”தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்பு மிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன்”
-ஓரான் பாமுக்கின் நோபால் உரை
ஓர் எழுத்தாளன் என்பவன் தனக்குள்ளிருக்கும் இரண்டாவது சுயத்தையும் அவனை அவனாக ஆக்கும் உலகையும் கண்டறிய வருடக் கணக்காக பொறுமையோடு தேடிவருபவன். எழுதுவது என்பதைப்பற்றி நான் பேசும் போது என் மனதிற்குள் முதலில் வருவது ஒரு நாவலோ,ஒரு கவிதையோ அல்லது இலக்கியப் பாரம்பரியமோ அல்ல. ஓர் அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு , ஒரு மேஜையில் அமர்ந்து தனியாக தனக்குள்ளாகத் திரும்பி, வார்த்தைகளால் ஒரு புதிய உலகை அதன் நிழல்களுக்கு மத்தியில் கட்டமைக்கும் ஒரு மனிதன் தான்.
எழுத்தாளனின் ரகசியம் அகத்தூண்டுதல் அல்ல. அது எங்கிருந்து வருகிறதென்பது எப்போதுமே தெரிவதில்லை. அது அவனது மனவுறுதி, அவனது பொறுமை. ”ஊசியை வைத்துக் கொண்டு கிணறு வெட்டுவதைப் போல” என்ற அழகான துருக்கியப் பழமொழி எழுத்தாளர்களை மனதில் வைத்துக் கொண்டுதான் கூறப்பட்டதாக எனக்குத் தோன்றுகிறது.
ஓர் எழுத்தாளன் தன் சொந்தக் கதையை கூற வேண்டுமென்றால் –அதை மெதுவாக நிதானமாகக் கூற வேண்டும். அது மற்றவர்களைப் பற்றிய ஒரு கதை என்பதைப் போல, தனக்குள் உருவான கதையின் சக்தி மேலெழும்பி வருவதை உணர வேண்டுமென்றால், ஒரு மேஜையில் அமர்ந்து தன்னை இந்தக் கலைக்கு, இந்த கை வினைக்குப் பொறுமையாக ஒப்புவிக்க வேண்டுமென்றால் , முதலில் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை தரப்பட்டிருக்க வேண்டும். அகத்தூண்டல் தேவதை (இது சிலரிடம் அடிக்கடி வந்து ஆசீர்வதிக்கிறது. சிலரிடம் அரிதாகவே செல்கிறது)ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டவர்களையே ஆதரிக்கறது. ஓர் எழுத்தாளன் பெரும்பாலும் தனியாக உணரும் போது அவனது முயற்சிகள்,அவனது கனவுகள் அவனது எழுத்தின் மதிப்பு ஆகியவற்றைப் பற்றி பெரிதும் ஐயுற்றிருக்கும் போது அவனது கதையை அவனது கதையென்றே அவன் நினைக்கும் போது அத்தகைய தருணங்களில் அவனுக்குக் கதைகளையும் பிம்பங்களையும் கனவுகளையும் காட்டி, அவன் கட்டியெழுப்ப விரும்பும் உலகத்தை. அந்தத் தேவதை வரைந்தெடுக்கும். என் வாழ்க்கை முழுக்க அர்பணித்து எழுதி வந்திருக்கும் புத்தகங்களை நான் திரும்ப யோசிக்கும் போது, என்னை மிக உன்னதமான மகிழ்ச்சியில் திளைக்க வைத்த வாக்கியங்கள், கனவுகள், பக்கங்கள் எல்லாமே என் சொந்தக் கற்பனையிலிருந்து வந்தவையல்ல என்றும் வேறெதோ ஒரு சக்தி அவற்றைக் கண்டெடுத்து எனக்குத் தாராளமாக வழங்கியிருக்கிறதென்றும் நான் உணர்ந்த தருணங்களால் பெரிதும் ஆச்சரியமுற்றிருக்கிறேன்.
நம்மை அறைக்குள் அடைத்துக்கொண்ட பிறகு நாம் நினைத்தளவுக்கு தனியாக இல்லையென்பதை சீக்கிரமே கண்டு கொள்வோம். நமக்கு முன் வந்தவர்களின் வார்த்தைகளோடு, மற்ற மனிதர்களின் கதைகளோடு , மற்றவர்களின் புத்தகங்களோடு மற்றவர்களின் வார்த்தைகளோடு பாரம்பரியம் என்று நாம் அழைக்கிறோமே , அதனோடு நாம் சேர்ந்திருக்கிறோம். தன்னை அறிந்து கொள்ளும் தேடலில் மனிதகுலம் சேமித்து வைத்த மதிப்பு மிக்க களஞ்சியம் இலக்கியம் என நம்புகிறேன். அறைக்குள் தன்னை அடைத்துக் கொண்டு தனக்குள்ளாகவே முதன்முதலாகப் பயணம் செய்யத் தொடங்கும் எழுத்தாளன் வருடங்கள் செல்லச் செல்ல இலக்கியத்தின் சாசுவதமான விதியைக் கண்டு கொள்வான். அவனது சொந்தக் கதைகளை ,அவை மற்றவர்களுடைய கதைகள் போலவும் மற்றவர்களின் கதைகளைத் தன் சொந்தக் கதைகளைப் போலவும் சொல்வதற்கு அவனிடம் கலைநயம் இருக்க வேண்டும். அது தான் இலக்கியம் எனப்படுவதும். ஆனால் முதலில் நாம் மற்றவர்களின் கதைகளுக்கும் புத்தகங்களுக்கும் ஊடாக பயணம் செய்தாக வேண்டும்.
-”அப்பாவின் சூட்கேஸ்” என்னும் ஓரான் பாமுக்கின் நோபால் உரையிலிருந்து தேர்ந்தெடுத்த சில பகுதிகள்
-ஜி குப்புசாமி
No comments:
Post a Comment