Saturday, 17 October 2026

உம்பெர்கோ


தும்பி சிறார் இதழின் 94வது பிரதி அச்சில் மலர்ந்து பூக்குழந்தைகளை சென்றடைந்துள்ளது. இவ்விதழில் பிரசுரமாகியுள்ள கதை முற்றிலும் மாறுபட்ட இரண்டு குடும்பங்களைப் பற்றியது. அவர்களை பிணைப்பது இரு வீட்டுக்கும்  நடுவில் வளரும் ஒரு ரோஜாச் செடி. ஏதோ ஒரு காரணத்தால், இரண்டு வீட்டின் பெரியவர்களும் சண்டை போட்டுக்கொண்டு, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த இடத்தில் வேலி அமைக்கிறார்கள். குழந்தைகளும், ரோஜாச் செடியும் மெல்ல வாடத் தொடங்குகிறது. இவற்றை கவனித்து வந்த இரு வீட்டின் செல்லப்பிராணிகளான பூனையும் நாயும் ஒன்றிணைந்து அவ்வேலியை அகற்றுகின்றன. இரு குடும்பங்களும் முன்பு போல் இயல்பாக பேசிக் கொள்கிறார்கள். இப்போது குழந்தைகள் தாராளமாக ஓடியாடி விளையாடுகிறார்கள், ரோஜாச் செடியும் உயிர்த்து பூத்துள்ளது. போர் எதிர்ப்பை மிக எளிமையாக பேசும் கதை. கருப்பு வெள்ளை பின்னணியில் முக்கியமான இடங்களில் மட்டும் சிவப்பு வண்ணங்கள் கொண்ட ஓவியங்கள் அமைந்துள்ளது குழந்தைகளை நிச்சயம் ஈர்க்கும். மேலும் 'விளையாட்டுகள்' என்ற சிறார் பாடலும், குழந்தைகள் கிறுக்க வண்ணம் தீட்ட வித்யா பெனோவின் கோட்டோவியங்களும் உள்ளடங்கியுள்ளன. கதையை வாசிக்கும் குழந்தைகள் என்றும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுபவர்களாக மலர்வார்கள் என்று மனதார நம்புகிறோம், போரில்லா பூமி அமைய உளமாற பிரார்த்திக்கிறோம்.

இதழ் வடிவமைப்பு: கல்ஆல், இரா. தியாகராஜன்

படைப்புகளை அனுப்ப / பேச/ இதழ் பெற:
9843870059, thumbigal@gmail.com
https://thumbigal.com/

No comments:

Post a Comment