Friday, 10 July 2026

மெளனம்.சம்மதமா


மெளனம் சம்மதமா
-ஷங்கர் பாபு

பேசாக்காரர்களைக் கண்டறிவது எப்படி? பார்க்க சாதுக்கள் போலத்தான் காணப்படுவார்கள். ஆனால், இப்படிப் பேசி ஆதங்கப்படுவார்கள்:

"தோணுச்சு..சரி.. போனாப் போகுதுன்னு விட்டுட்டேன்."

"வாய் வரைக்கும் வந்துச்சு, சரி, பொழைச்சுப்போன்னு விட்டுட்டேன்."

"எனக்குக் கேக்கத் தெரியாம இல்ல."

"அன்னைக்கே நாங்ககூட புழுங்கற மாதிரி கேட்டிருக்கணும், விட்டுட்டேன்."

"நுனிநாக்கு வரை வந்துச்சே!"

இவர்கள்தான் அந்தப் பேசாக்காரர்கள். அதாவது, நம்மில் 99% பேர்! இவர்கள், பேசுவதைப் பார்த்தால் குணக்குன்றுகள் போலத்தான் தோன்றும். ஆனால், சொல்லவில்லை, அதனால் நினைத்தபடி காட்சிகள் நடக்கவில்லை. நியாயம்தானே என்று பெருந்தன்மையாக இருப்பார்களா, என்ன!

அப்படிச் சொல்லி இருக்கலாமோ, இப்படிச் சொல்லி இருக்கலாமோ என்றெல்லாம் பரிதவிக்கத்தான் செய்வார்கள். ஆனால், சொல்ல நினைத்தபடி காட்சிகள் நடப்பதைத் தானே உள்ளுக்குள் விரும்புகிறோம். இது பேராசை இல்லையா?

சொல்லியிருக்க வேண்டிய விநாடி கடந்துவிட்டது. எனவே, அதைப்பொறுட்டி நடக்கும் சம்பவங்கள் உங்களுக்குச் சாதகமாக இல்லாதபட்சத்தில் இப்படித் தோன்றித்தான் செய்யும். "எனக்கு மட்டும் ஏன்?"

நுனிநாக்குவரை வந்துச்சே. ஏன் சொல்லவில்லை? உங்களின் 25,000 ஆவது வயதில்கூட அல்லது கலியுகம் முடியும் வரையும்கூட இந்த ஆதங்கம் தொடரும்!

பலரும் சொல்லாத வார்த்தைகளோடு வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். கடந்த காலக் காட்சியை மனதில் மீண்டும் மீண்டும் ஓட்டி, கற்பனையில் சொல்ல நினைத்ததைச் சொல்லி காலம்கடத்துகிறார்கள். ஒருகட்டத்தில் சொல்லாததைப் புரிந்துகொண்டு நடக்கவும், அடுத்தவரைக் குற்றஞ்சொல்லவும் தலைப்படுகிறோம். மனுஷனா இவங்களாம்?

உச்சக்கட்டப் பேராசை ஒன்றும் இருக்கிறது.

"அவரே புரிஞ்சுக்குவார்னு நினைச்சேன்."

அதாவது, மனதுக்குள்ளேயே நினைப்பீர்கள், அதைக் கேட்பவர் புரிந்துகொள்ள வேண்டும்; சொல்லாமல் சொல்வார்கள், மனதுக்குள் கதறுவார்கள், கண்களால் சொல்வார்கள், கேட்பவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள், நீங்கள் சொல்லாததையும் புரிந்துகொண்டு எதிர்வினையாற்ற! அதுவும் உங்கள் விருப்பப்படி!

நாம் எவ்வளவு பெரிய மொழி வளத்தைக் கொண்டிருக்கிறோம்! பேசுபவர்களைச் சிலாகிக்கிறோம். நாமும் மக்களுடன், நிறுவனப் பேச்சுகள், நேரில் என்று வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் பேசுகிறோம். ஆனால், சொல்ல வேண்டிய நேரத்தில், ஏனோ பேச்சுற்று நிற்கிறோம். நாம் மட்டும்தான் இப்படி என்று கவலைகொள்ள வேண்டாம். 12ஆம் நூற்றாண்டிலேயே பேசத் தெரியாத, 'ப்ரோ'க்களை நன்னூல்' என்னும் தன் இலக்கண நூலில் ஆராய்ந்திருக்கிறார் பவணந்தி முனிவர்.

அதாவது, "மட்டன் பிரியாணி உள்ளதா?" என்றால், "இல்லை" என்று சொல்லாமல், "பாகற்காய் பிரியாணி உள்ளது" என்றோ, "தயிர் சாதம் உள்ளது" என்றோதான் பதில் சொல்லி கடைக்காரர் டென்ஷன் படுத்துவார்.

கொஞ்சம் மார்க்கெட்டிங் உத்தி இதன் பின்னால் இருப்பதாக வைத்துக்கொண்டாலும், இல்லாத ஒன்றை இல்லை என்றே கூறாமலே, ஏன் சுற்றி வளைத்து இல்லை என்று கூற வேண்டும்? நேரடியாகப் பதில் சொல்வதில் என்ன பிரச்சினை?

நன்னூல் 8 வகைக் கேள்விகளில் மனிதன் 3க்கு மட்டும்தான் நேரடியான பதிலைச் சொல்வான் என்கிறது. அதாவது, 37.5% தான் நேரடியாகப் பதில் சொல்வான்; மீதி 62.5%, "பரோட்டா சாப்பிடுவாயா?" என்றால் "நான் விரதம்னு சொன்னேனா?" என்று குண்டக்க மண்டக்கத்தான் பதில் சொல்வான் என்கிறது.

நாகர்கோவில் நண்பன் ஒருவனிடம், "சாப்பிட்டாச்சா?" என்றாள், அவன், "மணி 2 ஆகுதுல்லா?" என்பான். அதாவது, மத்தியானம் 2 ஆகிறதாம். இன்னமுமா சாப்பிடாமல் இருப்பான் என்று நாமாகவே புரிந்துகொள்ள வேண்டுமாம். அடேய்!

இப்படியெல்லாம் சுற்றி வளைத்துப் பேசும் இயல்புடைய மனிதனுக்கு, பேச வேண்டியதைப் பேசும் நேரத்தில் தொண்டைக்குள்ளேயே வார்த்தைகள் சிக்கி நின்றுவிடுவது நகை முரண் ஒன்று. பேசிக்கொண்டே இருக்கிறோம் அல்லது பேசவே இல்லை அல்லது தேவையான நேரத்தில், தேவையான நேரத்தில் பேசுவதே இல்லை அல்லது சுற்றி வளைத்துப் பேசுகிறோம். அதில் திறமை காட்டுகிறோம்!

பாஸ், இப்போது உலகம் நாளொரு 'ஏஐ', பொழுதொரு 'ஆப்' என்றாகிவிட்டது. நீங்கள் சுற்றிவளைத்துப் பேசுவதையும், சொல்லில் விளையாடுவதையும் புரிந்துகொள்ள யாருக்கும், இப்போதெல்லாம் நேரமில்லை. தெளிவாகச் சொன்னாலே அவரவர் இஷ்டத்துக்குப் புரிந்து கொள்ளும் உலகம் இது. நீங்கள் என்னைச் சொல்ல வருகிறீர்கள் என்பது உங்களுக்கே சில நேரம் சரியாகத் தெரியாதபோது, அடுத்தவரிடம் ஏன் அந்தப் பொறுப்பைக் கொடுக்க வேண்டும்?

சொல்லி வாய்ப்புகளை இழந்தவர்களைவிட, சொல்லாமல், தயக்கத்தால், வாய்ப்புகளை இழந்தவர்கள் கோடி. அதையே நினைத்து இன்றுவரை ஆதங்கப்படுபவர் கோடானுகோடி.

தீர்வு:
நினைத்ததை வெளிப்படுத்தாமல் அந்தச் செயல் பூர்த்தியடையாது. உங்களுக்காகவும், உங்களைச் சேர்ந்தவர்களுக்காகவும் நீங்கள்தான் பேசியாக வேண்டும். ஒருவேளை, நேரடியாகச் சொல்லி, அதனால் கேட்பவர் மனம் புண்படும் என்றால், அப்படிப் பயந்து வாழும் அளவு, அந்த உறவின் தேவைதான் என்ன?

நீங்கள் சொல்லி, அது எதிர்பார்த்த மாதிரி நடக்காவிட்டாலும், சொல்லிவிட்டோம் என்பதே நிம்மதியைத் தந்து, பிற்கால டென்ஷன் மாத்திரைகளைக் குறைக்கும். நேரடியான பதில்களும் வெளிப்படையான மனமும் விரும்பப்படும் காலம் இது. வெளிப்படுத்துங்கள், அடுத்தவர் வெளிப்படுத்தினால் அதையும் மதியுங்கள்.

சொல்லாமலே தெரிய வேண்டியது, சொல்லிய பின் தெரியப்போகிறது; மௌனம் சம்மதம் என்பது போன்ற வசனங்கள் எல்லாம் அந்தந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ள கண்டறியப்பட்ட சாதூர்ய வார்த்தைகள். மௌனம் சம்மதம் அல்ல, சம்மதம் என்றால் மட்டுமே சம்மதம்!

நன்றி தி இந்து

No comments:

Post a Comment