Saturday, 10 June 2023
Friday, 9 June 2023
போகன்
நான் புகைப்படங்களில்
சிரிப்பதில்லை என்கிறார்கள்.
புகைப்படங்களில்
சிரிப்பதில்
எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஆனால்
எவற்றை யெல்லாம்
மறைத்துக் கொண்டு
என்னுள் புதைத்துக் கொண்டு
நான் சிரித்தேன்
என்று பின்னால்
உங்களுக்குத் தெரியவரும்போது
பயங்கரமாக இருக்கும்.
-போகன் சங்கர்
டாடா உப்பு
யோசனைகளை யார் மூலம் பெறுவது?
ஒரு முறை டாட்டா குழுமத்தின் தலைவரான ஜே ஆர் டி டாடா அவர்களை சந்திக்க ஒரு நபர் பலமுறை முயற்சி செய்து கடைசியில் அவரை சந்திக்க வாய்ப்பு பெற்றார்.
அந்த நபர் டாட்டாவிடம் உப்பை விற்குமாறு கூறினார். டாட்டா விற்கு உப்பை விற்பதில் பெரிதாக ஆர்வமில்லை.
ஆனால் அந்த நபர் உப்பின் விற்பனை குறித்து பல்வேறு தகவல்களை கூறி டாட்டாவை வியக்க வைத்தார். உப்பானது இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் ஒன்று. அதன் தேவையானது என்றும் இருந்து கொண்டே இருக்கும். எனவே உப்பினை விற்றால் அதிக பணம் பார்க்கலாம் என்று ஆலோசனை கூறினார்.
அந்த நபரின் யோசனையை கேட்ட டாட்டா உடனே உப்பினை விற்பதற்கு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டார். இன்று டாட்டா உப்பு இந்தியாவில் அதிகமாக விற்கப்படும் உப்பு. இந்தியாவில் உப்பு விற்பனையில் 17 சதவீதம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது.
எனவே யோசனைகளை நாம் யார் மூலம் பெற்றாலும் அதனைச் சிந்தித்து செயல்படுத்த நாம் தயாராக இருக்க வேண்டும்.
Thursday, 8 June 2023
சித்ரா
வாழ்வு எல்லா செயல்களிலும் இரு சந்தர்ப்பங்களை வழங்குகிறது.
சோதனைகள் நேரும் போது எதிர்த்து நின்று இடும்பைக்கு இடும்பைப் படுப்பது.
அல்லது தோற்று மங்கி மறைவது.
காந்தி எல்லா சந்தர்ப்பங்களிலும் முதலாவதையே தேர்ந்தெடுத்தார்.
வெற்றி ஈட்டினாரா அவரின் முயற்சிகள் நினைத்த பலனைத் தந்தனவா என்பது தொடர்ந்து அவரிடம் கேட்கப்பட்ட வினா.
அவரும் சளைக்காமல் அதற்கு பதில் உரைத்தவாறே தான் இருந்தார்.
"நான் வெற்றி கண்டேனா என்பதை நாளைய வரலாறு தான் தீர்மானிக்கும். ஆனால் நான் முயன்றேன் என்பதே என் வெற்றி"
தொடர்ந்து முயலுதலே காந்தியம்.
மாரிட்ஸ்பர்க் இரயில் நிலையத்தில் காந்தி கீழே தள்ளிவிடப்பட்ட நாள் இன்று.
Wednesday, 7 June 2023
Tuesday, 6 June 2023
நிர்மல்
விபத்து என்றால் என்ன? ஏன் நடக்கிறது.
விபத்துகளைக் குறித்து நமது கருத்துக்கள் பெரும்பாலும் தவறாகவே இருக்கும். விபத்திற்கான காரணங்களைப் பற்றி பேசும் பொழுது நமது விருப்பு வெறுப்புகள் நம் பார்வையை மங்கச் செய்வது இயல்புதான்.
தொழிற்சாலை பாதுகாப்பு மேலான்மை குறித்த அறிவு மற்றும் அனுபவத்தோடு சொல்கிறேன்.
1. அனைத்து விபத்துகளையும் தவிர்க்க முடியும். / all accidents are preventable.
2. விபத்துகளை தடுக்க ஒன்றுக்கு மேலான பாதுகாப்பு தடுப்பு அடுக்குகள் உண்டு.( protective Barriers ). இந்த அடுக்குகள் இயந்திரமாக இருக்கலாம், கருவிகளாக, செயல் முறைகளாக இருக்கலாம், மனிதர்களின் செயல்பாடுகளாக இருக்கலாம். அனைத்து பாதுகாப்பு அடுக்குகளும் செயல்படவில்லையெனில் விபத்து நடக்க அதிக வாய்ப்புகள் உண்டு.
3. விபத்துகள் அதுவாக நடப்பதில்லை. கடவுள் / காலம் போன்றவை உருவாக்கும் நிகழ்வும் அல்ல. / Accidents don’t happen , They are caused by the actions or inactions of one or more protective layer or people.
3. பெரிய விபத்துகள் தீடிரென நடப்பதில்லை. பெரும் விபத்துகள் நடக்கும் முன் பல சிறு விபத்துகள் நிகழ்ந்திருக்கும் அல்லது சிறு இழையில் தவிர்க்கப்பட்டிருக்கும் அல்லது மறைக்கப்பட்டிருக்கும். பல காலமாக கவனத்தில் கொள்ளாத சிறு விபத்துகளின் நீட்சியே இவை.
அனைத்து விபத்துகளுக்கும் காரணங்கள் இரண்டே இரண்டுதான்
1. மனிதர்களின் கவனக் குறைவு
2. நிர்வாக செயல் திறமையின்மை / நிர்வாக நெறி முறைகள் இல்லாமை அல்லது பின்பற்றாமை.
எனக்குப் பிடித்த விபத்து குறித்த வாக்கியம் : Accidents don't happen to people who take accidents as a personal insult.
விபத்துகளை தனிப்பட்ட அவமானமாக கருதுபவர்களுக்கு விபத்துகள் ஏற்படுவதில்லை.
Sunday, 4 June 2023
எஸ்.பி.பி படித்தது
சமீபத்தில் நடிகர் பிரபுவின் பேட்டி ஒன்றை பார்த்தேன். அதில் எஸ்பிபி பற்றி சுவாரஸ்யமான விஷயங்களை சொல்லிக் கொண்டிருந்தார் பிரபு.
'அடிமைப்பெண்' படம் வந்த சமயத்தில் சிவாஜியும் பிரபுவும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது பிரபு ஆடியோ பிளேயரை ஓட விட்டிருக்கிறார். 'ஆயிரம் நிலவே வா' பாடல் ஒலித்திருக்கிறது.
பாடலை கேட்க கேட்க சிவாஜியின் முகம் ஆச்சரியத்தில் மலர்ந்தது. பக்கத்திலிருந்த பிரபு இதை பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறார்.
பாடல் முடிந்ததும் சிவாஜி பிரபுவிடம்,
"பிரபு, இன்னொரு தடவை அந்த பாட்டை போடு."
மறுபடியும் பாடல்.
கண்களை மூடி தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருக்கிறார் சிவாஜி. பாட்டு முடிந்தது.
"பிரபு..."
"என்னப்பா ?"
"இன்னும் ஒரு தடவை அதை பிளே பண்ணு."
மீண்டும்... மீண்டும்... மீண்டும்...
பிரபு அந்த பேட்டியில் சிரித்துக்கொண்டே சொல்கிறார். "மொத்தம் 50 தடவைக்கு மேலே 'ஆயிரம் நிலவே வா' பாடலை ரசித்து கேட்டார் அப்பா.
அதற்கு பிறகு என்னிடம் கேட்டார். ''இந்தப் பாட்டை பாடியது யாருப்பா ?"
பிரபு சொல்லியிருக்கிறார்.
"புதுசா எஸ் பி பாலசுப்ரமணியம்னு ஒருத்தர் வந்திருக்காருப்பா. அவர்தான் இதைப் பாடி இருக்கார்."
சிவாஜி தலையை மேலும் கீழும் அசைத்துக்கொண்டே, "பிரபு, என்னோட அடுத்த படத்துல இந்த பையனை பாட வைக்கணும். விச்சு கிட்ட (MSV) இது விஷயமா உடனே பேசணும்."
அப்படித்தான் சிவாஜிக்கு 'பொட்டு வைத்த முகமோ' பாடலை பாடியிருக்கிறார் எஸ்பிபி,
'சுமதி என் சுந்தரி'
திரைப்படத்தில்.
இந்த செய்தியை அந்த பேட்டியில் சொன்ன பிரபு, இன்னொரு விஷயத்தையும் சொன்னார்.
"எஸ்பிபி அண்ணனை பொறுத்தவரை நிறைவான குணங்கள் நிறைய அவர்கிட்ட உண்டு. பல தடவை நான் அதை பார்த்திருக்கிறேன்.
அவரைப் பாராட்டி நான் ஏதாவது பேச ஆரம்பித்தால், என்னை தடுத்து நிறுத்திவிட்டு அவர் பக்கத்தில் இருப்பவர்களிடம் என்னைப் பாராட்டி இப்படி பேச ஆரம்பிப்பார் எஸ்பிபி அண்ணன்."
"பிரபுவோட நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
'என்னவென்று சொல்வதம்மா' பாட்டை ராஜகுமாரன் படத்துக்காக நான் பாடியிருந்தேன். அந்த பாட்டுக்கு பிரமாதமான எக்ஸ்பிரஷன் கொடுத்திருந்தார் பிரபு. அதனாலதான் அந்த பாட்டு ஹிட் ஆச்சு" என்று சொல்வாராம் எஸ்பிபி.
இதைக் கேட்டவுடனே நெகிழ்ந்து போய், பேச்சு வராமல் நிற்பாராம் பிரபு.
அதற்குள் எஸ்பிபி பக்கத்தில் இருப்பவர்களை நோக்கி, "டூயட் படம் பாத்திருக்கீங்களா ?
அதுல பிரபு சாக்சபோன் வாசிக்கிற அழகிருக்கே... பியூட்டிஃபுல்."
இதை உண்மையாகவே கண்களை மூடி மெய்மறந்து சொல்வாராம் எஸ்பிபி.
இதையெல்லாம் அந்தப் பேட்டியில் சொன்ன பிரபு, நெகிழ்ந்து போய் இப்படி சொல்கிறார்.
"நாமும் கவனிக்காத, மற்றவர்களும் நம்மிடம் சொல்லாத எத்தனையோ சின்னச் சின்ன நுணுக்கமான விஷயங்களையெல்லாம் பெரிதாக பாராட்டுவார் எஸ்பிபி.
அதனால்தான் எல்லோரும் அவரை இன்னமும் அவங்க மனசில வைத்து கொண்டாடுறாங்க."
இப்படி சொல்லி அந்தப் பேட்டியை நிறைவு செய்தார் பிரபு.
இதில் மிகப்பெரிய பாடம் ஒன்று ஒளிந்திருக்கிறது.
மற்றவர்களிடம் இருக்கும் நல்ல விஷயங்களை நாம் தேட ஆரம்பித்தால்,
நெகட்டிவான விஷயங்களைப் பற்றி நினைக்க கூட நமக்கு நேரம் இருக்காது.
எஸ்பிபி நல்ல நல்ல பாடல்களை மட்டும் தந்து விட்டுப் போகவில்லை.
நல்ல நல்ல பாடங்களையும் கூட
நமக்கு தந்து விட்டுப் போயிருக்கிறார்.
இன்று எஸ்.பி.பி.யின்
பிறந்த நாள்.
Saturday, 3 June 2023
Friday, 2 June 2023
Thursday, 1 June 2023
அனஸ்தீசியா
அனஸ்தீஸியா, குளோரோஃபார்ம் என்ன வித்தியாசம்?
அனஸ்தீஸியா என்பது மருந்து அல்ல. உணர்வில்லாமல் செய்வது என்று அர்த்தம். மயக்கம் அடையச் செய்கிற வாயுவின் பெயர் குளோரோஃபார்ம்.
முதல் அனஸ்தீஸிஸ்ட் கடவுளே! ஆதாமுக்கு மயக்கம் ஏற்படுத்தி, வலியில்லாமல் விலா எலும்பை அகற்றிய முதல் டாக்டர் அவரே! குளோரோஃபார்ம் 19-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் சர் ஜேம்ஸ் சிம்ஸன் என்னும் ஸ்காட்லாந்து
டாக்டரால் கண்டுபிடிக்கப்பட்டது. விக்டோரியா மகாராணி ஏழாவது குழந்தை பெற்றெடுத்தபோது, ராணி கேட்டுக்கொண்டபடி அவருக்கு குளோரோஃபார்ம் தரப்பட்டது. 1860-ல் வங்காளத்தில் சிப்பாய் கலகத்தின்போது 261 இந்துக் கைதிகளுக்கு டாக்டர் ஜேம்ஸ் எஸ்டேய்ல் ஆபரேஷன் செய்தபோது, மயக்கத்துக்கு அவர் வெற்றிகரமாகப் பயன்படுத்தியது ஹிப்னாடிசம்!
இன்று பக்கவிளைவுகள் எதுவுமில்லாமல் அனஸ்தீஸியா பிரமாதமாக முன்னேறிவிட்டது. ரமண மகரிஷிக்கு அனஸ்தீஸியா இல்லாமல் தோளில் ஆபரேஷன் செய்தார்கள். ரமணர் மனதைக் கட்டுப்படுத்திக்கொண்டார்.
-மதன்
Wednesday, 31 May 2023
வல்கனை சிங்க்
அது வல்கனை சிங்க் அல்ல !வல்கனைசேஷன் !.
ஆங்கிலத்தில் VULCANAISATION எனப்படும்.
நான்கு சக்கர வாகனங்களில் பங்ச்சர் ஆனால் சாதாரணமாக சைக்கிள் மற்றும் பைக் டியூப்களில் ஸ்டிக்கர் ஓட்டுவது போன்று ஓட்டினால் டயர்களில் அதிக அழுத்தம் காரணமாக மீண்டும் ஸ்டிக்கர் உரிந்துவிட வாய்ப்புண்டு.
அதனால் அதனை தவிர்க்கும் விதமாக சற்றே பெரியளவில் துளை விழுந்த இடத்தில் மற்றொரு ரப்பார் துண்டினைநடுவில் சிறிது கந்தகம் வைத்து பசையால் ஒட்டிவிட்டு இரண்டு இரும்பு துண்டுகளின் நடுவே ரப்பர் டியூபினை வைத்து அழுத்தி சூடு செய்தால் இரண்டு ரப்பர் இணைப்புக்களும் இன்னும் சற்று உருகி ஒன்றுடன் ஒன்று ஒட்டி கனமாக இறுகிவிடும்.
அதன்பின்னர் அங்கே ஸ்டிக்கர் உரியாது.அந்த இடம் தடிமன்(THICKNESS) அதிகரித்த காரணத்தால் மீண்டும் பங்ச்சரும் ஆகாது.
இது வல்கனைசேஷன் என்றழைக்கப்படும் ப்ராசஸ்.நமது மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக்கொண்டு விட்டார்கள்.
Tuesday, 30 May 2023
ஒளவையார்
கற்பிளவோடு ஒப்பர் கயவர்; கடும் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வாரே - வில்பிடித்து
நீர் கிழிய எய்த வீடுப் போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
*சிலர் கோபப்படுவார்கள், மறுபடி சேரமாட்டார்கள்ம். கல் உடைந்ததை போல
*சிலர் கோபப்படுவர் மீண்டும் சேர்ந்துவிடுவர்.தங்கம் உடைந்ததுபோல்
**சான்றோரின் கோபம்,வில்லை எடுத்துத் தண்ணீரில் அம்பு எய்தாற்போல்..ஒரு நொடி தண்ணீர் விலகும்.மீண்டும் சேர்ந்துவிடும்
-ஒளவையார்
Monday, 29 May 2023
நீட்சே
ஒரு ஆழமான மாயைக்குள் வாழ்ந்து வருகிறோம்-அதுதான் நம்பிக்கை,நாளை,வருங்காலம் என்னும் மாயை. மனிதர் இன்று இருக்கிற நிலையில் தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளாமல் உயிர்வாழ, உண்மையுடன் ஒன்றி வாழ முடிவதில்லை
-நீட்சே
Sunday, 28 May 2023
போகன்
மகாத்மா காந்தியின் பிரார்த்தனை .
(ஒரு சுமாரான மொழிபெயர்ப்பு)
கடவுளே!
வலியவர்கள் முன்பு சத்தியத்தை உரைக்கும் துணிவை எனக்குக் கொடு.
பலவீனர்களின் கைதட்டலுக்காகப் பொய் உரைக்க என்னை விடாதே.
நீ எனக்கு அதிர்ஷ்டத்தை அளித்தால் என் அறிவை எடுத்து விடாதே
நீ எனக்கு வெற்றியை அளித்தால் எனது பணிவை எடுத்து விடாதே.
நீ பணிவை எனக்கு அளித்தால் எனது கவுரவத்தை எடுத்து விடாதே.
எப்போதும் நாணயத்தின் மறுபக்கத்தைக் காண எனக்கு உதவி செய்.
என்னைப் போலவே சிந்திக்காதவர்களை துரோகிகள் என்று எண்ண
என்னை அனுமதியாதே.
என்னை நான் விரும்புவது போலவே மற்றவரையும் விரும்பக் கற்றுக்கொடு
வெல்லும்போது ஆணவத்தினாலும்
தோற்கும்போது மனத் தளர்ச்சியினாலும்
வீழ்ந்துவிட என்னை அனுமதிக்காதே.
வெற்றியைவிடவும் தோல்வி நீடித்திருக்கும் ஞானம்
என்று எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இரு.
மன்னிப்பது மேன்மையின்
பழிவாங்குதல் தீமையின் அறிகுறி
என்று எனக்குக் கற்றுக்கொடு.
நீ என்னிடமிருந்து வெற்றியை எடுத்துக்கொண்டால்
அதிலிருந்து கற்றுக்கொள்ளும் ஊக்கத்தை எனக்கு வழங்கு
நான் மற்றவரைக் காயப்படுத்தினால்
அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.
மற்றவர்கள் என்னைக் காயப்படுத்தினால்
அவர்களை மன்னிக்கும் மனப்பான்மையை எனக்கு வழங்கு.
கடவுளே!
எப்போதேனும் நான் உன்னை மறந்தால்
தயவுசெய்து
நீ என்னை மறந்துவிடாதே.
-போகன் சங்கர்
Saturday, 27 May 2023
Thursday, 25 May 2023
கறையான்
அண்மையில் கண்ட பிழைப்பயன்பாட்டுச் சொற்களில் ஒன்று ‘கரையான்’ என்பது. உள்ளிருந்து அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிக்கும் சொல்லாகக் ‘கரையான்’ என்று பயன்படுத்துகின்றனர்.
இடையின ரை ஆளப்படும் ‘கரையான்’ என்ற சொல்லுக்குக் கரை + ய் + ஆன் = கரையான் என்ற பொருளைத்தான் கொள்ள வேண்டும். அதாவது கரையிலிருப்பவர் என்பது பொருள்.
கரையில் இருப்பவர் யார் ? மீனவர்கள். அவர்களை வலைஞர்கள் என்பர். அவர்கள்தாம் வலையிட்ட பின்னர்க் கரையில் காத்திருப்பவர்கள். கரையில் வாழ்பவர்கள். அதனால் கரையான் என்ற சொல் மீனவர்களையும் கரைவாழ் மக்களையுமே குறிக்கும். அச்சொல் ஒருபோதும் புத்தகங்களை அரிக்கும் பூச்சியைக் குறிக்காது.
புத்தகத்தை, மரத்தை அரிக்கும் பூச்சியின் பெயர் எது ? அதனைக் ‘கறையான்’ என்று எழுத வேண்டும்.
கறித்தல், கறத்தல், கறள்தல், கறுத்தல் முதலானவை ஒன்றுக்கொன்று அருகிலான பொருளுடைய சொற்கள்.
கறித்தல் என்றால் பல்படுபொருளைக் கடித்தல். இதுவே பிறகு கொறித்தல் ஆகியிருக்க வாய்ப்புள்ளது. அணில் கறித்த/கொறித்த கொய்யா.
கறத்தல் என்றால் உள்படுபொருளை உண்ணற்கு (அல்லது பயன்பாட்டிற்கு) எடுத்தல். பால் கறக்கிறோம்.
கறள்தல் என்றால் வளர்ச்சியறுமாறு செய்தல், அவ்வளவிற்கு உண்டு அகற்றுதல்.
கறுத்தல் என்றால் அழுக்கு/மாசு/குறை ஆதல்.
இச்சொற்கள் அனைத்தோடும் அருகுத் தொடர்புடைய சொல்தான் ‘கறை’ என்பது. உண்ணற்குச் செய்யும் உறுவழி அல்லது ஊறுவழி. அதன்வழியுற்ற குறைவு, கெடுவு.
ஊர்ப்புறத்துப் பேச்சு வழக்கினை ஊன்றிக் கவனியுங்கள். உடைபட்ட தேங்காய்ப் பாதியைப் பற்களாலேயே அரித்துத் தின்பார்கள். அதனைக் ‘தேங்காயைக் கறண்டு தின்னுட்டான்’ என்று கூறுவர்.
இங்கே கறளுதல் என்பது வினை. இந்தக் கறள்பாடுற்றது கறை. அந்தக் கறையைச் செய்யும் பூச்சியினம் என்பதால் அது கறையான். அப்பூச்சி ஒரு பொருளைக் கறிக்கிறது / கறக்கிறது / கறள்கிறது. கறை உருவாக்குகிறது. எனவே அது கறையான்.
அதனால் அரிக்கும் செல்லுப் பூச்சியைக் குறிப்பதற்குக் ‘கறையான்’ என்றே எப்போதும் ஆள்க !
- கவிஞர் மகுடேசுவரன்
Wednesday, 24 May 2023
marriage
திருமணம் வெற்றி பெற இரண்டே விதிகள் தான்…
ஆக்டன் நாஷின் (Ogden Nash) மேற்கோள் இது.
To keep your marriage brimming
With love in the loving cup
Whenever you are wrong, admit it…
Whenever you are right, shut up..
எழுத்தாளர் சுஜாதாவின் மொழிபெயர்ப்பில்…
"இல்லற இன்பத்துக்கு
இதுமட்டும் கத்துக்கொள்
தப்பென்றால் ஒத்துக்கொள்
சரியென்றால் பொத்திக்கொள்!"
வரலாற்றை மாற்றிய புகைப்படம்
அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
இந்த புகைப்படம் பற்றி, 'மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கின்றன. அதிகாலை 3:30 மணிக்கு வேலையைத் தொடங்கி, மாலை 5 மணி வரை வேலை செய்ய எதிர்பார்க்கப்படுகிறது" என்று எழுதினார்.
சிகாகோவிலிருந்து புளோரிடா வரை நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை புகைப்படங்களாகப் பதிவுசெய்தார். இவை குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிராக கூக்குரலை எழுப்ப உதவியாக இருந்தது. மேலும், பிரச்னையின் தீவிரம் பற்றி அமெரிக்க மக்களுக்குப் பரவலாக தெரியப்படுத்தியது.
விளைவாக, 1904 ஆம் ஆண்டில் தேசிய குழந்தைத் தொழிலாளர் கமிட்டி போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டன. இது குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான போராட்டத்துக்கு வழிவகுத்தது.
Subscribe to:
Posts (Atom)