*குடும்பமும் கல்விக்கூடமும் இணைந்து தான் ஒரு புதிய மனிதனை/மனுஷியை உருவாக்க வேண்டும்*
#MakeNewBonds #mustread #5MinsRead
-SK
*ஆண்பால் பெண்பால் அன்பால்*
-அ.முத்து கிருஷ்ணன் (அரசியல் செயல்பாட்டாளர்)
சிறுவனாக இருக்கும்போதிருந்தே வீட்டில் பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது, வீட்டைக் கூட்டுவது, கழிப்பறையைச் சுத்தம் செய்வது, காய்கறி வாங்குவது, மளிகைக் கடைக்குச் செல்வது என எல்லா வேலைகளுக்கும் என்னைத் தயார் செய்தார் என் அம்மா பொன்மலர். இந்த வேலைகளை எல்லாம் செய்யப் பழகினால், இயல்பாகவே பெண்கள் உலகின் பால பாடங்களை நான் கற்றுக்கொள்வேன் என்று அவர் நம்பியிருப்பார் என நினைக்கிறேன்.
சிறுவயதுமுதலே நான் இந்த வேலைகளை விரும்பிச் செய்பவனாகவே வளர்ந்தேன். இந்த வேலைகளைச் செய்வது ஒன்றும் பெரும் சாதனை இல்லை என்கிற உணர்வோடுதான் வளர்ந்தேன். முதலில் இவை எல்லாம் என் வேலைதானே, எனக்கான வேலைகள்தானே. நாம் இந்தப் பூமியில் வாழ இந்த வேலைகள் எல்லாம் தெரிந்திருப்பது அவசியம் இல்லையா?
இன்னொரு பக்கம் என் வயதைச் சேர்ந்த நண்பர்களிடம் இந்த வேலைகளை எல்லாம் செய்வது `ஃபேஷனாக’ இல்லை. அவர்கள் மத்தியில் நான் கடுமையான கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானேன். பலமுறை இந்த வேலைகள் செய்கிறவனாக இருப்பதற்காக அவமானப்படுத்தப் பட்டிருக்கிறேன். இருப்பினும் இவை எல்லாம் எனக்கு மிகவும் பிடித்தமான வேலைகள் என்பதால், உறுதியோடு இருந்தேன்.
இப்படியான வேலைகளைச் செய்பவர்கள் மென்மையானவர்கள் என்கிற எண்ணம் நம் சமூகத்தில் நிலவுகிறது. அதனாலேயே நான் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாக நேர்ந்திருக்கிறது. என் பள்ளிப்பருவம் முதல் என் கல்லூரிக்காலம் வரை பலவிதமான பாலியல் தொந்தரவுகளைச் சந்தித்தேன். அவற்றை இயல்பாகக் கடந்தும் வந்தேன். இந்தத் தருணங்கள்தான் எனக்குப் பாலியல் ரீதியில் இயங்கும் இரு வேறு உலகங்களின் நெருக்கடிகளை நேரடியாகக் கற்றுக்கொடுத்தன. ஆண்-பெண் உலகிற்குள் நுழைவதற்கான வாயில்களை அந்த நெருக்கடிகளே திறந்துவைத்தன. அப்படி நான் எதிர்கொண்ட ஒவ்வொர் அனுபவமும் என்னைப் பக்குவப்படுத்தியது.
மும்பை... பெண்களின் நகரம். இரண்டு நூற்றாண்டுகளாக உழைக்கும் பெண்களால் உயர்ந்த நகரம். அது வெறும் மராத்தியப் பெண்களின் நகரம் மட்டுமே அல்ல. லாரிகள் ஓட்டும் சீக்கியப் பெண்கள், கொங்கன் கரையின் மீனவப் பெண்கள், இரும்புப் பட்டறைகளில் சம்மட்டி அடிக்கும் மராத்தியப் பெண்கள், கட்டட வேலைகள் செய்யும் மத்தியப்பிரதேசத்துப் பெண்கள், சிவப்பு விளக்குப் பகுதியின் பாரதமாதாக்கள் என எல்லா வகையினரையும் இங்கே காணலாம். இந்த நகரம் கோரும் எந்த வகை உழைப்பையும் அவர்கள் தரத் தயாராக இருந்தனர். பைக் ஓட்டலாம், சிகரெட் பிடிக்கலாம், மது அருந்தலாம், வயலின் இசைக்கலாம் என எல்லா இயல்புகளுடனும் வாழும் சூழலை மும்பை நகரம் தன் பெண்களுக்கு வழங்கி இருந்தது. இந்தப் பெண்களின் மீது கலாசாரக் கண்காணிப்புச் செய்ய அன்று யாருக்கும் நேரமில்லை. தன்னுடைய தேவைகளைத் தானே பூர்த்திசெய்துகொள்கிற இப்படிப்பட்ட சுதந்திரமான பெண்களுக்கு நடுவில்தான் நான் இருந்தேன். வெவ்வேறு கலாசாரங்களைக் கொண்ட பெண்களுக்கு மத்தியில் வளர்ந்தேன்.
என் பள்ளித் தோழி மீனாவும் நானும் மதிய உணவின்போது ஆளுக்கு ஒரு கை சாப்பாட்டைப் பறிமாறிக்கொள்வோம். யாமினி தேஷ்முக்கிற்கும் எனக்குமான படிப்பின் போட்டியும் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துப் பரிமாறும் சிரிப்பும் பள்ளிப்பருவத்தையே இலகுவாக்கியது. நந்திதா தாஸ் வரையும் பென்சில் ஓவியங்களின் முதல் ரசிகன் நான். ஷில்பா ஹாண்டே தன் பாட்டியின் மூலம் கற்ற மராத்திய கிராமியப் பாடல்களின் பெரும் விசிறியானேன். எங்கள் கிளாஸ் டீச்சரான கல்சி மிஸ் பஞ்சாப்பைச் சேர்ந்தவர், கல்சி மிஸ்ஸின் திருமணத்துக்குச் சென்று அவரை என் கண்கள் தேடிக்கொண்டிருந்த நேரம், மணமகளாக அவர் நெடுநேரம் நடனமாடிய காட்சியின் பிரமிப்பில் இருந்து இன்னும் நான் விடுபடவில்லை. இப்படிப்பட்ட வண்ணமயமான ஓர் உலகில் இருந்து திடீரென முற்றிலும் வேறு மாதிரியான ஓர் உலகிற்குத் தூக்கி எறியப்பட்டேன்.
மதுரை... மும்பைக்கு நேர் எதிரான ஊர். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டரில் அரபிக்கடல் பார்த்துக்கொண்டிருந்தவனை, மதுரையின் விளிம்பில் உள்ள திருப்பரங்குன்றத்தின் `பீ ’ தெப்பத்திற்கு அருகில் கொண்டுவந்து சேர்த்தது வாழ்க்கை. தமிழ் நிலத்தில் பெண்களில் வாழ்வு, மும்பைப் பெண்களைப்போல இருக்கவில்லை. அது சகித்துக்கொள்ள முடியாதபடி இருந்தது. திருப்பரங்குன்றத்தில், என் வாழ்வின் இரண்டாம் அத்தியாயம் தொடங்கியது.
ஒரு ரிக்ஷாவில் பிரசவம் பார்க்கச் சென்று, அடுத்த நாள் பிறந்த பெண் குழந்தையுடன் அதே ரிக்ஷாவில் திரும்புவார்கள். மூன்றாம் நாளே அந்தச் சிசுவைக் கொலைசெய்து சர்வ சாதாரணமாகச் சுடுகாட்டிற்குத் தூக்கிச் செல்லும் காட்சிகள் என்னை உலுக்கின. இந்த சிசுக்கொலைகள் எதுவும் ரகசியமாக நடந்தவையல்ல. மாறாக அடுத்தநாள் `உமியா, கள்ளிப்பாலா, மூச்சைப் பிடித்தா?’ என்று விவாதிக்கப்படுகிற அளவுக்கு வெளிப்படையாக நடந்தன.
எந்தப் பக்கம் திரும்பினாலும் குழாயடிச் சண்டைகள், குடும்பத் தகராறுகள் எனப் பெண்களின் தினசரிப் பாடுகளைப் பார்க்கவே சகிக்கவில்லை. ஒரு குடும்பத் தகராறில் கணவன் குடித்துவிட்டுவந்து மனைவியையும் பிள்ளைகளையும் விறகுக்கட்டையால் அடிப்பதைப் பார்த்த கணம் என் தூக்கமே தொலைந்து. ஆனால், இது அடுத்தவர்களின் சொந்தப் பிரச்னை, குடும்பப் பிரச்னை என்று தலையிட மனத்தடையுடன் சுற்றியிருந்தவர்கள் காத்திருந்தது எனக்கு வியப்பை அளித்தது.
பெண்களின் சகிப்புத்தன்மையின் மீதுதான் குடும்ப அமைப்பே கட்டப்பட்டுள்ளது என்பது புலப்படத் தொடங்கியது மதுரையில்தான். ஓர் ஆண் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கான ஒராயிரம் உதாரணர்கள் மதுரையில் என்னைச் சுற்றிலும் வாழ்ந்தார்கள்.
மனிதகுல வரலாற்றின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் பெண்தான் இந்தச் சமூகத்தின் எல்லாமுமாக இருந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். பெண்கள்தான் வேட்டைக்குச் சென்றிருக்கிறார்கள், இயற்கையை நுட்பமாக ஆராய்ந்து விவசாயத்தைக் கண்டுபிடிக்கிறார்கள், ஆயுதங்கள் செய்யக் கற்கிறார்கள், சமையலை அதன் நுட்பத்திற்குக் கொண்டு செல்கிறார்கள். பெண்களின் விசையில் தான் இந்த உலகம் சுழன்றிருக்கிறது, இன்றும் சுழல்கிறது.
ஆஸ்திரேலியாவில் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட உலகின் மிகப் பழைய பாறை ஓவியங்கள் பெண்களால் வரையப்பட்டவையே என்பதைச் சமீபத்தில் வாசித்தேன். நாம் குகைமனிதர்களாக இருந்தவரை அன்றாடம் வேட்டையாடினோம்; தினமும் சாப்பிட்டோம். நம்மிடம் உடைமைகள் எதுவும் இருக்கவில்லை. ஆனால் சமவெளிக்கு வந்தபிறகு வேளாண்மைச் சமூகமாக மாறுகிறோம். அதன்பிறகு உடைமைகள் சேர்க்கத்தொடங்கினோம். மனிதனிடம் உபரி உருவாகத்தொடங்கியது. உபரி வந்தபிறகுதான் மெள்ள மெள்ளப் பெண் சிறை வைக்கப்படுகிறாள்; அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றன; வீட்டின் நிரந்தரக் காவலாளியாகவும், சம்பளம் இல்லா வேலையாளாகவும் `பதவி உயர்வு’ பெறுகிறாள். சாஸ்திரமும், சடங்கும், பாகுபாடும் ஒவ்வொரு மதத்திற்கும் சாதிக்கும் வேறு வேறாக இருந்த போதும் உலகம் முழுவதும் சாதிமத வேறுபாடின்றி பெண்களுக்கு மட்டும் ஒன்றுபோல் அடிமை சாசனம் எழுதப்பட்டது எப்படி?
ஆண்கள் காலம் காலமாக வீட்டு வேலைகளில் பங்கெடுப்பதில்லை, சமையல் என்றால் அது ஒரு வேதியியல் ஆய்வுக்கூடத்தின் சமாசாரம் என்கிற புரிதல்தான் அவர்கள் மூளையில் சம்மணம் போட்டு உட்கார்ந்துள்ளது. இரண்டு நாள்கள் செய்தால் அது பழகிவிடும், ஆனால், பழகிவிடக் கூடாது, பழகிவிட்டால் அது நம் வேலையாகிவிடும் என்பதில் மட்டும் கறாராக இருக்கிறோம். கையை நீட்டினால் தண்ணீர் வரும், குரல் கொடுத்தால் காபி வரும், மணி அடித்தால் டைனிங் டேபிளில் சாப்பாடு வரும்... இவைகளை எல்லாம் ரோபோக்கள் செய்துவைக்கும்போது நாம் சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சிப் பார்க்கலாம்தானே.
இன்று ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் பிரவேசித்தால், அங்கு ஒரு போர்ச்சூழல் நிலவுகிறது. யார், யார்மீது அதிகாரம் செலுத்துவது என்கிற ஈகோ போட்டி நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஏவுகணைகளைவிட கொடிய வார்த்தைகள் தீப்பிழம்புகளாகக் காற்றில் அலைபாய்கின்றன. என் நட்பு வட்டத்தில் நான் இதுவரை செய்து வைத்துள்ள 25-க்கும் மேற்பட்ட திருமணங்களின் தினசரி வாழ்வில் பங்கேற்பவன் என்கிற தகுதியில், இந்த ஜுவாலைகள் என்னைப் பலமுறை பதம் பார்த்திருக்கின்றன.
ஒவ்வொரு ஆணின் மனதிலும் எங்கிருந்து இந்த அதிகாரம் குடி புகுந்தது, அவனுக்கு ஏன் எப்பொழுதுமே பெண் ஒரு சருகைப்போல் காட்சியளிக்கிறாள்? எல்லாவிதங்களிலும் நவீனத்தை நுகரத் துடிக்கும் ஒரு மனம் ஏன் தன் வாழ்வின் சகலமாகவும் இருக்கும் பெண்களை அடிமைபோல் நினைக்கிறது? அதிகாரம் செலுத்தியேதான் தீர வேண்டுமா, ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்தியேதான் தீர வேண்டுமா? என்பவை இருபாலாருக்கு முன் உள்ள பெரும் கேள்விகள். இந்தச் சலிப்புகளுக்கு மத்தியில் குழந்தைகள் மட்டுமே குடும்பம் ஒட்டிக்கொண்டிருக்கக் காரணமாக இருக்கிறார்கள். குழந்தைகள் இல்லையெனில் பல பெண்கள் இந்தச் சித்ரவதைக் கூடங்களில் இருந்து வெளியேறியிருப்பார்கள்.
குடும்ப அமைப்பு நம் பண்பாட்டில் இருந்து தான் அதற்கான விழுமியங்களைப் பெறுகிறது. சாஸ்திரமும் சாதியும் பெண்ணுக்குக் காலம் காலமாகச் செய்துவந்த அநீதியை அழித்தொழிக்கும் ஆயுதங்களாக ஜனநாயகமும் அரசியல் சாசனமும் திகழும் காலம் இது. ஆனால், இப்போதும் ஏன் இந்த ஆயுதங்கள் பயனளிப்பது இல்லை? பெண்களுக்கு வாக்குரிமை, கல்வி, வேலைவாய்ப்பு என எல்லாம் சாத்தியமாகிவிட்டது. இருந்தும் ஏன் உழைக்கும் பெண்களில் பலர் தங்கள் சம்பளத்தைக் கணவன்மார்கள் கைகளில் கொடுத்துவிட்டு தினசரிக் காலை வேலைக்குச் செல்லும்போது பேருந்துக் கட்டணத்திற்கே கையேந்தி நிற்கிறார்கள்? வேலைக்குச் செல்லும் பெண்களில் எத்தனை பேரால் தங்களின் பெற்றோருக்கு, உடன் பிறந்தவர்களுக்குக் கடும் நெருக்கடிகளில் கூட பொருளாதார ரீதியில் உதவ முடிகிறது. நல்ல ஊதியம் ஈட்டும் பெண்களிலும் பெரும்பான்மையானவர்கள் குடும்பத்துக்குள் அதிகாரம் அற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
என் பெற்றோர்கள் `உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களே தேர்வு செய்யலாம்’ என்கிற சுதந்திரத்தை வழங்கினார்கள். காதல் திருமணம், சாதி மறுப்புத் திருமணம் செய்தாலே மானமுள்ள குடும்பமாக இனி நாங்கள் இருக்க முடியாது என்று சுற்றியுள்ள சமூகம் நிர்பந்தித்தபோதும், மானங்கெட்டவர்களாக இருப்பினும் மனிதர்களாகவே வாழ விரும்பினோம். நான், என் தங்கை கல்யாணி, என் தம்பி ரவி ஆகிய மூவரும் தங்களின் இணையர்களைத் தாங்களே தேர்வு செய்து, சாதி/மத மறுப்புத் திருமணங்களைச் செய்துகொண்டோம்.
என் காதலுக்கு என் அம்மா பச்சைக்கொடி காட்டியபோதும், நான் காதலித்த பெண்கள் எனக்கு சிவப்புக் கொடியையே காட்டினார்கள். வறுமை மிகுந்த காலம் என்பதால், நானும் அந்த நேரம் கொஞ்சம் தாழ்வு மனப்பான்மையுடன் உழன்றுகொண்டிருந்தேன்.
ஆவணப்படம் எடுத்தேன், அதன்பின் எழுதத் தொடங்கினேன். என் புதிய நூல்கள் கைக்குக் கிடைத்ததும் அதன் புது வாசனையை முகர்ந்தேன். இந்த வாசனை என் முதுகெலும்பை கொஞ்சம் நிமிரச் செய்தது. இருப்பினும் ஏழு மலை ஏழு கடல் தாண்டித்தான் சோஃபியாவைச் சந்தித்தேன். சோஃபியாவைக் காதலித்துத் திருமணம் செய்தபோது எல்லா சடங்குகளையும் மறுத்தோம். தாலி என்கிற லைசென்ஸைக் கட்ட இயலாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். சிலர் வந்து நிர்பந்தித்தபோது அப்படியெனில் மேடையில் எனக்கும் ஒரு தாலியை சோஃபியா கட்ட வேண்டும் என்று முரண்டு பிடித்து சடங்குகளை விரட்டினோம். எங்கள் இருவரின் குடும்பங்களும் எங்களின் சடங்கு சம்பிரதாய அழித்தொழிப்பைப் போகிறபோக்கில் சம்மதித்தார்கள். செபஸ்தியம்மாளும் பொன்மலர் அம்மாவும் இந்தச் சடங்குகள், சம்பிரதாயங்களுக்கு வாழ்வில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை அவர்கள் வாழ்க்கைப்பாடுகளின் வழியே கற்றிருந்தார்கள்.
நாங்கள் இருவரும் புத்தகங்களை மேடையில் பரிமாறி ஒரு புதிய நடைமுறையை ஏற்படுத்தினோம். சோஃபியா ஒரு பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். ஓர் அரசியல் செயல்பாட்டாளர்; எழுத்தாளரான எனக்கு வாழ்க்கை கொடுத்த சோஃபியாவிற்கு நான் ஒரு House Husband-ஆக இருந்துவிட வேண்டியதுதான் என்று தீர்மானித்திருந்தேன். ஒரு சராசரி ஆண் எனக்குள் அறவே இல்லை என்று நான் பொய்சொல்ல மாட்டேன். பாதிக் கிணற்றைத் தாண்டியிருக்கிறேன். எஞ்சிய காலத்தில் ஒரு சமத்துவமான வெளியை வந்தடைவேன் என நம்புகிறேன்.
இன்றும் நான் விரும்பிச் செய்யும் வேலைகளைச் சமூகத்தின் பொதுபுத்தி ஏளனத்துடன்தான் பார்க்கிறது. ஒரு கணவர் என்றால், அவர் சம்பாதிப்பவராகத்தான் இருக்க வேண்டுமா என்ன? வெளிநாடுகளில் பல நேரம் இருவரும் மாறி மாறி வேலைக்குச் செல்வது, வீட்டைப் பார்க்கும் பொறுப்பை ஏற்பது என சர்வசாதாரணமாக மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
பொதுவாழ்க்கையில் இருப்பது என்றால் என்ன என்பதை இந்தச் சமூகத்திற்கு புரியவைப்பதே பெரும் சவாலாக உள்ளது. நான் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டே எழுதுகிறேன், வாசிக்கிறேன், கூட்டங்களில் உரையாற்றுகிறேன், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கிறேன். இதை எல்லாம் செய்தாலும் சம்பாதிக்க வேண்டாமா என்கிறது சமூகம். `ஒரு குடும்பத்தில் ஒருவர் சம்பளம் வாங்கினாலே போதும்’ என்றால் விளங்கிக்கொள்ள மறுக்கிறார்கள். என்மீது வீசப்படும் ஏளனமான பார்வைகளை ரசித்துக் கடக்கிறேன்.
என் வாழ்க்கை அற்புதமான பெண்களால் நிரம்பியது. ஆண்களை விடவும் பெண் தோழிகள், அக்காமார்கள், மதினிமார்கள்தான் என் வாழ்வின் சகலமாகவும் இருக்கிறார்கள். என்னைச் செதுக்கி என் வாழ்வின் முக்கியத் தருணங்களில் உடனிருந்திருக்கிறார்கள். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் என் பள்ளித் தோழிகள் பலருடனும், 26 ஆண்டுகளுக்குப் பின்னும் என் கல்லூரித் தோழிகள் பலருடனும் என் நட்புத் தொடர்கிறது. அவர்களின் திருமண வாழ்க்கைக்குப் பின்னும் அது குடும்ப நட்பாக மலர்ந்திருக்கிறது. இந்த நண்பர்களின் வருகையால் எங்கள் வீடு எப்பொழுதும் மலர்ந்திருக்கும், இந்த நட்புச்சாரல் இதமானது. இந்தச் சாரல்தான் புத்துணர்வின் சாளரம்.
சமீபத்தில்தான் என் தாத்தா தனது 97-வது வயதில் காலமானார். தாத்தா-பாட்டியின் 72 வருடத் திருமண வாழ்க்கையில் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்ததே இல்லை. 72 ஆண்டுகளும் அவர்கள் உணவை ஒருவரைவிட்டு ஒருவர் சாப்பிட்டதில்லை. என் தாத்தா, பாட்டியை அதிகாரம் செலுத்தி நான் பார்த்ததேயில்லை. விவசாயம் தொடங்கி ஏராளமான விஷயங்களிலும் எதிர் எதிர்க் கருத்துகள் கொண்டவர்களாக அவர்கள் இருந்தனர். இருப்பினும் இருவரும் எப்போதும் உரையாடிபடியே இருப்பார்கள். “நீ என்ன நினைக்கிறேன்னு தெளிவா சொல்லு ராஜம்மா” என்பார் தாத்தா. அதைக் கவனமாகக் கேட்பார் பாட்டி. பிறகு, பாட்டி தன் மனதில் என்ன தோன்றுகிறதோ, அதைத் தயங்காமல் கூறுவார். “அப்படியா” என்று தன் கருத்தைத் தேவை இருப்பின் நேர்மையுடன் மாற்றிக்கொள்வார் தாத்தா. தாத்தா எப்போதும் கேட்பவராக இருந்தார்.
பொதுவாகவே ஆண்களின் காதுகள் பெண்கள் பேசினால் மட்டும் கேட்கும் திறனை இழந்துவிடும். பெண்களின் பேச்சை நாம் கேட்பதா, பெண்களைப் பேச அனுமதிப்பதா, என்கிற அகம்பாவம் என்னும் ஆண்கொழுப்பு செய்யும் லீலைகள் இவை. ஆனால், எல்லா ஆண்களும் அப்படி இருப்பதில்லை. இங்கே ஆண்செருக்கைத் துறந்தவர்கள், குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆண்கள், மனைவி பிறந்த வீட்டின் மொத்தக் குடும்ப பாரத்தையும் ஏற்ற ஆண்கள், அற்புதமாக வீட்டுச் சமையலை செய்யும் ஆண்கள் என முன் மாதிரியான பல ஆண்களையும் இங்கே நான் சந்தித்து வியந்திருக்கிறேன். எந்தப் புகார்களுமின்றி அந்த ஆண்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.
வாழ்வை ஒரு கொண்டாட்டமாக மாற்ற நிபந்தனையற்ற அன்பும், நம்பிக்கையும், பரஸ்பர சுதந்திரமும் தேவை. இரு செடிகள் மரங்கள் செழித்து வளர ஓர் இடைவேளி தேவை, அந்த இடைவெளியை இருவரும் உணர்ந்து பரஸ்பரம் பரிமாறும் தருணத்தில் வாழ்க்கைக் கொண்டாட்டமாக மாறுகிறது.
பகிர்வில்தான் வாழ்வின் மகிழ்ச்சியே சாத்தியமாகிறது. எல்லா வேலைகளையும் பகிரும்போதுதான் குடும்பங்களில் இசை உண்டாகும். உணவைப் பகிர்கிறோம், ஐஸ்கிரீமைப் பகிர்கிறோம், இனிப்பைப் பகிர்கிறோம், இறைச்சித்துண்டைப் பகிர்கிறோம். ஆனால், அதிகாரத்தைப் பகிரும் போதுதான் உண்மையான பகிர்வு `பல்’ இளிக்கிறது. இந்தப் பகிர்தல் உணர்வைக் குழந்தைப் பருவம் முதலே ஒவ்வொரு குடும்பமும் உருவாக்க முனைய வேண்டும். கல்விக் கூடங்களின் வழியேதான் மாற்றத்தின் விதைகள் சாத்தியம்.
குடும்பமும் கல்விக்கூடமும் இணைந்து தான் ஒரு புதிய மனிதனை/மனுஷியை உருவாக்க வேண்டும்.
***************
No comments:
Post a Comment