Book-59
என் பல்வண்ணக்காட்சிக் கருவி
-இறையன்பு
இறையன்பு அவர்களின் பரந்துபட்ட வாசிப்பில் அமைந்த 50 கட்டுரைகளின் தொகுப்பு நூல் இது. சங்க இலக்கியம், மருத்துவம், கவிதை, ஆய்வுநூல் என அவரின் வாசிப்பில் மூலம் தான் பெற்ற அனுபவத்தை வாசகருக்கு அர்ப்பணிக்கிறார் இறையன்பு.
ஒரு பொருளை ஒரே கோணத்தில் பார்த்தால் அதன் முழுமையான பரிமாணத்தைப் புரிந்துகொள்ள முடியாது. பல வண்ணங்களைக் காட்டும் காட்சி கருவியைப் போல, வாழ்க்கையையும் பல்வேறு கோணங்களில் அணுக வேண்டும் என்ற சிந்தனையை மையமாகக் கொண்டு அமைந்த நூலாக பல் வண்ணக்காட்சி கருவி விளங்குகிறது
இறையன்புவின் எழுத்தில் வழக்கமாகக் காணப்படும் எளிமை, ஆழமான சிந்தனை, வாழ்க்கை அனுபவங்கள், உளவியல் பார்வை, சமூகக் கவனிப்பு ஆகியவை இந்நூலிலும் வெளிப்படுகின்றன. அன்றாட வாழ்க்கையில் நாம் சாதாரணமாகக் கடந்து செல்லும் நிகழ்வுகள், மனிதர்களின் குணங்கள், உறவுகள், வெற்றி–தோல்விகள் போன்றவற்றை வேறுபட்ட பார்வையில் சிந்திக்கத் தூண்டுகிறார்.
மனிதம் தழைத்தோங்க வன்மத்தை விட்டொழிக்க வலியுறுத்துகிறார். பூனையின் மகிமைகளை அடுக்கிப்பேசி..சேலத்தில்.காந்தி ஐயர் என்பவர் தீண்டாமை ஒழிப்பில் இணைத்துக்கொண்டு தனது உணவகத்தில் தாழ்த்தபப்ட்ட சமூகத்தினரும் உட்கார்ந்து சாப்பிட அனுமதித்ததால் ஊரில் யாரும் சாப்பிட வரவில்லை.ஆனாலும் கொள்கையில் விடாபிடியாய் இருந்து தொடர்ந்து நடத்தி வெற்றி பெற்றார் எனும் அறியாத தகவலையும் பகிர்ந்திருப்பார்.
சாலை என்பது கற்களால் போடப்படுவது.பாதை என்பது சொற்களால் அமைக்கப்படுவது என அகநோக்கில் சொல்லியிருப்பார். மனதளர்ச்சி,சீனத்தில் மதக்கலவரமே நடந்ததில்லை என்பது கண்ணில் ஒற்றிக்கொள்ள வேண்டிய செய்தி எனக்கூறி கன்பூசியஸ், லாவொட்ஸ் குறித்த சிந்தனைகள் பகிர்கிறார்.
*ஜோசப் பிரௌதான் என்கிற பொருளாதார நிபுணர் வறுமையின் தத்துவம் என்கிற நூலை எழுதினார். அதிலிருந்த கருத்துகளுக்குச் சவாலாக மார்க்ஸ் எழுதிய நூல்தான் தத்துவத்தின் வறுமை. பிரௌதானுடைய தத்துவம் சத்தானது அல்ல என்பதே மார்க்சின் வாதம்.
தொ.ப வின் நூல்களை திறனாய்வு செய்வதுடன், அதில் தான் படித்து வியந்த செய்திகளை பகிர்கிறார். சாதிய ஆதிக்கத்தால் கொல்லப்பட்ட ஒருவனை தெய்வமாக்கப்பட்டால் அவன் இரண்டு சாதியாராலும் வணங்கப்படுவான் அவனை கொன்ற ஆதிக்க சாதி ஆவி அச்சம் காரணமாகவும், கொலை செய்யப்பட்டவர் சாதி பாதுகாப்பு கருதியும் வணங்குவதை சுட்டிக்காட்டுகிறார்.
மண்ணுக்கு மருதாணி எனும் அத்தியாத்தில் விவசாயம் சம்பந்தமான தகவலகளையும் புத்தகங்களையும்.அறுமுகம் செய்கிறார்.பெரும்பாலும் நாம் அறியாத தகவல்களே உள்ளன.
காற்றே பாதுகாப்பு வேலிக்கு சவுக்கு மரங்களை வாழை மரத்தோப்பிற்கு ஓரமாக நட்டால் சாய்க்காமல் பாதுக்காக்கும்.அதன் நிழல் பயிரை பாதிக்காது என்கிறார்.ஒவ்வொரு கட்டுரையிலும் இடம்பெற்ற துணுக்குச் செய்தி கட்டுரைகளை சுவாரஸ்யமாக்குகிறது.
அலப்பரை' என்கிற தமிழ்ச் சொல் எப்படி வந்தது என்று முத்துநிலவன் கூறும் செய்தி சுவையானது. 'பறை' என்பது ஊரறியச் சொல்வது. 'அலர்' என்றால் மலர்ந்த பூ என்று பொருள். தமக்குள் மறைவாகப் பேசிக்கொள்வது பலரும் அறியப் பகிரப்பட்டால் அது 'அலர்' ஆகி விடும். அப்படி அனைவருக்கும் தகவலைப் போட்டு உடைப்பது 'அலர்ப்பறை' அதுவே 'அலப்பர' என்னும் மதுரைத் தமிழாகி 'அலப்பரை' என்கிற சென்னைத் தமிழானது.மேலும் அடமானம்,ஆய்த எழுத்து எனும் வார்த்தைகளை மேற்கோளாய் சொல்லியிருப்பார்.
நகைச்சுவையோடு இருப்பதற்கு வாசிப்பு அவசியம் என்று சொல்லி அதற்கு காரணம் வாசிப்பவர்க்கு மூளையின் ஒரு பகுதி துடிப்பாக இருப்பதுதான் காரணம் என்கிறார். முடிவெடுப்பது எவ்வாறு என்று கேள்விப்பட்டிருப்போம் ஆனால் மேலாண்மையில் முடிவெடுப்பதை தவிர்ப்பது எவ்வாறு என்று கூறிகிறார்.பாரதிதாசன் திருபுவனையில் ஆசிரியராகப் பணியாற்றும்போது பிரஞ்சு அரசுக்கு எதிராக செயல்பட்டாரென சிறையில் அடைக்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்டு..மீண்டும் வழக்கு தொடுத்து ஆசிரயரானார், மணியாச்சி சம்பவத்தில் மாடசாமிக்கு பாவேந்தர் அடைக்கலம் கொடுத்துள்ளார்..என்பது புதிய செய்தியாக இருந்தது.
நேர்மை குறித்த பார்வையில் நிதர்சனத்தை சொல்லியிருப்பார்..
நேர்மைக்கு நம் மக்கள் தருகிற வினோதமான விளக்கங்களை நினைத்து நான் வியந்திருக்கிறேன். 'அவராகக் கேட்கமாட்டார், கொடுத்ததை வாங்கிக் கொள்வார். மிகவும் நல்லமனிதர்' என்றுபாராட்டுவார்கள். 'பணம் வாங்கினால் அவசியம் செய்து கொடுப்பார், நேர்மையான மனிதர்' என்று சிலாகிப்பார்கள். 'காரியம் முடியவில்லை என்றால் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடுவார்' என்று புளகாங்கிதம் அடைவார்கள்.
மகத்தான பணிகளை மெளனமாக ஆற்றுபவர்கள் போல முக்கிய உறுப்புகள் கண்ணுக்கு தெரியாமல் இருப்பதை சிலாகிக்கிறார்.ஓஷோ, கலீல்ஜிப்ரான், கிருஷ்ணமூர்த்தியின் தத்துவங்களை பல நூல்களில் மேற்கோளாக சொல்லுவார்.
/நான் போன நேரம்
ரூமி செருப்பில்
ஆணி அடித்துக் கொண்டிருந்தார்
வலிக்காதா? என்றேன்
ஆணிக்கும் தான் வலிக்கும்
சுத்திக்கும் தான் வலிக்கும்
கைக்கும் தான் வலிக்கும்
வலியில்லாமல்
என்னதான் நடக்கும்
என்றார் ரூமி/
கண்ணாடியில் உள்ள களங்கம் எப்போது நீங்கும் என்று கேட்டதும்
ரூமி சொன்னார்
'கண்ணாடி முன் நீ முகம் காட்டாதபோது'
என்கிறார் ஈரோடு தமிழன்பன்
இக்கவிதைகள் ஏற்கனவே படித்திருந்தாலும் மேலும் சுவையூட்டுகிறது.
மழைப்பாதை வெண்மேகஙகள், வாபிசாபி,சராசரி என்கிற எதிரி,Tongue of the slip,Reasons to stay alive,The golden road, தெய்வம் என்பதோர்,யுகபாரதியின் மேல் கணக்கு, நேர்மைபடும் பாடு, லோகோபைலட்டின் வாழ்க்கை, திருநெல்வேலி எழுச்சியும் வ உ.சியும், முத்துநிலவன் புத்தகம்,நெஞ்சறுப்பு, ஆங்கில புத்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களை அறிமுகம் செய்கிறார் ஒவ்வொரு அத்தியாத்திலும்.
கட்டுரை எழுதுவது சாதாரண காரியமன்று. அதிகம் வாசித்திருக்க வேண்டும். தகுந்த மேற்கோள் சொல்ல வேண்டும்.தன் சுய அனுபவத்தை எந்தவித மிகையுமல்லாமல் சொல்லும்போது ஒரு கட்டுரை என்று நினைவு கூரப்படும் பொக்கிஷ்மாக மிளிரும்.
முதுமுனைவர் இறையன்புவின் கலைடாஸ்காப்பும் அவ்வித பொக்கிஷமே
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment