Reading_Marathon2024
#24RM050
Book No:21/100+
Pages:206
தாலிமேல சத்தியம்
-இமையம்
எழுத்தாளர் இமையத்தின் இப் புத்தகத்தினை 2023 ஆம் ஆண்டு சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கி விட்டேன். பத்து கதைகளில் ஏழு கதைகளை படித்து விட்டு மூன்று கதைகளை வாசிக்காமல் வைத்திருந்தேன். தற்போது வாசித்து முடிந்ததால் முழுமையாக அந்த கதைகளை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு தற்போது தான் கிடைத்தது. இமையத்தின் எழுத்துக்கள் எங்கோ வானத்திலிருந்து வந்ததாக இல்லாமல் நம் மண்ணின் மணம் சார்ந்து, அக்கம் பக்கத்து வீடுகளில் நடக்கும், நாம் கவனித்திராத முகங்களை, சண்டைகளை, மனிதர்களின் உணர்வுகளை, இவருடைய எழுத்துக்களில் எந்தவித மேல் பூச்சும் இல்லாமல் நாம் படித்து விட முடியும். ஆனால் அந்த எழுத்துக்கள் சொல்லும் காட்சிகள் நம் மனதை நெடுங்காலம் அரித்து கொண்டே இருக்கும்.
தோற்றுப் போன கட்சிக்காரர் தான் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்காளர்களுக்கு கொடுத்த பணத்தினை வசூல் செய்வதற்காக வருகிறார்.
பணம் வாங்கி ஓட்டு போடும் கீழ்த்தட்டு மக்கள் ஒவ்வொருவரிடம காரராக வசூலிக்கிறார். ஆனால் உண்மையிலேய அந்த வேட்பாளருக்கு தான் தான் ஓட்டு போட்டேன் என்று கூறும் அலமேலுவின் வாதத்தினை அவர் ஏற்க மறுக்கவில்லை. அதன் பின் தன்னுடைய வாக்கு சுத்தத்தை நிரூபிக்க அவள் என்ன செய்தாள் என்பதுதான்.. தாலி மேல் சத்தியம் கதை
எதிர்பாராத விபத்தில் பிள்ளையை பறிகொடுத்த கண்ணகி வழக்குப்பதிவு செய்து காவல் நிலையத்துக்கு வருகிறாள். விபத்துக்கு காரணமானவர்களை கண்டறிந்து தன் மனதில் உள்ள வார்த்தைகளை எல்லாம் கொட்டித் தீர்க்கிறாள் .அப்போது உரையாடலின் இறுதியில் வரும் வழக்கறிஞர் நடைமுறை வாழ்க்கையில் என்ன நடக்குமோ அதைத்தான் இந்த உலகமும் மேம்பட்ட சமுதாயம் அவளுக்கு திரும்பி செய்கிறது. அந்த இடத்தில் கண்ணகி என்ன செய்திருப்பாள்? எவ்வாறு நடந்திருப்பாள்? எனும் கதையை சாமி இருந்தா கேட்கும் என்ற வாழ்வியலின் மூலம் நமக்கு இமயம் உணர்த்துகிறார்.
40 வயது மதிக்கத்தக்க ஆசிரியர் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் போது அவ்வழியே வரும் ரயிலில் ஏறுகிறார். அப்போது தான் இளமையில் காதலிப்பதாக கூறிய சாரதாவும் அதே ரயிலில் வருகிறார். இருவருக்குமான உரையாடல் தன் காதலியை கைப்பிடிக்காத காரணத்தை அவரும் ஏன் கை பிடிக்கவில்லை என்ற வினாவில் சாரதாவும் உரையாடிக் கொள்வது மிகுந்த ரசனையான ஒரு கதையாக இக்கதை அமைந்திருக்கும். தனவேல் ரயில் போன திசையை வெறித்துப் பார்த்தபடி நின்று கொண்டிருந்தார் எனும் கதையின் இறுதி வரி நம்மையும் சாரதாவை நோக்கி கைகாட்ட செய்து விடும்.
கொளஞ்சி நாதனின் தந்தை கலியமூர்த்தி இவரின் வீட்டில் தான் இருந்து வந்தார். அம்மாவை பறிகொடுத்தவர் .தந்தையை கண் போல பார்த்துக் கொண்டிருந்தார் .ஒருநாள் காலை வெளியே செல்கிறேன் என்று சென்றவர் வீட்டுக்கு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மூன்று மாதம் ஆகிவிட்டது. காவலர்களிடமிருந்தும் ஒரு பதிலும் வரவில்லை. ஒருநாள் காவலர்களிடமிருந்து எஸ்பி அலுவலகத்திற்கு வரச் சொல்லி கடிதம் வந்தது அதனை எடுத்துக் கொண்டு போன கொளஞ்சிநாதனின் மனநிலை தான் காணாமல் போனவர்கள் கதை சொல்கிறது.
அன்றாடம் வீட்டில் இருப்பவர்களை நாம் அதிகம் கவனிப்பதில்லை அவர்களின் வெற்றிடத்தை நோக்கும் போதெல்லாம் அவர்கள் மீது எவ்வளவு பாசம் வைத்திருந்தோம் என்பதை அப்பழுக்கற்றதாய் நம் மனதுக்கு தெரிய வைப்பது ஒரு சிலரின் பிரிவுகளை தான்.
கொரோனா காலத்தில் இறந்த தனிமைப்படுத்தப்பட்ட வீட்டில் இயற்கை மரணம் அடைந்த ஒருவரின் பிணத்தை எவ்வாறெல்லாம் அடக்கம் செய்தனர்.. எவ்வாறு அந்த சூழ்நிலையை ஒரு பெண் கடந்து சென்றாள் என்பதை மிகவும் மனம் கணக்கும் துயரத்துடன் இக்கதையை வாசிக்க நேர்ந்தது. இது அப்போது மிகவும் அதிகம் பேசப்பட்ட கதைகளில் ஒன்று.
கிட்டத்தட்ட குட் நைட் படத்தினைப் போல குறட்டை சத்தம் உள்ள தம்பதியினருக்கு என்னவெல்லாம் சிக்கல் நடக்கும் என்பதை நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் பெண்ணின் பார்வையில் எவ்வாறு ஏமாந்து போகிறாள் என்பதை பற்றியும் ரவநேரம் கதை நமக்கு சுட்டி காட்டுகிறது.
சூழலும் சமுதாயமும் ஒருவனை எவ்வாறு கெட்டவனாக பார்க்கிறது ,ஒருவனை கெட்டவன் என்று சொல்லிவிட்டாலோ ,பிறரை மட்டம் தட்டி விட்டாலோ நாம் நல்லவர்கள் என்பதை நமக்கு நாமே சொல்லிக் கொள்கிறோம். ஆனால் ஒவ்வொருவரின் முகமூடியும் கழட்டும் போது தான் அவர்கள் நல்லவர்களாக கெட்டவர்களா? என்பது தெரிய வருகிறது. அப்படித்தான் விஷ பூச்சி கதையில் ஹாஸ்டலில் தங்கி இருந்த ஒரு மாணவனை ஆசிரியர்களும் மாணவர்களும் மிகவும் கெட்டவனாக சித்தரிக்கின்றனர். இறுதியில் அந்த மாணவன் மிகவும் நல்லவனாகவும் சுற்றி இருந்த ஒருவர் எவ்வளவு கீழ்த்தரமாகவும் இருக்கிறார் என்பதை காலம் நமக்கு இக்கதையின் வழியே காட்டுகிறது.
பல ஆண்டுகள் கட்சியிலிருந்த ஒருவர் இறந்து விடுகிறார். அவரின் மனைவியும் அதே கட்சிக்காரர். தான் சொந்தங்களையெல்லாம் தூர வைத்துக் கொண்டிருந்த அவள் தற்போது இறந்த பின்பு அனைவரும் வருகின்றனர். சொந்தக்காரர்களின் யோசனையை கேட்டு ஜாதி முறைப்படி பிணத்தை அடக்கம் செய்வதா? அல்லது கட்சிக்காரர்களின் வழக்கப்படி அடக்கம் செய்வதா?என்பது குறித்த மனப்போராட்டம் நடக்கிறது இறுதியில் எது வென்றது என்பதே கட்சிக்கார பிணம் கதை
மின் மயானங்கள் வந்த பின்பு சுடுகாடுகள் ஏறக்குறைய வழக்கொழிந்து விட்டது .அங்கு பணியாற்றும் ஊழியர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வேலைகளை பார்க்கத் தொடங்கி விட்டனர். அந்த சூழலில் ஒரு பெண்ணாக மயானத்தில் பணியாற்றும் கீதாவின் கதையை அங்கு சமாதி கட்ட சித்தாளாக வரும் ஒரு பெண்மணியிடம் உரையாடல் மூலம் அவர்கள் கதை விரிய தொடங்கிறது. தாத்தா பாட்டியை கவனித்துக் கொண்டு பிணக்குழி வெட்டும் பெண்ணாக தனக்கு நேர்ந்த அனுபவத்தையும், தான் கடந்து வந்த பாதைகளையும் சித்தாளான பெண்ணிடம் கூறிக் கொண்டே வருகிறார்.
அவரின் வாழ்க்கை முறை என்ன ஆனது அவரின் குடும்ப கதை என்ன என்பதுதான் மயானத்தில் பயம் இல்லை கதை.
பொதுவாக இக்கதைகள் ஒரே நேரத்தில் படித்துவிட்டு மூடிவிடக் கூடியது இல்லை. ஒவ்வொரு கதைகளையும் அசைபோட்டு பார்க்கும் போது நாம் சந்தித்திராத மனிதர்கள் ,நாம் கேள்விப்பட்டிராத வாழ்க்கையை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இமையம். கதைகளில் உள்ள வரிகள் யாவும் மேற்கோள்களோ அல்லது இலக்கியத்தின் ஆழத் தோண்டி முத்து எடுப்பது இல்லை. வழக்கமாக நம் அருகில் இருவர் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதை நாம் அமர்ந்து ஒட்டு கேட்டால் எப்படி இருக்குமோ அதே போல் தான்.
ஆனால் இக் கதைகள் யாவுமே பெண்ணினை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட சித்திரங்கள் தான். பெண்ணின் அக உணர்வுகளை சொல்லி எத்தனை கதைகள் நாவல்கள் வந்தாலும் அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வது என்றும் நமக்கு புரியாத புதிராகவே உள்ளது. குறிப்பாக விளிம்பு நிலை பெண்களிடமும் அவர்கள் வாழ்வில் எதை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் இழந்தவைகள் என்னென்ன என்பதை பற்றி நம் மனதிற்குள்ளேயே பேசு பொருளாக உள்ளது.
அவற்றை நாம் எண்ணங்களின் மூலம் சமாதானப்படுத்திக் கொள்கிறோம் அல்லது நமக்கு நாமே பதில் அளித்துக் கொண்டிருக்கிறோம் தொடர்ந்து.
தொடர்ந்து வாசிப்போம்
தோழமையுடன் மணிகண்ட பிரபு
No comments:
Post a Comment