Monday, 29 May 2017

சுகிர்தராணி

மாட்டுக்கறி எனது உரிமை.
******************************

மாட்டுக்கறியே என் வாழ்க்கை
மாட்டுக்கறியே என் கொண்டாட்டம்
மாட்டுக்கறியே என் திருவிழா
மாட்டுக்கறியே என் வாழ்வு
மாட்டுக்கறியே என் உணவு

நான் பிறந்து கண்விழித்தபோது
உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே
எனக்கு முதல் சுவாசம்.

கைகால்களை உதைத்து உதைத்து
நான் வீறிட்டு அழுதபோது
என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில்
செருகியிருந்த எலும்புத் துண்டுகளே
எனக்குக் கிலுகிலுப்பை.

பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது
இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட
மாட்டிறைச்சிச் சாறே
எனக்குத் தாய்ப்பால்.

கறியின்மீது கவிழ்ந்திருக்கும்
மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை
உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து
பனியென உருகும் ஊன்நெய்யில்
சுட்டு எடுப்பதே என் பலகாரம்.

மாட்டுக்கறித் துண்டுகளை
நீளவாக்கில் அரிந்தெடுத்து
வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட
முட்செடியின் நெருங்கிய கிளைகளில்
பரப்பிவைத்து உலர்த்துகையில்
கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே
எனக்குப் பொழுதுபோக்கு.

களிமண்ணால் தேய்த்துக் குளித்து
ஆடையணிந்து வெளிச்செல்கையில்
என்மீது வீசும் புலால் நாற்றமே
எனக்கு நறுமணத் தைலம்.
.

வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு
இடுப்பு இறக்கத்தில் தொங்கும்
மாட்டுத்தோலின் பறையொலியே
எனக்கு ஆதிதாளம்.

சடங்குகளுக்கும் சாவுக்கும்
ஆணும் பெண்ணுமாய்
அடவுகட்டி ஆடும் குத்தாட்டமே
எனக்கு நாட்டியம்.

நல்ல மாட்டை அறுத்து
பசிய தென்னங்கீற்றின்மேல்
பத்தும் இருபதுமாய் பங்குபோட்டு
சாணம் மெழுகிய மூங்கில்கூடையில்
செஞ்சிவப்பு மாட்டுக்கறியை அள்ளிச் செல்லும்
வாரத்தின் வெள்ளி,சனி நாட்களே
எனக்குத் திருவிழா.

இதுவே என் வாழ்க்கை
இதுவே என் கொண்டாட்டம்
இதுவே என் திருவிழா
இதுவே என் வாழ்வு
இதுவே என் உணவு.

இது என் ஆளுகைப் பிரதேசம்
பிரவேசிக்க நீ யார்?
எங்கிருந்து வந்தவன்?
எங்கிருந்து கிடைத்தது
உனக்கிந்த காவியாடை?

எனக்கான உணவை நாந்தான் விழுங்க வேண்டும்
எனக்கான எச்சிலை நாந்தான் உமிழ வேண்டும்

என் கருத்த தோலின்மீது
உன் காவிச்சாயத்தைப் பூசாதே
விரித்துப் போட்ட என் கூந்தலை
உச்சிக் குடுமியாய் மாற்றாதே

புனிதம் புனிதம் என்கிறாய்
எது புனிதம்? யார் புனிதம்?

புனிதம் என்னும் சொல்லே
ஓர் ஒடுக்குமுறைச் சொல்தான்..
உன் காவி- இந்தி அகராதியிலிருந்து
புனிதத்தை நீக்கு
மனிதத்தை நோக்கு

மாட்டுக்கறிவாசனை வீசும் நான்
புனிதமற்றவள்தான்..
என்னை புனிதமானவளாக்குவதற்கு
பசுமூத்திரத்தை என்மீது தெளிக்காதே
எரித்த சாணத்தை என்நெற்றியில் பூசாதே.

கோமாதா உனக்குத் தெய்வமா?
அந்தத் தெய்வத்தின் தோலையா
செருப்பாக அணிந்து கொள்கிறாய்?

கோமாதா உனக்குக் கடவுளா?
அந்தக் கடவுளின் இரத்தத்தையா
நீ பாலாகக் குடிக்கிறாய்?

மாட்டுக்கறியை நான் தின்கிறேன் என்று
கூப்பாடு போடும் நீ
என்னைச் செருப்பணிய விட்டாயா?

பசுவை வீட்டுக்குள் வரவழைக்கும் நீ
என்னைச் சேரியிலிருந்து ஊருக்குள் வரவிட்டாயா?

கோவிலுக்குள் மணியாட்டி கற்பூரம் காட்டும் நீ
கைத்தொழ கருவறைக்குள் என்னை விட்டாயா?

மதத்திற்கும் மாட்டுக்கும் முடிச்சுபோடும் நீ
மதத்திற்கும் மதச்சார்பற்ற நாட்டிற்கும்
முடிச்சுப்போட்டுப் பார்த்தாயா?

இது மதச்சார்பற்ற நாடு…
மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உரிமையுண்டு
மாட்டுக்கறியைத் தேர்ந்தெடுக்கவும் உரிமையுண்டு
.

என்ன உரிமை இருக்கிறது உனக்கு
என்னை ஆள?

மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக
தாத்ரியில் அடித்துப் படுகொலை செய்தாயே..
ஏற்றுமதி செய்வதற்காக
மாடுகளையே வெட்டிக் கொல்லும்
உன்னை என்ன செய்வது?

நீ மாட்டிறைச்சிக்கு தடைபோட்டால்
மாட்டிறைச்சித் திருவிழா நடத்துவோம்
மாட்டிறைச்சித் திருவிழாவுக்கே தடைபோட்டால்
இனி தெருவுக்கொரு மாடறுப்போம்

மாட்டிறைச்சி என் வாழ்வு
மாட்டிறைச்சி என் பயணம்
மாட்டிறைச்சி என் வாழ்க்கை
மாட்டிறைச்சி என் உரிமை

வேண்டுமானால்
உன் மலத்தை நீ தீர்மானித்துக்கொள்
என் உணவை, என் மாட்டுக்கறியை
நான்தான் தீர்மானிப்பேன்...

சுகிர்தா ராணி முகநூல் பதிவு....

ட்வைன்

இந்திய லாட்ஜ்களில் உள்ள தலையணைகளைப் போல் உறுதியான,கடினமான பீரங்கியால்கூட துளைக்கமுடியாத பொருள் உலகில் கிடையாது
-மார்க் ட்வைன்

மேலாண்மை பொன்னுசாமி

வாழ்க்கை,லாப நோக்கம் உள்ளவனாக மனிதனை மாற்றுகிறது.
அதை மீறி மனிதனாக வாழ போராட்டம் தேவைப்படுகிறது
-மேலாண்மை பொன்னுசாமி

தமிழன்பன்

தனக்கு தனக்கென்று கணக்கு
பார்ப்பவன்
பிணத்தின் வாயையும் பிரித்துப்
பார்ப்பான்
இலவசமாய் சவப்பெட்டிகள்
கிடைக்கும் என்றால்
இரண்டு மூன்று தடவை இறக்கவும்
சம்மதம் என்பான்....
        ---ஈரோடு தமிழன்பன்

படித்தது

வாழையிலைகளைக்
காற்று கிழித்த பின்தான்
தென்னை ஓலைகளை
படைத்திருப்பானோ
கடவுள்

-படித்ததில் ரசித்தது

வாசிப்பனுவம்

நன்றி-சதீஷ்

வாசிப்பனுபவம் - மீள்

நான் தீவிர இலக்கியவாதி எல்லாம் அல்ல. நான் படித்த மிகச்சில நாவல்களுள் மிகச்சிறந்த நாவல் "புயலிலே ஒரு தோணி" ...

தமிழின் முதல் புலம்பெயர் இலக்கியமான இந்த நாவல் முதலில் கண்டுகொள்ளப்படாமலே  போனதாம்..ப.சிங்காரம் ஒன்பது ஆண்டுகள் இதை பதிப்பிக்க அலைந்தாராம்.இவர் மொத்தமே இரண்டு நாவல்கள் மட்டுமே எழுதியுள்ளார்.இவரைப்பற்றி மேலதிக தகவல்களுக்கு...சாருவின் பழுப்பு நிற பக்கங்களை படிக்கவும்.

முதலில் புயலிலே ஒரு தோணி

தென்கிழக்காசிய நாடான இந்தோனேஷியாவின் மைடான் நகருக்கு ஜப்பானிய படைகள் வருவதாய் தொடங்கும் நாவல் , இரண்டாம் உலகப்போர், ஜப்பானியர்களின் எழுச்சி-வீழ்ச்சி, போரினால் நிலைகுழையும் வாணிப பொருளாதாரம்,இந்திய-மலேய-பர்மா-சீன நாடுகளுடனான இந்தோனேஷியாவின் கடல் வாணிபம், வியாபாரம் நலிவடைதல்-பினாங்-பேங்காக்-மீண்டும் சுமத்ரா தீவுகள்-இந்திய தேசிய ராணுவம்-கொரில்லா படைகள்-டச்சு படைகளோடு மோதல்-யுத்தம் என்ற ரீதியில் பயணிக்கிறது.இடை இடையே மதுரை, சின்னமங்கலம் என்று கதையின் நாயகனான பாண்டியன் நினைவின் ஊடாக அன்றைய தமிழ்நாட்டின் காலகட்டமும் சுவாரஸ்யமாக சொல்லப்படுகிறது. போர் , போர் நடந்த காலகட்டம், போரினால் ஏற்படும் இழப்புகள், சூதாட்டம்,விபச்சாரம்,திரைப்படம்,மதுபான விடுதிகள், ஹோட்டல்கள் என பலதரப்பட்ட நாடுகளின் கேளிக்கைகள்,பலதரப்பட்ட வாழ்க்கை முறைகள், பொருளாதார நலிவுகள், பிரிட்டிஷ் வருகையால் ஏற்படும் வியாபார  மறுமலர்ச்சி, இந்திய தேசிய ராணுவம், கொரில்லா படைகளின் எழுச்சி, அவர்களின் பயிற்சிமுறைகள், யுத்த யுக்திகள்,டச்சு ராணுவத்தின் எழுச்சி என நாவல் முழுக்க விவரணைகள் கொட்டிக்கிடக்கின்றன.

குறிப்பாக கடற்கூத்து (எ) புயல் பற்றிய வர்ணனையும், யுத்தகாலத்தின் போது நடக்கும் சண்டைகளை பற்றிய வர்ணனையின் பிரமாண்டமும் எந்த வார்த்தைகளாலும் சொல்லி தீராது.நாவலுக்காக ப.சிங்காரத்தின் உழைப்பு அளப்பரியது,சொல்லில் அடக்க முடியாதது...நூற்றுக்கும் அதிகமான மலாய் மற்றும் மற்றைய நாட்டு வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.அவரின் எழுத்து நடை,இலக்கிய நயம், சொல்லப்படாத களம் இந்நாவலை உலகத்தரத்திற்கு எடுத்துச்செல்கிறது.சந்தேகமே இல்லை இது தமிழின் மிகச்சிறந்த நாவல்.

நாவலை விட அதில் சொல்லப்பட்டுள்ள ideology psychoanalysis அதிகமாக ஈர்க்கிறது.கதையின் நாயகனான பாண்டியன் ஒரு progressive thinker.நாவலின் முன்பாதியில் பாண்டியன் நம் புனிதம் ,வீரம், போலி இனப்பெருமை, நிரூபிக்கப்படாத வரலாறு ,சங்க இலக்கியங்கள்,ஆதர்சங்கள் ஆகிய அனைத்தையுமே அவன் பகடி செய்கிறான் ,அவற்றை குறித்த நம் பிம்பங்களை உடைக்கிறான்.நீங்கள் பெருமையாக, பாரம்பரியமாக நினைத்தவை ஒன்றுமே இல்லை என தக்க ஆதாரங்களுடன் தர்க்கம் புரிகிறான். இரண்டாம் பகுதியிலோ "பகுத்தறிவு" என்ற பெயரில் நாம் அறிவியல் ,விஞ்ஞானம் , சிந்தாந்தம் என ஏற்றுக் கொண்டதன் மூலம் உண்மையிலேயே தன்னிறைவு அடைந்துவிட்டோமா...கடவுள்அமைப்புகள் போல அறிவியலும் கற்பனைகளை முன்வைத்து செயல்படுவது தானே என உளவியல் ரீதியான கேள்விகளை முன்வைக்கிறான். "கிரியான்" கப்பல் பயணத்தின் போதும், முத்தையா உடனான உரையாடலின் போதும் பாண்டியனின் சிந்தனைகள் முழுமையானதாக,எல்லையற்றதாக எல்லாவற்றிற்கும் விடையளிக்கும் வகையில் உள்ளது.எனக்கு ஏற்படுவதை போலவே பாண்டியனுக்கும் வாழ்க்கையில் ஒரு சலிப்பு ஏற்படுகிறது.

"மனதில் சலிப்புத் தோன்றியிருக்கிறது.கொஞ்ச காலத்திற்காவது இடம் பொருள் ஏவல் மாறினால் தான் மனதில் அமைதி பிறக்கும்" என எண்ணும் வேளையில், அவன் குறிப்பிட்ட கொஞ்ச காலத்திற்கு பின்,

"எனக்கு காட்டுமிராண்டி வாழ்க்கை ஒத்துவராது.நான் ஊர்ப்பிராணி.பிரிந்து பிணங்கி வாழ்வது பிழை.இணைந்து இணைய வாழ்வதே முறை" என்பதை உணர்கிறான். ஆசிரியரே பல கேள்விகளை எழுப்பி அதற்கு அவரே விடையும் அளிக்கிறார். "தமிழ்பேரவை" எனும் அத்தியாயத்தில் இன்று நாம் பேசும் சாதிஒழிப்பு , மதம், தமிழரின் மேம்பாடு , கிணற்றுதவளை மனப்பான்மை, புலம்பெயர் தமிழர்கள் நிலை குறித்து அட்டகாசமான விவாதப்பகுதி ஒன்று உள்ளது.

நாவலின் எந்த பகுதியிலும் வலிந்து திணிக்கப்பட்ட நம்பகத்தன்மை இல்லாத சம்பவங்களோ, சுவாரஸ்யத்திற்காக சேர்க்கப்பட்ட பகுதிகளோ இல்லை.இது ஒரு அசல் வாழ்க்கை.பல எழுத்தாளர்கள்  சொன்னது போல இது போன்ற ஒரு நாவல் இதுவரை வந்ததில்லை,இனி வருவதற்குமில்லை.அதற்காகவேனும் இந்த நாவலை ஒருமுறை வாசித்துவிடுங்கள். இந்த நாவல் எனக்குள் ஏற்படுத்திய தாக்கங்களை வார்த்தைகளில் வெளிப்படுத்த தெரியவில்லை. புயலிலே ஒரு தோணி ஒரு வாழ்க்கை அதை வாழ்ந்துபார்க்க வேண்டும் ஒவ்வொருவனும்.

-பிரபு

பட்டுக்கோட்டை பிரபாகர்

ஈகோ பிரச்சனையில்
முட்டின வார்த்தைகளில்
போடா மயிரென்று
பிரிந்த நண்பனை
முந்தாநாள் மார்க்கெட்டின்
மூலையில் சந்தித்தேன்
அவன் கொஞ்சம் சிரித்தானோ..?
நானும் சிரித்திருக்கலாமோ ?
'எல்லாம் மறந்தாச்சு
எப்படிடா இருக்கே ?' வென
நேசமாய் கேட்டிருக்கலாமோ?
கிட்டேப்போய் கைகுலுக்கி
காபிக்கடைக்குக்
கூட்டிப்போய்
வயித்து வலி
இப்பவும் வருதாவென
வாஞ்சையாய் விசாரித்திருக்கலாமோ ?
கர்வத்தை அணிந்து கொண்டு
கற்பனையில் நொந்து கொண்டு
இப்போது அவனும்
இப்படித்தான்
இமை நனைய
கவிதை
எழுதிக்கொண்டிருப்பானோ..?

- பட்டுக்கோட்டை பிரபாகர்.

தேவதச்சன்

சிறுமி கூவுகிறாள்:
நான் போகிற இடம் எல்லாம் நிலா
கூடவே வருகிறதே.

சிறுவன் கத்தினான்:
இல்லை. நிலா என்கூட வருகிறது.

இருவரும் சண்டைபோட்டுக்கொண்டு திருப்பத்தில்
பிரிந்தனர்.

வீட்டிற்குள் நுழைந்து, உடன்
வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்.

நிலா இருக்கிறதா?
இருக்கிறதே.
அவள் சின்ன அலையைப் போல் சுருண்டாள்
அந்தச் சின்ன அலையில்
கரையத் தொடங்கியது நிலவொளி.

எல்லார் கூடவும் போன நிலா பிறகு
எங்கே போனதென்று
எல்லோர்க்கும் தெரியவில்லை.

- தேவதச்சன்
(திருமாவேலன் பதிவு)

கவிதை

உயிரடங்கிய சிறு பறவை
-வ.முருகன்

அதிகாலை நடைப்பயிற்சியில்
நெடுஞ்சாலையோரம் காணக்கிடைத்தது
விரைந்த வாகனம் மோதி
விழுந்துகிடந்த சிறு பறவையொன்று.
 
இதயம் படபடக்க
இரு கைகளிலும் அதை ஏந்திக்கொண்டேன்.
அதற்காகவே காத்திருந்ததைப்போல்
அடங்கிப்போனது அதன் உயிர்.

கனத்த மனதோடு
கைவிரல்களால் மண்பறித்து
போதுமான அளவில் அகழ்ந்தெடுத்த குழிக்குள்
அதைப் புதைத்துவிட்டு வீடு திரும்பினேன்.
 
செந்நிறப் பிசுபிசுப்புப் போக
கைகளை நீரால் அலசிய பின்
மென்சோகத்தையும் நுண்வலியையும்
கடந்து வரவென்று
சிவப்பு மசிப் பேனாவால்
கவிதையொன்றை எழுதி முடிக்கிறேன்.
 
எழுத்துகள் அத்தனையும்
அச்சிறு பறவை சிந்திய உதிரத்துளிகளாயும்
காற்றில் அலையும் காகிதத்தின் முனைகள்
உயிரடங்குகையில் துடிதுடித்த
அதன் சிறகுகளாயும் தெரிகின்றன.

பிரமிடுகள்

பிரமிடுகள்

சௌக்கியம்
சாப்பிட்டேன்
விசேஷமாய் ஏதுமில்லை
அனைவரும் சுகம் - பணியும் நலம்
நேரமில்லை
அப்படியா!
சரி மற்றும் ம்
வார்த்தை அடுக்குகளில்
பொய்களைப்போல் எளிதில் கிட்டுவதில்லை
புன்னகைகள்

-படித்தது

படித்தது

கடவுளிடம் வேண்டிகிட்டு காணிக்கை செலுத்தியது தான்
உலகின் முதல் லஞ்சம்..

அதையும் அவர் ஏற்றுகிட்டு
நிறைவேற்றாமல் போனது தான்
உலகின் முதல் ஊழல்.

*படித்ததில் பிடித்தது* 👌🏾👌🏾👌🏾👌🏾

மனுஷ்யபுத்திரன்

தமிழ் வாழ்க்கை

அழைப்பு மணிகள்
வேலை செய்யாவிட்டாலும்
வந்த யாரும் திரும்பிப் போனதில்லை

குளியலறைக்குத் தாழ்ப்பாள் இல்லாத
இந்த ஒன்றரை வருடத்தில்
யாருடைய அந்தரங்கத்திற்கும்
அபாயம் நிகழ்ந்துவிடவில்லை

நாற்காலியின் ஒடிந்த கால்
சிறு சமன் குலைவுக்குமேல்
விருந்தாளிக்கு
எந்த அவமதிப்பையும் ஏற்படுத்தாது

ஒரு வாரமாய்
பிரேக் சரியில்லாத வாகனத்தில்தான்
கடந்து திரும்புகிறேன்
தெய்வம் துணையிருக்கும் இந்த நகரத்தை

அடிவயிற்றின் இடப்பக்க வலி
இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது
குறிப்பிட்ட கோணத்தில்
கொஞ்சம் படுத்துக் கொண்டால்
சமாளித்துக் கொள்ளலாம்

எல்லா இடத்திலும்
சீர்படுத்த வேண்டியவை ஏராளம்
என்றாலும் சிக்கலற்றது
தமிழ்வாழ்க்கை

-மனுஷ்யபுத்திரன்

Wednesday, 3 May 2017

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்

எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள்
*மணி

பிடித்த பாடல் வரும்போது சத்தம் கூட்டி ரிமோட்டை கையில் வைத்து கத்தி கதிரேசன் மாதிரி போஸ் கொடுக்கும் குழந்தை பருவத்திலிருந்து தொடங்குகிறது எல்லாம் தெரிந்தது போல் காட்டிக்கொள்ளும் மனநிலை

*அஞ்சு நிமிசத்துக்கு முன்னாடி தெரிந்ததை ஐம்பது வருசத்துக்கு முன்னாடியே காட்டிக்கொள்ளும் மன இயல்பு

*இன்னும் கத்திப்பாரா பாலத்தில் டூரிஸ்ட் பஸ்ஸிலிருந்து ஒரு குரல் கேட்கும்
"எல்லாம் ஏரோப்ளைன் பார்க்காதவங்க பாத்துங்குங்க னு" அவரே அப்பதான் பார்ப்பாரு.ஆனாலும் நானெல்லாங்கிற தோற்றத்தை உருவாக்குவாரு

*ட்ராபிக் ஆனால் முதலில் பஸ்சிலிருந்து இறங்கி போய் முன்னாடி நின்னு வேடிக்கை பார்ப்பாரு.தன்னால் ட்ராபிக்கோ/ சண்டையோ க்ளியர் செய்ய முடியுமானு பார்ப்பாரு.முடிந்தால் செய்து முடித்து அலப்பறை செய்வாரு

*பேங்கிலோ,பொது இடத்திலோ கட்டுப்பணத்தை எண்ணும் போது,போகிற வருபவர்களை அநாயசமா பார்ப்பாரு.பணம் எண்றதுல P.hd முடிச்சமாதிரி

*புதிதாய் பணியில் சேர்ந்தவரை ஏளனமாய் என் சர்வீஸ் இருக்குமா உன் வயசு னு கேட்பாரு பாருங்க.அவரை வச்சு பாகுபலி பார்ட் த்ரீயே எடுக்கலாம்

*கன்னியாகுமரி போனவுடன் எல்லாரும் சூரியனை பாருகன்னு ஒருத்தர் சொல்லுவாரு பாருங்க.என்னமோ அவர் காட்டினதால் தான் சூரியனையே நாம பார்த்த மாதிரி

*ஒரு முறை எங்கிட்ட குலேபகாவலி படத்தை காட்டி இந்த படம் வந்தப்ப நீ பொறந்திருக்கவே மாட்டனு லுக் விட்டாரு.நான் உடனே இது ராமண்ணா படம்னு சொன்னதும் அமைதியானாரு

*அப்புறம் அரசியலை பத்தி பேசுவாங்க..தமிழக அரசியல் வரலாறு னு புக்  இருக்கு.அதை படிச்சாலே போதும் இவங்களை ஈஸியா சமாளிக்கலாம்.

*பஸ்ல க்ளீனரா இருப்பாரு பாருங்க..நல்ல பாட்டை ரசிக்க விடாம மாத்திட்டே இருப்பான்

*குழந்தைகளும் விதிவிலக்கல்ல..படம் பார்க்கும்போது அடுத்த சீனை சொல்லி அது திரையில் வந்தால் அனைவரும் ஆச்சர்யமாய் பார்க்கும் அதிசயத்தை குழந்தை ரசிக்கும்

*கி.ரா வின் கதை ஒன்னுதான் நினைவுக்கு வருது.கிராமத்துல எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம் இருந்தார்.ஊரே அறிவாளியாய் பார்க்கும்.சந்தேகம் கேட்கும்.அப்போ யானை ஒன்னு போகும்.ஊரே இவரை பார்த்து இது என்னனு கேட்கும்.?

நேத்து நைட் இருட்டு வந்துதுல்ல,அதோட மிச்சம் போகுது னு சொல்லுவார்.ஊரே கைதட்டி பார்க்கும்.

*அந்த காலத்தில னு ஆரம்பிக்கிற சிலர் தன் அனுபவத்தை,ஏமாற்றத்தை அப்படியே சொல்லி அதிலிருந்த உண்மையை சொல்லும்போது தான் அது நமக்கு ஆர்வத்தை தூண்டும்

*அத விட்டுட்டு நான்யார் தெரியுமில்ல, அந்த காலத்திலயே நான் பெரிய இவன்னு சொல்லும் ஏகாம்பரங்கள் அதிகமாயிட்டாங்க

*அனுபவத்தை அனுபவிச்சி சொல்லனும். தன்னை ஊரே அதிசயமா ஆச்சர்யமா பார்க்கனும் னு நினைப்பவரை பார்த்து சிரிச்சு கடந்து செல்லுங்க

தோழமையுடன் மணிகண்டபிரபு

ஆதவன் தீட்சண்யா

*குறுக்குசால்*

*நீங்களாகவே* உங்கள் கோவணத்தை
உருவியெறிந்ததன் மூலம்
கடமையைச் செய்யவிடாமல் தடுத்ததோடு
கஜானாவிற்கு வருமான இழப்பையும் ஏற்படுத்தியதற்காக
உங்கள்மீது கடுங்கோபத்திலிருக்கிறது அரசாங்கம்

உல்லாசம் பீறிடும் கேளிக்கைக்கான ஆவலில்
தன் பரிவாரத்தோடு
உப்பரிகை மாடத்திலிருந்து
மைதானத்தைப் பார்வையிடும் மன்னர்பிரானுக்கு
துயரங்களும் குமுறல்களுமான மன்றாடுதலை
உயிருருகச் சொல்வதற்கு ஒத்திகைப் பார்ப்பதன் மூலம்
மற்றுமொரு குற்றத்தையும் இழைத்தவராகிவிடாதீர்கள்

தின்பதற்கு எலியும் குடிப்பதற்கு மூத்திரமும்
தட்டுப்பாடின்றி கிடைக்கும் இத்தேசத்துக்கு
விசுவாசம் காட்டும் வாய்ப்புகளை
வேண்டுமென்றே தவறவிடுகிற நீங்கள்
விளைநிலம் வெள்ளாமை என்று உச்சரித்து
தேசவிரோதத்தின் அடர்த்தியை ஏன் கூட்டுகிறீர்கள்

பிடில் வாசித்துக்கொண்டிருப்பதில்
மன்னரோடு
மக்களும் போட்டியிட்டுவரும் நாட்டில்
சூழும் இக்கொடுநெருப்பை அணைக்க
யாரும் வரப்போவதில்லை
பொசுக்கும் சூட்டுக்குள் சிக்கித் தவிப்போரே
சொந்தக்காலில் தப்பி வாருங்கள்

கிளம்பிப்போன தடம் மறந்துப்போவதற்குள்
சொந்த ஊர் திரும்புங்கள்
பாளம்பாளமாய் வெடித்துக்கிடக்கும் இந்தப் பாழ்நிலத்தில்
பட்டொளி வீசி பறக்கும்படியாய் நட்டுவையுங்கள்
நம் தேசியக்கொடியை
ஜப்தி செய்ய வருவோரின் கழுத்தை இறுக்குவதற்காவது
அது தேவைப்படும்.

-ஆதவன் தீட்சண்யா

ஆத்மாநாம்

இந்த செருப்பைப் போல்
எத்தனைப் பேர் தேய்கிறார்களோ
இந்த கைக்குட்டையைப் போல்
எத்தனைப்பேர் பிழிந்தெடுக்கப்படுகிறார்களோ
இந்த சட்டையைப் போல்
எத்தனைப் பேர் கசங்குகிறார்களோ
அவர்கள் சார்பில்
உங்களுக்கு நன்றி
இத்துடனாவது விட்டதற்கு
-ஆத்மாநாம்

MAY day wishes

வெற்றிலை

வெற்றிலை
*மணி

வெற்றிலை பற்றி பல்வேறு இடங்களில் வாசுத்துள்ளேன்.ஆனால் கழனியூரானின் வெற்றிலை பற்றி படித்தது இருநாட்களாக பதிவிட தூண்டிக்கொண்டே இருந்தது

*வெற்றிலை பயன்பாட்டை கூறுகிறார்
தாம்பூலம்,வரவேற்க,மங்கல வீட்டில்,பெண் பார்த்து வெற்றிலை மாற்ற,மொய் வைக்க, ஆரத்திக்கு, இன்னும் பல

*வெற்றிலை போடும் பெரியவர் பாக்கை தேர்வு செய்வர்.கெட்டுப்போன பாக்கை கழித்து,நல்ல பாக்கை தேர்ந்தெடுத்து உட்புறம் ஊதி வாயில் போடுவர்.புழு,பூச்சி நீக்க.வெற்றிலையில் தூசினை முன் பின் துடைத்து லாவகமாய் வாயில் போடுவர்.

*வெற்றிலை போட்டு துப்பும் பாத்திரம் பெயர் துப்பாணி.

*கன்னிபெண்ணை இரண்டாம் தாரமாய் வயதானவர்க்கு கட்டி வைத்ததால் அவர் பாடிய நாட்டுப்புறப்பாட்டு,

"வாட வெத்தலை;வசங்குன வெத்தலை
வாய்க்கு நல்லால்லே!
வாக்கப்பட்ட புருஷன் கெதி
வாழ்க்கைக்கு நல்லால்லே!

*சவத்தை சுடுகாட்டுக்கு அனுப்பும்போது இடது கையில் வெற்றிலை வைத்து அனுப்புவார்கள்.அந்த வெற்றிலையை செத்தவன் கை பிடிக்காது என்பதால் இடது கையின் கீழே வெற்றிலையை வைப்பார்கள்.இதை சொல்லும் மரபுத்தொடர்தான் "செத்தவன் கையில் வெத்தலை கொடுத்தது போல""!

வெற்றிலையின் பிரமிப்பில் ஒருசிலவற்றை பதிவிட்டிருக்கேன்.நன்றி கழனியூரான்

-தோழமையுடன் மணிகண்டபிரபு

தொடுவதற்கல்ல வானம்

தொடுவதற்கல்ல வானம்
-அறிவுமதி

காதல்-கொடுப்பதன்று.ஈர்த்துக் கவிழ்ப்பதன்று.மடக்குதல் அன்று.மடங்குதல் அன்றுண் எதிர்பார்த்த வெறியில்..எதிர்பாராத சொடுக்கில் கிடத்துதல் அன்று.இரக்கத்தில் கசிந்து இருளில் தேங்குதல் அன்று.

தேடல்கள்-தம் காத்திருத்தலின் தற்செயல் நிமிடத்தில் திகைத்துச் சந்தித்து..உள்திரும்பித் திருப்தியுறுவது.இரு ஞாபகங்கள் விரும்பி ஒன்றை மறதிக்குள் அமிழ்வது.

அதை அறிய மனசு பூத்திருக்க வேண்டும்.காதலை வாங்கிக்கொள்ள எத்தனை பேருக்கு வாய்க்கிறது? காதலால் வாழ்ந்து கொள்ள எத்தனை பேருக்கு நேர்மை இருக்கிறது?...

மின்னல் கதை

மின்னல் கதை
-படித்ததில் பிடித்தது

பஸ் ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய போது அவன் விழித்துக் கொண்டான்.அருகிலிருந்த பேக்கை காணவில்லை.அதில்தான் அரிசி வசூல் பணம்மூன்று லட்சம் இருந்தது.அருகே அமர்ந்திருந்த இருவரையும் காணோம்."அய்யய்யோ! எம் பணத்தை காணோம்.!வண்டிய நிறுத்துங்க.!"பஸ் பிரேக் அடித்து நின்றது.நள்ளிரவு தூக்கம் கலைந்த எரிச்சலில் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர்.கண்டக்டர் அருகே வந்து "எவ்வளவுங்க.?"

"மூணு லட்சம்.!அரிசி வசூல் பணம்.!"
"பத்ரமா வைச்சுக்கரதில்லையா.?"
"பத்ரமாத்தான் வைச்சிருந்தேன்.!பக்கத்துல உட்கார்ந்திருந்த ரெண்டு பேரு மேலதான் சந்தேகம்.அவங்க எங்க இறங்குனாங்க.?"
"அவங்க கருமத்தம்பட்டில இறங்கி அரை மணி நேரம் இருக்கும்.!"
அதற்குள் டிரைவர் "எதிர்ல எந்த வண்டியும் வரல.!கோவை டூ ஈரோடுன்னு இருக்கிற போர்டை மாத்தி ஈரோடுடூகோவைங்கிற போர்டை வை.!ஒரு சின்ன ஐடியா.!

திருடனுங்க எதிர் திசையில் வருகிற பஸ்லதான் ஏறுவானுக.!"
போர்டை மாத்திக் கொண்டு பைபாஸில் வந்த வழியே விரைந்தது பஸ்.கருமத்தம்பட்டியில் நின்ற பஸ்ஸில் ஒடி வந்து ஏறியவர்கள் கையில் இருந்தது பணப்பை.!"வாங்க மாப்பிள்ளைகளா.!மாமியார் வீட்டுக்கு போகலாம்.!"என்ற குரல் கேட்டு டிரைவர்,பயணிகளின் பரிச்சையமான முகம் பார்த்து சுதாரிப்பதற்குள் மடக்கப்பட்டனர் பஸ் போலீஸ் ஸ்டேசனை நோக்கி விரைந்தது.!
- Karthik Karthik

மேலாண்மையின் கதை ஆளுமை

மேலாண்மையின் கதைகளில் சில

*பிறந்த போதினிலே

கிராமத்தில் எருமை பொட்டக் கண்ணு போட்டால் சந்தோசப்படும் குடும்பம் மருமகளுக்கு பெண் பிள்ளை பிறந்ததை கசப்பை விழுங்கிய முகமாய் தெரிகிறது.தாய் எருமையை பார்த்து அந்த மருமகள் பொறாமைப் படுகிறாள்

*நிறம் மாறும் நிஜங்கள்

புதிய உரக்கடை திறந்த ஆள் அண்ணாச்சி உரம் வாங்க கடன் கொடுக்க மறுக்கிறான்.பால் சொசைட்டி,ஆடு வித்த காசு வருமென்று சொல்லிவிட்டு கடன் வாங்குகிறான்.ஒரு வாரமாய் இழுத்தடித்து பணம் தர்றான்.முடிவில்

"என்ன செய்யறது தம்பி,உண்மையை சொல்லி நேர்மையாய் வாழனும்கிற நெனப்பைக்கூட வாழவிடாத உலகம் தம்பி னு முடிக்கிறார்
#செம பஞ்ச்

*அரும்பு

சிவகாசியில் தந்தை இழந்த சிறுமி தீப்பெட்டிக்கடைக்கு வேலைக்கு போகிறாள்.குழந்தை தொழில் செய்ய கூடாதென்ற சட்டத்தால் விசிட் வருவதால் வேலைப்போகிறது.வயதுக்கே வராத சிறுமி வயிற்றுப்பிழைப்புக்கு தாவணி கட்டி செல்கிறாள்.
"ஒரு பிரேதத்தை போல்.. அடங்கிப்போன சலனங்களுடன் நடந்தது..அந்த அரும்பி!

# தொகுப்பு முழுவதும் அருமையான கதைகள்

தோழமையுடன் மணி

மணிகண்டபிரபு

நீங்கள் எதை இழந்தீர்களோ
அதை மற்றவர்கள் பெற்றிருப்பார்கள்.!
-முதலாளித்துவம்

அண்ணாவின் கதை

பேரறிஞர் அண்ணா சொன்ன ஒரு கதை

அரசர் ஒரு ஐஸ் கட்டியை அருகில் இருந்த அமைச்சரிடம் கொடுத்து அவருக்கு அருகில் இருந்தவரிடம் கொடுக்கச் சொன்னார். அவர் அடுத்தவரிடம் கொடுக்க வேண்டும்.

இப்படியே கடைசி நபர் வரை கடத்திக் கொண்டு போகவேண்டும் ஐஸ் கட்டி கடைசி நபரை அடைந்த போது அது ஐஸ்கட்டியாக இல்லை. சில நீர்த்துளிகளே அவரைச் சென்றடைந்தது.

அரசின் பணம் இடைப்பட்ட மனிதர்களைத் தாண்டி கடைக்கோடிக் குடிமகனை எந்தளவிற்குச் சென்றடைகிறது என்பதை விளக்க அண்ணா சொன்ன கதை இது.