Friday, 10 June 2022

புத்தர்

உண்மையென்று நீ உறுதி கூறும் ஒரு விஷயம், நீயே உனக்காக உணர்ந்திருக்கும், பார்த்திருக்கும், அறிந்திருக்கும் ஒரு விஷயமாக இருக்க வேண்டும்

-புத்தர்

Thursday, 9 June 2022

கண்ணதாசன்

திருமணங்களில் ஓதப்படும் மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட

'நான் மனமாக இருந்து நினைப்பேன்...
நீ வாக்காக இருந்து பேசு'
என்று ஒரு வரி வரும்.

கவிஞர் அதையே மிக எளிமையாக

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று பாடலாய் மாற்றியிருப்பார்

படித்தது

மன்னர் ராஜராஜ சோழன் பதவி ஏற்ற இரண்டு ஆண்டுகளில் ராஜேந்திரனைப் பட்டத்து இளவரனாக்கினார்.

தன்னுடைய ஆட்சிக் காலத்தின் தொடக்கத்திலேயே ராஜேந்திரனும் மகன் ராஜாதிராஜனுக்கு இளவரசுப் பட்டம் சூட்டி ஆட்சிப் பொறுப்புகளை பங்கிட்டுக் கொண்டாராம்

-படித்தது

ஓஷோ

மனம் ஒரு நீதிபதி,தனக்கு சரியென்று படுவதை மட்டுமே அது அனுமதிக்கும். தன்னுடன் பொருந்துகிறவற்றை மட்டுமே அது வளர்க்கும்,வலுப்படுத்தும். தனக்கு எதிரானவற்றுக்கு அது இடமளிப்பதில்லை

-ஓஷோ

ராஜா சந்திரசேகர்

கடைசி வரை
அம்மாவின்
மோதிர விரல்
வெறும் விரலாகவே
இருந்தது...!

· ராஜா சந்திரசேகர்

பாதசாரி

நம்மை நம் சிறுமையை, எல்லைகளை அறிந்து கொண்டு வாழ்வது விடுதலை.

மனித அறிவு இன்னும் நுழைய முடியாத இடங்கள் உண்டு. அறிவால் ஆதாரம் காட்ட இயலாதபோது, நம்பிக்கையே மனிதனுக்கு எளிய வழி. நம்பிக்கைக்கும் எல்லையுண்டு.அந்த நம்பிக்கையின் எல்லை என்பது நமது சமாதானத்தின் புள்ளி.

-பாதசாரி

Wednesday, 8 June 2022

சுந்தர ராமசாமி

பிரச்சினைகள் மெய்யான பாதிப்புக் கொள்ளும்போது தான் நடைமுறைப் பரிகாரங்கள் முளைவிடுகின்றன.

-சுந்தர ராமசாமி

தேவதேவன்

தாகவெறியுடன்
எரிகிறது நெருப்பு.
அதற்குத் தேவை தண்ணீர்
நாம் சொரிந்துகொண்டிருப்பதோ
வகை வகையான நெய்கள் !

- தேவதேவன்

Tuesday, 7 June 2022

ஜெயமோகன்

ஒரு தேனீயின் வாழ்க்கை சராசரியாக ஒருமாத காலம். ஒருநாளில் சாதாரணமாக ஐந்து சொட்டு தேன். நூற்றைம்பது சொட்டு தேனை கூடுசேர்ப்பதே அதன் பணி. அதன் வாழ்க்கையின் ’மதிப்பு’ என்பது ஒரு தேக்கரண்டி தேன். இப்பிறவியில் அதற்கப்பால் அது செய்வதற்கொன்றும் இல்லை. அதன் விளைவென்ன என அறியும் வழியும் அதற்கு இல்லை. அதை செய்துவிட்டு அது செல்வதுபோல நாமும் என இயல்பாகவும் அறுதியாகவும் உணர்வதொன்றே நிறைவுநிலை.


-ஜெயமோகன்

Monday, 6 June 2022

முகம்மது பஷீர்

இந்த வாழ்க்கையில் எந்தவிதப் பிரச்சனையும் இல்லாமல் சுகமாக இருக்கணும்னா சொந்தமான கருத்து எதுவும் நமக்கு இருக்கக்கூடாது

-முகம்மது பஷீர்

பாதசாரி

நல்லவனாக காட்டிக் கொள்வதைக் காட்டிலும் மிகச் சுலபமானது,நல்லவனாக இருந்து விடுவது

-பாதசாரி

கிரேஸி மோகன்

"குளிக்கும் போது, சோப்பு கரைஞ்சு, சாக்கடைக் குழியிலே காணாமல் போகுமே, அது மாதிரி இறந்திடனும். சோகத்தை விட மர்மம் பெட்டர் இல்லையா."

-கிரேஸி மோகன்

ஜேம்ஸ் ஆண்ட்ரூஸ்

கடந்த காலத்தில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று மட்டுமே பேசிக் கொண்டிருக்கின்றீர்கள் என்றால்,இன்றைக்குக் குறிப்பிடத் தகுந்ததாக எதுவும் செய்யவில்லை என்று அர்த்தம்

-ஜேம்ஸ் ஆண்ட்ரூஸ்

Sunday, 5 June 2022

நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே

ஏதோ ஒரு தலைமுறையில் நாம் மிதித்த அருவருப்பான ஒன்றுதான் சாதி.இன்று வரை அதைக் கழுவாமல்,புனிதம் என்று அதைக் காய்ந்துவிடாமலும் கழுவாமலும் நடமாடிக் கொண்டிருக்கிறோம்

-நாகராஜ் பொப்பட்ராவ் மஞ்சுளே

சுஜாதா

ஒரு டெலிபோன் சம்பாஷணை

“ஹலோ”
“ஹலோ”
“யார் பேசுறது?”
“நான்தான்”
“நான்தான்னா யார்?”
“நான்தான் ரேவதி”
“ரேவதி! அப்பா இல்லையா?”
“இல்லை”
“அம்மா?”
“இல்லை”
“சரி, அப்பா வந்தா ராமன் போன் பண்ணினதாகச் சொல்லுகிறாயா?!”
“யாரு?”
“ராமன், எழுதிக்கோ ரா-ம-ன்”
“ரா எப்படி எழுதுவது?”
“சரிதான்! பாப்பா, வீட்டில வேறே ஒருத்தரும் இல்லையா?”
“சேகர் இருக்கான்”
“சரி சேகரைக் கூப்பிடு”
“சேகர் இந்தா” என்று ரேவதி சேகரிடம் (வயது 1) டெலிபோனைக் கொடுக்கிறாள்.

-சுஜாதா

Saturday, 4 June 2022

பிளாட்டோ

பதவிகளைத் தேடி ஓடுபவர்களை அப்பதவிகள், உதறிவிட்டு ஓடுகின்றன; ஆனால்,உதறி எறிபவர்களை அப்பதவிகள் எப்படியாவது அவர்களின் தோளின் மேல் தொத்திக் கொள்கின்றன.

"எவர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவர் தெரியுமா?எவர் அதை விரும்பவில்லையோ அவரே அதற்கு மிகவும் தகுதியானவர்

-பிளாட்டோ (குடியரசு)

Wednesday, 1 June 2022

நேசமித்ரன்

விடுபடும் சகல வழிகளும்
சாத்தியப்பட்டுவிட்ட போதிலும்
இறந்த பாகனுக்கு அழுது 
அடுத்த பாகனுக்கும் மண்டியிடுகிறது
அன்புக்கு பழக்கப்பட்ட மிருகம்.

-நேசமித்ரன்

மனுஷ்யபுத்திரன்

எனக்கு வீம்பு அதிகம்
என்று தான் எல்லோரும் நினைக்கிறார்கள்..

இல்லவே இல்லை 
என்ன செய்வதென்று தெரியாத 
என் இயலாமைக்கு நான் அணியும் முகமூடி அது.

-மனுஷ்யபுத்திரன்

Monday, 30 May 2022

இனியவை நாற்பது

சலவரைச் சாரா விடுதல் இனிதே

புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே

மலர்தலை ஞாலத்து மன்னுயிரக் கெல்லாம்

தகுதியால் வாழ்தல் இனிது

வஞ்சகரைச் சேராமல் விலகியிருத்தல் இனியது. அறிவுடையாரின் வாய்ச் சொற்களைப் பின்பற்றி ஒழுகுதல் இனிது.நிலையான உலகில் வாழும் உயிர்களெல்லாம் உரிமைப்பட வாழ்தல் இனியது

பாதசாரி

வெளியிலிருந்து 
திறக்கும் கதவு என்றும் கூண்டுக்கானது

உள்ளிருந்து 
திறக்கும் கதவு
பறத்தலுக்கானது.

-பாதசாரி

சுந்தர ராமசாமி

நாம ஏன் ஒரு முடிவுக்கு அவசரமா வரணும்? முடிவுக்கு வந்து விட்டால் தெளிவை அடைந்து விட்டோம் என்று அர்த்தமா ..? ஒரு நாளும் இல்லை. எந்த முடிவும் நிரந்தரமானது அல்ல. முடிவுகளுக்கு முந்தைய பரிசீலனை தான் முக்கியம்..

மிகக் கடினமான யாத்திரை அது.. 

~ குழந்தைகள் பெண்கள் ஆண்கள் - 
சுந்தர ராமசாமி

வெண்ணிலா

உள்ளுக்குள் ஊறுகின்றன
ஓராயிரம் வார்த்தைகள்;
தோன்றுமிடமும் முடியுமிடமும் தெரியாமல் தோன்றிய கணத்தில் மறைகின்றன.
உச்சரிக்கும் சொல்லிலிருந்து கிளைக்கிறது;
வாழ்வின் அமுதமும், நஞ்சும்.

-அ.வெண்ணிலா

Sunday, 29 May 2022

எட்மண்ட் ஹிலாரி

எட்மண்ட் ஹிலாரியிடம்.. நீங்க எவரெஸ்ட் மலை ஏறும்போது சவாலாக இருந்தது குளிரா,பனிப்பாறைகளா என பலவாறு கேட்டனர்.அதற்கு

'உன்னால் இந்த சிகரத்தை அடைய முடியாது.பலரும் முயன்று தோற்றுள்ளனர். எனவே உன் முயற்சியை விட்டுவிடு.என்ற எதிர்மறை எண்ணம்தான் சவாலாக அமைந்தது.இதை போராடி வென்றேன் என்றார்

ஞானக்கூத்தன்

வெள்ளை பேப்பருக்கு
முன்பக்கம் பின்பக்கம்
என்று கிடையாது.
எதை முதலில்
பார்க்கிறோமோ
அதுவே அதன்
முன்பக்கம். 

-ஞானக்கூத்தன்

Saturday, 28 May 2022

யுவன் சந்திரசேகர்

பகலின் ஆவேசம் மெல்ல மெல்லக் குறைந்து,தயிராகும் பால்போல,வெளிப்படையாகத் தெரியாமலே இரவு இறங்க ஆரம்பித்தது

-யுவன் சந்திரசேகர்

Friday, 27 May 2022

சே.சதாசிவம்

'நகரும் தார்ச்சாலை
இருபக்க மரங்கள்
பசுமையான வயல்வெளிகள்
முப்பரிமான மலைகள்
முகத்தில் மோதும் தென்றல்
எதிர்வரிசை இளமை
எதையும் ரசிக்கவிடவில்லை
சில்லறை பாக்கி.

-சே.சதாசிவம்

தங்கம் மூர்த்தி

அம்மா 
ஒரு சிறகையும்
அப்பா
மறு சிறகையும்
இறுகப் பிடித்துக்கொண்டு
குழந்தைக்கு
அறிமுகப்படுத்துகிறார்கள்
வானத்தை

-தங்கம் மூர்த்தி

Wednesday, 25 May 2022

குமரகுருபரர்

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல்,தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால்,தன்னை
வியவாமை அன்றோ வியப்பு ஆவது!இன்பம்
நயவாமை அன்றோ நலம்

-குமரகுருபரர்

ஒருவன் தன்னைத்தான் வியந்துகொள்ளல்,புகழ்ந்து கொள்ளல் என்பது நெருப்பின் மீது தண்ணீர் ஊற்றுவது போல முட்டாள்த்தனம்

Monday, 23 May 2022

நீதிக்கதை

காட்டில் ஒரு காகம் மரத்தின் மேல் சும்மா அமர்ந்து கொண்டு இருந்ததாம் !!!!!!

அந்த வழியே சென்ற முயல் காகத்தை பார்த்து !

என்ன செய்து கொண்டு இருக்கிறாய் !!!!!!!!!! என்று கேட்க

காகமோ !!!!!! சும்மா உட்கார்ந்து கொண்டு பொழுதை போக்கி கொண்டு இருக்கேன் என்று சொல்லியதாம் !!!!

முயல் ' அப்படியா நானும் அதையே செய்கிறேன் " என்று அதுவும் கீழே அமர்ந்து சும்மா இருந்ததாம் !!!!

அந்த வழியே சென்ற புலி !!!!!

சும்மா இருந்த முயலை பிடித்து சாப்பிட்டு !விட்டதாம் !!!!!!!!

நீதி - வாழ்க்கையில் சும்மா இருக்க வேண்டும் என்றால் நீ உயரத்தில் இருக்க வேண்டும்

குட்டி இளவரசன் நாவலில்

All grown-ups were once children...but only few of them remember it

-குட்டி இளவரசன் நாவலில்