Monday, 14 October 2024

நியாண்டார்


ரஷ்யர்களின் தேசிய உணவு என்றால் இறைச்சியை தாண்டி பீட்ரூட் என்பார்கள்.

எத்தனையோ உணவுபற்றாகுறையில், உலகபோர் சமயங்களில் எல்லாம் மக்கள் பட்டினி கிடக்கையில் பீட்ரூட்டை பயன்படுத்தி செய்யும் போருஷ்ட் சூப் (Boruscht) தான் ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் உயிரை காப்பாற்றி உள்ளது. இதற்கு பீட்ரூட் தான் பிரதானம். அத்துடன் கிடைக்கும் இறைச்சி துண்டுகளை போடுவார்கள். சூப்பின் வெப்பமும், பீட்ரூட்டின் கலோரிகளும் தான் அவர்களை பட்டினியிலும், குளிரிலும் இருந்து காப்பாற்றின.

பீட்ரூட்டில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இது பொட்டாசியம், மாங்கனீஸ், ஃபோலேட் (விட்டமின் B9), இரும்புச்சத்து, மற்றும் விட்டமின் C போன்றவற்றில் மிகுந்தது. இதோடு நார்ச்சத்து (fiber) அதிகம் உள்ளதால் ஜீரண செயல்பாட்டுக்கு உதவுகிறது. பீட்ரூட்டில் காணப்படும் நைட்ரேட்டுகள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

ரஷ்யாவின் குளிரை தாக்குபிடித்து விளையகூடிய காய்கறிகளில் பீட்ரூட் ஒன்று. ரஷ்யாவின் கோடைக்கால குறுகியது. கோடை அறுவடை முடிந்தபின்னர் வயல்கள் ஆறுமாதம் சும்மா தான் கிடக்கும். அப்போது இலையுதிர்காலம் துவங்கி, குளிர் அடிக்க அரம்பிக்கையில் பீட்ரூட் நட்டுவிடுவார்கள்.

பீட்ரூட்டுக்கு பிடித்த தட்பவெப்பம் 10 முதல் 24 டிகிரி செல்சியஸ் வெப்பம். ஆக குளிர்நாட்டு பயிர். வளர 50 முதல் 70 நாள் ஆகும். ஒப்பிட்டளவில் குறுகிய கால அறுவடை

 இலையுதிர் காலம் துவங்கி, ரஷ்யாவில் பகல் பொழுதுகள் குறைந்துகொண்டே வரும். பீட்ரூட்டுகளுக்கு ஆறுமணி நேர வெயில் போதும். மேலே இலைகளுக்கு சூரிய வெளிச்சமும், நீரும் கிடைக்க, கிடைக்க கீழே வேருக்கு அடியில் பீட்ரூட் வளர்ந்துகொண்டே வரும். 40- 50 நாளில் அறுவடைக்கு தயாரகிவிடும். அப்போது நவம்பர் அல்லது டிசம்பர் கடும்குளிராக இருக்கும்

மைனஸ் 2 டிகிரி செல்சியஸ் வரை தாக்குபிடிக்கும். ஆனால் அப்போது நிலத்தின் மேல் இலைகள், வைக்கோல், மல்ச் (மரதுணுக்குகளை) போட்டு மூடினால்,மண் உறையாமல் தடுக்கப்பட்டு, மண்ணுக்கு அடியே இன்னும் வேர்கள் உயிருடன் இருக்கும். குளிர் அடிப்பதால் இலைகள் உதிர்வதால், வேருக்கு அடியே இருக்கும் கிழங்கு ளர்வதை நிறுத்திவிடும். டிசம்பர் வரை நிலத்தை தோண்டி அறுவடை செய்து பிரஷ்ஷாக பீட்ரூட் உண்ணமுடியும்

ஆனால் அதன்பின்னர் அடுத்த மூன்று மாதங்க:ள் கொடூரமான குளிராக இருக்கும் என்பதால் அறுவடை செய்து பீட்ரூட்டை வீட்டுக்குள் கொண்டுவந்துவிடுவார்கள். பீப்பாயில் மண்ணை போட்டு, அதன்மேல் பீட்ரூட்டை போட்டு, அதன்மேல் மண்ணை போட்டு லேயர் லேயராக அடுக்கிக்கொண்டு வருவார்கள்

இப்படி செய்து சூரிய ஒளிபடாமல் வீட்டு பேஸ்மெண்டில் வைத்துவிட்டால், அடுத்த 3 - 4 மாதங்கள் கூட தாங்கும். அதற்குள் கோடை வந்துவிடும்.

ஆக புவியியலின் சவாலை இப்படி சமாளிக்க பீட்ரூட் உதவியதால் தான் #geography_is_destiny

~ நியாண்டர் செல்வன்

No comments:

Post a Comment