இடத்தை மாற்றினால் எல்லாம் சரியாகி விடுமென டேவான் பகுதியில் ஒரு வீடு பார்க்க, குழந்தைகளுக்கும் அது பிடித்து விடுகிறது.

இந்த இடத்தில் ஒரு சிக்கல்... அந்த வீட்டை தனியாக வாங்க முடியாது. அதன் பின்பகுதியில் இருநூறு வகை மிருகங்கள், பத்து பணியாட்கள் கொண்ட ஒரு மிருகக்காட்சி சாலையையும் அதனுடன் சேர்த்தே வாங்கியாக வேண்டும். 20 நொடிகள் யோசித்தபின் மீ அந்த வீட்டை வாங்கி விடுகிறார்.

மிருகக் காட்சிசாலையை சீரமைத்து பொதுமக்கள் பார்வைக்கு அதை திறந்து வைக்க வேண்டிய கட்டாயம் மீக்கு. வாழ்க்கை இப்போது போர்க்களம் ஆகிறது. கையிலிருக்கிற கடைசிப் பைசாவும் கரைந்து போகிறது. சான்றிதழ் தர வேண்டிய அதிகாரிகளோ மிருகக்காட்சி சாலையில் அங்கே குறை இங்கே குறை என்று ஒரு பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள்.

இச்சமயம் மீக்கு மனைவியின் வங்கிச் சேமிப்பான பெரிய தொகை கைக்கு வந்து சேர்கிறது. "அந்த பணத்தை வைத்து புத்திசாலித்தனமாக பிழைத்துக் கொள். மிருகக்காட்சிசாலை தொடங்கும் எண்ணத்தைத் தூக்கி ஏறி" என்கின்றனர் நண்பர்கள். ஆனால் மீ அதை பொருட்படுத்தவில்லை. அத்தனை பணத்தையும், நிறைய உழைப்பையும் கொட்டி கடைசியில் மிருகக்காட்சிசாலையை திறந்தே விடுகிறார்.

மீ தன் மனைவியை முதன்முதலில் சந்தித்தது ஒரு ஹோட்டலில். அவளைப் பார்த்ததுமே பிடித்துவிடுகிறது. உடனே அவளிடம் தன் காதலைச் சொல்ல மீக்கு வேண்டி இருந்தது அந்த இருபது நொடிகளே.

நம் வாழ்க்கையை மாற்றவும் புத்தகமாக்கவும் அந்த 20 நொடி தைரியம் போதும்தான். அதுவும் பிரியமானவளிடம் நம் காதலைச் சொல்ல பத்து நொடிகளே கூட போதும். ஆனால் வீட்டுடன் மிருகக்காட்சிசாலையை வாங்கிய மீயின் அந்த தைரியம் நமக்கு வருமா? சந்தேகம்தான். ஏனென்றால் நாம் புத்திசாலிகள்... நமக்கெல்லாம் புத்தகம் வாசித்தால் மட்டும் போதும்.

பெஞ்சமின் மீ என்கிற எழுத்தாளரின் வாழ்க்கை 'WE BOUGHT A ZOO' என்ற நாவலாகியது. 2008ல் கெமரூன் கிராவ் என்கிற அமெரிக்க இயக்குனர் இதை சினிமாவாகவும் எடுத்திருக்கிறார்.

R.O water வந்த கதை




R.O என்றால் ரிவர்ஸ் ஆஸ்மாசிஸ். அதாவது தண்ணீரின் உப்பு தன்மையை நீக்கும் தொழில்நுட்பம். பெரிய தொழிற்சாலைகள் பலவற்றிலும் பிரம்மாண்ட இயந்திரங்கள் இருக்கும். அவர்களின் பயன்பாட்டுக்கு போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்படும். 

அந்தத் தண்ணீரின் உப்புத்தன்மை காரணமாக இயந்திரங்கள் பழுதாக வாய்ப்பு இருக்கிறது. அந்த உப்புத்தன்மையை நீக்க கண்டுபிடிக்கப்பட்டதே ஆர்.ஓ தொழில்நுட்பம். மக்கள் அருந்துவதற்காக உருவானது அல்ல.TDS 50-100 வரை இருப்பது ஆற்று நீருக்கு இணையானது.அப்பொது குடிக்கலாம்.

- டாக்டர் அருண்குமார் கட்டுரையிலிருந்து

அதிரூபன்


நாம் இருக்க வேண்டிய இடத்தில் வேறொரு நபர் இருப்பது சாதாரணம்.

நாம் இருந்த இடத்தில் இன்னொரு நபர் இருப்பது தான் பெரும் ரணம்.

-அதிரூபன்

Tuesday, 15 November 2022

ஜிப்ரான்


ஒரு நாள் என்னிடம் "உன்னுடைய வாழ்க்கையா அல்லது என் வாழ்க்கையா? '' எது முக்கியமானது என்று நீ கேட்கலாம்.
நான் “என் வாழ்க்கைதான் முக்கியம்”என்பேன். அப்போது 'நீ' தான் என் வாழ்க்கை என்பதை அறியாமல் என்னைவிட்டு விலகிச் சென்றுகொண்டிருப்பாய். 

- ஜிப்ரான்

Old is gold-13*மணி



தீவின் தண்ணீர் கரு நீல நிறம் கொண்டதாக இருப்பதால் அது கருந்தண்ணீர் (காலாபாணி )என்று அழைக்கப்படலயிற்று

#அந்தமான் தீவுச்சிறை
-என் ராமகிருஷ்ணன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து கருவூலம் என் ராமகிருஷ்ணன் அவர்கள் என் சங்கரய்யாவின் தம்பியாக இருந்த போதிலும்.. தான் கற்ற வரலாற்றை அனுபவங்களை, கட்சிகளின் வரலாற்றை, போராட்டத்தை எல்லாவற்றையும் ஆவணப்படுத்தியவர் தோழர் என். ஆர் ஆவார். பொதுவுடமை இயக்க வரலாற்றை அறிய நினைக்கும் ஒருவர் இவரின் பங்களிப்பை படிக்காமல் அதனை தெரிந்து கொள்ள முடியாது.

அந்தமான் சிறையை முதன் முதலில் தெரிந்து கொண்டது சிறைச்சாலை படத்தில் தான். அதற்கு முன்பு இந்திய வரைபடங்களில் பார்த்திருந்தாலும் அந்தமான் என்பதை கண்கூடாக பார்க்க வைத்தது அத்திரைப்படம் தான். இந்த புத்தகத்தை வாசித்த போது தான் அந்தமான் சிறையில் இன்னொரு முகம் நமக்குத் தெரிகிறது.78 பக்கங்களை நிரம்பிய இப்புத்தகம் ஒவ்வொரு பக்கங்களிலும் அறியாத பல வரலாற்றுச் செய்திகளை 13 கட்டுரைகளில் விவரிக்கிறது

1857 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு பின் தனிமை சிறையில் அடைத்து புரட்சியாளர்களை ஒடுக்க நினைத்தது ஆங்கில அரசாங்கம். இந்தியாவில் இருந்து 1440 கிலோமீட்டர் தூரத்துக்கு அப்பால் உள்ளது அந்தமான் தீவு.1796 இல் அங்கு மலேரியா விஷக்காய்ச்சல் ஏற்பட்டதால் அங்கிருந்து கப்பல் தளத்தை மூடியது. 1858 ஆம் ஆண்டு பஞ்சாபில் ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாக 200 வீரர்கள் முதன் முதலாக அந்தமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நூற்றுக்கணக்கானோர் நோய்வாய்ப்பட்டு இறந்தனர். அங்கு இருக்கும் இரு ஆபத்துகள் விஷப்பூச்சிகள் மற்றொன்று பழங்குடியினர்கள். காட்டில் தப்பித்துச் சென்றாள் பழங்குடியினர் கொன்று விடுவார்கள் நேரில் தப்பித்துச் சென்றால் ஆங்கிலேயர்கள் கண்டுபிடித்துக் கொன்று விடுவார்கள் அல்லது நீரில் மூழ்கி இறப்பார்கள் சிறைக்குச் சென்று மீண்டு வந்தவர்கள் அப்போது மிகவும் கொஞ்சம் பேர் தான்.

#எவ்வாறு கொண்டு செல்வார்கள்?

10 அல்லது 12 பேர்களை சேர்த்து சங்கிலிகள் இட்டு கப்பலில் இன்ஜினுக்கு அடுத்த இடம் தான் சிறை கூடமாக கருதப்படும். இங்கே கை விலங்குகளை எடுத்து விடுவார்கள். ஒவ்வொரு வினாடியும் இஞ்சினிலிருந்து வரும் உஷ்ணக்காற்று உடலை வாட்டும். இவ்வாறு நான்கு நாட்கள் கடலில் பிரயாணம் செய்து பின் அந்தமான் தீவை அடையலாம்.

சமூக அந்தஸ்து அடிப்படையில் டிவிஷன் இரண்டு மூன்று என்று பிரித்தனர். இரண்டாம் டிவிஷனை சேர்ந்தவர்களுக்கு அரிக்கேன் விளக்கு கட்டில் தலையணை தண்ணீர் இருக்கும். மூன்றாம் டிவிஷன் கைதிகளுக்கு எதுவும் இல்லை .நாயினும் கீழாக நடத்தப்படுவார்கள். நார் உரிப்பது செக்கு வேலை செய்ய வேண்டும். ஏதேனும் வேலை செய்யவில்லை என்றால் நாள் முழுவதும் நின்று கொண்டே இருக்கும் படியான இரும்பு சட்டங்கள் பூட்டப்பட்டு கசையடி கொடுக்கப்படும்.

#உண்ணாவிரதம்

1933 ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் தேதி காலை அடிப்படை வசதிகள் கேட்டு உண்ணாவிரதம் நடத்தப்பட்டது. இதில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மகாவீர் சிங் என்ற பகத்சிங்கின் தோழர் உயிரிழந்தார். இவ்வாறு மூன்று உயிர்கள் பறிபோன பின் 46 நாட்கள் உண்ணாவிரதத்திற்கு பிறகு அரசாங்கம் பணிந்தது. பல்வேறு சலுகைகள் வழங்கியது. புத்தகங்கள் படித்தல் விவாதித்தல் மாலையில் விளையாட்டு என்று நாட்கள் செல்ல 
ஆரம்பித்தது.

*1896-97 ஆம் ஆண்டில் தான் 400 அறைகள் கட்டி முடிக்கப்பட்டன. 1910 ஆம் ஆண்டில் 663 அறைகள் தயாராகின.

*1919- 20 ஆம் ஆண்டுகளில் ஆங்கில அரசாங்கம் இந்திய சிறைச்சாலை குழு ஒன்றை நியமித்து அந்த குழுவின் சிபாரிசின் அடிப்படையில் தண்டனை குடியிருப்புகளை(penal settlement) கைவிடுவது என்றும், அந்தமான் சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளை இந்திய சிறைச்சாலைக்கு மாற்றுவது என்றும் ஆங்கில அரசாங்கம் முடிவு செய்தது. அதன்படி அச்சிறைச்சாலை 1921 இல் மூடப்பட்டது .குடியிருப்பு என்பது இங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அங்கேயே தங்க வைக்கப்படுவார்கள். தீவினை சீர் செய்வது, ஆங்கிலேயருக்கு உதவுவது என வாழ்நாள் முழுவதும் அங்கேயே தங்க வைக்க வேண்டும்.

அன்றைய நாட்களில் அகிம்சாவாதியாக சிறைக்குச் செல்பவர்கள் திரும்பி வரும்போது கம்யூனிஸ்ட் ஆக திரும்பி வருவார்கள். சிறைக்குள் நடக்கும் மார்க்சிய வகுப்புகள் இடதுசாரி சிந்தனை போதிக்கும் ஆசான்கள் பலரால் ஒவ்வொருவரும் புரட்சியாளராகவும் இந்திய தேசத்தின் விடுதலைக்கு பாடுபடுவதாகவும் திரும்பி வந்தனர். அவ்வாறு டாக்டர் நாராயண் ராய் பல்வேறு நபர்களை கம்யூனிஸ்ட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.

அந்தமான் குடியிருப்புகளை மூடியதைப் போன்று அந்தமான் சிறைகளையும் மூட வேண்டும் என்று உண்ணாவிரத போராட்டம் துவங்கியது. 1937 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கடைசி வாரத்தில் 183 அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தனர். பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து இறுதியாக 1938 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் நாள் மாலை நேரத்தில் அந்தமான் தீவில் இருந்து இந்தியாவின் நோக்கி நகர ஆரம்பித்தது அரசியல் கைதிகள் கண்களில் அப்போதுதான் சுதந்திரம் தென்பட்டது.

புத்தகத்தை வாசித்து முடித்த பின் நாமும் இந்தியாவை தன் கண்களால் பார்த்தவாறு உணர்வுகளால் ஒவ்வொரு சொற்களையும் வெளிப்படுத்தி இருந்தார் .இந்த புத்தகத்தில் தோழர் என் ராமகிருஷ்ணன்

தொடர்ந்து வாசிப்போம் தோழமையுடன் மணிகண்ட பிரபு

சுதா ஆறுமுகம்


மற்றவர்களின் மதிப்பீடுகளுக்கு பொருந்திப் போவதற்காக அடையாளங்களை மாற்றிக் கொண்டிருக்க முடியாது!

-சுதா ஆறுமுகம்

மகுடேசுவரன்


ஒன்றுக்கு ஒரு ஓர். 
இரண்டுக்கு இரு, ஈர். 
மூன்றுக்கு என்ன ? 
OO

1 – ஒன்று

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஒரு வரும்.

ஒரு புத்தகம், ஒரு வண்டி, ஒரு கட்டடம்

உயிரெழுத்தில் தொடங்கும் சொல்லுக்கு முன்னால் ஓர் வரும். ஒன்று என்ற சொல்தான் இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒரு, ஓர் என்றாகிறது.

ஓர் எழுத்து, ஓர் அணில், ஓர் அருவி

2- இரண்டு

இதனை அப்படியே இரண்டு என்ற எண்ணிற்கும் பொருத்தி எடுத்துக்கொள்ளலாம். 

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன்னம் இரு வரும். 

இரு படங்கள், இரு மலர்கள், இரு பெண்டிர்

உயிரெழுத்தில் தொடங்கும் சொற்களின் முன் ஈர் என்றுதான் வரும்.

ஈராயிரம், ஈருருளி, ஈருயிர்.

ஒரு ஓர், இரு ஈர் ஆகியன நம் அனைவர்க்கும் தெரியும். மூன்று என்னாகிறது என்று பார்ப்போம். 

3 – மூன்று

மூன்று என்பதனை அடுத்து உயிர்மெய்யெழுத்து வந்தால் மூ என்ற எழுத்து மட்டுமே குறிலாய் மு என எஞ்சி நிற்கும். இரண்டாம் சொல்லுக்கேற்ப ஒற்று மிகும்.

முத்தமிழ், முக்கடல், முப்பால், முச்சந்தி, மும்மலர், முவ்வழி

இரண்டாம் சொல் உயிரெழுத்தில் தொடங்கினால் மூ என்ற நெடிலாகவே நிற்கும். ஒரு ஓர் போல மு, மூ என்றே மூன்றுக்கு அமைகின்றன.

மூவாறு, மூவேழு, மூவிரண்டு, மூவுலகம்

இவ்விடத்தில் முவ்வாறு, முவ்வேழு, முவ்விரண்டு, முவ்வைந்து, முவ்வுயிர் என்றாலும் பிழையில்லை.

4 – நான்கு :

நான்கிற்கு என்ன ஆகும் ? நான்கு நால் என்று ஆகும். 

நாலடி, நாலிலை.

உயிர்மெய்யெழுத்தில் தொடங்கும் சொல்லின் முன்னும் நால் என்றே அமைந்து வரும் எழுத்திற்கேற்பச் சேரும்.

நாற்கரம், நாற்சந்தி, நாற்புரம், நால்வகை (நான்வகை), நால்மணி (நான்மணி)
 
நான்கினைக் குறிக்க அச்சொல்லைத் தனியே பிரித்து எழுதும் போக்கும் மிகுதியாக இருக்கிறது – நான்கு உயிர்கள், நான்கு கோவில்கள், நான்கு வழிகள். 

- கவிஞர் மகுடேசுவரன் 
(இன்றைய தினமலரில் வெளிவந்தது.)

தலைப்பிலுள்ள கேள்விக்கு விடை :

ஒன்றுக்கு ஒரு ஓர். 
இரண்டுக்கு இரு ஈர். 
மூன்றுக்கு மு, மூ.

Monday, 14 November 2022

ஜென்குரு


“சிறு பொய்களால் மட்டுமே மனைவியைச் சமாளிக்க முடிவது உறுத்தலாக உள்ளது குருவே என்றான் சீடன். 

மனைவிகள் எதிர்பார்ப்பது உண்மைகளையல்ல; பொருத்தமான பதில்களை மட்டுமே என்றார் ஜென்குரு.

பிர்சா முண்டா




உழுபவனுக்கே நிலம் சொந்தமென உரிமைகுரல் எழுப்பிய பழங்குடியினப் போராளி.வில் அம்புகளை பயன்படுத்தியே எதிரிகளை வீழ்த்தி..25வயதில் இறந்தார். 1908ம் ஆண்டு வந்த சட்டத்தின் படி ஆதிவாசிகளின் நிலத்தை யாரும் பயன்படுத்த முடியாத சட்டம் வந்தது.

*நாடாளுமன்ற அருங்காட்சியகத்தில் 
பழங்குடியினத்தை சேர்ந்த இவருக்கு மட்டுமே சிலை வைத்துள்ளனர்.ராஞ்சி விமான நிலையத்துக்கு இவர் பெயர் சூட்டியுள்ளனர்.மலை வாசிகளின் தந்தை என்று இன்றளவும் போற்றப்படுகிறார்

info


முதலையின் கடிக்கும் திறன்
psi.(pounds per square inch )என்ற அளவீடு மூலம்,  அளவிடப்படுகின்றது. இதன் கடிக்கும் திறன் 3,700 psi. ( மனிதர்களின் கடிக்கும் சக்தி 150 முதல் 200 PSI அளவில் இருக்கும். சிங்கம் அல்லது புலியின் கடிக்கும் சக்தி சுமார் 1,000 PSI அளவில் இருக்கும்.)

#info