Thursday, 2 October 2025

179


#கற்கை_நன்றே_179

சிறந்தவராக இருப்பதை விட தனித்துவமானவராக இருப்பதே மேல். சிறந்தவராக இருந்தால் நீங்கள் நம்பர் ஒன் ஆகத்தான் இருக்க முடியும். தனித்துவமாக இருந்தால் 'ஒன்லி ஒன்னாக' இருக்கலாம்

-ரவிக்குமார்

சமீபத்தில் நறுக்கு ஒன்று படித்தேன். புழுவாய் துடிக்கும் நெஞ்சம் எப்போது?
ஒரு புழுவை காலால் நசுக்கித் தேய்க்கும் போதுதான் என்று இருந்தது.வன்மமும் எரிச்சலும் தான் புழுவை நாம் கொன்றிடத் தூண்டுகிறது.கோபமும் அது போல் தான். நமக்கு கீழானவர்களிடம் அதிகம் வருகிறது.அதனை அந்த நேரத்தில் கட்டுப்படுத்த தான் அதிகம் பயிற்சி தேவைப்படுகிறது.

ஜப்பானில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் அவர்கள் ஒரு மரபு ரீதியான வழிமுறையை வைத்திருக்கிறார்கள். யாருக்காவது கோபம் ஏற்பட்டால் உடனடியாக அவர் கோபமல்லாத ஏதாவது ஒரு செயலை செய்தாக வேண்டும். அப்போது, இதுவரை கோபத்துக்குள் சென்று கொண்டிருந்த அதே ஆற்றலானது இப்போது கோபமின்மைக்கு செல்கிறது.

ஆற்றல் நடுநிலையானது. ஒருவர் மீது உங்களுக்கு கோபம் வந்தால், அவரை நீங்கள் அறைய விரும்பினால், அவருக்கு ஒரு பூவைக் கொடுத்து என்ன நிகழ்கிறது என்பதை பாருங்கள்.அதே போல் மற்ற உதாரணம் ஒன்று..

விலையுயர்ந்த மூன்று பீங்கான் ஜாடிகள் மன்னரிடம் இருந்தன. அரண்மனை பணியாளர் ஒருவர் அதை சுத்தம் செய்யும் போது உடைத்து விடுகிறார். கோபம் கொண்ட மன்னன் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறார்.. 

உனது கடைசி ஆசை என்ன என்று கேட்கும் போது மீதமுள்ள இரண்டு ஜாடிகளை இப்போது பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு அதனையும் உடைத்து விடுகிறார். ஏன் இப்படி செய்தாய்? என்று கேட்டார் மன்னர். உடைந்து போகிற ஜாடிக்காக மனித உயிரை எடுக்கச் சொன்ன உங்களை என்னால் ஒன்றும் செய்ய முடியாது. 

இவ்வாறு உடைப்பதன் மூலம் குறைந்தபட்சம் இரு உயிர்களை காப்பாற்ற முடியுமே அதனால்
இப்படி செய்தேன் என்கிறார். தனது தவறை உணர்ந்து தீர்ப்பை திருத்தி அவரை விடுவித்தார். 

கோபம் கொள்வது 
எந்த மனிதனும் செய்யக்கூடிய
மிக எளிதான செயல்தான்.
ஆனால்,
சரியான நேரத்தில்,
சரியான நபரிடம்,
சரியான காரணத்திற்காக 
கோபப்படுவது 
எளிதான செயல் அல்ல...!!
என்கிறார் அரிஸ்டாட்டில்

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

Wednesday, 1 October 2025

178


#கற்கை_நன்றே_178

அடகு வைக்கப்பட்ட நேர்மை
ஒருபோதும்
திருப்ப படுவதில்லை

-சாக்ரடீஸ்

தற்காலத்தில் நேர்மை என்பதை பலருக்கும் உதாரணத்துடன் சொல்ல வேண்டியிருக்கிறது.ஏடி எம் வரிசை, கடவுள் தரிசனத்தில் இடையில் புகுவது,குறுக்கு வழியில் செல்வதை புளகாகிதத்துடன் சொல்வதை பார்க்கிறோம். நேர்மையாய் இருப்பதை கையாளாகத்தனம் என எண்ணுகின்றனர்.நேர்மை குறித்து நினைக்கும் போதெல்லாம் தும்பி இதழில் அ.முத்துலிங்கம் எழுதிய இக்கதைதான் நினைவுக்கு வருகிறது.

 ஆப்பிரிக்கன் ஒருவன் எழுத்தறிவு இல்லாத கடைநிலை ஊழியன். எப்போது பார்த்தாலும் அவனுக்கு பணக்கஷ்டம்.ஒரு வெள்ளைத் தாளில்,சம்பள முன்பணம் கேட்டு, யாரையாவது பிடித்து விண்ணப்பம் எழுதியபடியே இருப்பான்.அவனுக்கு ஆறு குழந்தைகள்.கடைசியில் பிறந்தது இரட்டைக் குழந்தைகள்.அவன் பணிபுரிந்த நிறுவனத்தில்,

குழந்தைகளுக்கான படிப்பணம் உண்டு. மாதாமாதம் ஆறு குழந்தைகளுக்கான படிப் பணத்தையும் பெற்றுவிடுவான்.

ஒருநாள் அவனுடைய இரட்டைக் குழந்தைகள் இறந்துவிட்டன. ஒரேநாளில் இரண்டு குழந்தைகளையும் பறி கொடுத்தவன் செய்த முதல் காரியம்,இறந்த குழந்தைகளுக்கான படியை வெட்டச் சொல்லி எழுதத் தெரிந்த ஒருவரைக்

கொண்டு கடிதம் எழுதியதுதான்!
என்னுடைய 20 வருட சேவகத்தில் குழந்தைப் படியை வெட்டச் சொல்லிக் கோரும் விண்ணப்பத்தை நான் கண்டது இல்லை.அந்த ஊழியன் இருக்கும் கிராமம் 200 மைல் தூரத்தில் இருந்தது. அவனுடைய குழந்தைகள் இறந்த விவரம் நிர்வாகத்தின் காதுகளை எட்டும் சாத்தியக்கூறே கிடையாது எப்போதும்

கஷ்டத்தில் உழலும் அவன், இப்படித் தானாகவே சம்பளப் படியை வெட்டும்படி சொன்னது ஏன்?

படிப்பறிவு சொட்டும் இல்லாத அந்த ஏழைத் தொழிலாளி, வேதங்கள், வியாக்கியானங்கள் ஒன்றுமே படிக்காதவன், இந்தச் செயலைச் செய்தான். அவனுடைய நடத்தைக்கான காரணத்தை தான் கடைசிவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

நேர்மையின் தரம் தேசத்துக்குத் தேசம், மக்களுக்கு மக்கள் மாறுபடும். உதாரணமாக, அமெரிக்காவில் ஒரு வைத்தியரிடம் சோதனைக்கு நாளும் நேரமும் குறித்துவிட்டுப் போகாமல்விட்டால், உங்களைத் தேடி பில் கட்டணம் வந்துவிடும். நீங்கள் அந்த வைத்தியரின் அரைமணி நேரத்தைக் களவாடிவிட்டீர்கள் என்று அதற்குஅர்த்தம். 

மாறாக, ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் உங்களுடைய தோட்டத்துக்குள் ஒருவர் வந்து மாங்காய் பறித்துக்கொண்டு போகலாம். ஒருவரும் கேட்க முடியாது. அங்கே இயற்கை தானாகக் கொடுக்கும் செல்வம் பொதுவானது. அப்படி என்றால், உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளும் நேர்மையின் இலக்கணம் என்ன?

பாராட்டையோ, புகழையோ, சொர்க்கத்தையோ, செல்வத்தையோ எதிர்பாராமல் கடைப்பிடிப்பதுதான் நேர்மை. பின்விளைவுகளின் பயத்தினால் செய்யாமல், தார்மீக சம்மதத்துக்காகச் செய்வது, அதுதாநேர்மை!

நம் குழந்தைகளுக்கு நரியும் காகமும் கதை சொல்வதை இனிமேல் நிறுத்திவிடுவோம். விறகுவெட்டிக் கதையையும் ஆற்றிலேயே விட்டுவிடுவோம். நேர்மையாக நடப்பதால் ஏற்படும் மனசாந்திக்காக, நம் சந்ததியினரை அப்படி இருக்கத் தூண்டுவோம். படிப்பறிவு இல்லாத ஓர் ஏழை ஆப்பிரிக்க ஊழியனுக்கு சாத்தியமாக இருந்தது நமக்கும் சாத்தியமாகும்!

நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு