Sunday, 10 November 2024

புத்தகம்-22


Reading_Marathon2024
#24RM050

Book No:22/100+
Pages:152

கதைக் கம்பளம்
-ச. தமிழ்ச்செல்வன்

ஸ்வீட் கடைக்குச் சென்று ஒரே ஒரு ஸ்வீட்டினை மட்டும் வாங்காமல் எல்லா சுவீட்டுகளையும் சாப்பிட்டு பார்த்தால் எப்படி சுவையாக இருக்குமோ அதுபோல இந்த தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதைகளும் ஒவ்வொரு எழுத்தாளர்களால் எழுதப்பட்டு சரியான வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அழகிய சுவை உளள தொகுப்பாக இது அமைந்துள்ளது. ஒவ்வொரு கதையின் இறுதியிலும் மாணவர்களிடமும் வாசிப்பாளர்களிடம் ஆசிரியர் நான்கு விதமான கேள்விகளை கேட்கிறார் ..அது இன்னும் அக்கதையினை மீளாய்வு செய்து நமக்குள் நாமே விவாதித்துக் கொள்ள வாய்ப்பாக அமைகிறது.

முகத்தில் அவர் கொண்டு வர நினைத்திருந்த சாதாரண தன்மை மெல்ல மெல்ல பரவுவதை உணர்ந்தேன் என்று முன்னுரையிலேயே கதைகளை சொற்களால் நெய்துவிடும் திருச்செந்தாழையின் விலாசம்  கதை ராமவிலாசத்தின் வரலாற்றையும் மனித வரலாற்றையும் பேசுவதாக முதல் கதை உள்ளது.

முதன்முதலாக கிராமத்துக்கு வரும் பேருந்தினைப் பார்த்து அந்த ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் அதிசயிருக்கின்றனர். மாடுகளை பேருந்தில் எங்கே கட்டி உள்ளார் என்பதை கண்டறியும் செம்பட்டை தான் அந்த ஊரில் பெரிய சயின்டிஸ்ட் ஆக வலம் வருகிறான். நகைச்சுவையோடு க.சீ.சிவக்குமார் சொல்லும் அந்த பஸ் கதை நம்மையும் அந்த ஊரில் பயணிக்க வைக்கிறது.

எண்பதுகளில் தொண்ணூறுகளில் தொலைக்காட்சியில் தோன்றுவது என்பது கடவுளாய் வரம் கிடைத்ததற்கு சமம் தான். டெலிவிஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க சொல்லும் ஒரு மனிதனும் அங்கு நடைபெறும் உரையாடல்களுமாய்
வேலையில்லாத இளைஞனின் கதையை சொல்லி இருப்பார் எழுத்தாளர் ஞா‌நி

அவன் நம்மளுக்கு எதிரி இல்லை நம்ம கோபம் தான் நம்மளுக்கு எதிரி. அதுதான் நம்மள கொலை வாங்குது என்ற கருத்தினை பேசும் கதையாய் எதிரி கதையை எழுத்தாளர் இமையம் எழுதி இருப்பார். காவல் நிலையத்துக்கு கம்ப்ளைன்ட் கொடுக்கச் செல்லும் ஒரு பெண்ணின் பார்வையும் பெண்ணினை அடித்தவரின் பார்வையும் காவல் நிலையத்தில் நடக்கும் அணுகுமுறையும் எவ்வாறு ஒரு கட்டத்தில் பெண்ணுக்கு எதிரியாக தெரிகிறது என்பதை நெற்றி போட்டில் அடித்தால் போல கதையில் சொல்லி இருப்பார்

பஸ் ஸ்டாண்டில் பஞ்சு மிட்டாய் வியாபாரம் செய்யும் அயினுக்கு 5 பெண் பிள்ளைகள். ஆண் பிள்ளைகளை எதிர்பார்த்து ஏமாந்த ஏழை. நாள்தோறும் வெயிலில் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் 30 ரூபாய் கிடைக்கும். இந்த அன்றாடம் காட்சியை வாழ்க்கையில் ..எட்டு குடி மாரியம்மன் கோவிலுக்கு செல்லும் பேருந்தில் ஏறும் போது ஒரு பெண் தன் குழந்தையை வைத்துக் கொள்ளும்படி தருகிறார் .அதை வாங்கி வைத்துக் கொண்டு பேருந்தில் ஏறி அமர்ந்தால் பெண்ணினை காணவில்லை .எந்த இடத்தில் தேடியும் அவள் தாயினை கண்டறியாதலால் தான் திரும்பவும் வீட்டிற்கு வருகிறான். ஏற்கனவே பெண்பிள்ளைகள்.. தற்போது இன்னொரு பெண் பிள்ளையா என்று ஆயிரம் கேள்விகளுடன் வரும்போது அவன் மனைவி எதிர்கொண்ட விதமும் ,கருணை பொங்கும் ஏழையின் பார்வையும் லட்சுமண பெருமாள் வயனம் கதையில் எழுதி இருப்பார்.

வீட்டோடு மாப்பிள்ளையாய் இருக்கும் தன் அக்காவின் வீட்டுக்காரர் உலகநாதனை பார்க்கும் போதெல்லாம் இவனுக்கு பயமும் அதிர்ச்சியும் ஏற்படும். ஒரு கட்டத்தில் அவர் செய்யும் காகித பொம்மைகளை பார்த்து மனமிறங்கும் அவன் அவரிடம் நட்பு கொள்கிறான். இப்படியே சென்று கொண்டிருக்கும் நாட்களில் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேரிடுகிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு குழந்தை இல்லாத தன் அக்கா மாமாவை சந்திக்க ஊருக்குச் செல்கிறான். அப்போது மாமா மளிகை கடையில் பொட்டலம் கட்டும் தொழில செய்கிறார் .அப்போது தான் இளமைப் பருவத்தில் தனக்கு செய்து கொடுத்த பொம்மைகளை மீண்டும் செய்து தரச் சொல்கிறான். அப்போது அந்த காகித பொம்மையை செய்யும் போதெல்லாம் பல சரக்கு கட்டும் பொட்டலமாக வருகிறது. அற்புதங்கள் தாங்கள் ஒரு காலத்தில் இருந்ததற்கான ஏதாவது அடையாளத்தை விட்டு வைக்காமல் போவதில்லையே. இழந்ததை நினைத்து தவித்துக் கொண்டிருக்கின்ற என் மாமாவின் கண்களில் அன்பின் ஒளி மீந்திருந்ததை நான் உணர்ந்தேன் என்று இறுதியில் உதயசங்கரின் கதை நம்மை நெகிழ வைக்கிறது.

நகரங்களில் வீடு மாறுவதற்கான வலியையும் வேதனையும் ஒரு வாடகை வீட்டுக்காரரின் பார்வையிலிருந்து அணுகும் ஆதவன் தீட்சன்யா தனது காக்கை குருவி உங்கள் ஜாதி என்னும் கதையில் விவரிப்பார். கடைசி பெஞ்ச் காரர்களின் உலகத்தினை தேர்வு எழுதும் நாட்களில் நடைபெறும் சம்பவங்களையும் கார்த்திக் புகழேந்தி தேர்வு காலம் கதையில் சொல்லி இருப்பார். 

கே என் செந்தில் அவர்களின் விருந்து கதை மிகவும் வாசிக்கப்பட வேண்டிய ஒன்று. ஏற்கனவே தொகுப்பு நூலில் கதையினை படித்திருந்தாலும் இந்த கதம்ப மலரில் அந்த கதையும் தனித்து தெரிந்ததாய் அமைகிறது. கட்சித் தலைவரின் பிறந்தநாளில் வழங்கப்படும் பிரியாணியை உண்ணும் ஆர்வத்தில் பிச்சைக்காரர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் இறுதியில் என்ன ஆனது என்பதை தனக்கே உரிய வார்த்தை ஜாலங்களுடன் கதையினை நம் முகத்துக்கு நேராக கற்பனையில் விரியும் படி சொல்லி இருப்பார்.

கேபிள் டிவி வசூலுக்கு செல்லும் சிறுவனிடம் பணம் கொடுக்காத வாடிக்கையாளர்கள், பணத்தை வசூல் செய்து வர வலியுறுத்தும் முதலாளி என தற்போது இருக்கும் மன அழுத்தம் வேலை அழுத்தம் அந்த மாணவனுக்கும் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தினால் அவன் இழந்தது என்ன பெற்றது என்ன என்பதனை அரிசங்கரின் புதுச்சட்டை கதை நமக்கு சொல்கிறது.

செந்தில் ஜெகதானனின் ஆடிஷன் கதையில் குழந்தைகளை தேர்ந்தெடுக்கும் பொறுப்பினை பெற்றிருக்கும் உதவ இயக்குனர் முன்னாள் காதலியின் மகள் தேர்வுக்கு வரும் போது நிகழும் சம்பவங்களும்.. கலைடாஸ்கோப் மனிதர்களை அன்றாட வாழ்வில் எதிர்கொள்ளும் சாதாரண மனிதனின் பார்வையை கார்த்திக் பாண்டியன் கதைகளிலும், ஐ கிருத்திகாவின் நாய்சார் கதையில் நாயின் தியாகமும் அன்பும் நன்றியுள்ள விசுவாசமும் கதைகளைப் படிக்கின்ற நமக்கும் ஏற்படுகின்றது.

*அவர் கண்களில் ஒரு தழும்பிய மகிழ்ச்சி கடந்திருக்கும் என உணர்ந்தேன் 

* பள்ளிச் சிறுவன் சிலேட்டையை நீட்டுவதை போன்ற ஒரு அறியாமை நிறைந்த முகத்துடன் மாப்பாவிடம் தந்தார்

*ஆவேசமான கண்கள் காருக்கு முன்பாக சாலையில் ஓடியபடி இருந்தன.

*பழைய நாட்களின் ஞாபகங்கள் மறதியின் புதைச்சியேற்றிலிருந்து மீறி கிளம்பி வந்தன

*தொலைந்த ஞாபகங்களை தேடிப் பிடிப்பவர் போல நெற்றியை சுருக்கினார்

ஆறாம் வகுப்பில் சிறுகதைபூங்கொத்து புத்தகம் வாங்கியவுடன் அந்த கதைகளில் வரும் 10 கதைகளையும் படித்து விடுவேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். குழந்தைகளுக்கு சொல்லும் படி இருக்கும். நாம் கற்றுக் கொள்ளும்படி இருக்கும் .நாமே முயன்று வாசித்தது மிகவும் இனிமையான வாசிப்பு நாட்களில் ஒன்று. அதேபோல இந்த புத்தகத்தில் உள்ள 15 கதைகளை வெவ்வேறு எழுத்தாளர்கள் வெவ்வேறு கோணங்களில் வெவ்வேறு அனுபவங்களை நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது. ஒவ்வொரு கதையும் கதை நிகழ்ச்சியும் நம் வாழ்வினோடு சேர்த்து அசை போட வைக்கிறது. அனுபவங்களை கூர்தீட்டுகிறது. மிகச் சிறப்பான கதைகளை தேர்ந்தெடுத்து தொகுத்த எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் 

தொடர்ந்து வாசிப்போம் 

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment