Book-61
அண்ணா தன் வரலாறு
-டாக்டர் அண்ணா பரிமளம்
தமிழக அரசியல் மற்றும் சமூக வரலாற்றில் அழியாத தடம் பதித்த பேரறிஞர் அண்ணாவின் வாழ்க்கையையும் சிந்தனைகளையும் அறிந்துகொள்ள உதவும் முக்கியமான நூல்.அண்ணா அவர்களே தன் வாழ்க்கை வரலாற்றை எழுதியது போல் டாக்டர் அண்ணா பரிமளம் எழுதிய இந்நூல் அமைந்துள்ளது.
தன் வரலாறு என தனியாக எழுதவில்லை.அவரின் சொற்பொழிவுகள், கடிதங்கள், ஆகியவற்றை ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
நான் நெசவாளி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்ற முறையில் சொல்லிக் கொள்வேன். நெசவாளியாய்ப் பிறந்தவர் யாரும் பொறுமையாக இருப்பதைத் தவிர, வேறு வழியில்லை. எத்தனை தடவை அறுந்த நூலை இணைத்துப் பார்க்கிறோம். எத்தனைக் சிக்கல்களைப் பிரித்திருக்கிறோம். ஆகவே நெசவாளிக் குடும்பத்தில் பிறந்தவர்கள், நெசவாளியாக இல்லாவிட்டாலும் நெசவாளிக் குடும்பத்திற்கு இயல்பான 'பொறுமை 'க் குணத்தைப் பெற்றிருப்பார்கள்!என சட்டசபை பேச்சில் குறிப்பிட்டதை நுழைவுப்பகுதியாக உள்ளது சிறப்பு.
தாயார் பங்காரம்மாவைவிட சிறிய தாயார் ராசாமணி அம்மையாரிடமே (தொத்தா) பயம் கலந்த பக்தியோடு இருந்ததை குறிப்பிடுகிறார். பின்னாளில் தொத்தாவின் இறப்பு குறித்த நீண்ட்ச் பதிவினை பாசப்பிணைப்போடு எழுதியுள்ளார்
நாடக நடிப்பு, படிப்பும்.கல்லூரி வாழ்க்கையும் அரசியல் ஈடுபாட்டினையும் கூறியிருப்பார்.தான் கல்லூரியில் படிக்கும் போது குறிப்பு எடுக்காமல்.படித்ததை அறிந்து ஆசிரியர் கோபித்துக் கொண்டார். ஆனால் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்ததைப் பாராட்டினார்.தன்னால் பொருளாதாரம் படிக்க இயலுமா என சந்தேகத்தை போக்கி கல்லூரி படிப்பை வெற்றிகரமாக முடித்தார்.
அண்ணாவின் இளமைக்காலம், கல்வி, எழுத்துப் பணி, பேச்சாற்றல், நாடகத் துறை மீதான ஈடுபாடு, பத்திரிகைப் பணி, அரசியல் பயணம் என அவரது வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை கூறுகிறது.பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தால் ஈர்க்கப்பட்ட அண்ணா, சமூகத்தில் நிலவிய சாதி வேறுபாடு, மூடநம்பிக்கை, சமூக ஏற்றத்தாழ்வு ஆகியவற்றை எதிர்த்து தனது எழுத்தையும் பேச்சையும் ஒரு சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன்படுத்தினார்.
பிரதாப முதலியார் சரித்திரம், கலிங்கத்துப்பரணி, சிலப்பதிகாரம், ரோம் சாம்ராஜ்ய எழுச்சியும் வீழ்ச்சியும்,கரிபால்டி உள்ளிட்ட பல அயல்நாட்டு வீரர்களின் கதைகள், திருவிக, அக்கிரகாரத்து அதிசயப்பிறவி, வ ராமசாமி புத்தகம் தன்னை கவர்ந்தவைகளாக குறிப்பிடுகிறார்
அண்ணாமலை பல்கலை மாண்வர்களான அன்பழகன் படிப்பு முடிந்ததும் இயக்கத்தில் சேர்வாரென இருந்தேன்.நெடுஞ்செழியன் தமிழ் புலமைக்கு அவர் தமிழறிஞராக மிளிர்வார் என எண்ணினேன். ஆனால்.திராவிட சிந்தனை அவரையும் இயக்கத்தின் பால் இணைத்தது என்றும் கே.பி.பி சாமி, சம்பத்,கலைஞர்,சங்கரலிங்கனார் பற்றிய அறிமுகங்களை சொல்லியிருக்கிறார்.
மாநாடு, திராவிட நாடு இதழ், சிறைவாழ்க்கை,தமிழ்நாடு என பெயர்சூட்டிய வரலாறு,பயணங்கள், நாடக வாழ்க்கை, இயக்கத் தேர்தலும் கட்டமைப்பும்,தேர்தல் தோல்வி,சீர்திருத்தத் திருமணம் போன்றவை பற்றி எழுதியுள்ளார்.சிந்தனை திறன் படைத்தவருக்கு தனிமை என்பது வரம்.அவ்வாறு சிறையில் இருந்த காலகட்டம் ஓவியம் வரைவது புத்தகம் படிப்பது, வரலாற்றை பகிர்வது, இந்தி மொழிக்கு எதிரான கருத்தியல் உருவாக்கும் களத்தினை அண்ணா அவர்கள் சிறையில் கட்டமைத்துள்ளார்.1964ம் ஆண்டு ஒவ்வொரு நாளும் என்ன நடந்தது என தேதியுடன் நாட்குறிப்பு தந்துள்ளனர்.
நேருவுக்கு செல்வாக்கு அதிகமா? அண்ணாதுரைக்கு அதிகமா? என்று அமைச்சர் (பக்வத்சலம்) மக்களைக் கேட்கிறார். அமைச்சர் அவ்வளவு கஷ்டப்படாமல் என்னையே கேட்டால் நானே சொல்லுவேன். என்னை விட நேரு அவர்களுக்கு செல்வாக்கு நிரம்ப இருக்கிறது. ஆனால் நான் பக்வத்சலம் அவர்களுக்கு ஒன்று சொல்லுவேன். நேருவினுடைய செல்வாக்கு வளரவேண்டிய அளவுக்கு வளர்ந்தாகி விட்டது. அண்ணாத் துரையின் செல்வாக்கு வளர ஆரம்பித்திருக்கிறது என நயம்பட சொல்லியிருப்பார்.
உடல்நலமின்றி இருந்தகால கட்டங்கள் சொல்லொனா துயரை அனுபவித்தாலும் ஒவ்வொருவரையும்
நன்றியோடு நினைவு கூர்ந்துள்ளார்.
அதே போன்று சிறை வாழ்க்கை அனுபவங்களை டைரி குறிப்பு போல் ஒவ்வொரு நாள் நிகழ்வுகள், வாசித்த புத்தகங்கள், சந்தித்த நபர்கள் தலைவர்கள் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
பெரியாருடனான உறவு பற்றி, ஹரித்துவார் பயணத்தில் அவரை பெரிய சாமியார் என்றும் அண்ணாவை சின்ன சாமியார் என்றும் கூறிய சம்பவங்களை நினைவு கூர்கிறார்.நான் இருக்கும்.இடத்தில் பெரியாரின் கருத்துகள் இருக்கும்.அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த காலக்கட்டத்தில் பெரியாருக்கு, அண்ணா அனுப்பிய மின்னஞ்சல் பகிரப்பட்டுள்ளது.கலைவாணர் சிலை திறப்புவிழா தான் அண்ணா அவர்கள் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சி.
*எவனொருவன் இந்திரியங்கள் எனும் துட்டக் குதிரைகளுக்கு அறிவெனும் கடிவாளமிட்டு அடக்கி, நன்னெறி எனும் பாதையிலே செலுத்துகிறானோ, அவனே அரனடி எனும் திருத்தலத்தை அடைவான். இடையே இச்சை எனும் நச்சுக்கொடி கிடக்கும்; பச்சென்று இருக்கிறதே என்று பார்த்தாலோ சிக்கினோரைச் சீரழிக்கும். அதற்கு நிராசை எனும் சாட்டை கொண்டு குதிரையைத் தட்டவேண்டும்
*பகல் பொழுதைக் கழிப்பதைவிட, இரவுகள்தான் அதிகமாகத் தொல்லை தருகின்றன. செங்காய்களைப் பறித்து வந்து, அவை கனிவதற்காக, வைக்கோற் போரில் போட்டு ஓர் அறையில் போட்டு மூடிவைப்பார்கள், நன்கு கனிவதற்காக. இரவு, அறைகளிலே உள்ள நிலைமை இதுபோல். காற்று துளியும் கிடையாது.(சிறைச்சாலையில்)
அண்ணா கண்ட கனவாக குறிப்பிடப்படுவது தமிழகம் வளம் கொழிக்கும் இடமாக இருக்க வேண்டும்.மாநிலங்கள் அதிக அளவிலான அதிகாரங்களை பெறுதல் வேண்டும் அதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும். தான் உடல் நலம் குன்றிய நிலையிலும் தம்பிக்கு கடிதம் எழுதாமல் இருந்ததில்லை. அண்ணா அவர்கள் நூற்றாண்டு கண்ட தலைவர் என்பது நிதர்சன உண்மையாகும்
தொடர்ந்து வாசிப்ப்போம்
தோழமையுடன் மணிகண்டபிரபு
No comments:
Post a Comment