Monday, 29 May 2017

அ.வெண்ணிலா

ஒரு வகுப்பறையும்... சில இளவரசிகளும்
அ.வெண்ணிலா

பதினோரு மணிக்கு மட்டுமே
வெளியே வர வேண்டும்
காலையில் ஒரு முறை
மத்தியானம் ஒருமுறை
குழாயில் தண்ணீர் வரும்
வேளை தப்பி
வெளியே வருபவர்கள்
மைதானம் பெருக்க வேண்டும்
கடும் விதிகளை அறியாமல்
வயிறு பிசையும்
உள்ளாடை நனைந்து
ஈரம் பரவும்
உள்ள யாரு, வெளிய வா
உரத்து ஒலிக்கும்
அதிகாரக் குரலுக்குப் பயந்து
பல்லியாய் சுவரொட்டும் பிம்பம்
தண்ணீர் போகாமல்
வாரந்தோறும் அடைத்துக்கொள்கின்றன
நாப்கின்களால் நிறையும்
கழிப்பறை பீங்கான்கள்.

o

தினம் பத்து பேர்
அந்த நேரத்துக்குப்
போக மாட்டேன்றீங்க
என்ன சொன்னாலும்
உங்க இஷ்டத்துக்குத்தான்
போவீங்க
பொரிந்து தள்ளிக்கொண்டிருக்கிறது
அதிகாரத்தின் குரல்
கூச்சம் தொலைக்கலாம்
நின்று மாற்றவாவது
இடம் வேண்டுமல்லவா
கழிப்பறையில்.

o

மாசத்துக்கு
மூணு, நாலு நாள்
லீவு எடுத்தா என்ன பண்றது?
பதில் எதிர்பார்க்காமல்
ஒலிக்கும் கேள்வி
அறை முழுதும் பரவும்
வெட்கம் பூசிய சிரிப்புகளும்
நமுட்டுப் புன்னகைகளும்
வலி தோய்ந்த மௌனங்களும்
ஆங்காங்கு எழும்
கொடுக்குள்ள விலங்கொன்று
விஷம் இறக்கிய மகிழ்வில்
இடம் நகரும்.

o

அங்க நின்னு பேசின
இங்க நின்னு பேசினன்னு
பேச்சு வந்தது
படிச்சது போதும்னு
சோறாக்க வேண்டியதுதான்
அங்க பார்த்தேன்
இங்க பார்த்தேன்
இப்படித் தொட்டேன்
அப்படித் தொட்டேன்னு
யார்கிட்டயாவது சொன்ன
பள்ளிக்கூடம் வர முடியாது
காலையில சீக்கிரம் வரணும்
சாயந்திரம் என் சைக்கிள்ல வரணும்
படிக்கிறேன்னு திமிரா
உங்கம்மாகிட்ட சொன்னா
வீட்டவிட்டு வெளிய வர முடியாது
சொல்றபடி நடந்துக்க
இதெல்லாம் படிக்க வரலன்னு
யார் அழுதா
ஏறிக்கிட்டு நின்ன இடத்துல
நிக்குது பாரு
எல்லாம் ஜோடி ஜோடியா
இந்த வயசுல
தவறாமல் படித்துத்
தொலைக்க வேண்டியிருக்கிறது
மாதராய்ப் பிறந்திடவே நல்ல
மாதவம் செய்திட வேண்டுமம்மா.

o

எங்க காலத்துல எல்லாம்
கட்டுன ஆளத் தவிர
ஏறெடுத்துப் பார்க்க முடியுமா
அப்ப ஏது இந்த கசமுசால்லாம்
எங்க காலத்துல எல்லாம்
காலேஜ் படிக்கும்போதுதான்
கண்ணயே நிமிரவிடுவோம்
எங்க காலத்துல எல்லாம்
2 படிக்கும்போதுதான்
அதுகூட ஒண்ணு ரெண்டுதான்

இப்ப காலம் கெட்டுப்போச்சு
எட்டாவது பத்தாவது படிக்கிறதெல்லாம்
ஆளுக்கொரு ஜோடி வெச்சிருக்கு
எல்லாக் காலத்திலும்
கைதாகிக்கொண்டிருக்கிறார்கள்
ஆறு வயதுக் குழந்தை
பலாத்கார வழக்கில்.

o

முதல் ரத்தம் பார்த்துக்
கலங்கி
பாதி வகுப்பில் வெளியேறும்
பெண்
ஒரு செவிலித் தாய்க்கான
பிரியத்தை விட்டுச் செல்கிறாள்
தன் வகுப்பறையிடம்!

மேத்தா

நன்றி:திரு தங்கம்

*மு.மேத்தா*

*மே-22*

*திண்டுக்கல் இலக்கியக்களம்*

*சகாய மாதா மக்கள் மன்றம்*

*தமிழ் இனி*என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.

*சிறப்புப் பதிவு*

*ஆகாயத்துக்கு அடுத்த வீடு*

ஒருவருக்கும் தெரியாமல்
ரகசியமாய்
என்னை
உன்னிடம் கொண்டுவந்து
சேர்த்துவிடும்
இந்தக் கடிதம்!
🏵
எந்த ஊரில்
இருந்தாலென்ன...
என் கடிதத்தை நீ
தொட்டவுடன்
சிலிர்க்கும் எனக்கு!
🏵
எழுத்துக்களைப்
பார்க்கிறாய் நீ
இந்த
எழுத்துக்களின் வழியே
உன்னைப்
எட்டிப் பார்க்கிறேன் நான்!
🏵
காற்று உன் வீட்டுக்
கதவுகளை
அசைக்கும்போதெல்லாம்
நினைவுபடுத்திக் கொள்...
உன் இதயத்தை
அசைக்க நான்
எடுத்த முயற்சிகளை!
🏵
ஒவ்வொரு தடவையும்
நீ பார்த்த
பார்வைகளைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்
ஆல்பமாக

அர்த்தம் சொல்லத்தான்
அகராதி கிடைக்கவில்லை
🏵
பூங்கொத்து வேண்டாம்
எப்போதும்
வாடாமல் இருக்கும்
உன் வார்த்தைகள்...
🏵
புகைவண்டியில் உன்னை
வழியனுப்பும்போது
கேட்பேன்
"இப்போதாவது
என்னை
என்னிடம் விட்டுச் செல்!"
🏵
அவசியம் அனுப்பிவை
உன் திருமண
அழைப்பிதழை...
பரிசு விழுந்தது
யாருக்கென்று
பார்த்துக் கொள்கிறேன்!

நகுலன்

ரயிலை விட்டிறங்கியதும்
ஸ்டேஷனில் யாருமில்லை
அப்பொழுதுதான்
அவன் கவனித்தான்

ரயிலிலும் யாருமில்லை
என்பதை;

ஸ்டேஷன் இருந்தது,
என்பதை

'அது ஸ்டேஷன் இல்லை'
என்று நம்புவதிலிருந்து
அவனால் அவனை
விடுவித்துக் கொள்ள

முடியவில்லை
ஏனென்றால்

ஸ்டேஷன் இருந்தது.

- நகுலன்

பூமா

பார்க்கும் முன்பு
செடியில் இருந்தது
பார்த்த பின்பு கண்ணில் இருந்தது
இப்போது எனக்குள் இருந்தது

கடந்து செல்கிற
ஒவ்வொருவரும்
ஆளுக்கொரு ரோஜாவை தனக்குள்
எடுத்துச்சென்று கொண்டேயிருக்க
அந்த ஒரு ரோஜா
இன்னமும் செடியில்தான் இருக்கிறது
யாரும் பார்க்கும் முன்பு

-பூமா ஈஸ்வரமூர்த்தி

மாலதி மைத்ரி

நினைவில் மீந்த சாம்பலில்
துளி நெருப்பை ஊதி ஊதி
பாதுகாக்கும் காலம்
-மாலதி மைத்ரி

புத்தகத்தை போற்றுவோம்

ஒருகோடி ரூபாய் கிடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டபோது
"ஒரு நூலகம் கட்டுவேன்" என்று பதிலளித்தாராம் மகாத்மா

கரண்டியைப் பிடுங்கி விட்டு புத்தகம் கொடுத்தால் போதும் என்றாராம் தந்தை பெரியார்

தனிமைத்தீவில் தள்ளப்பட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்ட போது புத்தகங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து விட்டு வருவேன் என்று பதிலளித்தாராம்  ஜவஹர்லால் நேரு

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள் இங்கே ஒரு புத்தகப் புழு உறங்குகிறதென்றாராம் பெட்ரண்ட் ரஸல்

மனிதனின் ஆகப் பெரிய கண்டுபிடிப்பு எது என்று வினவப்பட்டபோது சற்றும் யோசிக்காமல் புத்தகம் என பதிலளித்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம் சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றாராம் நெல்சன் மண்டேலா

பிறந்த நாளுக்கு என்ன வேண்டும் என கேட்டபோது புத்தகங்கள் வேண்டும் என சற்றும் தயக்கமின்றி லெனின் கூறிட குவிந்த புத்தகங்கள் பல லட்சம்

ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன் பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவாராம் சார்லிசாப்லின்

ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித்தரும் ஆகச் சிறந்த பரிசு ஒரு புத்தகம்தான் என்றார் வின்ஸ்டன் சர்ச்சில்

பயங்கரமான போராட்ட ஆயுதங்கள் எவை என கேட்கப்பட்டபோது புத்தகங்கள்தான் என்றாராம் மார்டின் லூதர்கிங்

தான் தூக்கிலிடப்படுவதற்கு ஒரு நிமிடம் முன்பு வரை வாசித்துக்கொண்டே இருந்தாராம் பகத்சிங்

நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து
என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.
-ஆபிரகாம் லிங்கன்

ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!
– ஜூலியஸ் சீசர்

உலக வரைபடத்திலுள்ள மூலைமுடுக்குகளுக்கெல்லாம் போக விரும்புகிறாயா, ஒரு நூலகத்துக்குச் செல்..
– டெஸ்கார்டஸ்

போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா… ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்கு…
– இங்கர்சால்

சில புத்தகங்களை சுவைப்போம்… சிலவற்றை அப்படியே
விழுங்குவோம்… சில புத்தகங்களை மென்று ஜீரணிப்போம்!
– பிரான்சிஸ் பேக்கன்

புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே!
– லெனின்

உண்மையான வாசகன், வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு!
– சிக்மண்ட் ஃப்ராய்ட்

பழங்காலத்திய மகா புருஷர்களை நேரில் தரிசித்து, அவர்களுடன் உரையாட வேண்டுமா? நூலகத்துக்குப் போ…
– மாசேதுங்

கண்ணதாசன்

சாகும்போது பணக்காரனாகச் சாவதற்கு
வாழும்போது பிச்சைக்காரனாக வாழ்கிறான் மனிதன்
-கண்ணதாசன்

நூல்களும் ஒற்றுமைகளும்

நன்றி:யோகேஸ்

***நூல்களும் ஒற்றுமைகளும்***

------------பூக்கள்---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி

-----------விளக்கு-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]

------------இரவு----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ

------------வாசல்------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.

------------விஜயம்-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்

--------------காரி----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.

------------முத்தம்--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி

--------------பரிசு------------------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்

--------------மலர்---------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி

-------------பூ-----------------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ

-----------கோல்--------------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.

-----------கோட்டம்-------------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.

-------------கனி--------------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்

---------இலக்கியம்-------------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.

-----------மகன்------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.

-----------வீடு--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.

----------இதயம்--------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.

நா.காமராசன்

கடந்த காலத்திற்குள் உன் வேர்கள் நுழையட்டும், உன் கிளைகளையும் ஏன் அங்கேயே நீட்டுகிறாய்
-நா.காமராசன்

💥எழுத்துச் சுமைக்காரர்
எங்க ஊரு தபால்காரர்
எழுத்து மங்கும் சாயங்காலம்
எமனோடு போனதென்ன?

- நா.காமராசன்.

(தபால்காரர் பற்றிய கவிதையில்)

பகத்சிங்

புரட்சி உலகத்தின் விதி
அது துப்பாக்கியும் குண்டும்
மட்டுமல்ல
அது புரட்சியை விரும்பாதவர்கள் செய்யும் புரளி

மனிதனை மனிதன்
சுரண்டும்
முறையை முடிவுக்குக்
கொண்டு வரும்
போராட்டமே புரட்சி

-பகத்சிங்

கவிதை

பேனாவில் மை நிரப்புவது!

-தமிழ் மணவாளன்

பால்பாயின்ட் பேனா வந்ததிலிருந்து
மறந்து போய்விட்டது
பேனாவுக்கு மை நிரப்பும் பெருங்கலை

அப்போதெல்லாம்
விரலிடுக்கில் மை பூசிக்கொள்ளாமல்
வெற்றி பெற முடியாது
எந்தத் தேர்விலும்

பள்ளிக்குக் கிளம்பும்போது
`பேனாவுக்கு இங்க் போட்டியா?’ வெனக்
கேட்காமல் ஒரு நாளும் 
இருந்ததில்லை
அம்மா.
இப்போதெல்லாம் 
ஸ்னாக்ஸ் பாக்ஸ்
எடுத்துக்கிட்டியா என்பதைப் போல.

சிந்தாமல் மை நிரப்ப இங்க் ஃபில்லர்
பயன்படுத்துவது போல
கௌரவக் குறைச்சல் ஏதுமுண்டோ?
இங்க் ஃபில்லரைத் 
தொலைத்துவிட வேண்டும்.
ஐந்து மில்லி லிட்டர்
கொள்ளளவு கொண்ட பேனாவின்
விட்டம் ஒரு சென்டி மீட்டருக்கும் குறைவானது.
அதன் விளிம்பில்
இங்க் புட்டியின் வாயினைப்
பக்குவமானதொரு கோணத்தில் வைத்து
பதற்றமின்றிச் சொட்டுச் சொட்டாய்ப்
பேனாவின் 
இருட் குழலில் இங்க் வளர்வதை
உற்று நோக்கியபடி.
 
வாழ்க்கையைப் போலத்தான்
ஓர் இம்மியளவுகூட முன்னர்
போதும் என்று முடிவு செய்வதேயில்லை.

‘இன்னும் நிரம்பவில்லை
இன்னும் நிரம்பவில்லை’யென
சொல்லிக்கொண்டேயிருக்கும்
மனம், கை, கண் யாவும்
இங்க் வழிந்து வெளியில் கொட்டும்
ஒவ்வொரு முறையும்.

கண்ணதாசன்

கண்ணதாசனை ஒரு கிருஸ்தவர் கேட்டார்: ஏன் நீங்கள் இந்து மதத்தையே உயர்த்தி சொல்லுகிறீகள். மற்ற மதமெல்லாம் தாழ்வா என்று.
அதற்கு கண்ணதாசன் சொன்ன பதில்: நான் என்மனைவி அழகாக இருக்கிறாள் என்று சொல்லுகிறேன்.
நான் மற்றவர் மனைவி அழகில்லை என்று சொல்லவில்லையே. எனது மனைவியை அழகாக இருக்கிறாள் என்று நான் சொல்ல கூடாதா?

பழநிபாரதி

ஷெல்லி சொல்லுவான் ''பாதையில் நடந்து போகிறபோது எனது பாதச் சுவடுகளெல்லாம் கவிதைகளாக 'பிரிண்ட்' ஆகவேண்டும்'' என்று.
ஆனால் என் கவிதைகளெல்லாம் நீங்கள் நடந்து போகிற பாதைகளாக வேண்டும் என்று சொன்னவர் நா.காமராசன்.

இந்தி எதிர்ப்புப்  போர்க்களத்தில்... கிளிமூக்கு தீ நாக்குக் கவிதைகளால் கிளர்ச்சிகளை  வளர்த்தவர்...

''நாங்கள் சேற்றில் கை வைக்காவிட்டால் நீங்கள் சோற்றில் கை வைக்க முடியாது'' என்று விவசாயிகளின் வியர்வையை துடைத்தவர்...

''நாங்கள் நிர்வாணத்தை விற்கிறோம் ஆடைகள் வாங்குவதற்காக''
என்று பாலியல் தொழிலாளிகளின் துயரத்தை வடித்தவர்...

''சந்திப்பிழை போன்ற சந்ததிப்பிழை நாங்கள்'' என்று திருநங்கைகளின்
கண்ணீரை  உணர்த்தியவர்...

கடைநிலை மனிதர்களுக்காகக் கவிதைக்குடை விரித்தவர்...

முதிர்கன்னி, ஊமைச்சதங்கை, ராஜ திரவம் இப்படிப்  புதிய சொற்பூச்செண்டுகளைத் தமிழுக்கு அளித்தவர்...

கவிதையிலிருந்து விடுபட்ட ஒரு வார்தையைப் போல நம்மிடமிருந்து விடை பெற்றிருக்கிறார்...கவிஞர்களின் கதாநாயகன் நா.காமராசன்.
ஆழ்ந்த அஞ்சலி...   - பழநி பாரதி

மணிகண்டபிரபு

"மாலையில்" வாடியது பூ!!

கவிதை

மழை

கிழக்கில் பொட்டல் பரப்பில் குக்கிராமத்திசையில் எங்களூர் காத்து வீசும்.

அங்குதான் கடைசியாய் மழை பார்த்தேன். வானம் நீச்சல்குளமாய் நிரம்பியிருக்கும் காலத்தை நான் பார்த்ததுண்டு .

கடல்காற்றிலேறி மழை தாளமிட்டு விழுகையில் ஊரே கொட்டானை குடையாக்கி கொஞ்சூண்டு நனையும்.

ஒடம்பூக்களை உதிர்த்த மழைக்காற்றில் மழைகளை எண்ணினேம்.

அணிலோடும் பாதையில் விழுந்த நீர் ஈரமாயிருந்தது.

மாட்டுவண்டி நிழலில் நனையாது மழை பார்த்த நியாபகம் எப்போதும் மனதுக்குள் மழையாய் பெய்யும்.

இரவில் மழைவானத்தை அன்னார்ந்து பார்க்கிற ஆனத்தம் எங்களுக்காய் இருந்தது .

இரவெல்லாம் மழைமேல்மழைபெய்து நீர்த்தடங்களால் ஊரே மணமணக்கும்.

தாய்சேலை போர்த்திப்படுத்த கனவில் மழை பெய்வதுண்டு.

கனவில் விழும் இடிமின்னல்களை கைகால் விரல்களால் எண்ணுவோம்.

காலையில் வெட்டப்பட்ட மரச்சிதைவில் குட்டிகுட்டியாய் பூத்த காளான்பிஞ்சுகளை பிடிங்கிவந்து ஆத்தா கை கொடுத்தா ஊரே கறிக்கொழம்பா மணக்கும்.

சாயங்கால வானத்தைப்பார்த்து முத்தமிட்டு மகிழ்வதுண்டு.

மழைஓய்ந்த வெயிலில் முள்முட்டும் தட்டான் தோகைகளை பிடிக்க கொழிஞ்சிக்கொப்பொடித்து திருடனாய் திரிவோம்.

இரவில் மழை கூரைமேல் நடந்துசெல்கையில் தூக்கம் விழிதாண்டிச்செல்லும்.

மழைகேட்டுக்கொண்டு தூங்கிய இரவு அந்த நாளோடு முடிந்துவிட்டது.

மழைக்குளிரில் நடுங்கி இரவில் சேலைபோர்த்தி அயர்ந்த வருடம் எத்தனை ஆனது .

பாலைவன வருடங்கள் கடந்து இந்த இரவில் கேட்கிறது மழைபோலொரு சொட்சொட் எனும் சத்தம்.

வருடங்களைப் போர்த்திக்கொண்டு படுக்கப்போகிறேன்.

விடியலில் நிலம் மழையாய் இருந்தால் காங்கிரேட் தெருவில் மகிழ்ந்தவனாய் இருப்பேன். இன்றைக்காவது கனவில் யாரும் காளான் விற்க வேண்டாம் இறைவா .....

- அதிரூபன் 😍

ஜெயகாந்தன்

பொய் சொல்லுவதில் உள்ள மாபெரும் சள்ளையே இதுதான்.அதுமேலும் மேலும் புதிய புதிய களங்களில் தன்னைத் தொடர்ந்து அங்கீகரிக்கும்படி வந்து நிற்கும்-ஜெயகாந்தன்

படித்தது

கேட்டதும் பதிந்தது

*கோடு
புள்ளிகளால் ஆனது...
வறுமைக்கோடு
பெரும்புள்ளிகளால் ஆனது...

சுகிர்தராணி

மாட்டுக்கறி எனது உரிமை.
******************************

மாட்டுக்கறியே என் வாழ்க்கை
மாட்டுக்கறியே என் கொண்டாட்டம்
மாட்டுக்கறியே என் திருவிழா
மாட்டுக்கறியே என் வாழ்வு
மாட்டுக்கறியே என் உணவு

நான் பிறந்து கண்விழித்தபோது
உலர்ந்த உப்புக்கண்டத்தின் பெருவாசனையே
எனக்கு முதல் சுவாசம்.

கைகால்களை உதைத்து உதைத்து
நான் வீறிட்டு அழுதபோது
என் குடிசைவீட்டுத் தாழ்வாரத்தில்
செருகியிருந்த எலும்புத் துண்டுகளே
எனக்குக் கிலுகிலுப்பை.

பசிக்காக உதடுகளைச் சப்புக் கொட்டியபோது
இரவடுப்பில் வேக வைக்கப்பட்ட
மாட்டிறைச்சிச் சாறே
எனக்குத் தாய்ப்பால்.

கறியின்மீது கவிழ்ந்திருக்கும்
மஞ்சள்நிற கொழுப்புத் துண்டுகளை
உச்சிவெயிலில் உலர்த்தியெடுத்து
பனியென உருகும் ஊன்நெய்யில்
சுட்டு எடுப்பதே என் பலகாரம்.

மாட்டுக்கறித் துண்டுகளை
நீளவாக்கில் அரிந்தெடுத்து
வீட்டின் முற்றத்தில் கொத்தாக வெட்டப்பட்ட
முட்செடியின் நெருங்கிய கிளைகளில்
பரப்பிவைத்து உலர்த்துகையில்
கருப்புத் துணியேந்தி காகம் விரட்டுவதே
எனக்குப் பொழுதுபோக்கு.

களிமண்ணால் தேய்த்துக் குளித்து
ஆடையணிந்து வெளிச்செல்கையில்
என்மீது வீசும் புலால் நாற்றமே
எனக்கு நறுமணத் தைலம்.
.

வார்களால் இழுத்துக் கட்டப்பட்டு
இடுப்பு இறக்கத்தில் தொங்கும்
மாட்டுத்தோலின் பறையொலியே
எனக்கு ஆதிதாளம்.

சடங்குகளுக்கும் சாவுக்கும்
ஆணும் பெண்ணுமாய்
அடவுகட்டி ஆடும் குத்தாட்டமே
எனக்கு நாட்டியம்.

நல்ல மாட்டை அறுத்து
பசிய தென்னங்கீற்றின்மேல்
பத்தும் இருபதுமாய் பங்குபோட்டு
சாணம் மெழுகிய மூங்கில்கூடையில்
செஞ்சிவப்பு மாட்டுக்கறியை அள்ளிச் செல்லும்
வாரத்தின் வெள்ளி,சனி நாட்களே
எனக்குத் திருவிழா.

இதுவே என் வாழ்க்கை
இதுவே என் கொண்டாட்டம்
இதுவே என் திருவிழா
இதுவே என் வாழ்வு
இதுவே என் உணவு.

இது என் ஆளுகைப் பிரதேசம்
பிரவேசிக்க நீ யார்?
எங்கிருந்து வந்தவன்?
எங்கிருந்து கிடைத்தது
உனக்கிந்த காவியாடை?

எனக்கான உணவை நாந்தான் விழுங்க வேண்டும்
எனக்கான எச்சிலை நாந்தான் உமிழ வேண்டும்

என் கருத்த தோலின்மீது
உன் காவிச்சாயத்தைப் பூசாதே
விரித்துப் போட்ட என் கூந்தலை
உச்சிக் குடுமியாய் மாற்றாதே

புனிதம் புனிதம் என்கிறாய்
எது புனிதம்? யார் புனிதம்?

புனிதம் என்னும் சொல்லே
ஓர் ஒடுக்குமுறைச் சொல்தான்..
உன் காவி- இந்தி அகராதியிலிருந்து
புனிதத்தை நீக்கு
மனிதத்தை நோக்கு

மாட்டுக்கறிவாசனை வீசும் நான்
புனிதமற்றவள்தான்..
என்னை புனிதமானவளாக்குவதற்கு
பசுமூத்திரத்தை என்மீது தெளிக்காதே
எரித்த சாணத்தை என்நெற்றியில் பூசாதே.

கோமாதா உனக்குத் தெய்வமா?
அந்தத் தெய்வத்தின் தோலையா
செருப்பாக அணிந்து கொள்கிறாய்?

கோமாதா உனக்குக் கடவுளா?
அந்தக் கடவுளின் இரத்தத்தையா
நீ பாலாகக் குடிக்கிறாய்?

மாட்டுக்கறியை நான் தின்கிறேன் என்று
கூப்பாடு போடும் நீ
என்னைச் செருப்பணிய விட்டாயா?

பசுவை வீட்டுக்குள் வரவழைக்கும் நீ
என்னைச் சேரியிலிருந்து ஊருக்குள் வரவிட்டாயா?

கோவிலுக்குள் மணியாட்டி கற்பூரம் காட்டும் நீ
கைத்தொழ கருவறைக்குள் என்னை விட்டாயா?

மதத்திற்கும் மாட்டுக்கும் முடிச்சுபோடும் நீ
மதத்திற்கும் மதச்சார்பற்ற நாட்டிற்கும்
முடிச்சுப்போட்டுப் பார்த்தாயா?

இது மதச்சார்பற்ற நாடு…
மதத்தைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உரிமையுண்டு
மாட்டுக்கறியைத் தேர்ந்தெடுக்கவும் உரிமையுண்டு
.

என்ன உரிமை இருக்கிறது உனக்கு
என்னை ஆள?

மாட்டுக்கறி வைத்திருந்ததற்காக
தாத்ரியில் அடித்துப் படுகொலை செய்தாயே..
ஏற்றுமதி செய்வதற்காக
மாடுகளையே வெட்டிக் கொல்லும்
உன்னை என்ன செய்வது?

நீ மாட்டிறைச்சிக்கு தடைபோட்டால்
மாட்டிறைச்சித் திருவிழா நடத்துவோம்
மாட்டிறைச்சித் திருவிழாவுக்கே தடைபோட்டால்
இனி தெருவுக்கொரு மாடறுப்போம்

மாட்டிறைச்சி என் வாழ்வு
மாட்டிறைச்சி என் பயணம்
மாட்டிறைச்சி என் வாழ்க்கை
மாட்டிறைச்சி என் உரிமை

வேண்டுமானால்
உன் மலத்தை நீ தீர்மானித்துக்கொள்
என் உணவை, என் மாட்டுக்கறியை
நான்தான் தீர்மானிப்பேன்...

சுகிர்தா ராணி முகநூல் பதிவு....