Wednesday, 15 October 2025

185


#கற்கை_நன்றே_185

சாக்ரடீஸின் கருத்தியல்படி
உலகில் இருவகையான மனிதர்கள் இருக்கின்றார்கள். உண்மையில் அறியாமையிலிருந்தே எல்லாம் அறிந்து கொண்டவர்களும், அறிந்ததாலேயே அறியாமையிலிருப் பவர்களுமாக (Ignorant Knowers and knowing ignorant) உலகம் இரண்டாவது வகை மனிதர்களின் ஆதிக்கத்தில் உள்ளது.

ஒருவரின் புத்தி எல்லையைத் தாண்டும் போது தான் கூட்டு சிந்தனையின் நுண்ணறிவு பிறக்கிறது.”அதாவது
ஒன்றாகச் சிந்திக்கும் நூறு சிறு மனங்கள், ஒரு பெரிய மூளைப்போல் செயல்படும்.அதாவது சின்ன கல்லு பெத்த இலாபம் மாதிரி."இதனை Swarm Intelligence என்கிறார்கள். இதற்கு உதாரணமாக எறும்பைச் சொல்கிறார்கள்.சிறியதாக இருந்தாலும் ஒன்றாய் சேரும் போது ஒரு துரும்பை அசைக்கிறது, பாலமிடுகிறது.

இது குறித்து ஹேமா அவர்கள் எழுதிய பதிவு இன்னும் புரிதலை மேம்படுத்துகிறது.எறும்பின் மூளையில் உள்ள நினைவகம் (storagespace) வெறும் 256KB மட்டுமே!நாம் அன்றாடம் பயன்படுத்தும் கைபேசிகள் 64GB, 128GB என்று வெவ்வேறு அளவிலான நினைவகத்துடன் (memory/storage) ஒப்பிடும்போது மிகக் குறைவு.

ஆனால், யோசித்துப் பார்த்தால், எறும்புகள் உணவு தேடிச் செல்வது, சேகரித்த உணவை மீண்டும் வீட்டுக்குக் கொண்டுவந்து சேமிப்பது என்று பல வேலைகளைச் செய்கின்றன. 

ஓர் இடத்துக்குப் போய் வருவதற்கு வழியை நினைவு வைத்துக்கொள்ள வேண்டும். அப்படியென்றால், எறும்புகளிடம் உள்ள 256KB நினைவகம் பத்தாதுதானே? மேலும், மூளையின் செயல்பாட்டை வெவ்வேறு பணிகளுக்கும் செலவிட வேண்டும். அப்படியிருக்கும்போது, தங்களிடம் உள்ள இத்துனூண்டு ‘மூளையில்’ எப்படி இத்தனை வேலைகளைத் திட்டமிட முடிகிறது?

எறும்புகள் தங்களுக்கென்று ‘தலைமை எறும்பு’ சொல்வதைச் செய்வதில்லை.ஆனாலும் ஒரு வேலையை கச்சிதமாய் முடிகிறது. 

தாங்கள் நகரும்போது, பெரமோன் எனப்படும் ஹார்மோன் சுரப்பு வெளியிட்டு, பிற எறும்புகளுக்கும் வழித்தடத்தை அறிவிக்கின்றன. இது எறும்பின் கூட்டுப் புலமை.சின்ன மூளை! பெரிய வேலை என்கிறார்.

அறிவின் அடிப்படையே பகிர்தல் தான். பலரும் அதனை செய்வதில்லை.கருத்துக் கேட்பு என்பது மாபெரும் உக்தி. பல்வேறு தரப்பின் கருத்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி புதிய கருத்துக்கள் பிறப்பதாய் சொல்கிறார் ஹெகல்.அருகில் உள்ளவர்களின் அறியாமை எனும் இருளை விரட்டும் விளக்கு நம் கையில் தான் உள்ளது. நமக்கானது முன்னொருவர் கையில். ஆகவே அறிவை பகிர்வோம். அனுபவத்தை பெறுவோம்.

 நற்காலை

தோழமையுடன் மணிகண்டபிரபு

No comments:

Post a Comment