Monday, 25 September 2017

மகுடேசுவரன்

ஆசிரியப் பணியிலுள்ள இடர்களையும் தியாகங்களையும் எத்துணைப் பேர் உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. அதை உணர்ந்தால் அவர்கள் மீதுள்ள நம் மதிப்பு மேலும் பன்மடங்கு உயரும். நமக்குக் கற்றுக்கொடுத்தார்கள் என்பதோடு வெறுமனே முடிவதன்று அவர்களின் முக்கியத்துவம். அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை ஈடு இணையற்றது.
1. தம் காலத்தின் பெரும்பாகம் உரக்கப் பேசிக்கொண்டே இருப்பவர்கள் ஆசிரியர்கள். தம் வாழ்வின் பெரும்பகுதியும் அவ்வாறு குரல் எழுப்பியவர்களாகவே இருந்ததால் அவர்கள் இறுதிக்காலத்தில் தம் செவித்திறனில் சற்றே இழக்கிறார்கள்.
2. நமக்கு எதிரே உள்ளவர்கள் நம்மினும் உயர்ந்தவர்களாக இருந்தால்தான் நாம் ஏறிட்டே பார்ப்போம். நம்மைவிடவும் கொஞ்சம் தாழ்ந்தவர்கள் என்றாலும் நாம் பாராமுகமாக இருந்துவிடுவோம். ஆனால் தம் வாழ்க்கை முழுவதும் தம்மினும் எளிய அறிவு படைத்தவர்களும் வயது குறைந்தவர்களுமான மாணவர் சமுதாயத்தோடு உரையாடுவதையும் அவர்களை உயர்த்துவதையுமே தம் வாழ்க்கைப் பயனாகக் கருதுபவர்கள் ஆசிரியர்கள்.
3. தமக்குச் சிறப்பாகத் தெரிகின்ற ஒன்றைப் பிறர்க்குக் கற்றுக்கொடுப்பதைத் தவிர்ப்பது மனித இயல்புகளில் ஒன்று. தேடலில் சிறந்திருந்தால் மட்டும்தான் ஆன்மிக குருக்கள்கூட பாதை காட்ட முன்வருவார்கள். ஆனால், தமக்குத் தெரிந்த எதையும் பிறர்க்குச் சொல்லித் தருவதையே தம் பணியாக வரித்துக்கொண்டவர்கள் அவர்கள்.
4. ஒரே வேலையைத் தம் வாழ்க்கை முழுக்கச் செய்துகொண்டேயிருப்பதைவிடவும் அலுப்பூட்டுவது வேறில்லை. அதை அவ்வாறே தொடரவேண்டுமென்றால் அப்பணியில் உள்ளார்ந்த ஈடுபாடும் காதலும் இருக்க வேண்டும். அந்த ஈடுபாடும் காதலும்தான் ஓர் ஆசிரியரை அவரின் பணி நிறைவுக் காலம்வரை பள்ளியே கதியென்று இருக்க வைத்துவிடுகிறது.
5. தமக்குக் கீழே கைகட்டி நின்றவர்கள் தம்மைவிடவும் உயர்ந்த இடத்திற்குச் செல்கையில் அதைப் பார்த்து மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகின்றவர்கள் ஆசிரியர்கள்தாம். இதில் பெற்றோர்கள் அடைகின்ற நிறைவைக்கூட இரத்தத் தொடர்புடையது எனலாம். ஆனால் ஆசிரியர் அடைகின்ற நிறைவு முழுமையானது தூய்மையானது.
6. தன்னிடம் பயின்ற மாணவன் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர்ந்து செல்லவில்லை எனில், தன்னிடம் படித்த கல்வியோடு நிறுத்திக்கொண்டான் எனில் அம்மாணவனின் ஆசிரியர் படும் வேதனையை நாம் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வங்கியொன்றில் என்னைத் தற்செயலாகச் சந்தித்த என் ஆசிரியர் பாபு என்பவர் நான் மேற்படிப்புக்காக கல்லூரிக்குச் செல்லவில்லை என்று அறிந்ததும் ‘நீயெல்லாம் காலேஜுக்குப் போக முடியலன்னா இந்த நாட்டில இத்தனை காலேஜ் இருக்கறது யாருக்கு…?’ என்று கண் ததும்பினார்.
7. ஆசிரியர்கள் படிப்பதில்லை, புத்தகம் வாங்குவதில்லை என்ற குறைகளைச் சிலர் எழுப்புவார்கள். இந்தக் குறைகளை எழுப்புவோர் யார் என்று பார்த்தால் அவர்கள் அண்மைக்காலத்தில் புத்தக எழுத்துகள் மற்றும் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவராக இருக்கக் கூடும். ஆசிரிய சமுதாயம் மொத்தமும் புத்தக நுகர்வாளர்களாக மாறினால் அந்த சந்தையின் மதிப்பு பன்மடங்காகும்தான். உண்மையில் இன்று இந்த அளவுக்கேனும் புத்தகங்கள் விற்கின்றன என்றால் அதற்கு ஆசிரியர்களும் காரணம் என்பதுதான் உண்மை. வாசிப்பைப் பொறுத்தவரையில் ஆசிரியர்கள் கிளாசிக்குகள் எனப்படுகின்ற செவ்விலக்கியங்களில் பயிற்சி உடையவர்கள்தாம்.
8. வாத்தியார் பிள்ளை மக்கு என்பார்கள். அதற்கு அடிப்படை இருக்கிறது. பள்ளி நேரம் முழுவதும் பற்பல பிள்ளைகளோடு வாயாடிவிட்டு வீடு வரும் ஆசிரியர்களின் மனங்கள் விடுதளை உணர்வுக்கு ஏங்கும்தான். அதனால் தம் பிள்ளைகளின்மீது உரிய கவனம் செலுத்தாமல் இருந்திருப்பார்கள். இப்போதெல்லாம் அப்படியும் சொல்லிவிட முடியாது. தன்போக்கில் வளரும் அப்பிள்ளைகள் நன்றாகவே சாதனை படைக்கிறார்கள்.
9. ஓர் ஆசிரியர் அல்லது ஆசிரியை தம் கடப்பாட்டில் சிறந்து விளங்க அவர்கள் வீட்டிலிருந்து பெறும் ஒத்துழைப்பு மிக முக்கியம். எல்லாத் தெருவிலும் வாத்தியார் சம்சாரத்திற்குத் தனி மரியாதைதான். அதேபோல் ஆசிரியையின் கணவர்கள் என்றொரு தனிப்பட்ட உலகம் இருக்கிறது. அவ்வுலகத்தில் நானும் ஓர் உறுப்பினர் என்ற தகுதியடிப்படையில் சொல்கிறேன் - ஒரு புதினம் எழுதுமளவுக்கு எங்கள் கதைகள் இருக்கின்றன. தேர்தல் பணிப்பு பெற்றுக்கொண்டு வரும் வீட்டம்மாவை காடுகரை தாண்டி எங்கோ ஒரு பள்ளியில் விட்டுவிட்டு வருவோம். பிறகு மாலையில் அழைத்து வரச் சென்றால் நள்ளிரவு தாண்டியும் வாக்குப்பெட்டி வாங்கிச் செல்லும் வண்டி வந்திருக்காது. அவ்வூர்ப் பிள்ளையார் கோவில் திட்டில் துண்டு விரித்து அமர்ந்திருந்து விடிகாலையில் அழைத்து வருவோம்.
10. நம் ஆசிரியர்கள் நல்லாசிரியர்களால் உருவானவர்கள். நாமும் நல்லாசிரியர்களால் உருவானோம். நம் பிள்ளைகளையும் நல்லாசிரியர் கைகளில் ஒப்படைத்திருக்கிறோம். நம் கண்முன்னே என்னென்னவோ சீர்கேடுகள் நடந்துகொண்டிருந்தாலும் இந்த அமைப்பின் தூண்களாக இருக்கக்கூடியவர்கள் தம் கடமையுணர்ந்து தமக்குரிய பங்களிப்பில் மனந்தளராது தம்மை ஈடுபடுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அயராத பணியால்தான் நம் உலகம் தன் அடிப்படை தகராமல் ஆற்றலோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அத்தகையோரில் ஆசிரிய சமூகத்திற்கு முதன்மையான இடத்தை வழங்குவதில் எனக்குத் தயக்கமில்லை. வாழ்க ஆசிரியப் பெருமக்கள் !

-கவிஞர் மகுடேஸ்வரன்

No comments:

Post a Comment