17.01.2018
நூலேணி - படி 44
*கொஞ்சம் பேசலாம்*- 2
By ஆண்டாள் பிரியதர்ஷினி
நம் கோவையைச் சுற்றியுள்ள பல இடங்களையும் தன் கட்டுரைகளில் குறிப்பிட்டு அதன் சிறப்பை பதிய வைக்கிறார் திருமதி. ஆண்டாள் பிரியதர்ஷினி!
ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியைப் பற்றி ஒரு கட்டுரையில் குறிப்பிடும் போது, ஒரு கல்விச்சாலை குழந்தைகளிடம் கீழ்க்கண்ட குணங்களை விதைக்க வேண்டும் என்றும் அதை இந்த கல்விக்கூடம் செயல்படுத்துகிறது என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
அந்த குணங்கள் வருமாறு;
*மனிதநேயம், மனிதாபிமானம், சமூக அக்கறை, ஒழுக்கம், கம்பீரம், நேர்மை, தன்னம்பிக்கை, சுயமரியாதை, வீரிய சிந்தனை போன்றவை*
இந்தக் குணங்கள் இருப்பவன் ஒரு முழுமையான மனிதனாக வளர்வான். இதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை!
முத்தாய்ப்பான ஒரு வரி இவர் எழுதியது நமக்கு மிகவும் யோசிக்க வைக்கும் கருத்தாகும்!?
ஊரெல்லாம் கோயில்கள், உள்ளே கற்சிலைகளாக தெய்வங்கள்! ஆனால்,
*தெய்வம் மனிதனுக்குள் இருக்கிறது. கல்லுக்குள் அல்ல*.சரிதானே?!!
சிந்தியுங்கள் நண்பர்களே!
*பரளியாறு*
கோவைக்கு அருகில் உள்ள பரளியாறு சென்று வந்த அனுபவத்தை அவர் எழுதி இருக்கிற விதம் சலசலக்கும் ஆற்றில் பல மணி நேரம் களைப்பும், அலுப்பும் தீர ஒரு ஆனந்தக்குளியல் கொண்ட ஒரு உணர்வு! பரிசலில் பயணம், நெடிய மரங்களின் பச்சை வாசனை இவையெல்லாம் தரும் மகிழ்ச்சியை விட இவர் அங்கே வாழும் பழங்குடி இன மக்களின் ஒரு பெரியவரிடம் நடத்திய உரையாடல் அற்புதமாக இருக்கிறது!
"அது சரி... நீங்கள் இவ்வளவு மலைகள், மரங்கள், ஆறு, வாழைத்தோப்பு, இதுக்கு நடுவுலே வாழறீங்களே, அது பெரிய அதிர்ஷ்டம் தானே? என்ற ஆண்டாளின் கேள்விக்கு அவர் அளித்த பதில்...
*இயற்கை எல்லோருக்கும் சொந்தம் தானே? நீங்க எல்லாத்தையும் வெட்டித்தள்றீங்க! எங்கள மாதிரி ஜனங்க, காடு, மலை விட்டு வெளியே வரமுடியாம இங்கேயே கிடக்கிறோம். அன்னிக்கு ஒங்க சிட்டியில ஒரு கோயிலுக்கு வந்தேன். குமட்டிட்டு வந்துடுச்சு. எல்லா இடத்திலயும் கருங்கல்லு, வெள்ளைக்கல்லு. ஒரு பூவு, ஒரு மரம் செடி கொடி கூட இல்லை. வழு வழுன்னு கல்லுதான் சாமியா?? என்றவர் நடந்துபோய் ஒரு மரத்தை கும்பிட்டார்.
இந்த மரம், இதுதான் எங்க சாமி. இந்த மாடுதான் எங்க குலசாமி. மரத்தை சாமியா கும்பிடு. ஆத்து தண்ணியெல்லாம் சாமியாக் கும்பிடு. காடு, மலை, மரம், செடி, கொடிய சாமியாக் கும்பிடு. இது இல்லேன்னா, ஒரு நாளுகூட நாம உசிரோட இருக்க முடியாது.
புரியாம மரத்தை வெட்டறீங்க. ஒரு நா எல்லோரும் பிச்சை எடுக்கப் போறீங்க.. குடிக்கத் தண்ணி இல்லாம தாகத்துல சாகப்போறீங்க..."*
இயற்கைதானே பெருஞ்சாமி, கல்லை விடவும்..., என முடித்திருந்தார் ஆண்டாள்!
இயற்கையை நேசிக்கும், இயற்கையை வணங்கும் ஒரு நிஜ மனிதனாக என் கண் முன்னே தெரிகிறார், அந்த மலைவாழ் பெரியவர்.
கடவுள் யார்? என்ற தொன்மையான கேள்விக்கு பல நூற்றாண்டுகளாக பலவித மதங்களும் பல வித மத குருமார்களும் கூறிய கருத்துக்களை விட இந்த எளிய மலைவாழ் பழங்குடி இனப் பெரியவரின் "கடவுள் விளக்கம்" மிகுந்த அர்த்தம் உள்ளதாகப்படுகிறது, எனக்கு.
கல்லில் அல்ல கடவுள், உன்னில், உன்னுள் என்று புரிகிறது. உங்களுக்கு?...
*வாழ்வின் சில உன்னதங்கள்*
சாலையோர நடைபாதைகளில் பிள்ளையார் உட்கார்ந்திருப்பார். ரொம்ப சிம்பிள்! தனிமை வேறு! ஆனால், அந்த சாலையில் செல்லும் பலரும் பிள்ளையார் பக்கம் திரும்பி குட்மார்னிங் சொல்வார்கள் அல்லது கன்னத்தில் போட்டுக்கொள்வார்கள் அல்லது ஒரு நிமிடம் முன்னால் நின்று பிரார்த்தனை செய்து விட்டு போவதை நம்மில் பலரும் பார்த்திருப்போம்!
பல கோடி ரூபாய் செலவு செய்து பளிங்கினால் நேர்த்தியாக கட்டப்படும் கோயில்களுக்கும், இது போன்ற நடைபாதையில் அனைவருக்கும் அருள்பாலிக்கும் பிள்ளையாருக்கும் ஏதேனும் வித்தியாசம் உள்ளதா? "Power" ல் ஏற்ற இறக்கம் இருக்குமா? நம்ம கோவை மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகம் பூராவும் இப்படி ஒரு fast food station போல அருள் தரும் பிள்ளையாரின் அருள் உலகப்புகழ் பெற்ற கோயில்களின் கர்ப்பகிரக சந்நிதி தரும் அருளுக்கு சற்றும் சளைத்ததல்ல என்பதே நம் கருத்து.
அவரவர் வசதி..,
அவரவர் எண்ணம்...,
அவரவருக்கு அருள் .....
எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவன் ஆண்டவன்.
கடவுளுக்கு வசதியான கோயில்களை விட, மனிதர்களுக்கு வசதியான கோயில்கள் தானே உன்னதம் என்றும் "கடவுளை மையப்படுத்துகிற மதம் வேண்டாம், மனிதனை மையப்படுத்துகிற மதம்தான் வேண்டும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியதை நினைவு படுத்தியும் ஆண்டாள் பிரியதர்ஷினி நம்மை நிம்மதி கிடைக்கும் இடம் மனிதன் சஞ்சரிக்கும் நடைபாதைகளே என்று உணர்விப்பதாக நான் உணர்கிறேன். மனிதனுக்கு ஞானம் வரும் இடங்களில் முக்கிய இடம் "சாலை மற்றும் நடைபாதைகள்".
இதுபோன்று சாலை நடைபாதையில் மிகுந்த சந்தோஷம் அடையும் நபராக திரு.விட்டல்ராவ் என்ற எழுத்தாளரை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார், ஆசிரியர்.
"வாழ்வின் சில உன்னதங்கள்" என்ற அவரது நூல் அவருக்கும், நடைபாதை புத்தக்கடைகளுக்குமான நெருக்கத்தை, நேசத்தை, தேடலை, தவிப்பை கூறுவதாக பதிவிடுகிறார் ஆண்டாள்!
இந்தப்புத்தகம் இன்னும் படிக்கவில்லை. தேடிப்பிடித்து படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
அம்மா அப்பாவைத் தவிர மற்றதெல்லாம் கிடைக்கும் என்ற பெயர் பெற்ற மூர்மார்க்கெட் புத்தகக்கடைகள், திருவல்லிக்கேணி பைகிராப்ட்ஸ் சாலை புத்தக க்கடைகள், ஆழ்வார்பேட்டை ஆழ்வார் புத்தகக் கடை இவற்றில் எல்லாம் கிடைத்த உலகத்தின் உன்னதமான பல ஆங்கில படைப்புகள், ஓவியப்புத்தகங்கள், வாழ்க்கை வரலாறுகள், போர் வரலாறுகள், மேற்கத்திய கட்டிடக்கலை, மர்லின் மன்றோ, இத்தாலிய நகரங்கள், மார்க் ட்வைன், ரஷ்ய சிறுகதைகள், ஓவியர் பிக்காஸோ இப்படி எல்லாவற்றையும் சுவாரசியமான புத்தகமாக அதில் தெரிவித்துள்ளதாக குறிப்பிடுகிறார்.
கோயில்களை தேடிப்போவது போல் பழைய புத்தக கடைகளை தேடிப் போகும் ஒரு மாமனிதர் விட்டல் ராவை தெரிந்து கொண்டதில் மனம் மகிழ்ச்சியடைகிறது.
தெய்வ தரிசனம் தரும் புல்லரிப்பைப் பழைய புத்தக க்கடைகள் தருகின்றன. கற்பூர வாசனை தரும் நெகிழ்வை பழைய புத்தக வாசனை தருகிறது. கருவறை தரிசனத்தின் நிறைவை நடைபாதை புத்தகக்கடை தருகிறது என்று சிலாகிக்கும் ஆண்டாள் பிரியதர்ஷினியின் வார்த்தைகள் மனதுக்கு மிகவும் இதமளிப்பது உண்மை!
ஆன்மிகத்திற்கு புது வியாக்கானம் கூறும் இந்த புதுமைப் பெண்ணின் எழுத்துக்களை அடுத்த பதிவில் மேலும் வாசிப்போம்!
அன்புடன்,
நாகா.
17.01.2018
No comments:
Post a Comment