Monday, 25 September 2017

மகுடேசுவரன்

ஆணாக இருப்பதன் கஷ்டம்

ஆணாக இருப்பதன் கஷ்டம்
"யார்க்கும் தெரிவதில்லை
ஆணாக இருப்பதன் கஷ்டம்.

ஆணாதிக்க உலகம்
எங்கும் ஆண்களின் ஆளுமை
ஆணுக்கே அனுகூலங்கள்
எல்லாம் ஆண்மயம்
அப்படித்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆணாக இருப்பது
அத்துணை கடிது.

சிறுவயதிலேயே பெற்றோர் கைவிடுவர்.
'உனக்கென்ன ஆம்பளப் பயதானே’ என்பர்.
தானாகத் தோழமைத் தேடி
கைவிடப்பட்ட களர்நிலத்தில் விளையாடி
மூக்கில் சளியொழுகி
கிழிந்ததை... தையற்பிரிந்ததை உடுத்தி
வளர்பவன் ஆண்.
ஏதொன்றையும் வாங்க
கடைத்தொலைவு கருதாமல்
மிதிவண்டி மிதிப்பவன்.

தந்தைக்கு எப்போதுமே ஆக மாட்டான்
வளர வளர அப்பனுக்கு மகன் அரை வைரிதான்.
கோயிலுக்கு நம்பிச் சென்றால்
வேண்டுதலென்று மொட்டை
மொண்ணைக் கத்தரி வைத்திருப்பவரிடம்
முடிவெட்டல்
வளர வளர செலவுக்குப் படும் பாடு இருக்கிறதே
யாரும் இதுவரை வெளியே சொன்னதில்லை.
நட்பு மட்டும் இல்லையென்றால்
கல்லூரியிலேயே இறந்திருக்கும்
ஆண் மனசு.

ஆண் தோற்கவே இயலாது.
தோற்றால் அவன் வீண்பிறப்பு.
கல்வியேறாத ஆண்தான்
எங்கும் கடைநிலைத் தொழிலாளி.
வாழத் துடிக்கும் ஆண் மனம்தான்
தாழ்ந்த பணிகளுக்கு இரை.

ஓர் ஆணைப் பிடித்துக் காயடிக்க
டாஸ்மாக் திறந்திருக்கிறது.
அவன் உழைப்பை உறிஞ்சித் துப்ப
தொழிற்சாலைகள் காத்திருக்கின்றன.

முதல் காதலுக்கு
விசுவாசமாக இருந்தவன் ஆண்தான்.
இத்தனை நெருக்கடிகளுக்கு இடையில்
அவனுக்குத் திருமணம்.
மொத்தமாக முடித்துக்கட்டும் ஏற்பாடு
அதற்கு மேல் அவன் துள்ள முடியாது.
இல்லறத்தானாகி
தாய்க்கும் தாரத்துக்கும் இடையில்
பதுங்கித் திரியும் பரிதாபப் புலி.

சட்டங்கள் எல்லாம் அவனுக்கே எதிர்.
பெருங்குற்றவாளிகளை நெருங்கவே முடியாத சட்டம்
குடும்பக் குற்றவாளிகளை
லபக்கெனப் பிடித்துப் போட்டுக்கொள்ளும்.
முற்காலமென்றால்
போருக்குப் போய்ச் சாகலாம்.
தற்காலத்தில்
எல்லாமே சாகவிடாத யுத்தங்கள்.

பற்றாக்குறை வாழ்க்கை துரத்தும் தேவைகள்
எங்கும் போட்டிகள் கழுத்தறுப்புகள்
குடும்ப அழுத்தங்கள்
நுரை தள்ளச் சுமந்து
மீதமுள்ள காலம் முழுக்க
ஓடுவான்... ஓடுவான்.
பிள்ளைகளிடமாவது
உண்மையாயிருக்க முயல்வான்.
எல்லா குறைகளோடும் உள்ள அவனை
சின்ன மகள் ஏற்றுக்கொள்கிறாளே
அது மட்டுமே அவனுடைய ஒரே ஆறுதல்.

இவ்வுலகில் ஆணாக இருப்பது
அத்துணை எளிதன்று..!"
-          கவிஞர் மகுடேசுவரன்.

No comments:

Post a Comment