Saturday, 31 October 2026

zebra crossing


ஜீப்ரா கிராசிங். 🦓🦓🦓
ஒரு 75 வருட வரலாறு.!

Zebra Crossing அறிமுகப்படுத்தப்பட்டு இன்றுடன் (2026 அக்டோபர் 31) சரியாக 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன. என்பதால், அது எப்படி எப்போது எங்கே இருந்து ஆரம்பித்தது என்ற வரலாறை இப்போது ஒருமுறை பார்த்துவிடலாம்.

1930 மற்றும் 1940-களில் மோட்டார் வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக உயரத் துவங்கிய காலத்தில் சாலையில் பாதசாரிகள் விபத்துக்குள்ளாவது உலகளவில் ஒரு பெரிய பிரச்சனையாக மாறத் துவங்கியது. ஆரம்பத்தில் இதைத் தவிர்க்க இங்கிலாந்து சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடங்களைக் குறிக்க Metal Studs எனும் உலோகக் குமிழ்கள் மற்றும் Belisha Beacons சாலையோர மஞ்சள் நிற விளக்குக் கம்பங்களை பயன்படுத்திப் பார்த்தார்கள் ஆனால், இங்கிலாந்தின் அடர்ந்த பனிமூட்டத்தின்போதும், இரவு நேரங்களிலும் ஓட்டுநர்களுக்கு இவை சரியாகத் தெரியாமல் போகவே விபத்துகள் கொஞ்சமும் குறையவில்லை.

இதனால் பாதசாரிகளைக் காக்க தீவிர ஆராய்ச்சியில் இறங்கிய இங்கிலாந்தின் Road Research Laboratory (RRL) நிறுவனம்.. ஓட்டுநர்கள் எந்த வானிலையிலும், எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய வண்ணம் எது என்பதைக் கண்டறிய பல வண்ணக் கலவைகளை வைத்து சோதிக்க ஆரம்பித்தனர். நீலம் - மஞ்சள், சிவப்பு - வெள்ளை, கருப்பு - வெள்ளை என பல கலவைகளை பல இடங்களில் பல கட்டங்களில் ஆராய்ந்த பிறகு, தார்ச் சாலையின் கருப்பு நிறமும், அதன் மேல் வரையப்படும் வெள்ளை நிறக் கோடுகளும் மட்டுமே மனிதக் கண்களுக்கு மிகத் தொலைவிலிருந்தே துல்லியமாகத் தெரிவதை அறிவியல் பூர்வமாக கண்டறிந்தார்கள். பிறகு அதை செயல்படுத்திப் பார்க்க 1949-ல் இங்கிலாந்து முழுவதும் சுமார் 1,000 இடங்களில் இதை தற்காலிகமாக வரைந்து சோதித்துப் பார்க்கவும் செய்தார்கள்.

பிற்பாடு இங்கிலாந்தின் பிரதமராக இருந்த, அன்றைய போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜேம்ஸ் கால்லகன் (James Callaghan) இந்த புதிய கருப்பு-வெள்ளைக் கோடுகள் கொண்ட சோதனைச் சாலையைப் பார்வையிட வந்தபோது, அந்த வடிவமைப்பைப் பார்த்த மாத்திரத்திலேயே, "இது பார்க்க வரிக்குதிரை (Zebra) போல இருக்கிறதே!" என்று எதேச்சையாக கூறினார். அன்று அவர் சொன்ன அந்த ஒற்றை வார்த்தைதான் இன்று உலகம் முழுவதும் Zebra Crossing என்று அதன் அதிகாரப்பூர்வ பெயராக நிலைத்துவிட்டது.

முறையான சோதனைகளுக்குப் பிறகு, 1951 அக்டோபர் 31 அன்று ( இதே தேதியில்) லண்டன் Slough நகரின் High Street பகுதியில், உலகின் முதல் நிரந்தர Zebra Crossing  சட்டப்பூர்வமாகத் திறக்கப்பட்டு, அந்த இடத்தில் ஓட்டுநர்கள் பாதசாரிகளுக்குக் கண்டிப்பாக வழிவிட வேண்டும் என்ற சட்டமும் இயற்றப்பட்டது.

இந்தக் கோடுகள் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் வருடத்திலேயே இங்கிலாந்தில் பாதசாரிகளின் விபத்து மரணங்கள் 11% வரை குறைந்தன. இந்த பிரம்மாண்ட வெற்றி, எல்லா உலக நாடுகளையும் இந்த எளிய முறையைப் பின்பற்ற வைத்தது. என்றாலும், துரதிர்ஷ்டவசமாக முதன்முதலில் வரையப்பட்ட அந்த Slough நகரச் சாலை, பின்னாட்களில் பாதசாரிகள் மட்டுமே நடக்கும் பகுதியாக மாற்றப்பட்டதால், அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் 'ஜீப்ரா கிராசிங்' தற்போது அங்கு இல்லை என்கிறார்கள்.

இங்கிலாந்தில் இது பிறந்தாலும் இந்த ஜீப்ரா கிராசிங்கை உலகப் புகழ்பெற்ற ஒரு கலாச்சாரச் சின்னமாக மாற்றியது 'தி பீட்டில்ஸ்' (The Beatles) இசைக்குழு தான். 1969 ஆகஸ்ட் 8 அன்று, லண்டனின் Abbey Road என்ற இடத்தில் உள்ள ஒரு ஜீப்ரா கிராசிங்கில் இந்த இசைக்குழுவின் நான்கு உறுப்பினர்களும் சாலையைக் கடப்பது போன்ற ஒரு புகைப்படம் எடுக்கப்பட்டது. அது அவர்களின் புகழ்பெற்ற Abbey Road இசை  ஆல்பத்தின் அட்டையாக வெளியாகி பிரபலமானது. இதனால் இன்று வரை உலகெங்கிலும் இருந்து மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகள் லண்டனுக்கு வந்து, அதேபோல போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துச் செல்லும் ஒரு வரலாற்றுச் சுற்றுலாத் தலமாக அந்த ஜீப்ரா கிராசிங் திகழ்கிறது. இப்போத்ம் இங்கிலாந்து அரசு அதனைப் பாதுகாக்கப்பட்ட வரலாற்று இடமாக அறிவித்து அதைப் பாதுகாத்து வருகிறது.

ஜீப்ரா கிராசிங்கின் இந்த வெற்றிக்குப் பிறகு, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப இங்கிலாந்தில் பாதசாரிகள் கடக்க பல்வேறு வகையான வழிகள் உருவாக்கப்பட்டன. ஜீப்ரா கிராசிங் என்ற இந்தப் பெயரின் தாக்கத்தால், அவை அனைத்திற்கும் Pelican Crossing, Puffin Crossing,Toucan Crossing என்று  பறவைகள் மற்றும் விலங்குகளின் பெயர்களே வைக்கப்பட்டன.

இன்றைக்கு இந்த ஸ்மார்ட்போன் யுகத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்திருந்தாலும், 75 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் சுண்ணாம்பாலும் தாராலும் உருவாக்கப்பட்ட இந்த எளிய 'கருப்பு-வெள்ளைக் கோடுகள்' டெக்னிக் இதுவரை எந்த டெக்னாலஜியாலும் வெல்லப்பட முடியாமல் இத்தனை ஆண்டுகள் கடந்தும் இன்றும் உலகெங்கிலும் பல கோடி மக்களின் உயிரைக் காக்கும் உன்னதக் கேடயமாக விளங்கி வருவது ஒரு பெரும் ஆச்சர்யம்தான் இல்லையா.!

🦓🦓🦓

Saturday, 24 October 2026

book-82 உங்கள்.குழந்தை யாருடையது


Book-82
உங்கள் குழந்தை யாருடையது?
- ஜெயராணி

உங்கள் குழந்தை யாருடையது?” என்ற தலைப்பே பெற்றோர்களைச் சிந்திக்கத் தூண்டும் ஒரு கேள்வியாக அமைகிறது. குழந்தைகள் பெற்றோருக்குச் சொந்தமான உடைமைகள் அல்ல; அவர்கள் தனித்த சிந்தனைகளும் உணர்வுகளும் விருப்பங்களும் கொண்ட தனி மனிதர்கள் என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.

எழுத்தாளர் ஜெயராணி, குழந்தை வளர்ப்பு குறித்த நமது வழக்கமான புரிதல்களையும் அணுகுமுறைகளையும் தனது கட்டுரைகள் வழியாக விமர்சனப் பார்வையுடன் அணுகுகிறார். குழந்தைகளின் மீது பெற்றோர் தங்களுடைய விருப்பங்களையும் எதிர்பார்ப்புகளையும் திணிப்பது, மதிப்பெண்களையும் மனப்பாடக் கல்வியையும் மட்டுமே முக்கியமாகக் கருதுவது போன்ற நடைமுறைகளை இந்நூல் கேள்விக்குட்படுத்துகிறது

கோழி வளர்ப்பு மீன் வளர்ப்பு போலவே குழந்தைகள் வளர்ப்பும் தற்போது அவசியமாகிவிட்டது. கண்டிப்பான பெற்றோர், செல்லம் கொடுக்கும் பெற்றோர் என இருவகைகளாக உள்ளனர். குழந்தைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாக நினைத்து பிடி கோழிகளாக இன்று பெற்றோர்கள் வளர்க்கின்றனர்.தன் குழந்தை எப்பவும் சந்தோசமாக இருக்க வேண்டும் என நினைத்து தீராத சோகத்தை அவர்களின் பின் வாழ்க்கையில் ஏறபடுத்துகின்றனர். வீடு, பள்ளி, சமுகம் இன்றைய குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.ஆனந்த விகடனில் வெளிவந்த அடல்ட்ஸ் ஒன்லி தொடரின் விரிவாக்கப்பட்ட வடிவமே இப்புத்தகம்

13 தலைப்புகளில் இன்றைய குழந்தைகளின் தேவை மற்றும் எண்ணங்களை பிரதிபலிக்கிறது.
குழந்தைகளை கண்டிப்பது, உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது, என வாழ்க்கையை துரத்திப் பிடிக்க கற்றுக் கொடுக்கின்றனர்.
உணவு குறித்த விழிப்புணர்வு குறைவு, துரித உணவு, ஆரோக்கியமான உணவு குறித்த அ செய்திகளை பகிர்வதுடன் பசி என்ற உணர்வே இல்லாமல் வளரும் குழந்தைகள் எவ்வாறு ஆரோக்கியத்தை எதிர்கொள்கின்றனர் எனவும் பேசுகிறது.

குழந்தைகளுக்காக பெற்றோர்கள் நேரம் செலவழிப்பது குறைவதால் உண்டாகும் பாதிப்புகளை கூறுவதோடு அயல் நாடுகளில் குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை ஒப்பிடுகிறார். சக மாணவர் மீதான வன்முறை, பாலியல் குறித்த புரிதல்கள்,அவர்களுடன் பேசுவதே காலப் போக்கில் குறைந்துவிட்டதாக கூறுகிறார்.

ஒவ்வொரு அத்தியாயத்திலும் வரும் பெட்டிச் செய்திகள் கவனிக்க வைக்கின்றன.எண்களுக்கும் எண்ணங்களுக்கும் உண்டான வேறுபாட்டைக் கூறுகிறார். 1330 குறள்கள் ஒப்புவிப்பது அறிவா அல்லது தகவல் சேகரிப்பா  எனக் கூறி அதில் அறிவுக்கு உண்டான வரையறையைக் கூறுகிறார்.பள்ளி மதிப்பெண் பெறுவதற்கு மட்டுமல்ல, நற்பண்புகளை வளர்க்கவும், சமூக உறவை  மேம்படுத்தவும் எனக்கூறி குழந்தைகளின் உலகை பெற்றோர் புரிந்து கொளவ்து பற்றி.. குட்டி இளவரசன் மூலம் மேற்கோள் சொல்கிறார்..

"எனக்கு ஆறு வயதான போது ஓர் அற்புதமான படத்தைக் கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதை காட்டியது. அந்தப் படத்தைக் கண்டதும் அதை வரையலாமே என்று நானும் ஓர் ஓவியம் தீட்டினேன். என்னுடைய படத்தை பெரியவர்களிடம் காண்பித்த போது அது ஒருவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போது ஓயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்கு சலிப்புத் தருவதாக இருக்கிறது."

குழந்தை வளர்ந்ததும் தற் சார்பு உடையவராக, சுயசிந்தனை உள்ளவராக வளர இயற்கை அனுமதிக்கிறது. அந்த வளர்ச்சியை பெற்றோரே அங்கீகரிப்பதில்லை எனக்கூறி பதின்பரும வயதில் ஏற்படும் பிரச்னைகளையும் தீர்வுகளையும் கூறுகிறார்.

நாம் நம் குழந்தைக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தை கற்பிக்கவே இல்லை.அது பிழைக்கத் தெரியாத வழி என ஒதுக்குகிறோம்.இந்திய பெற்றோர்கள் செய்யும் தவறுகளில் ஒன்று குழந்தைக்கு சொத்து சேர்த்து சம்பாதிப்பதுதான். அதனால் குழந்தைகள் பொறுப்புணர்வு, அருமை ஆகியவை தவறவிடுகின்றனர்.இதற்கு ஜாக்கிசான் செய்த செயலை மேற்கோளை படித்தபோது நெகிழ்ச்சி ஏற்படுகிறது.தேவைக்கு மிஞ்சிய அனைத்தும் ஆசைகள் தான்.எனவே குழந்தைகளின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகளுக்கு பெற்றோர்கள் செலவிட வலியிறுத்துகிறார் ஆசிரியர்.

குழந்தைகளைத் தனித்த ஆளுமை கொண்ட மனிதர்களாக மதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பொறுப்பையும் அணுகுமுறையையும் மறுபரிசீலனை செய்ய வைக்கிறது.
கல்வி என்பது மனப்பாடத்தையும் மதிப்பெண்களையும் தாண்டியது என்பதை உணர்த்துகிறது.
பாலினச் சமத்துவம், சாதிய எதிர்ப்பு, சமூகப் பொறுப்பு போன்ற கருத்துகளை குழந்தை வளர்ப்புடன் இணைத்துப் பேசுகிறது.
பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்துகளை முன்வைக்கிறது. 

செல்லங்கொடுத்தல் எனும் உணர்வு வெற்றி தோல்வியை தாங்க தேவையான பக்குவத்தை வளர்க்க தவறுகிறது.நீ திறமைசாலி என சொல்லாமல் நீ மட்டும்தான் திறமைசாலி என சொல்லி வளர்ப்பது அவர்ளுக்கு உண்டான பக்குவத்தை தடுக்கிறது.

இரண்டு வித சவால்கள் பெற்றோர் முன் உள்ளது.ஒன்று குற்றங்களுக்கு பலியாகாமல் குழந்தைகளைப் பாதுகாப்பது, அடுத்தது குற்றங்கள் புரிந்துவிடாமல் தடுப்பது
மேலும், குழந்தைகளின் வளர்ச்சியில் சாதியச் சிந்தனைகள், பாலினச் சமத்துவமின்மை, சமூகப் பாகுபாடுகள் போன்றவை எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதையும் நூல் பேசுகிறது. குழந்தைகளுக்குச் சுதந்திரமான சிந்தனை, சமூகப் புரிதல், சமத்துவ உணர்வு ஆகியவற்றை வளர்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைக்கிறது.

குழந்தைகளை நாம் எப்படி வளர்க்கிறோம் என்பதைக் காட்டிலும், அவர்கள் எப்படிப்பட்ட மனிதர்களாக வளர உதவுகிறோம் என்பதே முக்கியம் என்பதை இந்நூல் உணர்த்துகிறது. குழந்தைகள் மீது அன்பு செலுத்துவதோடு நின்றுவிடாமல், அவர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டு, கேள்வி கேட்கும் திறனையும் சுயமாகச் சிந்திக்கும் ஆற்றலையும் வளர்ப்பதே உண்மையான குழந்தை வளர்ப்பு என்பதை ஜெயராணியின் எழுத்துகள் சிந்திக்க வைக்கின்றன.

“குழந்தைகள் நம்முடையவர்கள் என்பதற்காக நமது விருப்பப்படி வாழ வேண்டியவர்கள் அல்ல; அவர்களுக்கான தனித்த வாழ்க்கையை உருவாக்க நாம் துணை நிற்க வேண்டியவர்கள்” என்ற புரிதலை நோக்கி வாசகர்களை அழைத்துச் செல்லும் சிந்தனையூட்டும் நூல் இது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் அவசியம் வாசித்துச் சிந்திக்க வேண்டிய படைப்பு.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

book-81


Book-81
மலர்மஞ்சம்
-தி.ஜானகிராமன்

மனித மனத்தின் நுண்ணிய உணர்வுகளையும், உறவுகளுக்குள் தோன்றும் விருப்பு வெறுப்புகளையும், வாழ்க்கையின் சிக்கல்களையும் அழகிய மொழிநடையில் வெளிப்படுத்தியவர். அவரது படைப்புகளில் உளவியல் நுட்பமும், கலைநயமிக்க வருணனைகளும், இயல்பான உரையாடல்களும் சிறப்பிடம் பெறுகின்றன.

மலர் மஞ்சம் என்ற தலைப்பே மலரின் மென்மையையும், வாழ்வின் அழகையும் நினைவூட்டுகிறது. தி. ஜானகிராமனின் படைப்புலகைப் புரிந்துகொள்ளும்போது, மனித உறவுகளின் வெளிப்புறத் தோற்றத்தைத் தாண்டி அவற்றின் உள்ளார்ந்த உணர்வுகளை ஆராயும் அவரது தனித்துவமான அணுகுமுறை சித்தரிக்கப்பட்டுள்ளன

மலர் மஞ்சம்’ நாவலின் மையக்கதை, தந்தை-மகள் இடையிலான ஆழமான பாசம், மரபு சார்ந்த வாக்குறுதி மற்றும் பெண்ணின் சுயசார்பு/சுதந்திரத்திற்கு இடையிலான மனப்போராட்டங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது:

ராமையா நாவலின் மையக் கதாபாத்திரம். காமாட்சி(25)பிரசவத்தின் போது இறந்துவிட்டார்., கங்கா சில காலத்தில் இறந்துவிட்டார்., பங்கஜம்,காய்ச்சல் இறப்பு 
அகிலாண்டம் குழந்தை பிறந்தவுடன் இறந்துவிட்டார்கள். ஆகிய நான்கு மனைவிகளையும் இழந்தவர். தனது நான்காவது மனைவி அகிலாண்டத்திற்குப் பிறந்த ஒரே பெண் குழந்தையான பாலியை நல்லமுறையில் வளர்த்து ஆளாக்குவதையே தனது வாழ்வின் லட்சியமாகக் கொண்டவர்.தன் சகோதரி வடிவுக்கு பிள்ளை இல்லாததால் அங்கேயே இருந்து வளர்க்கும் பொறுப்பு கிடைத்துவிட்டது.

ராமையா நன்றாகப் பாடுவார். வைத்தீஸ்வரன் கோவில்க்கு அடிக்கடி செல்பவர்.பூர்வீகமாய் இருக்கும் மீனாட்சி கொல்லையை செப்பனிட்டு பராமரித்து வந்தார்.பாலம்மாள் என்கிற தனது மகள் பாலி அறிவுக்கூர்மையுடன் வளர்கிறாள்.
அகிலாண்டத்தின் மரணத் தருவாயில் அவளுக்குக் கொடுத்த வாக்கின்படி, பாலியைத் தங்கராஜனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இறக்கும் தருவாயில் ராமையாவிடம் சொல்ல.. குழந்தை வளர வளர அது பற்றி பேச தயங்குகிறார்.

தனபாக்கியம்- வையன்னா, பிரச்சனையில் ராமையாவின் தோட்டம் பாதிக்கப்படுகிறது.  கிராமத்து மனிதர்களின் பேச்சுகளாலும் சலசலப்புகளாலும் ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்க்க, தன் நண்பர் கோணவாய் கிருஷ்ண நாயக்கரின் உதவியுடன் தஞ்சாவூருக்கு மகளுடன் குடிபெயர்கிறார்.அங்கு புதிதாய் சேர்ந்த பள்ளியில் நடைபற்ற நடன நாடக நிகழ்ச்சி பார்ப்பவர் அனைவரையும் கவர்ந்து விட்டது. வக்கீல் நாகேஷ்வரய்யர் சிலாகிக்க அவரின் வீட்டில் உள்ள ராஜாவின் நட்பு பாலிக்கு கிடைக்கிறது.

 பாலி பரதநாட்டியக் கலையில் சிறந்து விளங்குபவள். கல்லூரியில் உயர் கல்வி கற்பதற்காக மெட்ராஸ் (சென்னை) செல்லும் சுதேசி சிந்தனையும் சுதந்திர மனப்பான்மையும் கொண்ட இளம்பெண்.சென்னையில் செல்லம் நட்பு கிடைக்கிறது. தனக்கான மணமகன் தங்கராஜ் காத்திருக்கிறான்.

பாலியிடம் அன்பு காட்டும் தங்கராஜன் மற்றும் வக்கீலின் பேரன் ராஜா ஆகிய இரு இளைஞர்களின் வெவ்வேறு இயல்புகளும், அவர்களுக்கு இடையே பாலியின் மனம் சந்திக்கும் உணர்வுப் போராட்டங்களும் நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.எதிர்பாராத விதமாக ராஜனுக்கு பாலி உதவ வேண்டிய சூழலும் அதற்கு ராமையா என்ன செய்தார் என்பதும் அழகாக கொடுக்கப்பட்டுள்ளன.

#ரசித்தவை

நாவலின் தலைப்புக்கு ஏற்ப, ராமையா அமைத்த ‘மீனாட்சி கொல்லை’ என்னும் பூந்தோட்டம் அழகியலின் மையமாகத் திகழ்கிறது. நந்தியாவட்டை, மல்லிகை, ரோஜா, காசித் தும்பை, பவழமல்லி, கொன்றை, செங்கொழுந்து மாங்கன்றுகள் பூத்துக் குலுங்கும் தோட்டம் ராமையாவின் மனத் துறவுக்குப் புகலிடமாகிறது

*: ரெட்டிப்பாளையம் ரோஜாப் பூக்களின் தனித்துவமான மணம், கூடையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் ஒண்டிப் படுத்திருப்பது போல் குவிந்து கிடக்கும் பூக்களின் அழகு, மாலை கட்டுபவர்களின் கை லாகவம் ஆகியவை மலர் அழகியலை வெளிப்படுத்துகின்றன

*விடுதலைக்கு எத்தனை வல்லமை! மரணம்கூட அழகாகத்தான் இருக்கின்றன" 

*உலகத்தில் அறிவு பிறந்த அன்றே இந்த நிம்மதியும் அமைதியும் போய்விட்டன

*துன்பத்திலிருந்து தப்பிக்க வழி என்ன? இன்பத்தையே நினைப்பதுதான். வேறு ஒன்றையும் நினைக்காமல் தள்ளிவிடுவதுதான்

*எந்தவொரு கலைக்கும் பூரணத்துவத்திற்கும் முடிவே இல்லை, தொடர்ச்சியான உழைப்பில் அழகு சேர்ந்துகொண்டே இருக்கும் 

*தியாகம் எவ்வளவு ஆழ்ந்த போதை! பிறருக்காக உழைக்க ஆரம்பித்துவிட்டால், தன் உடல், தன் மனம், தன் நினைவு எல்லாம் எப்படிச் செத்துவிடுகின்றன

*விடுதலைக்கு எத்தனை வல்லமை! மரணம்கூட அழகாகத்தான் இருக்கின்றன. மரணம்தான் அழகு என்று அறிவை மயக்கி விடுவதுபோல்கூடத் தோன்றிற்று

*நமக்கு நாமே தான் தேத்திக்க முடியும். உசத்திக்க முடியும். நமக்கு நாமதான் காவல், பலம் எல்லாம்

*அவதியில் சிரிக்கிற சிரிப்புத்தான் சிரிப்பு. சிரித்துக்கொண்டே சிரிக்கிறது சிரிப்பு இல்லை

ராமையாவின் மனைவிகள் அனைவரும் மலர்களைப் போலக் குறுகிய காலமே அவரது வாழ்வில் பூத்து, பிரசவத்திலோ நோயினாலோ வாடி உதிர்ந்து விடுகிறார்கள்

வாழ்க்கையில் ஏற்படும் இழப்புகளும் துயரங்களும் முட்களாக உருவெடுத்தாலும், கலையினாலும், அன்பினாலும், ஆன்மீகப் பற்றினாலும் மனிதன் தன் அக மனதை ஒரு ‘மலர் மஞ்சமாக’ (அமைதியான சோலையாக) மாற்றிக் கொள்ள முடியும் என்ற ஆழமான வாழ்வியல் மெய்யியலை இத்தலைப்பு உணர்த்துகிறது

தி ஜாவின் மிகப்பெரிய வெற்றியே நாவலில் நம்மையும் ஒரு கதாப்பாத்திரமாக்கி..அந்த சூழலில் நம்மையும் வாழவைத்து விடுவார்

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்டபிரபு

Saturday, 17 October 2026

வாடிக்கையாளர்தான் ஒரு நிறுவனத்தின் உண்மையான முதலாளி. அந்த முதலாளி, உங்களை நேருக்கு நேராகக் கண்டிக்க மாட்டார். உங்களது பொருள் தரமற்றது என்று நேரடியாக உங்கள் சம்பளத்தைக் குறைக்கமாட்டார். உங்களது வருகைப் பதிவேட்டில் உங்கள் நேரந்தவறிய காலத்தைச் சுட்டிக் கேள்வி கேட்கமாட்டார்.ஆனால் அந்த முதலாளி, தன் விருப்பத்தை, தன் விற்பனையை இன்னொரு நிறுவனத்திற்கு மாற்றுவதன் மூலம் உங்களைத் தண்டிக்கமுடியும்.-பி.கே.பழனிக்குமார்

உம்பெர்கோ


தும்பி சிறார் இதழின் 94வது பிரதி அச்சில் மலர்ந்து பூக்குழந்தைகளை சென்றடைந்துள்ளது. இவ்விதழில் பிரசுரமாகியுள்ள கதை முற்றிலும் மாறுபட்ட இரண்டு குடும்பங்களைப் பற்றியது. அவர்களை பிணைப்பது இரு வீட்டுக்கும்  நடுவில் வளரும் ஒரு ரோஜாச் செடி. ஏதோ ஒரு காரணத்தால், இரண்டு வீட்டின் பெரியவர்களும் சண்டை போட்டுக்கொண்டு, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் வேலி அமைக்கிறார்கள். குழந்தைகளும், ரோஜாச் செடியும் மெல்ல வாடத் தொடங்குகிறது. இவற்றை கவனித்து வந்த இரு வீட்டின் செல்லப்பிராணிகளான பூனையும் நாயும் ஒன்றிணைந்து அவ்வேலியை அகற்றுகின்றன. இரு குடும்பங்களும் முன்பு போல் இயல்பாக பேசிக் கொள்கிறார்கள். இப்போது குழந்தைகள் தாராளமாக ஓடியாடி விளையாடுகிறார்கள், ரோஜாச் செடியும் உயிர்த்து பூத்துள்ளது. போர் எதிர்ப்பை மிக எளிமையாக பேசும் கதை. கருப்பு வெள்ளை பின்னணியில் முக்கியமான இடங்களில் மட்டும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட ஓவியங்கள் அமைந்துள்ளது குழந்தைகளை நிச்சயம் ஈர்க்கும். மேலும் 'விளையாட்டுகள்' என்ற சிறார் பாடலும், குழந்தைகள் கிறுக்க வண்ணம் தீட்ட வித்யா பெனோவின் கோட்டோவியங்களும் உள்ளடங்கியுள்ளன. கதையை வாசிக்கும் குழந்தைகள் என்றும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுபவர்களாக மலர்வார்கள் என்று மனதார நம்புகிறோம், போரில்லா பூமி அமைய உளமாற பிரார்த்திக்கிறோம்.

இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச/ இதழ் பெற:
9843870059, thumbigal@gmail.com
https://thumbigal.com/

Tuesday, 13 October 2026

எதிர்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்-சுப்பிரமணி இரமேஷ்



தி இந்து ஞாயிறு மலரில் இவரின்  இலக்கிய கட்டுரைகளை வாசித்துள்ளேன். கருத்து செறிவும் ஆய்வும் இவரின் கட்டுரைகளில் மிளிரும்.

இலக்கியம் என்பது கதைகளைச் சொல்வதற்கான ஒரு கலை மட்டுமல்ல; மனித வாழ்க்கையையும் சமூகத்தையும் வரலாற்றையும் பல்வேறு கோணங்களில் புரிந்துகொள்வதற்கான ஓர் அறிவுசார் செயல்பாடும் ஆகும். ஒரு படைப்பு முன்வைக்கும் கருத்துகளை ஏற்றுக்கொள்வது மட்டுமின்றி, அது எவற்றை மறைக்கிறது, யாருடைய குரலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது, எந்தக் கருத்துகளை எதிர்க்கிறது என்பதையும் ஆராய்வதே திறனாய்வின் முக்கியப் பணியாகும்.இத்தகைய வாசிப்பு அணுகுமுறைக்கு வழிகாட்டும் நூலாகச் சுப்பிரமணி இரமேஷ் எழுதிய ‘எதிர்க்கதையாடல் நிகழ்த்தும் பிரதிகள்’ அமைகிறது.

கடந்த இருபது ஆண்டுகளில் வெளிவந்த நவீனத் தமிழ்ப் படைப்பிலக்கியங்களிலிருந்து படைப்புகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை ஆழமாக வாசித்து, தனது விமர்சனப் பார்வையை ஆசிரியர் இந்நூலில் முன்வைத்துள்ளார்.

பாரதியார் என்றதும் விடுதலை உணர்வு தேசப்பக்தி பாடல்கள் என்பதுதான் நினைவுக்கு வரும். அவர் குறித்து பெண்ணிய எதிர்கதையாடலை முதல் கட்டுரை விளக்குகிறது.அவரின் மனைவி குறித்த செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன.தங்கம்மாவால் எழுதப்பட்ட பாரதி சரித்திரம், யதுகிரி அம்மாள் எழுதிய பாரதியார் நினைவுகள் இருபுத்தகம் தவிர செல்லம்மா குறித்த செய்திகள் இல்லை என்பது ஆச்சர்யமளிக்கிறது.பாரதிக்கு செல்லம்மா பற்றிய எண்ணங்களையும் நிகழ்வுகளையும் இப்படைப்பில் முன்னிருத்துகிறார்

கெளதம முனிவரால் சாபமடைந்த அகலிகையின் கதையை நாம் ராமாயணத்தில்.படித்திருந்தாலும் அகலிகையின் மற்றொரு வரலாற்றை எட்டுத்தொகை நூல், பிரபஞ்சன் எழுதிய அகலிகை பற்றிய ஆதாரத்துடன் கூறுகிறார்.நவீனமாக புதுமைப்பித்தன் எழுதிய சாபவிமோசனம் கதையையும், ராமனிடம் அகலிகை கேட்கும் கேள்விகளையும் மேற்கோளாக கூறி, அகலிகையின் வாதத்தை நியாயப்படுத்துகிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் ஆய்வுபோல அதன் கதையோடு மட்டும் நிறுத்திப் பார்க்காமல், அதன் பின்னணியில் இயங்கும் சமூக, பண்பாட்டு, அரசியல் கருத்துகளையும் ஆராய வேண்டியதன் அவசியத்தை இந்நூல்  நமக்கு உணர்த்துகிறது.

பெண்வழிக் கவிதைகள் குறித்த கட்டுரையில் ஆரம்ப கால கட்டங்களில் பெண்ணிய கவிதைகளில் தங்களின் ஆதங்கத்தை மட்டும் முன்னிலைப்படுத்தி, கலைத்தன்மை இரண்டாம் பட்சமாக.இருந்த வரலாறு பின்னர் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் சிரத்தையான படைப்புகள் வெளிவர துவங்கின.

தமிழில் பெண்களின் சுய அனுபவம், உடல்,தனிமை குறித்த அவஸ்தை, சமூகம், கிராமிய வாழ்க்கை, அந்தரங்கம்,தாய்மை குறித்த எழுதி பின்னர் விரிவடைந்தன.80 களுக்கு பிறகு ஆண்கள் மட்டும் எழுதி வந்த தலித் இலக்கியத்தில் பெண்ணிய படைப்பாளிகளும் இணைந்தனர். ஆக்கபூர்வ விமர்சனங்களை தாண்டி பெண்ணிய கவிஞர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி சென்றனர்.

இதனைத் தொடர்ந்து சந்திராவின் பூனைகள்.இல்லாத வீடு சிறுகதை தொகுப்பை முன்வைத்து பெண் எழுத்து சார்ந்த ஆய்வை சொல்கிறார்
பெண்களுக்கான மொழியை உருவாக்கத் துவங்கினர். வெளிப்படையான பிரச்சார தொனி இன்றி ஆனால் பெண் வாழ்க்கை சார்ந்த விஷயங்களை படைப்புகளில் பேசினர்.

எதிர்கால சமூக வரலாற்றை எழுதும் போது தற்காலத்திய சமூக வரலாறே தரவுகளாக நிற்கும் வகையில் அமைந்த இமையத்தின் ஆறுமுகம், செடல், கோவேறுகழுதைகள் நாவல்களை முன்வைக்கிறார். புதிரை வண்ணான் என்ற  சாதியின் உண்மையான பெயர் பாதிராவு வண்ணான்.பாதி ராத்திரியில் மட்டும் நடமாட வேண்டும்.மேலும் ஏகாலிக்கான பெயர் காரணத்தையும் விவரிக்க்கிறார். ஒடுக்கப்பட்ட சாதியினரால் ஒடுக்கப்படும் வண்ணார் சமுதாயத்தின் வலியை பேசுவதோடு..நாவல் வந்த புதிதில் எதிரகொண்ட நிகழ்வுகளையும் பிரச்சனைகளையும் பேசுகிறது.

தலித்திய கவிதைகள் நாட்டார் தெய்வங்கள்,கதைப்பாடல்கள் ஆகியவைகள் இக்கால கட்டத்தில் மீட்டுருவாக்கம் பெறுகின்றன.அது குறித்த ஆய்வினை சான்றுகளுடன் பதிவு செய்துள்ளார்.

சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பாலியல் தொழிலாளிகளை பற்றி நவீன இலக்கியத்தின் மூலம் வெகுஜன மக்களிடம் கொண்டு சென்றவர் ஜி நாகராஜன். சிறுகதைகளை விட நாவல் மூலம் அறியப்பட்டவர்.
தவறான பழக்கங்கள் மூலம் வாழ்வினை முடித்துக் கொண்டார்.அடுத்ததாக புலம் பெயர் மக்கள்குறித்த வரலாற்றை அடுத்த அத்தியாயத்தில் பேசுகிறது.

80களின் இறுதியிலம் தொண்ணூறுகளின் தொடக்கத்திலும் சோளகர்கள் கூட்டு அதிரடிப்படையின் வன்முறைகளை எதிர்கொண்டனர்.நீதிபதி சதாசிவம் ஆணையத்தின் அறிக்கைக்கு அ.மார்க்ஸ் ஆற்றிய எதிர்வினையும், சோளகர்களின் வாழ்க்கையை கூறும் ச.பாலமுருகனின் நாவலும் கூறப்பட்டுள்ளது.தேடுதல் வேட்டையில் நிகழ்த்தப்பட்ட  வன்முறைக்கு எந்த தீர்வும் வரவில்லை எனும் வேதனையான விசயத்தையும் பதிவு செய்கிறார்.

எண்பதுகளின் பிற்பகுதியில் வந்த எஸ் ராமகிருஷ்ணனின் கதைகள் யதார்த்தமானவை,கிராம வாழ்க்கையை தொலைத்த நகரில் சேர்த்த மனிதர்களின் சோகத்தால் நிரம்பியவை.அடுத்ததாக வந்த இவரது காதல்.கதைகள் நுட்பமானவை. தாவரங்களின் உரையாடல், பெயரில்லாத ஊரின் பகல் வேளை, ரகசிய  ஆண்கள் என மேலும் சில கதைகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார்.

 ஒரு படைப்பின் வெளிப்படையான கதையைத் தாண்டி அதன் உள்பொருளையும் கருத்துநிலைகளையும் ஆராயும் திறனை வளர்க்கிறது.
இலக்கியப் படைப்புகளை ஒரே கோணத்தில் அணுகாமல், பல்வேறு பார்வைகளில் வாசிக்கத் தூண்டுகிறது.

 படைப்புகளை ரசிப்பதோடு மட்டுமல்லாமல், அவற்றின் கருத்துகள், உத்திகள், சமூகப் பின்னணிகள் ஆகியவற்றையும் விமர்சனபூர்வமாக அணுக வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது.ஏற்கெனவே நிலைபெற்றிருக்கும் கருத்துகளை மறுபரிசீலனை செய்வதும், புதிய கேள்விகளை எழுப்புவதும், மாற்றுப் பார்வைகளை உருவாக்குவதும் இலக்கியத் திறனாய்வின் அடிப்படைப் பணிகளாகும்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

“எந்தத் தளத்திலும் ஆரம்பம் என்பது மனச்சோர்வூட்டக்கூடியதாக, கடுமையானதாகவே இருக்கும். அந்த சோதனையை உங்களால் தாண்ட முடிகிறதா என்று பாருங்கள். தாண்டினால் உங்களுடைய இடத்தை நீங்கள் கண்டுகொள்வீர்கள்.ஒருவன் அன்றாடம் செய்யும் பணி முழுக்க அவனுக்கு மனநிறைவூட்டக்கூடியதாக இருக்கும் என்றால், அதுவே அவனுடைய கல்வியும் சாதனையும் கேளிக்கையும் வழிபாடும் ஆகும் என்றால் அவன் வாழ்க்கைதான் ஆசீர்வதிக்கப்பட்டது.“- ஜெயமோகன்

Monday, 12 October 2026

கற்றுக்.கொடுப்பது

நம்மால் ஏன் எந்த ஒரு விஷயத்தையும் முழுதாக கற்றுக்கொள்ள முடிவதில்லை? அது ஆங்கிலமோ, ஷேர் மார்க்கெட்டோ, சமையலோ, வண்டி ஓட்டுவதோ.... 

ஏனென்றால் நாம் கற்றுக்கொள்வதில் "பாடம் நடத்தப் படுகிற"  விதத்திற்கு பெரும் பங்கு உண்டு. "Learning Pyramid / Cone of Learning" எனும் ஆராய்ச்சி அதைத் தான் சொல்கிறது. 

நாம் அமைதியாக இருந்து வெறும் "Lecture" கேட்பதால் நம் மனதில் எவ்வளவு பதியும் தெரியுமா? வெறும் 5% மட்டும் தான். 

அதையே Audio - Visual  மூலம் கற்றுக் கொண்டால்? 20% மனதில் பதியும்.

Discussion மூலம்? (குரூப் டிஸ்கஷன், ஜோடி டிஸ்கஷன், ஆசிரியரிடமே டிஸ்கஷன்) அப்போதும் 50% தான். 

அப்படி என்றால் கற்றுக் கொள்வதற்கு எது பெஸ்ட் மெத்தட்? 

*"கற்றுக் கொடுப்பது"* 

ஆம். நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயத்தை, இன்னொருவருக்கு கற்றுக் கொடுப்பது. அவருக்கு புரிய வேண்டுமே என்று தெளிவாகப் படிப்போம், அவரது சந்தேகங்களைத் தீர்ப்போம், புரியாததைப் புரிய வைக்க மாற்றி சொல்லித் தருவோம். 

எனவே நாம் கற்றுக் கொள்ள விரும்பிய விஷயம் 90% மனதில் பதியும். 

-எஸ் கா

Sunday, 11 October 2026

மஞ்சள் வெயில்-77



மஞ்சள் வெயில்
-யூமா வாசுகி

இந்த ஆண்டு சீர் வாசகத் வட்டத்தின் சார்பில் வந்து பரவலாக பலரால் வாசிக்கப்பட்ட புத்தகம் இது. பன்னிரண்டாம் வகுப்பு வரை பாய்ஸ் ஸ்கூலில் படிச்சிட்டு முதன் முதலில் இருபாலர் கல்லூரியில் சேர்பவனுக்கு பெண் பற்றிய பார்வை நட்பு ஆகியபை அனைத்தும் புதிது. தான் பார்த்த அத்தனை காதல் படத்தில் வரும் கதாநாயகனாக தன்னை உருவகப்படுத்திக் கொள்வான். அந்த infatuationபோவதற்கு பல மாதங்கள் எடுக்கும். அதுபோல் தன் வேலையை கலையை திறமையை ஏதேனும் ஒரு பெண் பாராட்டி விட்டால் அதன் மூலம் கிடைக்கும் இன்பமே தனி.

அப்படித்தான் நாவலின் நாயகனான கதிரவன் ஒரு ஓவியர். வார மாத இதழ்களுக்கு வரைந்து கொடுக்கும் ஓவியர். சென்னைக்கு வெளியே இருந்து தினசரி. பத்திரிககை
 அலுவலகத்துக்கு சென்று ஓவியங்களை வரைநது  வருபவர். அப்படி ஒரு நாள் வரும்போது அந்த அலுவலகத்தில் பணியாற்றும் ஜீவிதா எனும் பெண் தன்னை பற்றியும் தன் ஓவியத்தை பற்றியும் இணை ஆசிரியர் சந்திரனிடம் விசாரிக்கிறார். இதைப் பற்றி கதிரவனிடம் கூறும் ஆசிரியர் அந்த பெண் மீது வாஞ்சையும் அன்பும் கதிரவனுக்கு ஏற்படுகிறது.அது காதலாக கற்பனை செய்து கொண்டு மகிழ்ச்சியில் திளைக்கிறான்.

அதனை கடிதம் வழியில் தன்னிலை விளக்கமாக நாவல் கவித்துவ மொழியில் விரிகிறது.அபிராமியை பார்த்த குணா போல் வார்த்தையில் காதலை தன்னிலை விளக்கம் போல் கடிதத்தில் கூறி நாவல் நகர்கிறது.
ஜீவிதாவுடன் பேச தன் நண்பர்கள் உதவுயை நாடுகிறார்.கூச்சம், தடுமாற்றம் நிறைந்த இதயம்.முரளி போல காணப்படுகிறார் நாயகன். பணிபுரியம் பெண்கள் குறித்த இரக்கம் எப்போதும் அவருக்கு உண்டு. 

நகரத்தை விட்டு பேச்சிலர் ரூமில் இருக்கும் நாயகனுக்கு வானதி, பாலகிருஷ்ணன், ஹக்கீம்பாய், மனோ மகேந்திரன் என் நட்பு வட்டம் உண்டு. ஜீவிதாவின் ஒவ்வொரு அசைவையும் டேனியலிடம் கூறினால் அவனுக்கு நிம்மதி.தனிமையில்.இருக்கும்போதெல்லாம் ஜீவிதாவின் நினைவுகளைத்தான் அசைபோடுகின்றான்.தனினையின் வாதையில் தனக்கு ஏற்படும் இன்னல்களை ஒப்புதல் வாக்குமூலம் போல ஜீவிதா எதிரில் இருப்பதாக நினைத்துக் கூறுகிறான்.

பொதுவாக கற்பனைக்கென்று குணமுண்டு. ஆரம்பத்தில் நாமே வலுக்கட்டாயமாக அதை உருவாக்குவோம்.பின்னர் அதை உருவகப்படுத்தி நாள்தோறும் அந்த எண்ணங்களின் இன்பத்திலேயே வாழ ஆரம்பித்துவிடுவோம். அது உண்மையை நெருங்காத வரை ஒன்றுமில்லை..உண்மை அறிந்தால் கற்பனையெல்லாம் நீர்குமிழியாக உடைந்துவிடும்.அப்படித்தான் தகுதிக்கு மீறி ஆசையாக மணிகண்டன் சொன்னவுடன் தான் கற்பனை செய்த ஒவ்வொன்றுக்கும். மனம் நியாயம் சேர்த்துக் கொண்டே இருந்தது.

விருப்பமே தொல்லையாக மாறியதால் என்னவோ ஜீவிதா கதிரவனின் காதலை ஏற்கவில்லை. அதன்பின் கதிரின் முரட்டுத்தனமான அன்பு என்ன ஆனது? ஜீவிதா செய்த காரியம் என்ன என்பதே மீதிக்கதை

வசனக்கவிதை போல் பிசிரின்றி எழுதிய நடை விறுவிறுப்பாக செல்கிறது.நாவல் ஒரு ஆணின் மனப்போராட்டத்தை பேசுகிறது.இது ஓவரா நமக்கு தென்படலாம் ஆனால் அவன் வளர்ந்த சூழல், சுபாவம் அது என்பது அவனின் பார்வையில் புரிகிறது.பூ படத்தில் வரும் பார்வதி தங்கராசுவை நினைப்பாலே அதேபோல கதிரவன்

மெயில் அனுப்ப ப்ரவுசிங் செல்லும் காலம் கிட்டத்தட்ட 2000 க்கு முன்பாக இருக்கலாம்.
பிரிவு தான் மிகச்சிறந்த காதலை பரிசளிக்கும் என்பதற்கு உதாரணமாக சொல்லலாம்.

*உங்கள்.மீதான பேரன்பே கடுமையான அச்சத்தையும் பதற்றத்தையும் நிலைகொள்ளாத தத்தளிப்பையும் தருகிறது.

*ஒநாயாக உருவங்கொள்ளுகிறது தனிமை.அதன் முன்னே சிறு பூனை அளவே நான் இருக்கிறேன்

*என் கனவு மரத்தின் கண்ணாடி இலைகளில் எவ்வளவு நிறங்கள் வசிப்பதற்கு வந்தன

*ஈர்ப்பின் கொக்கிகள் என் வன்மத்தின் சக்தி கேந்திரத்தில் பொருந்தி இழுக்கின்றன

*அவநம்பிக்கையான எந்தச் சிந்தனையின் மீதும் அச்சத்தின் பெரும்பாறைகள் சரிந்து விழும்

ஒருதலைக்.காதல் தான் கதையின் மையம். அதனை அற்புதமான மொழி நடையில் சொல்லியிருக்கிறார் யூமா வாசுகி

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

Monday, 5 October 2026

நீ செய்தாக வேண்டும் என்பதற்காக எதையும் செய்யவே செய்யாதே. ஒரு செயலை செய்வதற்கான ஒரே காரணம், நீ அதை செய்ய விரும்புவதாலும், நீ செய்வதற்கான சரியான செயல் அது தான் என்று நீ அறிந்திருப்பதாலும் மட்டுமே. - The Monk who sold his Ferrari.

ஒழுக்க வீழ்ச்சி


"ஒரு சமூகத்தில் ஒழுக்க வீழ்ச்சி ஏற்படும் போது, ஆரம்பத்தில் மக்கள் அதை எதிர்ப்பார்கள். ஆனால் காலப்போக்கில், அதை மறுத்து பேசுவதில் சலிப்படைந்து, பின்னர் படிப்படியாக அதை ஏற்றுக்கொள்ளத் தொடங்குவார்கள். அதன் பிறகு, அது அச்சமூகத்தின் பொதுவான கலாச்சாரமாகவே மாறிவிடும். கடைசியில், அந்த வீழ்ச்சியைக் கண்டிப்பவரே தவறானவராகக் கருதப்படுவார்.

எனவே, நாம் மறுப்பதற்கு வெட்கப்படும் வகையில் ஒரு தவறு ஆதிக்கம் செலுத்தும் கலாச்சாரமாக மாறுவதற்கு முன்பே, அதை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த வேண்டும்."

- கலாநிதி நாயிப் பின் நஹார் -

Sunday, 4 October 2026

அருந்தவப்பன்றி


அருந்தவப்பன்றி – சுப்பிரமணிய பாரதி’ 
-பாரதி கிருஷ்ணகுமார்

இந்தப் புத்தகம் பாரதியைப் பற்றிய ஆய்வு நூல்.பாரதியாரால் 1898 முதல் 1904 ம் ஆண்டு வரை எழுத முடியவில்லை.அவரது வாழ்க்கையில் ஏற்பட்ட மனப்போராட்டங்கள், தடைகள், கவிதை எழுத முடியாமல் போன காலம், மீண்டும் கவிதையின் பக்கம் அவர் திரும்பிய விதம் ஆகியவற்றை ஆராய்கிறது."ஆய்வு என்பது பல பக்கமும் எட்டு திசையும் போகக்கூடாது.ஒரு குறிப்பிட்ட மையத்தை நோக்கித்தான் போக வேண்டும்.இறுதியாக நாம் என்ன சொல்ல வருகிறோமோ அதற்கான படிக்கட்டை ஒழுங்காக அமைத்துத்தர வேண்டும்" எனும் பிரபஞ்சனின் வரிக்கு ஏற்ற ஆய்வு நூல் இது.

நாய் பிழைப்பு என பலரும் பல கட்டங்களில்.சொல்வதுண்டு. ஆனால் பன்றி வாழ்க்கை என சொல்லுவதில்லை.பாரதியே தன்னுடைய ஒரு காலகட்ட வாழ்க்கையை ‘அருந்தவப்பன்றி’ என்ற உருவகத்தின் மூலம் குறிப்பிடுகிறார். அருந்தவம் செய்த முனிவன் சாபத்தால் பன்றியாக மாறி, பின்னர் அந்த வாழ்க்கையையே விரும்பி வாழ்வது போன்ற உருவகத்தைத் தன் வாழ்க்கையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார் பாரதி. பெருவாரியான மனிதர்கள் அருந்தவபன்றிகள் தான். இவ்வுண்மை தெரியாதவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்கிறார் முன்னுரையில் 

எட்டயபுர ஜமீன் போல பல சமஸ்தானங்கள் அதிகாரமின்றி இருந்த காலகட்டம்.மன்னரை புகழ்ந்து பாடும் பாடல்களை பாடி மன்னரை சந்தோசப்படுத்த வேண்டும்.அந்த காலத்தில் பாரதியும் அங்கு பணி செய்தார்.அதனை நினைத்து வருந்தி
"கவிதா தேவி அருள் வேண்டல்’ என்ற நீண்ட சுயசரிதைக் கவிதைப் பாடலில் தனது வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் கவிதையிலிருந்து விலகியிருந்ததை இந்தக் கவிதையின் வழியாகக் கண்டறிந்து, அந்தக் காலகட்டத்தின் பின்னணியை ஆசிரியர் ஆராய்கிறார். 

இக்கவிதை இந்தியா இதழில் 85 வரிகள் முதல் பகுதியாக 87 வரிகள் இரண்டாம் பகுதிகளாக வருகிறது.

1893ம் ஆண்டு சிவஞான யோகியார் பாரதியின் கவிப்பெருக்கைக் கண்டு " பாரதி எனும் பட்டத்தை வழங்கினார்.
பாரதியின் தந்தை சின்னச்சாமி க்கு இருந்த தொழில்நுட்ப அறிவைப் பற்றி கூறியுள்ளார்.ஜி டி நாயுடு போன்று தொழில் துறையில் அவருக்கிருந்த முனைப்பை காட்டுகிறது.பீதப்புரத்தில் எட்டயபுரம் காட்டன் ஜின்னிங் பேக்டரி லிமிட்டெட் கம்பெனி பற்றி ஆய்வு செய்து கூறியுள்ளார். அதனைப் பார்க்கும்போது அன்றே அவருக்கு இருந்த ஆர்வத்தையும் இந்தியாவிலேயே மேலைநாட்டு தொழில்நுட்ப அறிவை நம் நாட்டுக்கு பயன்படும்படி எண்ணிய சிந்தனை வியக்க வைக்கிறது.

பாரதியார் வரலாற்றை படிக்க நினைப்போர்க்கு வ ராமசாமி எழுதிய புத்தகத்தோடு இந்த அருந்தவபன்றியும் முக்கியமானவையாகும். தன் படிப்புக்கு செலவு செய்ய பெற்றோரால் உதவ முடியாத நிலையில் எட்டயபுர  மன்னருக்கு சீட்டுக்கவி எழுதியதை முதல் கவிதையாக 64 வரிகளில் எழுதியுள்ளார்.இதனை 1974ம் ஆண்டு கலைமகள் இதழில் அவரின் தம்பி விசுவநாதன் பிரசுரித்துள்ளார். தஞ்சை தமிழ் பல்கலைக்கழக ஆய்வுப் பதிப்பில் உள்ளது.அதனை பொருளுடன்,எந்த சூழலில் எழுதப்பட்டது என்பதை இப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளளார்.

அதாவது, உயர்ந்த சிந்தனைகளையும் கவிதைத் திறனையும் கொண்ட பாரதி, தன்னுடைய படைப்பாற்றலிலிருந்து விலகி வாழ்ந்த காலத்தைத் தாழ்வான வாழ்க்கையாக உணர்ந்தார் என்பதே
அவரே கவித்துவத்தில் குறிப்பிடுகிறார்.சின்ன சங்கரன் கதையின் நுட்பத்தையும் பதிவு செய்கிறார்.எல்லாரும் கதையின் நடுப்பகுதியில் இருநது தொடங்குவார்கள். ஆனால் இக்கதையில் பாரதி இரு வேறு முறைகளை பயன்படுத்தி கதைகளை எழுதியுள்ளார். இக்கதை நகைச்சுவையும், கிண்டலுமான கதை.

பாரதியார் பாண்டிச்சேரியில் இருந்த காலகட்டத்தில் இருந்த நிலையை குறித்தாலும் எட்டயபுரம் குறித்த ஆய்வு அவ்வப்போது சொல்லப்பட்டு கொண்டே இருக்கிறது.அதாவது மையத்தை விட்டு அகலாமல் ஆய்வு நூல் செல்கிறது.
 
இந்நூல் பாரதியின் வாழ்க்கையைப் பற்றிய வெளிப்புறத் தகவல்களை மட்டும் பயன்படுத்தாமல், பாரதியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் போன்ற அவரது படைப்புகளுக்குள் இருக்கும் அகச்சான்றுகளை ஆராய்கிறார்.பாரதியின் இளமை வரலாற்றையும் அவர் தங்கை பாகிரதி தாயார் இறந்த பின் வள்ளியம்மைக்கு பிறந்த தன் தங்கை தம்பி விசுவநாதன் ஆகியோர் பற்றிய தகவலையும் தருகிறார்.

பாரதியை பற்றி படிக்கும் போதெல்லாம் பிரம்மிப்புதான். செல்வ செழிப்பில் பிறந்தாலும் அவர் நினைத்திருந்தால் எட்டயபுர மன்னருக்கு பணிவிடைகள் செய்து எட்டயபுரத்தில் ஆஸ்தான கவியாக இருந்து ஊர் மெச்ச வாழ்ந்திருப்பார்.
மதுரை சேதுபதி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி நல் வாழ்வு வாழ்ந்து ஓய்வு பெற்றிருப்பார். சுதந்திர தாகம் கொண்டு தன்னலம் கருதாது விடுதலை உணர்வை அனைவருக்கும் ஊட்டியதால் மகாகவி என போற்றப்படுகிறார்.

'அருந்தவப்பன்றி’ பாரதியைப் பற்றிய வழக்கமான வாழ்க்கை வரலாறு அல்ல; பாரதியின் உள்ளத்தை அவரது படைப்புகளின் வழியாக வாசிக்க முயலும் ஓர் ஆய்வு. பாரதியைப் புதிய கோணத்தில் புரிந்துகொள்ள விரும்பும் வாசகர்களுக்கு இது குறிப்பிடத்தக்க நூலாகிறது. 

*ஜமீனுக்கும் பாரதிக்கும் உள்ள நட்பு.. விலகி இருந்தால் சேரத்துடிக்கும் அன்பு..சேர்ந்திருந்தால் விலக துடிக்கும் சுயம் என்று வர்ணிக்கிறார் ஆசிரியர்

*9 மொழிகள் அறிந்துள்ளார். அதனால் தான் என்னவோ யாம் அறிந்த மொழிகளிலே என குறிப்பிடுகிறார்.

*ஆறு ஆண்டுகளுக்குப்பிறகு தனிமை இரக்கம் எனும் கவிதை விவேகபானுவில் வெளி வருகிறது.
பிற்சேர்க்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

*சீட்டுக்கவி, சின்ன சங்கரன் கதை ஆகியவை பின்னிணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

*எனக்கிவ் வாழ்க்கை இன்புடைத் தேயாம்: 
நினக்கிதில் துன்பம் நிகழுமேல் சென்றவ் 
வாளினின் நெஞ்சை வகுத்துநீ மடிக" என்றிது கூறி அருந்தவப் பன்றிதன் இனத்தொடும் ஓடி இன்னுயிர் காத்தது.

*1905ல் முற்றிலும் பெண்களுக்கான சக்கரவர்த்தினி எனும் மாத பத்கிரிக்கை ஆசிரியராகிறார்

*இளசை என்பது எட்டயபுரத்தின் இன்னொரு பெயர்.சமஸ்தானத்திற்கு சீட்டுக்கவி எழுதிய போது இளசை சுப்பிரமணியன் என்றே எழுதுகிறார்.

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு

பூனைகள்.நகரம்


பூனைகள் நகரம்
- ஹாருகி முரகாமி
தமிழில்: ஜி.குப்புசாமி

ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமியின் கதைகள் வெகுவாக தமிழில் வந்துள்ளன.  பூனைகள் நகரம் என்பது ஜப்பானிய எழுத்தாளர் ஹாருகி முரகாமியின் தனித்துவமான கதை உலகத்தை அறிமுகப்படுத்தும் படைப்பு. முரகாமியின் வழக்கமான மாய யதார்த்தம், தனிமை, கனவு–நனவு கலப்பு போன்ற கூறுகள் இதில் முக்கியத்துவம் பெறுகின்றன.

இத்தொகுப்பில் மொத்தம் எட்டு கதைகள் உள்ளன. முதலாவதாக
 'ஆளுண்ணும் பூனைகள்' கதையில்

பூனைகள் ஆட்களை தின்றதாக செய்தித்தாளில் செய்தி வருகிறது. அதை நாயகன் தன் காதலி இசுமிக்கி படித்துக் காண்பிக்கிறான். பூனை குறித்த விவாதம் வருகிறது.பின் தன் மனைவியை விட்டுவிட்டு காதலி இசுமியுடன் கிரீஸ் நாட்டில் உள்ள தீவிற்கு செல்கிறார்கள்.தங்களது சேமிப்பில் உள்ள பணம் சிறிது காலத்துக்கு வரும் என திட்டத்துடன் தங்குகிறாள்.நள்ளிரவில் இசுமி காணமால் போகிறாள். அடுத்தது என்ன என்பதே கதை. மேஜிக்கல் ரியலிசத்தை தன் கதையில் கொண்டு வந்திருப்பார்.சாதாரண மனிதனின் உணர்வுகளை சொல்லியிருப்பார். உங்களால் துறக்க முடிந்தது சொற்பமானவை அலல்...மிக சொற்பமானவை என்றொரு வரி தங்களின் சிக்கலான காலகட்டத்தை உணரச் செய்தது.

மனதர்களின் அகச்சிக்கலை அலசும் விதத்தில் அமைந்தது பிற்கால முதலாளித்துவத்தின் முன் ஒரு சரித்திரம். தலைப்புப் க்கு ஏற்றது போல உள்ளடக்கம் இல்லை.. நண்பனின் அகச்சிக்கலை கூறும் விதத்தில் அமைந்த கதை. கோபோவில் தன் உடன் படித்த நண்பன் யூஷிகாவுடன் காதலில் விழுந்து பிரிந்த கதை இவனின் பார்வையில் சொல்லப்படுகிறது 

உன் கணவரின் தந்தை ட்ராம் வண்டியில் அடிபட்டு இறந்து போனார் என மருமகளிடம் கதை சொல்கிறார் அபார்ட்மெண்ட் வாசி.அவர் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதில் ஆர்வமுள்ளவர்.தந்தை இறப்பிற்குபின் தாயை கவனித்துக் கொண்டு வருபவர்.ஒருநாள் திடிரென காணாமல் போகிறார்.அதன் கதை சொல்லி துப்பறிகிறார்..அதன் பின் என்ன என்பது தேடல் கதை.

 தன் பெயரை மறந்துவிடும் வியாதி பீடித்திவிடுகிறது ஒஸாவாவுக்கு.அந் நோயிருலிந்து மீட்டுத்தரும்படி டெட்சுகோ சகாகி எனும் உளவியல் வழிகாட்டுநரை அணுகுகிறார்.அவர் அந்த வியாதியை சரி செய்தாரா அதற்கு காரணம் ஒரு குரங்கு என்பதை கண்டறிகிறார். ஏன் அவ்வாறு நடந்தது என்பதை பேண்டசியில் வகை பாணியில் ஷினாகவா குரங்கு கதை அமைந்து ள்ளது." பொறாமை உன் மனதில் இருந்தால் நரகத்தை சுமந்து கொண்டு இருப்பது போல எனும் வரி கதையில் ரசிக்க வைத்தது

பூனைகள் நகரம் இக்கதையின் நாயகன் டெங்கோ அறிதிறன் குறைபாடுள்ள நோயாளிகளை பராமரிக்கும் இடமான சாண்டோரியத்தில் உள்ள தந்தையை பார்க்க ரயிலில் செல்கிறான்.இளம் வயதில் தொலைக்காட்சி நிறுவனத்தில் வரி தண்டலராய் வேலை பார்த்த தந்தையுடன் செல்வதால் ஞாயிற்றுக்கிழமை என்பதே உணராதவன்.டெகோவிற்கும் அவனது தந்தைக்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது. 

தனது தந்தையைப் பார்க்கச் செல்லும் பயணத்தின் போது, டெங்கோ 'பூனைகள் நகரம்' என்ற தலைப்பிலான ஒரு கதையைப் படிக்கிறான். அக்கதை, ஒரு இளைஞன் தற்செயலாக ஒரு ஊரில் இறங்குவதையும், அங்கு இரவில் மனிதர்களுக்குப் பதிலாகப் பூனைகள் நடமாடுவதையும், இறுதியில் அவன் அந்த உலகத்திலேயே சிக்கிக் கொள்வதையும் விவரிக்கிறது.டெங்கோவின் தாய் குறித்த உண்மைகளை அவனது தந்தை சொல்கிறார். தன் பிறப்பு குறித்து நீண்ட காலச் சந்தேகம் தீர்ந்தது. .

"நான் யார்?" என்ற கேள்விக்கான விடையைத் தேடுவதே அவனது வாழ்க்கையின் முக்கிய நோக்கமாக அமைகிறது.தனது பிறப்பின் உண்மை தேடும் அவனது பயணம், அந்த மர்மமான நகரத்திற்குள் செல்வதைப் போன்றது என உணர்கிறான்.

விளக்கம் இல்லாமல் ஒன்றைப் புரிந்து கொள்ள முடியாவிட்டால், விளக்கினாலும் அதைப் புரிந்து கொள்ள முடியாது" என்ற தத்துவார்த்தமான உரையாடல்கள் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நிகழ்கின்றன. 

'விநோத நூலகம்' கதை நூலகத்திற்கு புத்தகம் மாற்றச் செல்லும் சிறுவன்.. தான் தேடிக்கொண்டிருக்கும் புத்தகத்தை குறிப்பிடுகிறான். நேராகப்போய் கீழே இறங்கி வலதுபுறம் திரும்புங்கள் என்கிறார். அதை நம்பிச்செல்லும் சிறுவன் படியில்.கீழே இறங்கி மாய உலகில் அகப்படுகிறான்.  அதன் பின் எப்படி மீண்டான் என்பதே கதை.
ஸாம்சாவின் காதல் கதையிலும் மாய உலகில் இருப்பது போன்றே கதை பின்னப்பட்டிருக்கும்.

*ஒரு வெற்றிடம் உருவானால் அதை வேறொன்று வந்து நிரப்ப வேண்டும்" 
எனும் வரி கதையுடன் இணைந்து வரும் அழகியாலாக மிளிர்கிறது.

முரகாமியின் படைப்புகளில் காணப்படும் யதார்த்தமும் கனவும் கலந்த உலகம் இங்கும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கதாபாத்திரங்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுமையையும், தாங்கள் தொலைத்துவிட்ட ஒன்றையும் தேடிச் செல்கின்றனர். பூனைகள் இங்கு வெறும் விலங்குகள் அல்ல; அவை மனிதர்களின் மனநிலைகளையும் மர்மங்களையும் பிரதிபலிக்கும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன.மாயத்தன்மை கொண்ட எழுத்து நடை எளிமையாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கிறது

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்டபிரபு