19.01.2018
நூலேணி - படி 45
*கொஞ்சம் பேசலாம்*- 3
By ஆண்டாள் பிரியதர்ஷினி
திறமைசாலிகள், அனைவரின் கண்களுக்கும் தானாகவே தெரிய வாய்ப்புகள் இருப்பதில்லை. யாரேனும் இப்படிப்பட்ட எழுத்தாளர்களோ, பேச்சாளர்களோ ஒரு குறிப்பிட்ட நபரைப்பற்றி சொல்லித்தான் வெளியுலகத்திற்கு தெரியவரும். ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயாவில் பயிலும் ஒரு 12 வயது சிறுவனைப் பற்றிய ஆண்டாளின் அறிமுகம் மிக அற்புதம் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பானதாக இருக்கிறது. இவனைப்பற்றி ஆண்டாள் இப்படி குறிப்பிடுகிறார்.
*குழந்தைத்தனம், மனதை கரைக்கும் புன்னகை, விளையாட்டுத்தனத்தோடு பேச்சு; தெளிவு-தீர்க்கம்-ஞானமும் கூடிய பேச்சு என இரண்டு குணாதிசியங்கள் கொண்ட சிறுவன் என ரசிக்கலாம்.
சுவாமி விவேகானந்தரைப் பற்றியும், அவரது உரையைப் பற்றியும் இச்சிறுவன் பேசிக்கேட்பது நமது பாக்கியம். எந்த தடங்கலும், எந்த ஞாபகச்சிக்கலும் இல்லை. பேசத்தொடங்கினால், தெளிவான, ஏற்ற இறக்கத்தோடு பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். 12 வயதில் ஆன்மிகத் தெளிவு இருப்பது அதிசயம். ஆன்மிகத்தில் ஆர்வம் இருப்பதும் அதிசயம். பின்னாளில் மிகச்சிறந்த ஆன்மிக ஆளுமை கொண்ட ஆன்றோனாக உருவாகும் சாத்தியம் உள்ள சிறுவன்*
இந்த சிறப்பு மிக்க சிறுவனிடம் ஆண்டாள் நடத்திய பேட்டி:
"ராத்தரி எப்போ நீ தூங்குவ?"
"நடு ராத்திரி தாண்டித்தான்"
"அது வரைக்கும் என்ன பண்ணுவே?"
"படிப்பேன். இல்லேன்னா யோசிப்பேன்"
"என்ன யோசிப்பே?"
"ஸ்கூல் பத்தி, கல்வி பத்தி, சமூகம் பத்தி, எதிர்காலம் பத்தி.."
பதில் சொன்னது 12 வயது குருத்து!
ராமகிருஷ்ணா வித்யாலயா துறவிகள் இவனைப்பற்றி கூறும் ஒரு வார்த்தை, *இவன் ஒரு ஞானக்குழந்தை*.
இறைவனைத் தேடி வெளியே ஓடாமல், உள்முகமாகத் திருப்புவதும், நம் ஆன்மாவை பல உயர்வுகளுக்கு தகுதிப் படுத்திக் கொள்வதும்தான் ஆன்மிகம். ON-ME-COME என்பதே ஆன்மிகம் என்று ஞானத்தை சிந்திக்கலாம்.
இந்தச் சிறுவனிடம் தான் இதை உணர்வதாகவும் குறிப்பிடுகிறார் ஆண்டாள் பிரியதர்ஷினி .
இவன் பெயர் சபரி வெங்கட்.
இது வரை நீங்கள் படித்த விஷயங்கள் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்பேன் நான். க்ளைமாக்ஸ் இதற்கு பிறகு தான் வருகிறது.
அவனிடம் கேட்ட கேள்வி..
"எதை பார்க்கணும்னு உனக்கு ஆசை?"
"எங்க அம்மா முகத்தை!"
இதை கேட்டு தான் அழுது விட்டதாக பதிவிடுகிறார் ஆண்டாள்!
"இப்படி இருக்கோமேன்னு உனக்கு வருத்தமா இருக்கா?
சாமி மேலே கோபமா இருக்கா?"
பதில்: *இல்லியே. ஹெலன் கெல்லருக்குக் கண் தெரியாது, காது கேட்காது, வாய் பேச முடியாது- ஆனா, எனக்குக் கண்ணு மட்டும் தெரியாது. அவ்வளவுதானே!*
ஆம்! இவ்வளவு சிறப்பு மிக்க சிறுவனுக்கு கண் தெரியாது.
குறை காணாத மனசு தான் கடவுள் வாழும் இடம். அது சபரி வெங்கட்டின் மனசு தானே, நண்பர்களே?!!!!!
இவன் மேலும் தன் வாழ்க்கையில் பல சாதனைகள் புரிய உங்களோடு சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்!
*கடவுள் தரிசனம்*
அதிகாலையில் எழுவது ஆன்ம தரிசனத்திற்கு, தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம். மனசுக்கும், உடலுக்கும் வாரணம் ஆயிரம் பலம் தோன்றும் என்கிறார் ஆண்டாள். பிரம்ம முகூர்த்தம் எனப்படும் சூரிய உதயத்திற்கு முன்பு எழும் பழக்கம் உள்ளவர்கள் பெரும்பாலானோர் சாதனையாளராக இருக்கின்றனர். அதிகாலையை ரசிப்பவர்கள் தேவர் குலம் என்பேன். கடவுளை அமைதியாக வழிபட்டு நிம்மதி பெற கூட நேரமின்றி, வாழ்க்கையில் ஓட்டப்பந்தயத்தைப் போல ஓடும் வீரர்களாகவே மாறி விட்டோம் இப்போதைய தலைமுறை மக்கள் அனைவரும்!
ஆண்கள் சாமி கும்பிடுவது என்பது வேறு. பெண்கள் சாமி கும்பிடுவது என்பது ஒரு தவம் என்ற வேறு லெவல்!
பெண்களுக்கு சாமி கும்பிடுவது என்பது ஓர் ஆசுவாசம். ஒரு நிம்மதி. ஒரு தைரியம். ஒரு தெளிவு. ஒரு வெளிச்சம். ஒரு பரவசம். ஒரு சுகானுபவம். ஒரு செல்லம். ஒரு கெஞ்சல். ஒரு கொஞ்சல். ஒரு சிணுங்கல். ...எல்லாமே.
ஆண்கள் போல துறவு வாழ்க்கை மேற்கொண்டு ஆன்மிகத் தேடலில் ஈடுபடுவதில்லை. தங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் கடவுளை உணர்பவர்கள். இதில் ஜென் துறவியும், பெண்களும் ஒன்று என்கிறார், ஆண்டாள்!
அதென்ன ஜென் துறவி கதை? வாசிப்போமா?!
*ஜென் துறவியின் கதை*
ஒரு ஜென் துறவியிடம் பக்தன் ஒருவன் தானும் துறவு மேற்கொள்ள விழைந்து துறவியை சந்திக்கிறான். "சரி, என்னோடு இரு என்றார் துறவி."
பின்பு துறவி, அவர் பாட்டுக்கு குளித்தார், வயலில் வேலை செய்தார், காய்கறி பறித்து, சமைத்து சாப்பிட்டு, மாலையில் விளையாடினார். உடற்பயிற்சி செய்தார். இசை கேட்டார். தானும் பாடினார். மலையுச்சி ஏறி சூரியனை ரசித்தார். நட்சத்திரம், நிலவை ரசித்தார். இரவு உணவுக்குப்பின் காலாற நடந்தார். பின்னர், இரவு வெட்ட வெளியில் படுத்துக்கொண்டார்.
பக்தனுக்கு ஆச்சர்யம்! குரு கடவுளை கும்பிடவில்லை, பூஜைகள் எதுவும் செய்யவே இல்லை என்று!
துறவியிடம் கேட்டான்.
துறவி சிரித்துக்கொண்டே, "காலையிலிருந்து நான் கடவுளைத் தரிசித்துக் கொண்டுதானே இருந்தேன், நீ பார்க்கவில்லையா?" என்றார்.
இல்லையே, நீங்கள் பலவிதமான வேலைகளைத் தானே செய்தீர்கள் என்றான் பக்தன்.
*ம்.. அதுதான் கடவுள் தரிசனம். அதுதான் தெய்வ சிந்தனை. ஒவ்வொரு செயலையும் முழுமையாக ரசித்து, மகிழ்ந்து மனப்பூர்வமாக செய்வதே இறைதரிசனம், பூஜை எல்லாமே! இதை தாண்டிய இறை தேடல் உண்டா?! என்றார் துறவி*
*பெண்களின் தவம்*
இந்த ஜென் துறவிக்கும், நம்மூர் பெண்மணிகளுக்கும் அதிக வித்தியாசமில்லை. பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அது பால் காய்ச்சும்போது, குழந்தையை கவனிக்கும் போது, சமையல் வேலை செய்யும் போது, துணி துவைக்கும்போது, பாட்டு பாடும்போது, பேருந்துப்பயணத்தின் போது, ஏன் கட்டில் நேரத்திலும் கூடச் சாமியை நினைப்பது பெண்களின் இயல்பு என்று ஒரு துல்லியமான மன இயல் ஓட்டத்தை பதிவு செய்கிறார், நூலாசிரியர் ஆண்டாள்.
இப்படி நுணுக்கமான உணர்வுகளை ஒரு பெண்ணால்தான் வெளிக்கொணரவும் முடியும் என்று வியந்த வேளையில் நெசவு முதல் பாகத்தில் உபநிஷத்து கூறும் "ஈஸ்வர அர்ப்பண புத்தி" என்ற கோட்பாட்டை நான் கோடிட்டு காண்பித்து இருந்தது நினைவுக்கு வருகிறது.
ஆக, வேதம் கூறும் மனப்பாங்கிணை நம் பெண்கள் இயற்கையிலேயே பெற்று செயல்படுத்தியும் வருகிறார்கள் என்பது மிகவும் பாராட்டத்தக்கது!
கடவுள் தரிசனம் ஆண்களுக்கு மேல்சட்டை மாதிரி. ஆனால், பெண்களுக்கு உடம்புக்குத் தோல் மாதிரி, கண், மூக்கு, வாய் மாதிரி பின்னிப் பிணைந்த உணர்வு! சுவாசம் போல இயல்பானது என்று பெண்ணின் பெருமை பேசும் ஆண்டாளின் இன்னும் பல பிரமாதமான கருத்துக்களை அடுத்த பதிவில் தொடர்ந்து வாசிப்போம்!
அன்புடன்,
நாகா.
19.01.2018
No comments:
Post a Comment