Friday, 8 May 2026

book-27


#Reading_Marathon2026
#26RM009

Book No:27/150+
Pages:-362

மந்திரவாதியின் சீடன்
-இவால்ட் ஃப்ளிஸர்

இந்நாவலை எழுத்தாளர் இமையம் அவர்களின் பரிந்துரை செய்ததால் வாசித்தேன். தத்துவம் சார்ந்த புத்தகம் விருப்பம் என்பதால் உடனடியாக வாசித்தேன்.
நான் யார்?”, “வாழ்க்கையின் உண்மை என்ன?” போன்ற அடிப்படை கேள்விகளை கதையின் வழியாக எழுப்புகிறது.

காஷ்மீரின் பள்ளத்தாக்கு பகுதியில் ஆன்மிக பயணம் செய்யும் துறவியின் பார்வையில் நாவல் துவங்குகிறது.பத்ரிநாத் சென்று அங்குள்ள முதிய சாமியாரை சந்திக்க திட்டம்.அப்படி செல்லும் போது அதில் வித்தியாசமான மனிதர்கள், பனிமூடிய மலைப்பின்னணியில் நடந்து செல்வது, புனிதப் பயணமா, அல்லது யாரை தேடிச் செல்கிறார் ஆகியவை அடுத்து என்ன எனும் ஆர்வத்தை தூண்டுகின்றன

இளம் துறவியின் உள்ளார்ந்த தேடல், வாழ்க்கையின் அர்த்தம், சுயஅறிவு போன்ற கேள்விகளை மையமாகக் கொண்டு நகர்கிறது.

முதியவரை சந்தித்து உரையாடல் நடைபெறுகிறது.உனக்கு என்ன வேண்டும் என்கிறார்.. "முழுமை.என்னுடனும் உலகத்துடன் ஒன்றியிருத்தல் வேண்டும் என்கிறார். இதிலிருந்து உரையாடல் துவங்குகிறது.யோகானந்தர் இளைய துறவிக்கு முன்மாதிரியாக விளங்குகிறார்.

"காரணகாரிய அறிவுடைய மனதுக்கு எல்லாமே பிரச்சனைதான். ஒரு பிரச்சனைக்கான எந்தத் தீர்வும் இன்னொரு பிரச்சனையை உருவாக்குகிறது. தன்னளவில் யதார்த்தம் பிரச்சனையற்றது. அதுகுறித்த என் பார்வைதான் பிரச்சனையானது. எல்லாமே என் மூளைக்குள் நுழைந்து விடுகின்றன. என் மூளை ஒரு தேச எல்லைபோல. என் அறிவு சுங்க அதிகாரிபோல உள்ளே வரும் விலைமதிப்பற்றவற்றில் பெரும்பாலானவற்றையும், புதுமையான, அந்நிய தேசத்துக்குரிய யாவற்றையும், வித்தியாசமானவை, நிலைகுலைய எனத்தோன்றும் யாவற்றையும் கைப்பற்றிவிடுகிறது. ஒழுங்கமைவைப் பாதுகாப்பதே அறிவின் கடமை. அதுதான் மரபு. வெளியே பார்க்க ஜனநாயகவாதி; உள்ளேயோ ஒருபோதும் கண்ணுறங்காத தந்திரமிகு சர்வாதிகாரி. என்கிறார் முதியவர்.
மீண்டும் பயணம்.செய்கிறார் துறவி.

தான் என்ற எண்ணம் என்பதற்கான விளக்கம், ஒவ்வொரு நிகழ்விலும் புத்தம் சார்ந்த போதனைகளை வழங்குகிறார்.கண்களை மூடி இருக்கும்போது சுற்றுப்புற இரைச்சல்கள் துறவிக்கு மனப்போராட்டம் ஏற்படுத்துகின்றன.
இதற்கு குரு " மனச்சோர்வு இயற்கை எனும்போது ஒருவர் நிரந்தர களிப்பில் நீடிக்கமுடியாது என்கிறார்.

ஏனெனில் இவற்றை நிரந்தரமாக பிடித்து வைத்துக் கொள்ளமுடியாது. இவற்றினிடத்தை எதிர்மறை எண்ணங்கள் வந்து பிடித்துக் கொள்கின்றன என்கிறார்
நிதர்சன உண்மை என உணர்ந்தேன்.

இமயமலையின் இயற்கை வருணனைகள் நாமே அங்கிருக்கும் உணர்வை தருகிறது. குருவிற்கும் சீடனுக்குமான உரையாடல், வாழ்வியல் உண்மைகள், தத்துவம் ஆகியவை இருவரின் உரையாடலிலும் இருக்கிறது.
படித்து ரசிக்க வேண்டிய இடங்கள் மட்டுமல்லாமல்.. படித்து சிந்திக்க வேண்டிய இடங்கள் அதிகம் வருகிறது.

அகச் சிக்கல்களால் அல்லாடும் சீடன் குருவுடன் சேர்ந்து ஞானத்தைத் தேடி பயணிக்கிறான். அந்தப் பயணம் வெறும் வெளி நடைபயணம் அல்ல; அது மனிதன் தன்னை அறியும் உள்பயணமாகவும் விரிகிறது. பயணமெங்கும் சந்திக்கும் மனிதர்கள், தாந்திரீகம், கனவு, இயற்கை குறித்த செய்திகள் எல்லாம் வருகின்றன.

ஹென்றி அலெக்ஸாண்டர் எனும் கதாபாத்திரம் நாவல் ஓட்டத்திற்கு உதவுகிறது.வியப்பூட்டும் சடங்குகள், தாந்திரீகம் கதைக்கு தனிச்சுவை தருகின்றன.ஒரு இடத்தில் ஹென்றி இவ்வாறு கூறுகிறார் "உங்களது இலக்கின்மீது கவனம் குவிக்க அதிக ஆற்றலைச் செலுத்தும்போது, இலக்கை அடையும் வழியின்மீது கவனம் குவிக்க உங்களிடம் குறைந்த ஆற்றலே எஞ்சியிருக்கும். 

ஏன் வாழ்கிறோம்?”, “எது உண்மை?”, “மனித விடுதலை என்றால் என்ன?” போன்ற கேள்விகள் மெய்யியல் உரையாடல் போல முக்கியமாக வருகின்றன. ஒரு இடத்தில் சொல்கிறார்

"வார்த்தைகள் என்பவை உலகின் சன்னல்மீது நாம் தொடர்ந்து எறியும், அதனை ஊடுருவிப் பார்க்க முடியாத திரையாக மாற்றிவிடும் கற்கள்தான் என்று தோன்றியது. ஒவ்வொரு வார்த்தையும், மிக நேர்மையான வார்த்தையும்கூட, தன்னளவில் ஒரு சிறிய பொய்யாக இருக்கிறது. அது உணர்வைச் சிந்தனைக்குள் மொழிபெயர்ப்பதாக, அதனால் அதனைத் தோராயமான ஒன்றாக மாற்றுவதாக இருக்கிறது. நாம் அனைவரிலும் சிந்தனையை மேற்கொள்வது தன்முனைப்பு, தன்முனைப்பு ஒரு முகமூடி, தன்முனைப்பு ஒரு சுயபிம்பம்" என்கிறார்.

வினாடி நேர உள்ளொளி பத்து வருட அறிமைக்குச் சமம் எனும்வரி சிந்திக்க வைத்தது.தினசரி வாழ்க்கையில் ஏதேனுமொரு பிம்பத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.மனிதன் தன்னைப் புரிந்துகொள்வதே ஞானத்தின் முதல் படி என்ற உணர்வு நிலைக்கிறது.

ஞானம் என்பது வெளியில் இருந்து வருவதுகிடையாது. அது உள்ளிருந்து வரும் பூரணத்துவம்.அதனை கண்டடைய யாரோ ஒருவர் தூண்டுகிறார். அவ்வாறு கிடைக்கும் அக ஒளி நமக்குள் ஒரு மாற்றத்தை தோற்றுவிக்கிறது. அதனை அடைந்த பின்பு புதிதாய் நமக்குள் பரவசம் பரவுகிறது. வாழ்விற்கு ஓர் அர்த்தம் கிடைக்கிறது. வாசிக்கும் நமக்கும்

தொடர்ந்து வாசிப்போம்

தோழமையுடன் மணிகண்ட பிரபு

No comments:

Post a Comment