Saturday, 2 November 2024

நியாண்டர் செல்வன்


"முடிவற்ற குரங்குகள் தியரி" (Infinite Monket Theorem) என ஒரு கோட்பாடு புள்ளியியலில் உண்டு

1913 ஆண்டு எமிலி போரெல் எனும் கணிதவியல் நிபுனர் இதை முன்மொழிந்தார். இதன்படி "இன்பினிட்டி" எனும் முடிவற்ற எண்ணிக்கையில் உள்ள குரங்குகள் கையில் தலா ஒரு கணிணியை கொடுக்கவேண்டும். அதன்பின் அந்த குரங்குகள் தொடர்ச்சியாக அந்த கணிணியில் நொடிக்கு ஒரு பட்டனை அமுக்கவேண்டும்

இப்படி முடிவற்ற எண்ணிக்கையிலான குரங்குகள், பல, பல லட்சம் கோடி ஆண்டுகள் கணிணியை தட்டச்சிகொண்டே இருந்தால், ஏதோ ஒரு குரங்கு ஷேக்ஸ்பியரின் மொத்த படைப்புகளையும் எழுத்து மாறாமல் ரேண்டம் ஆக தட்டச்சும் என்றார் எமிலி

அளவற்ற நேரம் இருந்தால் தற்செயல் ஆக எது வேண்டுமானாலும் நடக்கலாம். ரேண்டம் ஆக நடக்கும் விசயங்களுக்குள் தற்செயலான முறையில் ஒழுங்கு உருவாகும் என இந்த கோட்பாடு கூறியது

பிரபஞ்சம் உருவானது, உயிர்கள் உருவானது எல்லாவற்றையும் இந்த முடிவற்ற குரங்குகள் தியரி விளக்குவதாக கூறப்பட்டது

ஆனால் இந்த கோட்பாடு தியரிட்டகல் ஆக சாத்தியமா என நூறாண்டுகளுக்கு மேலாகியும் யாரும் கணிதவியல் முறையில் ஆராயவில்லை

இந்த ஆண்டுதான் பிபிசி ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இருவர்  "இந்த தியரி சாத்தியமா?" என ஆராய்ச்சி செய்துவிட்டு பின்வரும் தீர்ப்பை சொன்னார்கள்

"பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை அணுக்களையும் தலா ஒவ்வொரு குரங்காக மாற்றி, அனைத்தின் கையிலும் ஒரு கணிணியை கொடுத்து, அவற்றை நொடிக்கு ஒரு எழுத்தை அமுக்க சொன்னால், பெருவெடிப்பில் இருந்து பிரபஞ்சம் அழியும்வரையிலான நேரத்தை கொடுத்தாலும் அவற்றால் ஷேக்ஸ்பியரின் படைப்புகளை மட்டுமல்ல, வெறும் 79 எழுத்துக்கள் கொண்ட ஒரு டாக்குமெண்டை கூட உருவாக்க முடியாது

பல,பல கோடி பிரபஞ்சங்களை உருவாக்கினாலும், அதிலும் இது நடப்பதற்கான சாத்தியமே இல்லை" என்றார்கள்

ஆக போதுமான நேரத்தை கொடுத்தால் தற்செயலாக எல்லாமே நடக்கும் எனும் கோட்பாடு பிழையானது என்றது ஆய்வு.  இதை கண்டுபிடிக்கவே நூறான்டுகள் ஆகியிருக்கிறது

இதற்கு பிபிசி கொடுத்த தலைப்பு "குரங்குகள் எப்போதும் ஷேக்ஸ்பியரை எழுதாது"

எது முதலில் வந்தது — ஒழுங்கா, குழப்பமா?  
பிரபஞ்சத்தின் புதிரை யாரும் அறிந்ததில்லை

குரங்குகள் டைப் அடித்தால் 
ஷேக்ஸ்பியர் ஆகுமென்றார்கள்
ஒரு ஒற்றைபக்கத்தை கூட 
அவற்றால் அடிக்கமுடியவில்லை

எதனால் உருவானது இயற்கையின் நடனம்?  
எங்கிருந்து தோன்றின உலகத்து உயிர்கள்  
கூடுமா குழப்பத்தில் ஒழுங்கு தோன்ற?
நாம் அறிய முடியாத புதிரின் மொழியாக.

இது கேள்வி இல்லை, இது ஓர் சிந்தனை,  
ஒழுங்கில் இருந்து பிறந்தது ஒழுங்கற்றதன்மையா
அல்லது ஒழுங்கற்ற ரேண்டமில் பிறந்தது ஒழுங்கா?

நாம் காணும் உலகில் ஒவ்வொரு அணுவும்,  
அந்த ஒழுங்கின் அரிச்சுவடியா, குழப்பத்தில் பிறந்ததா?
குழம்புகிறான் மனிதன்
குழப்பமின்றி டைப்படிக்கின்றன குரங்குகள்
ஷேக்ஸ்பியர் ஆகும் ஆர்வத்தில்

#பூமியும்_வானமும்

~ நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment