Saturday, 21 November 2026
ஜென் தோட்டம் | மலர் 31"வாழ்க்கை நமக்குத் தரும் வலி முதல் அம்பு. அந்த வலிக்கு நாம் காட்டும் எதிர்வினை - இரண்டாவது அம்பு"ஒருவரின் மீது ஒரு அம்பு பாய்ந்து வலியை ஏற்படுத்தும்போது, அதைத் தொடர்ந்து இரண்டாவது அம்பும் அதே இடத்தில் பாய்ந்தால் வலி இரட்டிப்பாகும். இதில் முதல் அம்பை வாழ்க்கை எய்கிறது; இரண்டாவது அம்பை நம்மீது நாமே எய்துகொள்கிறோம். வாழ்க்கையில் வலி தவிர்க்க முடியாதது; ஆனால் அந்த வலியைப் பெரும் துன்பமாக மாற்றுவது நம் மனதின் எதிர்வினை. முதல் அம்பானது, நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட நிகழ்வுகள் தரும் உடல் அல்லது மன வலி. நோய்வாய்ப்படுவது, நேசிப்பவர்களின் பிரிவு, எதிர்பாராத தோல்வி, இயற்கை இடர்பாடுகள் ஆகியவை. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் முதல் அம்பின் வலியை உணராமல் இருக்க முடியாது.முதல் அம்பு பட்ட பிறகு நம் மனம் உருவாக்கும் கோபம், பயம், சுயபச்சாதாபம், குற்ற உணர்ச்சி போன்றவை இரண்டாம் அம்பு. இந்த எதிர்வினையை நாம் தான் உருவாக்கிக் கொள்கிறோம். இது வலியைக் குறைப்பதற்குப் பதிலாக, அதை நீண்ட கால மன உளைச்சலாக மாற்றிவிடுகிறது.எடுத்துக்காட்டாக, ஒரு முக்கியமான சந்திப்பிற்குச் செல்லும்போது எதிர்பாராமல் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டால் நமது நேரம் வீணாகும், நினைத்த இடத்துக்கு சரியான நேரத்தில் போக முடியாமல் போகும். ஆனா இந்த நெருக்கடியான நேரத்தில் நமது வண்டியில் தொடர்ந்து ஹார்னை அழுத்திக்கொண்டே இருப்பது, சக ஓட்டுநர்களைத் திட்டுவது, "இன்றைய நாளே பாழாகிவிட்டது" என்று ரத்த அழுத்தத்தை ஏற்றிக்கொள்வது போன்றவை நாமே நமக்குள் எய்திக்கொள்ளும் இரண்டாவது அம்பு. இதனால், மன அமைதி சிதைந்து, தாமதமாகச் சென்ற பிறகும் அந்தச் சந்திப்பில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியாமல் போகும்."உண்மையில் என்ன நடந்தது?" என்பது முதல் அம்பு. "அதைப் பற்றி என் மனம் என்னென்ன கற்பனைகளைக் கட்டுகிறது?" என்பது இரண்டாவது அம்பு. இரண்டையும் தனித்தனியாக அடையாளம் காணும்போதே மன அழுத்தம் பாதியாகக் குறைந்துவிடும்.முதல் அம்பைத் தடுக்க முடியாது என்பதை ஏற்றுக்கொண்டு, அடுத்ததாக என்ன ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்கலாம் என்று சிந்திக்க வேண்டும்.வாழ்க்கை வீசும் முதல் அம்புகளை நம்மால் நிறுத்த முடியாது; ஆனால் இரண்டாவது அம்பை பயன்படுத்தாமல் இருப்பது நம் கையில் உள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment