Monday, 25 September 2017

மினிமீன்ஸ்

எதுவும் கேட்காத என்ஜினியர்ஸ்…

நான் ரியாத் வந்து கிட்டத்தட்ட ரெண்டு வருடங்கள் ஆகப்போகிறது.

ரியாத் மெட்ரோ ப்ராஜக்ட்.

உலகின் மிகச் சிறந்த கம்பெனியில், உலகின் பெரிய ப்ராஜக்ட்டில், உலகின் அனைத்து நாட்டுப் பொறியாளர்களுடனும் கலந்து பழகி வேலை செய்யும் வாய்ப்பு.

இந்தப் ப்ராஜக்ட் முடியும் வரை நான் இருப்பேனா என்பது தெரியவில்லை.

ஆனால், முடிந்த மறுநாள் எனக்கும் இந்த ட்ரெய்னுக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. ஹேண்டிங் ஓவர் முடிந்த அடுத்த நாள் இந்த ட்ரெயினில் ஏற வேண்டுமானால் நான் அதற்கான விலையைக் கொடுத்தாக வேண்டும்.

அவ்வளவுதான் எனக்கும் அதற்குமான உறவு.

சும்மா பெருமைக்கு சொல்லிக் கொள்ளலாம். நானும் இந்த ப்ராஜக்ட்டில் இருந்தேன் என்று. அவ்வளவுதான். வெறும் வெத்துப் பெருமை.

பொறியாளர்கள்… யோசித்துப் பார்க்கிறேன்.

நன்றியையே எதிர்பார்க்காத, நாடு,குடும்பம், நேரம், ஜாதி, மதம் என்று எதையும் கருதா ஒரு சமூகம் இது.

ஒரு காட்டையே நாடாய் சமைத்துவிட்டு அடுத்த காட்டை நோக்கி ஓடும் நாடோடிகள்.

பொறியாளன் இல்லாத சமூகம் எப்படி இருந்திருக்கும்… காட்டுவாசியாய்த்தானே.?

அறிவியலாளன் இல்லாவிட்டால் பொறியாளன் ஏது என்பார்கள்.

அறிவியலாளன் எதையும் கண்டுபிடிப்பான். அதோடு அவன் வேலை முடிந்தது. பொறியாளன் தான் அதை நமது தேவைக்குத் தகுந்தபடி வடிவமைப்பான்.

பறக்கலாம் என யோசித்த அறிவியலாளன் விமானம் கண்டுபிடிப்பான். அவன் பெயர் சரித்திரத்தில் இருக்கும்.

ஆனால், அதை இத்தனை பேர் அமர்ந்து செல்ல தோதாய் மெல்ல மெல்ல மெருகேற்றி வடிவமைத்தவன் பெயர் யாருக்காவது தெரியுமா.? சொகுசுக்கு ஒரு ப்ளேன். பட்ஜெட்டுக்கு ஒரு ப்ளேன். போருக்கு ஒரு ப்ளேன். உளவுக்கு வேறொன்று. ஆளில்லாமல் ஒன்று. அதற்கடுத்த தேவை வந்தால் அதற்கும் ஒன்று என்று வடிவமைத்தது இவன் தானே.?

கூட்டு முயற்சி என்பார்கள்.

இன்னும் குறிப்பாய்ச் சொல்லலாம் என்றால், தாஜ்மஹாலைக் கட்டியது யார் என்றால், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டியது யார் என்றால், காவிரியில் கல்லணையைக் கட்டியது யார் என்றால் பணம் போட்ட மன்னரைக் கைகாட்டும் வரலாறு அதைக் கட்டிய பொறியாளனை ஒரு குறிப்பாகவாவது குறித்து  வைத்திருக்குமா என்றால் பெரும்பாலும் இருக்காது.

ஆசிரியர் இல்லாமல் இதுவெல்லாம் சாத்தியமா என்போர் இதை கவனிக்க வேண்டும்.

ஏரோப்ளான் கண்டுபிடிக்கும் முன் ஏரோடைனமிக்ஸ் இல்லை.

டீசல் என்ஜின் கண்டுபிடிக்கும் முன் ஆட்டோமொபல் இல்லை.

முதல் குடிசை கட்டுவதற்கு முன் சிவில் என்ஜினியரிங் இருந்திருக்காது.

ஆனால், கண்டுபிடித்து அதில் முன்னேற்றங்களைக் கொண்டு வந்து கொடுத்தபின் அதன் இயல் சார்ந்து ஒரு படிப்பு உருவாகும். அதைச் சொல்லிக் கொடுக்க ஒரு ஆசிரியர் உண்டாவார். அவர் கேட்கும் மரியாதையைக் கூட இவர்கள் கேட்பதில்லை என்பதுதான் உண்மை.

மனிதன் இவ்வுலகில் இரண்டு விதமான பொருட்களால் வாழ்கிறான்.

ஒன்று மனிதனால் செய்யவே முடியாத ஐம்பெரும்பூதங்களால் ஆன இயற்கை சமைத்த பொருட்கள். இன்னொன்று முழுக்க முழுக்க மனிதனால் மட்டுமே செய்யப்பட்ட, நம் வாழ்க்கையை சீரமைத்து சுலபமாக்கும் நூறு சதவீத செயற்கைப் பொருட்கள்.

நீங்கள் உடுத்தும் உடை, நீங்கள் எழுதும் பேனா, நீங்கள் படிக்கும் புத்தகம்,பயணிக்கும் வாகனம், அது செல்ல சாலை, வீட்டில் பார்க்க டெலிவிஷன், தியேட்டரில் பார்க்க சினிமா, பாக்கெட்டில் இருக்கும் செல்ஃபோன், மூக்குக் கண்ணாடி, அதை முடிவு செய்யும் டெஸ்ட், ஆரோக்கியத்துக்கான மாத்திரை, அதற்குப் போடும் ஊசி… என எங்கே இல்லை என்ஜினியரிங்..
ஆனால்… இதுவரை மற்ற துறை போல எங்காவது என்னை மதியுங்கள் என்று கேட்டிருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால் இல்லவே இல்லை என்றுதான் தோன்றுகிறது.

பணம் பெற்றுக் கொண்டுதானே செய்கிறீர்கள் என்பார்கள். யார்தான் சும்மா செய்கிறோம்.? அது மட்டும் போதவில்லை இல்லையா வாழ்க்கைக்கு.?

No comments:

Post a Comment